Search This Blog

Tuesday, December 19, 2023

 

குறுந்தொகையில் ஔவை பாடல்களில் உவமைகள்

திருமதி. செ.சத்யா

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604 304. விழுப்புரம் மாவட்டம்.

மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com

ஆய்வுச் சாரம்

தமிழில் நமக்குக் கிடைத்த முதல் நூலகவும், பலராலும் வாசிக்கப்பட்டு பல ஆய்வுள் மேற்கொள்ளப்பட்ட நூலாகவும் அமைவது தொல்காப்பியமாகும். அக மாந்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உத்தியாக உள்ளுறை, இறைச்சியைப் போன்று உவமையையும் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அவ்வகையில் தொல்காப்பியரால் உவமையின் வகைகளாகச் சுட்டப்படும் வினை உவமம், பயன் உவமம், மெய் உவமம், உரு உவமம், செவியால் அறியப்படும் உவம் ஆகியவை குறுந்தொகையில் ஔவையார் பாடல்களில் பொருளைப் புலப்படுத்தும் உத்தியாக கையாண்டுள்ளதை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.

கருச்சொற்கள்: ஔவையார், உவமை, உவமம், குறுந்தொகை, தொல்காப்பியம்.

முன்னுரை

தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையான நூல் தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் போன்று தமிழின் சிறப்பு வாய்ந்த நூல்களில் ஒன்று திருக்குறள். ஆனால் இந்நூல்களுக்கெல்லாம் இல்லாததொரு சிறப்பு ஔவையின் நூலான ஆத்திசூடிக்கு உண்டு.  ஆத்திசூடிதான் எழுதப் படிக்கத் தொடங்கும் போதே தமிழில் கற்கப்படும் முதல் நூலாகும். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நமக்கு தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் கிடைத்தார். ஆனால் தமிழ்ப் பாட்டி ஔவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டாள்.

பெண்ணியமும் பெண்ணியச் சிந்தாந்தங்களும் பேசிக் கொண்டிருக்கும் இந்நூற்றாண்டில், பெண்ணின் அங்கீகாரத்துக்கும் முக்கியத்துவத்துக்கும் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சங்க காலத்தில்  சத்தமில்லாமல் ஒரு பெண்பாற் புலவர் கோலோச்சி இன்றுவரை தன் பாடல்களின் மூலம் சிரஞ்சீவியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது ஔவை தான்.  சங்க இலக்கிய நூல்களில் உரையாசிரியர்களால் மிகுதியான பாடல்களை(236) மேற்கோளாக  எடுத்தாளப்பட்டுள்ள செவ்வியல் இலக்கிய நூல்களுள் தொன்மையான குறுந்தொகைப் பாடல்களில் ஔவையாரால் பாடப்பெற்ற பாடல்களில் பயின்று வந்துள்ள உவமைகளை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

 ஔவையார்

தமிழ் கூறும் நல்லுலகில் 'ஔவை' என்னும் பெயரை அறியாதவர்கள் யாவரும் இருக்க முடியாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை; பாமர மக்கள் முதல் கற்றரிந்த சான்றோர்கள் வரை ஔவை என்றால் மதிப்போடும் மகிழ்வோடும் கூறி அவரது அறிவுரைகளை எடுத்துக் கூறினர். சங்க காலத்தில் ஔவையார் மிகவும் புகழ்பெற்ற பெண்புலவராகத் திகழ்ந்துள்ளார். ஔவையார் என்னும் பெயரில் பல புலவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளனர். மேலும் சில அறிஞர்கள், ஔவையார் நால்வர் இருந்ததாகவும், அவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாகவும் கருதுகின்றனர். 

மு.அருணாசலம் தான் எழுதிய இலக்கிய வரலாற்றில் ஆறு ஔவையார்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். மு.வரதராசன் தமது இலக்கிய வரலாற்றில் பல ஔவையார்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். "ஔவையார் அனைவருமே வேந்தர்களை விட எளிய வள்ளல்களையே போற்றுபவர்களாகவும், மக்களோடு மக்களாக வாழும் மனப்பாங்கு உடையவர்களாகவும், நன்றியுணர்வு மிக்கவர்களாகவும், நல்லவர்களைப் போற்றியும் அல்லாதவர்களைத் தூற்றியும் அஞ்சாமல் வாழ்ந்தவர்கள்" என்று தமிழண்ணல் குறிப்பிடுவதனை அறியலாம்.

