Search This Blog

Tuesday, December 19, 2023

 

குறுந்தொகையில் பொருள்புலப்பாட்டு உத்தி: உள்ளுறை

 

ஆய்வாளர்

செ.சத்யா

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,

கலை, அறிவியல் கல்லூரி, மயிலம் - 604 304.

மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com

ORCID ID: 0000-0001-7111-0002

ஆய்வுச் சுருக்கம்

இலக்கணச் செம்மையும் வளமும் கொண்ட தமிழ்மொழியின் தனிப்பெரும் சொத்துக்களாகத் திகழ்வன சங்க இலக்கியங்கள் ஆகும். வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழ்கூறு நல்லுலகின் வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்து எழுதப்பட்டது தொல்காப்பியம் என்று பனம்பாரனார் பாயிரம் கூறுகிறது.

தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கியத்தின் வகைமை, பொருளமைதி, யாப்பு, அணி போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கின்றது. “எழுத்தும் சொல்லும் பொருளதிகாரத்தின் பொருட்டேயாம். பொருள் இன்றேல், ஏனைய இரண்டும் இருந்தும் பயனில்லை"1 என்று இறையனார் அகப்பொருள் முதற்சூத்திர உரை எடுத்துரைப்பதும் இங்கு நினைக்கத்தக்கது.

செய்யுளில் புலவர்கள் பொருள் புலப்பாட்டிற்காகப் பல உத்தி முறைகளைக் கையாளுகின்றனர். அவற்றினை இலக்கிய உத்திகள் என்று குறிப்பிடுகின்றோம். தொல்காப்பியர் அகப்பொருண்மையில் மறைமுகமாகத் தனது கருத்தினை வெளிப்படுத்தும் உத்திகளாகப் குறிப்புப் பொருண்மையில் அமைந்த உள்ளுறை, இறைச்சியினைக் குறிப்பிடுகின்றார்.

அகப்பாடல்களில் வரும் உணர்வுகள் உலகின் பொதுத்தன்மை கொண்டும் அவற்றை அகமாந்தர் வெளிப்படுத்தும் முறை நாடகப்பாங்கு கொண்டும் விளங்குகின்றன. உலகியல் தன்மையும் நாடகப்பாங்கு கொண்டு விளங்கும் இவ்விலக்கிய நெறிமுறையினைப் "புலனெறி வழக்கம்" என அழைப்பர். கவிஞன் நுணுக்க வடிவத்துடன் ஒன்றிணைத்து, இலக்கிய மரபின் வழி தம் எண்ணங்களைப் பார்க்கும் இப்புலனெறி வழக்கம் என்னும் இலக்கிய உத்தி இலக்கியங்களில் இடம்பெற்று அகமாந்தர்களின் எண்ண ஓட்டத்தைக் குறிப்புப் பொருளால் உணர்த்துகிறது. மக்களின் அக ஒழுகலாறுகளைச் செவ்வியல் நெறியில் புனைந்து பாடும் கவிஞன் கவிச்சுவை பெருகவும், நாகரிகமாகக் காதல் உணர்வுகளைச் வெளிப்படுத்தவும் அக இலக்கியங்களில் மேற்கண்ட இலக்கிய உத்திகளுள் உள்ளுறை, இறைச்சி என்னும் இரண்டும் விழுமியப் பொருள் புலப்பாட்டு வகையாகக் கருதப் பெறுகின்றன. இவ்வுத்தி முறைகளுக்கான இலக்கணங்களைத் தொல்காப்பியர் வரையறைச் செய்துள்ளார். பொருள் புலப்பாட்டிற்காகப் பயன்படும் உத்தி முறையான ‘உள்ளுறை’ குறுந்தொகையில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதனை நுணுகி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கருச்சொற்கள்

உவமம், உள்ளுறை உவமம், இறைச்சி, குறுந்தொகை, தொல்காப்பியம், உத்தி, பொருள் புலப்பாடு, குறிப்புப் பொருள், அகஉணர்வு.    

முன்னுரை

சங்க இலக்கியங்கள் பல்லாண்டு காலமாக வாசிக்கப்பட்டு வரும் செவ்விலக்கியங்கள் ஆகும். பண்டைய செவ்வியல் இலக்கியங்கள் பாட்டும் தொகையுமாய் அமைந்து நம் மொழியின் தொன்மையையும், நம் முன்னோர்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை எடுத்துகூறுகின்ற காலக் கண்ணாடியாக விளங்குகின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு இலக்கிய உத்திகள் கையாளப்பட்டுள்ளன. அகப்பாடல்களில் அழகு, உள்ளுறை போன்றவற்றால் சிறப்புறுவதை அறிய முடிகிறது. குறுந்தொகையில் உள்ள பாடல்கள் கற்பனை வளமும் கவிதை நயமும் கொண்டவையாகும். தொல்காப்பியர் சுட்டும் உள்ளுறை வகைகள் குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வந்துள்ளமையை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது. 

உள்ளுறை

செய்யுளில் இடம் பெற்ற குறிப்புப் பொருள்களைக் கண்ட தமிழ் இலக்கணத்தார், சொற்குறிப்புகளை  'ஒன்றொழி பொதுச்சொல்' முதலாகப் பிரித்தனர். சொற்றொடர்க் குறிப்புகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் அவற்றைப் பிரித்துக் காட்டவில்லை என்றாலும், செய்யுள்களில் அகப்பொருள் செய்யுள், புறப்பொருள்  செய்யுள் என்னும் இரண்டு வகைகளில் அகப்பொருட்  செய்யுளில் வரும் குறிப்புப் பொருளுக்கே 'உள்ளுறை' என்பது பெயராகும். அதாவது வெளிப்படையாகச் சொல்லப்பட்ட பொருளின் உள்ளே உறையும் பொருள் உள்ளுறையாகும். 

அகப் பாடல்களில் அமையும் உள்ளுறை

தொல்காப்பிய அகத்திணையியலில் பிரிவு பற்றிய கூற்று வகைகளைக் கூறி முடிக்குமிடத்தில் உள்ளுறை உவமம், ஏனை உவமம் என உவமையின் இரு வகைகளைப் பற்றிக் கூறுவதனை,

"உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத்

தள்ளா தாகும் திணையுணர் வகையே"2

என்ற நூப்பாவின் மூலம் அறியலாம். இதில் உள்ளுறை உவமம் அகப்பாடல்களில் மட்டும் பயின்று வரும் தன்மையுடையது.

