Search This Blog

Saturday, December 23, 2023

குறுந்தொகையில் உள்ளுறை உவமம்

 

குறுந்தொகையில் உள்ளுறை உவமம்


திருமதி. செ.சத்யா

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604 304.

திண்டிவனம் வட்டம்.

Mail ID : sathyasenthil77@gmail.com

 

முன்னுரை

சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை என்னும் இலக்கிய உத்திகளை (நயங்களை) மிகச் சிறப்பாக கையாண்டுள்ளனர். இதை "குறிப்புப் பொருள் உத்தி" என்றும் அழைப்பர். வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல அமைப்பது "உள்ளுறை" உத்தியாகும். உள்ளுறை உத்தியில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இருக்காது. உவமிக்கப்படும் பொருள், தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும் என்பது இலக்கண விதி. "உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால்" இதனை "உள்ளுறை உவமை" என்றனர். குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வந்துள்ள உள்ளுறை உவமையினை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

தொல்காப்பியத்தில் உள்ளுறை

            தொல்காப்பியர், எல்லையற்ற இன்பம் தருவதே உள்ளுறை அமைப்பதன் நோக்கம் என்பதை,

"அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே"  - (தொல்.பொருள்.48)

என்று எடுத்துரைத்துள்ளார். மேலும், பொருள் சார்ந்து இவ்வுள்ளுறை ஐந்து வகைப்பட்டு வரும் என்பதை தொல்காப்பியர்,

 

"உடனுறை, உவமம், சுட்டுநகைச் சிறப்பென

கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே"   - (தொல்.பொருள்.47)

என்று கூறியுள்ளார். உடனுறை உள்ளுறை, சுட்டு உள்ளுறை, சிறப்பு உள்ளுறை, உவம உள்ளுறை, நகை உள்ளுறை என்னும் ஐந்து உள்ளுறைகளைக் கூறிய அவர், உவம உள்ளுறையைப் பற்றியும் (தொல்.அகத்.49, 51), சிறப்பு உள்ளுறையைப் பற்றியும் (தொல்.பொருள்.50) சில கருத்துக் கூறி விளக்கியுள்ளார்.

 

உள்ளுறை உவமம்

                        "உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்  முடிக என

உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்"   - (தொல்.பொருள்.51)

என்று தொல்காப்பியம் கூறுகிறது.

            வெளிப்படையான உவமைபோல் அல்லாமல் மறைமுகமான உவமையாக, நாமே குறிப்பாக உணர்ந்து கொள்ளும் விதமாக அமைவது உள்ளுறை உவமம். அதாவது உவமானம் சொல்லப்பட்டிருக்கும். உவமேயம் (புலவர் சொல்ல விரும்பும் பொருள்) நாம் ஊகித்து அறியுமாறு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

 குறுந்தொகைப் பாடல்களில் உள்ளுறை

            தலைவி தன்னை இகழ்ந்து கூறினால் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளோர் கேட்கும்படி "தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்று அவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்: தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்" என்று உள்ளுறை உவமையுடன் பரத்தை தனது தோழியிடம் சொல்வதை,


"கழனி மாவத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூவும் ஊரன்

எம்மில் பெருமொழி கூறித் தம்மில்

கையும் காலுமு; தூக்கத் தூக்கும்

ஆடியிற்பாவை போல மேவன செய்யும்

தன்புதல்வன் தாய்க்கே"  -  (குறுந்.170)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. பரத்தை அவளாகவே தலைவனை நாடிச் செல்லவில்லை, மாறாக அவனே வந்து அவளிடம் இன்பம் துய்க்க வந்தான் என்பதையும், மாமரத்தின் மாங்கனியை நாடி வாளை மீன் போகவில்லை, மாங்கனியே தானாக  வந்து வாளை மீனின் வாயில் விழுந்தது என்பதையும் அழகாக எடுத்துரைத்துள்ளார் புலவர். இங்கு வாளை மீன் பரத்தைக்கும், மாங்கனி தலைவனுக்கும் உவமை ஆகின்றன. இந்த உவமைக்கு உள்ளுறை உவமம் என்று பெயர்.

