Search This Blog

Tuesday, December 19, 2023

குறுந்தொகையில் தமிழர்களின் அறம்

 

குறுந்தொகையில் தமிழர்களின் அறம்

 

திருமதி. செ.சத்யா

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604 304. விழுப்புரம் மாவட்டம்.

தமிழ்நாடு - இந்தியா.

மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com

ORCID ID: 0000-0001-7111-0002

 

முன்னுரை

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம்" என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப தமிழ்மொழி உன்னதமானது. உலக மக்கள் அனைவரும் போற்றும் வகையில் சிறந்த இலக்கண, இலக்கிய வளம் நிறைந்தது. நீண்ட வரலாற்றையும், சிறந்த பண்பாட்டமைப்பும் கொண்டது. வாழ்வில் சிறந்த ஒழுக்கமாக போற்றப்படுவது அறம். அவ்வறம் பற்றித் தமிழ் இலக்கியங்கள் பலவாறு எடுத்தோதுகின்றன. அவ்வகையில், குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வரும் அறச்செய்திகளை அனைவரும் அறியும் வகையில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

தனிமனித ஒழுக்கம்

வாழ்வியல் ஒழுக்கம் என்பது நற்பண்பாகும். நன்னெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் மேம்பட்ட மனிதராக வாழமுடியும். தனிமனித ஒழுக்கத்தை அனைத்து அற இலக்கியங்களும் முதன்மைப்படுத்துகின்றன. ஒழுக்கத்தை விட உயர்ந்தது ஒன்றுமில்லை என்பதனை,

"கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர்

பொல்லாதது இல்iல் ஒருவருக்கு-நல்லாய்!

ஒழுக்கத்தின் மிக்க இழிவு இல்iல்  இல்லை

ஒழுக்கத்தின் மிக்க உயர்வு"1

என்ற பழமொழி நானூறு பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றது.

அறம்

            மனித இயக்கத்தின் வாழ்வியல் அடிப்படைப் பண்புகளே அறமாகும். அறம் என்பதற்கு நல்ல செயல்களின் 'தொகுதி' என்பது பொருள். அறம் தான் மனித வாழ்வியலுக்கு உயர்வைக் கொடுத்து உதவுவதோடு வாழ்வில் நலத்தை நிலைநாட்டுகிறது. சங்ககால மக்களின் வாழ்க்கை அறநெறி சார்ந்ததாகவே விளங்குகிறது. அக்காலத்தில் சட்டங்கள் எழுதப்படவில்லை. ஆனால், இன்று எழுத்தப்பட்ட சட்டங்களை விடப் பழங்கால வாழ்க்கை, மக்கள் நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டிருந்தது. மக்கள் வாழ்வியல் மரபுகளைக் கடைப்பிடித்துப் பண்பட்ட நிலையில் வாழ்ந்துள்ளார்கள். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க நெறிமுறைகளின் தொகுதியே 'அறம்' எனப்படும். அறக்கருத்துக்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும்  வழிகாட்டும் பெருமை உடையனவாகும். அறம் என்பது ஒழுக்க நெறியாகும். பிற உயிர்கட்கு உதவுவதும், துன்பம் செய்யாமையுமே 'அறம்' என்பதாகும்.

வாய்மை அறம்

            வாய்மை என்பது தீமை இல்லாத சொற்களைப் பேசுதலாகும். உண்மைத் தன்மை மனிதப் பண்பை உயர்த்திக் காட்டும் இயல்புடையது. வாய்மைக்குப் பெயர் போன நல்லூர்க் கோசர்களைப் பற்றி,

"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர்க் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே"2

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றது. இப்பாடலடிகளில், மோகூர் பழையனுக்குப் படையுதவிக்கு வருவதாகத் தாம் சொன்ன சொல் தவறாமல் கோசர் வந்து தங்கினார் என்பதையும், தன் உள்ளத்திற்குப் பொய்யாக நடக்காமலும், பிறருக்கு கொடுத்த வாக்கில் மாறாமல் இருப்பதும் 'வாய்மை' என்று ஔவையார் குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

            கள்ள மனம் படைத்தவர்கள் இயல்பாகவே ஒரு செய்தியை மாற்றிக் கூறுவதும், நன்கு அறிந்த செய்தியைத் திரித்தும் மறைத்தும் கூறும் இயல்புடையவர்கள். ஆனால், ஆன்றோர்கள் நன்மை பயக்கும் செயல்களையே சிந்திப்பவர்கள் மனசாட்சிக்கு மாறுபடாமல் வாழ்பவர்கள் என்பதனை,

"அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை"3

என்ற குறுந்தொகைப் பாடலடி இயம்புகிறது. தாம் அறிந்த ஒன்றை இல்லை என்று பொய்ச்சான்று கூறும் வழக்கம் அறிவார்ந்த சான்றோரிடம் இல்லை என்று எடுத்துரைப்பதனை அறிய முடிகிறது. மேலும், இதனை,

"பழையன் வேல் வாய்த்து அன்னநின்

பிழையா நன்மொழி"4

என்ற நற்றிணைப் பாடலடிகள் உணர்த்துகின்றன.