"தொல்காப்பியர் உள்ளுறை என்பது அக பாடலுக்கே உரியது என்று வரையறை எதுவும் கூறவில்லை.  ஆனால் உள்ளுறை நிலைக்களன் பற்றியும் உள்ளுறை உவமம் பற்றியும் அகத்திணை இயலில் கூறியதாலும் கருப்பொருள் வரையறை அகத்திணைக்கே உரியதானதாலும் உள்ளுறை அகப்பாடலுக்கே உரியது என்பார்"3 .சிவலிங்கனார்.

உள்ளுறை உவமம் அக பாடலுக்கே சிறப்பாக உரியது என்பதால் தான் தொல்காப்பியர் "உவமவியலுள் இதன் இலக்கணம் கூறினாலும் அதற்கு முன்னதாகவே அகத்திணை இயலுள்ளும் இவ்வுவமையை விரித்தோதியுள்ளார்"4  என்பர் . சுப்பு ரெட்டியார். "உவமவியலில் கூற வேண்டிய உள்ளுறை, உவமத்தின் ஒரு பகுதியாக அடங்கும். எனினும் ஏனை உவமம் போல புறத்திற்கே பெரிதும் உரிமை கொள்ளாது அகத்திற்கே சிறப்புரிமை கொண்டுள்ளமையால் இதனை அகத்திணை இயலில் கூறியதாக"5              மு அருணாச்சலம் பிள்ளை சுட்டிக்காட்டுவார்.

இவ்வாறாக மறைவாக வரும் குறிப்புப் பொருள் அகப்பொருளில் வரும் பொழுது அது உள்ளுறை எனவும், உள்ளுறையாகிய குறிப்புகள் புறப்பொருள் பற்றி வரும் பொழுது அவற்றை உவமத்தின் வேறுபாடாகக் கருதிய  அணிநூலார் 'பிரிதுமொழிதலணி' என்றும் 'ஒட்டணி' என்றும் கூறுவர்.

உள்ளுறையின் தன்மை

உள்ளுறை பெரும்பாலும் தலைவனது நடத்தை பற்றியே அமைக்கப்பட்டிருக்கும்.  பயன்படுத்தப்பெற்ற கருப்பொருள்களின் மூலமாகத் தலைவனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கும்.  அவனது செயல்பாடுகள் அந்த நிலத்துக் கருப்பாருள்களை ஒத்தோ அல்லது தலைவன், அக்கருப்பொருள்களின் தன்மையைக் காட்டிலும் சற்றுத் தாழ்ந்தவனாகவோ இருக்கலாம்.  அவனது அச்செயல்பாடுகள் தலைவிக்கும், அவன் குடியிருக்கும் ஊருக்கும், பெற்றோருக்கும் துன்பம் தரலாம். இது உள்ளுறையின் முக்கியமான தன்மையாகப் பார்க்கப்படுகிறது.

 உள்ளுறையின் நிலைக்களன்

அகப் பாடலுக்கே உரிய உள்ளுறை, தெய்வம் தவிர ஏனைய கருப்பொருட்களை நிலைக்களமாகக் கொண்டு அமையும் என்பதனை,

"உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம்எனக்

கொள்ளும் என்ப குறிஅறிந் தோரே"6

என்ற நூற்பாவின் மூலம் அறியலாம். எனவே உள்ளுறை என்பது குறிஞ்சி முதலாக ஐந்திணை அகப் பாடல்களில் அமைக்கப்படும் பொழுது அவ்வகத்திணைகளின் தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை நிலைக்களமாகக் கொண்டே அமைக்கப்பட வேண்டும் என்பதை,

 

"தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப"7

என்ற நூற்பாவின் வழி அறியலாம்.

குறிப்புப் பொருளிலிருந்து தெய்வத்தை நீக்கியமைக்கான காரணத்தைப் பற்றித் தொல்காப்பியரோ, உரையாசிரியர்களோ விளக்கவில்லை. என்றாலும் இக்காலத்து ஆய்வாளர்கள் சிலர் இது பற்றி விளக்கியுள்ளனர். "தமிழர்கள் தம் வாழ்க்கையுடன் தெய்வத்தையும் சார்த்திப் பேசி, அதன் சிறப்பை அவர்கள் கெடுக்க விரும்பவில்லை"8 என . சுப்புரெட்டியார் எடுத்துரைப்பதனை அறியலாம்.

உள்ளுறை உவமையின் இலக்கணம்

தொல்காப்பியர் அகத்திணையியலில் உள்ளுறை உவமத்தின் இலக்கணத்தை,

"உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகஎன

உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை  உவமம்"9

என்ற நூற்பாவின் வழி அறியலாம்.  உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனோடு ஒத்து முடிகவென என உள்ளுறுத்து  உரைப்பதே உள்ளுறை  உவமம்10  என்று இளம்பூரணரும், “வெளிப்படையாகக் கூறுகின்ற இவ்வுமத்தோடு புலப்படக் கூறாத  உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாக11 என்று நச்சினார்க்கினியரும் உள்ளுறை உவமையின் இலக்கணத்தை விளக்குகின்றனர்.

தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்கத் தோன்றிய சார்பு நூலான  நம்பி அகப்பொருளில் உள்ளுறை என்பது நுட்பமாக உய்த்து அறிந்து கொள்ளக் கூடியதாகவும் அது பறவை, விலங்கு மற்றும் பிறவற்றோடும் புலப்படும் என்பதனை,

"உள்ளுறை யுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்

புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும்"11

என்ற நூற்பாவின்  மூலம் நாற்கவிராச நம்பி எடுத்துரைக்கின்றார். 

"கருதிய பொருள்தொடுத்து அதுபுலப் படுத்தற்கு

ஒத்ததொன்று உரைப்பின் அஃது ஒட்டெனமொழிப"12

எனும் நூற்பாவில் உள்ளுறையை ஒட்டு, உவமப்போலி, பிறிதுமொழிதலணி, நுவலாநுவற்சி, சுருக்கணி என பலவாறு தண்டியாசிரியர் குறிப்பிடுகிறார்.

