முன்னுரை
"கற்பனைக்
களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கி.பி.17ஆம்
நூற்றாண்டில் "கல்வியில் கரையிலாத" நகரம் என்று பாரட்டப்பெறும் காஞ்சிபுரத்திலே
அருணாசலேசுவரரின் பேரருளால் பிறந்தவர். பக்தி இலக்கியத்துக்கு அளப்பரிய நூல்களை வழங்கிய
வீரசைவ மரபினர். “மயிலம் பொம்மபுர ஆதீனத்தின்
இரண்டாவது பட்டத்து “ஸ்ரீசிவஞான
பாலய சுவாமிகளை”
குருவாகப் பெற்று, அம்மடத்தின் தலைமைச் சீடராக விளங்கியவர். மிகச்சிறந்த அருட்கவியான
இவர், இறைவனுக்கு ஞானப் பனுவல்களால் சொற்கோயில் அமைத்து வழிபட்டு மகிழ்ந்தவர். சமய
இலக்கியப் பயிரைத் தழைத்தோங்கச் செய்தவர். இவருடைய தமிழ்ப்பற்று, சமயப் பற்று, இலக்கண
இலக்கியப் புலமை, தமிழுக்கு இவர் படைத்துத் தந்துள்ள நூல்கள் எல்லாம் இவருக்கு இணை
இவரே என்று எடுத்துரைக்கின்றன.
தம்
வாழ்நாளில் தமிழுக்கு அணிகலனாகத் திகழும் 34 நூல்களை இவர் படைத்தளித்தார் என்பதனைக்
கொண்டு இவருடைய புலமைத்திறத்தை நன்று உணரலாம்.
ஆசுகவியாக,
காளமேகமாக நினைத்த உடனே கவிதைகள் எழுதுவதில் சிவப்பிரகாசர் கருவிலே திருவாய்ந்த புண்ணியவர்.
இவர் மட்டுமல்ல: இவருடைய உடன்பிறந்தார் வேலையர், கருணைப்பிரகாசரும் கூட கவிஞர்கள் தான்.
அதிலே
கருணைப்பிரகாசர் சிவப்பிரகாசருடைய கவிபுனையும் ஆற்றலைப் பின்வரும் பாடல் ஒன்றில் வெகுவாகப்
புகழ்ந்து கூறுகின்றார்.
"எவன்
ஒரு நொடியில் எண்ணாது
இசைத்ததோர்
செய்யுள் மற்றைக்
கவிகள் பன்னாள்
நினைத்த
காப்பியங்கட்கு
மேலாம்
எவன் இறை முதல்
நாமத்தோடு
இறைதரு விளக்கப்
பேரோன்
அவனொடு பிறப்பு
எமக்கு ஈண்டு
அளித்த பால்
வாழ்க மன்னோ"
என்று அழகாக எடுத்துரைக்கின்றார்.
கவிஞர்கள் பற்பல ஆண்டு முயன்று உருவாக்கக் கூடிய காவியங்களைவிட மேலானது, நினைத்த மாத்திரம்
நொடியில் இவர் எழுதும் செய்யுள். சிவப்பிரகாசர் எனும் திருநாமம் பூண்ட இவரோடு பிறக்க
என்ன தவம் செய்தேனோ என்று வியப்புற்றுப் பாரட்டியுள்ளார் கருணைப்பிரகாசர்.
நால்வர் நான்மணி மாலை
96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று “நான்மணிமாலை”.
நால்வர் பெருமக்கள் மீது நான்மணி மாலை என்ற
இலக்கணம் அமையப் பாடப்பட்டதால் இந்நூல் "நால்வர்
நான்மணி மாலை" என்ற பெயர் பெற்றது.இவருடைய நால்வர் மணி மாலை சமயக் குரவர்
நால்வர் அருமை பெருமைகளை அலசி ஆய்ந்து பக்திச் சுவை நனிசொட்ட சொட்ட அருளாளர்கள் பெருமை
கூறும் அரிய நூல் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இந்த
நூலின் அருமை கருதி இதனைச் சிறிய ஓலைச் சுருளில் எழுதி அதனைச் சுற்றிக் கட்டி உருத்திராக்கக்
கண்டிகையுடன் இணைத்துத் தலையில் அணிந்து கொண்டிருந்தார் "மயிலம் சிவஞான பாலைய சுவாமிகள்" என்பது வரலாறு.
