சங்க இலக்கியத்தில் தெய்வ மகளிர்
திருமதி.
செ.சத்யா
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஆதிபராசக்தி பொறியியல்
கல்லூரி,
மேல்மருவத்தூர்
- 603 319.
மின்னஞ்சல்:
sathyasenthil77@gmail.com
முன்னுரை
சங்க இலக்கியப் பாடல்களின் வழியே சங்க கால மக்களின் வாழ்வியலையும்
அவர்தம் வரலாற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. சங்க கால வாழ்க்கை மனித சமுதாயத்தின்
போற்றுதலுக்குரியது. சங்க இலக்கியங்களில் பெண்கள் பற்றிய பல குறிப்புகள் மிகுதியாகக்
காணப்படுகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த மகளிர் அவர்களுக்கென்று பல்வேறு தொழில்களையும்
செய்து வந்தது குறிப்பிடத்தக்கன. இவற்றுள் முக்கியமானவர்களாக தெய்வ மகளிர் காணப்படுகின்றனர்.
வரையர மகளிர், வானவ மகளிர், கொற்றவை, கொல்லிப் பாவை, சூர்ஃசூரர மகளிர், காளி, உமையம்மை
(மலைமகள்), அணங்கு போன்ற மகளிர்கள் தெய்வ மகளிராக
கருதப்பட்டனர். இவர்களை அக்கால மக்கள் தெய்வமாக வணங்கியதை சங்க இலக்கியத்தின் வாயிலாக
அறியமுடிகிறது. குறிப்பாக தலைவி, தோழி, செவிலி, நற்றாய் இவர்களைப் போன்று தெய்வ மகளிரும்
சங்க கால மகளிராக வாழ்ந்தனர் என்பதையும், அவர்களின் வாழ்வியல் மற்றும் பண்பு நலன்களை
எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
வரையர மகளிர்
வரையர மகளிர், மலைச்சாரல்களில்
உறைபவர்கள் என்று குறிஞ்சிப்பாட்டு பேசுகிறது. சங்க இலக்கியங்களில், இவ்வரையர மகளிரும்
சூர மகளிர்போல் அச்சம் விளைவிப்பவர்கள். பேரழகோடு விளங்கும் வரையர மகளிர் மலைக்குகைகளிலே
பார்ப்பவர்களின் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்தனர் என்பதை சுட்டுகின்றன.
வரையர
மகளிர் அழகிய தோற்றத்தை உடையவள்; என்பதனை தலைவன் தன் தோழனிடம் குறிப்பிடுகின்றான்.
இதனை,
"குன்றக்
குறவன் காதல் மடமகள்
வரையர
மகளிர்ப் புரையும் சாயலள்"1
என்ற பாடல் வரிகளில், தோழனே!
நான் காதலிக்கும் குன்றக் குறவனின் மகள் (தலைவி) நல்ல அழகினை உடையவள். மலையில் இருக்கும்
தெய்வப்பெண்ணான வரையர மகளிர் போன்றவள் அப்பெண் என்று தலைவன் எடுத்துரைப்பதன் வாயிலாக
வரையர மகளிர் எத்தகையவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தன்
நெஞ்சைக் கவர்ந்த தலைவி மலையில் வாழும் தெய்வ மகளிர்க்கு நிகரானவளாகவும், அரியவளாகவும்
இருந்தாள் என்பதை,
"வரையர
மகளிரின் அரியள் என்
நிறையரு
நெஞ்சம் கொண்டொளித் தோளே"2
என்ற
ஐங்குறுநூறு பாடலடிகள் சுட்டுகிறது.
