Search This Blog

Wednesday, October 17, 2012

காவிரிப்பூம்பட்டினம்

காவிரிப்பூம்பட்டினம் :-

       தமிழர் பழம்பெருமையை நிலைநாட்டிக் கொண்டு இருந்த பெருநகரங்களுள் காவிரிப்பூம்பட்டினம் ஒன்று.  புகார் பூம்புகார் போன்றன பிற பெயர்கள், காவிரி ஆற்றின் கரையில் அமைந்த பட்டினம் காரணமாக, காவிரி புகும்பட்டினம் காரணமாகக் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயர் அமைந்ததா அல்லது சோலைகள் நிறைந்த மலர்கள் நிரம்பிய பட்டினம் அருகில் ஓடிய ஆறு காவிரி என்று அழைக்கப்பட்டதா என்பது ஆய்வுக்குரியது.  இங்குள்ள சிவன் கோயில் பல்லவன் வழிபட்டதன் காரணமாகப் “பல்லவனீச்சரம்” என்று சுட்டப்பட்டது என அறிகின்றோம்.  ஞானசம்பந்தர் பட்டினத்துப் பல்லவனிச்சரம் (65-2) புகாரிற் பல்லவனீச்சரம் (65-9) என்று சுட்டும் தன்மையால் இப்பெயர்கள் தொடர்ந்து இருந்த வழக்கினைத் தெரிய இயலுகிறது.

                  சங்க காலத்தில் “காவிரிப்பூம்பட்டினம்” என்ற பெயரையும் புகார் என்ற பெயரையும் காண்கின்றோம். சோழநாட்டின் துறைமுகப் பட்டினமாகவும் தலைநகராகவும் இருந்தது.  இத்தலத்தின் முதல் பெயர் காவிரிப்பூம்பட்டினமாக இருக்கலாம் என்பதனை அப்பெயர் மிகுதி காட்டுகிறது. காவிரிப்பூம்பட்டினம் ஊர்ப்பெயர் இணைந்த புலவர் பலர் காணப்படுகின்றனர். இதனுடன் புகாஅர் என்ற பெயரும் பழமையானது.  பரணரின் அகநானூற்றுப் பாடல் (181)

“மகர நெற்றி வான் தோய் புரிசைச்
சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில்
புகா அர் நன்னாடு”

என்கின்ற நிலையில் இப்பெயரின் பழமை தெரிகிறது.  மயிலை சீனி. வேங்கடசாமி, காவிரியாறு கடலில் கூடுகிற இடமாதலின் இந்நகரம் புகார் என்றும் பூம்புகார் என்றும் பெயர் பெற்றது என்பர்.  மேலும்,

“தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும்
மலியோத்தது ஒலிகூடல்”

        என்ற பட்டினப்பாலை (97-98). வரிகளுக்கு உரை கூறுகின்ற நச்சினார்க்கினியர். “தெளிந்தகடலில் திரையோடே காவிரி தலைகரக்கும் ஓதத்தினால் ஒலிமலிந்த புகார் முகம்” என்று விளக்குகின்றார்.  எனவே காவிரியாறு கடலில் புகுகிற இடமாதலின் இதற்குப் புகார் என்று பெயர் வந்த்து என்பது தெளிவாகிறது என்கின்றார் இப்புகார் பின்னர் அழகிய புகார், பூக்கள் மலிந்த புகார் என்ற நிலையில் பூம்புகார் என்ற பெயரினை அடைந்திருக்க வேண்டும்.  சிலம்பிலேயே பூம்புகார் தோற்றம் கொள்கிறது.  மணிமேகலை பதிகம், நாவலந்தீவின் காவற் தெய்வமாக நாவன் மரத்தின் கீழ் இருந்த சம்பாபதியை (சம்பு-நாவல்) அகத்தியன் தன் கரகத்தைக் கவிழ்த்தலால் வெளிப்போந்த காவிரி வணங்க அத்தொன் மூதாட்டி.

“செம்மலர் முதியோன் செய்த வந்நாள்
என் பெயர்ப்படுத்த இவ்விரும் பெயர் மூதூர்
நின் பெயர்ப்படுத்தேன் நீ வாழிய என
இருபாற் பெயரிய உருகெழு மூதூர்” (பதி 29-22)

                              எனக் குறிப்பிடும் நிலையில் இவ்வூர் இரு பெயரினையுடையது என்பதை விளக்குகின்றது.  இது கதையாக இருப்பினும் “காவிரிப்பூம்பட்டினம்” என்பதே இவ்வூரின் முதற்பெயர் என்பது இங்கு விளக்கம் பெறுகிறது.

