"திருமந்திரத்தில் ஒழுக்கம் சார்ந்த சமூகப் பண்பாடு"
செ. சத்யா,
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,
மயிலம் - 604 304, திண்டிவனம்
வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.
ஆய்வு நெறியாளர் : அ. சதீஷ்., எம்.ஏ., பி.எச்.டி.,
உதவிப்பேராசிரியர்,
மயிலம் தமிழ் கல்லூரி.
முன்னுரை
வாழ்க்கை
வாழும் விதங்களைப் பண்பாடு என்கிறோம். அன்பைப் பொழிந்து வாழும் வாழ்க்கையே ஆன்மீக வாழ்க்கை, ஆன்மீகப் பண்பாட்டு (சமயப் பண்பாடு) வாழ்க்கை
என வழிகாட்டும் கருவியாகத் திருமந்திரம் விளங்குகிறது.
தோத்திரம், சாத்திரம் போன்றவற்றை விளக்கும் நூல் மட்டுமல்லாது மானுட வாழ்வியலில் சமய
நெறிமுறைகளை விளக்கும் நூலாகவும் திருமந்திரம் அமைந்திருக்கிறது. மக்களை எல்லா நிலைகளிலும் எல்லா விதங்களிலும் பக்குவப்படுத்திச்
சீர்ப்படுத்துவதே சமயங்களின் தலையாய நோக்கம் என முன்வைத்துச் சமயப் பண்பாட்டினை விளக்கும்
நூலாக இந்த நூல் சிறப்புற அமைகின்றது. திருமந்திரத்தில் ஒழுக்கம் சார்ந்த சமூகப் பண்பாட்டினை
ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
திருமந்திரம்
என்ற நூல், நிறைமொழி மாந்தராகிய திருமூலர் மொழிந்த மறைமொழி. திருமுறை ஆசிரியர், சைவசித்தாந்தி,
சித்தர் என்ற சிறப்புகளோடு வாழ்வியல் நெறிவகுத்தவர் என்ற சிறப்பையும் பெற்றவர் திருமூலர்.
பத்தாம் திருமுறையாக உள்ள திருமந்திரம், தோத்திர நூல், சாத்திர நூல், வாழ்வியல் நூல்
என்ற மூன்று நிலைகளில் வைத்துப் போற்றப்படுகின்றது. திருமந்திரப் பாடல்களின் எண்ணிக்கையில்
வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் திருமூலர் தம் வாக்கால் குறிப்பிட்டுள்ளது 3000
பாடல்களே ஆகும்.
"மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ்"
- (திருமந்திரம், சிறப்புப்பாயிரம்,
தொகை சிறப்பு, 1-2)
என்று இரண்டு இடங்களிலும்,
"முத்தி முடிவிது மூவாயிரத்திலே"
- (திருமந்திரம், சிறப்புப்பாயிரம்,
பா-3)
"தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தர
ஆகமச்சொல் மொழிந்தானே"
-
(திருமந்திரம், சிறப்புப்பாயிரம்,குறுமடவரலாறு, பா.1)
என்றும் திருமூலர், திருமந்திரத்தில்
3000 பாடல்கள் என்று குறிப்பிடுகின்றார்.
"முன்னிய அப்பொருள்மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி"
- (பெரியபுராணம், திருமூலநாயனார் புராணம்,
பா.3589)
என்று பெரியபுராணத்தில் சேக்கிழாரும்
குறிப்பிடுகின்றார்.
பாயிரம் தவிர,
ஒன்பது தந்திரங்களை உடையது இந்நூல். தந்திரம் என்பது ஆகமம் என்பர். ஒன்பது ஆகமங்களின்
கருத்துகளும் திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்களாக உள்ளன. திருமூலர், திருமந்திரத்தில்
எவ்வெவற்றைக் கூறுகின்றார் என்பதை அவரே,
"நேயத்தை ஞானத்தை ஞாதுருவத்தினை
மாயத்தைமாமாயை
தன்னில் வரும்பரை
ஆயத்தை
அச்சிவன்தன்னை அகோசர
வீயத்தை முற்றும்
விளக்கி யிட்டேனே"
- (திருமந்திரம், தற்சிறப்புப்பாயிரம்,
பா.154)
என்று கூறுகிறார்.
