Search This Blog

Wednesday, October 24, 2012

நன்னெறி (ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்)

நன்னெறி.
(ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்) 

தமிழில் தோன்றிய அறநூல்களில் நன்னெறியும் ஒன்று. மக்களை நல்வழிப்படுத்தும் நல்ல அறநெறிகளைக் கூறுவதால் இந்நூல் நன்னெறி எனப்படுகிறது. இந்நூலைச் சிவப்பிரகாசர் இயற்றியுள்ளார். இவரைத் துறை மங்கலம் சிவப்பிரகாசர் என்றும் சிவப்பிரகாச சுவாமிகள் என்றும் அழைப்பர். துறைமங்கலத்தில் நெடுநாள் தங்கியிருந்ததால் அப்பெயரையும் சிவப்பிரகாசரின் பெயருடன் சேர்த்து அழைக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இறை அடியவராகவே வாழ்ந்ததால் சிவப்பிரகாசரைச் சுவாமிகள் என்றும் அழைக்கின்றனர். 

இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.

முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த சிவப்பிரகாசர் முப்பது நூல்கள் படைத்துள்ளார். இவர் படைத்துள்ள நூல்கள் முழுவதையும் நீங்கள் இணைய நூலகத்தில் பார்த்துப் படிக்கலாம். இந்தப் பாடத்தில் அவர் இயற்றிய நன்னெறியில் இடம்பெற்றுள்ள அறக் கருத்துகளை மட்டும் பார்ப்போம்.

நன்னெறி என்னும் இந்நூல் நாற்பது பாடல்களைக் கொண்டது. இந்நூலில் உள்ள பாடல்களைச் சிவப்பிரகாசர் முதலில் கடற்கரையில் உள்ள மணலில் எழுதினார். பின்னர் அவருடைய மாணவர்கள் அவற்றை ஏடுகளில் எழுதினார்கள் என்று இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல்கள் ‘மகடூஉ முன்னிலையாக அதாவது ஒரு பெண்ணை அழைத்துக் கூறுவது போல அமைந்துள்ளன.

நன்னெறி...

கடவுள் வாழ்த்து:-

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.


பொருள் விளக்கம்:-
மின்னும் சடா முடி உடைய விநாயகன் திருப்பாதங்களைத் தொழுது எழ, நன்னெறிப் வெண்பா பாடல்கள் நாற்பதும் இனிதாக வரும். 



நூல்:-
 
1 . உபசாரம் கருதாமல் உதவுக

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து? 



பொருள் விளக்கம்:-


அழகான பூ அணிந்த மணமான கூந்தல் உடையவளே, தினந்தோறும் உணவின் சுவை அறியாத கை உணவை எடுத்துக் நாவிற்கு கொடுப்பது புகழுக்காகவா !! அது போல் நமக்கு அறிமுகம் ஆகாமல், நன்கு முகமன் கூறாதவருக்கும் நல்ல குணம் படைத்தவர்கள் உதவுவார்கள்.

2 . வன்சொல்லும் இனிமையாகும்

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு. 



பொருள் விளக்கம்:-
 
குற்றம் இல்லாதவர், நம் மேல் அன்பு வைப்பவர் நம்முடைய நலம் பொருட்டு கூறும் கடினமான சொல்லும் நமக்கு நன்மைப் பயக்கும். ஒன்றுக்கும் உதவாமல் இனிதாக பேசுபவர் பிறர் சொல் இதற்கு மாறாக இருக்கும். பக்தியுடன் தொண்டர் ஒருவர் இட்ட கல்லும் அழகான மலராக மாறியது. ஆனால் கரும்பு வில் உடைய மன்மதன் எறிந்த பூ கணைகளும் சிவபெருமானுக் கோபம் ஊட்டி மன்மதை எரிக்கச் செய்தது. 


3 . இனிய வழியறிந்து ஒருபொருளை அடைக.

தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து. 