வரையர
மகளிர் அணியாக நின்று கொண்டு தலைவியை 'நல்லவள். நல்லவள்' என்று வாழ்த்தினார்கள். மலையில்
இருக்கும் தெய்வப் பெண்ணே வாழ்த்திய தலைவியைத் தலைவன் திரும்பவும் வந்து திருமணம் செய்து
கொள்ளாமையால் தலைவனுக்கு மட்டும் தலைவி கெட்டவளாகவே தெரிவதாக,
"வரையர
மகளிரின் நிரையுடன் குழீஇ
பெயர்வுழிப்
பெயர்வுழித் திவராது நோக்கி
நல்லள்
நல்லள் என்ப
தீயேன்
தில்ல, மலை கிழவோற்கே"3
என்ற
பாடலடிகள் சுட்டுகிறது. இதில், தலைவன் அடிக்கடி வந்து செல்கின்றானே தவிர திருமணம் செய்யாமல்
காலம் தாழ்த்துவதை தலைவி தன் தோழியிடம் விளக்குகின்றாள்.
வரையர
மகளிர்கள் அடர்ந்த மலைகளில் விளையாடி மகிழும் தன்மை உடையவர்கள் என்றும், அப்படி அவர்கள்
விளையாடுகின்ற காரணத்தினால் அம்மலைகளில் மலர்ந்துள்ள மலர்கள் அனைத்தும் தரையில் சிதறிக்
கிடக்கும் என்பதனை,
"வரைஅர
மகளிரின் சாஅய் விழைதக
விண்பொரும்
சென்னி கிளைஇய காந்தள்
தண்கமழ்
அலரி தாஅய்; நல்பல
வம்புவிரி
களத்தின் கவின்பெறப் பொலிந்த"4
எனும்
குறிஞ்சிப்பாட்டு பாடலடிகள் சுட்டுகிறது.
மலையில்
உறையும் பெண் தெய்வங்கள் அதிகமான சக்தி கொண்டவை என்றும், அவை துன்புறுத்தும் தன்மையும்
உடையவை என மக்கள் நம்பியதை,
"ஈர்ந்தண்
சிலம்பின் இருந்தூங்கு நளிமுழை
அருந்திறல்
கடவுள் காக்கும் உயர்சிமை
பெருங்கல்
நாடன் பேகனும்"5
எனும்
நற்றிணைப் பாடலடிகள் விளக்குகின்றது. மலையில் உறையும் தெய்வங்கள் அணங்கு, வரையர மகளிர்
என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டதையும் அறிந்து கொள்ள முடிகிறது.(புறம்.158:10-12,
கலி.52:10)
சுனைகளில்
மலர்ந்திருக்கும் குவளை மலர்கள், மலைக் குகைகள் ஆகியன வரையர மகளிர் உலாவரும் பகுதிகள்
என்றும், வரையர மகளிரின் பிடித்தமான இடங்கள் என்பதைக் குறிப்பிட்டு அவ்விடங்களில் நீண்ட
நாட்கள் தங்கியிருக்க வேண்டாம் என்பதனை,
"அணையது
அன்று அவன் மலைமிசை நாடே
நிரையிதழ்க்
குவளை கடிவீ தொடினும்
வரையர
மகளிர் இருக்கை காணினும்
உயர்செல
வெம்பிப் பனித்தலும் உரியர்
பலநாள்
நில்லாது நிலநாடு படர்மின்"6
என்னும்
மலைபடுகடாம் பாடல் அடிகள் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது. இதனையே அகநானூறு பாடல்
அடிகளும்,
"நீர்இழி
மருங்கில் கல்அளைக் கரந்தஅவ்
வரையர
மகளிரின் அரியள்
அவ்வரி
அல்குல் அணையாக் காலே"7
என்று
எடுத்துரைக்கின்றன. இதில், தோண்டப்படாத நீராகிய அருவி வீழும் இடத்தில் உள்ள மலைக் குகைளில்
மறைந்திருக்கும் அழகிய வரையர மகளிர்போல், காண்பதற்கு அரியவள் நம் தலைவி என்று எடுத்துரைப்பதனை
அறிய முடிகின்றது.
வானவ
மகளிர்
வானவ மகளிர் வானத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும்
மலைப்பகுதிகளில் உறைவர். வரையர மகளிர் போன்றே
தெய்வ மகளிராகவும், தெய்வத் தன்மை உடையவர்களாகத் திகழும் இவர்களைப் பற்றியச் செய்திகளை,
சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பயின்று வந்துள்ளமையை அறிந்து கொள்ள முடிகின்றது.