தமிழகத்தில்
சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் நால்வர் (ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)
பெருமக்கள். அவர்களின் திரு அவதாரத்தால்தான் சைவமும், தமிழும் ஒருசேரப் புத்தொளி பெற்று
தழைத்து வளர்ந்தது. அச்சான்றோர்களின் அளப்பரிய சாதனைகளைப் பின் வந்தவர்கள் நினைத்து
நினைத்து உள்ளம் உருகி, பக்திப் பாக்களைத் தந்த அந்நால்வரையும் தமது பாக்களாலேயே வழிபாடு
செய்தனர்.
அப்படிப்பட்டவர்களுள்
தலைமை சான்றவர், "கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச
சுவாமிகள். இவர், "கவி சார்வ பெளமா",
"கற்பனைக் களஞ்சியம்", "சிவப்பிரகாச சுவாமிகள்", "நன்னெறி
சிவப்பிரகாசர்", "துறைமங்கலம்"சிவப்பிரகாசர், "சிவ அநுபூதி செல்வர்"
என்று பலவாறாக அழைக்கப்பட்டார். அந்நால்வருக்கும் அவர் எழுப்பிய கவிதைச் சொற்கோயில்தான்,
"நால்வர் நான்மணி மாலை" என்ற பக்திப் பனுவல்.
"நால்வர்
நான்மணி மாலை"யில் சிவப்பிரகாசரின் கற்பனைச் சொல்லோவியங்கள் மிக அற்புதமானவை.
நால்வர் பெருமக்களையும் நான்கு மணி (முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்) மாலைகளாக்கி,
நெஞ்சுருகிப் பாடியுள்ளார்.
சம்பந்தரை
வெண்பாவிலும், அப்பரைக் கலித்துறையிலும், சுந்தரரை விருத்தப்பாவிலும், மாணிக்கவாசகரை அகவற்பாவிலும் போற்றிப் பரவுகிறார் சிவப்பிரகாசர்.
முத்து,
பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகை மணிகளை முறையே கோர்க்கப்பட்ட மாலை போன்று
வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம்,
ஆசிரியப்பா (அகவற்பா) என்னும் நால்வகைப் பாக்களை நிரலே நிறுத்தி, அந்தாதித் தொடை
இலக்கணம் பொருந்தப் பாடப்படுவதால் இது “நான்மணிமாலை”
என்று வழங்கப்படுகிறது. இதில் நாற்பது செய்யுள்களே இருக்க வேண்டுமென்ற வரைமுறையும்
உள்ளது.
"வெண்பாக்
கலித்துறை விருத்தம் அகவல்
பின்பேசும்
அந்தா தியினாற் பதுபெறின்
நன்மணி மாலை
யாமென நவில்வர்''
என்பது இலக்கண விளக்க நூற்பா.
வாழ்க்கையில்
நிகழ்ச்சி காரண, காரிய அமைப்புடையவை. இறையருள் வீழ்ச்சிக்கும் காரண, காரிய அமைப்பு
உண்டு. இவைகளை உட்கிடையாகக் கொண்டு அமைக்கப் பெற்றதே அந்தாதித் தொடை என்பர்.
"முந்திய
மோனை முதலா முழுவதும் ஒவ்வாறு
விட்டால்
செந்தொடை நாம் பெறும்''
என்பது யாப்பிலக்கணம்.
எதுகை, மோனை முதலிய தொடைகள் முழுவதும் ஒவ்வாறு வந்தால் அதற்குச் செந்தொடை என்று பெயர்.
சிவப்பிரகாசர்,
மாணிக்கவாசகப் பெருமானுக்கு அமைத்த ஆசிரியப்பாவில் மூன்று, நான்கு இடங்களைத் தவிர மற்ற
இடங்களில் மோனை, எதுகை விதிகளைக் கடந்தே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெண்பா,
உத்தம இலக்கணம் உடையது; வெண்சீரே வருதல் வேண்டும்; செப்பலோசை அமைய வேண்டும். சைவசமய
உண்மைகளை நிலைநாட்ட முற்பட்டதே திருஞான சம்பந்தர் தேவாரம். ஒரு பொருள் இருக்கிறது என்பதை
நிலைநாட்டவும், அதன் இலக்கணத்தை வரையறுக்கவும் முற்படுவது முதற்காரியமாகக் கருதப்படும்.
உண்மையையும், இலக்கணத்தையும் "செப்புதல்" என்ற அடிப்படையில் சைவ சமயத்தை
நிலை நாட்டப் புகுந்த திருஞான சம்பந்தரை வெண்பாவால் - செப்பலோசையால் பாடிப்பரவியுள்ளார்.