பொருள் விளக்கம்:-

தங்கக் குன்று போல் அழகான தனங்களை உடைய பெண்ணே, பசுவிடம் பால் கறக்க விரும்புபவர் அதன் கன்றை காட்டி பால் கரப்பதை போல். நமக்கு உதவி செய்ய நினைக்காத ஒருவரிடன் இருந்து உதவி தேவையெனின், அவருடன் இணங்கி இருப்பவர் ஒருவர் மூலமாக அந்த உதவியை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கொள்.
 
4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 



பொருள் விளக்கம்:-

ஒருவருக்கு உதவாத உப்புக் கடல் நீர் மேகங்களால் கவரப்பட்டு மழை நீராக மக்களுக்கு பயன்படுவது போல் ஒருவருக்கும் உதவி செய்யாத ஒருவருடைய செல்வம் இறைவனின் திருவருளால் உதவி செய்பவருடைய கைகளில் சென்று விடும்.

 
5 . நட்பிற்பிரியலாகாது

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம். 



பொருள் விளக்கம்:-

பூங்குழல்களை உடைய பெண்ணே, நெல் உமியுடன் சேர்ந்து இருக்கும் வரை தான் அது விதை நெல்லாக இருக்கும். அந்த உமி நெல்லில் இருந்து விலகியவுடன் மீண்டும் இணைத்தாலும் அது விதை நெல்லாக வளரும் பலம் பெறாது. அது போல் நன்கு பழகி விலகிய நண்பர்கள் மீண்டும் இணைந்தாலும், அந்த நட்பில் முன்பு இருந்தது போல் நட்பு இருக்காது. ஆதலால் நண்பர்களிடம் குற்றம் கண்டு விலகுதல் கூடாது.



6 . தம்பதிகள் ஒற்றுமை

காதல் மனையாளும் காதலும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்ல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண். 



பொருள் விளக்கம்:-



பதினாறு கலைகள் நிரம்பிய முழு மதி போல் முகத்தை உடையவளே, ஒரு விஷயத்தை இரண்டு கண்களும் தான் நோக்குகின்றது, ஆனால் பார்வை ஒன்று தான். அது போல் கணவனும், அன்பு மனைவியும் இரண்டு நபர்கள் ஆனாலும் சிந்தனையில், செயலில் ஒத்து இருந்தால் சிறந்த பலன்கள் பெறுவார்கள்.
 

7 . கல்விச் செருக்குக் கூடாது

கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனையசெக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும். 



பொருள் விளக்கம்:-



ஒருவருக்கு கடல் அளவு அறிவு பெற்று இருந்தாலும், சீறும் சிங்கம் போல் கர்வத்துடன் இருக்கக்கூடாது. முனிவர்களுக்கு அரசரான குறு முனி அகத்தியர் ஏழு கடலையும் குடித்து விட்டது போல், நம் ஆனவத்தை அடக்க வேறு ஒருவரும் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.


 
8 . ஆறுவது சினம்

உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு. 



பொருள் விளக்கம்:-



நீரின் அளவு பெருகி இருக்கும் போது அணையை காப்பதற்கு அவசரப்பட்டு அணையை உடைத்து சேதத்தை விளைவிப்பதை விட, நீரை கால்வாய் வழியே மென்மையாக ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவதே சிறந்தது. அதைப் போல் மனம் கொதித்து கோபம் வரும் போதும் அதை அடக்கி ஆளுவதே சிறந்த குணம். அதுவே சிறந்த மனிதனின் குணமென்க.


9 . துணையுடையார் வலிமையுடையார்

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தான் மருவின் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறைய புள்ளரசைப் பார்த்து.


  
பொருள் விளக்கம்:-



வலிமை குறைந்தவர் வலிமை நிறைந்தவரை கண்டு பயன்படத் தேவையில்லை அவர்கள் வேறு ஒரு வலிமையுடையவருடன் சேரும் போது. பரமசிவன் காதுகளில், கழுத்தில் ஆபரணமாக இருக்கும் பாம்பு, பறவைகளின் அரசரான கருடனைக் கண்டு அஞ்சாமல் இருப்பது போல். யாருக்கும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே. ஆகையால் நம்முடைய வலிமைக்கு தகுந்து அதனினும் வலிமையுடையவருடன் நட்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
 

 10. தன்னலம் கருதலாகாது

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று. 



