Search This Blog

Thursday, December 21, 2023

குறுந்தொகையில் முல்லை மற்றும் மருதத்திணையில் தோழி கூற்றில் உவமைகள்

 

KURUNTHOGAIYIL MULLAI AND MARUDHA THINAIYIL THOZHI KOOTRIL  UVAMAIKAL

 

"குறுந்தொகையில் முல்லை மற்றும் மருதத்திணையில் 

தோழி கூற்றில் உவமைகள்"

 

S. SATHYA,

Full Time Ph.D. Research Scholar,

Srimath Sivagnana Balaya Swamigal Tamil Arts Science College,

Mailam – 604 304.

Mail Id: sathyasenthil77@gmail.com

 


செ.சத்யா,

முழுநேர முனைவர்  பட்ட ஆய்வாளர்,

முதுகலை தமிழாய்வுத்துறை,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604304.

திண்டிவனம் வட்டம் ,

விழுப்புரம் மாவட்டம்.

 

 


Abstract

The article focuses on the Mullai and Marudha Thinaiyil Thozhi Kootril Uvamial in Kurunthogai. ‘Kurunthogai’ is a classical Tamil poetic work in the second book of the  “Ettuthogai” (Eight  Anthologies). It is content matters were poem contains love and separation. Content matters were written by numerous authors. The ancient Sangam literature had witnessed the life style of the people in five phases of lands as Kurunji, Mullai, Neithal, Palai and Marutham. The first land surface is mountains and hills and the places is termed as ‘Kurunchi’. There are many  Uvamais in Kurunthogai. This research paper explains the Uvamais found in ‘Kurunthogai Kurinji Thozhi Kottru Songs’.

Keywords: Uvamai, Parable,Thozhi Kootru, Classical Tamil Land, Kurunthogai, Mullai, Marudham,Thozhi, Thinaikal.

 


ஆய்வுச்சுருக்கம்

தமிழ் இலக்கிய வரலாறு நெடிய பாரம்பரியம் கொண்டது. இதில் சங்க இலக்கியங்களே தமிழின் தொடக்கமாகத் திகழ்கின்றன. சங்க இலக்கியப் பாடல்கள் செறிவாகவும், நேர்த்தியாகவும், இலக்கண அமைப்புடனும் உள்ளன. சங்க இலக்கியங்களாகத் திகழ்பவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். சங்க இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு மிகத் தொன்மையுடையது. மனித சமுதாயத்தில் சரிபாதியாக விளங்கும் ஆண், பெண் இருபாலரில் பெண் என்பவள் உயிர் நாடியாக விளங்குபவள். குறுந்தொகையில் பெண், தாய், நற்றாய், செவிலி, தலைவி, தோழி, பரத்தை என்று பல கோணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளாள். இவற்றில் தோழியானவள் தலைவி வாழ்க்கையில் முக்கியப் பங்காக விளங்குவதையும், தோழி கூற்றில் தோழியின் சொல்லாடலையும், ஆளுமைத்திறத்தையும் குறுந்தொகையில் முல்லை மற்றும் மருத்திணையில் தோழி கூற்றில் அமைந்துள்ள பாக்களில் பயின்று வந்துள்ள உவமைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

 

முதன்மைச் சொற்கள்

          குறுந்தொகை, உவமைகள், முல்லை, மருதம், தோழி, கூற்று, ஐவகை நிலங்கள், தலைவன், தலைவி, திணைமயக்கம்.      

 

தோழி

தோழியானவள் குறுந்தொகையில் மிகவும் சிறப்புற்று மிகுந்த அறிவுத்திறனையும், மதிநுட்பத்தையும், அன்பையும் உடையவளாக விளங்குகின்றாள். அகப்பொருள் பற்றிய பாடல்களில் வரும் மாந்தர்களின் பெரும் பொருப்பினை உடையவள் தோழி. தலைவி மற்றும் தலைவனுக்கு வழிகாட்டியாகவும்; திகழ்கின்றாள். 

          தலைவன், தலைவி, செவிலி முதலியவரோடு உரையாடும்போது தோழியானவள் அவர்களின் மனநிலையை அறிந்து பேசுபவளாகவும், சொல்திறன் மிக்கவளாகவும், தலைவியின் அகவாழ்வில் உள்ள களவு மற்றும் கற்பு என இருவேறு கூற்றுகளிலும் தோழியின் பங்கு முதன்மை பெருகின்றது.

