Search This Blog

Wednesday, November 28, 2012

சிவப்பிரகாசரின் புதுமைச் சிந்தனைகள்...



கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புறச்சமயங்களின் தாக்கம் தமிழகச் சமுதாயக் கட்டமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இம்மாற்றங்களால் சமூகக்கட்டுப்பாடுகள் தேவையான ஒன்றாக மாற்றமடைந்தன. இச்சூழ்நிலையைப் புரிந்து கொண்ட புலமையாளர்கள் தங்களது புலமையாலும், சமூக அக்கறையினாலும் வெட்டுண்டு கிடந்த மக்களை இணக்கத்துடன் பிணைக்க முற்பட்டனர். அவ்வாறு முற்பட்டவர்களில் சிவப்பிரகாசரும் ஒருவர். இவரைத் தமிழ் இலக்கிய உலகம் "கற்பனைக் களஞ்சியம்" என்றும், நன்னெறி என்ற நீதி நூலை எழுதியமையால் "நன்னெறிச் சிவப்பிரகாசர்" என்றும், இவர் சிறிது காலம் வாழ்ந்த இடமாகிய துறைமங்கலத்தைக் குறிப்பிடும் வகையில் "துறைமங்கலம் சிவப்பிரகாசர்" என்றும் குறிப்பிட்டு அழைக்கின்றது.

சிவப்பிரகாசர் நல்ல புலமையாளராக மட்டும் இல்லாமல் நல்ல திறனாய்வாளராகவும் விளங்கியுள்ளார். மற்றவர்களது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுடன் சில சமயங்களில் அதை மறுத்துத் தனது கருத்துக்களை முன் வைப்பதைப் பார்க்க முடிகின்றது.

"அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடையை - மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்(று)
உந்துஞ் சிவிகையினை யூர்ந்து" (நால்வர் நான்மணிமாலை, பா.33)

என்னும் இப்பாடல் சிவப்பிரகாசரின் சிந்தனையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இப்பாடலின் முன் இரண்டு அடிகள் "அறத்தாறு.... இடை" என்னும் குறள் கருத்தை வேறுகோணத்தில் முன்வைக்கிறது. ஏன் மறுக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன என்பதற்கான வினா எழுகின்றது.

இப்பாடலின் கருத்து ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சைவ சமயத்தை நிலைநிறுத்தும் பொருட்டுத் தலங்கள்தோறும் சென்று தமிழ்ப் பாமாலை பாடி சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்கள். இந்நிலையில் ஒருசமயம் ஞானசம்பந்தர் சிவிகையில் ஊர்ந்து செல்லுங்கால் அச்சிவிகையை அன்பின் மேலீட்டால் நாவுக்கரசர் யாரும் அறியா வண்ணம் சிவிகையைத் தாங்கும் அடியவர்களுடன் தானும் ஒரு அடியவனாகத் தாங்கி வந்தார். இந்நிலையில் ஞானசம்பந்தர் தன் உள்ளக்கிடக்கையில் ஏற்பட்ட எண்ணத்தால் அப்பர் எங்கு உள்ளார் என்று வினவ "அடியேன் ஒப்பரிய தவஞ்செய்த பயனாகத் தங்களுடைய திருவடிகளைத் தாங்கிவரும் போது பேறுபெற்றேன்" என்றார். இச்செய்தியைச் சிவப்பிரகாசர் பின்வருமாறு சிந்தனை செய்கின்றார்.

பல்லக்கில் அமர்ந்து வந்த திருஞான சம்பந்தரும் பல்லக்கைச் சுமந்து வந்த நாவுக்கரசரும் புண்ணியம் செய்தவர்களே. அவர்களிடையே பாவ புண்ணிய வேறுபாடு இல்லை. இருவரும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களே அப்படியிருக்கும்போது எப்படி ஞானசம்பந்தர் மட்டும் அறம் செய்தவர் என்றும் நாவுக்கரசர் அறம் செய்யாதவர் என்றும் கொள்ள முடியுமா? என்ற வினாவை எழுப்புகின்றார்.

மேற்குறிப்பிட்ட இச்சிந்தனை சிவப்பிரகாசரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணம் பின்வரும் செய்திகளின் அடிப்படையாகக் கூட இருக்கலாம். அஃதாவது ஞானசம்பந்தரின் காலச் சூழ்நிலையும் சிவப்பிரகாசரின் காலச்சூழ்நிலையும் ஏறக்குறைய ஒரே தன்மையுடையதாக விளங்கியது. இவ்விருவேறு காலக்கட்டங்களிலும் புறச் சமயங்களின் தாக்கம் தமிழகத்தில் நிலவியது இந்நிலையில் சைவ சமயத்தை மீட்டெடுக்க உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற இருவேறு பாகுபாடுகளைக் களைந்து அனைவரையும் ஒற்றுமையடையச் செய்தால் மட்டுமே சமய விடுதலை பெறமுடியும் என்ற காரணமாகவும் கூடத் திருவள்ளுவரின் சிந்தனையை மறுத்துரைத்தார் எனலாம்.


நாவுக்கரசரின் சிறப்பை உரைக்க வந்த சிவப்பிரகாசர் அவரின் கரையேறிய அருட்திறத்தைப் பற்றிய செய்தியில் தனது வினாவை எழுப்புகின்றார். அவ்வினாவிற்குரிய பாடல்:


"
அருகக் கடல்கடந் தேறிய தோசிலை யம்பியெனப்
பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு
கருகக் கடல்விடம் உண்டோன் அடியிற் கசிந்துமனம்
உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த உனக்கரிதே" (நால்வர் நான்மணிமாலை - 22)

1. சமணர்களுடைய மதமாகிய சமணக்கடலைக் கடந்தது சிறப்பா அல்லது
2.
பல்லவ மன்னன் மகேந்திரனால் கல்லால் கட்டப்பெற்றுக் கடலில் வீசிய பின் மீண்டது சிறப்பா என்று வினா எழுப்புகின்றார்.