பொருள் விளக்கம்:-


சிறந்த மனிதர்கள் வறுமை உற்ற காலத்திலும் அவர்களை விட வறுமையில் இருப்பவரை கண்டால், தங்களுக்கு என்று வைத்து இருக்கும் பொருளையும் கொடுத்து உதவுவார்கள். நிலவு தன் பின்புறம் இருட்டு இருந்தாலும் அதை நீக்காமல் , இருளாக இருக்கும் இந்த உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்து உதவுவதைப் போல்.

 
11. அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்
பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு. 



பொருள் விளக்கம்:-



நிலையற்ற இன்பத்தை அளிக்கும் பொய்யான இந்த மெய்யில் இருக்கும் ஐந்து புலன்களும் மன உறுதி அற்றவரைத் தான் தாக்கி துன்பத்தில் ஆழ்த்தும் மன உறுதியுடன் இருப்பவரை ஒன்றும் செய்ய இயலாது. வெகு வேகமாக அடிக்கும் சூறாவளிக் காற்று பெரிய கல் தூணைப் புரட்டிப் போடாமல், சிறு துரும்பை பந்தாடுவதைப் போல்
 
 
12. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு. 



 பொருள் விளக்கம்:-



அழகு நிறைந்தவளே, ஓட்டை பானையில் நீர் சிந்துவது ஒன்றும் புதுமையில்லை, நம்மை வருத்தம் செய்யும் உயிர் உடலில் ஒன்பது துளை இருந்தும் இறைவன் விதிக்கும் வேலை வரும் வரை வெளியேராமல் தங்குவதே புதுமை.
 
 
13. அன்பொடு உதவுக

பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர். 



பொருள் விளக்கம்:-



அமுதம் சுரக்கும் மலை போன்ற தனங்களை உடைய பெண்ணே, நிலவு தன் பிறை அளவு மாறுதலுக்கு ஏற்ப ஒளி வீசுவது போல். உயர்ந்த குணம் உடையவர்கள் தங்கள் வருமானத்தைப் பொறுத்து விருப்புடன் வறுமையுடன் இருப்பவருக்கு உதவுவார்கள்.
 

 14. செல்வச் செருக்குக் கூடாது

தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா யாவர் செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு. 



பொருள் விளக்கம்:-



வண்டுகள் மொய்க்கும் மலர் மணக்கும் கூந்தல் உடையே பெண்ணே, மேரு மலையும் ஒரு நாள் கடலில் மூழ்கியது, அதைப் போல் தன்னிடம் இருக்கும் செல்வம் நிலையில்லாதது, ஓரிடம் தங்காமல் சென்று விடும் என்பதை உணர்ந்து அறிவு உடையவர்கள் செல்வம் வரும் போது செருக்கு கொள்ளக் கூடாது.

 
15. அன்பற்ற செல்வம் பயனற்றது

இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு 



பொருள் விளக்கம்:-

எழுதப் படிக்க தெரியாத கல்வி அறிவு இல்லாதவருக்கு பழமையான அரிய நூல்கள் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. கண் தெரியாத குருடனுக்கு விளக்கு இருந்து என்ன பயன் ? அதைப் போல் மனிதர்களின் மேல் அன்பு இல்லாதவர்களுக்கு இடம், பொருள், வேலைக்காரர்கள், சொத்து, சுகம் இருந்து என்ன பயன் ?

 
16. மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல். 



பொருள் விளக்கம்:-



மிகப்பெரிய கடலும் உப்பக்கழிக்குள் வந்து நீரை நிறைக்கும் பிறருக்கு உப்பு வழங்குவதற்காக, அதைப் போல்தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தலைமைப் பதவி வகித்தாலும் தன் நிலையிலும் கீழே உள்ளவருக்கும் உதவி புரிவர் உயர்ந்த குணம் உடைய மேலோர்.