அறியப்படும் பொருள், அறிவு, அறிவோன் மற்றும் உணர்வுமெய், உடல்மெய், உணர்த்து மெய்,
பரைத் தொகுதி, சிவன் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன என்பது இப்பாடலால் அறியப்படுகின்றன.
இவை, உடல், உலகு, இறையருள், உயிர், அறிவு என்பவையே. "திருமந்திரம்" சமயம்
சார்ந்த தோத்திரம் மட்டுமல்லாது சாத்திரமாகவும் அமைந்துள்ள நூலாகும்.
நிலையாமை
திருமூலர், முதன்முதலாக உணர்த்தும் அகம்
சார்ந்த அறப்பண்பு, நிலையாமை என்பதாகும். நிலையாமையைப் பற்றிய அச்சத்தையும், உள்ள உணர்வையும்
உணர்த்தியபின் நிலைத்த அறநெறிகளை உணர்த்தவே முதலில் நிலையாமையைக் கூறுகின்றார் திருமூலர்.
மாயையாகிய
மண்ணால் செய்யப்பட்ட உடம்பு, ஒளியுடலாக மாற்றப் பெற்றால், நீண்ட நாள் நிலைபெறும். இல்லையெனில்,
பச்சைமண்பாண்டம் மழையினால் மண்ணாகக் கரைவது போல் அழிந்து விடும். உயிர் சென்றபின் மக்களும்,
மனைவியும் உடன்வர மாட்டார்கள். செய்த அறங்களும், வினைகளும் மட்டுமே உடன்வரும் என்கின்றார்.
மேலும், நொடிப்பொழுதில் ஆளையே மறந்துவிடுவர் என்பதை,
"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை
நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங்காட்டிடைக்
கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்
மூழ்கி நினைப் பொழிந்தார்களே"
- (திருமந்திரம்,189,
யாக்கை நிலையாமை)
என்று குறிப்பிடுகின்றார்
திருமூலர்.
அரச
போகத்தில் வாழ்ந்தாலும் இறுதியில் சுடுகாட்டிற்குத்தான் செல்ல வேண்டும். ஒரு நொடியில்
எதிர்பாரா நிலையில் உடம்பைவிட்டு உயிர் நீங்கக் கூடியது என்பதை,
"அடப்பண்ணி வைத்தால் அடிசிலை உண்டார்
மடக்
கொடியா ரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே
இறை நொந்தது என்றார்
கிடக்கப்
படுத்தார் கிடந்தொழிந்தாரே"
- (திருமந்திரம்,192,
யாக்கை நிலையாமை)
என்று விளக்குகிறார்
திருமூலர். மேலும்,
"அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்வியனாகிப்
பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியனாகிச்
சிறந்துண்ணும்போது ஒரு
தவ்விக்
கொடு உண்மின் தலைப்பட்ட போதே"
- (திருமந்திரம்,238,
உயிர் நிலையாமை)
என்று கூறிப்
பிறர் பொருளை கவர எண்ணாதீர். செம்மையுடைய வாழ்வு வாழுங்கள். உண்ணும்போது வருவோர்க்கு
ஓர் அகப்பை உணவு கொடுத்துப்பின் உண்ணுங்கள் என்பதை வலியுறுத்தின்றார் திருமூலர்.
இக்கருத்தினையே
திருவள்ளுவர், அறத்துப்பாலில் துறவறவியலில் 34ஆவது அதிகாரமாக 'நிலையாமை' என்ற ஒரு அதிகாரத்தில்
செல்வம், உயிர், உடல் நிலையாமைகளை,
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு" - (குறள். 339)
என்று கூறுகின்றார்
திருவள்ளுவர். எனவே, யாக்கை நிலையாமையை அறிந்தும், உலக மயக்கம் நீங்காமல் உடம்பினுள்
உள்ள உயிருள் கலந்த ஒளியாம் இறைவனை உணர்ந்து அருளுடைய செயல்கள் செய்து தூல உடலை ஒளியாக
மாற்ற வேண்டும். உயிர் நீங்கினால் உடம்பு பயனற்றது. கழுமுனையில், பிராணனைச் செலுத்தி
நிலைக்கச்செய்து, அழியும் உடம்பை வைத்து, அழியா இன்பம் பெற அறிவுறுத்துகிறார் திருமூலர்.
