கி.ரா. வின்
படைப்புகளில் தெய்வங்களும் நம்பிக்கைகளும்
செ. சத்யா
உதவிப்
பேராசியர்,
தமிழ்த்துறை,
ஆதிபராசக்தி
பொறியியல் கல்லூரி,
மேல்மருவத்தூர்
- 603 319.
மின்னஞ்சல்
: sathyasenthil77@gmail.com
முன்னுரை
சங்க இலக்கியங்கள் மனித வாழ்க்கையின்
வளர்ச்சிப் பரிமாணங்களைக் காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றது. மானுடம் எதிர்கொள்ளும்
வாழ்வையும், வாழ்வியலையும் படைப்பாளிகள் பதிவு செய்தே வந்துள்ளனர். தமிழின் கதை மரபிலேயே
புதிய கருத்துக்களை வெளிப்படுத்திய படைப்பாளிகளின் வரிசையில் தோன்றியவர் கி.ராஜநாராயணன்.
அந்த வரிசையில் தோன்றிய எண்ணற்றப் படைப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்த கி.ரா. வின் எழுத்துலகம்
தனித்துவம் மிக்கது. காலம்காலமாகப் பலதரப்பட்ட கிளைத்தன்மைகளுடன் பரந்து விரிந்து கொண்டிருக்கும்
தமிழ் இலக்கிய வரலாற்றில் கரிசல் இலக்கியம் என்ற புதிய வகை கி.ரா. வழியாக அறிமுகம்
ஆயிற்று. கி.ரா. வின் எழுத்துலகம் முற்றிலும் புதிய செய்திகளையும், புதுவகைத்தன்மையினை
விவரிக்கும் பின்னணியில் தாம் வாழும் சமூகத்தை இணைத்து இலக்கியத்தடத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.
தமிழில் புதிதாகக் 'கரிசல் இலக்கிய மரபு' என்ற புது வகையை உருவாக்கிய கி.ரா. தம் வாழ்க்கையில்
கண்டு அனுபவித்து உள்வாங்கிய கரிசல் வாழ்க்கையை அதே இயல்பான மொழியில் வெளிப்படுத்திய
படைப்பாளியாகக் கி.ரா.வை அடையாளங்காண முடிகின்றதை,
"என்னுடைய
மக்கள் பேசுகிற பாஷையில் அவர்கள் சிந்திக்கிற
மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் அமைய வேண்டும் என்னுடைய சிருஷ்டிகள் என்று
நினைக்கிறவன் நான்... அவர்கள் சுவாசிக்கிற
காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம்
அப்படியே என் எழுத்துக்களில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம்.
இந்த மண்ணை நான் இவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்". (கி.ராஜநாராயணன்,
வேட்டி (1975), ப.125)
என்ற
வரிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் கரிசல்வாழ் மக்கள் வணங்கும் தெய்வங்கள்
பற்றிய செய்திகளையும், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களை கி.ரா. படைப்புகள்
வழி ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது.
கரிசல்வாழ் மக்களின் வாழ்வில் இடம் பெற்றிருந்த
தெய்வங்களின் வரிசையினை கி.ரா. தனது படைப்புகளில் விரிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
காலப்போக்கில், புதிய குழுக்களின் வருகை மற்றும் குடியமர்வினால் வழிபடும் கடவுள் எண்ணிக்கை
கூடியிருந்தாலும், தொடக்கம் முதல் காட்டப்படும் தெய்வமாகத் திருப்பதியில் கோயில் கொண்டுள்ள
“ஏழுமலையான் சீனிவாசமூர்த்தியை"1
யைக் கி.ரா. சுட்டுகின்றார்.
மேலும்,
ஆந்திராவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு வரும் வழியிடையில் நேரிடையாக வந்து காப்பாற்றிய
“அம்மன்"2, கோபல்ல கிராமத்தில்
முதன் முதலாகக் குடியேறியவுடன் கட்டிய “அம்மன்
கோவில்"3, “சரஸ்வதி தேவி"4,
“பெருமாள்"5, “செகிட்டய்யனார்"6, “செல்லேரம்மன்"7 என்று கி.ரா.