ஒரு அசரனுக்கு மந்திரி எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்றே தலைவிக்குத் தோழி சிறப்பானவளாகவும், தன்னலம் கருதாதவளாகவும் தலைவியின் நலம் நாடுபவளாகவும் சித்தரிக்கப்படுவதனைத் தொல்காப்பியர்,


"நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியுஞ்

செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும்

புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வருஉ

முணர்ச்சி யேழினும் முணர்ந்த பின்றை

மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது

பல்வேறு கவர்பொரு னாட்டத் தானும்"

(தொல்காப்பியம், பொருள், களவு, நூற்பா – 1060)

என்று தோழியின் பிறப்பிற்குச் சிகரம் வைக்கின்றார்.

தலைவி, தலைவன் மேல் கொண்டிருக்கும் அன்பிற்கு ஈடாகத் தலைவி மேல் மிகுந்த அன்பும், அக்கறையும் உடையவளாகத் தோழி உள்ளாள். தலைவியின் களவொழுக்கத்தை மெல்ல பெற்றோரிடம் வெளிப்படுத்தி, அவளுக்கு விரும்பிய வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் தோழி, இல்லற வாழ்க்கையில், தலைவன் பிரிந்து சென்றபோது தலைவனின் நற்பண்புகளைக் கூறித் தலைவியை ஆற்றுவிப்பவளாகவும், ஆற்றுப்படுத்த இயலாத நிலையில்,


"………………. இவள் தன்

மடன் உடை மையின் உயங்கும் யான் அது

அஞ்சுவல் பெரும! என்நெஞ் சத்தானே"       - (குறுந்.324)

என்று தலைவியின் அறியாமையை எண்ணி வருந்துபவளாகவும், பிரிவின் போது தலைவியின் மென்மையான குணங்களையும், ஆற்றாமைத்தன்மையையும் தலைவனிடம் கூறி விரைந்து வரச் செய்பவளாகவும் இருக்கின்றாள் தோழி. இவ்வாறு தலைவன், தலைவி, பெற்றோர் ஆகியோருக்கெல்லாம் நடுநிலைப் பாத்திரமாகத் தோழி கட்டமைக்கப்பட்டிருக்கிறாள்.

முல்லைத்திணையில் தோழி கூற்றுகள்

          மருதத்திணையில் தோழியின் கூற்றுக்களாக அமைந்தள்ள மொத்த பாக்களின் எண்ணிக்கை 7 ஆகும்.

முல்லைத்திணையில் தோழி தலைவியோடு உரையாடுதல்

          குறுந்தொகை முல்லைத்திணையில் தோழி தலைவியோடு உரையாடுவதாக அமைந்த  பாடல்களின் எண்ணிக்கை 6 ஆகும். இவற்றில் 3 பாடல்களில் மட்டும் உவமைகள் மட்டும் பயின்று வந்துள்ளன.

தலைவன் குறித்துச் சென்ற பருவம் கடந்த வழி ஆற்றாமை கொண்ட தலைவியை ஆற்றுவிக்கும் தோழி,   பிரிவிடை வேறுபட்ட தலைவிக்கு பருவங்காட்டி தலைவன் வருவானென என்பதை, வளர்ந்த நிறைந்த கருப்பத்தைத் தாங்கி தளர்ந்து நடக்கமாட்டாத புளிச்சுவையில் விருப்பமுடைய கடுஞ்சூல் மகளிர் போல, மேகம் நீரை முகர்ந்து கொண்டு விண்ணில் எழுந்து வரும் எனத் தோழி உவமையுடன் குறிப்பிடுவதை,


"முந்நான் திங்கள் நிறைபொறுத்து அசைஇ

ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிர் போல நீர்கொண்டு"         - (குறுந்.287: 3-5)

என்று குறுந்தொகைப்பாடலடிகள் சுட்டுகின்றன. வளர்ந்த நிறைந்த கருப்பத்தைத் தாங்கி தளர்ந்து நடக்கமாட்டாத புளிச்சுவையில் விருப்பமுடைய கடுஞ்சூல் மகளிர் போல மேகம் நீரை முகர்ந்து கொண்டு விண்ணில் எழுந்து வரும் எனத் தோழி குறிப்பிட்டிருக்கிறாள். இதன் வழி தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்ததால் தலைவன் இனி உங்களை பிரிந்து உறையார் எனத் தலைவிக்கு உவமையுடன் உணர்த்துகிறாள். இவ்வுவமையில் சுட்டப்பட்டுள்ள கார்காலம் முல்லைக்குரிய பெரும் பொழுதாகவும், இருத்தல் முல்லைக்குரிய உரிப்பொருளாகவும் அமைந்துள்ளது சுட்டத்தக்கது.