“திருக்குருகைப் பெருமாள் கவிராயர் தொல்காப்பியத்தில் பேசப்படும் உள்ளுறை உவமத்தையும் இறைச்சியையும் அணியில் சேர்த்தது அதிசயமாகும். இறைச்சியை இறைச்சிப் பொருளலங்காரம் என்றார்”13 என்று இராமராஜன் கூறுகின்றார். கவிராயர் உள்ளுறை உவமத்தை உரையாசிரியர்களின் வழி நின்று விளக்குகின்றார்.  இவர் உள்ளுறை உவமத்தை உணர்வதற்கரிதாம்  உவமப்போலி என்றார். இவர் தொல்காப்பியத்தில் காணும் பல சூத்திரங்களின் கருத்துகளை  எல்லாம் ஒரே நூற்பாவில் அடக்கி கூறுவதனை,

"உணர்வதற் கரிதாம் உவமப் போலி

புணர்திறம் வினையே பொருண்மெய் யுருவெனப்

பிறப்பொடும் ஐந்தாம் பெற்றித் தாகிச்

சிறப்புறு திணைகளிற் றெய்வதம் ஒழிந்த

கருப்பொருள் களனாகக் கட்டுரை பயின்றும்

உவமையோ டெதிருள் ளுறுத்தலுற் றயலாய்

உவமச் சொற்றொகல் ஒருதலை யாகியும்

அன்பின தளவாம் அகத்திணை யிருவயின்

இன்ப துன்பத் திசைதிரிந் திசையாத்

துணைவன் துணைவி தோழி செவிலி

யிணையெனும் பாங்கன் பாணன்என் றிவராற்

கொள்கையின் வரூங்குறிப்புரைத் தாகும்"14

என்ற நூற்பாவின் மூலம் உள்ளுறையின் முழு விளக்கமாக அல்லாமல் தொல்காப்பியரின் சூத்திரத்தை விளக்குவதாகவே அமைந்துள்ளன.

குறுந்தொகையில் உள்ளுறை உவம வகைகள்

                களவு, கற்பு எனும் இருவகைக் கைக்கோளும் பற்றி ஒழுகும் அகத்திணை மாந்தர்கள் தாம் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல் மறைவாக நாகரிகமாக ஒன்றனைச் சார்த்தி உள்ளுறையாகக் கூறுமிடத்து அவர் கருதிய பொருளைத் திரிபின்றித் தோற்றுவிக்கும் மரபினையுடைய உள்ளுறையின் வகைகளை,

"உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக்

கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே"15

எனும் தொல்காப்பிய நூற்பாவில் உடனுறை உள்ளுறை, உவம உள்ளுறை, சுட்டு உள்ளுறை, நகை உள்ளுறை, சிறப்பு உள்ளுறை என உள்ளுறையின் ஐந்து வகைகளும் கேடில்லாத மரபின் அடிப்படையில் அமையும் என்பதைக் 'கெடலரு மரபின்' என்னும் தொடர் உணர்த்துவதனை அறியலாம்.

உடனுறை உள்ளுறை

                உடனுறை உள்ளுறையாவது 'உடன் உறைவது ஒன்றைச் சொல்ல அதனால் பிறிதொருப் பொருள் விளங்குவது' என்பார் இளம்பூரணர். ஆனால், நச்சினார்க்கினியர் இறைச்சி எனப்படும் குறிப்புப் பொருளே உடனுறை உள்ளுறை என விளக்கம் அளிக்கின்றார்.

                குறுந்தொகையில் அமைந்துள்ள 401 பாடல்களில் உடனுறை உவமம் 8 இடங்களில் பயின்று வந்துள்ளன. இதில் தலைவி கூற்றில் பாடல் எண்.187, 313, 320 ஆகிய மூன்று இடங்களிலும், தோழி கூற்றில் பாடல் எண்.74, 303, 317, 351, 373 ஆகிய ஐந்து இடங்களிலும் பயின்று வந்துள்ளன.

                 தலைவன் தலைவியை சந்திக்க தோழியின் உதவியை நாடுகின்றான். தோழியும் தலைவனின் பண்பு நலன்களையெல்லாம் எடுத்துக் கூறி, தலைவனை சந்திக்குமாறு தலைவியிடம் எடுத்துக் கூறுவதனை,

"விட்ட குதிரை விசைப்பி னன்ன

விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்"16

எனும் குறிஞ்சி திணைப் பாடலில் அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழுகின்ற எழுச்சியைப் போன்று, வளைத்துப் பின் விட்டதனால் வானத்தைத் தொடுகின்ற பசுமையான மூங்கில்கள் நிறைந்த மலைநாட்டின் தலைவன். நாம் அவனை நினைத்து உடல் மெலிவதை அறியாத அவனும் உன்னோடு கூடி மகிழும் இன்பத்தை விரும்பி, வெயிலின் வெப்பத்தால் தாங்க முடியாத காளை போன்று உடல் மெலிந்தான் என்று கூறும் வெளிப்படையான பொருளின் உள்ளேயுள்ள குறிப்புப்பொருளாவது வளைக்கும் பொழுது வளைந்தாலும் இயல்பாகவே வானத்தை நோக்கி வளரும் உயர்ந்த மூங்கிலைப்போல, தலைவனும் நம் நலனை விரும்பி நம்மிடையே பணிந்து நின்றாலும் இயல்பாகவே தலைமைப் பண்பு உடையவன் எனும் உடனுறையும் பொருளும் உண்டு என்பதனை அறியலாம்.

உவம உள்ளுறை

                உவம உள்ளுறை என்னும் உள்ளுறை உவமையின் வகையானது 'உள்ளுறை உவமம்' என்று அழைக்கப்படும். உவமையினைச் சொல்ல அதனால் உவமிக்கப்படும் பொருள் தோன்றுவது17 என்று இளம்பூரணர் விளக்கியுள்ளார். இக்கருத்தினையே நச்சினார்க்கினியரும் ஏற்றுக் கொள்கிறார். இந்த உள்ளுறை உவமம் 'உவமப்போலி' என்றும் அழைக்கப்படும் என்பதனை,

"பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி

முன்ன மரபிற் கூறுங் காலைத்

துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே"18

 

"உவமப் போலி ஐந்தென மொழிப"19

என்னும் நூற்பாவிற்கு உரை கூறும் இளம்பூரணர், "இதுவுமோர் உவமை விகற்பங்கூறுதல் நுதலிற்று" எனவும், "உவமையைப் போன்று வருவன உவமப்போலி" என்று விளக்கம் அளிப்பர். ஆனால் பேராசிரியர் உவமப்போலியை 'உள்ளுறை உவமை' என்றே கருதுகிறார். இவ்வுமப் போலியாகிய உள்ளுறை உவமம் ஐந்து வகைப்படும் என்பதனை,

"தவலருஞ் சிறப்பின் தன்மை நாடின்

வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்

பிறப்பினும் வரூஉம் திறத்தியல் வென்ப"20

எனும் நூற்பாவில் உவமப் போலியின் வகைகளாக வினை உவமப்போலி, பயன் உவமப் போலி, உறுப்பு(மெய்) உவமப்போலி, உரு(நிறம், பண்பு) உவமப்போலி, பிறப்பு உவமப்போலி என ஐந்து வகையான உவமப்போலியை குறிப்பிடுகின்றார்.