வால் சுட்டிக்காட்டப்படும் தெய்வங்கள் அவரது படைப்புகளில் காணப்படுகின்றன.
கரிசல் கிராமங்களில் வாழ்ந்து வந்த கவுண்டர்கள்
தொட்டேரம்மனை குல தெய்வமாக வழிபட்டு வந்தனர் என்பதை தொட்டணக் கவுண்டர் மனைவி அயிரக்கா,
"ஹே தொட்டோம்மா ஹொன்னு தாயி, உனக்கு நாங்கள் என்ன செய்தோம்!
எங்களை இப்படி சோதிக்கலாமா?"8
என்று உணர்ச்சிப் பிரவாகமாய் சொல்லித் தேம்மியதனைக் கொண்டும்,
தொட்டணனுக்குத் தன்னுடைய குல தெய்வத்தின் அந்தப் பெயர்களை உச்சரிக்கக் கேட்டதும் உடம்பு
புல்லரித்த நிலையினைக் கொண்டும் காணமுடிகிறது.
"கம்பளத்து நாயக்கர்கள் ஜக்கம்மாவை குல தெய்வமாக வணங்கியுள்ளனர்"9 தங்கள் பெண் குழந்தைக்கு 'தேசம்மா' என்று குலதெய்வத்தின் பெயரை
வைத்துள்ளதைக் கொண்டு "தேசம்மன்"9
எனும் குலதெய்வமும் கரிசலில் வாழ்ந்த சில மக்களால் வணங்கப்பட்டுள்ளதை கி.ரா. வின் பதிவுகளில்
இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
நாயக்கர்கள் வாழ்ந்த கரிசல் கிராமங்களில்
வைணவக் கடவுளான நாராயணசாமி (பெருமாள்) கோயில் மட்டுமின்றி, பிராமணர், முதலியார், கோனார்
போன்ற பெரும்பானமையானவர்கள் வணங்கும் பிள்ளையார், முருகன் போன்ற பெருந்தெய்வங்ளுக்கான
கோவில்களும் இருந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும், சாதிக்கும், கிராமத்திற்குமான
சிறு தெய்வங்களுக்குண்டான (காவல் தெய்வங்கள்) கோயில்களும் இருந்துள்ளதை கி.ரா. தனது
படைப்புகளில் குறிப்பிடுகிறார்.
நாயக்கர்கள்
அதிகமாக வாழ்ந்த ஊர்களில் “பெருமாள், நாராயணசாமி,
வரதராஜப் பெருமாள் என வைணவக் கோயில்கள் அதிகமாக இருந்துள்ளதை"10
அறிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே பெருமாள்
கோயில்களும் அதனையொட்டி பஜனை மடங்களையும் அதிகமாக அமைந்துள்ளனர்.
பிராமணர்,
பிள்ளைமார், செட்டியார், கோனார், முதலியார் போன்ற பிறசாதி மக்களுக்காக “பிள்ளையார் கோயில்களும்"11,
“முருகனுக்கு மலைக் கோயில்களும்"12
கரிசல் வட்டாரத்தில் இருந்துள்ளதை கி.ரா. வின் படைப்புகளில் காணமுடிகிறது.
ஆந்திராவிலிருந்து
தெற்கு நோக்கிப் புலப்பெயர்வு மேற்கொண்ட நாயக்கர்கள், இரவு அம்மன் கோயிலில் தங்க நேர்கிறபோது,
பின் தொடர்ந்த துலக்க வீரர்களிடமிருந்து அம்மன் காப்பாற்றியதை,
"அழகிய சின்ன சிலை மாதிரி குட்டை உருவம். காதுகளில்
அகலமான வண்டிக் கம்மல். மூக்கில் தொறட்டி ஆபரணம்.
