வள்ளலார்
காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்
செ.சத்யா
முழு
நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீமத்
சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,
மயிலம்
- 604 304. விழுப்புரம் மாவட்டம்.
மின்னஞ்சல்
: sathyasenthil77@gmail.com
முன்னுரை
பழம்பெருமை வாய்ந்த நம் பாரதக் கண்டத்தில்
ஆன்மீகத்தையும் அறநெறியையும் போதிக்கும் அருளாளராகத் தோன்றியவர் வள்ளலார் ஆவார்.
19ஆம் நூற்றாண்டில் வாழந்த இவர், எந்தவித வேறுபாடும் இன்றி எல்லா உயிர்களுக்கும் இரக்கம்
காட்டும் ஜீவகாருண்யமே இறைவனைத் தரிசிப்பதற்குரிய சிறந்த வழியென்று உயரிய கொள்கை உடையவர்.
சாதி சமய வேறுபாடுகளை நீக்கி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும் உயர்நிலை அடையவும்
சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஒரு புதிய நெறியை வகுத்துக் கொடுத்தார். உலக மக்களின்
உய்விற்காகப் பாடுபட்டவர். பசி என்று வந்தவர்களுக்கு புசி என்று அன்போடு மக்களை அரவணைத்து
சீவகாருண்ணியாய் வாழ்ந்து 'ஊனுருவி, உயிருருவி, யுள்ளுருவிப் பாய்ந்தின்ப ஊற்றெடுக்கும்
தேனருவி யாகிவளர் தெய்வீகத் திருவருட்பா' அளித்து, புதுவழியும் புதுயுகமும் புது வாழ்வும்
காண வழிசெய்ததுடன், பிற ஞானிகள் இறைவனிடம் தமது முக்திக்கு வழி கேட்ட போது இராமலிங்கர்
முக்தியைப் பொது நலத்துக்காகக் கேட்டவர். வள்ளலாருக்கு முன் வாழ்ந்த ஞானிகள் பிறவாமையை
வேண்டி நிற்க, இறவாமையை வேண்டிய தனித்தன்மை உடையவரான வள்ளலார் பாடல்களில் காணும் வாழ்வியல் விழுமியங்களை
ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
வள்ளலார் பிறப்பு
திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க
அடிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1823-1874) வாழ்ந்த மாபெரும் அருளாளர். இறைவனால்
இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டவர். நாமெல்லாம் நமது வினையினைத் தீர்ப்பதற்காக இவ்வுலகில்
பிறக்கிறோம். தான் அப்படிப் பிறந்தவர் அல்லர் என்பதனை,
"அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த
உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்
தடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்
கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்
அருளைப் பெற்றேனே"1
என்ற
திருவருட்பா பாடலில் அவரே கூறுகின்றார். இறைவனால் அனுப்பப்பட்டு அவதரித்தவர் என்ற காரணத்தினால்
தான், யாரிடமும் கல்வி கற்காமல், பள்ளிக்குச் செல்லாமல், ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்தபோதே
புராணப் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். பேரிய புராணத்தில் பாயிரம் கடவுள் வாழ்த்துப்
பாடலாகிய "உலகெலாம்" என்று தொடங்கும் முதற் பாடலைப் பாடி, "உலகெலாம்"
என்ற முதல் சொற்றொடருக்கு மட்டும், பல மணி நேரம் விளக்கம் அளித்தார் என்று அவரது வரலாறு
கூறுகிறது.
மதங்களை எதிர்த்தல்
தம்முடைய கொள்கைகளைப் பின்பற்றவும், பரப்பவும்
மட்டும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை ஏற்படுத்தினாரேயொழிய அதை மதமாக மாற்ற
அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. வள்ளலார் மதத்தை மட்டுமல்லாது மதத்தைச் சார்ந்தவர்களையும்
வெறுத்தார் என்பதனை,
"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ்பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்"2
என்ற
பாடலடிகள் அழகாக சுட்டுகின்றது. இப்பாடலில் 'மதமான பேய்' என்கிற பொழுது, மதத்தை அவர்
எந்த அளவுக்கு வெறுத்தார் என்பது விளங்கும்.