கொல்லாமை
பிறஉயிர்களைக் கொல்லக் கூடாது. இறைவனின்
பூசைக்கு உரிய மலரே கொல்லாமை என்ற மலர். சிவகுருபூசைக்கும் சிறப்பான மலர் கொல்லாமை.
கொலை செய்வோர் நரகத்தில் வீழ்வர் என்று முதல் தந்திரத்தில் ஆறாவது தலைப்பாகிய கொல்லாமையில்
இரண்டு பாடல்களைக் (மந்திரங்களை) கூறுகின்றார் திருமூலர்.
"கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக்காரர்
வலிக்கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில்லென்று
தீவாய் நரகிடை
நிலவிடும் என்று
நிறுத்துவர் தாமே"
- (திருமந்திரம்,240, கொல்லாமை)
என்ற பாடலடியில்,
கொல், குத்து என்று சினந்து கூறிக் கொலை செய்வோர் நரகத்தில் வீழ்த்தப்படுவர் என்பதை
விளக்குகிறார் திருமூலர்.
புலால் மறுத்தல்
முதல் தந்திரத்தில் ஏழாவது தலைப்பில் இரண்டு
மந்திரங்களை உடையதாகப் புலால் மறுத்தல் அமைந்துள்ளது. கொலை செய்து, புலால் உண்பவரை
எமதூதர், நரகத்தில் மல்லாக்கத் தள்ளி துன்புறுத்துவர் என்கிறார் திருமூலர். மேலும்,
"கொலையே களவுகட் காமம்பொய் கூறல்
மலையான பாதகமாம்
அவைநீக்கத்
தலையாஞ் சிவனடி
சார்ந்து இன்பஞ் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை
ஞானானந்தத்து இருத்தலே"
- (திருமந்திரம்,241, கொல்லாமை)
என்று கூறி,
கொலை போன்ற பாவம் செய்யாதவர்கள் துன்பமின்றி இன்பமுடன் இருப்பார் என்று கூறுகின்றார்
திருமூலர்.
பிறன்மனை நயவாமை
முதல் தந்திரத்தில், மூன்று மந்திரங்களைக்
கொண்டது பிறன்மனை நயவாமை. இதனை,
"காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு
இடருற்றவாறு"
- (திருமந்திரம்,244, பிறன்மனை நயவாமை)
இருப்பது போன்றது,
பிறர் மனைவியை விரும்வது அறியாமை என்கிறார் திருமூலர். மேலும்,
"திருத்தி வளர்த்தோர் தேமாங்கனியை
அருத்தமென்று
எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தமிலாத
புளிமாங் கொம்பேறிக்
கருத்தறியாதவர்
காலற்றவாறே"
- (திருமந்திரம்,245, பிறன்மனை நயவாமை)
என்று கூறித்
தன்மனைவியைப் புறக்கணித்து, அழகில்லாத பிறன் மனையாளை விரும்பித் துன்பம் அடைந்து உயிர்
துறப்பது, காமமயக்கத்தால், புளியமரமேறிப் பயன்பெறாது கீழே வீழ்ந்து காலொடிவது போன்றது
என்கிறார் திருமூலர்.
அறம்செய்வான்
திறம்
உயர்ந்தோர் தாழ்ந்தோர், உறவினர் பகைவர் என்று பாகுபாடு கருதாமல் அறம் செய்ய வேண்டும்
என்று கூறும் திருமூலர், எல்லோராலும் உண்ணும்போது ஒரு கைப்பிடி உணவை உவகையுடன் பிறர்க்குக்
கொடுக்க முடியும். இந்த அறத்தைச் செய்து அறச்செயலை வளர்த்துக் கொண்டு, கூற்றுவன் வருமுன்
நல்லறஞ் செய்யுங்கள் என்கின்றார். இறையருளைப்பெற்றுப் பிறவியறுக்க உதவும் வழி அறம்
என்கிறார்.
"யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம்
பசுவுக்கெருவாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம்
பிறர்க்கின்னுரை தானே"
- (திருமந்திரம்,109, அறம்செய்வான் திறம்)
என்று எல்லோரும்
செய்வதற்குரிய எளிமையான அறமாக, உண்ணும்முன் இறைவனுக்குப் பச்சிலைக் கொண்டு வணங்குதல்,
பசுவுக்கு ஒரு வாயளவு புல் கொடுத்தல், பிறர்க்குச் சிறிதளவு உணவு கொடுத்தல், பிறரிடம்
இனிமையாகப் பேசல் போன்ற பண்புகளைத் திருமூலர் வலியுறுத்துகிறார்.
மேலும், தான்
பெற்றதை எல்லோர்க்கும் கொடுத்து மகிழ வேண்டும் என்ற அறவுணர்வை,
"நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்
கிளை முதலோர்க்கும்
கடும்பின் கடும்பசி
தீரயாழநின்
நெடுங்குறி
எதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க்கும்
என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்வதும்
என்னாது நீயும்
எல்லோர்க்கும்
கொடுமதி மனைக்கிழவோயே
பழந்தூங்கு
முதிரத்துக் கிழவன்
திருந்துவேல்
குமணன் நல்கிய வளனே"
-
(புறம். 163)
என்ற புறநானூற்றுப் பாடலடிகளும்
எடுத்துரைக்கின்றன.
அன்புடைமை
அன்பின் முதிர்ச்சியால் இறையாகிய அறிவு
விளங்கும். அதாவது, சக்தியாகிய அன்பின் முதிர்வால் சிவமாகிய அறிவு விளங்கும். அன்பு
வலையில் அகப்பட்டு, அருளும் இறைவனை ஏத்தினால் ஒளிபெருகச் செய்வான். அன்பில்லாதவர் இறைவனை
அடைய வழியறியாது வருந்துவர். கருணையுடைய இறைவனிடம் அன்பு பின்னிக் கிடக்க வேண்டும்.
உலகப் பொருளை விரும்புவதை விட்டு, மெய்ப்பொருளை விரும்ப வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்
திருமூலர். மேலும், இறைவனுக்கு அன்போடு உருகிச் செய்யும் வழிபாடு சிறந்தது என்பதை,
"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலிற்
பொரிய வறுப்பினும்
அன்போடுஉருகி
அகங்குழைவார்க்கன்றி
என்போல் மணியினை
எய்த ஒண்ணாதே"
- (திருமந்திரம்,259, அன்புடைமை)
என்று விளக்குகின்றார்.
மேலும், அன்பே கடவுள் என்ற நிலையில் அனைத்துயிர்களிடமும் ஆண்டவனைக் காணும் மனநிலையைப்
பெறவேண்டும். காணும் பொருளிலெல்லாம் தன்னையும் இறைவனையும் காணும் அன்பின் முதிர்வைப்
பெற வேண்டும் என்று வலியுறுத்தும் நிலையில்
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும்
அறிகிலார்
அன்பே சிவமாம
தாரும் அறிந்த பின்
அன்பே சிவமாய்
அமர்ந்திருந்தாரே"
- (திருமந்திரம்,257, அன்புடைமை)
என்ற மந்திரத்தைக் கூறுகின்றார்
திருமூலர்.
கள்ளுண்ணாமை
சிவானந்தத் தேறலாகிய மதுவினை உண்ணாமையைக்
கள்ளுண்ணாமை என்கிறார் திருமூலர். அதனை,
"மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம்
இன்பமே எய்தி
முயங்கும் நயம்
கொண்ட ஞானத்தை முந்தார்
இயங்கும் இடையறா
ஆனந்தம் எய்துமே"
- (திருமந்திரம்,317, கள்ளுண்ணாமை)
என்று கூறுகிறார்.
