Search This Blog

Thursday, December 21, 2023

கி.ரா. வின் புதினங்களில் கரிசல் வாழ் மக்களின் பண்பாடு

 

கி.ரா. வின் புதினங்களில் கரிசல் வாழ் மக்களின் பண்பாடு

 

திருமதி. செ.சத்யா

உதவிப் பேராசியர்,

தமிழ்த்துறை,

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி,

மேல்மருவத்தூர் - 603 319.

மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com


முன்னுரை

சங்க இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும், காப்பிய இலக்கியப் படைப்புகளும், செய்திகளைக் கூறும் தகவல் களஞ்சியங்களாக மட்டுமல்லாது படைக்கப்படட காலத்தின் வரலாற்றுக் கூறுகளையும், சமூகத்தின் வலராற்றுப் பின்னணியையும் பண்பாடுகளையும் வெளிப்படுத்தும் காரணிகளாகவும் திகழ வேண்டும். அந்த வரிசையில் தோன்றிய எண்ணற்றப் படைப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்த கி.ரா. வின் எழுத்துலகம் தனித்துவம் மிக்கது. காலம்காலமாகப் பலதரப்பட்ட கிளைத்தன்மைகளுடன் பரந்து விரிந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் கரிசல் இலக்கியம் என்ற புதிய வகை கி.ரா. வழியாக அறிமுகம் ஆயிற்று. கி.ரா. வின் எழுத்துலகம் முற்றிலும் புதிய செய்திகளையும், புதுவகைத்தன்மையினை விவரிக்கும் பின்னணியில் தாம் வாழும் சமூகத்தை இணைத்து இலக்கியத்தடத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.

பழம்பெரும் தமிழ் எழுத்தாளரும், 'கரிசல் இலக்கியத்தின்' முன்னோடியாக அறியப்பட்ட கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் எழுதிய “கோபல்லபுரத்து மக்கள்”  நாவலுக்காக 1991ல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம், வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர்.

கி.ரா. வின் கரிசல் இலக்கியம் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, புதிய கரிசல் இலக்கியப் படைப்புகளுக்கும் தோற்றுவாயாக அமைந்து வருகின்றது. இவ்வாய்வில் கி.ரா. வின் மூன்று புதினங்களில் விவரிக்கப்பட்டுள்ள (1.கோபல்ல கிராமம், 2.கோபல்லபுரத்து மக்கள், 3.அந்தமான் நாயக்கர்) கரிசல் வாழ் மக்களின் பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் எடுத்துக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

கரிசல்  இலக்கியம்

          கரிசல் இலக்கியத்தின் களமாகக் கரிசல் பகுதியும், மாந்தர்களாக, கரிசல் பகுதி மக்களுமே இடம் பெற்றுள்ளனர். கரிசல் இலக்கியத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பது இப்பகுதியில் நிலவும் வறுமை – வறட்சி, மற்றும் பொருளாதாரப் பின்னணி ஆகியனவே. 'கரிசல் பூமி' என்றழைக்கப்படும் பகுதி திருநெல்வேலி மாவட்டத்தின் கோவில்பட்டியை ஒட்டித் தொடங்கும் பகுதியாகும். இம்மண்ணின் நிறத்தைக் கொண்டே இப்பகுதி, 'கரிசல்' என்றழைக்கப்படுகிறது. இதனை,

"கரிய நிறம் கொண்ட மானாவாரி புஞ்சை நிலத்துக்குத்தான்

கரிசல் என்று பெயர். மானம் பார்த்த பூமி – மழையை

நம்பித்தான் வாழ்க்கை"1

என்று "கரிசல் காட்டுக் கடுதாசி" முன்னுரை விளக்கிக் கூறுகிறது.

"கரிசல் எழுத்துக்கள் "வட்டார இலக்கியம்"2 என்றும்" அழைக்கப்படுகிறது.

