தொல்காப்பியம் கூறும் அக வாழ்க்கை
திருமதி.
செ.சத்யா
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,
மயிலம் - 604 304. விழுப்புரம்
மாவட்டம்.
தமிழ்நாடு - இந்தியா.
மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com
ORCID ID:
0000-0001-7111-0002
முன்னுரை
தொல்காப்பியம் ஒரு பழந்தமிழ்ப் பெருஞ்
செல்வமாகும். இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழமையானது
தொல்காப்பியமே ஆகும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செய்த அரும் பெருந் தனித்தமிழ்
இலக்கண நூலாகும். பண்டைத் தமிழரின் நாகரிகத்தை, பழக்கவழக்கத்தை அறிந்து கொள்ள பெரிதும்
துணை நிற்கிறது. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை வாழ்க்கைகான இலக்கணமாகக் கூறும்
பொழுது வாழ்க்கையை எவ்வாறெல்லாம் இலக்கியமாகக் கொண்டு படைக்கலாம் என்று கூறுவதாக அமையும்.
மனிதன் தன் வாழ்க்கையை வரையறைக்குட்பட்டு வாழ்ந்துள்ளான் என்பதனைச் சுட்டிக் காட்டும்
வண்ணம் அமைந்துள்ளது. மனித வாழ்க்கையை அகம், புறம் என இரண்டு நிலையாகப் பகுக்கின்றார்.
மணப் பருவமுற்ற ஆணும் பெண்ணும் மனம் ஒன்றுபட்டு ஒருவராய் ஒன்றி வாழும் நிகழ்வினைக்
கூறுவதே 'அகவாழ்வு' எனப்படும். அகவாழ்வினையும் களவு, கற்பு என இருவகையாகப் பகுத்துக்
கூறுகின்றார். திருமண வாழ்வுக்கு முன்னர் நிகழ்வது களவு வாழ்வு என்றும், திருமண வாழ்விற்குப்
பின்னர் நிகழ்வது கற்பு வாழ்வு என்று இரண்டு நிலைகளில் பிரித்துக் கூறுகின்றார். இத்தகைய
அக வாழ்வினை தொல்காப்பியம்; எவ்வாறு எடுத்துரைக்கின்றது என்பதனை ஆராய்வதாக இவ்வாய்வு
அமைகின்றது.
தலைவனும் தலைவியும் அன்பினால் கலந்து நிகழ்த்தும்
இல்லற வாழ்வு அகம் என்பதாகும் என்கிறார். அத்தகைய அகத்திணைகளைத் தொல்காப்பியம் ஏழு
வகைகளாக குறிப்பிடுவதனை,
"கைக்கிளை
முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக்
கிளந்த எழுதிணை என்ப"1
என்ற தொல்காப்பிய
நூற்பா எடுத்தியம்புகின்றது. கைக்கிளை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை
ஆகிய திணைகளை அகத்திணைகளாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இந்த ஏழு வகைத் திணைகளுள்
தமிழரின் காதல் வாழ்வு, குடும்ப வாழ்வு அடங்குகின்றது.
ஆணும் பெண்ணும் அன்போடு ஒன்றுபட்டுக் கூடி
வாழும் காதல் வாழ்வே அக வாழ்வாகும். ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதில் ஏற்படும்
இன்பத்தை எவராலும் வெளிப்படையாக எடுத்துரைக்க இயலாது. அது அவர்கள் உள்ளத்தால் உணரும்
ஒப்பற்ற இன்பமாகும்.
களவு வாழ்க்கை என்பது பெற்றோர், உற்றார்,
உறவினர் அறியாமல் ஓர் ஆணும், பெண்ணும் மறைவிலே மணமக்களாக வாழ்க்கை நடத்துவதாகும். ஒத்த
தன்மையுள்ள ஓர் ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது அவர்களுக்குள் காதல் பிறக்கும். மனமொத்து
காதலித்து இன்புறுவார்கள். இதுவே களவு வாழ்க்கையாகும்.