                குறுந்தொகையில் உவம உள்ளுறை  25 இடங்களில் பயின்று வந்துள்ளன. இதில் வினை உவமப்போலி 17 இடங்களிலும், பயன் உவமப் போலி 7 இடங்களிலும், மெய் உவமப் போலி ஓரிடத்தில் மட்டுமே காணப்படுகின்றன. உரு உவமப் போலியும், பிறப்பு உவமப் போலியும் பாடலில் இடம்பெறவில்லை.

வினை உவமப் போலி

                வினை உவமப் போலி என்பது, 'செயலின் அடிப்படையில் அமைந்த உள்ளுறை உவமம்' என்பதைக் குறிக்கிறது. இது 17 இடங்களில் காணப்படுகின்றன. இதில் தலைவி கூற்றில் பாடல் எண் 54, 91, 125, 134, 170, 175, 181, 201, 239 ஆகிய ஒன்பது இடங்களிலும், தோழி கூற்றில் பாடல் எண் 42, 90, 117, 166, 338, 343, 346 ஆகிய 7 இடங்களிலும், காதற் பரத்தை பாடல் எண் 164 என்ற ஓரிடத்திலும் பயின்றுவந்துள்ளன.

             மணம் செய்து கொள்ளாமல் காலம் நீட்டித்ததால், கவலையுற்ற தலைவிக்கு அவளைத் தேற்றும் முகமாக, தலைவன் கேட்குமாறு தோழி கூறுவதாக அமைந்த பாடலில்,

 

"மங்குதல் மாமழை வீழ்ந்தெனப் பொங்கு மயிர்க்

கலைதொட  இழுக்கிய பூநாறு பலவுக்கனி

வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்

குன்ற நாடான் கேண்மை"21

எனும் இப்பாடலில் மலை, பலாப்பழம் போன்றன குறிஞ்சி நிலக் கருப்பொருட்களாக அமைகின்றன. இரவில் மலைப்பக்கத்தில் இடியுடன் கூடிய பெரும் மழையால், அடர்ந்த மயிரையுடைய ஆண் குரங்கு தீண்டியதால் நழுவிய மணமிக்க பலாப்பழத்தை, மலையின் பக்கத்தில் விழும் அருவி, மக்கள் நீருண்ணும் துறைக்கு கொண்டுவருகின்ற குன்றுகள் உள்ள நாட்டின் தலைவன் என்பது வெளிப்படையான பொருள். இவற்றில் உள்ள உள்ளுறை பொருளாவது இரவில் பெய்த பெரும் மழையினால் குரங்கு தீண்டிய பலாப்பழம் ஊர் மக்கள் நீருண்ணும் துறைக்கு சேர்ந்தது என்பது களவில் தலைவனோடு இருந்த நட்பு இப்பொழுது ஊர்மக்கள் பலரும் அறியும் வகையில் அலராக மாறியது என்று உள்ளுறைப் பொருளாக அமைந்துள்ளன.

                இதில் குரங்கு தலைவனுக்கும், பலாப்பழம் தலைவிக்கும், பலாப்பழம் நீர்துறைக்கு வருதல் தலைவனோடு இருந்த நட்பு அலராக மாறுதல் என உவமையாக வந்துள்ளமையை அறியலாம். இதில் 'பலாப்பழம் நீர்துறைக்கு வருதல்' என்பது தலைவன் தலைவியரின் களவொழுக்கம் ஊர் மக்களால் அலராகத் தோன்றுதல் எனும் வினையின் அடிப்படையில் உள்ளுறை அமைந்துள்ளதையும் அறிய முடிகின்றது.

பயன் உவமப் போலி

                நன்மை, தீமை இவற்றின் அடிப்படையில் வரும் 'பயன் உவமப் போலி' 7 இடங்களில் பயின்று வந்துள்ளன. தலைவி கூற்றில் பாடல் எண் 38, 344, 401 ஆகிய மூன்று இடங்களிலும், தோழி கூற்றில் பாடல் எண் 51, 333, 342, 379 ஆகிய நான்கு இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.

                 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற ஔவையாரின் வாக்கிற்கு ஏற்ப திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்ற தலைவன் குறித்த பருவத்தில் வராததால், தலைவி தன் ஆற்றாமையை தோழிக்கு எடுத்துரைப்பதனை,

"கான மஞ்ஞை யறையீன் முட்டை

வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை என்றும்

நன்றுமன் வாழி தோழி"22

எனும் குறிஞ்சி திணைப் பாடலில் மயில், மலை போன்றவை கருப்பொருட்களாக அமைகின்றன. தலைவி, தோழியிடம் காட்டிலுள்ள மயில் பாறையில் ஈன்ற முட்டைகளை வெயிலில் விளையாடும் முசுவின் (குரங்கு) குட்டிகள் உருட்டும் மலைநாட்டினுடைய தலைவன் எனக் கூறுவது வெளிப்படையான பொருள். இதில் உறையும் குறிப்புப் பொருளாவது, குரங்குக் குட்டிகள் மயிலின் முட்டையை உருட்டி விளையாடுவதால் முட்டை உடைந்து அழியக்கூடும். அதுபோல் தலைவனுடைய பிரிவால் தலைவியின் காதல் முறியக்கூடும் என்று உள்ளுறையாக அமைந்துள்ளன.

                இப்பாடலில் மயில் தலைவனுக்கும், மயிலின் முட்டை தலைவிக்கும், குரங்குக் குட்டிகள் ஊர் மக்களுக்கும், முட்டையை உருட்டுதல் ஊராரின் பேச்சுக்கும் உவமையாக இடம் பெற்றுள்ளன. இதில் தலைவியின் பிரிவுத் துன்பத்தை வெளிப்படுத்துவதால் இது 'பயன் உவமப்போலி'க்குச் சான்றாக அமைகின்றது.