          தலைவன் திரும்பி வருவதாகக் கூறி;ச்சென்ற கார்பருவ வருகைக் குறித்து தலைவிக்கு உணர்த்த விரும்பும் தோழியானவள், முல்லைக் கொடிகள் அரும்பத் தொடங்கிவிட்டது.  கார்காலத்தின் முதற்காலம் வந்துவிட்டது. உன் துன்பமெல்லாம் தீரப்போகின்றது. உன் தலைவன் விரைவில் திரும்பி வந்திடுவான்; என்பதனை உவமையுடன் எடுத்துரைப்பதனை,


 "பல் ஆன் கோவலர் கண்ணிச்

சொல்லுப அன்ன முல்லைவெண் முகையே"  - (குறுந்.358:6-7)

எனும் குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடலில், பல பசுக்களை உடைய இடையர்களின் கண்ணிக்கண் உள்ள முல்லையின் மெல்லிய மொட்டுக்கள்  பருவம் வந்ததைச் சொல்லுவது போல் இருந்தன எனும் உவமையின் வழியாக எடுத்துரைக்கின்றாள். இவ்வுவமையில் எடுத்தாளப்பட்டுள்ள இடையர்கள் மற்றும் முல்லை மலர்கள் முல்லைக்குரியவையாக அமைந்துள்ளது சுட்டத்தக்கதாகும்.

தலைவன் குறித்துச் சென்ற பருவம் கடந்த வழி ஆற்றாமை கொண்ட தலைவியை ஆற்றுவிக்கும் தோழி,


"பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி

………………………………………….

வண்ணத் துய்மலர் உதிர்தண் ணொன்று"  - (குறுந்.110: 4-6)

என்ற பாடல் அடிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. இப்பாடலில், கருவிளை மலர்களானது மயில் பீலியின் ஒள்ளிய கண்கள் போன்று தோற்றமளிக்கும். அம்மலர்களை அணிந்தும், பஞ்சு நுனி போன்ற ஈங்கை மலர்களை உதிர்த்தும் வாடை காற்று வீசியது எனும் பொருளை உள்ளடக்கி, பிரிவிடை வேறுபட்ட தலைவிக்கு பருவங்காட்டி தலைவன் வருவானென தோழி உவமையுடன் எடுத்துரைக்கின்றாள். இதில், தோழியால் எடுத்தாளப்பட்டுள்ள கருவிளை மற்றும் ஈங்கை முதலியன முல்லைக்குரிய மலர்களாகும்.

முல்லைத்திணையில் தோழி தலைவனோடு உரையாடுதல்

          குறுந்தொகை முல்லைத்திணையில் தோழி தலைவனோடு பேசுவதாக அமைந்த பாடல்களின் எண்ணிக்கை 1 ஆகும். இப்பாடலில் உவமை ஏதும் இடம் பெறவில்லை.

 முல்லையில் திணைமயக்கம்

          முல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ள தோழி கூற்றுப் பாடல்களில் பிற திணைகளுக்குரிய முதல், கருப்பொருட்கள் மயங்கிய நிலையில் அமையப்பெற்றால் அவை திணை மயக்கமாக கருத இடமளிக்கின்றன. அவ்வாறு குறுந்தொகை முல்லையில் திணை மயங்கிய நிலையில் பாடல் ஏதும் அமையப்பெறவில்லை.

 மருதத்திணையில் தோழி கூற்றுகள்

          மருதத்திணையில் தோழியின் கூற்றுக்களாக அமைந்தள்ள மொத்த பாக்களின் எண்ணிக்கை 22.

மருதத்திணையில் தோழி தலைவியோடு உரையாடுதல்

          குறுந்தொகை மருதத்திணையில் தோழி தலைவியோடு உரையாடுவதாக அமைந்த  பாடல்களின் எண்ணிக்கை 4 ஆகும். இவற்றில் 3 பாடல்களில் மட்டும் உவமைகள் மட்டும் பயின்று வந்துள்ளன.

          தலைமக்களின் களவொழுக்கத்தால் ஊரினில் தோன்றிய அலர் உரைகளை உணர்த்த விரும்பிய தோழி,


"கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்

பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்

களிறொடு பட்ட ஞான்றை

ஒளிவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே"     - (குறுந்.393: 3-6)

எனும் உவமையினை கையாளுகிறாள். இப்பாடலடியில், கூகைக் கோழியார் பாடிய வாகைப் பறந்தலை எனும் ஊரிலுள்ள போர்க்களத்தில், பசும்பூண் பாண்டிய மன்னனுக்கு  துணையாகப் போர் புரிந்த வலிமை மிக்கவனாக விளங்கிக ஆதிகன் என்பவன் தனது களிற்றோடு மாய்ந்த நாளில் ஒளிவீசும் வாட்படையையுடைய கொங்கர்களின் (சேரர்களின்) படைவீரர்கள் செய்த ஆரவாரத்தை விட அயலார் கூறும் பழி உரைகள் பெரிதாக விளங்கியது எனும் உவமை இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

          பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனால் வேறுபட்ட தலைவயை நோக்கி நீ இப்பொழுது அவனை ஏற்றுக் கொண்டால் அவன் மீண்டும் உன்னை விட்டுவிட்டுப் பரத்தையிடம் செல்லமாட்டான் என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ அவனை ஏற்றுக்கொண்டால், நீ பல நாட்கள் தூக்கமின்றித் துன்பப்படப் போகின்றாய் என்று உவமையுடன் தோழி எச்சரிப்பதனை,


"ஓவாது ஈயும் மாரி வண்கை

கடும் பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி

கொன்முனை இரவுஊர் போலச்

சில ஆகுக நீ துஞ்சும் நாளோ"    - (குறுந்.91: 5-8)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடலில், 'எப்போதும் ஓயாது ஈயும் மாரி போன்று கொடுக்கும் வள்ளன்மையை உடையவன். அதியமான் நெடுமான் அஞ்சி. இவனது அச்சம் தரும் பகைப்புலத்து இரவுஊர் போல நீ துயிலும் நாட்கள் குறைவாகும்' எனத் தலைவியிடம் கூறுகிறாள் தோழி.

 

ஒன்றோடு ஒன்றாகப் பின்னிக்  கிடக்கும் அடர்ந்த பிரப்பங்கொடியில் விளைந்த, புறத்தே வரிகளையுடைய பழத்தை, ஆழமான நீரையுடைய குளத்தில் உள்ள கெண்டைமீன் கவ்வும் இடமாகிய  குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய ஊர்த் தலைவனின் மனைவியாக உன்னைக் கருதிக் கொள்வாய் என்றால் உன்னுடைய உள்ளத்தில் துன்பங்கள் பல ஏற்படும் என்பதனை உவமையுடன் தோழி எடுத்துரைப்பதனை,


"அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி

குண்டு நீரிலஞ்சிக் கெண்டை கதூஉம்

தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்"

பலவா குகநின் நெஞ்சிற் படரே  - (குறுந்.91: 1-4)

என்று குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடல் வரிகளில் 'பிரப்பங்கொடியில் பழுத்து முதிர்ந்த பழத்தைக் கெண்டை மீன்கள் கவ்வும்' என்று எடுத்துரைப்பது 'தலைவனை எளிதில் கவர்ந்து கொள்ளும் பரத்தையை' உவமையாக குறிக்கும் தோழியின் அறிவுத்திறன் போற்றத்தக்கதாகும்.

 

மருதத்திணையில் தோழி தலைவனோடு உரையாடுதல்

          குறுந்தொகை மருதத்திணையில் தோழி தலைவனோடு உரையாடுவதாக அமைந்த பாடல்களின் எண்ணிக்கை 13 ஆகும். இவற்றில் 11 பாக்களில் உவமைகள்  இடம் பெற்றுள்ளன.

          தலைமகனுக்கு வாயில் நேர்ந்ததை தோழி தலைவியிடம், காஞ்சிப் பூங்கொத்துக்களில் உள்ள மகரந்தத் துகள்கள் தங்கள் மேனியிலும், உழுகின்ற பகட்டின் மேலும், வயலிலும் படும்படியாக நிலத்தை உழுபவர்கள் வளைப்பர். இதனால் காஞ்சிப் பூக்களின் துகள்கள் தம்மீது தோன்ற உழவர்கள் தம்மனைக்கண் புகுவது போலத் தலைவனும் பரத்தையர் மனையிலிருந்து அவர்கள் செய்த குறிகள் தம்மீது தோன்ற தன் மனைக்குள் புகுவான் என்பதை உவமையுடன் எடுத்துரைத்ததனை,


"பயில் போல் இணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை"  - (குறுந்.10: 2-4)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகுற எடுத்துரைக்கின்றன. இப்பாடலில் உவமையும், உள்ளுறையும் ஒருசேர எடுத்தாளப்பட்டுள்ளது. 'காஞ்சி மரத்தின் மலர்கொத்துக்கள் பயற்றங்காயினைப் போன்று தோற்றமளிக்கும'; என்பது இதில் பயின்று வந்துள்ள உவமையாகும். இதில் எடுத்தாளப்பட்டுள்ள காஞ்சிமரம், உழவர், வயர், பரத்தமை என்பன மருதத்திணையினைக் குறித்து நிற்பன. 'உழவர்கள் வளைத்ததால் கிளைகளிலிருந்து விழும் பூந்தாதுக்கள்  போல் தலைவனின் பரத்தமை உள்ளது' என்று உள்ளுறை உவமாக புலவரால் சுட்டப்படுள்ளது.