இன்பமும்,
பொருளும், அறமும் என்று சொல்லப் பெற்ற அன்போடு இணைந்த ஐந்து ஒழுக்கங்களைக் கூறும் போது,
மறையோரிடத்தும் நிகழும் மணங்களுள் கந்தர்வமணம் மட்டுமே தமிழர்க்கு உரியதாகும் என்பதனைத்
தொல்காப்பியர்,
"இன்பமும்
பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த
ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங்
காணுங் காலை
மறையோர் தேஎத்து
மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த்
துணையமையோர் இயல்பே"2
என்னும் நூற்பா மூலம் விளக்குகின்றார்.
களவொழுக்க
வகைகள்
களவொழுக்கம் நான்கு வகைப்படும் என்பதனை தொல்காப்பியர்,
"காமப்புணர்ச்சியும்
இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅறுந்
தோழியிற் புணர்வு பெண்
றாங்கநால் வகையினும்
அடைந்த சார்வொடு
மறையென மொழிதல்
மறையோர் ஆறே"3
என்னும் செய்யுளியல்
நூற்பாவின் வழி குறிப்பிடுவதனை அறிந்து கொள்ள முடிகின்றது. காமப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,
பாங்கன் கூட்டம், தோழியிற் கூட்டம் என்ற நான்கும் களவொழுக்கத்தின் வகைகளாகும்.
ஆண் மகனுக்குப் பெருமையும், வலிமையும்
மிகவும் வேண்டுவனவாகும் என்பதனை தொல்காப்பியர்,
"பெருமையும்
உரனும் ஆடூஉ மேன"4
என்னும் நூற்பா
மூலம் சுட்டுகின்றார். இதில் பெருமையாவது பழிக்கும், பாவத்திற்கும் அஞ்சுதலாகும். உரன்
என்பது அறிவு என்பதாகும். இவையிரண்டும் ஆண் மகனுக்கு இயல்பு என்று எடுத்துரைக்கின்றார்.
அச்சம், நாணம்,
மடன் என்ற மூன்று பண்புகளும் பெண்களுக்குரிய பண்புகள் என்பதனை தொல்காப்பியர்,
"அச்சமும்
நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்
குரிய என்ப"5
என்னும் நூற்பா வழி எடுத்தியம்புகின்றார்.
களவொழுக்கத்தில்
தலைவி தன் விருப்பத்தை நேரடியாகத் தெரிவிக்க மாட்டாள். நாண், மடன் இவ்விரண்டையும் தன்
கண்களின் வழி வெளிப்படுத்துவாள் என்பதனை,
"இதனை
திணையிற் கண்நின்று உரூஉம்
நாணும் மடனும்
பெண்மை ஆகலின்
குறிப்பினும்
இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா
அவள் வயின்"6
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
பாங்கற் கூட்டம்
பாங்கனின் துணை கொண்டு தலைவியைக் கூடும்
கூட்டம் பாங்கற் கூட்டம் எனப்படும். இப்பாங்கனிடம் தலைவன் நிகழ்த்தும் கூற்றுக்கள்
இரண்டு. அக்கூற்றுக்கள் பாங்கன் கூறியதற்கு மறுத்துரைக்கும் வகையில் அமையும் என்பதனை,
"நிற்பவை
நினை நிகழ்பவை உரைப்பினும்
குற்றங்காட்டிய
வாயில் பெட்பினும்"7
என்ற நூற்பாவின் வழி அறிய முடிகின்றது.