கரிசல் பண்பாடு

            கரிசல் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம் படைத்திருக்கும் கி.ரா. வின் எழுத்துக்களில் கரிசல் பகுதி மக்களே இடம் பெறுகிறார்கள். கி.ரா. அனுபவரீதியாகக் கண்ட, கேட்ட மனிதர்களே, அவரின் கதை மாந்தர்களாகியுள்ளனர் என்பதனை,

"காடுகளில் ஆடு மேய்ப்பவர்களோடு சேர்ந்து சுற்றித்திரிந்து

அவர்களின் கஞ்சியில் பங்கு கொண்டு எத்தனையோ நாட்கள்

அலைந்திருக்கிறேன். அவர்களிடமிருந்துதான் கதைகள்

கேட்டேன். தமிழ் கற்றுக் கொண்டேன். ஆடு மேய்ப்பவர்கள் –

இவர்கள் தான் எனக்கு ஆசான்கள்"3

என்று கி.ரா. க. பஞ்சாங்கம் நூலுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிடுகின்றார்.

விவசாயம்

கி.ரா. தம் மூன்று புதினங்களிலும் கரிசல் விவசாயத்தை மிக நேர்த்தியாகக் கோடிட்டுக் காட்டுகிறார். கதைப் போக்கில் விவசாயச் செய்திகளை மிக நுணுக்கமாகவும், நுட்பமாகவும் விளக்கப்பட்டுள்ளது. கதைப் போக்கில் விவசாய முறைகளைப் பாத்திரப் படைப்புகளைக் கொண்டு கி.ரா. அமைக்கிறார். கோடை காலத்தில் உழவு செய்யும் முறையை தனது "கோபல்ல கிராமம்" புதினத்தில்,

".................................... கோடை உழவு

முடிந்து, முதல் மழை பெய்ததும், விதைப்புக்குத் தயாராக்க

நிலத்தை உழ ஆரம்பிக்கும் உழவுக்கு எழுப்படிப்பு என்று

சொல்கிறது. இப்படி உழுது வைத்தால் தான் அடுத்துப்

பெய்யும் மழைநீர் நிலத்தை நன்றாக நனைக்கும். அதோடு

பெய்த முதல் மழையில் முளைவிட்ட களைகளும் போகும்"4

என்று கோடை காலத்தில் கரிசல் மண்ணில் விவசாயம் செய்யப்படும் முறையினை அழகாக விவரிக்கிறார். மேலும், இவ்விவசாய முறையில், "ரெட்டைக்கலப்பை" முறையில் உழும் முறையையும் சுட்டுகின்றார். மாடுகளைக் கலப்பையில் பூட்டும் முறை, கலப்பைக் குத்திகளைக் கனம் குறைவாக்கிக், கூராகச் செதுக்கி உழும் முறை என விவசாயத்தின் நுட்பத்தினை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

விவசாயம் பற்றிய செய்திகளோடு, விவசாயத் தொடர்புடைய பல செய்திகள் மூன்று புதினங்களிலும் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளன. கரிசல் விவசாயம் செய்ய உதவும் கருவிகளாக,

"எருமைத் தோலினால் முறுக்கப்பட்ட உழவு வடங்கள்"5

"ஒரே ஏரில் பூட்டப்படும் ரெட்டைக் கலப்பைகள்"6

"கனம் நிறைந்த நாங்கிள் மர ஏர்க்கால் கலப்பைகள்"7

லேசான தேக்கு ஏர்க்கால் கலப்பைகள்"8

"உழவுத்தும்பு"9

"பல்க் கம்பி"10

போன்றவை மிகச் சிறப்பாகக் கூறப்படுகின்றன.

பிணையல் ஏற்றுதல்

            கரிசல் விவசாயத்தில் பெரும்பான்மையாக விளைவிக்கப்படும் தானியம் "கம்பம் புல்". அக்கம்பம் புல்லை அறுவடை செய்து அதை உதிர்க்கும் நிகழ்ச்சியை மிக விரிவாகக் "கோபல்லபுரத்து மக்கள்" புதினம் காட்டுகிறது. மாடுகளைக் கட்டி களத்துமேட்டில் விவசாயிகள் செய்யும் இப்பணி "பிணையல் ஏற்றுதல்" என்று கி.ரா. வால் விளக்கமாகச் சுட்டப்பட்டுள்ளது.

 

"பிணையல்க் கண்ணிகளில் மாடுகளைப் பிணைத்தார்கள்.