 மெய் உவமப் போலி

வடிவம், அளவு இவற்றின் அடிப்படையில் வரும் மெய் உவமப் போலி ஓரிடத்தில் மட்டுமே இடங்களில் பயின்று வந்துள்ளன. இதில் தலைவி கூற்றில் மட்டுமே பாடல் எண் 36 என்ற ஓரிடத்தில் இடம்பெற்றுள்ளன.

தலைவன் திருமணத்திற்காக பொருள் தேடச் சென்ற காலத்தில் அப்பிரிவினால் தலைவியின் நிலைக் கண்டு வருந்திய தோழியை நோக்கி, முன்பு தலைவன் பிரியமாட்டேன் என்று உறுதிமொழி அளித்து இப்பொழுது பிரிந்துச் சென்றதால் உண்டான துன்பத்தை நான் பொறுத்துக் கொண்டு இருக்க நீ வருந்துவது முறையன்று என கூறுவதனை,

"துறுக லயலது மாணை மாக்கொடி

துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்"23

என்னும் குறிஞ்சித் திணைப் பாடலில் பாறை, களிறு, மலை போன்றவை கருப்பொருட்களாக அமைகின்றன. உருண்டைக் கல்லின் அருகில் உள்ள மாணை என்னும் கொடியானது உறங்குகின்ற ஆண் யானையின் மீது படரும் குன்றுகளை வெளிப்படையான பொருளின் உள்ளேயுள்ள குறிப்புப் பொருளாவது, கொடியானது பாறை என்று நினைத்து யானையின் மீது படர்ந்தது. உறக்கம் நீங்கிய யானை சென்றதால் பற்றுக்கோடுயின்றி இருத்தலைப் போல் தலைவன் தன்னோடு இருந்தக் காலத்தில் அவன் கூறிய உறுதிமொழிகளை உண்மையென்று மகிழ்ந்திருந்த யான் அவனுடைய பிரிவை நினைத்து இப்பொழுது வருந்துதல் முறையன்று என தோழியை தலைவி தேற்றுவதாக அமைந்துள்ளதை அறியலாம்.

        இதில் யானையை தலைவனுக்கும், மாணை என்னும் கொடியினை தலைவிக்கும், கொடியானது பற்றுக் கோடின்றி இருத்தலுக்கு தலைவனை பிரிந்து வருந்தும் தலைவிக்கும் உவமையாகக் கொள்ளலாம். மேலும் ஆண் யானைக்கு பெரிய குண்டுக்கல்லின் தோற்றம் உவமையாக வந்துள்ளமையால் இது 'மெய் உவமப்போலிக்கு' சான்றாக அமைகின்றன.

சுட்டு உள்ளுறை உவமம்

சுட்டு என்பது 'ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருளை வெளிப்படுத்துதல்' என்று இளம்பூரணர் சுட்டு உள்ளுறைக்கு விளக்கம் அளிக்கின்றார். ஆனால் நச்சினார்க்கினியர் சுட்டு உள்ளுறையை இரண்டு வகையாகக் கொள்கிறார். முதல் வகை 'உடனுறை உவமும் அன்றி நகையும் சிறப்பும் பற்றாது வாளாது ஒன்று நினைத்து ஒன்று சொல்வன' என்றும், இரண்டாவது 'அன்புறு தகுந இறைச்சியும் சுட்டல்என்று குறிப்பிடுகின்றார். இதில் முதல் வகைச் சுட்டு உள்ளுறை, உவமம் ஐந்துனுள் ஒன்று என்றும், இரண்டாம் வகை இறைச்சியின் பாற்படும் என்றும் உரை விளக்கம் அளிப்பதனை அறியலாம்.

குறுந்தொகையில் சுட்டு உள்ளுறை 9 இடங்களில் பயின்று வந்துள்ளன. அவற்றுள் தலைவி கூற்றில் பாடல் எண்; 25, 50, 352, 380, 391 ஆகிய ஐந்து இடங்களிலும், தோழி கூற்றில் பாடல் எண்; 18, 115, 328, 332 ஆகிய நான்கு இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.

                 தலைவன் இரவில் யாருக்கும் தெரியாமல் தலைவியைச் சந்தித்து மீளும் பொழுது, தோழி அவனிடம் தலைவியின் காமம் அவளால் தாங்குதற்கு இயலாது. ஆகையால், விரைவில் அவளை மணம் செய்துக் கொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்று எடுத்துரைப்பதனை,

"வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிது"24

என வரும் குறிஞ்சி திணைப் பாடலில் சிறு மூங்கில்கள் நிறைந்த வேலிகளை உடைய இடத்தில், வேரிலே பழங்களைக் கொண்டிருக்கும் பலா மரங்கள் நிறைந்த மலையிலே உள்ள பலாமரத்தின் சிறிய கொம்பிலே பெரிய பழம் தொங்குவதைப் போல் தலைவியினது உயிரானது மிகச் சிறியது. ஆனால், இவளிடமுள்ள காமநோய் மிகப் பெரியது என்ற வெளிப்படையான பொருளினுள்ளே உள்ள குறிப்பு பொருளாவது, தலைவனுடைய ஊரில் வேரில் பழுக்கின்ற வேர் பலா மரங்கள் மூங்கில் வேலிகளுடன் பாதுகாப்பாக இருக்கின்றன. இப்பழங்கள் வேரில் பழுத்தால் யாவருக்கும் தெரியாமலும், கீழே விழுந்து சிதறும் வாய்ப்பு இல்லாததாகவும் உள்ளன. ஆனால், தலைவியின் ஊரில் உள்ள பலாமரங்கள் கொம்புகளில் பழுப்பதால் அவை கீழே விழுந்து சிதறக் கூடும். தலைவியின் காதலோ சிறிய கொம்பிலே தொங்கும் பாதுகாப்பில்லாத பெரிய பலாப்பழத்தைப் போன்றது. பாதுகாப்பில்லாததால் அவளை பிறரால் திருமணம் செய்து கொள்ள கூடும். பழத்தின் சுமை தாங்காமல் சிறிய கொம்பு முறிவதைப் போல் அவள் இறக்கவும் நேரிடும். முதிர்ந்த பழம் விழுந்து சிதறினால் அதன் மணம் எங்கும் பரவுவதைப் போல் அவளின் காதலைப் பற்றி ஊரில் உள்ளோர் அலர் கூறத் தொடங்குவர் என்பதை உள்ளுறையாக தன் சொல்லாற்றலால் தோழி வெளிப்படுத்துவதனை அறியலாம்.