செவிலியின் இயல்பு
தலைவியை நன்கு ஆராய்ந்து உணர்ந்து அரிய
மறைபொருளை எல்லாம் குறிப்பால் அறிந்து கூறுபவள் செவிலி என்பதால் தாய் என்று சிறப்பித்துக்
கூறப்படுகிறாள் என்பதனை,
"ஆய்பெருஞ்
சிறப்பின் அருமறை கிளத்தலின்
தாயெனப் படுவாள்
செவிலி யாகும்"8
என்று தொல்காப்பியர்
எடுத்துரைக்கின்றார். மேலும், செவிலியின் கூற்றானது, "தலைவன் தலைவியின் களவொழுக்கம்
அலராகி விடும் தருணத்திலும், தலைவி உடலில் காம உணர்வு வெளிப்படும் பொழுதிலும், தலைவியின்
உடற்கூறு முன்பை விட மாறுபடும் போதும் என பதின்மூன்று இடங்களில் நிகழும்"9 என்பதனை
தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.
சங்க காலத்தில் தலைவியின் உணர்வுகளைப்
பெற்றோரைவிட மிகச் சிறப்பாகப் புரிந்து கொள்ளும் விதமாகவும், தலைவன், தலைவி என்ற இரு
கரைகளை இணைக்கும் பாலமாக முக்கோண வடிவத்தின் மேல் முனையாக விளங்குகின்றாள் தோழி. சேவிலியின்
மகள் தான் தோழி என்பதனை,
"தோழி
தானே செவிலி மகளே"10
என்ற நூற்பா
மொழிகின்றது. இதன் மூலம செவிலியின் மகள் தோழி என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
தலைவன், தலைவி இருவரும் களவு வாழ்க்கையிலிருந்து
அடுத்த நிலையாகத் தலைவியைத் தலைவன் ஊரறிய மணம் புரிந்து இனிய இல்லறம் நடத்துவதே கற்பு
வாழ்வு ஆகும். இதில் தலைவன் போரின் நிமித்தமோ, தூதின் நிமித்தமமோ அல்லது பரத்தையின்
காரணமாகவோ பிரிந்து செல்வான். இந்நிலையில் தலைவியை ஆற்றுப்படுத்துவோராகத் தோழி, செவிலி
ஆகியோர் அமைவர்.
ஒத்த
அன்புடைய தலைவன், தலைவி இருவரின் சுற்றத்தார் முன்னிலையில் தலைவியின் பெற்றோர் கொடுக்கப்
பலரறிய மணந்து வாழும் மனை வாழ்க்கையே கற்பென வழங்கப்படுகின்றது. தொல்காப்பியர், உரிமையுடையோர்
மணப்பெண்ணை மணமகனுக்கு மணமுடித்தலே கற்பு என்கிறார். இதனை தொல்காப்பியர்,
"கற்பெனப்
படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின்
கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி
மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே"11
என்று எடுத்தியம்புகின்றார்.
இதில், அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் உள்ளத்தால் ஒன்றுபடினும், தலைமகனுடைய பெற்றோர்
உடன்பாடின்றி இருவரும் இனிதே இல்லறம் நடத்த இயலாது. ஆகவே, ஒருவரையொருவர் பிரியாது உள்ளம்
ஒன்றுபட்டு மனையறம் நிகழ்த்துவற்குச் சான்றாக அமைவதே உலகத்தார் அறியும்படியான திருமணச்
சடங்காகும். இதனையே தொல்காப்பியர் 'கரணம்' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.
தலைவியின் சுற்றத்தார்
இன்றித் தலைவனோடு தலைவி உடன்போக்கு சென்று திருமணம் முடிப்பதும் நிகழ்ந்துள்ள என்பதனை
இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இவ்வாறு ஒருவரும் அறியாமல் தலைவியை உடன் அழைத்துச்
சென்று அவள் சுற்றத்தார் இன்றித் திருமணம் முடிப்பதனை தொல்காப்பியர்,
"கொடுப்போர்
இன்றியுங் கரண முண்டே
புணர்ந்துடன்
போகிய காலை யான"12
என்று குறிப்பிடுகின்றார்.
