Search This Blog

Tuesday, November 25, 2025

 

சிலப்பதிகாரத்தில் கட்டடக்கலை

முனைவர் செ. சத்யா,

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி,

மேல்மருவத்தூர் – 603 319.

செங்கல்பட்டு மாவட்டம்.

அலைபேசி: 8124257222

மின்னஞ்சல்: sathyasenthil77@gmail.com


ஆய்வின் நோக்கம்

கலைகளின் வகைகளைக் குறிப்பிடும்போது நுண்கலை என்றொரு வகையைக் காண்போம். இந்த நுண்கலையில் கட்டக்கலை, சிற்பம், ஓவியம் போன்றவை அடங்கும். இத்தகைய சிறப்புமிக்க கட்டக்கலை சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள வகைமை குறித்து அறிய முற்படுவதே சிலப்பதிகாரத்தில் கட்டக்கலை என்னும் இவ்வாய்வின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்

சிலப்பதிகாரம், சிலம்பு, கட்டடக்கலை, நுண்கலை, சிற்பக்கலை, பழந்தமிழர்களின் நுண்ணறிவு, கட்டடக் கலை நுட்பம், இலக்கியங்களில் கட்டடக் கலை.

மதுரை நகர அமைப்பு

            மதுரை நகரின் வெளிப்புறத்தில் அகழி அமைக்கப்பட்டிருந்தது. மதுரை நகரின் கோட்டையில் நான்கு பக்கங்களிலும் வாயில்கள் இருந்தன. அகழியில் ஆமைகளும், கொடிய முதலைகளும் இருந்தன. இதனால் பகைவர்கள் யாரும் இவ்வகழியில் இறங்கத் தணிய மாட்டார்கள். அகழி மிகவும் ஆழமுடையதாக இருந்தது. நகரின் கோட்டை வாயில்கள் பெரிதாகக் கட்டப்பட்டிருந்தன. வாயில்கள் வலிமையான கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாயில்கள் யானைகள் அம்பாரியுடன் புகுந்து செல்லும்படியான அகன்ற உயரமான வாயில்களாக இருந்தன என்பதை,

"இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த

விலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில்

பெருங்கை யானை இனநிரை பெயரும்

கருங்கை வீதி மருங்கில் போகி"1

எனும் பாடலடிகளால் அறியமுடிகின்றது.

மதில்

            மதுரை நகரில் பகைவரிடமிருந்து தன் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அரசன் கோட்டை மதிலினைக் கட்டி அம்மதிலிலைக் காவல் செய்யப் பல்வேறு பொறிகளை அமைத்து பகைவருக்கு அச்சம் தரும் விதத்திலும் பகைவரிடமிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதில் நுட்பமான அறிவுத்திறனைப் பெற்றவனாக இருந்துள்ளதனை,

"மிளையுங் கிடங்கும் வளைவில் பொறியும்

கருவிரல் ஊகமுங் கல்லுமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்

காய்பொன் உலையுங் கல்லிடு கூடையும்

தூண்டில் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்

கவையும் கழுவும் புதையும் பழையும்

ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்

சென்றுஎறி சிரலும் பன்றியும் பணையும்

எழுவும் சீப்பும் முழுவிறல் கணையமும்

கோலும் குந்தமும் வேலும் பிறவும்"2

எனும் பாடலடிகள் வழி அறியலாம். இப்பாடலில், வளைந்து தானே எய்யும் எந்திர வில்லும், குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறியும், கல் உமிழும் கவணும், காய்ச்சிய நெய்யைச் சொரியும் பொறிகளும், செம்புருக்கும் மிடாக்களும், கற்களிட்ட கூடைகளும், தூண்டிற் பொறிகளும், கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலியும், ஆண்டலைப்புள் வடிவான பொறிகளும், இரும்புக் கவைகளும், கழுகுக்கோலும், அம்புக் கட்டுகளும், மறைந்து நின்ற போரிடும் புழையும், தலை வாங்கும் பொறிகளும், சிற்றம்புகளை எய்யும் எந்திரமும், ஊடுருவிச் சென்று வருத்தும் ஊசிகளும், பகைவரைத் தாக்கும் கிச்சிலிப் பொறிகளும், பன்றிப் பொறிகளும், பேய் வடிவான பொறிகளும், கதவுக்கு வழியாக உட்புறத்தில் வீழ ஏதுவான விடுமரங்களும், கணையமும், எறிகோலும், வேலும், பிறவும் அங்கே அமைக்கப்பட்டிருந்தன என்பதனை சுட்டுகின்றது.