கடலைக் கடக்க ஒரு கருவிப்பொருள் வேண்டும் கருவிப்பொருள் இல்லாமல் கடப்பது என்பது இயலாத ஒன்று என்பதைப்

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்" (குறள்.10)

என்ற குறள் மூலம் விளக்குகின்றார் வள்ளுவர். அதுபோல் கடலில் விடப்பட்ட நாவுக்கரசருக்கு அவரைப் பிணைந்திருந்த கல்லே தெப்பமாக மாறி அவரைக் கரைசேர்த்தது. இதைச் "சிலையம்பி" என்ற சொல்லால் விளக்குகின்றார்.

சமண சமயமாகிய கடலில் இருந்து கரையேறுவதற்குத் தெப்பமாக எது பயன்பட்டிருக்கும் என்பது அடுத்த வினா. ஏன் எனில் கடலுக்கு ஒரு குணம் உண்டு தனக்குத் தேவையில்லாத எந்தப் பொருளையும் அது தன்னகத்தே வைத்துக் கொள்வதில்லை. அவற்றைக் கரைசேர்த்துவிடும். ஆனால் சமண சமயமாகிய கடலில் இறங்கியவர்கள் கரையேறுவது என்பது இயலாத காரியம். இந்நிலையில் தான் நாவுக்கரசர் இதிலிருந்து எவ்வாறு வெளியேறினார் என்பதைப் பார்க்க வேண்டும் இங்கு சிவப்பிரகாசரின் இலக்கியப் பயிற்சி வெளிப்படுகின்றது எனலாம்.
"தம்பியார் உளராக வேண்டும் என வைத்தயா
உம்பர் உலகு அணையவுறு நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்" (பெரியபுராணம்....)

என்னும் பாடல் கருத்து அவரின் மனக்கண் எழுந்தது போலும். ஆகவே சமண சமயத்தில் இருந்து மீள்வதற்கு அவரது தமக்கையாகிய திலகவதியார் தெப்பமாக விளங்கினார் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தார்.

அவர் வாழ்ந்த சமுதாயத்தில் நிலவிய பல ஏற்றத்தாழ்வுகளை நயம்பட மறுத்துரைக்கின்றார். பிறப்பினால் மனிதர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிந்திருப்பதை உணர்த்துகிறார். ஆல கால விஷத்தைக் கக்கிய பாம்பு என்றாலும் அதன் தலையில் அமைந்த மாணிக்கக் கல்லை எவரும் வெறுக்கமாட்டார் என்பதை ஒரு பாடலில் கூறுகிறார். அப்பாடல்

"ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு
பவர் ஆர்? அரவின் பருமணிகண் டென்றும்
கவரார் கடலின் கடு" (நன்நெறி - 22)

என்னும் பாடல் ஆகும். மேலும் இதுபோன்ற செய்தியை விளக்கும் முகமாகத் தனது சமய இலக்கியப்படைப்பான பிரபுலிங்கலீலையில்

"சாதியும் குறியும் நீத்துச் சரணரைச் சிவனே என்று
பாதபங் கயம் இறைஞ்சிப் பத்திசெய் குவனந் நந்தி...." (பிரபு - அக்கமா - 47)

என்று குறிப்பிடுகின்றார். இறைவன் அருளைப் பெறவேண்டும் என்றால் சாதிகளையும், ஆண், —ண் என்ற பேதங்களையும் நீக்கி அடியவர்களைச் சிவமே என்ற அடிதொழுதால் இறைவன் அருளைப் பெறலாம் என்கின்றார்.

பிள்ளை என்றாலே ஆண்பிள்ளையையே குறிக்கும் சமுதாயம் இது. இங்குப் பெண் என்பவள் ஆணுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தன்மையுடையவளாகவே சித்தரிக்கப்படுகின்ற காட்சியைக் காணலாம்
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற"

என்ற குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் "அறிவறிந்த" என்ற சொல் "பெண்ணொழிந்து நின்றது என்பர்" இதை மறுத்துரைக்கும் சிவப்பிரகாசர் மணமக்களை வாழ்த்தும்போது நல்ல "ஆண் மகளைப் பெற்று" உயர்வாயாக என்று வாழ்த்துவது உலகியல் வழக்கு. ஆனால் இவ்வழக்கத்துக்கு மாறாக "ஆண்மகற் பெறுக என்று ஆசி சொல்பவர் நாணும்படி பெண் பெற்றார்" என்று குறிப்பிடுகின்றார்.


"
கற்றார் அறிகுவர் மக்கள்தம் பேறுஎனக் கட்டுரைத்த
சொல்தான் ஒரு பெண் ஒழித்ததுஎன் பாரொடு தொல் உலகில்
நற்றாண் மகற்பெறுக என்று ஆசி சொல்பவர் நாண உனைப்
பெற்றான் மலையரை யன்குறை வாழும் பெரியம்மையே" (பெரியநாயகியம்மை கலித்துறை - 12)

இவ்வாறு சிவப்பிரகாசர் தனது இலக்கியங்களில் சமூகத்தைப் புதுமைக் கண் கொண்டு பார்க்கின்றார்.




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்,  
                      
தமிழ்நாடு - இந்தியா.

No comments:

Post a Comment