"பொன்படு
நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர
மகளிர்க்கு மேவல் ஆகும்"8
என்ற
பாடலடிகளில், வானர மகளிர் மலைகளில் உறைந்தனர் என்பதை எடுத்தியம்புகிறது. பெரும்பாலும்
வானர மகளிர் உயரமான பகுதிகளில் இருப்பர். இல்லையென்றால் வானத்தில் உறைவர் என விளக்குகிறது.
முருகன் தனது கையால் வானர மகளிர்க்கு மாலையிட்டதனை திருமுருகாற்றுப்படை,
"நின்ற
விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர
மகளிர்க்கு வதுவை சூட்ட"9
என்ற
பாடலடிகள் எடுத்துரைக்கிறது. திருமுருகாற்றுப் படைகள் நக்கீரர் முருகனை உருவகிக்கும்
நிலையில் அவளது ஒரு இந்திரன் மகளான தேவயானைக்கு மணமாலை சூட்டிய நிலையினையும் ஒரு வானர
மகளிர்க்கு வதுவை சூட்டிய நிலையினையும் குறிப்பிடுகிறார்.
"நின்ற
விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ
மகளிர் மானக் கண்டோர்"10
என்ற
மதுரைக்காஞ்சிப் பாடலடிகள் சுட்டுகிறது. இதில் வானர மகளிர் வருத்தும் இயல்பை உடையவர்கள்
என்று எடுத்தியம்புகிறது.
கொற்றவை
கொற்றவை பாலைநில தெய்வமாக கருதப்படுகிறாள். சங்க இலக்கியங்களில்
கொற்றவையைக் காடமர்ச்செல்வி, காடுக்கிழால், என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொல்காப்பியர்; பொருளதிகாரத்தில் புறத்திணையில்
வெட்சித்திணைப் பகுதியில் புறநடைத் துறையாக கொற்றவை நிலை என்ற துறையினைக் குறிப்பிடுவதனை,
"மறங்கடைக்
கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை
நிலையும் அத்திணைப் புறனே"11
என்னும்
நூற்பா சுட்டுகிறது. பாலை நிலத் தெய்வமாக அறியப்பட்டாலும் அனைத்து திணை மக்களின் வெற்றிக்
கடவுளாய்க் கொற்றவை போற்றப்படுகிறாள். போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றிக்காக கொற்றவையை
வணங்கிச் செல்லும் நிலையே கொற்றவை ஆகும்.
பிளவுற்ற
குகைகளையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, வெற்றி பொருந்திய பகுதிகளில் கோயில் கொண்டிருக்கும்
வெற்றி பொருந்திய கொற்றவையை வழிபட்டனர் என்பதனை.
"விடர்முகை
அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும்
பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும்
ஓராம் விரிச்சியும் நில்லாம்"12
என்ற பாடலின் மூலம் கொற்றவைக்குக் கடன் நேர்ந்து கொள்ளுதல்,
காப்பு நாண் அணிதல், நிமித்தம் பார்த்தல், விரிச்சி கேட்டல் போன்ற சமயம் சார்ந்த பழக்கங்கள்
இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
கொல்லிப்
பாவை
கொல்லிமலை வல்வில் ஓரி என்ற குறுநில மன்னனுக்கு
உரியதாக இருந்தது. இம்மலையின் மேற்குப்பகுதியில் கதிரவனின் ஒளிபடுமாறு, மேற்கு நோக்கியவாறு
தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாக நூல்கள் உரைக்கின்றன. இப்பாவை 'கொல்லிப்பாவை'
என்றழைக்கப்பட்டது. இத்தெய்வம் கண்டோரை மயக்கி வீழ்த்தி உயிர்விடச் செய்யும் ஆற்றல்
கொண்டவை எனக் கூறுவதனை,
"பெரும்பூண்
பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண்
தெய்வம் குடவரை யெழுதிய
நல்லியற்
பாவை அன்னஇம்"13
வல்வின்
ஓரியின் கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் மலையைக் குடைந்து செய்யப்பட்ட கொல்லிப்பாவை
மிகவும் அழகான பாவை. ஆனால் அது அடைதற்கு அரியது என்பதனை,
"வல்வில்
ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின்
மடவந் தனளே"14
என்று
குறுந்தொகைப் பாடலடிகளும், கொல்லிப்பாவை போன்று என்னைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறாள்
அவள். நான் என்ன செய்வேன் என்று சொல்லிக் கொண்டு தலைவன் கலங்குவதனை,
"உரைசால்
உயர்வரைக் கொல்லிக் குடவயின்
அகல்
இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து
பறவை
இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை
நெடு வரை தெய்வம் எழுதிய
வினை
மாண் பாவை அன்னோள்"15
என்ற
நற்றிணைப் பாடலடிகள் சுட்டுகிறது.