வஞ்சி நகரமைப்பு

சேரனின் வஞ்சி நகரம் மிகுந்த காவலையுடைய நகரமாக இருந்துள்ளதனை,

"காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா"3

எனும் அடியும், வஞ்சியின் மதில் இமயமலையைப் போன்று உயர்ந்ததாக இருந்தது என்பதை,

"இடைநின் றோங்கிய நெடுநிலை மேருவின்

கொடிமதில் மூதூர் நடுநின் றோங்கிய"4

எனும் பாடலடிகள் சுட்டுகின்றன. வஞ்சியின் மதில் புறத்தில் நீரினையுடைய ஆழமான அகழி இருந்ததையும் இவ்வகழியே மாளிகைக்கு நான்கு புறமும் வேலியாக இருந்ததை அறிந்து கொள்ள முடிகின்றது.

மாளிகைகள்

            தற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியின் துணையுடன் பல புதிய வடிவங்களிலும் நவீன முறையிலும் மனிதன் தன் இருப்பிடத்தை அமைக்கக் கற்றுக் கொண்டான். அதன் விளைவே இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டடங்கள். இவை இன்று மட்டுமல்ல இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இருந்தமையைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. பழந்தமிழர்கள் அனுபவத்தையும், அழகுணர்ச்சியையும் கொண்டு பல வடிவங்களில் அரண்மனைகளையும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளையும், மாட மாளிகைகளையும், தனி வீடுகளையும் கட்டி இன்புற வாழ்ந்திருந்தனர் என்பதனைச் சிலப்பதிகாரம் பகிர்கின்றது.

உயர்ந்த அடுக்குகளை உடைய மாடங்களை எழுநிலை மாடம் என்றும் நெடுநிலை மாடம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எழுநிலை மாடம் என்பது ஏழு அடுக்குகளைக் கொண்ட மாளிகையாகும். புகார் நகரில் எழுநிலை மாடத்தில் கோவலன் கண்ணகியுடன் ஏழு அடுக்கு மாளிகையின் நான்காம் அடுக்கில் வாழ்ந்து வந்தனர் என்பதனை,

"நெடுநிலை மாடத்து இடைநிலத் திருத்துழி"5

எனும் அடியால் அறியலாம்.

கோவலனைப் பிரிந்த மாதவி பசலை படர்ந்த மேனியை உடையவளாகவும், பிரிவினைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எழுநிலை மாடத்தில் நடுநிலையில் அமைந்திருந்த படுக்கையில் படுத்து வருந்தியதனை,

"பசந்த மேனியள் படந்நேய் உற்று

நெடுநிலை மாடத்து இடநிலைத் தாங்கோர்

படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்"6

எனும் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன.

உயர்ந்த மாளிகைகளையும் கட்டடங்களையும் கட்டுவதில் கைதேர்ந்த பழந்தமிழர்கள் மரகம், வைரம், பவளம் போன்றவற்றால் அம்மாளிகையை அலங்கரித்து அழகுப்படுத்திப் பார்க்கக் கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதனை,

"மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்

பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை

நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்"7

எனும் பாடலடிகள் விளக்குகின்றன. புகாரில் காணப்பட்ட மாளிகைகள் நீண்டதாக, அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு அமைந்திருந்ததனை இதன் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார் இளங்கோவடிகள்.