 சங்க கால ஔவையார்

            காலந்தோறும் ஔவையார் புகழ் விளங்கத் தொடங்கி வைத்தவர் சங்ககால ஔவையாரே ஆவார். சோழர் கால நீதிநூல் ஔவை ஒப்பற்ற பெரும்புகழுக்கு உரியவராக விளங்கினாரெனினும், அப்பெரும்புகழைத் தோற்றுவித்தவர் சங்ககால ஔவையாரே ஆவார். இவர் சங்க இலக்கியத்தில் பாடியனவாக மொத்தம் 59 பாடல்கள் கிடைக்கின்றன. அவற்றுள் அகப் பாடல்கள் 26, புறப்பாடல்கள் 33 பாடல்களாகும். எட்டுத்தொகையில் கலித்தொகை, பரிபாடல், ஐங்குநுறூறு, பதிற்றுப்பத்து, தொடர் பாடல்களாகிய பத்துப்பாட்டில் இவரின் பாடல்கள் காணப்படவில்லை. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய நான்கு தொகை நூல்களில் மட்டுமே பாடல்கள் காணப்படுகின்றன.

அகப் பாடல்களில் குறுந்தொகையில் 15 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களுமாக 26 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பாலைத் திணையில் 9 பாடல்களும், முல்லைத் திணையில் 5 பாடல்களும் மற்ற குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய திணைகளில் முறையே 4 பாடல்களும் பயின்று வந்துள்ளன. கூற்று வரிசையில் தலைவிக் கூற்றில் 15 பாடல்களும், தோழிக் கூற்றில் 6 பாடல்களும், தலைவன் கூற்றில் 3 பாடல்களும், செவிலி, கண்டோர் கூற்றில் முறையே 1 பாடலும் இடம் பெற்றுள்ளன.

            புறப்பாடல்களில் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றி 22 பாடல்களும், அவன் மகன் பொகுட்டெழினி பற்றி 3 பாடல்களும், நாஞ்சில் வள்ளுவனைப் பற்றியும், மூவேந்தர்களும் ஒரே சமயத்தில் ஒருங்கிருக்கக் கண்டபோது அவர்களை வாழ்த்தி பாடியது முறையே 1 பாடலும், பொதுவான திணை, துறை பற்றிய 6 பாடல்களும், திணை அடிப்படையில் வெட்சி 1, கரந்தை 2, தும்பை 6, வாகை 7, பாடாண் 13, பொதுவியல் 4 என இவருடைய புறப்பாடல்கள் யாவையும் போர்த்துறை சார்ந்தனவாகவே அமைந்துள்ளன.

உவமை இலக்கணம்

            உவமை என்பது, ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுமுகமாக, அப்பொருளினுடைய வண்ணம், வடிவம், தொழில், பயன் முதலிய இயல்புகளை நன்கு புலப்படும்படிச் செய்வதாகிய பொருள் புலப்பாட்டு நெறியாகும். இதனை தொல்காப்பியர்,

"வினைபயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்"

(தொல்.உவம.நூ.1)

என்னும் நூற்பா உவமைப் பாகுபாடு பற்றி உணர்த்துகின்றது. 'பாகுபட வருதலாவது, கண் முதலிய பொறிகட்குப் புலனாவனவும் பொறிகட்குப் புலனாகாது மனத்திற்கு புலனாவனவும் என இருவகைப்பட வருதல்' என்று இளம்பூரணர் விளக்கம் அளிக்கின்றார். "ஐம்பொறிக்கண் கட்புலனாகியவற்றுள் வினை, பயன், வடிவம் (மெய்), நிறம் (உரு) என்னும் ஐம்பொறிகளுக்கு புலனாகாதனவாக 'செவியால் அறியப்படும் ஓசை, நாவினால் அறியப்படும் சுவை, மெய்யினால் அறியப்படுவன, மூக்கால் அறியப்படுவன, மனத்தால் அறியப்படுவன ஆகியன" என்று பாகுபட வரும் என்பதற்கான விளக்கத்தினை உரையாசிரியர்கள் வழி அறியலாம். ஆனால் தண்டியாசிரியர் பண்பு, தொழில், பயன் ஆகியவற்றின் காரணமாக உவமை பிறக்கும் என்கிறார். மேலும், அது ஒன்றாகவோ, பலவாகவோ வருகின்ற பொருளோடு பொருந்தும்படி கேட்போர் உணர்ந்து கொள்ளுமாறு ஒப்புமை புலப்படும் வண்ணம் எடுத்துரைப்பதே உவமை அணி என்கிறார். இதனை,