கள் மயங்கச் செய்யும். உண்மையை அழிக்கும். சிற்றின்பம் நாடிப் பேரின்பம் இழக்கும் என்று
விளக்குகிறார்.
திருவள்ளுவர்,
பொருட்பாலில், கள்ளுண்ணாமையைக் கூறுகிறார். கள்ளுண்டவர்களைச் சான்றோர் மதிக்க மாட்டார்கள்.
கள்ளுண்பவர் நாணத்தை இழப்பர். கள் குடிப்பவர் நஞ்சு உண்பவர்களாவர் என்பதனை,
"உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா
தார்" - (குறள். 922)
"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார்
கள்ளுண் பவர்" - (குறள். 926)
என்று எடுத்துரைக்கின்றார் திருவள்ளுவர்.
பொறையுடைமை
இரண்டாம் தந்திரத்தில் உள்ள இருபத்தைந்து
தலைப்புகளில் இருபத்து நான்காவது தலைப்பாக அமைந்துள்ளது பொறையுடைமை. பொறை என்பது பொறுத்தல்.
தாங்கிக் கொள்ளுதல். பொறுமையுடன் இருத்தல். சகித்துக் கொள்ளுதல்.
"மனத்திணை ஒரு வழி நிறுப்பது பொறைநிலை"
-
(தொல்.வகைதானே நூற்பாஉரை)
என்று, மனதைப்
பொறுமையாக ஒருநிலைப்படுத்தி ஒன்றில் நிலை நிறுத்திக் குவிப்பதும் பொறைநிலையாகக் கொள்வர்.
இறையனுபவம்
பெறப் பின்பற்ற வேண்டிய மனதை ஒருவழிப்படுத்தலாகிய பொறைநிலை இறையியல் சார்ந்தது. உலகியல்
சார்ந்த ஒழுக்க நிலையில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலுடைய பொறைநிலையைப் பெறலாம். இப்பக்குவத்துக்கேற்ப
உடலிலும், உள்ளத்திலும் பல இன்ப துன்பங்களை நுகரக் கொடுத்து இறைவன் பக்குவம் செய்வான்.
பக்கவப்படுத்தி அருள்செய்யும் அருளாளன் இறைவன் என்பதனை,
"வல்வகையாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகையாலும்
பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையினின்று
குறிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையிலாதஇலயம்
உண்டாமே"
- (திருமந்திரம்,524, பொறையுடைமை)
என்ற திருமூலர் மந்திரத்தால்
அறியலாம்.
இதனை, திருவள்ளுவர்,
ஒறுத்தல் கூடாது. பொறுத்தலோடு மறத்தலும் வேண்டும் என்பதை வலியுறுத்தி, தனித்து நிற்கும்
ஒரே குறளாக,
"நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப்
படும்" - (குறள். 154)
என்று கூறி,
சான்றாமை நீங்காது இருக்க வேண்டுமானால், பொறையுடைமையை அழியாமல் காக்க வேண்டும் என்கிறார்.
பெரியோர்களைத்
துணைக்கோடல்
இரண்டாம் தந்திரத்தின் இறுதியில் உள்ள
இப்பகுதி, பெரியவர்களுடைய துணை நன்னெறி உய்க்கும். நன்மை பயக்கும். உலகியல் வாழ்விலும்,
இறையியல் வாழ்விலும் பெரியவர்களுடைய துணை இன்றியமையாதது என்பதை விளக்குகின்றது.
நல்ல நெறிகளைப்பற்றி
ஒழுகி, பிறருக்கும் ஒழுக்க மேம்பாடுகளை அறிவுறுத்தி, யான் எனது என்னும் செருக்கறுக்கும்
பெரியோர்களுடன் கூடியிருந்து அவர்களின் துணையினைப் பெறுதல் பேரின்பமாகும் என்பதனை,
"அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர்
சிவதத்துவத்தை
நெறிதான் மிகமிக
நின்றருள் செய்யும்
பெரியாருடன்
கூடல் பேரின்பமாமே"
- (திருமந்திரம்,527, பெரியாரைத் துணைக்கோடல்)
என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.