சாதி சமய வேற்றுமைகளை எதிர்த்தல்
மனிதர்களின் தோலின் நிறங்களைக் கொண்டு,
அவர்களின் கல்வி நலம், பண்பு நலம் ஆகியவற்றைக் கண்டறிய இயலாது. வருணம், ஆசிரமம், ஆசாரம்
முதலியவற்றின் பொய்ம்மையினை, அறிவுக்கண்ணைத் திறந்து கொண்டு தெளிய வேண்டும் என்பதனை,
"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலை நீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே"3
என்ற
பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றது.
அன்பினால் ஒரு குடும்பத்தவராக, ஒன்றுபட்டு
வாழ வேண்டியது மனித குலம். ஆனால், மனித குலத்தினை, இன்ன மதத்தினர், இன்ன சாதியினர்
எனப் பல்வேறு வகையினராகப் பிரித்து வேறுபடுத்துவதற்குக் காரணமாக உள்ள சாதி மதங்கள்
யாவும் பின் வந்தோரால் கற்பனை செய்து உருவாக்கப்பட்டவையேயன்றி, இவை மெய்யானவை அல்ல
என்பதனை,
"சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி"4
என்ற
பாடல் வழியாக எடுத்துரைக்கின்றார். இதில் சாதி மதங்கள் எல்லாம் பின் வந்தோராற் கற்பனை
செய்து உரைக்கப்பட்டனவேயன்றி மெய்யானவை அல்ல என்று இறைவனால் உணர்த்தப்பட்டு வள்ளலார்
மக்களுக்கு கூறுகிறார்.
இந்தச் சாதி, சமய, வேற்றுமைகளையெல்லாம்
அறவே தவிர்தது மக்கள் அனைவரையும் ஒரு குலத்தராகக் காணும் பொதுமை நெறியாகிய சன்மார்க்க
நெறியைப் பின்பற்றி மக்கள் உய்வுபெற வேண்டும் என்பதனை,
"இச் சாதி சமய விகற்கங்களெலாந் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்"5
என்று
மக்களை வேண்டி அழைக்கிறார் இராமலிங்கர்.
மூட நம்பிக்கை எதிர்ப்பு
சரியான காரணங்களோடு ஒரு பழக்கத்தினைப்
பின்பற்றுவது நம்பிக்கை. காரணமே இல்லாமல் கண்மூடித் தனமாக ஒரு பழக்கத்தினைப் பின்பற்றுவது
மூட நம்பிக்கையாகும். மூடப் பழக்க வழக்கங்களைக் குறிப்பாகச் சாதியின் பெயராலும், சமயத்தின்
பெயராலும் பின்பற்றப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டிப்பதில் வள்ளலார் முதலில்
நிற்கின்றார்.
இறையுணர்வைப் பெருக்கும் முயற்சியில்
ஜாதி ஆசாரம், குலாச்சாரம், ஆசிரம ஆச்சாரம், லோகாச்சாரம், தேகாச்சாரம், கிரியாச்சாரம்,
சாஸ்திர ஆச்சாரம் ஆகியவை தடைகளாக வந்து விட்டன என்று வள்ளலார் எடுத்துரைப்பதனை,
"கலையுரைத்த கற்பனையே நிலை எனக்கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக
மலைவறு சன்மார்க்கம் என்றேநிலைபெற மெய்உலகம்
வாழ்ந்தோங்க கருதியருள் வழங்கின என்தனக்கே"6
என்று
ஆச்சாரங்களை எல்லாம் கண்மூடித்தனமான பழக்கங்கள் என்று கண்டிக்கிறார். .இப்பாடலில் ஆச்சாரங்களினால்
ஏற்பட்ட மூட நம்பிக்கைகளை விளக்குவதுடன், மூட நம்பிக்கைகளை முற்றாகக் களையுமாறு எடுத்துரைக்கின்றார்.