          பரத்தையரிடமிருந்து பிரிந்து வந்த தலைவனுக்கு 'நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளுறவு பொய்யானது என்று நகையாடி  வாயில் மறுக்கும் தோழி,

             "உழுந்துடைக் கழுந்தின் கரும்புடைப் பணைத்தோள்" - (குறுந்.384: 1)

என்ற உவமையினை அழகாக எடுத்துரைக்கின்றாள். இப்பாடலடியில் உழுந்தங் காயை அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் உலக்கையின் முனைப்பகுதி போன்று பரத்தையர் தங்களது மூங்கில் போன்ற தோள்களால் தலைவனை மயக்கிப் பிடித்தமையைத் தோழி இதில் உணர்;த்தியுள்ளாள். உழுந்தை(உளுந்து) இடிக்கும் உலக்கையின் முனை தேய்ந்து வழுவழுப்பாகவும் பருத்ததாகவும் இருப்பதால், அது தோளுக்கு உவமையாகக் கூறப்பட்டது. காமனது வில்லாகிய கரும்பின் உருவத்தைக் குங்குமக் குழம்பால் மகளிர் தோளில் எழுதல் வழக்கம் என்று உ.வே.சாமிநாத ஐயர் தம் நூலில் சுட்டத்தக்கது குறிப்பிடத்தக்கது.

தெய்வத்தின் முன் நீ கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி, வரைவு நீட்டித்தவழி தலைவனுக்கு தோழி உரைத்ததில்,


"நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்

வேலன் புனைந்த வெறிஅயர் களம்தொறும்

செந்நெல் வான்பொரி சிதறி அன்ன

ஏக்கர் நண்ணிய எம்ஊர் வியன்துறை"   - (குறுந்.53: 2-5)

என்ற உவமை இடம்பெற்றுள்ளது. இல்லத்தின் முன்னே  புன்க மரத்தின் மலர்கள் உதிர்ந்து பரவி கிடக்கும் மணற் பரப்பின் காட்சியானது வேலனால் அழகு பெற அமைக்கப்பட்ட வெறியாட்டு நிகழ்த்த பெறும் இடங்கள் தோறும் செந்நெல்லின் வெள்ளியப் பொறியை சிதறினாற் போன்று தோன்றும் எனத் தோழி எடுத்தாண்டுள்ளதில் இல்லின்கண் தான் கண்ட காட்சியினை உவமையாக்கியுள்ள தோழியின் அறிவுத்திறன் சுட்டத்தக்கதாகும்.

         

          கொக்கு கொத்திய பொழுது அதனின்று தப்பிய நீருள் மறைந்த கெண்டைமீன் பக்கத்தில் உள்ள தாமரையின் வெண்மையான தாமரைமொட்டைக் கண்டு  அதுவும் கொக்கோ என்று அஞ்சியதை தோழி உவமையுடன் கூறுவதனை,


"குருகு கொளக் குளித்த கெண்டை அயலது" - (குறுந்.127: 1)

என்ற குறுந்தொகைப் பாடலடி அழகாக எடுத்துரைக்கின்றன. இப்பாடல், இத்தகைய வயலை அடுத்த காஞ்சி மரங்கள் வளர்ந்துள்ள ஊரின் தலைவனே  என்பது இதில் வெளிப்படையாக வந்த பொருளாக உள்ளதையும்,


"கள்வர் போல்வர் நீ அகன்றி சினோர்க்கே" - (குறுந்.127: 6)

என்பது பாணன் வாயிலாகப் புக்கத் தோழி தலைவனுக்கு சொல்லியதாகும். இப்பாடலில், முன்பு தலைவனால் விடுவிக்கப்பட்ட பாணனின் பொய்யுரையால் மற்ற எல்லாப் பாணர்களுமே  பொய்யுரைப்போர் என மகளிர் கருதினர் என்னும் பொருளினை உவமையாக எடுத்தாண்டுள்ள தோழியின் அறிவுத்திறன் போற்றத்தக்கதாகும். இதில் கையாளப்பட்டுள்ள குருகு, கெண்டை, தாமரை, கழனி, காஞ்சி,  ஊரன், ஊடல் என்பன மருதத்திணைக்குரியவையாகும்.