பயன்மிக்க
பலா மரங்களைக் கொண்ட கொல்லிமலையின் மேற்குப் பகுதியைச் சார்ந்த மலையிடத்தே முன்பு தெய்வத்தாலே
வடிவமைத்து வைக்கப்பட்ட புதிய வகையில் இயங்குகின்ற பாவையானது, விரிந்து பரவும் சூரியனது
வெயிலிலே தோன்றி நின்றது போன்ற உன் அழகிய நலம் கருதி வருவேன் என்பதனை,
"பயங்கெழு
பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம்
புணர்த்த புதிதியல் பாவை"16
என்று
நற்றிணைப் பாடலடிகளின் மூலம் கொல்லிப் பாவை பற்றியச் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.
சூர்
ஃ சூரர மகளிர்
சூர் என்பதற்குத் தமிழ் அகராதிகள் தெய்வம், அச்சம் என்று எடுத்தியம்பினாலும்,
பாட்டுத்தொகை நூல்களில் குறிக்கப்பெறும் சூர், சூரர மகளிர் என்கிற சொல்லாட்சிகள் மலையுறை
பெண் தெய்வத்தைத் குறிக்கின்றன.
தெய்வமகளிர் முன் தலைவியை மணந்து கொள்வதாகத்
தலைவன் உறுதிமொழி அளித்தான் என்பதனை குறுந்தொகை,
"எக்கர்
நண்ணிய எம்மூர் வியன்றுறை
நேரிறை
முன்கை பற்றிச்
சூரர
மகளிரோடு டுற்ற சூளே"17
என்ற
பாடலடிகள் சுட்டுகிறது. இப்பாடலில், திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் காலம்
தாழ்த்துகிற தலைவன் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடுவானோ என்றும், தெய்வமகளிர் முன்
நீ உறுதிமொழி கொடுத்த தலைவனுக்கு ஏதேனும் தீங்கு விளையுமோ எனத் தோழியும், தலைவியும்
அஞ்சி வருந்துகிறார்கள் என்று விளக்குகின்றது.
"கோழி
ஓங்கிய வென்றுஅடு விறல்கொடி
வாழிய
பெரிது என்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ்
சிலம்பு அகம் சிலம்பப்பாடி
சூரர
மகளிர் ஆடும் சோலை"18
எனும்
திருமுருகாற்றுப்படை பாடலடிகளில், மலைகள் தோறும் எதிர் ஒலி உண்டாகும்படி 'சூரர மகளிர்'
எனப்படும் மகளிர் பலரும் ஒருங்கே கூடிப்பாடி ஆடுகின்ற சோலையினை உடையது என எடுத்தியம்புகின்றது.
'சூரர மகளிர் எனப்படுவோர் அச்சம் (சூர்) தரும், கொடிய (அர) தெய்வ மங்கையர் அல்லது வானுலக
மகளிர் என்னும் மாணிக்கனார் கருத்தும் சுட்டத் தக்கது.
