குறுந்தொகையில்
தொல்காப்பிய உவமம் – உருவகம்
திருமதி.
செ.சத்யா
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,
கலை, அறிவியல் கல்லூரி,
மயிலம் - 604 304. விழுப்புரம் மாவட்டம்.
மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com
ORCID ID: 0000-0001-7111-0002
முன்னுரை
உலகில் உள்ள பல்வேறு மொழிகளில்
தமிழ் மொழி மட்டுமே பொருள் இலக்கணம் பெற்று இருப்பது நம் தாய்மொழியின் தனிச் சிறப்பாகும்.
பொருள் இலக்கணம் நம் முன்னோர்களின் வாழ்க்கையினை அகம், புறம் என இரு கூறுகளாக வகுத்துக்
கூறுகின்றன. புறத்திணைப் பொருளான வீரம், கொடை முதலியவை மக்களுள் சிலரிடமே காணப்படும்.
ஆனால் அகத்திணைப் பொருளான காதல், உயர்திணை, அஃறிணை என எல்லா உயிர்களிடத்தும் காணப்படும்
என்பதை 'எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்' என தொல்காப்பியர்
குறிப்பிடுவதனையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். சங்க நூல்களுள் ஒன்றான 'நல்ல' என்ற
அடைமொழிக்குறிய குறுந்தொகையில் புலவர்கள் செய்யுளுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், பொருள்
புலப்பாட்டிற்காகவும் பல்வேறு உத்தி முறைகளான உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றை
கையாளுகின்றனர். அவ்வகையில் உவமையும், உருவகமும் சங்க குறுந்தொகையில் எவ்வாறு பயின்று
வந்துள்ளது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
உவமம்
என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுமுகமாக, அப்பொருளினுடைய வினை, பயன்,
மெய், உரு முதலிய இயல்புகளை நன்கு புலப்படும்படிச் செய்வதாகிய பொருள் புலப்பாட்டு நெறியாகும்.
ஒரு பொருளோடு மற்றொரு பொருளை
ஒப்பிட்டுக் காணும் இயல்பு ஆறறிவு படைத்த மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. மனிதன் தான்
அறிந்த ஒரு பொருளைக் கொண்டு அறியாத ஒருபொருளை விளக்குமுகத்தான் உவமையைப் பயன்படுத்துகிறான்.
உவமையை எப்பொழுது கையாளத் தொடங்கினானோ அப்பொழுதே மனிதன் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கத்
தொடங்கினான் என்று கூறலாம்.
"தெரிந்த பொருளின் ஒப்புமையைக்
கொண்டே தெரியாத பொருளைத் தெரிந்து மனித அறிவு வளர்ந்து வந்திருக்கிறது" என்பார்
ஏ.கோதண்டபாணிப்பிள்ளை. நேரடியாக ஒரு பொருளை உணர்த்துவதற்காக அதனோடு தொடர்புடைய மற்றொருபொருளை
ஒப்பிட்டுக் காட்டுவதே கலைகளுக்கு அடிப்படை என்பதை, "அழகுள்ள பொருளை மற்றொன்றின்
அழகோடு ஒப்பிட்டுக் பார்க்கும் இந்த உவமையே கலைகள் பலவற்றிற்கும் அடிப்படையிலான கலையாகும்"
என மு.வ குறிப்பிடுகின்றார். இவற்றிலிருந்து ஒப்பிட்டுக் காட்டப்படுவதே உவமை எனலாம்.
இலக்கியத்திற்கு
இலக்கணம் வகுத்த முதல் நூலான தொல்காப்பியம் வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப்படையில்
உவமை தோன்றும் என்கிறது. இதனை,
"வினைபயன் மெய்உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமைத் தோற்றம்"1
என்ற நூற்பா எடுத்தியம்புகின்றது. ஆனால், தண்டியாசிரியர்
பண்பு, தொழில், பயன் ஆகியவற்றின் காரணமாக உவமை பிறக்கும் என்கிறார். மேலும், அது ஒன்றாகவோ,
பலவாகவோ வருகின்ற பொருளோடு பொருந்தும்படி கேட்போர் உணர்ந்து கொள்ளுமாறு ஒப்புமை புலப்படும்
வண்ணம் எடுத்துரைப்பதே உவமை அணி என்கிறார். இதனை,
"பண்பும் தொழிலும் பயனும்என் றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை"2
எனும் நூற்பாவில் வடிவத்தையும், நிறத்தையும் பண்பினுள்
அடக்கி மூன்றாகக் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பியர் உவமையின் வகைகளாக
வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் என்றும், வீரசோழியம் உவமை
33 வகைகள் என்றும், இலக்கண விளக்கம் 32 வகைகள் என்றும், தொன்னூல் விளக்கம் 11 வகைகள்
என்றும், முத்துவீரியம் 26 வகைகள் என்றும், சுவாமிநாதம் 22 வகைகள் என்றும், மாறனலங்காரம்
25 வகைகள் என்றும் மேலும் 11 என மொத்தம் 36 வகைகளாகவும், சந்திராலோகம் 2 வகைகள் என்றும்
குவலயானந்தம் 5 வகைகள் என்று உவமையின் வகைகளாக இலக்கண நூல்கள் எடுத்துரைக்கின்றன.
இவ்வாறாக
தொல்காப்பியர் கூறிய உவமைகளையே பின் வந்த இலக்கண நூல்கள் கூறுவதாகவும் அல்லது அதனை
விவரித்து விளக்குவதாகவும் அமைந்துள்ளதை நம்மால் அறியமுடிகின்றது.