அருவி ஊழ்வினைக்கும், அருவியின் நீரால் விளைந்த கொறுக்காந்தட்டை ஊழ்வினையால் தோன்றிய காதலுக்கும், யானை கொறுக்காந்தட்டையை உண்டது தலைவனும் தலைவியும் அந்தக் காதலில் இன்புற்றதற்கும் உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளதனை,


"பலவும் கூறுகவ தறியா தோரே

அருவி தந்த நாட்குர லெருவை

கயனா டியானை கவள மாந்தும்

மலைகெழு நாடன் கேண்மை

தலைபோ காமைநற் கறிந்தனென் யானே"  - (குறுந்.170)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இதில், குளத்தை நாடிச் செல்லும் யானை, எவ்வித முயற்சியும் இல்லாமல், அருவியின் நீரால் விளைந்த கொறுக்காந்தட்டையை உண்டதைப் போல், விதிவசத்தால் தலைவனும் தலைவியும் காதலித்தார்கள் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமமாகும். 

     தலைவன் செல்லும் வழியில் உதிர்ந்து கிடக்கும் வாகைப் பூ பொங்கருக்குள் நுழைந்து பேய்க்காற்று அதனை அள்ளிச் செல்வதாகவும், அக்காற்று மோதிய வாகை மரத்து வெள்ளை நிற நெற்றுகள் ஒலிக்கும் என்பதனை உள்ளுறை உவமையுடன் எடுத்துரைப்பதனை,


"வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென

நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை அருஞ்சுரம் என்பநம்

முலையிடை முனிநர் சென்ற ஆறே"   - (குறுந். 39)

என்ற குறுந்தொகைப் பாடல் வரிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. பெருங்காற்றால் உதிர்ந்து கிடக்கும் பூ காற்றில் பறப்பதும், உலர்ந்த நெற்றுகள் ஒலிப்பதும் இயல்பு. இதனை, பூ அள்ளிற்று என்றும், நெற்றுகள் அலரின என்றும் நயமுடன் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பாடலடிகளில் "பூவுக்காக நெற்று அலறுவது கண்டு தலைவன் தலைவிக்காக வருந்தி மீள்வான்" எனக் கொள்வது உள்ளுறை உவமமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

தலைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள். அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் எனக் கட்டுவிச்சி சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல் என்பதனை தோழி உவமையுடன் எடுத்துரைப்பதனை,


"அரும்பற மலர்ந்த கருங்கால்  வேங்கை

மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை

பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்

தகாஅன் போலத் தான்றீது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே

தேக்கொக் கருந்து  முள்ளெயிற்றுத் துவர்வாய்

வரையாடு வன்பறழ்த் தந்தைக்

கடுவனு மறியுமக் கொடியோ னையே"        - (குறுந். 26)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. தலைவியின் நிலைக்கு உண்மைக் காரணம் அவளது காதல். அவள் தலைவனோடு நட்புடன் இருந்தாள். அதற்கு அந்த இடததில் இருந்து ஆண்குரங்கு சாட்சி என்கிறாள் தோழி. "தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே" என்று உள்ளுறை உவமத்துடன் அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பெண் யானையைத் தழுவிக் கொண்டு ஆண் யானை மன்றத்துக்கு வருவது போல, தலைவியை மணந்து கொண்டால் தலைமகனும் தலைமகளும் ஊருக்குள் வந்து வீட்டில் தங்கலாம்; என்னும் உள்ளுறையாக கொண்டதனை,

                     "வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்

நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து

கூறின் எவனோ தோழி நாறுயிர்

மடப்பிடி தழீஇத் தடக்கை யானை

குன்றச் சிறுகுடி யிழிதரு

மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே" - (குறுந். 332)

என்ற குறுந்தொகைப் பாடல வரிகள் அழகுற எடுத்துரைக்கின்றன.

தினைப் புனத்தைக் காவல் காப்பவன் ஏற்றிய கொள்ளிக் கட்டைக்குப் பயந்து ஓடிய யானை, பின்னர் வானத்திலிருந்து விழும் விண்மீன் ஒளிக்கு அஞ்சும் என்பது களவின் போது தலைவியின் உறவினர்க்கு அஞ்சும் தலைவன் வந்து பெண் கேட்டுத் திருமணம் செய்து கொள்ளவும் அஞ்சி வரைவு நீட்டிக்கின்றான் என்பதைக் குறிக்கின்ற உள்ளுறை உவமத்தை,


"முனிர்படர் உழந்த பாடில் உண்கண்

பனிகால் போழ்ந்து பணியெழில் ஞெகிழ்தோள்

மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு

நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய

ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன்

ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை

மின்படு சுடரொளி வெரூஉம்

வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே"         - (குறுந்.357)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றன.