தலைவி தான் விரும்பியவனோடு சென்று அவன் ஊரில் மணப்பறை முழங்கவும், சங்கு ஒழிக்கவும்
செய்தால் என்பதனை,
"பறைபடப்
பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொல்மூ தாலத்துப
பொதியில் தோன்றிய
நால்ஊர்க் கோசர்
நன்மொழி போல
வாய்ஆ கின்றே
தோழி ஆய்கழல்
சேயிலை வெள்வேல்
விடலையோடு
தொருவளை முன்கை
மடந்தை நட்பே"13
என்ற குறுந்தொகைப்
பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றது.
தலைவனும் தலைவியும் பலர் அறியத் திருமணம்
செய்து கொண்டு வாழ்க்கை நடத்துதலே 'இல்லறவொழுக்கம்' என்று குறிப்பிடுவர். இதனைத் தொல்காப்பியர்,
"மறைவெளிப்
படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய
இயல்நெறி பிழையாது
மலிவும் புலவியும்
ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்து
கற்பெனப் படுமே"14
என்று குறிப்பிடுகின்றார்.
களவு வெளிப்பட்ட பின்னர் சுற்றத்தார் முன்னிலையில் திருமணம் முடிந்தபின் மலிவு, புலவி,
ஊடல், உணர்வு, பிரிவு ஆகிய ஐந்து கூறுகளும் அடங்கிய பகுதியே கற்பென வழங்கப்படுகிறது.
கற்பு என்பது தான் 'இல்லறவொழுக்கம்' என்று தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது.
இல்லற வாழ்க்கையின் போது தலைவன், தலைவியின்
ஒவ்வொரு செயலையும் புகழக் கூடியவனாக இருக்கின்றான். தலைவி தொட்டவை யாவும் வானோர் அமிழ்தமாய்
சுவைக்கின்றது. இந்நிகழ்வினைத் தொல்காப்பியர்,
"………………
சொல்லென
ஏனது சுவைப்பினும்
நீகை தொட்டது
வானோர் அமிழ்தம்
புரையுமால் எமக்கென
அடிசிறும் பூவுந்
தொடுதற் கண்ணும்"15
என்று எடுத்துரைக்கின்றார்.
இவை இல்வாழ்க்கையில் நிகழும் என்பதனை சங்க இலக்கியங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ள
முடிகின்றது. இதனை,
"வேம்பின்
பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங் கட்டி
என்றனிர் இனியே"16
என்ற குறுந்தொகைப்
பாடலொன்று உணர்த்துவதன் மூலம் தலைவி கொடுத்த வேப்பங்காயானது தலைவனுக்கு வெல்லக்கட்டியாய்
அமைந்ததை அறிந்து கொள்ள முடிகின்றது.
தலைவனும் தலைவியும் ஒன்றுகூடி இல்லறம்
நடத்தும் பொருட்டுத் தலைவியின் கூற்றுக்கள் நிகழ்வதனைத் தொல்காப்பியர்,
"அவனறி
வாற்ற அறியும் ஆகலின்
ஏற்றற் கண்ணும்
நிறுத்தற் கண்ணும்
உரிமை கொடுத்த
கிழவோன் பாங்கின்
பெருமையின்
திரியா வன்பின் கண்ணும்
கிழவனை மகடுஉப்
புலம்பெரி தாகலின்
அலமரல் பெருகிய
காமத்து மிகுதியும்
இன்பமும் இடும்பையும்
ஆகிய இடத்துங்
நயந்தலை தோன்றிய
காமர் நெய்யணி
…………………………………..
………………………………….