குறுந்தொகையில்
அமைந்துள்ள 401 பாடல்களில் 271 பாடல்களில் உவமைகள் பயின்று வந்துள்ளன. இதில் ஒரே பாடலில்
2 உவமைகள் அமையப் பெற்றதாக 9(3,4-6), 12(1-2,4), 13(1-2,5), 29(1-4,5-7),
41(1-2,3-6), 49(1-2), 52(2,3), 57(1,1-3), 68(1,4), 74(1-2,4-5), 76(2,3-4),
83(1,3-5), 95(3-4,3-5), 100(5-6,7), 101(4,4-7), 105(1,2-4), 106(1-2,3-6),
117(1-2,1-4), 121(2,2-6), 123(1,2), 129(3-6,6), 131(1,4-6), 133(1,1-4),
138(3,5), 142(2,3-5), 147(1-2,3-5),
148(1-3,2), 152(2-3,4-5), 160(1,2-7), 165(1-2,3-5), 169(1-3,4-6),
176(4-5,6-7), 178(1-4,5-7), 180(1-2,2-4), 183(1-4,5-7), 185(2,4-6), 189(3-5,2),
193(1-2,3), 198(2,2-4), 199(2-5,6), 222(5-6,7), 225(3-5,6-7), 231(3-4,4-6),
243(1,2), 244(1-2,4-6), 250(3-4,5), 257(1-2,6), 258(2-6,6-8), 259(2-4,6-8),
262(4,7-8), 273(1-3,5-8), 274(1,1-2), 279(5-6,8), 291(1-4,5-8), 292(1-6,6-8),
294(3-9,5-8), 305(1,6-8), 318(6,8), 320(3,5-7), 328(2-3,4-8), 330(1-4,5-6),
336(3,4-6), 339(1-2,5-6), 357(2,5-7),
360(4-5,5-7), 364(1,5), 376(1-3,3-6), 385(1-4,6), 388(3,4-5), 390(2,3-5)
ஆகிய 72 பாடல்களிலும், மூன்று உவமைகள் அமையப்பெற்றதாக 26(2-3,4,6-8),
226(1,2-3,5-6), 240(1-2,3,5-7), 286(1,2,3-5), 389(1,2-3,6-8), 300(1,2,3-4),
323(1,2-3,4-5), 397(1,2-3,4-7) ஆகிய 8 பாடல்களிலும், நான்கு உவமைகள் அமையப்பெற்றதாக
315(1-2,3,3-4,4) என்ற ஒரு பாடலிலும் அமைந்துள்ளன. இவ்வாறாக குறுந்தொகையில் 363 இடங்களில்
உவமைகள் இடம்பெற்று பாடலினைச் சிறப்பிக்கின்றன.
குறுந்தொகையில் தொல்காப்பிய உவமை வகைகள்
தொல்காப்பியம்
வினை, பயன், மெய். உரு என்ற நான்கும் உவமைக்கும் பொருளுக்கும் இடையே உவமிக்கப்படும்
பொதுக்கருத்தாய், அடித்தளமாய் அமைவனவாகும். இளம்பூரணர் 'பாகுபட வருதலாவது கண் முதலிய
பொறிகட்குப் புலனாவனவும் பொறிகட்குப் புலனாகாது மனத்திற்கு புலனாவனவும் என இருவகைப்பட
வருதல்' என்று கூறுகிறார்.
"ஐம்பொறிக்கண்
கட்புலனாகியவற்றுள் வினை, பயன், மெய், உரு முதலாயின" ஐம்பொறிகளுக்கு
புலனாகாதனவாக "செவியால் அறியப்படுவன, நாவினால் அறியப்படுவன, மெய்யினால் அறியப்படுவன,
மூக்கால் அறியப்படுவன, மனத்தால் அறியப்படுவன" என்று உவமை 'பாகுபட வரும்' என்பதற்கான
விளக்கத்திணை உரையாசியரின் மூலமாகவே அறியமுடிகின்றது.
வினை உவமம்
வினையாவது
நீட்டல், முடக்கல், விரித்தல், குவித்தல் ஆகிய தொழில் காரணமாக வரும் உவமை 'வினை உவமை'யாகும்.
குறுந்தொகையில் வினை உவமம், 8(4-6), 9(4-6), 24(3-6), 26(2-3), 29(5-7), 51(1-3),
52(2), 54(3-4), 58(3-6), 60(1-6), 64(1-4),
72(1-2, 74(1-2), 91(5-8), 104(2), 105(2-4), 117(1-4), 121(2-6),
126(4-5), 131(4-6), 132(4-6), 134(5-7), 136(3-5), 139-2-6, 152(2-3), 152(4-5),
154(1-2), 162(3-6), 169(1-3), 176(4-5), 189(2), 205(1-3), 225(3-5), 231(3-4),
240(5-7), 244(4-6), 250(3-4), 265(2-5), 271(1), 282(4-8), 283(5), 287(3-8),
293(2-6), 309(1-8), 315(1-2), 315(4), 328(2-3), 328(4-6), 348(1-6), 359(4),
368(6-8), 375(3-6), 383(4-6), 385(1-4), 395(1-5), 399(1-4) ஆகிய 56 இடங்களில் பயின்று
வந்துள்ளன.
பொதுவாக பெண்களுக்கு கணவர் பிரிந்துச்
சென்ற நாட்கள் சிலவாயினும் அவை பல நாட்களாகத் தோன்றுதல் என்பது இயல்பாகும்.
அவ்வகையில் பின்பனிக் காலத்தில்
பிரிந்துச் சென்ற தலைவன் நீண்ட நாட்கள் ஆகியும் வராததால் வருந்திய தலைவி உவமையுடன்
கூறுவதனை,
"நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்"3
என்னும் பாலைத் திணைப் பாடலில் தலைவன் முத்து மாலையில்
இருந்த நூல் அறுப்பட்டதால் சிதறிக் கிடக்கும் முத்துக்களைப் போலக் குளிர்ந்த பனித்துளிகளை
உடைய குளிர்ந்த தாளியறுகின் கொடியை, விடியற் காலையிலேயே பசுக் கூட்டங்கள் மேய்கின்ற
பனித்துளி வீழ்கின்ற பின்பனிக் காலத்திலும் என்னைப் பிரிந்து வாழ்கின்றார் என்று தலைவி
புலம்புவதனை அறியலாம்.
இதில் பனித்துளி ஒன்றோடொன்று
தொடர்பின்றித் தனித் தனியே விழுவதற்கு நூலறுமுத்து உவமையாக இடம் பெற்றுள்ளதால் இது
வினை உவமைக்கு சான்றுகளாக அமைகின்றன.