 
17. வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்

எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ - பைந்தொடிஇ
நின்று பயனுதவி
யில்லா அரம்பையின் கீழ்க்
மன்றும் உதவும் கனி. 



பொருள் விளக்கம்:-


அழகான மென்னிடையை உடைய பெண்ணே, வாழை மரம் கனி ஈன்றியவுடன் வெட்டப்பட்டாலும், அதன் கன்று மீண்டும் வளர்த்து கனி கொடுக்கும். அது போல் வள்ளற் குணம் படைத்த பெரியவர்கள் கொடுத்து கொடுத்து வறுமை நிலை வந்தாலும், அவரின் மகன் அடுத்தவருக்கு கொடுத்துதவ மறுக்க மாட்டார்.


 18. இன்சொல்லையே உலகம் விரும்பும்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல். 



பொருள் விளக்கம்:-

பொன் போன்ற கதிர்களை உடைய கொதிக்கும் சூரியன் கதிர்களைக் கண்டு கடல் பொங்குவதில்லை, ஆனால் குளிர்ந்த ஒளியை உண்டாக்கும் நிலவின் ஒளியை கண்டு தான் கடல் பொங்கும். அது போல் வன் சொல்லை கண்டு இந்த நீர் சூழ்ந்த உலகத்தின் மக்கள் மகிழ்ச்சி அடைவதில்லை, மாறாக இன்சொல்லால் தான் மகிழ்கின்றனர். ஆதலால் இன்சொல் பேசுங்கள்.  


19. நல்லார் வரவு இன்பம் பயக்கும்

நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர. 



பொருள் விளக்கம்:-



வசந்த காலத்தில் வரும் குளிர்ந்த தென்றலைக் கண்டு மாமரம் மகிழ்ந்து பூ பூக்கும். ஆனால் வேனிர் காலத்தில் வரும் வெப்பக் காற்றில் மலரும் பூக்களும் காய்ந்து உதிரும். அது போல் நல்ல குணம் உடையவர் விருந்தினராக வரும் போது இல்லத்தில் இருப்பவர்கள் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்வர், அதற்கு மாறாக உள்ளவர் உள் நுழையும் போது தவித்து வருத்தப்படுவர்.

 
20. பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவார் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண். 



பொருள் விளக்கம்:-

பிற உறுப்புகள் துன்பப்படும் போது, கண்கள் தனக்கு துன்பம் வந்தது போல் நீர் கசியும். அது போல் மேன்மை குணம் பொருந்திய பெரியவர்கள் பிறருடைய துன்பத்தைக் கண்டு தன் துன்பமாய் கருதி நெருப்பில் இட்ட மெழுகாய் வருந்தி அவர் துன்பம் போக்க வழி செய்வர்.


 
21. இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமன் செல்லாது

எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை. 



பொருள் விளக்கம்:-

பொங்கி வழிந்து பெருமிதப்படும் கங்கை, சிவபெருமானின் தலையில் சென்றவுடன் அமைதியாய் யாருக்கும் தெரியாமல் அடங்கி மறைந்து இருக்கும். அது போல் முறையாகக் கல்வியின் இலக்கணம் கற்காமல், கேட்டதை வைத்து பாவனையாகப் பேசும் கல்லா ஒருவன் சொல்லும் வார்த்தை கற்றறிந்த அறிஞர்கள் இருக்கும் சபையில் எடுபடாது.


 
22. அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்

ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு. 



பொருள் விளக்கம்:-


பாம்பிடம் இருந்தாலும் ரத்தினத்தின் மதிப்பு குறைந்து விடாது, ஆழமாக அகலமாக இருந்தாலும் கடல் நீர் குடிக்கப் பயன் படாது. அதுபோல் உயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் ஒருவன் பெருமை மிக்கவனாக மாட்டான், தாழ் குலத்தில் பிறந்ததால் ஒருவன் சிறுமை படைத்தவனாக மாட்டான். ஒருவனின் பெருமை அவரவரின் அறிவைப் பொருத்துக் கொண்டாடப்படும்.