            தவறு செய்தலைவிடத் தவற்றுக்கு துணை போவதையும், பொய் சாட்சி சொல்வதையும் சங்க இலக்கியங்கள் பெரிதும் கண்டிக்கின்றன. ஆனால், உண்மையும், நன்மையும் மிக்க சொற்களைப் பேசுவோர் யாருக்கும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்பதனை,

"நன்மொழிக் கச்ச மில்லை"5

என்ற குறுந்தொகைப் பாடலடி எடுத்தியம்புகிறது.

 

ஈதல் அறம்

            தமது பொருளைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்தல், வறுமையால் வாடி வந்தவர்க்குத் தனது பொருள்களை ஈதன் என வாழ்வியல் அறங்கள் பல இருக்கின்றன. பெரிய உதவி செய்தால் அவரை யாவரும் விரும்புவர் என்பதனை,

"பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே"6

என்ற குறுந்தொகைப் பாடலடி சுட்டுகிறது. ஈகை செய்யும் மனப்பான்மை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் மனதில் வேரோடுக் காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரப்போர்க்கு ஈதல் வேண்டும். இரப்போரைக் காணாமலும், அவர்க்கு உதவாமலும் கழியும் நாள் வீண் நாளாகும் என்று எண்ணியதனை,

"இரவலர் வாரா வைகல்

பலவா குகயான் செலவுறு தகவே"7

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகுற எடுத்தியம்புகின்றது.  மேலும், செல்வம் நிலையில்லாது. புகழ் ஒன்றே நிலையானது. நீதி நிறைந்த நெஞ்சுடையவன் பிறர்க்கு உதவி புரியப் பின் வாங்க மாட்டான். அவன் செல்வத்தைச் சேர்த்து வைக்காமல் பிறருக்கு உதவுவதிலேயே செலவு செய்வான். இதுவே மனிதப் பண்பு என்பதையும், மனித வாழ்வின் பயனே பிறர்க்கு உதவுவதில் தான் உள்ளது என்பதையும் நமக்கு வலியுறுத்துவதனை,

"நில்லா மையே நிலையிற் றாகலின்

நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்

கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்"8

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் சுட்டுகிறது. மேலும் இதனை,

"இசைபட வாழ்பவர் செல்வம் போல"9

என்ற நற்றிணைப் பாடலடியும் குறிப்பிடுகின்றது. எப்போதும் ஈயாமல் இருப்பது நற்செயல் அன்று வறியவருக்கு ஈந்து அன்புடையவராக வாழ்தல் நலம் தரும் என்பதனை,

"நல்கின்  வாழும் நல்கூர் தோர்வயின்

நயனில ராகுதல் நன்றென உணர்ந்த"10

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றது.

 

சான்றோர் அறம்

            தங்களின் முன்னோர்கள் சென்ற நெறிப்படி கொள்கைப் பிடிப்புடன் நல்வழியைப் பின்பற்றி வாழ்பவர்கள். சான்றோர்கள் தங்களைப் புகழ்கின்ற போது நாணம் கொள்வர். உயர் கல்வியும் இயற்கையாக உண்டான பணிவும் அவர்களை மேலும் உயர்வுடையவர்களாக ஆக்குகின்றன என்பதனை,

"…………… சான்றோர்

புகழு முன்னர் நாணுப

பழயாங் கொல்பவோ காணுங்காலே"11

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்துரைக்கின்றது. இப்பாடலடிகளில், புகழ்தலால் சான்றோர் நாணுவர். ஆனால், பழியைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று எடுத்துரைக்கின்றனர். இதனை,

"தம்புகழ் கேட்டார் போற் தலை சாய்த்து மரந்துஞ்ச"12

என்ற கலித்தொகைப் பாடலடியும் சுட்டுகின்றது.

புகழுக்காக  உயிரையும் கொடுப்பர் சான்றோர் ஆனால் பழிவரின் அதனைத் தாங்கிக் கொள்ளாதவர்கள் என்பதனை,

"அழிய லாயிழை அன்பு பெரிதுடையன்

பழியும் அஞ்சும் பயமலை நாடன்"13

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றது. மேலும், சான்றோர் பல குணங்களில் உயர்ந்தோராக இருப்பர். ஒப்புரவு அறிதல், பழியஞ்சுதல், நல்ல நட்புக் கொள்ளல், சூழ்நிலைக்கு இணங்கிப் போதல் என்பவை எல்லாம் சான்றோர் இயல்புகளாகும். சான்றோர் செய்யும் செயல்கள் அறத்தோடு பொருந்தி இருக்கும் என்பதனை,

"திறவோர் செய்வினை அறவ தாகும்"14

என்ற குறுந்தொகைப் பாடலடி எடுத்தியம்புகின்றது. சான்றோர் செய்யும் செயல்கள் அறத்தொடு பொருந்தியவையாகும். சுற்றத்தை உடைய மக்களுக்கு இவை ஆதரவாக இருக்கும் என்று எடுத்துரைப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் இதனை,

"இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும் இவ்வுலகில்

நில்லாமை உள்ளும் நெறிப்பாடும் எவ்வுயிர்க்கும்

துன்புறுவ செய்யாத துய்மையும் இம்மூன்றும்

நன்றறியும் மாந்தர்க்குள்"15

என்ற திரிகடுக பாடலடிகளும் அழகுற எடுத்துரைக்கின்றது.