பயன் உவமம்
தொழிலின்
பயனால் ஏற்படும் நன்மை, தீமை பயன் உவமையாகும். குறுந்தொகையில் பயன் உவமம்,
15(2-4), 19(1-3), 26(4), 27(1-5), 40(4-5), 57(1), 73(1-5), 80(4-7), 99(4-6),
112(3-5), 121(2-6), 124(1-2), 133(1-4), 143(4-7), 149(3-6), 150(1-2), 152(2-3),
161(4-5), 165(3-5), 171(1-4), 176(4-5), 176(6-7), 189(3-5), 199(6), 202(1-5),
218(5), 225(3-5), 229(5-7), 231(3-4), 231(4-6), 238(3-4), 240(4-7), 244(1-2),
245(3), 259(6-8), 265(2-5), 27(1-1), 258(2-6), 287(3-8), 288(1-5), 289(6-8),
289(1), 292(1-6), 292(6-8), 283(1-8), 289(6-8), 292(1-6), 293(1-8), 294(3-4),
295(5-6), 298(5-8), 309(1-8), 315(1-2), 315(3-4), 327(3-4), 336(4-6), 340(4-7),
343(1-7), 353(1), 357(5-7), 358(5-7), 359(4), 361(1-6), 368(6-8), 370(3-5),
374(4-7), 375(3-6), 385(6), 390(2), 391(1-6), 394(1-6), 394(1-6), 395(1-5),
397(4-7), 399(1-4) ஆகிய 73 இடங்களில் பயின்று வந்துள்ளன.
பரத்தையின் காரணமாக பிரிந்து
வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துவதனை,
"நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே"4
என்னும் மருதத் திணைப் பாடலில் முல்லை நிலத்திலே
நெருக்கமாக முளைக்கின்ற, சிறிய இலைகளையுடைய நெருஞ்சி மலர் முன்பு கண்களுக்கு மகிழ்ச்சியைத்
தந்த புதிய மலர் பின்னர் இன்னாமையைத் தருகின்ற முட்களைத் தந்தாற்போல, முன்பு நாம் மகிழ்ந்திருக்கும்
நல்லவற்றைச் செய்த நம் தலைவர் இப்பொழுது துன்பத்தைத் தரும் செயல்களைச் செய்வதால், என்
நெஞ்சமே மிகவும் வருந்துகிறது என்று தலைவி, தோழியிடம் புலம்புவதனை அறியலாம்.
"நோமென் னெஞ்சே நோமென் னேஞ்சே" என்று தலைவி அடுக்கு முறையில் கூறுவது, அவளுடைய
இடைவிடாத துன்பத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
இதில்
தலைவன் தரும் துன்பத்திற்கு நெருஞ்சியின் முட்கள் உவமையாக வந்துள்ளமையால் இது பயன்
உவமைகளாயிற்று.
மெய் உவமம்
அளவு,
வடிவம் காரணமாக வரும் உவமை மெய் உவமை எனப்படும். குறுந்தொகையில் மெய் உவமம், 3(1-4), 5(5), 9(3), 10(2), 12(1-4), 13(1-2),
13(5), 17(1), 18(4-5), 21(1-4), 23(2-3), 25(3), 26(6-8), 30(4-6), 32(4),
35(2-3), 36(1-2), 44(4-3), 46(1-2), 47(1-2), 49(1), 50(1), 67(1-5), 76(3-4),
99(4-6), 100(7), 101(4), 102(3), 103(2-3), 104(2), 107(1-2), 101(4), 102(3), 103(2-3), 104(2),
107(1-2), 109(1), 110(4), 111(4-5), 116(1-4), 117(1), 122(-1-2), 126(4-5),
129(3-6), 131(1), 132(4-6), 138(1-2), 138(5), 140(1), 142(2), 148(2), 160(2),
163(1-3), 167(3), 168(5), 172(5-7), 180(1-2), 180(2-4), 185(2), 185(4-6),
186(2-3), 189(3-5), 193(1-2), 195(6-7), 198(2), 198(2-4), 203(3-6), 220(3-5),
222(5-6), 226(1), 227(1-3), 228(1-2), 232(4), 236(3), 239(2-5), 240(1-2),
240(3), 243(1-2), 245(3), 246(2), 250(5), 254(2), 259(2-4), 262(4), 268(6),
274(1), 274(2), 276(1), 279(5-6), 279(8), 284(1-3), 286(1), 286(3-5), 291(5-8),
294(5-8), 297(2-5), 300(3-4), 301(1), 307(1-3), 315(4), 318(6), 326(1),
329(6-7), 338(6), 339(5-6), 345(2),
346(1), 347(2-3), 352(1-2), 357-2, 360-4-5,362-6, 364-1, 364-5, 367-5-7, 377-1,
384-1, 386(4-6), 387(5), 388(3), 388(4-5), 391(7), 392(6-8), 397(1), 398(3) ஆகிய
120 இடங்களில் பயின்று வந்துள்ளன.
தலைவி தலைவனுடன் உடன்போக்குச்
சென்ற நிலையில், அவர்களைக் காணாத செவிலித் தாய் பாலைநிலத்தின் வழியாக தேடிச் சென்றும்
அவர்களைக் காணாமல் வருத்தமுற்று உவமையுடன் புலம்புவதனை,
"அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே"5
என்னும் வெள்ளி வீதியார் பாடலில் செவிலித் தாய்
பாலை நிலத்தின் வழியாக நடந்துச் சென்று எதிர் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து என்
மகள் எங்கே என வினவுகின்றாள். கால்கள் நடை ஓய்ந்தன, கண்கள் ஒளி இழந்தன. நம் மகளும்,
அவள் தலைவனும் அல்லாத பிறர், பெரிய வானத்திலுள்ள விண்மீன்களைக் காட்டிலும் பலர் செல்கின்றனர்.
ஆனால் நான் தேடுகின்ற என் மகளைக் காணவில்லை என்று புலம்புவதனைக் காணலாம்.
இதில்
விண்மீன்களைப் போன்ற பலர் இருந்தாலும் நிலவைப் போன்ற என் மகள் என உவமையாக வந்துள்ளமையால்
இது மெய் உவமத்திற்குச் சான்றுகளாக அமைகின்றன.