 
23. மனவுறுதி விடலாகாது

பகர்ச்சி மடவார் பயிலநொன்பு ஆற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்
எறும்பூரக் கல்குழியுமே. 



பொருள் விளக்கம்:-

எறும்புகள் ஊர்ந்து நடந்து சென்று சென்று கல்லும் தேய்ந்து வழித்தடம் ஆகும். அதுபோல் அழகிய தனங்களை உடைய பெண்களுடன் இருந்து பிரம்மச்சரியம் நோற்பது அவ்வளவு எளிதல்ல. பெரிய ஞானிகளும் மனத்திட்பம் இழப்பர். ஆகையால் நம் நோக்கத்திற்கு எதிராக இருக்கும் விசயங்களில் இருந்து விலகி மனஉறுதியுடன் இருந்தால் நினைப்பதை அடையலாம். 

 
24. ஓருவர்தம் நற்குணத்தையே பேசுதல் வேண்டும்

உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி. 



பொருள் விளக்கம்:-

அனைவருக்கும் நல்ல குணம் தீய குணம் என்று இரண்டு குணங்களும் இருக்கும். இவற்றின் அளவுகளைப் பொறுத்துத் தான் நாம் இவர் நல்லவர் என்றும், தீயவர் என்றும் முடிவு செய்கிறோம். தேனீக்கள் வேப்பம் பூவில் உள்ள தேனை அருந்தும், ஆனால் காக்கையோ கசப்பான வேப்பம் பழத்தை தேடி உண்ணும். அது போல் கீழ்குணம் உடைய மக்கள் ஒருவரின் குற்றத்தை பார்ப்பார், மேல் குணம் உடைய மேலோர் ஒருவரின் நல்ல குணத்தை பார்த்து அதை உணர்ந்து பாராட்டுவர்.


 
25. மூடர் நட்புக் கூடாது

கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையில் புகுமொண் பொருள். 



பொருள் விளக்கம்:-

அதிக கணம் உள்ள கல் தெப்பத்தில் இருக்கும் போது எடையில்லாதது போல் மிதக்கும். அதுபோல் அறிவுள்ளவர்கள் கல்லாத அறிவில்லாத மூடர்களுடன் சேரும் போது மூடர்களாக கருதப்படுவர்.


 
26. உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெறியவராவார்

உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ விளம்பு. 



பொருள் விளக்கம்:-


பூமியில் விழும் சூரியனின் ஒளியை வைத்து சூரியன் வெளிச்சமும், வெப்பமும் இவ்வளவு தான் என்று எடை போட முடியாது. அதுபோல் ஒருவரின் உருவத்தையும், எளிமையும் வைத்து அவர் படித்த கல்வியின் கடலை எடைபோட முடியாது. உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக் கூடாது.

 
27. அறிஞர்கள் கைம்மாறு வேண்டாமல் உதவுவார்கள்

கைம்மாறு கவாமல்கற் றறிந்தோர் மென்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று. 



பொருள் விளக்கம்:-


பெண்ணே, உணவை சிரமப்பட்டு மெல்வது பற்கள், ஆனால் சுவையை உணர்வது நாக்கு. எந்த ஒரு உதவியும் எதிபார்க்காமல் பற்கள் நாவிற்கு உதவி செய்கிறது. அது போல் நல்ல குணமுடைய கற்றறிந்த பெரியவர்கள், பதிலுதவி எதிர்ப்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்வர்.

 
28. அறிவுடையோர் கோபத்திலும் உதவுவார்

முனிவிலும் நல்குவர் முதறிஞர் உள்ளக்
கனிவிலும் நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை. 