வட்டம் போட்டிருந்த கம்மங் கதிர்களின் மேல்

பிணையல்களை "பொலி பொலி பொலி" என்று விரைவாகச்

சொல்லிக் கொண்டே அதில் ஏற்றினார்கள். மாடுகள் ஆவலோடு

வேகமாய் வந்து கம்மங்கதிர்களை வாய் நிறைய

அள்ளித்தின்று கொண்டே வட்டம் சுற்றி வந்தன"11

என்று பிணையல் ஏற்றும் நிகழ்ச்சி விரிவரிக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு பிரிக்கப்பட்ட கம்பங்கதிர்களைக் கவிராயர்களுக்கும், மாடுகளுக்கும் கரிசல் விவசாயிகள் தானம் செய்யும் மனப்பான்மையையும் கி.ரா. வினால் சுட்டப்படுகின்றது.

உணவு

கரிசல் மக்களில் உணவு முறை புதினங்களில் ஓர் அங்கமாகத் தரப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் உணவு, உழைப்பாளிகளின் கடின வாழ்க்கையையும், விவசாயிகளின் வறுமை வாழ்க்கைப் போக்கையும் மிகவும் நுட்பமாகக் சுட்டுவதனை,

"..................................................................

தலையில் கஞ்சிக் கலயம் இருந்தது. கலயத்தில் நீத்துப் பாகம்

அதில் தேங்காய்ப் பருமனில் பன்னிரெண்டு கம்மஞ்சோற்று

உருண்டைகள் கலயத்துக்கு மூடி சிரட்டை, அதில்

எண்ணெயில் வறுக்கப்பட்ட வத்தல்களும் நார்த்தங்காய்

ஊறுகாயும் கலத்தின் வெளிப்புறம் மேலே ஒட்டி

வைக்கப்பட்ட காணத்துவையல்"12

என்று விவசாயிகளின் உணவு என சுட்டுகின்றார் கி.ரா.

நம்பிக்கைகள் - சடங்குகள்

            கோபல்ல கிராமத்து மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட நம்பிக்கைகள், சடங்குகள் முதலானவை மூன்று புதினங்களிலும் பரவலாகக் காட்டப்பட்டுள்ளன. அதிலும் அவை "கோபல்ல கிராமம்", "கோபல்லபுரத்து மக்கள்" ஆகிய இரண்டு புதினங்களில் தான் மிகுதியாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஒருவர் உடலில் இருந்து உயிர் பிரியும்போது அழக் கூடாது என்று நம்பினர். இதனை,

"ஆத்மா பிரிந்து பயணப்படும்போது நாம் அழுதால் நம்முடைய

கண்ணீர் அது சென்று கொண்டிருக்கும் வழியில் குறுக்கே

வெள்ளம் போல் பரவிப் பெருகி அதனுடைய பயணம்

தடைப்பட்டுப் போகும். ஆத்மா பிரிந்த பிறகு அழலாம்.

பிரிந்து கொண்டிருக்கும் போது அழவே கூடாது"13

என்று கி.ரா. தனது ‘கோபல்ல கிராமம்’ என்ற புதினத்தில் குறிப்பிடுவதன் வழியாக அறிய முடிகின்றது.

நாட்டுப்புறப் பாடல் பாடும் வழக்கம்

மக்கள் வாழ்க்கை பதிவுகள் யாவும் நாட்டுப்புறப்பாடலாக வெளிப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக இப்பாடல்கள் விளங்குகின்றன. மக்களின் இன்பம், துன்பம், திருவிழாக் காலங்களில் இப்பாடல்கள் வாய்மொழியாகப் வெளிப்படுகின்றன என்பதனை,

"ஆலம் இலைபோல் அடிவயிறு

அசந்த நெத்தியில் புருவக்கட்டு

சோலைக்கிளி போல எம் பிறவிக்கு

சொந்தக் கிராமம் கோபல்லம்.

அம்மா பிறந்தது அய்யோத்தி – அம்மா

சடை பிறந்தது சதுரகிரி

வேம்பு பிறந்தது வேனகிரி – நாங்க

விளையாட வந்தது கோபல்லம்.

செங்கல் அறுத்த கிடங்குக்குள்ளே நாங்க

சீரகச் சம்பா விளையவச்சோம் - இப்பெ

பச்சைக்கிளி வந்து கெச்சட்டம் போடுது

பறந்தடிங்கடி தோழிப் பெண்ணே"14

என்னும் கி.ரா. வின் ‘கோபல்ல கிராமம்’ எனும் புதினத்தின் பாடல் அடிகள் வழியாக அறிய முடிகின்றது.