பழைய மழை பெய்வதால் பதம் கெட்டு வடிவம் மாறிய சொத்தையான காய்களையுடைய எள்ளுச்செடி நிறைந்த, குறைந்த மழையையுடைய மழைக்காலக் கடைசி நாள்களில், சேற்றில் இருப்பதை வெறுத்த, சிவந்த கண்ணையுடைய எருமை, நள்ளிரவு நேரத்தில் 'ஐ' எனக் கத்தும். அந்த அச்சம் நிறைந்த பொழுதிலும் கூட நாழிகைக் கணக்கர் இரவிலே காலக்கணக்கை வருந்தி ஆராய்வது போல தலைவன் பிரிவை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணான துன்பத்தால் என் கண்கள் தூங்க தோழி என்று எடுத்துரைப்பதனை,

                     "பழமலை பொழிந்தெனப் பதனழிந் துருகிய

சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்

சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்

நள்ளென் யாமத் தையெனக் கரையும்

அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்

துஞ்சா வாழி தோழி காவலர்

கணக்காய் வகையின் வருந்தியென்

நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே"     - (குறுந். 261)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றன. இப்பாடல் வரிகளில், இற் செறிக்கப்பட்ட தலைவியின் நிலைமைக்குச் சேற்றில் கரையும் எருமை நிலையினை உள்ளுறை உவமாக எடுத்தாண்டுள்ளனர்.

இனிய பூங்கொத்தையுடைய புன்னை மரத்தின் அழகிய புள்ளிகள் பெற்ற நிழலில், பொன் போன்ற வரிகளையுடைய நண்டைப் பிடித்து அலைத்து விளையாடிய அந்த மகிழ்ச்சியான பழைய நிலையிலிருந்து தளர்ந்து நெகிழ்ந்த உளையலையுடையவளாக ஆனவள், இப்போது பசலை பரந்த மேனியையுடையவளாகவும் ஆகி விட்டாள் என்பதை உள்ளுறை உவமையுடன் எடுத்துரைப்பதனை,


"கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு

கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்

உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ

தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப்

பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும்

இன்னிணர்ப் புன்னையும் புகர்நிழற்

பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே"          - (குறுந்.303)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகுற எடுத்துரைக்கின்றன. கழியில் இரை தேர்ந்து உண்டு இளைப்புற்ற நாரை தாழையில் உறங்கும் என்றது களவொழுக்கத்தில் குறியிடம் பெற்று இன்புற்ற நீ வரைந்து இல்லத்தில் தங்கி இன்புறுவாயாக என்னும் உள்ளுறையை கொண்டதாக இப்பாடல் வரிகள் அமைந்துள்ளது.

 ஆய்வு முடிவுரை

            பழந்தமிழர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற "உள்ளுறை உவமை" இலக்கிய உத்திகளாகக் கையாண்டுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடாக கடைபிடித்துள்ளனர் என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த உள்ளுறை நுட்பமாக புரிந்து கொள்வதாக அமைகின்றன. இலக்கியப் பாடல்களில், கதை மாந்தர்களின் செயல்களை வெளிப்படையாக உணர்த்தாமல் மறைமுகமாக அன்பின் வலிமையினை விளக்கியுள்ளனர். 401 பாடல்களும்  401 சான்றுகளாக திகழ்கின்றன. குறுந்தொகைப் புலவர்கள் தம் நுண்மான் நுழை புலத்தால்  உள்ளுறை உவமத்தை கொட்டி வைத்திருக்கும் நல்ல குறுந்தொகையை நாளும் சுவைத்துப் போற்றுவோம்.

 

துணை நின்ற நூல்கள்:

1.         குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர்.உ.வே.சாமிநாதையர், டாக்டர், உ.வே.சா.நூல் நிலையம், சென்னை.

2.         குறுந்தொகை மூலமும் உரையும், கழக வெளியீடு, முதல் பதிப்பு மே-1955,அப்பர்அச்சகம் சென்னை.

3.         தொல்காப்பியம் பொருளதிகாரம் - மூலமும் உரையும், இளம்பூரனர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

4.         தொல்காப்பியம் உரைவளம் - பொருளதிகாரம் உவமவியல், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

5.         சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய கொள்கைகள்), தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

6.         ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் 1985, மதுரை, நல்ல குறுந்தொகை, கா.காளிமுத்து அவர்களின் கட்டுரை.

7.         குறுந்தொகை தெளிவுரை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.

8.         குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, மனோன்மணி சண்முகதாஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

9.         குறுந்தொகை - தமிழ்க்காதல் (கற்றுடைத்துக் கோத்தது), கு.மா.பாலசுப்பிரமணியம், முதற் பதிப்பு, 2007, பாரதி புத்தகாலயம், சென்னை.

10.       சங்க இலக்கிய வரலாறு, பேரா.காவ்யா சண்முகசுந்தரம்.

No comments:

Post a Comment