                      காவிரிப்பூம்பட்டினம் என்னும் பழம் சிறப்பு பொருந்திய இடம் இன்று சிறியதொரு கிராமமாக அமைகிறது.  “பூம்புகார்” இன்று அரசின் தலையீடு காரணமாகத் தம் கலைப்பெருமையை எடுத்தியம்பும் நிலையில் நின்று சிறக்கிறது. காவிரிப்பூம்பட்டினம் துறைமுகமாகவும், வாணிபத்தலமாகவும் அன்று விளங்கி இடைக்காலத்திலேயே கடல் கொண்ட நிலையில் அதன் சிறப்பும் முழ்கிவிட்டது.  சேக்கிழார் அடிச்சுவட்டில் நூலாசிரியர் (பக். 85) சேக்கிழார் போன்ற பிறர் இதனைப் பற்றிச் சிறப்பாகப் பாடாமை காரணம் காட்டி, இந்நகரின் சிறப்பிழந்த நிலையை காட்டுகின்றார்.

                இந்நகரம் சிறந்த நகரமாக விளங்கிய நிலையையும், மக்கள் இந்நகரினைச் சிறப்புற அமைத்த அமைப்பு முறையையும் தெளிவாக்குகிறது சிலப்பதிகாரம்.  பூம்புகாரின் அமைப்பு முறையை நாம் அறிய சிறந்ததொரு சான்றாக அமைகிறது. கடற்கரையைச் சார்ந்த மணல் பரந்த இடம் நெய்தலங்கானல், அதை அடுத்து மருவூர்ப்பாக்கம் (வணிகர்கள் தங்குமிடம்) அடுத்து நாளங்காடி பின்னர் சோழ மன்னர்கள், பெருங்குடி மக்கள் வசித்த பட்டினப் பாக்கம், என்ற மிகச் சிறப்பான ஊர் அமைப்பு முறையினை நோக்க இவ்வூரின் தொன்மையும், பெருமையும் தெளிவாக விளங்குகிறது.  நகரமைப்புக் கலை எட்டு வகையானது என்ற எண்ணத்திற்குள் தாமரைப்பூ வடிவத்தைக் காஞ்சியும் மதுரையும் தர, இவ்வூரின் அமைப்பு வேறு நிலையில் அமைந்து, அன்றைய தமிழரின் நகரமைப்புக் கலையுணர்வினைத் தருகின்றது எனலாம்.  இங்குக் காணப்பட்ட கோயில்களில் பெருக்கமும் மக்கள் இங்கு நெருங்கி வாழ்ந்த தன்மையையுணர்த்து மாற்றான் அமைகிறது.  சாய்க்காடு, பல்லவனீச்சரம் என்பன இங்குள்ள கோயில்கள் இருக்குமிடம்.  சாய்க்காடு இன்று சாயாவனம் என்றழைக்கப்படுகிறது.

                       பௌத்தர்கள் இங்கு செல்வாக்குடன் வாழ்ந்து இருந்தனர் என்பதும், பாலி மொழியில் உள்ள பௌத்த நூல்களில் இப்பட்டினம் கவீரப்பட்டினம் என்று கூறப்படுகிறது என்பதும், மயிலைச் சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூல் தரும் எண்ணம்.

                         பதினொராம் திருமுறையிலும், சேக்கிழாராலும், சுட்டப்படும் தலம் அப்பர் ஞானசம்பந்தர் பாடல் பெற்று அமைகிறது.

                     சாய் என்பது கோரைப் புல்லின் வகை, பஞ்சாய்க் கோரையில் பாவை செய்யும் நிலையைச் சங்கப் பாக்கள் இயம்பும். எனவே இக்கோரைகள் மிகுந்த பகுதியாக இருந்த இடம் என்பது தெளிவு.  கோயில் எழும்பிய பின்னர், இப்பகுதியில் மக்கள் வசிக்கத் தொடங்கியிருக்கலாம்.  இன்று மக்கள் வழக்கில் “சாய” என்பது சாயா எனப் பொருளே மாறி அமையும் நிலையைக் காண்கின்றோம்.  ஆதிசேடனது நாகமணி ஒளிவீசியதால் இப்பெயர் பெற்றது என்பர்.  இப்பொருட்குச் சாய்ஒளி என்பர் என்ற எண்ணமும் அமைகிறது.

                        காவிரியாற்றின் கரையில் இருக்கும் இத்தலம் பூம்புகாரின் ஒரு பகுதியே என்பது ஐயடிகள் காடவர்கோன் பாடல்களில் மிகவும் தெளிவாக அமைகிறது.


- நெஞ்சமே
போய்க்காடு கூட புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழு நீ சார்ந்து
தண்புகார்ச் சாய்க்காடு – 176-1
பூம்புகார்ச்ச சாய்க்காடு – 177-2
காவிரிப் பூம்பட்டினத்துச் சாய்க்காடு – 177-4

- இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள், தொகுதி – இரண்டு, டாக்டர். கே. பகவதி – ப. 94.




தொகுப்பு :-

சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,  
தமிழ்நாடு - இந்தியா.

No comments:

Post a Comment