பழந்தமிழ் கட்டட வல்லுநர்கள் சிறந்த முறையில் கட்டிய மேகம் தவழக் கூடிய உயர்ந்த மாடத்தில் ஆடவருடன் மகளிர் கூடி மகிழ்ந்திருந்தனர் என்பதனை,

"காலம் அன்றியும் நூலோர் சிறப்பின்

முகில்தோய் மாடத் தகிழ்தரு விறகின்

மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து"8

எனும் இவ்வடிகள் விளக்குகின்றன. நிலா முற்றத்தை நிலவின் பயனைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல் முன்பனிக்காலத்தில் இதமான வெயிலின் இன்பத்தினைப் பெறுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதனை,

"வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி

இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர"9

எனும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.

தெருக்கள்

புகாரில் அரசன் புடைசூழ வலம் வருமளவிற்கு தெருக்கள் அகலமாக இருந்ததனை இளங்கோவடிகள் எடுத்துரைப்பதனை,

"அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்

தேர்வலஞ் செய்து கவிகை கொடுப்ப

ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங்கு"10

எனும் அடிகள் எடுத்துரைக்கின்றன.  இப்பாடல் மாதவியின் நடன அரங்கேற்றத்திற்கு முன்னர், சிறந்த முறையில் நடனமாடுபவருக்கு வழங்கப்படும் தலைக்கோலினை, யானை மீது ஏற்றி நகரினைச் சுற்றி அரசனும், ஐம்பெருங்குழுவினரும், யானையும் நகரை வலம் வந்துள்ளதனை சுட்டுகின்றன.

            புகார் நகரில் அகன்ற நீண்ட தெருக்களையும், குறுகிய தெருக்களையும் கட்டடக் கலைஞர்கள் அமைத்திருந்தனர் என்பதனை,

"முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்

விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்"11

எனும் அடிகள் சுட்டுகின்றன. இதில், இந்திர விழா நாட்களில் குறுகிய தெருக்களும் அகன்ற தெருக்களும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

சாளரங்கள்

பழந்தமிழர்கள்  இயற்கைச் சூழல், தட்ப வெப்ப நிலை, கால நிலை மாற்றங்களுக்கு ஏற்பக் கட்டடங்களைக் கட்டியிருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. மாளிகையின் ஓர் அங்கமாகச் சாளரத்தினை அமைத்திருந்தனர். மாளிகையினுள் இருக்கும் காற்று வெளியில் செல்லவும் வெளிகாற்று உள்ளே வரவும் பயனுடையதாக இச்சாளரங்கள் அமைந்திருந்தன. ஏழு அடுக்கு மாளிகையில் ஆறாவது அடுக்கில், கோடைக் காலத்தில் வெளியிலிருக்கும் தென்றல் காற்று மாளிகைக்குள் வருவதற்கு ஏற்பக் கண்களைப் போன்ற துளைகளையுடைய சாளரங்களை அமைத்திருந்தனர் என்பதனை,

"மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த

கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து"12

எனும் அடிகள் விளக்குகின்றன. சாளரங்களில் அழகிய மணிமாலைகளைத் தொங்கவிட்டு அழகுபெறச் செய்தனர். இதன் வழியாக வரும் தென்றல் காற்றானது மகிழ்ச்சியைத் தந்தன என்கிறார் ஆசிரியர்.

மற்றொரு இடத்தில் மாளிகையின் இடங்களைக் குறித்துக் கூறுகையில், மானின் சிறிய கண்ணைப் போன்று துளை செய்யப்பட்ட சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்ததை,

"மான்கட் காலதர் மாளிகை யிடங்களும்"13

எனக் கட்டடக்கலை வல்லுநர்களின் நுண்ணிய அறிவுத் திறனை வெளிக்காட்டுவனவாக இவ்வடி அமைந்துள்ளது. அறிவும், ஆற்றலும், அழகுணர்ச்சியும் பெற்றவர்களாகக் கட்டடக்கலை வல்லுநர்கள் இருந்துள்ளனர்.

காற்றையும், ஒளியையும் இல்லத்தினுள் கொண்டு வரும் சாளரங்களைக் குளிர் காலத்தில் மூடியும் திறந்தும் பயன்படுத்தக் கூடிய விதமாகப் பழந்தமிழர் அமைத்திருந்தனர் என்பதனை,

"நறுஞ்சாந் தகலத்து நம்பியார் தம்மொடு

குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்"14

என்ற அடிகள் புலப்படுத்துகின்றன. இவ்வடிகள் மூலம் குளிர் காலத்தில் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வராமல் தடுப்பதற்கு ஏற்ற விதத்தில் குறுகிய துளைகளைக் கொண்ட சாளரங்களை அமைத்திருந்தனர் என்பதனை அறியமுடிகிறது.