பொருள் விளக்கம்:-


வாழைப்பழம் பழுக்கவில்லையென்றாலும் வாழைக்காய் சமையலில் உணவாகப் பயன்படும். ஆனால் எட்டிப் பழம் பழுத்தாலும் அதில் உள்ள கசப்பு போகாது, ஒருவருக்கும் பயன்படாது. அதுபோல் ஒருவருக்கொருவர் கோபப்பட்டு வருத்தமாக இருந்தாலும், நன்கு கற்ற மூதறிஞ்சர் ஒருவருக்கு உதவி தேவையெனின் மற்றொருவர் உடனே உதவி செய்வார். ஆனால் உள்ளத்தில் கள்ளத்தனம் உடைய கயவர்கள் நன்கு இனிப்பாக பழகி நம்முடன் உறவாடினாலும் ஒருவருக்கு உதவி தேவையெனின் மற்றொருவர் உதவி செய்யமாட்டார்.

 
29. ஆண்டவர் அடியார் எதற்கும் அஞ்சார்
உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாக - நடுக்கமுறார்
பண்ணின் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான். 



பொருள் விளக்கம்:-

அழகாக பாடலில் ஓசை போல் அடுத்தவர் மனம் குளிரும்படி இனிதாக பேசும் பெண்ணே, சிவனின் தலையில் இருக்கும் மூன்றாம் பிறைச்சந்திரனுக்கு அருகில் இருக்கும் மான், பூமியில் உலவும் புலியைப் பார்த்து அச்சப்படாது. அதுபோல் இறைவனை முழுதும் நம்பி அவரை இதயத்தில் இருத்தியவர் உடலில் வரும் துன்பத்தை கண்டு அஞ்சமாட்டார். 

 
30. இறப்புக்குமுன் அறம்செய்க

கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு. 



பொருள் விளக்கம்:-


மழைவெள்ளம் ஊரைத் தாக்காமல் இருக்க அணையை மழைக்காலம் முன்பே கட்டி இருக்க வேண்டும். மழைபெருகி வெள்ளமாக வரும் வேளையில் அணைகட்டி ஊரை காப்பாற்ற முடியாது. அதுபோல் கொடும் கூற்றாகிய எமன் வந்து நம்மை கொலை செய்யும் முன் உள்ளம் குளிர்ந்து அறம் செய்க.


31. பிறர் துன்பம் தாங்குக

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவர் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது. 


பொருள் விளக்கம்:-

அழகிய ஆபரணத்தை உடைய பெண்ணே, ஒருவர் உடலை கோலால் அடிக்க முயலும் போது , அடி உடலில் பாடாமல் இருக்க கை விரைந்து சென்று அடியை தடுக்க முயலும். அதுபோல் வீரம் நிறைந்த பேரறிஞ்சர் பிறர் துயரப்படும் போது அவர் துன்பப்படாமல் இருக்க விரைந்து சென்று அவரை காப்பர். 

 
32. பகுத்தறிவற்றவர் அறங்கள் பயன்படா

பன்னும் பனுவல் பயந்தோர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்
காழென்று உயர்திண்கதவுவலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான். 



பொருள் விளக்கம்:-

அழகிய வைரம் போல் உறுதியுடன் ஒரு கதவு இருப்பினும் சிறிய தாழ்ப்பாள் இல்லையென்றால் அந்த கதவு உறுதி உடைய கதவு என்று சொல்லுவது சரியாகுமோ. அதுபோல் நல்ல நூல்கள் கற்காமல் யாருக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்ற வரைமுறை அறியாத பகுத்தறிவற்றோர் செய்யும் அறங்கள் சமுதாயத்துக்கு பயன்படாது.  

 
33. பெரியோர்க்குப் பாதுகாப்பு வேண்டுவதில்லை

எள்ளா திருப்ப இழிஞர் போற்றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப்புளதோ கடல். 