உரு உவமம்
வண்ணம்
அல்லது நிறம் காரணமாக வரும் உவமை உரு உவமையாகும். குறுந்தொகையில் உரு உவமம், கடவுள்
வாழ்த்து (1,2,3), 1(1-4), 2(3), 13(1-2),
21(1-4), 23(2-3), 26(2-3), 34(6-7), 36(1-2), 46(1-2), 47(1-2), 49(2), 53(3-4),
55(1), 62(1-5), 67(1-5), 68(1), 70(5), 76(2), 81(5-6), 89(4-7), 95(3-4),
95(3-5), 98(1-2), 100(5-6), 101(4), 103(2-3), 104(2), 105(1), 106(1-2),
107(1-2), 108(2-4), 110(4), 111(4-5), 116(1-4), 121(2), 122(1-2), 123(1),
123(2), 126(4-5), 133(1), 147(1-2), 148(1-3), 160(1), 167(1), 169(1-3), 173(1),
183(1-4), 183(5-7), 184(5-7), 186(2-3), 187(4), 189-2, 189-3-5, 192-3-5,
195-6-7, 197-4-5, 198-2, 199-5, 206-1-2, 20-7, 220-3-5, 222-5-6, 222(7),
225(6-7), 226(2-3), 226(5-6), 232(4), 233(2-4), 235(1-2), 243(2), 256(1-2),
258(6-8), 259(6-8), 272(5-7), 278(1-3), 279(5-6), 284(1-3), 286(3-5), 289(2-3),
303(7), 310(2-4), 315(1-2), 318(1-3), 319(6), 320(3), 330(1-4), 331(5-7),
339(1-2), 341(2), 348(1-6), 352(1-2), 356(8), 362(6), 367(5-7), 397(-4-7) ஆகிய
96 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
ஒரு
நாள் தலைவன் தோழியின் கூட்டத்தில் தலைவியைச் சந்திக்கின்றான். அவள் மீது கொண்ட காதலினால்,
அவளைச் சந்தித்துப் பேச தோழியின் உதவியை நாடி, தான் கையுறையாகக் (பரிசாகக்) கொண்டு
வந்த செங்காந்தள் மலர்களைத் தருகிறான். அதனைத் தோழி ஏற்க மறுத்துரைப்பதனை,
"செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே"6
என்னும் குறிஞ்சித் திணைப் பாடலில் போர்க்களத்திலே
இரத்தத்தால் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த திரண்ட அம்பையும், சிவந்த
கொம்பையும் உடைய யானையையும், வீரவளையலையும் உடைய முருகக்கடவுளுக்குரிய இம்மலையானது
குருதியின் நிறம் போல் சிவந்த காந்தட் பூக்களை உடையது. ஆகையால் நீ கொடுக்கும் கையுறை
வேண்டாம் என தோழி மறுத்துரைப்பதனை அறியலாம்.
இதில்
செங்காந்தலுக்கு குருதியின் (இரத்தம்) நிறம் உவமையாக வந்துள்ளமையால் இது உரு உவமம்
ஆகும்.
தொல்காப்பியர்
கூறிய வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகைகளுள் மெய், உரு வகைகளில் தான் உவமைகள்
மிகுதியாக இடம் பெற்றுள்ளன என்பதை அறிய முடிகின்றது.
தொல்காப்பியம்
வினை, பயன், மெய், உரு என்ற நான்கு வகைகளை மட்டும் குறிப்பிட்டுச் செல்ல, அதற்கு உரையெழுதிய
இளம்பூரணர் 'பாகுபட வருதலாவது, கண் முதலிய பொறிகட்குப் புலனாவனவும் பொறிகட்குப் புலனாகாது
மனத்திற்கு புலனாவனவும் என இருவகைப்பட வருதல்' என்னும் விளக்கத்தைத் தருகிறார். அதாவது
ஐம்பொறிகளுக்கு புலனாகாதனவாக "செவியால் அறியப்படும் ஓசை, நாவினால் அறியப்படும்
சுவை, மெய்யினால் அறியப்படுவன, மூக்கால் அறியப்படுவன, மனத்தால் அறியப்படுவன எனக் கூறி
அதற்கான சான்றுகளையும் தருகின்றார். இந்த வகைமை தொல்காப்பியர் காலத்தில் இல்லை என்பது
தெரிகிறது. ஆனால், தொல்காப்பியத்திற்கு பிறகு தோன்றிய சங்க குறுந்தொகையில் இந்த வகைமைப்பாடு
பொருந்தி வருவதனை கீழ்வரும் குறுந்தொகைப் பாடல்கள் சான்றாக அமைகின்றன.
செவியால் அறியப்படும் உவமை
ஓசையின்
அடிப்படையில் வரும் உவமை செவியால் அறிப்படும் உவமையாகும். இதற்குச் சான்றாக இளம்பூரணர்,
"குயில்
போன்ற மொழி"
என்னும் பாடலை சான்றுக் காட்டி விளக்குகின்றார்.
குறுந்தொகையில் இதுபோன்ற செவியால் அறியப்படும் உவமைகளாக 7(3-5), 16(1-5), 78(1-3),
151(1-3), 169(1-3), 193(3), 200(5-6), 237(5-6), 244(1-2), 270(3), 291(1-4),
323(2-3), 336(3), 351(4), 360(5-7), 365(3-4), 369(1-2), 375(3-6), 380(1-3),
390(3-5), 393(2-6), 395(1-5) ஆகிய 22 இடங்களில் அமைந்துள்ளதை அறியலாம்.
தலைவனும்
தலைவியும் பெற்றோரை பிரிந்து யாருக்கும் தெரியமால் உடன்போக்குச் செல்கின்றனர். செல்லும்
வழியில் எதிரே வருபவர்கள், தலைவி காலில் அணிந்திருக்கும் சிலம்பினைக் கண்டு அவ்விருவருக்கும்
திருமணம் நடைபெறவில்லை என்பதை அறிந்து, அவர்கள் இரங்கிப் பின்வறுமாறு கூறுவதனை,
"யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்"7
என்னும் பாலைத் திணைப் பாடலில் ஆரியக்கூத்தர்கள்
கயிற்றின் மேல் நின்று ஆடும்பொழுது கொட்டப்படுகின்ற பறையின் ஒலியைப் போல, மேல்காற்று
வீசுவதினால் நிலைகலங்கி, வாகை மரத்தினுடைய வெண்மையான நெற்றுக்கள் ஒலிக்கின்ற இடமாகிய
மூங்கில்கள் நிறைந்த பாலை நிலத்தைக் கடந்து செல்ல நினைத்து வரும்; காலில் வீரக்கழல்கள்
அணிந்த ஆண்மகனும், தோளில் வளையலும், தன்னுடைய மெல்லிய பாதங்களில் சிலம்பும் அணிந்த
இப்பெண் மகளும் யாரோ? இவர்களைப் பார்த்தால் மிகவும் இரங்கத்தக்கவர்களாக இருக்கின்றனர்
என்று அவர்களைக் கண்டோர் கூறுவதாக அமைந்துள்ளன.