தலைவியைப்
பார்த்த தலைவன் அவளது அழகைப் பார்த்து அவளை மானுடப் பெண்ணாக ஏற்க மறுத்து மலை மற்றும்
சுனையிலே வசிக்கும் தெய்வப் பெண்ணாகவே கருதினான் என்பதை பரணர்,
"ஆஅய்நல்
நாட்டு அணங்குடைச் சிலம்பில்
கவிரம்
பெயரிய உருகெழு கவாஅன்
ஏர்மலர்
நிறைசுனை உறையும்
சூர்மகள்
மாதோ என்னும் என்நெஞ்சே"19
என்ற பாடலடிகள்
அழகுற எடுத்தியம்புகின்றது. இப்பாடலில், தலைவன் அவளின் பேரழகினைக் கண்டு, இவள் ஒரு
தெய்வ மகளே என்று தலைவன் தன் நெஞ்சத்திடம் கூறுவதாக சுட்டுகிறார் பரணர்.
மேலும்,
சூரர மகளிர் அழகு மிகுந்தவர்களாக இருந்தார்கள் என்பதனை ஐங்குறுநூறு பாடலடிகள்,
"குன்றக்
குறவன் காதல் மடமகள்
வரையர
மகளிர்ப் புரையுஞ் சாயலள்
ஐயள்
அரும்பிய முலையள்
செய்ய
வாயினள் மார்பினள் சுணங்கே"20
என்று
சுட்டுகின்றது. இதில், குன்றக் குறவன் அன்பில் வளரும் மடப்பக் குணம் கொண்டவள் அவள்.
மலையில் வாழும் தெய்வ மகளிர் போன்ற மேனித் தோற்றம் கொண்டவள். மென்மையானவள் என்றும்
சிவந்த வாயினை உடையவளாகவும், மார்பில் சுணங்கு பூத்த அழகினை உடையவள் எனத் தலைவன் தன்னுடைய
காதலியைப் பற்றித் தோழனுக்கு தெரிவிப்பதாக விளக்குகிறது.
"பெருவரையடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடும்"21
கடவுள்
வாழும் சுனை என்று ஒதுக்கப்பட்டுள்ள சுனையில் இலைகளைத் தள்ளிவிட்டுப் பூத்திருக்கும்
குவளை மலரையும், குருதி நிறத்தில் மலையில் பூத்திருக்கும் காந்தள் மலரையும் சேர்த்துக்
கட்டி அணிந்து கொண்டு சூர்மகள் ஆடுவாள் என்பதனை,
"கடவுட்
கற்சுனை அடை இறந்த அவிழ்ந்த
பறியாக்
குவளை மலரொடு காந்தள்
குருதி
ஒண் பூஉரு கெழக் கட்டி
பெருவரை
அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவின்
இன் இயத்து ஆடும்"22
என்ற
பாடலடிகள் சுட்டுகிறது. இப்பாடலில், பெரிய மலைச் சாரல்களில் வீழும் அருவியின் இசைக்கேற்ப
தெய்வ மகளிரான சூர்மகளிர் ஆடுவர் என்று குறிஞ்சித் திணைப் பாடல் விளக்குகிறது.