கோழியானது காட்டுப்பூனையின் வருகையால் அஞ்சி தன் குஞ்சுகளை அழைத்துக் கூவியது போலத் தம்மிடம் வந்திருந்தத் தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாள் என்றஞ்சியப் பரத்தையர் அம்பல் மொழிந்தனர். அம்மொழியோடு எம் தெருவிற்கு வாரற்க எனத் தோழி தலைவனிடம்  உவமையுடன் எடுத்தியம்புவதனை,


"மனை உறை கோழிக் குறுங்காற் பேடை

…………………………………………..

வாரல் வாழியர் கோழிக் குறுங்காற் பேடை" - (குறுந்.139: 1-6)

என்னும் குறுந்தொகைப் பாடலடிகள் நயம்பட எடுத்துரைக்கின்றன. மேற்கண்ட உவமையில் பயின்று வந்துள்ள கோழி. காட்டுப்பூனை, பரத்தையர், ஊடல் போன்றன மருதத்திணைக்குரியவையாகும். இவை போன்றே 178, 238, 258, 309, 354 எனும் குறுந்தொகைப் பாடல்களிலும் மருதத்திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருட்களை உவமையின் வழியாக வெளிப்படுத்தும் தோழியின் அறிவுத் திறன் போற்றத்தக்கதாகும்.

 மருதத்தில் குறிஞ்சி (திணை மயக்கம்)

          மருதத்திணையின் பாடுபொருளில் குறிஞ்சியின் முதல், கருப்பொருட்கள்  கலப்பதை மருதத்துள் குறிஞ்சி மயங்கியதாகக் கொள்ளப்படும். இவ்வாறு மருதத்துள் குறிஞ்சி மயங்கியதாக குறுந்தொகையில் 3 தோழி கூற்றுப் பாடல்கள் காணப்படுகின்றன. இதனுள் 1 பாடல் தோழி தலைவியோடு பேசுவதாகவும், 1 பாடல் தலைவனோடு பேசுவதாகவும், 1 பாடல் தனக்குள்ளேயே பேசுவதாகவும் அமைந்துள்ளன.

தோழி தலைவியோடு உரையாடுதல்

          வரைவு நீடித்தவிடத்து ஆற்றாளாய தலைவியை உவமையுடன் ஆற்றுவிக்கும் தோழிக்கூற்று திணை மயக்கமாக அமையப்பெற்றதனை,


"…………………………. அருவி

மண்ணுற மணியின் தோன்றும்

தண்நறுந் துறுகல் ஓங்கிய மலையே"  - (குறுந்.367: 5-7)        

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் உணர்த்துகின்றன. இப்பாடலில், 'குறிஞ்சி நில மக்கள் யாவரும் விரும்புமாறு இறங்கி  வீழும் அருவியால் தண்ணிய நறுந்துறுகல் கழுவப் பெற்று மணி போலத் தோற்றமளிக்கும்' என்ற உவமையினை இதனுள்  எடுத்துரைக்கின்றாள் தோழி. இவ்வுவமையின் வழியாக தமர் உடன்பட்டமையால் களவொழுக்கம் எனும் மாசு நீங்கியது என்னும் உண்மையைத் தலைவிக்கு உள்ளுறுத்தி உணர்த்தியுள்ளாள் தோழி. இதில் குறிப்பிடப்பட்டுள்ள மலைப்பகுதியானது தலைவனது நாடாகும். தலைவனது வாழ்விடத்தைக் கண்டு இன்புறும் தொலைவிலேயே தலைவியும், தோழியும் வசித்து வந்துள்ளதை அறிய முடிகின்றது. தோழியால் தலைவனது நாட்டினை உணர்த்தும் பொருட்டே உவமைக் கூறப்பட்டுள்ளது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

 தோழி தலைவனோடு உரையாடுதல்

          தலைவன் தலைவியைவிட்டு பரத்தையர் இடத்துச் சென்றுவிட்டு  திரும்ப தலைவியின் வாயில் வேண்டி நின்ற போது, தலைவனிடம் உண்டான மாறுபாட்டினைத் தோழி உவமையுடன் உரையாடியதனை, 