தலையிலுள்ள பெருங்கொண்ட கூந்தலைக் கொண்டை
போட்டு, அந்தக் கொண்டையை மடக்கிச் சொருகி
'கொப்பு' ஆகப் போட்டிருந்தாள். கழுத்தில் ஜாதிப்
பவழங்கள் பெரிசு பெரிசானது கொண்ட பவழமாலை,
இடது கக்கத்தில் மூடிபோட்ட நீண்ட பனைநார்ப்
பெட்டியை இடுக்கிக் கொண்டிருந்தாள். வலது கையில்
ஒரு மூங்கில் பிரம்பு கொண்ட சித்து மனுஷி எங்களைக்
காப்பாற்றி: எங்கள் பாட்டியிடம் எழுந்து வந்தாள்.
தான்
வைத்துக் கொண்டிருந்த மூடிய பனைநார்ப் பெட்டியையும்
பிரம்பையும் ஒன்றும் சொல்லாமல் பாட்டியிடம் நீட்டினாள்.
இதை நீ வச்சிக்கோ என்று சொல்லி உள்ளே போனவள்
மறைந்து விட்டாள்"14
என்று
கி.ரா.குறிப்பிடுகிறார்.
கரிசல்
கிராமத்தில் தீவிரப்பற்று கொண்ட வைணவச் சமயத்தவர்களை படைப்புகளில் உலவ விடுவதோடு, சைவ
சமயத்தின் மீதும், சைவ சமயக் கடவுளான திருச்செந்தூர் முருகன் பேரிலும் தீவிரப் பற்று
கொண்டவராக 'கிடை' குறும்புதினத்தில் ராமக்கோனார் என்பவரையும் தம் கதைமாந்தராக உலவ விடுகிறார்
கி.ரா. என்பதனை,
"ராமகோனாருக்கு ஒரு பயங்கர வயிற்றுவலி உண்டு.
ஆடு
மேய்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வயிற்றுவலி
வந்துவிடும். உடனே திருச்செந்தூர் இருக்கும் திசையைப்
பார்த்து கைகள் இரண்டையும் தலைக்குமேல் உயர்த்தி
'முருகா முருகா' என்று கண்களை மூடி, உருகி உரக்கச்
சொல்லுவார். பிறகு அப்படியே தடால் என்று குப்புற
அடித்துத்
தரையில் விழுந்து கைகளை கும்பிட்ட வாக்கில் கொஞ்சநேரம்
கிடப்பார். பின் எழுந்திருந்து தரையில் சிறிது மண்ணைக்
கிள்ளி
தலையிலும் வாயிலும் போட்டுக்கொண்டு நெற்றியிலும்
பூசிக்கொண்டு,
இடுப்பில் கட்டிய மேல்துண்டை அவிழ்ந்து கண்ணீரைத்
துடைத்துக்
கொள்வார். கொஞ்சநேரத்துக்கெல்லாம் வயிற்றுவலி இருக்கும்
இடம்
தெரியாமல் பறந்து போய்விடும்"15
என்ற
பகுதியின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கரிசல்வாழ் மக்கள் "கண்திருஷ்டிபடுதல்"16
என்பதில் அதீதமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். ஒருவர் உடலில் இருந்து உயிர் பிரியும்போது
சுற்றியுள்ளவர்கள் யாரும் அழக் கூடாது என்று நம்பினர் என்பதனை,
"ஆத்மா பிரிந்து பயணப்படும்போது
நாம் அழுதால் நம்முடைய
கண்ணீர் அது சென்று கொண்டிருக்கும் வழியில் குறுக்கே
வெள்ளம் போல் பரவிப் பெருகி அதனுடைய பயணம்
தடைப்பட்டுப் போகும். ஆத்மா பிரிந்த பிறகு அழலாம்.
பிரிந்து கொண்டிருக்கும் போது அழவே கூடாது"17
என்று கி.ரா.