மருத்துவம்

            கோபல்ல கிராம சமூக மக்களிடையே நிலவிய மருத்துவக் குணங்கள் பற்றிய நம்பிக்கைகளை கி.ரா. விரிவாகப் படைக்கின்றார். ஆந்திராவிலிருந்து புறப்பட்டு வழிநடையாக வந்த வாழ்க்கையும், கரிசல்காடு அமைவதற்கு முன் அமைந்திருந்த வேட்டுவ வாழ்க்கையும், மருத்துவம் தொடர்பான அறிவினை அம்மக்களுக்கு அளித்தன என்பதனை கி.ரா. தனது புதினங்களில் சுட்டுவதனை,

            "சோற்றுக் கத்தாழையை உரித்துத் தண்ணீரில் அலசி, அதன்

கசப்பை நீக்கி உண்டால் வயிற்றில் உள்ள சகல நோய்களும் தீரும்"15 

"மண்கலந்த தண்ணீர் பசியைத் தாங்கும் சக்தியும் தெம்பும் தரும்" 16

"கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுக்கு பச்சிலை பூசலாம்"17

"நாடி பார்த்தே நோய்களின் அறிகுறியையும் நோயையும் உணர்வது"18

"பிறந்த குழந்தைக்கு மருந்தாக தாய் "சேனை" வைப்பது"19


ஆய்வு முடிவுரை

கி.ரா. வின் புதினங்களை ஆழ்ந்து பார்த்தோமானால் அவற்றினுள் எல்லா நிலைகளிலும் மேம்பட்டு நிற்பது கரிசல் பண்பாடே ஆகும். கரிசல் நிலப்பகுதி மக்களின் வாழ்க்கை, விவசாயம், சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மருத்துவம், உணவு என அனைத்து கோணங்களிலும் புதினங்கள் சுட்டும் செய்திகள், கரிசல் பண்பாட்டை முழுமையாக வெளிக்கொண்டுவர முனைந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. கரிசல் எழுத்து என்பது அம்மக்களின் வாழ்க்கையையும், கரிசல் பண்பாடு என்பது அம்மக்களின் வாழ்வியலைக் கூறுவதாகவும் அமைந்து கரிசல் வாழ் மக்களின் பண்பாட்டை மிக அழகாக வெளிப்படுத்துகின்றது கி.ரா. வின் புதினங்கள்.

சான்றெண் விளக்கம்

1.        கி. ராஜநாராயணன், கரிசல் காட்டுக் கடுதாசி, ப.5

2.        மு.சுதந்திரமுத்து, கி. ராஜநாராயணனின் சிறுகதைத்திறன், ப.36

3.        க. பஞ்சாங்கம். மறுவாசிப்பில் கி.ரா. ப.166

4.        கி.ரா. கோபல்ல கிராமம், ப.56

5.        மேலது. ப.19

6.        மேலது. ப.56

7.        மேலது., ப.57

8.        மேலது. ப.57

9.        மேலது. ப.150

10.     கி.ரா. அந்தமான் நாயக்கர், ப.45

11.     கி.ரா. கோபல்ல கிராமம், ப.58

12.     கி.ரா. கோபல்லபுரத்து மக்கள், பக்.17-18

13.     கி.ரா. கோபல்ல கிராமம், ப.89

14.     மேலது. ப.147

15.     மேலது. ப.91

16.     மேலது. ப.91

17.     மேலது. ப.111

18.     மேலது. ப.120

19.     கி.ரா. அந்தமான் நாயக்கர், ப.91

துணைநூற்பட்டியல்

1.    ராஜநாராயணன், கி. (1995). கரிசல் காட்டுக் கடுதாசி, சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.

2.    ராஜநாராயணன், கி. (1993). கோபல்ல கிராமம், சிவகங்கை: செல்மா பதிப்பகம்.

3.    ராஜநாராயணன், கி. (1993). கோபல்லபுரத்து மக்கள், சிவகங்கை: செல்மா பதிப்பகம்.

4.    ராஜநாராயணன், கி. (1995). அந்தமான் நாயக்கர், சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.

5.    பஞ்சாங்கம், கி. (1996). மறுவாசிப்பில் கி.ரா, சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.

 

 

 

No comments:

Post a Comment