சூரர மகளிர் மண்ணுலகில் இருக்கும் இயல்பான மகளிரைப் போல் இருந்து
மலையுச்சியில் பந்து விளையாடியதை,
"விண்தோய்
வரை பந்து எறிந்த அயாவீட
தண்தாழ்
அருவி அரமகளிர் ஆடுபவே
பெண்டிர்
நலம் வௌவி தன்சாரல் தாதுஉண்ணும்
வண்டின்
துறப்பான் மலை"23
எனும்
கலித்தொகைப் பாடலடிகள் சுட்டுகிறது. இதில், பந்தாடி முடிந்தவுடன் அக்களைப்பு போகும்
விதமாக அங்குள்ள சுனையிலே நீராடியிருக்கின்றனர் சூரர மகளிர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
காளி
சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் மதுரை
மாநகர் சென்றடைந்த கண்ணகி வரவு பற்றிய செய்தியினை மன்னனுக்கு சொல்லும் வாயிற்காப்போன்
வாயிலாகவே காளி முதன் முதலாக அறிமுகம் ஆகிறாள் என்பதை,
"அறுவர்க்கு
இளைய நங்கை இறைவனை
ஆடல்
கண்டருளிய அணங்கு சூருடைக்
கானகம்
உகந்த காளி"24
என்ற
பாடலடிகள் சுட்டுகிறது. இப்பாடலில், கண்ணகி பாண்டியனின் அரண்மனையில் நின்ற காட்சியை
வாயிற் காப்போன் மன்னனிடம் கூறிடும்பொழுது கண்ணகி என்ற பெண், துர்க்கை மற்றும் காளியைவிடச்
சினம் கொண்டவளாக உள்ளாள் என்று கூறுவதாக அமைகிறது. இதன் வழியாக துர்க்கை மற்றும் காளி
ஆகிய இருவருக்கும் ஒரு வேறுபாடு அமைந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. அன்னையர் எழுவர்
வழி;;ப்பாட்டில் காளி ஏழாவது தெய்வமாக இருந்தை 'அறுவர்க்கு இளைய நங்கை' எனச் சொல்வதால்
உணர முடிகின்றது.
சங்க இலக்கியங்களில் காளி தொடர்பான செய்திகள்
அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள,
".................................................. பழையோள் குழவி"25
என்பது காளியைக் குறித்திடும்
சொல்லாக அமைகிறது. நச்சினார்க்;கினியர் 'காளி'யைப் 'பழையோள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
காளி என்பவள் சப்தமாதர்களில் இளையவள் என்றும், வனத்தில் உறைபவள்
என்றும் சிலப்பதிகாரக் குறிப்புகளால் அறியமுடிகிறது. மேலும், இதில் சக்கரவாளக் கோட்டம்
தொடர்பான செய்திகளை விளக்கும்போது இடுகாட்டில் காளிக்காக ஓர் ஆலயம் (கோயில்) அமைக்கப்பட்டிருந்து
என்பதை அறிய முடிகின்றது. ஜெயங்கொண்டரால் எழுதப்பட்ட கலிங்கத்துப்பரணி 'காளி' புகழ்
பாடும் இலக்கியமாக அமையப்பெற்றுள்ளது.
உமையம்மை (மலைமகள்)
இமயமலையை வில்லாக வளைத்தவனும் கங்கையின் ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடைய இறைவன்
சிவபெருமான், இறைவியாகிய உமையம்மையுடன் உயர்ந்த மலையாகிய கயிலைமலையிலே இருந்தபோது பத்துத்
தலைகளை உடையவனும், அரக்கர்களின் தலைவனுமாகிய இராவணன் இமயமலையை எடுப்பதற்குத் கையைக்
கீழே செருகித் தொடியழகு பெற்ற தடக்கைகளினால் அம்மலையை எடுக்க இயலாது வருந்தினான் என்பதை,
"இமையவில்
வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணர்
உமை
அமர்ந்து உயர்மலை இருந்தானாக
ஐயிரு
தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி
தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல்
செல்லாது உழப்பவன் போல......"26
என்ற
கலித்தொகைப் பாடலடிகள் சுட்டுகிறது. இதில் இராவணன் கையிலைமலையை அசைக்கும் காட்சியோடு
உமையம்மையை காட்டுகிறது கலித்தொகை. மேலும்,
"மலைமகளின்
மைந்தனே"27
என்று முருகனை திருமுருகாற்றுப்படை
பாடல் வரியும் சுட்டுகிறது.
அணங்கு
அணங்கு என்ற வருத்தும் தெய்வம் பற்றிய பல செய்திகளை சங்க பாடல்கள்
காட்டுகின்றன. அணங்கு என்றால் துன்பம் தருபவள் என்றும், அச்சம் தரும் பெண் தெய்வமாகவும்
சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுகின்றாள்.