சங்க
காலத்தில் பெண்கள் திருமணம் ஆகாத நிலையில் சிலம்பு அணிவதும், திருமணத்திற்கு முன் சிலம்பைக்
கழற்றிவிடுவதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்த சடங்கிற்கு 'சிலம்புகழி நோன்பு"
எனப்படும். மேலும் ஆரியக் கூத்து என்பது ஆரிய நாட்டில் ஒருவகை கூத்தர்களால் ஆடப்படுவதாகும்.
'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்' என்ற பழமொழி இக்கூத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.
இதில்
வாகை மரத்தின் வெண்மையான நெற்றுகளின் ஒலிக்கு பறையின் ஒலி உவமையாக வந்துள்ளமையால் இது
செவியினால் அறியப்படும் உவமையாகும்.
நாவினால் அறியப்படும் உவமை
கார்ப்பு,
கைப்பு ஆகிய சுவையின் காரணமாக வரும் உவமை நாவினால் அறியப்படும் உவமை ஆகும். இளம்பூரணர் இதற்கு சான்றாக,
"வேம்புபோலக்
கைக்கும்"
என்னும் பாடலை எடுத்துக்காட்டி விளக்குகின்றார்.
குறுந்தொகையில்
நாவினால் அறியப்படும் உவமம் 14(1-2), 83(1), 196(1-6), 201(2), 267(2-4), 286(2),
300(2) ஆகிய 7 இடங்களில் பயின்று வந்துள்ளன.
தம்
முன்னோர்களைப் பின்பற்றி தானும் அவ்வாறே பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று கருதிய
தலைவன், பொருள் தேடச் செல்வதினால் தலைவியைப் பிரிந்து இருக்க வேண்டும் என்பதற்காகவும்,
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தும் செலவு தவிர்ப்பதனை,
" ஒருங்குடன்
இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்"8
என்னும் பாலைத் திணைப் பாடலில் கூற்றுவனின் இரக்கமில்லாத
கொலைத் தொழிலை அனைவரும் அறிவர். அவ்வாறு இருக்க இந்த உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தும்
ஒருங்கே கிடைத்தாலும், கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்பதால் ஏற்படும்
சுவையைப் போன்ற தூய்மையான பற்களில் ஊறிய நீரையுடைய இத்தலைவி தனித்து இருக்க நான் எவ்வாறு
பொருள் தேடச் செல்வேன் என இளமையின் நிலையாமையை உணர்ந்து தலைவன் செலவினை தவிர்த்தலைக்
காணமுடிகிறது.
செல்வம்,
இளமை, யாக்தை (உடல்) ஆகியவை நிலைத்த தன்மை உடையவை அல்ல என்பதனை,
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு"9
என்று வள்ளுவரும் நிலையாமையின் தத்துவத்தைப் பற்றிக்
கூறுவதனை அறியலாம்.
இதில்
தலைவியின் வாயில் ஊரிய நீரின் சுவைக்கு கரும்பின் சுவை உவமையாக வந்துள்ளமையால் இது
நாவினால் அறியப்படும் உவமை ஆகும்.
மெய்யினால் அறியப்படும் உவமை
வெம்மை,
தண்மை இவற்றின் அடிப்படையில் வரும் உவமை மெய்யினால் அறியப்படும் உவமை ஆகும். இதற்கு
சான்றாக இளம்பூரணர்,
" தீப்போலச் சுடும்"
எனும் பாடலைச் சான்று காட்டி விளக்குகிறார்.
மெய்யினால்
அறியப்படும் உவமை குறுந்தொகைப் பாடல்களில் 4(2), 5(5), 9(4-6), 12(2), 13(5),
81(5-6), 84(3-5), 101(4), 123(1), 167(3), 226(1), 250(5), 259(2-4), 273(1-3),
291(5-8), 329(6-9), 339(5-6), 376(1-3), 376(3-6), 377(1), 391(7), 397(2-3)
398(3) ஆகிய 23 இடங்களில் பயின்று வந்துள்ளன.
பொருள் தேடச் சென்ற தலைவனைப்
பிரிந்து வருந்தும் தலைவிக்கு, தோழி ஆறுதல் மொழிக் கூறுகின்றாள். அதற்கு தலைவி,
"நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே"10
என்னும் நெய்தல் திணைப் பாடலில் தலைவனைப் பிரிந்து
என் நெஞ்சம் மிகவும் வருந்துகின்றது. என் கண்களில் இருந்து வருகின்ற கண்ணீர் இமைகளைத்
தீயச் செய்கின்ற கருவியைப் போன்று வெம்மை உடையதாக இருக்கின்றது. எனக்கு ஆதரவாக இருந்த
தலைவர் இப்பொழுது எனக்கு ஆதராவக இல்லாமல் பிரிந்திருக்கின்றேன் என்று தன் துன்பத்தினை
வெளிப்படுத்துவதனை அறியலாம். 'நோம் என் நெஞ்சே' என்று தலைவி மும்முறை அடுக்கிக் கூறுவது
அவளின் துன்ப மிகுதியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
இதில்
தலைவியின் கண்ணீர் வெம்மைக்கு தீயச்செய்யும் கருவி உவமையாக வந்துள்ளமையால் இது மெய்யினால்
அறியப்படும் உவமைக்கு சான்றுகளாக அமைகின்றன.
