ஸ்ரீ சிவஞான பாலசித்தர் என்ற பெரும் ஆத்மஞானி புதுவை அருகிலுள்ள பெருமுக்கல் மலையில் தங்கியிருந்தபொழுது தன்னை வணங்கி வந்த ஒரு அம்மையின் குழந்தையில்லா குறையினைப் போக்க தான் உண்டு மீதமிருந்த சதுரக்கள்ளிப்பாலைக் கொடுத்து பருகச் சொன்னார். அம்மையும் பருகினார், கருவுற்றார். அவ்வாறு பிறந்த குழந்தையே சிவஞான பாலைய சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
சிவஞானக்குழந்தை அருளமுதத் தாலாட்டில் சிவஞானப் பிழம்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
அம்மை அக்குழந்தையோடு, ஸ்ரீ சிவஞான பாலசித்தருக்கு, சதுரக் கள்ளிப் பாலை தினமும் கொண்டு சென்று கொடுத்துவந்தார். சுவாமிகள் பால் அருந்தும் பொழுது அக்குழந்தையைபார்ப்பார். தம் சிவஞான சக்தியை குழந்தைக்கு சூட்சமமாக உட்செலுத்துவார். தினமும் குழந்தையும் சுவாமிகளைப் பார்த்துப் பார்த்து திருவருளும், திருஆசியும் பெற்று வந்தது. குழந்தை, குழந்தையாய் இருக்கும் பொழுதே ஆத்ம் சாதனையில் ஈடுபட்ட அதிசயம் இங்குதான் நடந்தது.
முருகப் பெருமானின் பேரருளால், பெருமுக்கல் மலை மூலிகை ஆற்றலால் சுவாமிகளின் அருட்சக்தியால் குழந்தை தெய்வீகத்தில் வளர்ந்தது, வளர்ந்து பாலகனானது.
தவத்திலே உதித்து, தவத்திலே பிறந்து, தவத்திலே வளர்ந்த தம் மகன் சிவஞான பாலைய சுவாமிக்கு சன்னியாச ஆஸ்ரமம் தந்துஞானாபதேசம் நயன தீட்சை செய்து ஆச்சாரிய பீடமும் தந்தார் சுவாமிகள். சிவ பஞ்சாட்சரத்தின் பேராற்றலைக் கண்டுணர்ந்தார்.
அதுவே;
ஓம் நமசி வாயமே யுணர்ந்து மெய்யுணர்ந்து பின்
ஓம் நமசி வாயமெ யுணர்ந்து மெய்தெளிந்து பின்
ஓம் நமசி வாயமே யுணர்ந்து மெய்புணர்ந்தபின்
ஓம் நமசி வாயமே யுட்கலந்து நிற்குமே.
- திருமூலர்
ஸ்ரீ சிவஞான பாலசித்தர் பாலகனான சுவாமிகளுக்கு தன் ஆசியை வழங்கினார்."நீ பாலிலே உற்பத்தியான காரணத்தினால் பாலையே உணவாக கொண்டு சீடப் பரம்பரையோடு சிவஞானதேசிகன் என வாழ்வாயாக".
அன்றைய நேரத்திலிருந்து சிவஞான தேசிகன், சிவலிங்க பூஜையும் பஞ்சாட்சர ஜபமும், முருக வழிபாடுமாக வாழ்ந்தார். பஞ்சாட்சர ஆனந்தத்தில் திளைத்தார், நம என்ற நாமத்தைநாவில் ஒடுக்கினார்.சிவம் என்ற நாமத்தை சிந்தையில் ஏற்றினார்.
சிவாய நமவெனச் சித்தம் ஒடுக்கி
அவாயம் அறவே யடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ வென்றன்றே சிந்தை
அவாயங் கெட நிற்க ஆனந்த மாமே
- திருமூலர்
தம் குருநாதரின் ஆசி பெற்று பிரம்மபுரத்தில் சில காலமும் மயூராசலத்தில் (தற்போது மைலம் என்று அழைக்கப்படும்) சில காலமும் தங்கி தவத்தை மேற்கொண்டார்.