வாயில் / கதவுகள்

            பழங்காலத் தமிழகத்தின் முதன்மை நகரங்களாகத் திகழ்ந்த புகார், மதுரை, வஞ்சியினுள் வாயில்களும், கதவுகளும் நீண்டதாக, பெரியதாக, வலிமையுடையனவாக அமைக்கப்பட்டிருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. கதவுகள் தாழ்ப்பாள் உடையதாக மூடுவதற்கும், பூட்டுவதற்கும் ஏற்ற விதத்தில் அமைக்கப்பட்டிருந்ததை,

"தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்

நீணொடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு"15

எனும் இவ்வடிகள் சுட்டுகின்றன. புகாரின் உயர்ந்த கோபுர வாயில்கள் மக்கள் செல்வதற்கும் வருவதற்கும் என்று அமைக்கப்பட்டிருந்தன என்பதனை,

"உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி"16

என்ற அடியில் பாதுகாப்புக் கருதி நீண்ட உயரிய கோபுரங்களும், வாயில்களும் புகாரில் கட்டப்பட்டிருந்தன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

படுக்கை அறைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் தன் வாழ்விடத்தைப் பட்டறிவைக் கொண்டு அழகுணர்ச்சியால் நன்கு திட்டமிட்டு கட்டியிருந்தான் என்பதை சிலப்பதிகாரப் பாடலடிகள் உணர்த்துகின்றன. தான் வாழும் நிலத்திற்கும், தட்ப  வெப்ப நிலைக்கும், காலச் சூழலுக்கும் ஏற்ப வேனிற்பள்ளி, கூரிர்ப்பள்ளி என இருவேறமைப்புடைய படுக்கை அறைகளைத் தங்கள் மாளிகைகளிலும், வீடுகளில் கட்டியிருந்தனர்  என்பதனை,

"வேனிற் பள்ளி மேவாது கழிந்து

கூதிர்ப் பள்ளி குறுங்கண் அடைத்து"17

எனும் இவ்வடிகள் அழகாக வெளிப்படுத்துகின்றன.

"வானுற நிவந்த மேல்நிலை மருங்கின்

வேனில் பள்ளி ஏறி மாணிழை"18

எனும் பாடலடிகளில் உயர்ந்த மாடமாளிகையின் ஒரு பக்கத்தில் இளவேனில் காலத்தில் தூங்குவதற்கெனத் தனி படுக்கை அறை இருந்ததையும், வேனிற்பள்ளி, கூதிர்ப்பள்ளி என்று குளிர்கால படுக்கை அறைகள் வெயில் காலத்தின் வெப்பத்தை நீக்கி குளிர்ச்சியைத் தரும் படுக்கை அறைகளாக புகார் நகரின் ஏழு நிலைகளை உடைய மாடங்களில் அமைக்கப்பட்டிருந்தன என்பதனை அறிய முடிகிறது.

சித்திர மண்டபம்

சோழ மன்னன் புகார் நகரில் தன் அரண்மனையின் தோட்டத்தில் 'சித்திர மண்டபம்' ஒன்றை தேவதச்சன் என்று சொல்லப்படுகிற மயனின் மரபுப் படியே இச்சித்திர மண்டபத்தை திருமாவளவன் கட்டியுள்ளான் என்பதனை,

"பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும்

நுண்வினைக் கம்மியர் காணா மரபின

துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோர் உதவிக்கு

மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம்

ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோர் ஏத்தும்

அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்"19

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன. இந்திரவிழாவினைக் காண வந்தவர்கள் அனைவரும் சித்திர மண்டபத்தை பார்த்து வியந்து போற்றினர். பவளத்தால் தூண்கள் செய்து, பொன்னினால் மேற்கூரையினைச் செய்து, முத்துமாலை, மணிகளைக் கொண்டு அலங்கரித்து சித்திர மண்டபமாக உருப்பெறச் செய்து மகிழ்ந்தான் என்று கூறலாம். உயர்ந்தோர், பெரியோர் போற்றும்படி இம்மண்டபம் அமைந்திருந்தது என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