மூக்கினால் அறியப்படும் உவமை
நன்நாற்றம்,
தீநாற்றம் இவற்றின் காரணமாக வரும் உவமை மூக்கினால் அறியப்படும் உவமை ஆகும். இளம்பூரணர்
இதற்குச் சான்றாக,
"ஆம்பல்
நாறுந் துவர்வாய்"
எனும் பாடலை சான்றாக சுட்டுகின்றார்.
மூக்கினால்
அறியப்படும் உவமைகளாக குறுந்தொகையில் 2(1-4), 21(1-4), 52(3), 62(1-5) 84(3-5), 168(1-5), 233(2-4),
273(1-3), 300(1), 300(2), 312(2-4), 318(1-3), 323(4-5), 330(5-6) ஆகிய 14 இடங்களில்
இடம் பெற்றுள்ளன.
தலைவன் மணம் செய்துக் கொள்ளும்
முயற்சிகளை மேற்கொள்வதையும் அதனைத் தம் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டதையும் அறிந்து மகிழ்ச்சியடைந்த
தலைவியை நோக்கி, தோழி கூறுவதனை,
"சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்"11
என்னும் குறிஞ்சித் திணைப் பாடலில் நரத்தம்பூவின்
மணம் வீசும் கரிய கூந்தலையும், வெண்மையான பற்களையும் உடைய பெண்ணே! யானைகள் மிதித்ததால்
ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கும் நீர் நிறைந்த மலையின் அருகிலுள்ள தெய்வத்தால் விரும்பப்பட்டவளைப்
போல் நீ நடுங்கியதை அறிந்த நான் உன் காதலை பற்றிய உண்மையை பெற்றோரிடம் கூறினேன். அதன்
பயன் இன்று தலைவனோடு உனக்கு திருமணம் நடைபெறப்போகிறது என்று கூறுவதனை அறியலாம். தலைவியின்
காதலை முறையாக பெற்றோருக்கு வெளிப்படுத்தி, களவு வாழ்க்கையிலிருந்து கற்பு வாழ்க்கைக்கு
மாற்றும் தோழியின் 'அறத்தோடு நிற்றல்' நிலையை அறிய முடிகின்றது.
இதில்
தலைவியின் கூந்தல் மணத்திற்கு நரந்தம் பூவின் மணம் உவமையாக வந்துள்ளமையை அறியலாம்.
'இதனை நாரத்தம்பூ என்பார்' நச்சினார்க்கினியர்.
மனத்தால் அறியப்படும் உவமை
இன்பம்,
துன்பம் இவற்றின் அடிப்படையில் வரும் உவமை மனத்தால் அறியப்படும் உவமையாகும். இளம்பூரணர்
இதற்குச் சான்றாக,
" தம்மில்
இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு"12
எனும் திருக்குறளைச் சான்று காட்டி விளக்குகின்றார்.
மனத்தால்
அறியப்படும் உவமை 24(3-6), 29(1-4), 41(1-2), 41(3-6), 43(4-5), 52(2), 57(1-3),
60(1-6), 61(1-6), 68(4), 71(1-4), 72(1-2), 74(4-5), 83(3-5), 91(5-8), 106(3-6),
119(1-4), 120(1-2), 125(4), 127(1-6), 128(1-4), 131(4-6), 136(3-5), 139(2-6),
142(3-5), 147(3-5), 157(3-4), 165(1-5), 169(4-6), 176(6-7), 178(1-4), 178(5-7),
203(3-6), 204(1-5), 224(3-6), 234(5-6), 244(4-6), 257(1-3), 257(6), 261(6-8),
273(5-8), 290(3-6), 305(1), 305(6-8), 324(3-7), 324(3-6), 325(4-6), 330(5-6),
386(4-6), 324(3-), 325(4-6), 330(5-6), 386(4-6) ஆகிய 49 இடங்களில் உவமைகள் அமைந்துள்ளன.
வீட்டுக்
காவலில் இருக்கும் தலைவி, தோழியிடம் தலைவனைப் பிரிந்து தனியாக இருப்பதைக் காட்டிலும்
ஒன்றாக சேர்ந்து உயிர்விடுதல் தனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று கூறுவதனை,
"பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ"13
என்னும் நெய்தல் திணைப் பாடலில் தலைவி தான் இல்லற
வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, இவ்வுலகில் நாங்கள் உள்ளத்தால் இணைந்து
காதலர்களாக பிரிந்து வாழ்கின்றோம். நீரில் எப்பொழுதும் ஆணும் பெண்ணுமாக பிரிவின்றி
சேர்ந்தே இருக்கும் மகன்றில் பறவைகளுக்கு, அவை செல்லும் நீர்த்துறையில், பூ இடையே வந்தாலும்
சிறிது நேரம் பிரிய நேரிடும்பொழுது அப்பிரிவு பல ஆண்டுகள் கடந்தாற் போலத் துன்பத்தை
உண்டாக்கும் தன்மையையுடைய நீரின்கண் இருக்கின்ற மகன்றில் பறவைகளின் புணர்ச்சியைப் போல
பிரிதல் இல்லாமல், நீங்காத அன்போடு எங்கள் இருவரின் உயிரும் ஒன்றாக போகட்டும் என்று
தலைவி தனக்குள் இருக்கும் துன்ப மிகுதியையும், தலைவனின் மீது கொண்ட பேரன்பினையும் வெளிப்படுத்துவதனை
அறியலாம்.
நீர்வாழ்
பறவைகளுள் ஒன்றான மகன்றில் பறவைகள் எப்பொழுதும் ஆணும் பெண்ணும் பிரிவின்றி சேர்ந்தே
வாழும் தன்மையுடையன என்றும் இவை மருதத் திணைக்குரியவை என்றும் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.
இதில்
தலைவன் மீது கொண்ட அன்பிற்கும், அவன் பிரிவில் ஏற்படும் துன்பத்திற்கும் மகன்றில் பறவைகளின்
புணர்ச்சி உவமையாக வந்துள்ளமையை அறிய முடிகின்றது.
இளம்பூரணர்
கூறிய உவமைகளான செவியால் அறியப்படும் உவமை, நாவினால் அறியப்படும் உவமை, மெய்யினால்
அறியப்படும் உவமை, மூக்கால் அறியப்படும் உவமை, மனத்தால் அறியப்படும் உவமை ஆகிய உவமை
வகைகளுள் மனத்தால் அறியப்படும் உவமையே மிகுதியாக பயின்றுவந்துள்ளன.