வடுவறு சிறப்பிற்
கற்பில் திரியாமைக்
காய்தலும் உவத்தலும்
பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம்
பல்வேறு நிலையினும்
வுhயிலின் உரூஉம்
வகையொடு தொகைஇக்
கிழவோன் செப்பல்
கிழவ தென்ப"17
என்ற நூற்பா
வழி விளக்குகிறார். தலைவனை நன்கு அறியாத தலைவி அவனைப் புகழ்தல், தலைவனை அறநெறி வழி
நடத்துதல், உரிமை கொடுத்த கணவன் ஆதலால் அவனிடம் அன்போடு நடத்தல், தலைவனைப் பிரிந்த
தலைவி காமமிகுதியினால் புலம்புதல், பரத்தையரிடம் சென்ற தலைவனை இகழ்தல், பரத்தையரிடத்துத்
தலைவன் செல்லாத காலத்திலும் அவனை அங்கே போகச் சொல்லித் தலைவி ஊடல் கொள்ளல் இது போன்ற
இன்னும் பல கூற்றுக்கள் கற்பில் தலைவிக்கு நிகழக் கூடியவையாகும் என்று எடுத்துரைக்கின்றார்.
கற்புக் காலத்தில் தோழிக்குரிய கூற்றும்
சிற்சில இடங்களில் அமையப்பெறும் என்பதனை தொல்காப்பியர்,
"பெறற்களும்
பெரும்பொருள் முடிந்தபின் வந்த
தெற்ற்கரு மரபிற்
சிறப்பின் கண்ணும் அற்றமழி
வுரைப்பினும்
அற்றம் இல்லாக்
கிழவோற் சுட்டிய
தெய்வக் கடத்தினுந்
சீருடைப் பெரும்பொருள்
வைத்தவழி மறப்பினும்
…………………………………
…………………………………..
பிரியுங்காலத்
தெதிர் நின்று சாற்றிய
மரபுடை எதிரும்
உளப்படப் பிறவும்
வகைபட வந்த
கிளவி யெல்லாந்
தோழிக் குரிய
என்மனார் புலவர்"18
என்ற நூற்பாவானது
விளக்குகின்றது. பெறுதற்கரிய பொருள் தேடி வந்த தலைவனைத் தோழி பாராட்டுதல், களவுக் காலத்தில்
துன்பம் நீங்கிய நிலைமை ஏதும் குற்றம் வராமல் தலைவனைக் காத்தமைக்காக வேண்டுதல், பரத்தமை
ஒழுக்கம் பூண்ட தலைவனைத் தண்டிக்காது பொறுமையோடு இருக்குமாறு தலைவியைத் தேற்றுதல்,
பரத்தமையிடம் சென்று திரும்பிய தலைவனை மன்னிக்குமாறு தலைவியிடம் கூறி இருவரையும் சேர்த்து
வைத்தல் இவ்வாறான கூற்றுக்கள் தோழிக்கு நிகழக்கூடியவை என்று எடுத்துரைக்கின்றது.
களவுக் காலத்தில் மட்டுமின்றி கற்புக்
காலத்திலும் செவிலி கூற்று நிகழ்வதனை தொல்காப்பியர்,
"கழியீவனும்
நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும்
அல்லவை கடிதலும்
செவிலிக்குரிய
ஆரும் என்ப"19
என்ற நூற்வாவின்
வழி எடுத்தியம்புகின்றார். செவிலித்தாய், காதலர்கள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
ஆகிய மூன்று காலத்திலும் நல்லனவற்றையே கடைப்பிடிக்க வேண்டும் என்ற எடுத்துரைப்பதாய்
அமைகின்றது.
தலைவனுக்கு உயிர்த் தோழன் பாங்கன் களவிலும்,
கற்பிலும் கூற்று நிகழ்த்துவற்கு உரியவனான இவனது. கூற்றுக்கள் தொல்காப்பியரால் தனித்துக்
கூறப்படவில்லை. சில கூற்றுக்கள் மட்டுமே இவனுக்குரியனவாகக் கற்பியலில் கூறப்படுகின்றன.
தலைவன் கூறிய மொழிகளுக்க எதிர் மொழி உரைத்தலும், தலைவனின் குறிப்பறிந்து செல்படுதலும்
பாங்கனின் செயல்களாகும். இதனை,
"மொழிஎதிர்
மொழிதல் மங்கற் குரித்தே
குறித்தெதிர்
மொழிதல் அஃதுத் தோன்றும்"20
என்னும் நூற்பாக்களின் வாயிலாகத்
தொல்காப்பியர் விளம்புகிறார்.