வெள்ளி மாடம்

செங்கல், மண், சுதை கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் வெள்ளியினாலும், பொன்னினாலும் அலங்கரிக்கப்பட்டு பொலிவு பெற்ற என்பதனை,

"வானவர் தோன்றல் வாய்வாள் கோதை

விளங்கில வந்தி வெள்ளி மாடத்து

இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளித்"20

எனும் பாடலடிகள் உணர்த்துகின்றன. இதில், சேரன் செங்குட்டுவனின் அரண்மனை வெள்ளியினால் அமைக்கப்பட்டிருந்ததையும், தன் மனைவியுடனும் சகோதரனுடனும் வெள்ளி மாடத்தில் சேர மன்னன் அமர்ந்திருந்தான் என்று சுட்டுகிறார் இளங்கோவடிகள்.

முடிவுரை

‘சிலப்பதிகாரத்தில் கட்டடக்கலை’ என்னும் இவ்வாய்வின் மூலம் நுண்கலையின் வகைகளுள் ஒன்றான கட்டக்கலை குறித்துச் சிலப்பதிகாரத்தில் மிகவும் நுணக்கமாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. நகர அமைப்பு, மதில், மாளிகைகள், தெருக்கள், சாளரங்கள், வாயில் / கதவுகள், படுக்கை அறைகள், சித்திர மண்டபம், வெள்ளி மாடம் ஆகியன குறித்த செய்திகள் ஆராயப் பெற்று விளக்கப் பெற்றுள்ளன.

சான்றெண் விளக்கம்

1. சிலப்பதிகாரம், ஊர்காண் காதை, அடி.62-65

2. சிலப்பதிகாரம், அடைக்கலக் காதை, அடி.207-216

3. சிலப்பதிகாரம், காட்சிக் காதை, அடி.174

4. சிலப்பதிகாரம், நடுகற் காதை, அடி.48-49

5. சிலப்பதிகாரம், மனையறம் படுத்த காதை, அடி.13

6. சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதை, அடி.68-70

7. சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை, அடி.147-149

8. சிலப்பதிகாரம், ஊர்காண் காதை, அடி.97-99

9. சிலப்பதிகாரம், ஊர்காண் காதை, அடி.102-103

10. சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, அடி.126-128

11. சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை, அடி.187-188

12. சிலப்பதிகாரம், மனையறம் படுத்த காதை, அடி.22-23

13. சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை, அடி.8

14. சிலப்பதிகாரம், ஊர்காண் காதை, அடி.100-101

15. சிலப்பதிகாரம், நாடுகாண் காதை, அடி.7-8

16. சிலப்பதிகாரம், நாடுகாண் காதை, அடி.27

17. சிலப்பதிகாரம், அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, அடி.60-61

18. சிலப்பதிகாரம், வேனிற்காதை, அடி.17-18

19. சிலப்பதிகாரம், இந்திரவிழவூரெடுத்த காதை, அடி.105-110

20. சிலப்பதிகாரம், காட்சிக் காதை, அடி.3-5

 

1.சாமிநாதையர் உ.வே., 2001, இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடு, சென்னை.

2. இராசமாணிக்கனார்,மா.,  2010, கலைகள், ஸ்ரீ அருண் பதிப்பகம், நாகர்கோவில்.

3.கண்மணி, எஸ்., 1992, சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும், ஜி.பதிப்பகம், காமராசர் சாலை, மதுரை.

4. தெய்வநாயகம், கோ., 2002, தமிழர் கட்டிடக்கலை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.

5.பார்த்தசாரதி, நா., 1992, பழந்தமிழர் கட்டக் கலையும் நகரமைப்பும், தமிழ்ப் புத்தகாலயம், திருவல்லிக்கேணி, சென்னை.

No comments:

Post a Comment