தனது ‘கோபல்ல கிராமம்’ என்ற புதினத்தில் குறிப்பிடுவதன் வழியாக அறிய முடிகின்றது. இதில்,
மரணம் சம்பவித்துக் கொண்டிருக்கும்போது
யாரும் அழக்கூடாது. ஆத்மா பிரிந்து பயணப்படும் போது நாம் அழுதால் நம்முடைய கண்ணீர்
அது சென்று கொண்டிருக்கும் வழியில் குறுக்கே வெள்ளம் போல் பரவிப் பெருகி அதனுடைய பயணம்
தடைபட்டுப் போகும். ஆத்மா பிரிந்த பிறகு அழலாம் பிரிந்து கொண்டிருக்கும் போது அழவே
கூடாது எடுத்துரைப்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
கம்மளச்சியைப்
பாம்படத்திற்காகக் கொலை செய்த குற்றவாளியைக் கழுமரம் ஏற்றிக் கொன்ற கிராமத்தினர், அக்கொலைக்காரனைத்
தெய்வமாக்கி வணங்கியதை,
"....... செத்துப்போன கழுவனைக்
கழுமரத்திலிருந்து உருவி
எடுத்து அந்தக் கம்மாளச்சிக்குப் பக்கத்திலேயே புதைத்து
அதன் அடையாளமாக ஒரு கல் நட்டார்கள்"
"பச்சேரி மக்கள் அங்கே புதைக்கப்பட்ட
அந்த இருவரையும்
இப்பொழுது தேவதையாகக் கொண்டாடுகிறார்கள். பொங்கல்
வைக்கிறார்கள். தங்கள் பெண் குழந்தைகளுக்கு 'கம்மாளச்சி'
என்றும், ஆண் குழந்தை பிறந்தால் 'கழுவன்' என்றும்
பெயர்
சூட்டுகிறார்கள்"18
என்ற
நம்பிக்கைகளை கி.ரா. தனது கோபல்ல கிராம புதினத்தில் சுட்டுகிறார்.
நாயக்கர் வீட்டுப் பெண்களுக்கு முரட்டுப்பிடிவாதம்
அதிகமென்றும் ஒரு சிறிய விஷயத்திற்காக இறக்கும் வரை கோபத்துடன் வாழ்ந்து இறந்து விடுவர்
என்றும், அந்தக் கோபத்துடன் இறந்து விட்டவர்களின் நெஞ்சம் வேகாது என்ற நம்பிக்கையினை
தனது கோபல்ல கிராமத்து மக்களிடம் நிலவியதனை,
"...........................................................
செத்த பிறகும்
கூட அவர்களுடைய
திரேகம் மூட்டத்தில் வெந்து
சாம்பலானாலும்
"நெஞ்சு" மட்டும் வேகாமல் இருக்கும்.
காலையில் தீ ஆத்தப்
போனவர்கள், காத்துக் கொண்டு
இருப்பார்கள்.
அந்த நெஞ்சைத் திரும்பவும் குச்சியால்
புரட்டிப்புரட்டி,
குத்திக் குத்தித் தனியாக ஆமணக்கும்
முத்தும் விறகும்
போட்டு எரித்து சாம்பலாக்குவான் குடிமகன்"19
என்று கிராம நம்பிக்கையை சுட்டுகின்றார் கி.ரா.
பாவ
புண்ணியத்தின் மீதும் கிராம மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதனை அந்தமான் நாயக்கர்
புதினத்தில்,
"மரணபயம் இன்றி இருக்க சித்ரபுத்ரநயினார்
நோன்பு
இருந்து அக்கதையை சோகத்துடன் பாட வேண்டும்
என்ற நம்பிக்கையும்"20
என்று கி.ரா.