முத்து
எனப்படுவது கறையிலாத மழைநீர். ஆவணி "சுவாதி"யில் சிப்பியின் வயிற்றில் புகுந்து
கட்டித்தன்மையதாக ஆன ஒருபொருள். கரையற்ற தெய்வ நலம் ஒன்றே மனிதக் குழந்தையாகி, தெய்வ
அமுதமே உண்டு, தெய்வ இலக்கணத்தையே பேசியதால், முத்து, ஞானசம்பந்தப் பெருமானுக்கு இணைப்புடையதாயிற்று.
இறைவன், சம்பந்தருக்கு முத்துச்சிவிகையும், முத்துப் பந்தரும் அளித்தமை இதனால்தான்!
"கலி'
என்ற சொல்லுக்குச் "செருக்கு' என்றும் "மகிழ்ச்சி' என்றும் இருபொருளுண்டு.
முதற்சீரின் இறுதி அசையாகிய காய், இரண்டாம் சீரின் மூல அசையாகிய நிரையுடன் சேரும்போது,
மெத்தென்று ஓடிவரும் அருவி, தடையாக உள்ள கல்லின்மேல் மோதி எழும்போது உண்டாகும் ஓசையைப்
போல ஒலிக்கும்; இதுவே துள்ளலோசை. செருக்கை நிலைநாட்ட இவ்வோசை பயன்படுத்தப்படும். இதற்கு
மாறாக மகிழ்ச்சியால் தோன்றும் கலிப்பா வகைகளும் உண்டு. வாழ்க்கையில் உத்தம இலக்கணத்தோடு
வாழ்ந்து, பேரின்ப வாழ்வை இவ்வுலக வாழ்விலேயே பெற்றும், பெறுமாறு அறிவுறுத்தியும்,
சமணர்களின் செருக்கை அடக்கியும் நின்ற நாவுக்கரசர், இலக்கண நெறியோடு அமைத்து கட்டளைக்
கலித்துறையால் பாடப்பட்டுள்ளார்.
கடலினுள்
இருந்தாலும் கடலின் தன்மையை ஏற்றுக்கொள்ளாது இருப்பதும், பழுத்தல் இன்றி காயாகவே நிற்றலும்
பவளத்தின் இயல்புகள். இவ்வுலகில் இருந்தாலும் இவ்வுலகியல் நெறிக்கு அடிமைப்படாமல் இருந்து
காட்டியவர் நாவுக்கரசர். காயின் தன்மை புளிப்பு; அது பழமாக மாறியபின் இனிக்கும். புளிப்புத்
தன்மைத்தாகிய இம்மனித உடலிலேயே இனிப்புத் தன்மையை-பேரின்பத்தை ஏற்று, இன்பம் துய்த்து
வாழ்ந்த திருநாவுக்கரசர் காயாகவே நிற்கும் பவளத்தோடு இணைக்கப்பட்டார். செம்மைக்கு உதாரணமாக
நிற்கும் பவளம் வாழ்வின் இலக்கணத்திற்கு உதாரணமாக நின்ற நாவுக்கரசருக்கு இணையாயிற்று.
அகவலோசை,
தழுவுவதாய் இனமென அமைந்த அமைப்புடையது இது. இறைவனை, நினைப்பற நினைந்து, அவன் மகிழடியிலேயே
எத்தனை இடையூறுகள் வரினும் தளராது நின்ற மயிலின் தன்மை நம்பியாரூரரின் இயற்கை. ஆனால்
நம்பியாரூரர் நம்போல் அவர்களும் வாழுமாறு எளிதில் இவ்வுலகம் போற்ற வாழ்ந்து காட்டிய
செயல்களையும் மேற்கொண்டவராதலின், அவருக்கு "விருத்தம்' அமைத்தார்.
மரகதமும்
மாணிக்கமும் மலைபடு பொருள்கள். மலையில் கிடைக்கப்படுபவை
ஆயினும், மரகதம் கல் வகையைச் சார்ந்தது; மாணிக்கம் நீர்ப்பொருள் (விஷம்) கட்டிப்பட்டதால்
அமையும் வகையைச் சார்ந்தது. இயல்பிலேயே கற்புத்தன்மை அமைய நின்று உலகினர்க்கு ஒளிவூட்டிய
நம்பியாரூரர் மரகத மணியைச் சாரும் நிலைபெற்றார்.