பொருள் விளக்கம்:-


பிறர் ஏளனம் செய்யாமல் இருக்க குணங்களால் சிறியவர் தங்களின் தோற்றத்தை எப்போதும் மேம்படுத்தற்குரியவர் ஆவார். ஆனால் கல்வி கற்ற அறிஞர்கள் தங்களின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய நீரைத் தாங்கி இருக்கும் குளத்துக்கு கரை அவசியம். ஆனால் பெரிய நீரைத் தாங்கி இருக்கும் கடலுக்கு கரை அவசியமில்லை.

 
34. அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவர்

அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சுமோ இருளைக்கண்டு. 



பொருள் விளக்கம்:-


அறிவுடையவராகாமல், அவ்வறிவைப் பெறாதவர் தன்னை நோக்கி வரும் பழி குறித்து அஞ்சமாட்டார்கள். ஆனால் அறிவுடையவர் தன் மேல் வரும் பழிக்கஞ்சுவர். சந்திரனின் பிறை போல் அழகிய நெற்றியை உடைய பெண்ணே, வண்ணத்தை செய்யும் ஒளி பொருந்திய வாள்விழியே இருட்டைக் கண்டஞ்சும், ஒளி மறைந்த குருட்டுக்கண்கள் இருட்டை கண்டு அஞ்சாததைப் போல்.

 
35. மேன்மக்கள் அறிவுடையோரையே விரும்புவர்

கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப்பழம். 



பொருள் விளக்கம்:-

கற்ற அறிவுடையவரை மேன்மக்கள் என்றும் விரும்பி நட்புக் கொள்வர். மற்றையோர் அவர்களின் மேன்மையை மதியார். வெற்றியைத் தரும் வேல் போன்ற விழியை உடையவளே புளிக்குழம்பு வாழைப்பழத்துடன் சேராது. பால் வாழைப்பழத்துடன் சேருவதைப் போல். 

 
36. தக்கார்கே உதவுக

தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்குதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புலலுக்கு யிரைப்ரோ போய். 



பொருள் விளக்கம்:-


எந்தக் காலத்திலும் நெல்லுக்குத் தான் நீரிரைப்பார், அதைவிடுத்து காட்டில் வளரும் புல்லுக்கு யாரும் நீரை இறைக்க மாட்டார்கள். அதுபோல் தகுதியவருக்கு கொடுப்பார். தகுதியற்றவருக்கு கொடுக்கமாட்டார். நல்ல நெறிகள் இல்லாதவருக்கு கொடுக்க மாட்டார் மேலோர்.


 
37. பெரியேர் முன் தன்னை புகழலாகாது
பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர் முலையோய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. 



பொருள் விளக்கம்:-

பொன் கொடுக்கும் மகாலக்ஷ்மியை அழகால் தோற்கடிக்கும் வண்ணம் அழகிய தனங்களுடைய பெண்ணே, தெரிந்துகொள் விந்தியமலை அகத்தியரின் முன் தன் பெருமையை பேச, அவர் காலின் கட்டைவிரல் பட்டு பூமியில் மறைந்து பாதாளம் சென்றது. அதைப்போல் நன்கு கற்ற பெரியவர்முன் தற்பெருமை பேசிய பேதையின் பெருமையின் உயர்வு அவன் அறியாமல் தாழ்ந்து போகும்.  
 
38. நல்லார் நட்பு நன்மை பயக்கும்

நல்லார்செயுங் கோண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார்செயுங் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய்முற்றின் தினதீங் கனியாம் இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப் போம். 



பொருள் விளக்கம்:-

நல்ல குணம் உடைய பெண்ணே, சொல்வதைக் கேள். காய் முற்றினால் தேன் சுவையைப் போல் சுவையான பழமாகும். ஆனால் பசுந்தளிர் முற்றினால் கசக்கும். அதைப்போல் நல்லவருடன் செய்யும் நட்பானது நாளாக நாளாக நாடு போற்றும் நன்மையைச் செய்யும். ஆனால் தீயவருடன் செய்யும் நட்பானது தீமையைத்தான் செய்யும்.
 
 
39. மூடர் நட்பு கேடு தரும்

கற்றறியார் செய்யுங் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் யள்ளதே - பொற்றொடிஇ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம். 



பொருள் விளக்கம்:-


 
40. புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார்

பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றெவ்வார் - மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்
காணும் கண்ணொக்குமோ காண். 


 

பொருள் விளக்கம்:-

  பொன் போன்றவளே, உடலில் உள்ள உறுப்புகள் மின்னுகின்ற பல ரத்தினங்கள், தங்கம் அணிந்து அழகாகக் காட்சி அளித்தாலும், எதையும் அணியாத கண்களுக்கு ஒப்பாகாது. அது போல் தங்க ஆபரணங்கள் பல அணிந்து வசதியுடன் இருந்தாலும், அழியாத கல்வி கற்ற அறிஞர் முன் அரசர்கள் ஒப்பாகமாட்டார்கள்.

***நன்னெறி இனிதே நிறைவுபெற்றது***

தொகுப்புரை:-

நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நன்னெறி என்னும் இந்த நூல் மக்கள் வாழ்க்கைக்கு உரிய நல்ல நெறிகளைத் தொகுத்துக் கூறுகிறது.

நல்ல நட்பின் பெருமையையும், நட்பில் பிரிவு கூடாது என்னும் அறிவுரையையும் சிவப்பிரகாசர் விளக்கியுள்ளார்.

இனிமையான சொற்களைப் பேசுவதால் ஏற்படும் நன்மைகளையும் கொடிய சொற்களைப் பேசுவதால் ஏற்படும் தீமைகளையும் நன்னெறி தெரிவித்துள்ளது. மேலும் நல்ல பண்பாளர்கள் சொல்லும் வன்சொல்லும் நன்மையைத்தான் தரும் என்றும் தெரிவித்துள்ளது.

கல்வியின் சிறப்பைப் பற்றியும், கற்றவர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களின் அறிவுத் திறத்தை எடை போடக் கூடாது என்பதைப் பற்றியும் சிவப்பிரகாசர் கூறியுள்ளார்.

அறிஞர்களின் பெருமையையும் மன்னனை விடவும் அறிஞர்கள் மதிக்கப்படுவதையும் நன்னெறி வழியாக நாம் அறிய முடிகிறது.

பெரியோர்கள் புகழ்ச்சியில் மயங்குவதில்லை என்பதையும், அவர்கள் பிறருக்கு ஏற்பட்ட இன்னலைக் கண்டு உள்ளம் வருந்துவார்கள் என்ற உண்மையையும் சிவப்பிரகாசர் தெரிவிக்கிறார்.

உதவி செய்து வாழ வேண்டிய தேவையையும், உதவி செய்யும் போது பயன்கருதாமல் உதவி செய்ய வேண்டும் என்பதையும், சமுதாயத்தில் தீயவர்களாகக் கருதப்படுகிறவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதையும் நன்னெறி உணர்த்துகிறது.

கல்வியாலும், செல்வத்தாலும் ஆணவம் கொள்ளக்கூடாது. அவ்வாறு ஆணவம் கொண்டவர்கள் கல்வியையும் செல்வத்தையும் இழக்க நேரிடும் என்றும் நன்னெறி அறிவுரை கூறியுள்ளது.




 

தொகுப்பு :-

சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,  
தமிழ்நாடு - இந்தியா.

 

3 comments:

  1. மகளே நன்றி நான் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் மேலாண் இயக்குனராக பணி புரிந்துள்ளேன்(1996 to 2001) தற்போது சில மேலாண்மை பயிற்சி வகுப்புகளும் எடுத்து நடத்தும் வாய்ப்புகளும் உள்ளது அதில் இவைகளை பயன் படுத்த எண்ணியுள்ளேன் . நன்றி வளர்க நின் பணி

    ReplyDelete
  2. நல்ல பதிவு, மேலும் தொடர்க.

    ReplyDelete