Search This Blog

Saturday, December 8, 2012

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள் - 1

புறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் "கார்ன் ப்ளேக்ஸ்" (மக்காச் சோளம்), "ரைஸ் கிரிஸ்பிஸ்" (அரிசிப் பொறி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி? இதுவும் ஆராய்ச்சிக்குரிய பொருள்!

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மரம் வாடி விடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டு பிடிக்கும் கருவியைப் (Lie detector) பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம், மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டு பிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்கு ஒரு படி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூடப் பொய்யைக் கண்டு பிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட "மோப்பக் குழையும் அனிச்சம் என்று அனிச்சம் பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடி விடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தவன் தமிழன், இன்னொரு சங்கப் பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றி, பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்.

விண் வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போலக் காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே - விண் வெளியில் - வளி (காற்று) மண்டலம் இல்லை. இதைப் பழந் தமிழர் அறிந்திருந்தனர் போலும்! வெள்ளக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) "வளியிட வழங்கா வானம்" என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் (புறம் 20) "வறி நிலை இல் காயம்" என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365) "வளியிட வழங்கா வழக்கு அரு நீத்தம்" என்றும் வள்ளுவன் (குறள் 245) "வளி வழங்கு பூமி" என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.

ஒலியும் ஒளியும் (Sound and light) மின் காந்தப் பட்டையின் (Electro Magnetic spectrum) ஒரே அங்கம் என்று தற்கால அறிவியல் கூறுகிறது. இதை அறிந்து தானோ என்னவோ தமிழ் மொழியில் மட்டும் ஒலி - ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்கப் பயன் படுத்தப் படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.

தற்காலப் பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (Bird migration) பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சில வகை பறவைகள் 12,000 மைல் பறந்து வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக் கண்டு பிடிக்க நவீன உத்திகளைக் (Electronic Tagging or Ringing) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும், ஊர்ப் பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டி விடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும், அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டுப் பறவையியல் அறிஞர்கள் உலக முழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக் கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப் பறவைகள் பறந்து செல்வதையும் இமய மலையிலிருந்து அவை தமிழ் நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வந்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும், மின்னணுக் கருவியைப் பயன் படுத்தாமலும் அன்னப் பறவையின் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.

(புறம் 67 - பிசிராந்தையார் நற்றிணை - 70 வெள்ளி வீதியார், நற்றிணை 356 - பாணர், அகம் 120 - நக்கீரனார், அகம் 273 - ஒளவையார் ஆகிய பாடல்களைக் காண்க).

பிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான "நியூஸ் வீக்"கில் அண்மைக் காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டான் தமிழன். குரங்குகள் முரசு அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும், குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன் படுத்தும் காட்சியை பிபிசி டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் விசில் அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியைக் கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்தில் கிளிகளின் மூலம் நெல் முதலிய தானியங்களைக் கொணர்ந்து பல மாதங்கள் உயிர் வாழ்ந்தனர் என்று (Survival techniques using animals at war times) ஒளவையாரும் (அகம் 303) நக்கீரரும் (அகம் 78) குறிப்பிடுகின்றனர். கிளிகளை இவ்வாறு பயன் படுத்தியவர் கபிலர் என்றும் கூறுகின்றனர்.

பருவக் காற்றின் பயனை ஹிப்பாலஸ் என்ற கிரேக்கர் தான் முதல் முதலில் கண்டு பிடித்தார் என்றும் இது கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் கரிகால் பெரு வளத்தானைப் பாடிய வெண்ணிக் குயத்தியார் (புறம் 66) கரிகால் வளவனின் முன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

நறி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உருவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ. (புறம் 66)

மாங்குடி மருதனும் (புறம் 26), மருதன் இளநகனும் (கலி 82), வளி வழங்கு கலம் (பாய் மரக் கப்பல்), பருவக் காற்று ஆகியன பற்றிப் பாடுகின்றனர்.



தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

No comments:

Post a Comment