தொல்காப்பியர் செய்யுளியலில் கூற்றிற்குரியவர்களைக்
குறிப்பிடும் பொழுது "பரத்தை"21 என்றும் கற்பியலில் "காமக்கிழத்தி"22
என்றும் கூறுகின்றார். பரத்தையர் என்போர் யார் என்ற கேள்விக்கு விடையாக நச்சினார்க்கினியர்,
"காமக்கிழத்தியராவர்
கடனறியும் வாழ்க்கை
யுடையவராகிக்
காமக்கிழமை பூண்டு இல்லறம்
நிகர்த்தும்
பரத்தையர்"23
என்று எடுத்தியம்புகின்றார்.
கற்புக் காலத்தில் தலைவன் தலைவிக்குத்
தூதுவராய் வாயிலோர் அமைவர். அத்தகைய வாயிலோர்களின் கூற்றினைத் தொல்காப்பியர்,
"கற்பும்
காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும்
நிறையும் வல்லதின்
விருந்துபுறந்
தருதறுஞ் சுற்றமும் ௐபலும்
பிறவு மன்ன
கிழவோள் மாண்புகள்
முகம்புகல்
முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின்
வாயில்கட் குரிய"24
என்ற நூற்பாவின்
வழி அறிய முடிகின்றது. அதாவது, வீட்டினுள் நுழைந்து நன்கு பழக்கூடிய வாயிலோர் தலைவியின்
கற்புடைமை, நல்வழி ஒழுகுதல், விருந்தினரை ௐபுதல், மனத்தினைக்
கட்டுப்படுத்தல், பொறுமை, நற்குணங்கள் போன்ற மாண்புகளைத் தலைவனிடத்து எடுத்துரைப்பர்
என்று சுட்டுகின்றார்.
தலைவிக்கு அமைந்த தோழியர் பலர் அதைப் போன்று
தலைவனுக்கு அமைந்த தோழர்களும் பலராவர். அவர்களே இளையர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களின் கூற்றுக்கள் ஏழாகும் என்பதனை,
"ஆற்றது
பண்பும் கருமத்து வினையும்
வென் முடிபும்
வினாவுஞ் செப்பும்
தோற்றஞ்சான்ற
அன்னவை பிறவும்
இளையோர்க் குரிய
கிளவி என்ப"25
என்று தொல்காப்பியம் விளம்புகின்றது.
ஊரில் உள்ளார், அயலில் உள்ளார், சேரியில்
உள்ளார், தலைவியின் நோயினைக் குறிப்பால் அறிவார், தலைவியின் தந்தை, தமையன் ஆகிய அறுவரும்
தனித்து கூற்று நிகழ்த்துவதற்கு உரிமையில்லா மாந்தர்கள் ஆவர். இவர்தம் கூற்றுக்கள்
அகப்பாடலுள் பயிலாம். ஆனால் முற்கூறிய கூற்றிற்குரிய மாந்தருள் ஒருவரால் கொண்டு கூறப்பட்டனவாகப்
பாடலில் புனையப் பெற வேண்டும் என்று தொல்காப்பியர் வலியுறுத்துகின்றார். இதனை,
"ஊரும்
அயனுஞ் சேரி யோரும்
நோய் மருங்
கறிநருந் தந்தையும் தன்ஐயுங்
கொண்டெடுத்து
மொழியப் படுதல்லது
கூற்றவன் இன்மை
யாப்புறத் தோன்றும்"26
என்ற செய்யுளியல் நூற்பாவால்
அறியலாம்.