குறிப்பிடுகின்றார். மேலும், “முயல்களை அறுக்கும்
போது வரும் இரத்தத்தினை, கரிசல்வாழ் பெண்கள் பழைய துணியில் தோய்த்துப் படிய வைத்துக்
கொண்டு, குளிக்கும் நேரத்தில் அதைத் தலையில் தேய்த்துக் குளித்தால் தங்களின் கூந்தல்
மிக அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும் என்று நம்பினார்கள்."21
"பசுமாடு
கன்று இடுவதன் மூலம் மகாலட்சுமி ஊருக்கு
வந்துவிட்டதாக
எண்ணுவதும்"22
"மாடுகளுக்கு
நோய் ஏற்பட்டால் பச்சிலை பூசுவதன்
மூலம் போய்விடுமென்று"23
"ஊரில்
உள்ள யாருக்கேனும் கெடுதல் செய்திருந்தால் கிராமக்
கோவிலுக்கு
ஒரு மாதம் தீபம் ஏற்றும் எண்ணெய்ச் செலவை
ஏற்றுக் கொண்டால்
சரியாகிவிடும்"24
என்ற
நம்பிக்கையினைக் கொண்டிருந்தனர்.
கிராமப்புறத்தில்
அமைந்திருந்த பச்சிலை நிறைந்த "குருமலை" எனும் மலையானது, அனுமன் சஞ்சீவி
பர்வதத்தைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது விழுந்த ஒரு பகுதி"25 என்று நம்பினர்.
விடியற்காலையில்
"தலைக்கோழி" இரண்டாம் முறையாக கூவினால் விடிந்து விட்டது என்று அர்த்தப்படுத்திக்
கொண்டனர்"26
“இயற்கையாக
இறக்காமல் வேறுவிதத்தில் இறக்க நேரிடும் கர்ப்பிணிப் பெண்களை வயிற்றில் உள்ள குழந்தையோடு
புதைக்காமல், வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுத்துப் பக்கத்தில் வைத்துப் புதைத்துச்
சுமைதாங்கிக் கல் நடவேண்டும்"27 என்ற நம்பிக்கையையும்,
“இறந்தவர்களின்
உறவினர் தலையில் தண்ணீர் விட்டுக் குளிக்காமல் போனால் ஊரில் உள்ளோருக்கு தீங்கு விளையும்"28 என்ற நம்பிக்கையினை
கரிசல்நில மக்களிடையே நிலவி வந்ததை கி.ரா. சுட்டுகின்றார்.
"அறிவுக்
கடலான கலாதேவிக்கும் அஞ்ஞான இருளனான வன்னிராஜனுக்கும் இடையே போர் நடந்தது"29 என்றும், அப்போரில் தோற்ற வன்னிராஜனை அப்புறப்படுத்தும்
சடங்கை ஊரில் கொண்டாடுவதும் என்ற நம்பிக்கையினைக் கொண்டிருந்ததையும், “கண் திருஷ்டிபட்டால், முச்சந்திகளில் இருந்து
காலடி மண் எடுத்து வந்து எரியும் நெருப்பில் போட்டு எச்சிலைத் துப்பினால் திருஷ்டி
தீர்ந்துவிடும்"30 என்றும், “மாடுகளுக்குக் குறிப்பிட்ட மனித வாடையை மட்டுமே பிடிக்கும்"31
என்று கரிசல்வாழ் மக்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என்பதை சுட்டுகிறார் கி.ரா.
கோவில்
விழாவின் தொடக்க நாளன்று மதியம் குடங்களிலுள்ள மது பொங்கி பொங்கி நுரைகட்டி குடத்தின்
விளிம்புவரை ஊற்றி தொடங்குவர். கோயிலுக்குண்டான மதுக்குடத்தை தூக்குபவர்கள் விரதம்
இருப்பர். மேளக்காரர்கள் கோயில் மதுக்குடத்தை சுற்றிச்சுற்றி வந்தும் மேளம் அடிப்பர்.
பூசாரி மதுக்குடத்திற்கும், மதுக்குடத்தை தூக்குபவருக்கும் 'அம்மன் காப்பு' வைத்துக்
கட்டினார். குடத்திலுள்ள மது பொங்கி வழியாமல் போனால் தெய்வக்குற்றம் இருப்பதாக கருதியதையும்,
மதுக்குடம் வடக்குத்திசையைப் பார்த்து பொங்கி வழிவது ஊருக்கும் மக்களுக்கும் நன்மை
என்று நம்பியதை,
"மதுக்குடம்
பொங்கி வழிந்தவுடன் மேளத்தாளங்கள் முழங்க,
பெண்கள் குலவையிட்டனர்.