                இப்பாடலில் 'பலா' வினைச் சுட்டிக் காட்டி தலைவியின் நிலையினை தலைவனுக்கு எடுத்துக்கூறி திருமணத்தை வலியுறுத்துவதால் இது 'சுட்டு உள்ளுறை' உவமத்திற்குரிய சான்றுகளாக அமைகின்றன.

நகை உள்ளுறை உவமம்

                'நகையாவது நகையினால் பிறிதொரு பொருள் உணர நிற்றல்' என்று இளம்பூரணரும், 'நகைப்பதன் மூலம் ஒரு கருத்தைப் புலப்படுத்துவது, அதாவது நகைச்சுவைபடப் பேசுவதன் மூலம் ஒரு கருத்தைப் புலப்படுத்துவது நகையுள்ளுறையாம்' என்று நச்சினார்க்கினியரும் விளக்கம் அளிக்கின்றனர்.

                நகை உள்ளறை பாடல்களில் 4 இடங்களில் பயின்று வந்துள்ளன. இதில், தோழி கூற்றில் பாடல் எண் 26, 111, 236 ஆகிய மூன்று இடங்களிலும், தலைவி கூற்றில் பாடல் எண் 349 என்ற ஓரிடத்திலும் இடம் பெற்றுள்ளன.

                 தலைவன் திருமணத்தை நீட்டித்த காரணத்தினால் தலைவியின் உடலில் வேறுபாடு தோன்றியதைக் கண்ட தாய் முதலானோர் வெறியாட்டு எடுக்க முயன்றதனை தலைவன் கேட்குமாறு தோழி எடுத்துரைப்பதனை,

"கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன

கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்

வல்லே வருக தோழிநம்

இல்லோர் பெருநகை காணிய சிறிதே"25

எனும் குறிஞ்சி திணைப் பாடலில் தும்பிக்கையை மறைத்துக் கொண்டு படுத்திருக்கும் சிறிய யானையைப் போல் பாறை காட்சி அளிப்பதை ஆராய்ந்து அறிபவர்களுக்குத்தான் தெரியும். அதுபோல தலைவியின் வேறுபட்ட நிலைக்கு தலைவன் தான் காரணம் என்பதனை உணராமல் தாய் முதலானோர் முருகனை அழைத்து வெறியாட்டம் நடத்துவது கட்டுவிச்சியை அழைத்துக் குறிசொல்லச் சொல்வது போன்றன நகைப்பிற்குரிய செயலாததால் இது நகை உள்ளுறை ஆயிற்று.

சிறப்பு உள்ளுறை

                ஒன்றைச் சிறப்பித்துக் கூறுவதன் மூலம் வேறொரு பொருள் குறிப்பாகக் தோன்றுவது சிறப்பு உள்ளுறையாகும். 'இதற்குச் சிறந்தது இது எனக் கூறுவதனால் பிறிதோர் பொருள் கொள்ள வைப்பது' என்று இளம்பூரணரும், 'சிறப்பு உள்ளுறை என்பது உவம உள்ளுறையில் வரும் கருப்பொருளுக்குச் சிறப்புக் கொடுத்து நிற்பது' என்று நச்சினார்க்கினியரும் விளக்கம் அளிக்கின்றார். இதற்கு எடுத்துக்காட்டு இளம்பூரணர் உரையில் காணப்படவில்லை. எனினும் அடுத்து வரும் நூற்பாவில்,

"அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே"26

எனும் நூற்பா சிறப்பு உள்ளுறையினை விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும், இது நான்கு வகைப்படும் என்பதனை,

"சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு

அனைநால் வகையும் சிறப்பொடு வரும்"27

என்ற நூற்பாவில் 'சினம் பேதைமை நிம்பிரி நல்குரவு என்னும் சொல்லப்பட்ட இந்நான்கு வகையும் ஏதேனும் ஒரு பொருளைச் சிறப்பித்தலினால் வரும்' என்பர் இளம்பூரணர். இவருடைய உரையையே பேராசிரியரும் ஏற்கின்றார். சினம் - கோபம் (பேதைமை- அறிவின்மை), நிம்பிரிபொறாமை, நல்குரவுவறுமை, முன்னர் 'சிறப்பு' என்ற சொல் மிகுதி என்ற பொருளிலே கையாளப்பட்டு வந்துள்ளன.

                குறுந்தொகையில் சிறப்பு உள்ளுறை 8 இடங்களில் பயின்று வந்துள்ளன. இதில் தலைவி கூற்றில் பாடல் எண் 105 (பேதைமை), 293 (சினம்), ஆகிய இரண்டு இடங்களிலும், தோழி கூற்றில் பாடல் எண் 9 (சினம்), 10 (சினம்), 95 (நல்குரவு), ஆகிய மூன்று இடங்களிலும், பாங்கன் கூற்றில் பாடல் எண் 78 (பேதைமை) என்ற ஓரிடத்திலும், காதற் பரத்தை கூற்றில் பாடல் எண் 8 (நிம்பிரி) என்ற ஓரிடத்திலும், இற்பரத்தை கூற்றில் 364 (நிம்பிரி) என்ற ஓரிடத்திடத்திலும் பயின்று வந்துள்ளன.

சினம்

                பரத்தையரிடமிருந்து பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியைப் பார்த்து, 'தலைவன் இங்கு இருப்பது பரத்தைக்குத் தெரிந்தால் அவளே இங்கு வந்து அவனை அழைத்துச் செல்வாள்' என்று கூறுவதனை,

"கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளுர்ப்

பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்

ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்

………………………………

கொழுநற் காணிய அளியேன் யானே"28

எனும் மருதத் திணைப் பாடலில் ஆதி அருமனுக்குரிய பழைமையான ஊரில் கள் குடிக்க வருபவர்கள் கள்ளைக் குடித்துவிட்டுத் திரும்பும் பொழுது அங்குள்ள பாளை ஈன்ற காய்களைத் கொண்ட பனையின் நுங்கையும் கொண்டு செல்பவர்களைப் போல தலைவனைக் காணும் பொருட்டு பரத்தை இங்கு வருவாள் என்பது பாடலின் வெளிப்படையான பொருள். இதிலுள்ள குறிப்புப் பொருளாவது தலைவனைக் காண வரும் பரத்தை அவனைக் கொண்டு செல்வதோடு மட்டும் அல்லாமல் தன்னை இழிவுப்படுத்திச் செல்வாள் என்று உள்ளுறையாக எடுத்துரைப்பதனை அறியலாம்.