அறநெறிகளை அறிந்த
பெரியோர்கள், தம் அனுபத்தால் வரக்கூடிய இன்னல்களில் இருந்து காக்கும் ஆற்றல் உடையவர்கள்.
குற்றங்கள் கண்டால் இடித்துரைத்துத் திருத்துவார்கள். தக்க சான்றோர்களாகிய பெரியவர்களுடன்
பழகிப் பண்பட வேண்டும் என்பதை,
"இழுக்கல் உழையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்
வாய்ச்சொல்" - (குறள். 415)
என்கிறார் திருவள்ளுவர்.
இயமம் நியமம்
தவநிலையைப் பயில்வதற்கு வேண்டிய வழிமுறைகளாகத்
திருமூலர் கூறும் அட்டாங்க யோகத்தில் முதலில் இருப்பது இயமம். இரண்டாவதாக இருப்பது
நியமம். இயமம் என்பது தீயனவற்றைச் செய்யாது ஒழுகுதல், நியமம் என்பது நல்லனவற்றையே செய்தல்.
இவற்றை, "தீதகற்றல்", "நன்றாற்றல்" என்பர். நல்லுழைப்பால் நல்லூதியம்
பெறுதலைத் தொடர்ந்து செய்தல் வேண்டும் என்றும்,
"கொல்லான் பொய்கூறான் களவிலன் எண்குணன்
நல்லான் அடக்கமுடையான்
நடுச் செய்ய
வல்லான் பகுந்துண்பான்
மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத்திடை
நின்றானே"
- (திருமந்திரம்,536, இயமம்)
என்று இமய ஒழுக்கத்தில்
நிற்பவர் பின்பற்றவேண்டிய அறங்களைக் கூறுகிறார் திருமூலர். மேலும், தவிர்க்க வேண்டியனவற்றைக்
கூறியும் நல்லறங்களை விளக்குகிறார்.
நியமம்
என்ற நல்லனவற்றைச் செய்து ஒழுகும் வழி முறையில் பத்துக் குணங்களைப் பின்பற்றுமாறு கூறுகிறார்
திருமூலர். அவை,
"தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை
வாய்மை நிலைமை
வளர்த்தலே மற்றிவை
காமம் களவு
கொலை யெனக் காண்பவை
நேமி யீரைந்து
நியமத்த னாமே"
- (திருமந்திரம்,538, நியமம்)
என்பனவாகும். இவ்வாறு அட்டாங்
யோகத்துக்கு அடிப்படையே ஒழுக்கநெறி என்பதைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
அவா அறுத்தல்
எட்டாம் தந்திரத்தில் அவா அறுத்தல் அமைந்துள்ளது.
பொருள்களின் மீது செல்லும் அவாவினை நீக்குதல் வேண்டும். அவா என்பதே பிறப்பீனும் வித்து.
ஆசையால் உயிர்க்குத்துன்பமே. ஆசையை விடவிட ஆனந்தம் பெருகும். ஆசையை விட்டவர்கள் உள்ளத்தால்
இறைவனை உணரமுடியும். இறைவனோடும் ஆசை கொள்ள வேண்டாம் என்பதைத் திருமூலர்,
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும்
ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட
ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட
ஆனந்தமாமே"
- (திருமந்திரம்,2570, அவாவறுத்தல்)
என்று எடுத்துரைக்கின்றார்.
ஆசையை
அறுப்பதே இன்பத்திற்கு வழி. ஆசையை விட்டு ஞாலத்தைப் பற்றுதலே தம்மை உணர்தல் என்பதை,
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின்
இலன்" -
(குறள். 341)
என்கிறார் திருவள்ளுவர்.
இறை நம்பிக்கை
இல்லாத ஒழுக்கக் கல்வி சிறக்காது. ஒழுக்கம் மட்டுமே இருந்தால் அருள் அங்கே நிலைக்காது.