தொல்காப்பியம் சுட்டுகின்ற சமூகத்தில்
அகவாழ்வு என்பது தலைவனும் தலைவியும் அன்பு கொண்டு வாழ்கின்ற வாழ்வாகும். அகவாழ்வானது
களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என்றும், இதில் களவொழுக்கம் பற்றியும், களவு வெளிப்பட்டுத்
தலைவன் தலைவியை மணத்தலும், களவு வெளிப்படாமல் மணத்தலும் உண்டு என்ற செய்தியினை அறிந்து
கொள்ள முடிகின்றது. அவர்களின் வாழ்க்கை ஒழுங்கு நெறிகளையும், அவர்களுக்கு உறுதுணையாய்
இருக்கக் கூடிய செவிலி, தோழி, பாங்கன், வாயிலோர்கள், பரத்தை, இளையோர் ஆகியோரின் வாழ்க்கை
முறை குறித்தும், அவர்களின் கூற்றுக்கiள் தொல்காப்பியர் சுட்டுவதனை இவ்வாய்வின் மூலம்
தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
1. தொல்.அகம்.நூ.எ.1.
2. தொல்.பொருள்.களவு.நூ.எ.89.
3. மேலது.,நூ.எ.487.
4. மேலது.,நூ.எ.95.
5. மேலது.,நூ.எ.96.
6. மேலது.,நூ.எ.106.
7. மேலது.,நூ.எ.99(8-9).
8. மேலது.,நூ.எ.122.
9. மேலது.,நூ.எ.113.
10. மேலது.,நூ.எ.123.
11. தொல்.பொருள்.கற்பு.நூ.எ.140.
12. மேலது.,நூ.எ.141.
13. புலியூர்க்கேசிகன்(உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும்.பா.எ.15.
14. தொல்.பொருள்.செய்.நூ.எ.488
15. தொல்.பொருள்.கற்பு.நூ.எ.144
16. புலியூர்க்கேசிகன்(உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும்.பா.எ.196
17. தொல்.பொருள்.கற்பு.நூ.எ.145
18. மேலது.,நூ.எ.148
19. மேலது.,நூ.எ.148
20. மேலது.,நூ.எ.180,181.
21. தொல்.பொருள்.செய்.நூ.எ.491.
22. தொல்.பொருள்.கற்பு.நூ.எ.149
23. நச்சினார்க்கினியர்(உரை),தொல்காப்பியம் பொருளதிகாரம், நூ.எ.149.
24. தொல்.பொருள்.கற்பு.நூ.எ.150
25. மேலது.,நூ.எ.168
26. தொல்.பொருள்.செய்.நூ.எ.428
துணைநூற்
பட்டியல்
1. குறுந்தொகை மூலமும் உரையும்,
டாக்டர்.உ.வே.சாமிநாதையர், டாக்டர், உ.வே.சா.நூல் நிலையம், சென்னை, 2018.
2. தொல்காப்பியம் பொருளதிகாரம் - மூலமும் உரையும், இளம்பூரனர் உரை,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மறுபதிப்பு, 1982.
3. தொல்காப்பியம் உரைவளம் - பொருளதிகாரம் உவமவியல், ஆ.சிவலிங்கனார்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992.
4. சிவலிங்கனார். ஆ., தொல்காப்பியம் கூறும் உள்ளுறையும் இறைச்சியும்,
உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை, 1985.
5. சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய கொள்கைகள்), தமிழண்ணல், மீனாட்சி
புத்தக நிலையம், மதுரை, 2010.
6. பாலசுந்தரம். ச. (உ.ஆ.), தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக்
காண்டிகையுரை, அகத்திணையியல் புறத்திணையியல், தஞ்சை, முதற்பதிப்பு, 1989.
7. குறுந்தொகை தெளிவுரை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை, 2017.
8. குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, மனோன்மணி சண்முகதாஸ், உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை, 2000.
9. குமரன். இரா., சங்க இலக்கியத்தில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள்,
அபிநயா பதிப்பகம், தஞ்சாவூர், 2001.
10. சங்க இலக்கிய வரலாறு, பேரா.காவ்யா சண்முகசுந்தரம், சென்னை, 2012.
No comments:
Post a Comment