சாதி சமயப் பற்றுகளில் இருந்து விடுதலைப்
பெறுவது வள்ளலாரின் நிறைவான நோக்கமாகும். உலக வரலாற்றில் மதத்தின் பெயரால் சண்டை சச்சரவுகளும்
வன்முறை வெறியாட்டங்களும், மிருகத்தனமான கொலைவெறிச் செயல்களும் நிழ்ந்ததை நினைத்து
இராமலிங்கர் நெஞ்சம் பதைத்தார் என்பதனை,
"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே"7
திருவருட்பா
பாடலில் மனம் நொந்து எடுத்துரைக்கிறார். வெவ்வேறு மதங்களையும் சமயநெறிகளையும் பின்பற்றும்
மக்கள், மத எல்லைகளைக் கடந்து சமய எல்லைகளைக் கடந்து சமத்துவ, சகோதரத்துவ உணர்வோடு
பூரண ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையோடு வாழவேண்டும் என வலியுறுத்தி, அனைத்து மதங்களுக்கும்
பொதுவான புதியதோர் நெறியை வகுத்துத் தந்திருப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு
பூண்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திய வள்ளலார் எளியோரை வலியோர் துன்புறுத்தியதைக்
கண்டபோதெல்லாம் கலக்கமுற்றதனை,
"எளியரை வலியார் அடித்தபோது ஐயோ
என்மனம் கலங்கிய கலக்கம்
தெளியநான் உரைக்க வல்லவனல்லேன்"8
என்ற
திருவருட்பா பாடலில் தமது உள்ளம் சொல்ல முடியாத அளவு கலங்கியதைக் குறிப்பிடுகிறார்.
இதனையே,
"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை"9
என்ற
புறநானுற்று அடிகள் அறிவுறுத்துவதும் இங்கு நோக்கத்தக்கது.
வறியோர்களின் பசியை போக்குதல்
மக்கள் எல்லோரும் பசியின்றி வாழ சாதி,
சமய வேறுபாடு இன்றி தினமும் உணவு தர 1867ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் வடலூரில் சத்திய
தருமச் சாலையை நிறுவினார். அன்றிலிருந்து இன்று வரை 150 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த
அணையா அடுப்பு தொடர்ந்து எரிந்து ஏழைகளின் பசிபோக்கி வருகிறது. இவரது பசிப்பிணி மருத்துவத்தையும்,
உயிர்ப்பிணி மருத்துவத்தையும் கண்டு வியந்து, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இவருக்கு அருள்
தர தருமச் சாலைக்கு ஓடோடி வருகிறார் என்பதனை,
"நீ நினைத்த நன்மையெல்லாம் யாமறிந்தோம்
நினையே நேர்காண வந்தனம்"10
என்னும்
திருவருட்பா அடிகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. மேலும்,
"உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்
உறுபசி உழந்துவெந் துயரால்
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
மற்றிதை நினைத்திடுந் தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்"11
என்று
தமது உள்ளக் குமுறலைக் கூறியவர் எந்த நேரத்தில், எவர் வந்தாலும் இல்லை என்னாது, வயிறாரப்
புசிப்பதற்கு உணவு வழங்க வேண்டி, வடலூரில் சத்திய தருமச் சாலையைத் தொடங்கினார்.
பசியானது
ஒருவனது,
"குடிப்பிறப்(பு) அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும், மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி, அது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது"12
என்று
சீத்தலைச் சாத்தனாரும் தமது மணிமேகலையில் பசியின் கொடுமையை எடுத்துக் காட்டுகிறார்.
'பசிவந்திடப் பத்தும் பறந்துபோகும்'
என்பது பழமொழி. பட்டினிக் கொடுமை, தேசபக்தி, தெய்வபக்தி, மதபக்தி, மனிதபக்தி அத்தனையையும்
நலிய வைத்தது. அதனால் தீமை பல்லாயிரம் சேர்ந்தனை அன்றைய மதாச்சாரியர்கள், மகந்துகள்,
ஆன்மீகத்துறையினர் உணராதவர்களாகவோ, உணர்ந்தும் மறந்தவர்களவோ இருந்தனர். இது நாட்டின்
விதி. அந்த விதிக்கும் விதிகளை விழைந்த வள்ளலார்,
"மண்ணுலக கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒரு சிறிதெனினும்;
கண்ணுறப் பார்த்தும் செவியுறக்கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்"13
என்று
மனித சமுதாயத்திலே மகத்தானதொரு பொருளாதாரப் புரட்சி ஏற்பட வேண்டும் என்று எடுத்துரைப்பதனை
அறிந்து கொள்ள முடிகிறது. தமது குடும்பச் செலவைக் கூடியமட்டில் சிக்கனம் செய்து ஏழைகளின்
பசியை நீக்குதல் வேண்டும் என்றும் எடுத்துரைக்கின்றார்.