 

விருந்தோம்பல் அறம்

            பழந்தமிழர்களின் பண்பாட்டில் மிக உயரிய பண்பைக் கொண்டது விருந்தோம்பலாகும். விருந்தோம்பல் என்பது இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழிக் கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும். பசியென வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உணவளித்த சிறப்பு நம் தமிழர்களையே சாரும். தொல்காப்பியம் தோன்றிய காலம் தொடங்கி இப்பழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகின்றது. இதனை,

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று"16

என்ற திருக்குறள் வரிகளும் இக்கூற்றை விளக்குகிறது. இரவுப் பொழுதில் உணவுக்கு வழிதேடி வரும் புதியவர்கள் தடுமாற வண்ணம் அறிவிப்புச் செய்து உணவு வழங்கியுள்ளனர் என்பதனை,

"புள்ளும் மாவும் புலம்பொடு வதிய

நள்ளென வந்த நாரில் மாலைப்

பலர்புகு வாயில்  அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீரோ எனவும்

வாரார் தோழிநங் காத லோரே"17

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றது. இப்பாடலடிகளில், இரவில் பலர் புகும் அளவிற்கு உள்ள பெரிய வாயிற் கதவை அடைப்பதற்கு முன்னர் வீட்டிற்குள் உணவருந்த வரவிருப்பவர் யாராவது உள்ளீர்களா? என்று அறிவிக்கும் வீடுகள் இருந்ததை அறிந்து கொள்ள முடிகின்றது.

விருந்தினர் பற்றிய நம்பிக்கை

            பழந்தமிழர்கள் காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்பதனை அடையாளமாகக் கொண்டிருந்ததனை,

"விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே"18

என்ற குறுந்தொகைப் பாடலடி  சுட்டுகின்றது. விருந்துவரக் கரைந்த காக்கைக்குப் பொன்வட்டில் பலியூட்டுவதாகப் பாடி அச்சிறப்பினால் 'காக்கை பாடினியார்' என்று சிறப்புப் பெயர் பெற்ற 'நச்செள்ளையார்' பாடலின் மூலம்  காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இன்றளவும் தொடர்ந்து வருதல் அறியத்தக்கது.

 

ஆய்வு முடிவுரை

            இலக்கியங்கள் அறக்கருத்துக்களைப் பெரும்பாலும் நேரடியாகப் பேசாமல் கதை மாந்தர்கள் மூலமோ, நிகழ்ச்சிப் போக்கிலோ, கூற்றுக்கள் வழியாகவோ உணர்த்திச் செல்வதனையும், அதன் காரணமாகவே இலக்கியங்களும் அவை கூறும் நெறிமுறைகளும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விடுவதனை அறிந்து கொள்ள முடிகின்றது. மக்கள் வாய்மை மற்றும் ஈதல், சான்றோர் அறம், நெறிகளைச் சிறந்த அறமாகக் கொண்டிருந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. சங்க இலக்கியங்கள் அறக் கூறுகளின் ஆவணமாக இருந்து நம் நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உலக அரங்கில் உயர்த்தோங்க செய்கின்றன என்பதை இவ்வாய்வின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.

சான்றெண் விளக்கம்

1.    பழமொழி நானூறு, பா.64

2.    குறுந். பா.15

3.    குறுந். பா.184

4.    நற். பா.10

5.    குறுந். பா.392

6.    குறுந். பா.115

7.    குறுந். பா.137

8.    குறுந். பா.143

9.    நற். பா.217

10. குறுந். பா.327

11. குறுந். பா.252

12. கலி. பா.119

13. குறுந். பா.143

14. குறுந். பா.247

15. திரி. பா.68

16. குறள். 82

17. குறுந். பா.118

18. குறுந். பா.210

 

துணை நூற்பட்டியல்

1.    சாமிநாதைய்யர்.உ.வே. (உரை.ஆ.), குறுந்தொகை மூலமும் உரையும் (ஆராய்ச்சி பதிப்பு), உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, மறுபதிப்பு – 2009.

2.    நாகராஜன்.வி, குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2014.

3.    பாலசுப்பிரமணியன்.கு.வெ, நற்றிணை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2014.

4.    புலவர்.மாணிக்கனார்.அ, சங்க இலக்கியம் மூலமும் உரையும், வர்த்தமான் பதிப்பகம், 1999.

5.    இராமநாதன்செட்டியார், எட்டுத்தொகை செல்வம், முத்தையா நிலையம், 1973.

6.    சங்க இலக்கிய நூல்கள் முழுவதும் உரையுடன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிட், சென்னை, 2007.

No comments:

Post a Comment