சிவஞான பாலைய சுவாமிகள் ஒரு முறை காஞ்சிபுரத்திற்கு விஜயம்செய்தார். அங்கு ஏகாம்பர நாதரை தரிசித்து விட்டு தங்கியிருந்தபொழுது ஒருவர் நலல பாம்பு தீண்டி இறந்து விட்டார். அவரை சுவாமிகளிடம்தூக்கி வந்து சேர்த்து அழுது கண்ணீர் விட்டனர். சுவாமிகள், திருநீறு தந்து இறந்தவரை உயிர்பித்தார். மேலும் அவ்விடத்தில் விஷஜந்துக்கள் யாரையும் தீண்டாவண்ணம் இருக்க ஆசிர்வதித்தார்.
இந்நிகழ்ச்சியை கேள்வியுற்ற காஞ்சிபுரத்தை ஆண்டுவந்த நவாப், ஏகாம்பரநாத ஆலயத்தை மூடி யாரும் வந்து வழிபடா வண்ணம்செய்தான். தினமும் நடக்க வேண்டிய நித்திய நைவேத்தியங்களையும் குறைத்து விட்டான். இந்நிலையில், அவனுடைய மனைவி கொடிய சூலை நோயால்துன்பப்பட்டாள். ஹக்கீம்கள் வந்து மந்திரித்தும், மருந்துகள் பல தந்தும் குணமாகவில்லை. நவாப், தன் தவறை உணர்ந்து சுவாமிகளிடம் தன் மனைவியை அழைத்து வந்து, தன் தவற்றைமன்னித்து நோயை குணப்படுத்தும் படி வேண்டினான். சிவஞான தேசிகரும், "உன்னால் குறைக்கப் பட்ட நித்தியநைவேத்தியங்களை முறையாக ஏகாம்பரருக்கு நடத்தச் செய்தால் உன் மனைவியின் சூலை நோய் குணமாகும்" என்று அருளுரைத்தார். நவாபும் அவ்வாறே செய்வதாக உறுதியளிக்க, பாலைய சித்தர் திருநீறுதந்து அவன் மனைவியின் நோயை போக்கி அருளினார்.
நவாபும், ஆலயக்கதவுகளை திறந்து, நித்ய நைவேத்தியங்களை குறையறச் செய்வித்தான். சிவஞான தேசிகரும் சிலகாலம் அங்குள்ள மடத்தில் தங்கி மக்களுக்குச் சிவஞானத்தை போதித்தார்.
சிவஞான தேசிகர் தொண்டர் குழாத்துடன் ஒரு முறை செய்யூர் விஜயம் செய்தார். செய்யூர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தேசிகர் மேல் சந்தேகம் கொண்ட சிலர் அவரை சோதிக்க எண்ணினர். ஒரு புதுகுடத்தில் வெண்மணலை நிரப்பி தேசிகரின் திருவடியில்கொண்டு வந்து வைத்தனர். சிவஞான தேசிகர் வெண்மணலாக காட்சியளிப்பதற்கு எது மூல காரணமோ அந்த மூலத்தை தரிசித்துவணங்கினார். வெண்மணல் இனிக்கும் சர்க்கரையாக மாறியது. அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தார். அவ்வூர் மக்கள் தேசிகரின் ஆற்றலைக் கண்டு வியந்தார்கள். தேசிகர் தங்குவதற்கு மடம் ஒன்றை கட்டிக் கொடுத்து நிலங்களையும் கொடுத்தார்கள். சில காலம் தங்கிவிட்டுதம் புனித யாத்திரையை தொடர்ந்தார்.
தன்னுள்ளே சிதம்பரதரிசனம் கண்ட தேசிகர் புற சிதம்பரத்திற்கு வந்தார். நடராஜப் பெருமானை வணங்கினார். சிவத்தியானம் செய்தார். இப்படியே பலநாட்கள் நடராஜப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு மதுரைக்கு புறப்பட்டார்.
வழியிலுள்ள சிவாலயங்களுக்கெல்லாம் சென்று வழிபட்டு விட்டு மதுரை வந்து, மதுரை மீனாட்சி அம்மனையும், சோமசுந்தரரையும் தரிசனம் செய்தார். சிலநாட்கள் அங்கு தங்கினார்.
சிவ பக்தி நிறைந்த ஒரு தையல்காரரும், அவரின் மனைவியும் தங்களுக்கு குழதையில்லையே என்று பலகாலமாக ஏங்கி வாழ்ந்து முதுமை பருவமும் எய்தி விட்டனர். அந்தத் தையல்காரர் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் சித்திரமாக நுணுக்கமாக ஒரு பெரிய துணியில் தைத்து வந்தார். அப்படாகத்தை அம்மனுக்கு சாத்த விரும்பினார்.
ஒரு நாள் மீனாட்சி அம்மை, அவர் கனவில் தோன்றி, சிவஞானதேசிகரிடம் அப்படாகத்தை கொடுக்கும்படி அருளுரைத்தாள். தையல்காரருக்கு ஒரே ஆச்சரியம், மனைவியிடம் சொன்னார். தம்பதிகள் இருவரும் கல்யாண குணங்களுடன் படாகத்தை எடுத்துக் கொண்டு நம் தேசிகரிடம் வந்து கொடுத்தனர். தாம் கண்ட கனவை தெரிவித்து தங்கள் உள்ள கிடக்கையை வெளிப்படுத்தினர். தாங்கள் கொண்டு வந்த படாகத்தை சுவாமிகளின் பொற்பாதத்தில் வைத்து வணங்கினர். சுவாமிகள் அவர்களுக்கு ஆசி வழங்கி, திருநீறு தந்தார். அத்தம்பதிகள் முதுமை நீங்கி இளமை பருவம் எய்தியதோடுபுத்திர பாக்கியமும் பெற்று மகிழ்ந்தனர்.
மதுரையிலிருந்த தேசிகரை, ஞானபூமியாகிய புதுவை அழைத்தது. புதுவைக்கு வந்து, அங்குள்ள பிரம்மபுரத்திற்கு வந்து சேர்ந்தார்.அங்கு ஆச்சார்ய பீடம் அமைத்து, மக்களின் குறைகளைப் போக்கி சிவஞானத்தை பரப்பும் பணியையும் செய்து வந்தார். சுற்றுப்புற ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து சுவாமிகளிடம்அருளாசி பெற்று வளமான வாழ்வு கண்டனர்.
பிரம்மபுரத்திற்கு அருகாமையில் உள்ள கூனிமேடு எனும் ஊரில் மந்திரவாதி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் சுவாமிகளின் பேராற்றலில் பொறாமை கொண்டு, அவரை நாட்டை விட்டுவிரட்டிவிட எண்ணி, அரசரிடம் பொய் புகார் கூறினான். அரசரும் சம்மதித்து, தன் மகளை உடன் அழைத்து சென்றார். தேசிகரிடம் தன் மகளுக்கு இளம் வயதானாலும், தலை முடிவெள்ளை வெளேர் என்று வெண்மையாக இருப்பதாக கவலையுடன் கூறினான். தேசிகர் திருநீறு அளித்து அப்பெண்ணின் கூந்தலை கருமையடைய செய்தார்.
மன்னன் அளவற்ற ஆனந்தம் கொண்டு தேசிகரின் காலில் விழுந்துசேவித்து விட்டு புறப்பட்டான். ஆனால் பொறாமை கொண்ட மந்திரவாதி, இதையும் ஏற்கமறுத்தான். மறுபடியும், மன்னனை மூளை சலவைச் செய்து மற்றுமொரு சோதனை செய்யச் சொன்னான், இச்சோதனையில் தன்னையே அதில் ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாகவும் கூறினான், அதாவது. தங்கள் இருவரையுமே நடுக்கடலில் மூழ்கவைத்து விடவேண்டும். இருவரில் யார் முதலில் கரையேறுகிறார்களோ அவர்களே சித்தியில் வல்லவர் என்ற நிபந்தனையை மந்திரவாதி கூறினான், தேசிகர் ஆனந்தக்களிப்போடு சவாலை ஏற்றார். மன்னனும் சம்மதித்தான், மந்திரவாதியும் இன்னும் சிலரும் ஒரு தோணியில் ஏறி பிரம்மபுரத்திற்கு நேரே உள்ள கடல் நடுவே சென்றனர், அவ்விடம் தன் குரு சிவஞான பாலசித்தர் பரண் அமைத்து தவம் புரிந்த இடம், இருவரும் கடலில் மூழ்கினர், மூழ்கிய சிலநொடிகளில் தேசிகர் கரை வந்து சேர்ந்தார், பக்தர்களுக்கு தாங்கமாட்டா மகிழ்ச்சி.
மந்திரவாதியைஒரு மீன் விழுங்கி விட்டது. இதனை கேள்வியுற்ற
அரசன். மந்திரவாதியை மன்னித்து, உயிர்பித்து தருமாறு தேசிகரிடம்
மன்றாடினான். அவ்வாறே தேசிகரும், மந்திரவாதியை மீன்வாயிலிருந்து மீட்டு, உயிர்பிச்சை அளித்து, நல்லறிவு புகட்டினார். தேசிகரின் பேராற்றலைக் கண்ட திரிஅம்பக மகாராஜா சுவாமிகளுக்கு மடம் ஒன்றை கட்டி தந்து மான்யமாக பலகிராமங்களை சிலாசாஸனம் செய்து தந்தார்,
அவ்வமயம் நடு நாட்டில் உள்ள சிதம்பரபூபதி என்ற அரசனின் அரசுரிமையை வேற்றரசன் கவர்ந்து கொண்டான், அதனால் சிதம்பரபூபதி வாழ்க்கையில் வெறுப்புற்று இனி பிச்சை எடுத்துண்டு பெரியவர்களுக்கு தொண்டு செய்து தன் வாழ்நாளை கடத்தமுடிவு செய்தான். ஒரு நாள் நம் தேசிகரிடம் வந்தான். தேசிகருக்கு தொண்டு புரிந்து சில நாட்களைக் கழித்தான். தேசிகரும் அவனது நிலையை மனத்தில் கொண்டு தம் சேனைகளை அனுப்பி பகை அரசனை வென்று வரும்படி ஆசிர்வதித்தார். அம்மன்னனும் சேனயுடன் சென்று பகைமன்னனை வென்று தன் நாட்டை கைப்பற்றினான். தேசிகர் அவனது அரசுரிமையை மீட்டுத்தந்து அருளினார்.
சிவஞான பாலைய சுவாமிகள். சிவப்பிரகாச சுவாமிகளுக்கு ஞானாபதேசம் அருளியுள்ளார், தென்னகம் முழுவதும் சிவஞானத்தை பரப்பினார், தமது பீடத்தில் தக்க ஒருவரை சன்னியாச ஆஸ்ரமம் தந்து அமர்த்தினார்.
இறைவனின் ஆணை கிடைத்திட வைகாசி மாதம், பௌர்னமி திதியில்விசாட நட்சத்திரத்தில் மடத்தினுள் உள்ள குகையில் இறங்கினார்,தம்மை விபூதி லிங்கமாக மாற்றிக் கொண்டார்,
சிவஞான பாலைய சுவாமிகள் தம் வாழ்நாள் முழுவதும் பாலையே பருகினார் என்பதும், மக்களின் குறைகளை தன் திருநீறு ஒன்றினாலேயே குணப்படுத்தினார் என்பதும் ஆகும்.
தேசிகர் மொத்தம் 500 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்ததாகசொல்லப்படுகிறது. 18ம் நூற்றாண்டின் இறுதியில் மறைந்திருக்கலாம் என்றும் சில குறிப்புகளால் தெரியவருகிறது,
இன்றும் சிவஞான பாலைய சுவாமிகளின் மடத்தினுள்ளே, குகை உள்ளது. குகையினுள் விபூதி லிங்கம் உள்ளது. தேசிகரின் திருவருள் இடைவிடாது பூரணப் பொலிவுடன் அருளொளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டுமிருக்கின்றது.
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம் தமிழ்க்கல்லூரி,
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.
Thanks for very informative write-up. Om Namashivaya.
ReplyDeleteCould also elaborate as to how to worship Sivagnana Balaya Swamigal? On what date and time the the Vibhuthi Lingam in the Cave would open for public access?