பின் கோயில் மதுக்குடத்துடன்
வீடுகளில் வைக்கப்பட்டிருந்த
மதுக்குடங்களும் மேளதாளத்துடன்
ஊர்வலமாக எடுத்துச்
செல்லப்பட்டு, ஊரைச் சுற்றி வருவர்.
கோயிலுக்கு
வந்தவுடன் பூசை செய்து முடித்த பின்
மக்களுக்கு
மதுவை கொடுத்தனர்"32
என
'கோபல்லபுரத்து மக்கள்' புதினத்தில் குறிப்பிடுகின்றார் கி.ரா.
"திருமணமாகாத
பெண்கள் தலையில் பூச்சூடிக் கொண்டு
தனியாகச் செல்லும்போது,
ஆவிகள் அவர்களைப் பிடித்துக் கொள்ளும்"33
"கட்டிலில்
படுத்துக் கொண்டு உயிரை விடக்கூடாது. அப்புறம்
அந்த ஆவி கட்டிலையே
சுற்றி வரும்"34
"செய்வினை,
ஏவல்"35
போன்றவற்றிலும்
கரிசல் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பழக்க வழக்கங்கள்
கரிசல்வாழ் மக்களின் வாழ்க்கையில் நிலவிய
பழக்க வழக்கங்களைக் கதைப் போக்கில் இணைத்துக் காட்டும் உத்தியை கி.ரா. பதிவு செய்வதை
காண முடிகிறது.
"நட்சத்திரங்களின்
நிலைகளைக் கொண்டும், பறவைகளின்
சப்தங்களைக்
கொண்டும் நேரத்தைக் கணக்கிடுதல்"36
"மனைவி
கர்ப்பிணியாக இருப்பின் கணவன் முகச்
சவரம் செய்து
கொள்ளும் பழக்கம் இல்லாதது"37
"இறந்த
கணவனுடன் பெண்கள் உடன் கட்டை ஏறுகின்ற பழக்கம்"38
"கோயில்
மாடுகளுக்குச் சூட்டுக்கோலால் உடம்பில்
சூலம் சாத்தும்
பழக்கம்"39
"விழாக்காலங்களில்
கூடை நிறையப் பருத்தி மற்றும்
மல்லிப்பூக்களைக்
கொண்டு வந்து வைத்தல்"40
"கருட
தரிசம் செய்துவிட்டுச் சாப்பிடும் முறை"41
"ஆடி,
தை, மாசி மாதங்களில் செவ்வாய்க்கிழமை இரவு
பெண்கள் கொடுக்கட்டை
செய்து படைக்கும் பழக்கம்"42
"அம்மனுக்குத்
திருவிழாக்களில் மதுக்குடம் வைப்பது"43
"தமக்கு
தீங்கிழித்தவர்களைப்பற்றிக் கடவுளிடம் கூறும் பழக்கம்"44
"மண்கலந்த
தண்ணீர் பசியைத் தாங்கும் சக்தியும் தெம்பும் தரும்" 45
"கால்நடைகளுக்கு
உண்டாகும் நோய்களுக்கு பச்சிலை பூசலாம்"46
என்று
கரிசல்வாழ் மக்களின் கூறுகளாக அமைந்த பழக்க வழக்கங்கள் ஏராளமானவற்றை கி.ரா. தனது படைப்புகளில்
குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வு முடிவுரை
கி.ரா. வின் படைப்புகளை ஆழ்ந்து பார்த்தோமானால்
அவற்றினுள் எல்லா நிலைகளிலும் மேம்பட்டு நிற்பது கரிசல் பண்பாடே. கரிசல் நிலப்பகுதி
மக்கள் வணங்கும் தெய்வங்கள் பற்றிய செய்திகளையும், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும்
பழக்க வழக்கங்களை முழுமையாக வெளிக்கொண்டுவர முனைந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.