உவமையாகின்ற
பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் பொருளுக்கும் (உவமேயம்) இடையிலான வேறுபாட்டை
நீக்கி, இவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் காட்டுவது
உருவகமாகும். சுருக்கமாக கூறின் உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதலாகும்.
தொல்காப்பிய
உவமவியலில் உருவகத்தைப் பற்றி செய்திகளையோ அல்லது அவற்றின் தனி உருபுகளைப் பற்றியோ
கூறவில்லை என்றாலும், பொருளை உவமைப் போல மாற்றிக் கூறினாலும் அதுவும் குற்றமற்றச் சிறப்பினை
உடைய உவமையாகவே கருதப்படும் என்பதை,
"பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பின் அஃதுவம மாகும்"14
என்னும் நூற்பாவிற்கு பொருளையே உவமையாக்கி கூறினாலும்
அதுவும் உருவகம் என்ற வேறோர் அணியாகக் கூறாமல் உவமையின் வகையாகக் கொள்ளுதலே தொல்காப்பியரின்
கருத்தாக இருக்க வேண்டுமென்பது உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசியர் உரை விளக்கங்களால்
அறியமுடிகிறது. மேலும் உவமையினை அடிப்படையாகக் கொண்டு வருவதனால் இவ்வுருவகமும் உவமையின்
பகுதியாக அடங்கும் என்பதையும் உணரமுடிகிறது.
"ஒரு சாராசிரியர் ரூபகம் சொல்லப்பட்டது உவமை பற்றி வருதலின்
அஃது உவமையின் பாகுபாடு" என்னும் இளம்பூரணரின் கருத்தினை வெள்ளைவாரணர்,
"பிற்கால அணியிலக்கண நூலாரால் உருவகம் எனச் சொல்லப்படுவது உவமையினையே அடிப்படையாகக்
கொண்டு வருதலின் அவ்வுருவகமும் உவமையின் பகுதியாக அடங்கும் என்பதே தொல்காப்பியர் கருத்து"15
என்பார் இளம்பூரணர்.
"இது
உவமையின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு புதுமையாகும். 'மாற்றியமைக்கப்பட்ட செறிவான உவமையே
உருவகம்' (Metaphor
is Compressed Simile) என ஆங்கில இலக்கணிகளும் கூறுகின்றன"16 இவற்றிலிருந்து மாறுபட்ட வளர்ச்சியடைந்த நிலையே
உருவகம் என்னும் தொல்காப்பியரின் கருத்து புலனாகிறது.
ஆனால்
தண்டியலங்காரம் உவமையும் பொருளும் வேறுபாடு ஒழிவித்து ஒன்று என அமைத்தால் அது உருவகம்
என்பதை,
"உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்று என
மாட்டின் அஃது உருவகம் ஆகும்"17
என்ற நூற்பா உணர்த்துகின்றது. "பொருள் இல்லாமலேயே
உவமச் செய்திகள் உருவகங்கள் ஆகிவிடுதல் உண்டு என்றும் உவமைகளை விட உருவகங்களே ஆற்றல்
மிக்கவை"18 என்று ரா.சீனிவாசன் குறிப்பிடுகின்றார்.
உருவகத்தை தொகை உருவகம், விரி
உருவகம் என இருவகைப் படுத்துவர். இரண்டையும் இணைக்கும் இணைப்புச் சொற்கள் இல்லாமல்
தொகைப்டுத்திக் கூறும் பொழுது அவை தொகை உருவகம் ஆகின்றன. ஆக, ஆகிய, என்னும், எனப்படும்
என்கின்ற உருபுகள் விரிந்து நிற்கும் பொழுது அவை விரி உருவகம் ஆகின்றன.
குறுந்தொகையில்
உவமையின் எண்ணிக்கையைவிட உருவகத்தின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன.
உருவகங்கள் 126(4-5), 196(1-6), 197(4-5), 257(6), 305(1), 387(5) ஆகிய 6 இடங்களில்
பயின்றுவந்துள்ளன. இதில் தொகை உருவகங்கள் 196(1-6), 197(4-5), 257(6), 305(1),
387(5) ஆகிய 5 இடங்களிலும், விரி உருவகம் 126(4-5) என ஓரிடத்திலும் பயின்று வந்துள்ளன.
தலைவன்
பிரிந்திருக்கும் காலத்தில் நீ ஆற்றிருக்கத்தான் வேண்டும் என கூறிய தோழியிடம், தலைவி
மாலைக்காலமும், இரவுப் பொழுதும் தனக்குத் துன்பத்தை தருவதாக உள்ளது என்று எடுத்துரைப்பதனை,
"எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே"19
என்னும் முல்லைத் திணைப் பாடலில் கதிரவனின் வெப்பம்
குறைந்து செயலற்றுப் போகும்படியான மாலைக் காலத்தைக் கடல் என்று கருதிக் கடந்தாலும்,
அம்மாலைக் காலத்தினுடைய இரவாகிய வெள்ளம் கடலைக் காட்டிலும் பெரியது என்று தலைவி கூறுவதில்
உருவகம் பயின்றுவந்துள்ளதனை அறியலாம்.
விரி
உருவகம்
தலைவன்
மீண்டும் வருவதாகக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தும் அவன் வராமையில் வருத்தமுற்ற
தலைவி தனக்கு உற்றத் துணையாக இருக்கும் தோழியிடம் கூறுவதனை,
"தொகுமுகை யிலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே"20
என்னும் முல்லைத் திணைப் பாடலில் மழையினால் நன்கு
வளர்ந்த முல்லைத் கொடியின் வரிசையாகத் தொகுக்கப்பட்ட அரும்புகளை ஒளியுடன் விளங்கும்
பற்களாகக் கொண்டு, நறுமணம் மிக்க இக்கார்காலம் தன்னைப் பார்த்து நகையாடுவதாக தலைவி
வருந்திக் கூறுவதனைக் அறிந்து கொள்ள முடிகின்றது.
இதில்
'ஆக' என்ற உருபு வெளிப்படையாக வந்துள்ளதனை அறியலாம்.