இறையருள்தான் வள்ளலாரை சமரச சுத்த சன்மார்க்கத்தை
காணவைத்தது என்பதனை,
“அன்றே என்னை அடிய னாக்கி
யாண்ட சோதியே
அதன்பின் பிள்ளையாக்கி யருளில்
களித்த சோதியே
நன்றே மீட்டு நேய னாக்கி
நயந்த சோதியே
நானும் நீயும் ஒன்றென் றுரைத்து
நல்கு சோதியே"14
என்ற
அடிகளின் தருவாக்காலேயே இதனை அறிந்து கொள்ள முடிகின்றது. 'நானும் நீயும் ஒன்று' என்பது
சன்மார்க்கம். 'சோதியே' என்பது இவர்கண்ட 'அருட்பெருஞ்சோதி' என்ற இறைவன். இறைவனை ஒளியாக
– அருட்பெருஞ் சோதியாக – கண்ட அடிகள் அந்தச் சோதியிலேயே இரண்டறக் கலந்தார் என்பது வரலாறு.
அவர்தம் அருளிச் செயல்கள் யாவும் - ஒன்று சேர்ந்து ஒரே குரலாக – ஒரு பெரிய குரலாக
– நம்மையும் அதில் வந்து கலக்குமாறு அழைக்கின்றன.
"அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி"
என்று
வள்ளலார் கழலை வாழ்த்தி நம் வாழ்வைப் புனிதவள வாழ்வாக்கிக் கொள்வோமாக.
முடிவுரை
வள்ளலார் வலியுறுத்திய பல்வேறு சமுதாய
சீர்திருத்தக் கருத்துகளும், வள்ளலார் காட்டிய இரக்கம், கருணை, அன்பு போன்ற வாழ்வியல்
நெறிகளைப் பின்பற்றி, எளியோருக்கும் உதவி, உயர்வு தாழ்வு பாராட்டாமல் ஒற்றுமையுடன்
வாழ்வோர் நல்ல குடிமக்களாக விளங்குவர். இதனால் ஒளிமிக்க அமைதியான சமுதாயத்தைக் காணமுடியும்
என்பதால் வள்ளலாரின் நெறிப்படி வாழ்வது இன்றைய தேவையாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள
முடிகின்றது.
சான்றெண் விளக்கம்
1.
திருவருட்பா,
ஆறாம் திருமுறை. பா.எண்.5485
2.
திருவருட்பா,
பா.எண் 8
3.
திருவருட்பா,
பா.எண.;15
4.
அருட்பெருஞ்சோதி
அகவல், வரி எண்கள் 211-212
5.
திருவருட்பா,
ஆறாம் திருமுறை, சுத்த சன்மார்க்க வேண்டுகோள், பா.எண.;8
6.
திருவருட்பா,
பா.எண.; 3768
7.
திருவருட்பா
ஆறாம் திருமுறை, பா.எண்.1473
8.
வள்ளலார்,
திருவருட்பா ஆறாம் திருமுறை, பா.எண்.266
9.
புறநானூறு,
பா.எண்.76
10. திருவருட்பா,
ஆறாம் திருமுறை, பா.எண்.587
11. திருவருட்பா,
ஆறாம் திருமுறை, பா.எண்.1609)
12. சீத்தலைச் சாத்தனார்,
மணிமேகலை, பா.அடி.76-81
13. திருவருட்பா,
ஆறாம் திருமுறை, பா.எண்.3408
14. கீர்த்தனைப்
பகுதி; மெய்யருள் வியப்பு,96
துணைநின்ற நூல்கள்
1. விசுவநாதன்
கி.ஆ.பெ., வள்ளலாரும், அருட்பாவும், சென்னை: பாரி நிலையம்.
2. வெள்ளைவாரணணனார்,
திருவருட்பா சிந்தனை, மணிவாசகம் பதிப்பகம்.
3. இராமலிங்க அடிகள்,
திருவருட்பா, சிதம்பரம்: மணிவாசகம் பதிப்பகம்.
4. இராமலிங்க அடிகள்,
சீவகாருண்ய ஒழுக்கம், சிதம்பரம்: மணிவாசகம் பதிப்பகம்.
5. அ.லெ.நடராஜன்,
வாழ்விக்க வந்த வள்ளலார், சென்னை: வ.உ.சி நூலகம்.
6. திரு அருட்பிரகாச
வள்ளலார், ஜீவிய சரித்திரம், வள்ளலார் பதிப்பகம்.
7. இராமலிங்க அடிகள்
வரலாறு – ஊரன் அடிகள்.
No comments:
Post a Comment