'கோபல்லபுரத்து மக்கள்' புதினத்தைத் தொடக்கம் முதல் இடைப்பகுதிவரை, அக்கிராம மக்களின் தெய்வங்கள், நம்பிக்கைகள்,
சடங்குகள் போன்றவற்றை வைத்து கி.ரா. கட்டமைத்துள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. கரிசல்வாழ்
மக்கள் (கம்மவார்) வழிபடும் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் நம்பிக்கைள், அவர்களின்
பழக்க வழக்கங்கள் பற்றிய செய்திகளை இவ்வாய்வின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.
சான்றெண் விளக்கம்
1. கி.ரா. கோபல்ல
கிராமம், ப.48
2. மேலது. ப.69
3. மேலது. ப.91
4. கி.ரா. கோபல்ல
கிராமத்து மக்கள், ப.24
5. மேலது. ப.44
6. மேலது. ப.114
7. கி.ரா. அந்தமான்
நாயக்கர், ப.63
8.
கி.ரா. ராஜநாராயணன் கதைகள், ப.13
9.
கி.ரா. கரிசல் காட்டுக் கடுதாசி, ப.200
10.
கி.ரா. ராஜநாராயணன் கதைகள், ப.224
11. கி.ரா. கோபல்லபுரத்து
மக்கள், ப.196
12. மேலது. ப.151
13. கி.ராஜநாராயணன்
கதைகள், ப.331
14. கி.ரா. கோபல்ல
கிராமம், ப.69-70
15. கி.ரா. கி.
ராஜநாராயணன் கதைகள், ப.457
16. கி.ரா. கோபல்ல
கிராமம், ப.63
17. மேலது. ப.89
18. மேலது. ப.140
19.
கி.ரா. கோபல்லபுரத்து மக்கள், ப.83
20. கி.ரா. அந்தமான்
நாயக்கர், ப.63
21. கி.ரா. கோபல்ல
கிராமம், ப.95
22. மேலது. ப.98
23. மேலது. ப.114
24. மேலது. ப.118
25. மேலது. ப.119
26. மேலது. ப.123
27. மேலது. ப.132
28. மேலது. ப.133
29. கி.ரா. கோபல்ல
கிராமத்து மக்கள், ப.40
30. மேலது. ப.42
31. மேலது. ப.53
32. மேலது. ப.34-35
33. கி.ரா. கி.ராஜநாராயணன்
கதைகள், ப.409
34. மேலது. ப.146
35. மேலது. ப.391
36. கி.ரா. கோபல்ல
கிராமம், ப.76
37. மேலது. ப.111
38. கி.ரா. கோபல்லபுரத்து
மக்கள், ப.33
39. மேலது. ப.44
40. மேலது. ப.99
41. மேலது. ப.120
42. மேலது. ப.110
43. மேலது. ப.132
44. கி.ரா. அந்தமான்
நாயக்கர், ப.38
45. கி.ரா. கோபல்ல
கிராமம், ப.91
46. மேலது. ப.111
துணைநூற்பட்டியல்
1.
ராஜநாராயணன்,
கி. (1995). கரிசல் காட்டுக் கடுதாசி, சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.
2.
ராஜநாராயணன்,
கி. (1993). கோபல்ல கிராமம், சிவகங்கை: செல்மா பதிப்பகம்.
3.
ராஜநாராயணன்,
கி. (1993). கோபல்லபுரத்து மக்கள், சிவகங்கை: செல்மா பதிப்பகம்.
4.
ராஜநாராயணன்,
கி. (1995). அந்தமான் நாயக்கர், சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.
5.
பஞ்சாங்கம்,
கி. (1996). மறுவாசிப்பில் கி.ரா, சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.
6.
ராஜநாராயணன்,
கி. (2016). ராஜநாராயணன் கதைகள், சிவகங்கை:
அன்னம் (பி) பதிப்பகம்.
No comments:
Post a Comment