"பண்பும் தொழிலும் பயனும்என் றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த்து

ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை"

(தண்டி.நூ.31)

என்னும் நூற்பாவில் வடிவத்தையும், நிறத்தையும், பண்பினுள் அடக்கி மூன்றாகக் குறிப்பிடுகின்றார். வீரசோழியம், இலக்கண விளக்கம், மாறனலங்காரம், தொன்னூல் விளக்கம், அறுவகை இலக்கணம், குவலயானந்தம் போன்ற பிற்கால இலக்கண நூல்கள் யாவும் தொல்காப்பியர் கூறிய உவமைகளையே விளக்குவதாகவும், விரிவாக எடுத்துரைப்பதாகவும் அமைந்துள்ளன.

குறுந்தொகையில் ஔவை பாடல்களில் உவமை

            சங்க தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 401 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஔவையார்  பாடிய பாடல்களாக  பாடல் எண்கள் 15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388 ஆகிய 15 பாடல்கள் பயின்று வந்துள்ளன. அவற்றுள் பாடல் எண். 28, 39, 158 ஆகிய 3 பாடல்களைத் தவிர்த்து மற்ற 12 பாடல்களில் உவமைகள் பயின்று வந்துள்ளன. மேலும் பாடல் எண்கள்  29, 183, 364 ஆகிய மூன்று பாடல்களில் ஒரே பாடலில் இரு உவமைகள் இடம்பெற்றுள்ள பாடலாகவும் அமைந்துள்ளன.

 வினை உவமம்

            வினையாவது நீட்டல், முடக்கல், விரித்தல், குவித்தல் ஆகிய தொழில் காரணமாக வரும் உவமை 'வினை உவமை'யாகும். குறுந்தொகையில் ஔவையார் பாடல்களில் வினை உவமம் 29(5-7), 91(5-8) ஆகிய 2 பாடல்களில் மட்டும் பயின்று வந்துள்ளன.

            பரத்தையிடமிருந்து மீண்டுவந்த தலைவன் தலைவியினது உடன்பாட்டை வேண்டி நிற்கின்றான். அவன் மீது ஊடல் கொண்டுள்ளத் தலைவி தன் நெஞ்சம் அவனிடமே செல்வதைக் கண்டு புலம்பிக் கூறுவதனை,

"கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி

கொன்முனை இரவூர் போலச்

சிலவா குகந் துஞ்சு நாளே"

(குறுந்.பா.91)

என்னும் மருதத் திணைப் பாடலில் மேகம் போல் கைம்மாறு கருதாத வள்ளல் தன்மை மிகுந்த கையையும், விரைந்து செல்லும் யானைகளையும், நெடிய தேர்களையும் உடைய அதியமான் நெடுமான் அஞ்சியின் அச்சம் தரும் போர்க்களத்தின் அருகில் உள்ள ஊர்மக்கள் எப்படி இரவில் உறங்காமல் இருப்பார்களோ அதுபோல தலைவனை ஏற்றுக் கொண்டால், நீ பலநாட்கள் தூக்கமின்றித் துன்பப்பட நேரிடும் என்று தம் நெஞ்சை நோக்கி தலைவி கூறுகின்றாள். இதில் 'உறக்கமின்றி இருத்தல்' என்ற செயல் பற்றி உவமையாக வந்துள்ளமையால் இது 'வினை உவமை'யாகும்.