"வேம்பின் பைங்காய் என் தோழி தரினே

தேம்பூங் கட்டி என்றனிர் இனியே

பாரி பறம்பின் பனித்சுனைத் தெண்ணீர்

தைஇத்  திங்கள் தண்ணிய தரினும்

வெய்ய உவர்க்கும் என்றனிர்

ஐய அற்றால் அன்பின் பாலே"   - (குறுந்.196: 1-6)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகுற எடுத்துரைக்கின்றன. இப்பாடிலில், தலைவனே! என்தோழி களவுக்காலத்தில் வேம்பின் பசிய காயைத் தந்தபோதும் அதனை நீர் தேம்பூங்கட்டி (வெல்லக்கட்டி) என்று கூறி உவந்து சுவைத்தீர். ஆனால் இப்பொழுது  தை மாதத்தில் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்புமலை பனிச்சுனையின் நீரினை தந்தபோதும் இது வெம்மையால் உவர்த்தலைச் செய்யும் எனக் கூறுகிறீர். இது வியப்பைத் தருவதாக உள்ளது. உன் அன்பின் திறம் அத்தகையது போலும் எனத் தோழி தலைவனிடம் உரையாடி, உனது அன்பின் தன்மை மாறியது எதனால் என்று வினவி வாயிலும் மறுக்கிறாள் தோழி.  இதில், தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினால் தலைவி இன்னாதவள் ஆயினால் என்பதை மேற்கண்ட உவமைகள் வழி அழகுற எடுத்துக்காட்டியுள்ளாள் தோழி. மருத்திணைப் பாடலாகிய இதில் கையாளப்பட்டுள்ள பாரியின் பறம்பு மலை, சுனை நீர் முதலியன குறிஞ்சியின் மலைப்பகுதியைக் குறிப்பதாக அமைந்துள்ளன.

 தோழி தன்னுள்ளே சொல்லியது

தலைமகன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடிக்கொண்டு உரலில் உள்ள நெல்லினை உலக்கையால் தலைவி குற்றிக்கொண்டிருக்கையில் அங்கே ஓரிடத்திடத்தில் மறைவாக நின்று கொண்டிருந்த தலைமகன் சிறைப்புறத்தனாகத் தோழி தன்னுள்ளே சொல்லியதில்,


"பெரும்பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்

கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய

நல்இயல் பாவை அன்ன இம்

மெல்இயல் குறுமகள் பாடினள் குறினே"       - (குறுந்.89: 4-7)         

என்ற  உவமை அமைந்துள்ளது. இப்பாடலில் கொல்லிமலை பொறையன் எனும் சேரனுக்குரியது. அம்மலையின் மேற்குப்பகுதியில் தெய்வத்தால் எழுதப்பட்ட நல்ல இயல்பையுடைய  பாவையைப் போன்ற மெல்லிய இயல்புடையவள்  தலைவி எனத் தோழி உவமையாக எடுத்துரைத்துள்ளாள். இதில். குறிஞ்சி நிலப்பகுதியாக கொல்லிமலையும், அதில் உரையும் தெய்வமும், அத்தெய்வம் எழுதியப் பாவையும் தோழியால் எடுத்தாளப்பட்டுள்ளது சுட்டத்தக்கது. மருதத்திணைப் பகுப்பாக அமைந்துள்ள இப்பாடலுள் குறிஞ்சித்திணையினைச் சார்ந்த கொல்லிமலை முதற்பொருளாகவும், கொல்லிப்பாவை கருப்பொருளாகவும் விரவி வந்துள்ளமை சுட்டத்தக்கது.

மருதத்துள் பாலை (திணை மயக்கம்)

          மருதத்திணைப் பகுப்பில் அமைந்த தோழி கூற்று உவமைகளில் பாலையின் முதற்பொருள் மற்றும் கருப்பொருட்கள் மயங்கிய நிலையில் அமையும்போது அது மருதத்துள் பாலை எனத் திணைமயங்கி அமைகின்றன. இவ்வகையில் குறுந்தொகையில்  1 பாடல் மட்டும் காணப்படுப்படுகின்றது. அப்பாடல் தோழி தலைவனோடு உரையாடுவதாக அமைந்துள்ளது.

தோழி தலைவனோடு உரையாடுதல்

          தலைவன் தலைவியை திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்தியதால், நீ தலைவியின் நலனை நுகர்ந்தாய் ஆனால் அவள் உன்னை அடைய மாட்டாள் போலத் தோன்றுகிறது. ஆதலால், இனி அவள் உயிர்வாழ்ந்து என்ன பயன் என்றுரைத்து தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொள்ள வேண்டும் என்பதை தோழி உவமையுடன் எடுத்துரைப்பதனை,

 

"சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்

றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்

நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே

பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல

எமக்கும் பெரும்புல வாகி

நும்மும் பெறேஎம் இறீஇயர் உம் உயிரே"  - (குறுந்.169: 1-6)