ஏனெனில் கடவுளே அருள். கண்ணில்லாக் குதிரையில் பயணம் செய்வது போன்றது கடவுள் உணர்வு
இல்லா ஒழுக்கம். இறை உணர்ச்சி இருந்தால் தனிமையிலும் தவறு செய்ய அஞ்சுவான். மனிதன்,
எத்தகைய சட்டங்களில் இருந்து வேண்டுமானாலும் தப்பிக்கலாம். ஆனால், இறை நீதியிலிருந்து
ஒருபோதும் தப்ப முடியாது என்ற எண்ணம் வலுப்பெற வேண்டும். தனிமனிதன் பண்பட்டால் சமுதாயம்
பண்படும். இதனால் உலகு பண்படும். எனவே, உலக
வாழ்வியலுக்கும், இறையியலுக்கும் அடிப்படை,
தனிமனித ஒழுக்கங்களாகின்ற அகம் சார்ந்த பண்பாடுகளே என்பதால், சமயம் சார்ந்த
தோத்திர சாத்திர நூலாக திருமந்திரம் இருந்தாலும் முதல் தந்திரம் முழுவதும் தனிமனித
ஒழுக்கங்களையே அறிவுறுத்துகின்றது.
ஆய்வு முடிவுரை
இன்று அறிவியல் வளர்ச்சியில் அசுரவேகம்
பெற்றுள்ள மனிதன், மனிதப் பண்பை மறந்து விட்டான். பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும்
மேற்போக்காகப் பழகும் இயந்திர வாழ்க்கை பெருகிவிட்டது. ஊடகங்கள் பெருகி விட்டன. மனிதமனமும்
பண்பாடும் நலிந்து அழிந்து வருகின்றன. பண்பாட்டை வளர்க்கும் நூல்களையும் சான்றோர்களையும்
நாடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகின்றன. குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடம் மிகவும்
குறைந்து வருகின்றது. நாகரிக வேகத்துக்கு எதிரியாக அறிவுரைகளை எண்ணி வெறுக்கின்றனர்.
மனம் விரும்பியவாறு வாழ பெரியோர்களின் அறிவுரைகளையும், கட்டுப்பாட்டையும் எதிர்க்கின்றனர்.
தீமைபெருகும் காலமாக உள்ளது. இன்று மனிதனிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. எளிமை வாழ்க்கையை
வெறுத்து ஆடம்பரத்தை விரும்புகின்றான். போட்டிப்போட்டுக் கொண்டு ஆடம்பர வாழ்வு வாழ்கின்றான்.
நாளைய வருமானத்தை இன்றே செலவு செய்கின்றான். எந்த வழியிலாவது பொருள்களைப் பெற்றுவிட
வேண்டும் என்ற ஆசையினால் அடுத்தவர்களைக் கெடுத்தல், சிறுபொருளுக்காகக் கொலையே செய்தல்,
பொய் போட்டி, பொறாமை, வஞ்சம், சூது, களவு, காமம், போதை ஆகியவற்றில் சிக்குண்டு குறிக்கோளற்ற
வாழ்கை வாழ்தல் போன்ற அவல நிலைக்குப் பலர் தள்ளப்படுகின்றனர். இதனால் விளையும் அவலச்
செய்திகள் நாளும் வந்து கொண்டே இருக்கின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுடன்
இயைந்து பழகி மனங்களைப் பண்படுத்த இயலாச் சூழல் இன்று உள்ளது. ஆகையால், திருமூலரால்
திருமந்திரத்தில் மேற்கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறைகளை இன்றைய இளையதலைமுறையினர் பின்பற்றினால்,
சமுதாயத்தில் தனிமனித ஒழுக்கக் குறைபாடுகள் களைந்து மேம்பட்ட சமுதாயம் தழைத்தோங்கச்
செய்யலாம் என்பதை இவ்வாய்வு மூலம் அறிந்து
கொள்ள முடிகின்றது.
No comments:
Post a Comment