 பயன் உவமம்

            தொழிலின் பயனால் ஏற்படும் நன்மை, தீமை ஆகியவை பயன் உவமையாகும். குறுந்தொகையில் ஔவை பாடல்களில் பாடல் எண்கள் 15(2-4), 29(1-4), 43(4-5), 80(4-7), 99(4-6) ஆகிய 5 பாடல்களில் பயன் உவமைகள் பயின்று வந்துள்ளன.

தலைவன், தலைவி களவு வாழ்க்கையை முறையாக வெளிப்படுத்துதல் அறத்தோடு நிற்றல் நிலையாகும். அவ்வகையில் குறுந்தொகையில் தலைவி தலைவனுடன் உடன்போக்குச் சென்ற நிலையினை தோழி செவிலிக்கும், செவிலி அவர்களின் இருவரின் நட்பு உலகறிய உறுதிபெற்ற நிலையினை நற்றாய்க்கும் எடுத்துரைப்பதனை,

"தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர்க் கோசர் நன்மொழி போல"

(குறுந்.பா.15)

என்னும் பாலைத் திணைப் பாடலில் மிகப்பழைய ஆலமரத்தின் அடியின் கண் உள்ள பொதுவிடத்தில் நான்கு ஊரிலுள்ள கோசரது நன்மையுடைய மொழி உண்மையாவதைப் போல, முரசு முழங்கவும், சங்கு ஒலிக்கவும் திருமணம் செய்து கொண்டதால் அவர்களின் மணம் உண்மையாகியது என்று செவிலி நற்றாயிடம் கூறுகின்றாள்.

இதில் தலைவன், தலைவியின் இல்லறச் சிறப்பிற்கு கோசர்களது நன்மையுடைய மொழி உமையாக வந்துள்ளமையால் இது பயன் உவமையாயிற்று.

 மெய் உவமை

            அளவு, வடிவம் காரணமாக வரும் உவமை மெய் உவமை எனப்படும். குறுந்தொகையில் ஔவை பாடல்களில் பாடல் எண்கள் 102(3), 364(5), 388(3), 388(4-5) ஆகிய 4 பாடல்களில் மெய் உவமைகள் இடம் பெற்றுள்ளன.

            பாலை நிலத்தின் கொடுமையை நினைத்துத் தலைவியுடன் தலைவன் உடன்போக்கு மேற்கொள்ள அஞ்சுகிறான் என்பததை அறிந்த தோழி, உம்மோடு சென்றால் தலைவிக்கு பாலை நிலமும் இனியதாகும் என்று எடுத்துரைப்பதனை,

"கோடை ஒற்றினும் வாடா தாகும்

குவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ"

(குறுந்.பா.388)

என்னும் பாலைத் திணைப் பாடலில் கவணைப் போன்ற நுகத்தடிப் பூட்டப்பட்டதால் வருந்தும் உப்புவணிகர்களின் எருதுகள் இழுத்துச் செல்லும் வண்டிகளை வரிசையைத் தொகுத்து நிறுத்தினாற் போல வழியிலுள்ள உலர்ந்த மரக்கிளைகளை, பிளத்தற்கு ஏற்ற வலிமை இல்லாததால், யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற காடுகள் நிறைந்த பாலை நிலத்தின் வழியே உம்மோடு வந்தால் தலைவிக்கு மகிழ்வைத் தரும் என தோழி கூறுவதனை அறியலாம்.

            இதில் பூட்டப்பட்ட  நுகத்தடிக்கு கவண் உவமையாக வந்துள்ளமையால் இது மெய் உவமையாகும்.

உரு உவமை

            வண்ணம் அல்லது நிறம் காரணமாக வரும் உவமை உரு உவமையாகும். குறுந்தொகையில் ஔவையார் பாடல்களில் பாடல் எண்கள்  23(2-3), 183(1-4), 183(5-7), 364(1) ஆகிய 4 இடங்களில் உரு உவமை பயின்று வந்துள்ளன.