எனும் குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. இப்பாடலில், தலைவன் முன்பு கூறியவற்றை உண்மையென நம்பி சிரித்து மகிழ்ந்த எம்முடைய வெள்ளிய தூய பற்கள் பாலை நிலைத்தில் செல்லும் யானையினது பாறையைக் குத்திய கொம்பு போல் இற்று அழிவதாகுக எனவும், எமது உயிர் மீன் வலைஞர் தாம்பிடித்த புதிய மீன்களை இட்டுவைத்து வகுத்த மரக்கலம் போல் எமக்கும் பெரிய வெறுப்பைச் செய்து உம்மையும் யாம் பெறோமாய் அழிவதாகுக எனவும் தோழி உவமைகள் கூறுகிறாள். இவ்வுவமைகளில் இடம்பெற்றுள்ள சுரம், யானை, பாறை முதலியனப் பாலைத்திணையினை குறிப்பதாக அமைகின்றது. இதன் வழி இது மருதத்தில் பாலை விரவிய நிலையில் திணைமயங்கி அமைந்துள்ளதை அறிய முடிகின்றது.

ஆய்வு முடிவுரை

முல்லையில் தோழி தலைவியோடு உரையாடுவதாக அமைந்த பாடல்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அதே வேளையில், மருதையில் தோழி தலைவனோடு சொல்லாடுவதாக அமைந்த பாடல்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. முல்லையில் தோழி கூறும் உவமைகளில் முல்லைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலையும் சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளன. மருதைப் பகுப்பில் அமைந்த தோழிகூற்றுப் பாக்களில் மருத்திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருட்களே உவமைகளாக கையாளப்பட்டுள்;ளன. முல்லையில் திணைமயங்குவதாக பாடல்கள் ஏதும் அமையப்பெறவில்லை. ஆனால், மருதையில் குறிஞ்சி மயங்குவதாக 3 பாடல்களும், பாலை மயங்குவதாக 1 பாடலும் அமைந்துள்ளன. குறிஞ்சி  மற்றும் மருதைக்குரிய முதல், கரு மற்றும் உரிப்பொருட்களை உவமையின் வழியாக வெளிப்படுத்தும் தோழியின் மதிநுட்பம் போற்றத்தக்கதாகும். பல்வேறு திறன்களின் மூலமாகத் தோழியானவள் குறுந்தொகையில் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளதையும், குறுந்தொகையில் தோழி கூற்றுப்பாடல்கள், தோழியின் பன்முக ஆற்றல்களையும், அவர்களின் அன்பு நிலைகளையும், உறவுகளையும், குடும்ப வாழ்க்கைக் குறித்த தோழியின் அக்கறையையும் புலப்படுத்தி உண்மையான தோழியின் இயல்புகளையும், கடமைகளையும் உணர்த்தி நிற்பனவாக அமைவதை இவ்வாய்வு விளக்குகின்றது.

 

Reference Books:

1.      Kurunthogai Moolamum Uraiyum, Dr.U.Ve.Swaminatha Iyer, Dr.U.Ve.Sa. Nool Kilayam, Chennai, Seventh Edition, 2017.

 

2.      Perasiriyar (Uraiyasiriyar), Thokappiyam, (Meipattiyal, Uvamaiyil, Seyuliyal, Marpiyal) Kazhaka Veliyedu, Chennai, First Edition 2017.

 

3.      Srinivasan.R, Sanga Illakkiyathil Uvamaikal, Aniyagam, Chennai, Fourth Edition, 1997.

 

4.      Sanga Illakkiyathil Thozhi, Sarala Rasagopalan, Olipathipagam, Chennai, First Edition 1986.

 

5.      Thokappiyam Porulathikaram, Nachinarkkiniyar Urai, Annamalai University, Fifth Edition, 1986.

 

6.      Kurunthogai (Moolamum Uraiyum), Uraiyasiriyar  Puliyur Kesigan, Saratha Publication, Chennai, Fourth Edition, 2015.

 

7.      Kurunthogai (Moolamum Uraiyum), Uraiyasiriyar, Dr.V.Nagarasan, New Century Book House, Chennai, First Edition, 2014.

 

8.      Kuruntokai Kaṭṭum Akamarapuk Koṭpaṭum Paṇpaṭum,  Dr.Su.A.Annaiyappan, Tamilarasi Publication, Chennai, First Edition, 2016.

 

9.      Kurunthogai (Moolamum Vilakka Uraiyum), Sakthidhasan Subramaniyan, Mullai Pathippagam, Chennai, First Edition, 2013.

 

10.   Kurunthogai (Kavithai Arimugam), Thiruventhi, Santhiya Pathippagam, Chennai, Second Edition, 2014.

 

11.   Kurunthogai (Moolamum Eliya Uraiyum), Dr. Prabakaran Ra, Kavya Pathippagam, Chennai, Second Edition, 2017.

 

12.   Kurunthogai Perunselvam, Sami. Chidamparanar, Poombugar Pathippakam, First Edition, 2011.

 


No comments:

Post a Comment