இதில் பரத்தை தன்னுடைய கணவனைக் காண வந்து அவனை கொண்டுச் சென்றாள் என்பதே தலைவிக்கு மிகுந்த சினத்தை ஏற்படுத்தியது. இதில் தன்னை இழிவுப்படுத்தினால் என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதால் இது சினத்தின் அடிப்படையில் அமைந்த சிறப்பு உள்ளுறை ஆகும்.

நல்குரவு (வறுமை)

                பரத்தையரிடமிருந்து பிரிந்து வந்த தலைவன் மனைவியின் ஊடலைத் தணிக்க தோழியின் உதவியை நாடி நிற்கின்றான். இதைக் கண்ட தோழி உன் வளமான வாழ்க்கைக்கு காரணமான தலைவியை மறந்து வாழ்கின்றாய் என்று இடித்துரைப்பதனை,

"விழவொடு வருதி நீயே யிஃதோ

ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை

பெருநலக் குறுமகள் வந்தென

இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரோ"29

எனும் மருதத் திணைப் பாடலில் தழையலங்காரத்தால் பொலிவு பெற்ற பரத்தையர் கூட்டத்தோடு நெருங்கி விழாவிற்குரிய அடையாளங்களோடு வருகின்றாய். இந்த ஊரிலுள்ளோர் இதற்கு முன் நீ ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் உணவையுடைய, செல்வச் சிறப்பில்லாத வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த உனக்கு, மிகுந்த அன்புடைய தலைவி மனைவியாக வந்ததால் இப்பொழுது விழாக்கோலம் பூண்டது போன்ற வாழ்க்கை உடையதாயிற்று என்று கூறினர். இப்படி இருக்க நீ அவளைப் புறக்கணித்து வாழ்கின்றாய் என்று இடித்துரைத்து வாயில் மறுப்பதனை அறியலாம்.

                இதில் தலைவியினால் செல்வச் சிறப்படைந்த தலைவனின் 'வறுமையை' மிகுதிப்படுத்திக் கூறியதால் வறுமையின் அடிப்படையில் அமைந்த சிறப்பு உள்ளுறைக்கு உதாரணமாயின.

பேதைமை (அறியாமை)

தலைவனின் உடல் வேறுபாட்டிற்கு ஒரு பெண்ணின் மீது கொண்ட காதல் என்பதை உணர்ந்த பாங்கன் (தலைவனின் நண்பன்) 'காமம் தகுதி இல்லாதவரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று' என்று தலைவனை இடித்துரைப்பதனை,

"சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப

நோதக் கன்றே காமம் யாவதும்

நன்றென உணரார் மாட்டும்

சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே"30

எனும் குறிஞ்சி திணைப் பாடலில் பெரிய மலையின் உச்சியிலிருந்து விழுகின்ற வெண்மையான அருவியானது நல்ல அறிவு வாய்க்கப்பெற்ற கூத்தர்களது முரசைப்போல ஒலிக்கும் மலைநாட்டை உடைய தலைவனே, காமமானது சிறிதும் நன்மையென அறியாதவர்களிடத்தும் பிறக்கும் அறிவின்மை உடையது என்பது பாடலின் வெளிப்படையான பொருளினுள் உள்ள குறிப்பு பொருளாவது, உயர்ந்த மலையினிடத்தில் பிறந்த அருவியானது எவ்வாறு தாழ்ந்த இடத்தில் விழுகின்றதோ அதைப் போன்று நல்ல பெருமையும் அறிவையும் இழந்து காமம் கொண்டான் என்பது உள்ளுறையாக இடம் பெற்றுள்ளதை அறியலாம்.

இதில் 'காமம் பேதமையுடையது' என்று மிகுதிப்படுத்தி கூறியதால் இது சிறப்பு உள்ளுறையாக அமைகின்றன.

நிம்பிரி (பொறாமை)

தலைவி தன்னைப் புறங் கூறினாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவளின் பாங்காயினர் கேட்கக்  கூறுவதனை,

"கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

……………………………….

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே"31

என்ற மருதத் திணைப் பாடலடிகளில் வயலருகில் உள்ள மா மரத்திலிருந்து தானாக விழுகின்ற பழங்களைக் கவ்வுகின்ற வாளை மீன்கள் வாழும் மருத நிலத் தலைவன் என்னுடன் இருக்கின்ற பொழுது என்னை மகிழ்விக்கும் இனிய சொற்களை பேசி சென்றான். ஆனால் இப்பொழுது தன் வீட்டில் உள்ளவர்களுக்கு கண்ணாடியில்  தோன்றுகின்ற பாவையைப் போன்று, தன் புதல்வனின்  தாய்க்கு (மனைவி) விரும்பியவற்றைச் செய்வான் என்பது பாடலின் வெளிப்படையான பொருள். இதிலுள்ள குறிப்புப் பொருளாவது மரத்திலிருந்து விழும் பழங்களைக் கவ்வும் வாளை மீன் என்பது எவ்வித முயற்சியும் இல்லாமல் தலைவனை எளிதில் இன்புற்ற  பரத்தையரின் செயலைக் குறிக்கிறது. மேலும் தலைவனின் மனைவியை 'மனைவி' என்று சொல்லாமல் 'தலைவனுடைய புதல்வனின் தாய்' என்று கூறுவது பரத்தைக்கு தலைவி மீதுள்ள பொறாமை  உள்ளுறையாக இடம் பெற்றுள்ளதை அறியலாம்.

ஆய்வின் முடிவுரை

Ø  புலவர்கள் பொருள் புலப்பாட்டிற்காக உவமையைப் போன்று உள்ளுறையையும் செய்யுளில் சிறப்பாகக் கையாண்டுள்ளனர் என்பதை அறியலாம்

Ø  உவமை புலப்பட்டும் உவமிக்கப்படும் பொருள் புலப்படாது அதனுள்  உட்பொருளாகத் தோன்றுவதே உள்ளுறை உவமையின் தன்மை என்பதை அறிய முடிகின்றது.

Ø  அகத்திணையியலில் 'உள்ளுறை உவமம்' என்றும், பொருளியலில் 'உள்ளுறை' என்றும், உவமவியலில் 'உவமப் போலி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ø  உள்ளுறை உவமம் அகப்பாடலில் வரும் குறிப்புப் பொருளாகும். இது ஏனை உவமம் போன்று கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இடம் பெற்றாலும், உள்ளுறை உவமம் தெய்வம் நீங்கிய பிற கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அமையும்.