ஞான
நிலையை வெளிப்படுத்துவது மயில். மயிலின் ஓசையே அகவலோசை எனப்படும். நினைவின் முதிர்ச்சியே
மயிலுக்கு உருவாக அமையும். தன்னை மறந்து பிறிதொன்றை நினைப்பற நினைந்து நிற்கும் நினைவின்
தன்மையை வழியாகக் கொண்டு இறையருள் இன்பம் துய்த்த "அறிவாற் சிவமாம்' மாணிக்கவாசகப்
பெருமானை, அகவலோசையில் அமைத்துப் பாடினார் சிவப்பிரகாசர்.
நீர்த்
தன்மையாயிருந்தும் தம்முடைய ஒழுக்கத்தினால் மாணிக்கத் தன்மையைப் பெற்ற மாணிக்கவாசகரை,
மாணிக்கம் என்ற மணியைக் கொண்டு பாடியுள்ளார்.
இந்நூலை "துதிநூல்' என்றும்
"புகழ்நூல்' என்றும் கொள்வர் பலர். ஆனால் சிவப்பிரகாச சுவாமிகள் இந்நூலை,
"ஓர் ஆராய்ச்சி' என்று கூறுகிறார். "என்பாட்டுக்கு நீயும் அவனும் ஒப்பீர்
எப்படியினுமே'' என்ற வரிகளில் தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று அறிவியல் வளர்ச்சியில் அசுரவேகம்
பெற்றுள்ள மனிதன், மனிதப் பண்பை மறந்து விட்டான். பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும்
மேற்போக்காகப் பழகும் இயந்திர வாழ்க்கை பெருகிவிட்டது. ஊடகங்கள் பெருகி விட்டன. மனிதமனமும்
பண்பாடும் நலிந்து அழிந்து வருகின்றன. பண்பாட்டை வளர்க்கும் நூல்களையும் சான்றோர்களையும்
நாடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகின்றன. குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடம் மிகவும்
குறைந்து வருகின்றது. நாகரிக வேகத்துக்கு எதிரியாக அறிவுரைகளை எண்ணி வெறுக்கின்றனர்.
மனம் விரும்பியவாறு வாழ பெரியோர்களின் அறிவுரைகளையும், கட்டுப்பாட்டையும் எதிர்க்கின்றனர்.
தீமைபெருகும் காலமாக உள்ளது. இன்று மனிதனிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. எளிமை வாழ்க்கையை
வெறுத்து ஆடம்பரத்தை விரும்புகின்றான். போட்டிப்போட்டுக் கொண்டு ஆடம்பர வாழ்வு வாழ்கின்றான்.
நாளைய வருமானத்தை இன்றே செலவு செய்கின்றான். எந்த வழியிலாவது பொருள்களைப் பெற்றுவிட
வேண்டும் என்ற ஆசையினால் அடுத்தவர்களைக் கெடுத்தல், சிறுபொருளுக்காகக் கொலையே செய்தல்,
பொய், போட்டி, பொறாமை, வஞ்சம், சூது, களவு, காமம், போதை ஆகியவற்றில் சிக்குண்டு குறிக்கோளற்ற
வாழ்கை வாழ்தல் போன்ற அவல நிலைக்குப் பலர் தள்ளப்படுகின்றனர். இதனால் விளையும் அவலச்
செய்திகள் நாளும் வந்து கொண்டே இருக்கின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுடன்
இயைந்து பழகி மனங்களைப் பண்படுத்த இயலாச் சூழல் இன்று உள்ளது. எனவே மனம் பண்பட, பண்பட்ட
நூல்களை மனிதன் நாட வேண்டும். இயந்திரமாக மாறிய மனத்திற்கு மருந்தாக "கற்பனைக்
களஞ்சியம்" சிவப்பிரகாச சுவாமிகள் கூறும்
பண்பாட்டு ஒழுங்குகள் அமைந்துள்ளதை இவ்வாய்வு மூலம் அறியலாம்.
"வாழ்க
சிவப்பிரகாசர் தம் விழுமிய புகழ்"
செ.சத்யா
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, ஸ்ரீமத் சிவஞான பாலய
சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல்
கல்லூரி,
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம். தமிழ்நாடு - இந்தியா. மின்னஞ்சல் :
sathyasenthil77@gmail.com
ORCID ID: 0000-0001-7111-0002
No comments:
Post a Comment