குறிஞ்சி நிலத்தில் கானவனின் அம்பு குறி தவறிப் போய்விட்டதனை
எண்ணி 'இம்மலையில் தெய்வம் தோன்றி நின்றது, மழை பெய்தால் அத்தெய்வத்தின் வீறு தணியுமாகலின்
மலையை மழை வந்து சூழ்வதாக' என்று மலை மேலாதான கடவுளை வழிபடும் பொருட்டுத் தன் சுற்றத்தோடு
வந்து மலைக்குப் பலி இட்டு நீர் விளாவி வழிபட்ட நிலையினை,
"அமர்க்கண்
ஆமான் அருநிறம் முள்காது
பணைத்த
பகழிப் போக்குநினைந்து கானவன்
அணங்கொடு
நின்றது மலைவான் கொள்கெனக்
கடவுள்
ஓங்குவரை பேண்மார் வேட்டெழுந்து
கிளையொடு
மகிழும்"28
என்ற
நற்றிணைப் பாடல் அடிகள் சுட்டுகிறது. இதில், காட்டுப்பசுவை துளைக்காது குறிதவறி விட்ட
அம்பின் நிலைக்கு தெய்வச் சீற்றம் என நம்பியதையும், மழை பெய்தால் தெய்வச் சீற்றம் தணியும்
என்பதையும், மழை பொழியக் கடவுளை வேண்டியதையும், யாழை மீட்டிப் பாடினால் தெய்வத்தின்
சீற்றம் குறையும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததையும் அறியமுடிகிறது.
அச்சம் தரும் தெய்வம் உறைகின்ற
மலையில் உள்ள பூக்களைச் சூடிக் கொண்டு 'தெய்வ மகளிர்' நம் சோலையில் பலியுணவை ஏற்பதற்காக
வருவர் என்பதனை கபிலர்,
"நம்படப்பைச்
சூருடைச்
சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண்டு
உருவில் அணங்குமார் வருமே"29
எனும் அகநானூறு
பாடலடிகள் சுட்டுகிறது.
அலைகள்
கிளர்ந்தெழும் கடற்கரையிலும், வானுயர்ந்த மலையடுக்கங்களிலும், அடர்ந்த மரங்கள் செறிந்த
காடுகளிலும், நீர்த்துறைகளிலும், முதிர்ந்த பெரிய ஆல், வேம்பு, கடம்பு முதலிய மரங்களின்
அடியிலும் தெய்வம் உறையும் என்பதனை,
"அணங்குடை
நெடுவரை"30
"அணங்குடைப்
பனித்துறை"31
"அணங்குடை
நெடுங்கோடு"32
"அணங்குடை
முருகன் கோட்டம்"33
எனவரும் தொடர்களால் அறிந்து கொள்ள
முடிகிறது. மேலும், பழந்தமிழர்கள் தமக்கென அமைத்துக் கொண்ட இல்லங்களிலும், மனைவாயில்
நிலைகளிலும் தங்களை இடர் நீக்கிக் காக்கும் தெய்வம் உறையும் என்ற நம்பிக்கையுடையவர்களாய்
இருந்தனர் என்பதனை,
"அணங்குடை
நல்லில்"34
"அணங்குடை
நெடுநிலை"35
என்ற
மதுரைக் காஞ்சித் தொடர்களால் அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆய்வு
முடிவுரை
பண்டைக் கால மனிதன் தான் எவற்றை
எல்லாம் கண்டு அச்சம் கொண்டானோ அவற்றை எல்லாம் வழிபட ஆரம்பித்துள்ளான். அவ்வாறு அவன்
வழிபட ஆரம்பித்ததன் மூலமே இறைவழிவாடு உருவாகியிருக்கும் என்பதை சங்க இலக்கிய நூல்களின்
வழியாக அறியமுடிகின்றது. மக்கள் வணங்கும் மகளிராக தெய்வ மகளிர் இருந்ததை அறிந்து கொள்ள
முடிகிறது. வானத்தை இருப்பிடமாகவும், மலைப் பகுதிகளில் உறையும் தெய்வமாகவும் வானவ மகளிர்
விளங்கினர் என்பதையும், வளமைக்குரிய தெய்வமாக கொற்றவை இருந்ததனால் மக்கள் வழிபட்டதையும்,
கண்டோரை மயக்கி வீழ்த்தி உயிர்விடச் செய்யும் ஆற்றல் உடைய தெய்வமாக கொல்லிப்பாவை விளங்கியதையும்
அறிய முடிகிறது. அணங்கு அச்சத்தை தரக்கூடிய தெய்வமாகும் என்றாலும் தெய்வ நிலையில் வழிபாட்டிற்கு
உரியதாகவே மக்கள் கருதினர். புனிதத் தன்மை கொண்டதாகவும் மலை, காடு, கடல் போன்ற இயற்கை
பொருள்களில் உறைந்து காணப்படும் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதையும், கடன் நேர்ந்து
கொள்ளுதல், காப்பு நாண் அணிதல் போன்ற சமயம் சார்ந்த பழக்கங்கள் இருந்ததை இவ்வாய்வின்
வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.