·
சங்க குறுந்தொகையில் செய்யுளின் பொருள் புலப்பாட்டிற்காகவும்,
அலங்காரத்திற்காகவும் உவமை, உருவகம் இரண்டையும் புலவர்கள் சிறப்பாக கையாண்டுள்ளனர்
என்பதை அறிய முடிகிறது.
·
உவமை ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமைக் கூறுமுகமாக
அப்பொருளினுடைய வினை, பயன், மெய், உரு முதலியன நன்கு புலப்புடும்படிச் செய்வதாகிய பொருள்
புலப்பாட்டு உத்தியாகும்.
·
குறுந்தொகையில் 271 பாடல்களில் உவமைகள் பயின்று
வந்துள்ளன. இதில் ஒரே பாடலில் இரண்டு உவமைகள் அமையப் பெற்றதாக 72 பாடல்களிலும், மூன்று
உவமைகள் அமையப்பெற்றதாக 8 பாடல்களிலும், நான்கு உவமைகள் அமையப்பெற்றதாக ஒரு பாடலிலும்
பயின்று வந்துள்ளன.
·
சங்க குறுந்தொகையில் தொல்காப்பியர் குறிப்பிட்ட
நான்கு உவமை வகைகள் மட்டுமின்றி, உரையாசிரியர்கள் விளக்கிய உவமை வகைமைகளும் மொழியின்
வளர்ச்சியால் பயின்று வந்துள்ளதை அறியமுடிகிறது.
·
குறுந்தொகையில் 363 இடங்களில் உவமைகள் பயின்று
வந்துள்ளன. இதில் வினை உவமம் 56 இடங்களிலும், பயன் உவமம் 73 இடங்களிலும், மெய் உவமம்
120 இடங்களிலும், உரு உவமம் 96 இடங்களிலும், செவியினால் அறியப்படுவன 22 இடங்களிலும்,
நாவினால் அறியப்படுவன 7 இடங்களிலும், மெய்யினால் அறியப்படுவன 23 இடங்களிலும், மூக்கினால்
அறியப்படுவன 14 இடங்களிலும், மனத்தால் அறியப்படுவன 49 இடங்களிலும் உவமைகள் விரவிய நிலையில்
பயின்றுவந்துள்ளன.
·
உவமையாகின்ற பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும்
இடையே வேறுபாடின்றி இரண்டும் ஒன்றேபோல் தோன்றுவது உருவகமாகும்.
·
உருவகங்கள் 6 இடங்களில் மட்டுமே பயின்று வந்துள்ளன.
இதில் தொகை உருவகங்கள் 5 இடங்களிலும், விரி உருவகம் ஓரிடத்திலும் பயின்று வந்துள்ளதை
அறிந்து கொள்ள முடிகின்றது.
·
உவமைகளை விட உருவகங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
இடம்பெற்றிருந்தாலும், குறுந்தொகையில் உவமையை விட உருவகமே உணர்வுகளை தூண்டி எழுப்புவதாக
அமைந்துள்ளன.
1.
தொல். உவம. நூ. எண்.1
2.
தண்டி. நூ. எண்.81
3.
குறுந். பா. எண்.104
4.
குறுந். பா. எண்.202
5.
குறுந். பா. எண்.44
6.
குறுந். பா. எண்.1
7.
குறுந். பா. எண்.7
8.
குறுந். பா. எண்.267
9.
குறள். எண்.336
10.
குறுந். பா. எண்.4
11.
குறுந். பா. எண்.52
12.
குறள். எண்.1107
13.
குறுந். பா. எண்.57
14.
தொல். உவம. நூ. எண்.9
15.
க.வெள்ளைவாரணன், தொல்காப்பியம் உரைவளம், 1985,
ப.34
16.
மு.ஹம்ஸா, தொல்காப்பியரின் பொருளிலக்கணக் கோட்பாடுகள்,
2008, ப.26
17.
தண்டி. நூ. எண்.35
18.
ரா.சீனிவாசன், சங்க இலக்கியத்தில் உவமைகள், ப.68
19.
குறுந். பா. எண்.387
20.
குறுந். பா. எண்.126
1.
குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர்.உ.வே.சாமிநாதையர், டாக்டர், உ.வே.சா.நூல்
நிலையம், சென்னை, 2018.
2.
குறுந்தொகை மூலமும் உரையும், சோமசுந்தரனார். பே.வே.
(உ.ஆ), கழக வெளியீடு, அப்பர் அச்சகம் சென்னை, 1978.
3.
தொல்காப்பியம் பொருளதிகாரம் - மூலமும் உரையும்,
இளம்பூரனர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மறுபதிப்பு, 1982.
4.
தொல்காப்பியம் உரைவளம் - பொருளதிகாரம் உவமவியல்,
ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992.
5.
சிவலிங்கனார். ஆ., தொல்காப்பியம் கூறும் உள்ளுறையும்
இறைச்சியும், உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை, 1985.
6.
சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய கொள்கைகள்), தமிழண்ணல்,
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2010.
7.
பாலசுந்தரம். ச. (உ.ஆ.), தொல்காப்பியம் பொருளதிகாரம்
ஆராய்ச்சிக் காண்டிகையுரை, அகத்திணையியல் புறத்திணையியல், தஞ்சை, முதற்பதிப்பு, 1989.
8.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் 1985, மதுரை,
நல்ல குறுந்தொகை, கா.காளிமுத்து அவர்களின் கட்டுரை, 1981.
9.
குறுந்தொகை தெளிவுரை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீ
செண்பகா பதிப்பகம், சென்னை, 2017.
10.
குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, மனோன்மணி சண்முகதாஸ்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.
11.
குறுந்தொகை - தமிழ்க்காதல் (கற்றுடைத்துக் கோத்தது),
கு.மா.பாலசுப்பிரமணியம், முதற் பதிப்பு, பாரதி புத்தகாலயம், சென்னை, 2007.
12.
குமரன். இரா., சங்க இலக்கியத்தில் கருத்துப் புலப்பாட்டு
உத்திகள், அபிநயா பதிப்பகம், தஞ்சாவூர், 2001.
No comments:
Post a Comment