Ø  உள்ளுறை ஒரு பொருளைத் தெளிவாக விளக்குவதற்கு மட்டுமல்லாமல் எல்லையற்ற இன்பத்தைத் தருவதாகவும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது என்பதைக் காணமுடிகின்றது.

Ø  குறுந்தொகையில் உடனுறை உள்ளுறை, உவம உள்ளுறை, சுட்டு உள்ளுறை, சிறப்பு உள்ளுறை ஆகிய ஐந்து வகையான உள்ளுறைகளும் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் உவம உள்ளுறையே பெரும்பான்மையான இடங்களில் பயின்று வந்துள்ளன. மற்ற உள்ளுறை வகைகள் சிற்சில இடங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

Ø  குறுந்தொகையின் 401 பாடல்களில் 55 இடங்களில் உள்ளுறை பயின்று வந்துள்ளது. இதில் உடனுறை உள்ளுறை 8 இடங்களிலும், உவம உள்ளுறை 26 இடங்களிலும், சுட்டு உள்ளுறை 9 இடங்களிலும், நகை உள்ளுறை 4 இடங்களிலும், சிறப்பு உள்ளுறை 8 இடங்களிலும் பயின்று வந்துள்ளது.

Ø  நகை உள்ளுறை பயின்று வந்துள்ள பாடல்களில் 4 இடங்களில் தோழி கூற்றில் 3 இடங்களிலும், தலைவி கூற்றில் 1 இடத்திலும் பயின்று வந்துள்ளது.

Ø  சிறப்பு உள்ளுறை பயின்று வந்துள்ள பாடல்களில் 8 இடங்களில் தலைவி கூற்றில் 2 இடங்களிலும் (பேதமை-1, சினம்-1), தோழி கூற்றில் 3 இடங்களிலும் (சினம்-2 நல்குரவு-1), பாங்கன் கூற்றில் 1 இடத்திலும் (பேதமை), காதற் பரத்தை கூற்றில் 1 இடத்திலும் (நிம்பிரி), இற்பரத்தை கூற்றில் 1 இடத்திலும் (நிம்பிரி) சான்றுகள் பயின்று வந்துள்ளன.

Ø  குறுந்தொகை பாடல்களில் பயின்று வந்துள்ள உள்ளுறையை ஆராயும் பொழுது, பெரும்பாலும் தலைவனின் பரத்தமையை கண்டிப்பதற்கும், திருமணத்தை வலியுறுத்துவதற்காகவும்  சிற்சில இடங்களில் தலைவனின் தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தவும் உள்ளுறை இடம் பெற்றுள்ளது. இதற்குக் கருப்பொருட்களின் அடிப்படையில் அமைந்த இயற்கை வருணனைகள் கவிஞர்களுக்குப் பெரிதும் கை கொடுக்கின்றன என்பதை இவ்வாய்வின் மூலம் அறியமுடிகின்றது.

சான்றெண் விளக்கம்

1.       கா.காளிமுத்து, தொல்காப்பியம் அதன் இலக்கியக் கொள்கைகளும் குறுந்தொகையும், .17

2.       தொல்.அகத்.நூ.46

3.       .சிவலிங்கனார், தொல்காப்பியம் கூறும் உள்ளுறையும், இறைச்சியும், .6

4.       .சுப்புரெட்டியார், அகத்திணைக் கொள்கைகள், .455

5.       மு.அருணாசலம் பிள்ளை, தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளம், .342

6.       தொல், அகத்.நூ.47

7.       மேலது, நூ.18

8.       .சுப்புரெட்டியார், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, .218

9.       தொல்.அகத்.நூ.48

10.    இளம்பூரணர் உரை, தொல்.அகத். .459

11.    நம்பி.அகம்.நூ.238

12.    தண்டியலங்காரம், நூ.52

13.    எஸ்.கே.இராமராஜன், தொல்காப்பியம் உள்ளுறையும் இறைச்சியும், .103

14.    மாறனலங்காரம், நூ.123

15.    தொல்.பொருளி.நூ.48

16.    குறுந்.பா.எண்.74

17.    இளம்பூரணர் உரை, தொல்.பொருள். .242

18.    தொல்.உவம.நூ.23

19.    மேலது, நூ.24

20.    மேலது, நூ.25

21.    குறுந்.பா.90

22.    மேலது, பா.38

23.    மேலது, பா.36

24.    மேலது, பா.18

25.    மேலது, பா.111

26.    தொல்.பொருளி.நூ.47

27.    மேலது, நூ.49

28.    குறுந்.பா.எண்.293

29.    மேலது, பா.எண்.295

30.    மேலது, பா.எண்.78

31.  மேலது, பா.எண்.8

துணை நின்ற நூல்கள்

1.       குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர்..வே.சாமிநாதையர், டாக்டர், .வே.சா.நூல் நிலையம், சென்னை, 2018.

2.       தொல்காப்பியம் பொருளதிகாரம் - மூலமும் உரையும், இளம்பூரனர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மறுபதிப்பு, 1982.

3.       தொல்காப்பியம் உரைவளம் - பொருளதிகாரம் உவமவியல், .சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992.

4.       சிவலிங்கனார். ., தொல்காப்பியம் கூறும் உள்ளுறையும் இறைச்சியும், உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை, 1985.

5.       சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய கொள்கைகள்), தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2010.

6.       பாலசுந்தரம். . (..), தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, அகத்திணையியல் புறத்திணையியல், தஞ்சை, முதற்பதிப்பு,1989.

7.       ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் 1985, மதுரை, நல்ல குறுந்தொகை, கா.காளிமுத்து அவர்களின் கட்டுரை, 1981.

8.       குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, மனோன்மணி சண்முகதாஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.

9.       குறுந்தொகை - தமிழ்க்காதல் (கற்றுடைத்துக் கோத்தது), கு.மா.பாலசுப்பிரமணியம், முதற் பதிப்பு, பாரதி புத்தகாலயம், சென்னை, 2007.

10.    குமரன். இரா., சங்க இலக்கியத்தில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள், அபிநயா பதிப்பகம், தஞ்சாவூர், 2001.

11.    கா.காளிமுத்து, தொல்காப்பியம் அதன் இலக்கியக் கொள்கைகளும் குறுந்தொகையும், பூம்புகார் பதிப்பகம்,முதல் பதிப்பு, 1983.

No comments:

Post a Comment