            தலைவியினது வேறுபாட்டிற்கான காரணத்தை அறிய செவிலித் தாய் முதலானோர் கட்டுவிச்சியை அழைத்து குறி கேட்கின்றனர். தோழி, தலைவனுக்குரிய மலையைப் புகழ்ந்து பாடுமாறுக் கட்டுவிச்சியிடம் கூறுவதனை,

"அகவன் மகளே அகவன் மகளே

மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டே"

(குறுந்.பா.23)

என்னும் குறிஞ்சித் திணைப் பாடலில் தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டுவிச்சியே, சங்குமணியினால் ஆகிய மாலைபோல் உள்ள வெண்மையான நல்ல நீண்ட கூந்தலை உடைய, பெண்மணியே நீ பாடிய பாட்டுகளுள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தை பாடுவாயாக என்று தோழி கூறுவததை அறியலாம்.

            இதில் சங்கு மணியினால் ஆகிய மாலை போன்ற கூந்தல் என்பதில் உரு உவமை பயின்று வந்துள்ளதனை அறியலாம்.

செவியினால் அறியப்படும் உவமை

            ஓசையின் அடிப்படையில் வரும் உவமை செவியால் அறியப்படும் உவமை ஆகும். இதற்குச் சான்றாக இளம்பூரணர், 'குயில் போன்ற மொழி' என்ற பாடலை சான்றுக் காட்டி விளக்குகின்றார். இதுபோன்று செவியால் அறியப்படும் உவமையாக குறுந்தொகையில் ஔவையார் பாடல்களில் 200வது பாடலில் மட்டுமே பயின்றுவந்துள்ளன.

            பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி, 'பருவமன்று; வம்பு' எனக் கூறிய தோழிக்கு தலைவி கூறுவதனை,

"கால மாரி மாலை மாமழை

இன்னிசை உருமின் முரலும்"

(குறுந்.பா.200)

என்னும் முல்லைத் திணைப் பாடலில் கார்காலத்தில், பெய்வதற்காக மழையோடு மாலைக்காலத்தில் வரும் கரிய மேகங்கள், உழவர்களுக்கு இன்னிசை போல் இடியிடுத்து முழங்குகின்றன. குன்றத்தின் உச்சியிலிருந்து மலர்களைச் சுமந்து கொண்டு அருவியாக விழுகின்றன. கார்காலத்திற்கு முன்னரே வருவதாக கூறிச் சென்ற தலைவர் இன்னும் வரவில்லை. அவர் நம்மை மறந்தாலும், நாம் அவரை மறக்க மாட்டோம் என்று தலைவி புலம்பவதனை அறியலாம்.

         இதில் இடியின் ஓசைக்கு இனிய இசை உவமையாக வந்துள்ளமையால் இது செவியினால் அறியப்படும் உவமை ஆகும்.

ஆய்வு முடிவுரை

1.    தமிழகத்தில் வெவ்வேறு காலக் கட்டங்களில் சிறப்புடைய பெண்பாற் புலவர்கள் பலர் ஔவை என்றே அழைக்கப்பட்டனர்.

2.    ஔவையார் அனைவருமே வேந்தர்களை விட வள்ளல்களையே புகழ்ந்து மிகுதியான பாடல்களை இயற்றியுள்ளனர்.

3.    சங்க கால ஔவையார் அகம் சார்ந்த 26 பாடல்களும், புறம் சார்ந்த 33 பாடல்கள் என 59 பாடல்களை பாடியுள்ளார்.

4.    குறுந்தொகையில் ஔவையார் பாடிய பாடல்களாக 15 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 12 பாடல்களில் உவமைகள் பயின்று வந்துள்ளன.

5.    வினை உவமை 2 இடங்களிலும், பயன் உவமை 5 இடங்களிலும், மெய் உவமை 4 இடங்களிலும், உரு உவமை 4 இடங்களிலும், செவியால் அறியப்படும் உவமை ஓரிடத்திலும் பயின்று வந்துள்ளன.

6.    ஔவையார் தலைவியரின் அக உணர்வுகளை வெளிப்படுத்தும் உத்தியாக உவமையை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

7.    வெவ்வேறு காலக்கட்டங்களில் "ஔவையார்" என்ற பெயரில் பலர் வாழ்ந்திருந்தாலும், ஔவை என்ற பெயரை புகழின் உச்சிக்கு கொண்டுச் சேர்த்த பெருமை சங்க கால ஔவையாருக்கு உரியது என்பதை குறுந்தொகையின் பாடல்கள் எடுத்துரைப்பதனை அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment