சிவப்பிரகாச சுவாமிகள், காஞ்சிபுரத்தில் இறைவன் திருவருளால் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்துவிட்டதால் தனது தமையன் வேலாயுதம், கருணைப்பிரகாசம், தமக்கை ஞானாம்பிகை ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார்.
தனது தந்தையின் குருவான குருதேவரை தரிசித்து. அவருடனே தங்கியிருந்து கல்வி கற்றார்.
சிவஞானத்தில் பெருநிலை அடையப்பெற்ற குருதேவரிடம் தீட்சை பெற்றார். சதா சிவசிந்தனையிற் திளைத்திருந்தார், சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலத்தின் பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டார்.
ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் அருணாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி அன்றைய தினத்தில் 100 பாடல்கள் இயற்றினார். அதற்கு “சோண சைலமாலை” என்று பெயர். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால் தமது சகோதரர்களுடன் தென்னகப் பிரயாணம் தொடங்கினார். திருச்சிக்கருகில் உள்ள பெரம்பலூரில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து சிவபூஜையை செய்து வந்தார்.
அங்கிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையருகில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தார்.அவ்வூரிலுள்ள தர்மபுர ஆதினத்து கட்டளை தம்பிரான் வெள்ளியம்பல சுவாமிகளுக்கு சீடனாக இருந்து கல்வி கற்க விரும்பினார்.
வெள்ளியம்பலவாணர் தருமை ஆதீனம் நான்காம் பட்டத்தில் விளங்கிய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றவர், காசிக்கு சென்று குமரகுருபரரிடம் கல்வி பயின்றவர்.
அத்தகைய இலக்கண இலக்கிய செம்மலிடம் மாணாக்கன் ஆவதைப் பெரும் பேறாகக் கருதினார் சிவப்பிரகாச சுவாமிகள்.
சிவப்பிரகாசரின் தமிழார்வத்தை அறிந்த முனிவர் அவரின் ஆற்றலை அறிய விரும்பி "கு" என்று தொடங்கி "கு" என்று முடித்து இடையே ஊருடையான் என்று வருமாறு நேரிசைவெண்பா ஒன்று பாடுமாறு ஆணையிட்டார்.
“குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
முடக்கோடு முன்னமணி வாற்கு-வடக்கோடு
தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு”
முடக்கோடு முன்னமணி வாற்கு-வடக்கோடு
தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ளல்
ஊருடையான் என்னு முலகு”
சுவாமிகளும் தயங்காமல் உடனே பாடிக் காட்டினார். வெண்பாவைக் கேட்டவுடன் சிவப்பிரகாசரின் ஆற்றலைக் கண்டு வெள்ளியம்பல சுவாமிகள் மிகுந்த வியப்புற்றார். அவரை அப்படியே ஆரத் தழுவிகொண்டார். "இத்தகைய ஆற்றல் படைத்த உமக்கா தமிழ் சொல்லித்தர வேண்டும்" என்று கேட்டார்.
வெள்ளியம்பல சுவாமிகள், சிவப்பிரகாசரை தன்னுடன் இருத்திக்கொண்டு சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலாயுத சுவாமிகள், கருணைப்பிரகாச சுவாமிகள் ஆகிய இருவருக்கும் பதினைந்து நாட்களில் ஐந்திலக்கணங்களையும் கற்றுக் கொடுத்தார்.
சிவப்பிரகாசரின் எண்ணம் நிறைவேறியது. மகிழ்ச்சியில் மலர்ந்தார். பெரம்பலூரில் தனக்கு காணிக்கையாக கொடுத்த முந்நூறு பொற்காசுகளை தனது குருவின் காலடியில் சமர்ப்பித்தார். வெள்ளியம்பல சுவாமிகளோ," இவை எமக்குவேண்டா, அதற்குப் பதிலாக திருச்செந்தூரில் எம்மை இகழ்ந்து பேசுதலையே இயல்பாக கொண்டு திரியும் ஒரு தமிழ்ப்புலவனின் அகங்காரத்தை ஒடுக்கி எம் கால்களில் விழச்செய்ய வேண்டும்" என்றார்.
குருவின் அவாவை நிறைவேற்றும் பொருட்டு திருச்செந்தூர் புறப்பட்டார். கோவிலினுள் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை தரிசித்து விட்டு வலம் வந்தார். அப்பொழுது முனிவர் சொன்ன அப்புலவனைக் கண்டார்.
புலவனும், சுவாமிகளைக் கண்டு இவர் வெள்ளியம்பலசுவாமிகளிடமிருந்து வந்தவர் என்பதையறிந்து வசை மாறிபொழிந்தான். இருவருக்கும் விவாதம் முற்றியது.
புலவன் சுவாமிகளை பந்தயத்திற்கு அழைத்தான். இருவரும் நீரோட்டகயமகம் பாடவேண்டும் என்றும் யார் முதலில் முப்பது பாடலை பாடி முடிக்கிறார்களோ அவரே ஜெயித்தவர் தோற்பவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும் என்றான்.
சிவப்பிரகாச சுவாமிகளும் சிறிதும் தயங்காது பாடி முடித்தார். ஆனால் புலவனால் ஒரு பாடல் கூட பாட முடியவில்லை வெட்கித்தலைகுனிந்து சுவாமிகளிடம் சரணடைந்தான்.
அதற்குச் சுவாமிகள் அடியேன் வெள்ளியம்பல சுவாமிகளின் அடிமை நீர் அவருக்கே அடிமையாதல் முறை என்று கூறி தம்குருநாதரிடம் அழைத்துச் சென்று அவருக்கேஅடிமையாக்கினார்.
வெள்ளியம்பல சுவாமிகள் அகங்காரம் கொண்ட புலவனின் அகந்தையை அடக்கி அவனுடைய கவனத்தைபரம் பொருளிடத்தே செலுத்த வைத்து "நல்வாழ்வு வாழ்ந்து வா" என்று கூறி அனுப்பி வைத்தார்.
குருநாதரிடம் பிரியாவிடை பெற்று தமது இளவல்களுடன் துறைமங்கலம் வந்து, பின்னர் அங்கிருந்து வாலிகண்டபுரத்தின் வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்துவந்தார்.
வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே திருவெங்கைக் கோவை, திருவெங்கைக்கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம் என்னும் நான்கு நூல்களைத் தந்தருளினார்.
சிவப்பிரகாச சுவாமிகள், தமது உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அண்ணாமலை ரெட்டியாருடன் புனித பயணம் புறப்பட்டார்.
சிதம்பரத்திற்கு வந்து, அங்கு ஆத்ம சாதனையில் தீவிரமாக இறங்கினார். அங்கு சிவப்பிரகாச விசாகம்,தருக்க பரிபாஷை, சதமணிமாலை, நான்மணி மாலை முதலிய நூலகளை செய்தருளினார்.
அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்து -சில காலம் தங்கியிருந்து விட்டு-பின்னர் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார்கள். வழியில் சாந்தலிங்க சுவாமிகளை கண்டு அளவளாவி மகிழ்ந்து, அவருடன் சிவஞான பாலய சுவாமிகளை தரிசிக்க புதுவை வந்து, அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தனர்.
சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய சுவாமிகளின் பேராற்றலை, பெருமைகளை வானளாவ புகழ்ந்து கூறி, அவரைப் பற்றி ஒரு பா பாடுங்களேன் என்றார். அதற்கு சிவப்பிரகாச சுவாமிகள் இறைவனைத் துதிக்கும் நாவால் மனிதனை துதியேன் என்று கடுமையாக கூறி விட்டார்.
இருவரும் அருகிலுள்ள புத்துப்பட்டு ஐயனார் கோவிலின் பின்புறம்
(புத்துப்பட்டு ஐயனார் கோவில்)
அன்றிரவு தங்கினர். சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான் மயில் வாகனத்தோடு காட்சியளித்தார். நிறைய பூக்களை முருகப்பெருமான் சுவாமிகளிடம் கொடுத்து இவற்றை ஆரமாக தொடுத்து எமக்குச் சூட்டுவாய் என்றருளினார்.
காலையில் கண் விழித்ததும் சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவில் முருகப் பெருமான் வந்ததை தெரிவித்தார். சாந்தலிங்க சுவாமிகள்,சிவஞான பலைய சுவாமிகளுக்கு, முருகப் பெருமான் குரு.அவர் மீது பேரன்பு கொண்டு பெரும் பூஜை செய்து வருகிறார் தேசிகர்.
சிவஞான பாலைய சுவாமிகளின் பெருமையை உணர்த்துவதற்காகவே முருகபெருமான் சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் வந்து உணர்த்தியுள்ளார் என்று விளக்கினார்.
மறுநாள் சிவஞான பாலைய சுவாமிகளை இருவரும் சந்தித்தனர். தாலாட்டு, நெஞ்சு விடு தூது என்ற இரு பிரபந்தங்களைப் பாடி தேசிகர் சன்னிதானத்தில் அரங்கேற்றினார் சிவப்பிரகாச சுவாமிகள்.
சிவஞான பாலைய சுவாமிகளும், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு ஞானாபதேசம் செய்தார். இருவரும் குருவின் சீடர்களானார்கள். சிவஞான பாலைய சுவாமிகளின் சொற்படியே தன் தமக்கையை சாந்தலிங்க சுவாமிகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
தேசிகரிடம் விடைபெற்று, காஞ்சிபுரத்திற்கு வந்து கன்னட மொழியில் எழுதப்பட்ட விவேக சிந்தாமணி என்னும் நூலின் ஒரு பகுதியை தமிழில் வேதாந்த சூடாமணி என்று மொழிபெயர்த்தார். மேலும் சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்கலீலை என்ற நூல்களை எழுதினார். திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்ற இரண்டு நூல்களை தன் ஞானாசிரியர் மேல் பாடினார்.
காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு கூவம் என்னும் சிவத்தலத்தை அடைந்து திருக்கூவப்புராணம் பாடி அருளினார்.
அங்கிருந்து புறப்பட்டு பொம்மையாபாளையத்திற்கு வந்து தன் ஞானாசிரியரை தரிசித்து லிங்கதத்துவம், அனுபவம், ஈசனின் உறைவிடம் அவத்தைகள் போன்ற நுணுக்கமான தத்துவ விஷயங்களை தெரிந்து கொண்டார். பின்னர் விருத்தாசலம் புறப்பட்டார்.
சிவஞான பாலைய சுவாமிகள் இறைவனோடு கலந்த செய்தியை கேள்விப்பட்டு மறுபடி பிரம்மபுரத்திற்கு வந்தடைந்தார். குருவின் சந்நிதானத்தில் வீழ்ந்து, அழுது புலம்பினார். தம் குருவின் மீதிருந்த அளவற்ற அன்பினால் பலமுறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார்.
பொம்மையார்பாளைய கடலோரத்தில் அமர்ந்து மணலிலே "நன்னெறி" வெண்பா நாற்பதையும் தன் விரலால் எழுத, அங்குள்ளோர் அதை எழுதிக் கொண்டனர்.
காலம் வேகமாக சென்றது. பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு,நல்லாத்தூர் வந்து சேர்ந்தார்.
அது ஒரு சிற்றூர்.எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும், கள்ளிக்காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது. அக்கோயிலின் அருகே உள்ள நுணா மரத்தின் கீழ் அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டார்.
அதிகாலையில் எழுந்து நல்லாற்றிலிருந்து புறப்பட்டு வில்லியனூர் அருகே ஓடும் அற்றில் நீராடுவார்.அங்குள்ள வில்வ இலைகளை சிவபெருமான் பூஜைக்காக பறித்துக் கொண்டு, நல்லாற்றூருக்கு அதிகாலையிலேயே சென்று விடுவார்.
அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது, சிவஞான மகிமையும் அபிஷேக மாலையும் நெடுங்கழி நெடிலும், குறுங்கழி நெடிலும், நிரஞ்சன மாலையும், கைத்தலமாலையும் சீகாளத்திப்புராணத்தில் கண்ணப்பச் சருக்கமும், நக்கீரச்சருக்கமும் எழுதினார்.
பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார்.தவம் முடிந்தது. தவ சித்தி பெற்றார்.சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின. அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது. தாம் சிவமாகும் காலம் வந்ததை உணர்ந்தார். புரட்டாசி மாதம் பௌர்னமி திதியில் பரம்பொருளோடு ஐக்கியமானார்.
எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள நுணா மரம் வெட்டப் பட்டது. அந்த நுணா மரத்தின் கீழ் தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப் பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய் போட்டார்கள். அக்கணமே அந்நுணா மரம் எரிந்து சாம்பலாகியது. ஆனால் வீட்டிலிருந்த வேறு எந்தவொரு பொருளையும் அந்நெருப்பு தீண்டவில்லை.
சுவாமிகளின் காலம் 17-ம் நூற்றாண்டாகும். சுவாமிகள் வாழ்ந்தது 32 ஆண்டுகள்.
சுவாமிகளின் நூல்களிலே ஆழ்ந்த சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ,தெளிவான உயிர்நிலைத் தத்துவங்கள், மெய்ப் பொருளைக்காட்டுகின்ற விரிவான தர்க்க பாஷை யாவும் மலை போல் குவிந்துள்ளன.
முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் தந்தருளியவர் ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்.
இயற்றிய நூல்கள்:-
- திருச்செந்தூர் நீரோட்டக யமக அந்தாதி (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒருவகை பா வகை)
- திருவெங்கை உலா
- திருவெங்கை அலங்காரம்
- நால்வர் நான்மணி மாலை
- சிவப்பிரகாச விகாசம்
- தருக்கப்பரிபாஷை
- சதமணி மாலை
- வேதாந்த சூடாமணி
- சிந்தாந்த சிகாமணி
- பிரபுலிங்க லீலை
- பழமலை அந்தாதி
- பிட்சாடண நவமணி மாலை
- கொச்சகக் கலிப்பா
- பெரியநாயகி அம்மை கட்டளைக் கலித்துறை
- சிவநாம மகிமை
- இஷ்டலிங்க அபிஷேக மாலை
- நெடுங்கழி நெடில்
- குறுங்கழி நெடில்
- நிரஞ்சன மாலை
- கைத்தல மாலை
- சோணசைல மாலை
- சீகாளத்திப் புராணம்
- திருவெங்கைக்கோவை
- நெஞ்சுவிடு தூது
- சிவஞான பாலையர்
- திருக்கூவ புராணம்.
காலம் கடலூர் மாவட்டம் நல்லாற்றூரில் உள்ள
தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள் அவர்தம் துயிலிடம்.(சமாதி)
சிவப்பிரகாசர் துயிலிடம் முகப்பு
சிவப்பிரகாசர் துயிலிடம் பின்புறம்.
1.
சோணசைல மாலை
2.
நால்வர் நான்மணி மாலை
3.
திருச்செந்தில்
நிரோட்டக யமகவந்தாதி
4.
பழமலையந்தாதி
5.
பழமலை நாதர் பிச்சாடண
நவமணி மாலை
6. விருத்தகிரி
பெரியநாயகியம்மை நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
7.
பெரியநாயகியம்மை
கலித்துறை
8.
நன்னெறி
9.
திருவெங்கைக்
கோவை
10.
திருவெங்கைக்
கலம்பகம்
11.
திருவெங்கையுலா
12.
இட்டலிங்க
அபிடேக மாலை
13.
நெடுங்கழி
நெடில்
14.
குறுங்கழி
நெடில்
15.
நிரஞ்சன மாலை
16.
கைத்தல மாலை
17.
சிவநாம மகிமை
18.
சிவஞானபாலைய
சுவாமிகள் தாலாட்டு
19.
சிவஞான பாலைய சுவாமிகள்
நெஞ்சு விடுதூது
20.
சிவஞானபாலைய
சுவாமிகள் திருப்பள்ளி
யெழுச்சி
21.
சிவஞானபாலைய
சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
22.
சிவஞானபாலைய
சுவாமிகள் கலம்பகம்
23.
இட்டலிங்க
வகவல்
24.
திருவெங்கை
மான்மியம்.
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம் தமிழ்க்கல்லூரி,
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.
No comments:
Post a Comment