சான்றெண்
விளக்கம்
1. ஐங்குறுநூறு, 255
2. மேலது, 191
3. மேலது, 204
4. குறிஞ்.பா.195-198
5. நற்.165-37
6. மலைபடு.188-192
7. அகம்.342:11-13
8. நற்.356
9. திருமுருகு.பக்.116-117
10. மதுரைக்காஞ்சி, 382
11. தொல்.புறத். நூ.4
12. குறுந்.218
13. மேலது, 89
14. மேலது, 100
15. நற்.185
16. மேலது, 192
17. குறுந்.53
18. திருமுருகு. 38-41
19. அகம். 198:14-17
20. ஐங்குறுநூறு. 253
21. நற்.34
22. மேலது. 34:1-5
23. கலித்தொகை. 40:22-25
24. சிலம்பு.வழக்குரை காதை:
36-38
25. திருமுருகு.பழமுதிர். 259
26. கலித்தொகை. 38:1-5
27. திருமுருகு. 257
28. நற்.165:1-5
29. அகம்.158
30. மேலது. 22:1
31. ஐங்குறுநூறு. 174
32. புறம்.52
33. மேலது. 299
34. மதுரைக்காஞ்சி. 578
35. மேலது. 535
துணைநூற்பட்டியல்
1. இராமையாபிள்ளை. நா, (1999). நற்றிணை
மூலமும் உரையும், சென்னை: வர்த்தமானன் பதிப்பகம்.
2. கைலாசபதி. க, (1999). பண்டைத்தமிழர்
வாழ்வும் வழிபாடும், சென்னை: நியூ சென்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
3. தட்சிணா மூர்த்தி. அ,
(2004). ஐங்குறுநூறு, சென்னை: நியூ சென்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
4. சோம சுந்தரனார். பொ.வே,
(1990). கலித்தொகை, சென்னை: திருநெல்வேலி தென்னியந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் லிட்.
5. சாமிநாதையா.; டாக்டர். உ.வே.,
2018. குறுந்தொகை மூலமும் உரையும், சென்னை:
டாக்டர்.உ.வே.சா.நூல் நிலையம்.
6. தமிழண்ணல், (2010). சங்க இலக்கிய
ஒப்பீடு (இலக்கிய கொள்கைகள்), மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
7. செயபால். இரா, (2004). அகநானூறு
(மூலமும் உரையும்), சென்னை: நியூ சென்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
8. புலியூர் கேசிகன், (2018). சிலப்பதிகாரம்
(மூலமும் உரையும்), சென்னை: சாரதா பதிப்பகம்.
9. கதிர் முருகு. டாக்டர்,
(2016). பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும், சென்னை: சாரதா பதிப்பகம்.
10. இராமமூர்த்தி. மூர்த்தி,
(2019). பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை (மூலமும் உரையும்), சென்னை: கௌரா பதிப்பகம்.
No comments:
Post a Comment