குறுந்தொகையில் தொல்காப்பிய உவமக் கோட்பாடு
KURUNTHOGAIYIL THOLKAPPIYA UVAMA KOTPAADU
செ.சத்யா
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, ஸ்ரீமத் சிவஞான
பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம் - 604 304. விழுப்புரம் மாவட்டம்.
தமிழ்நாடு - இந்தியா. மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com
செ.சத்யா
/ S. SATHYA
Department
of Tamil, Research Scholar, Srimath Sivagnana Balaya Swamigal Tamil, Arts
and Science College, Mailam.
Mail
ID : sathyasenthil77@gmail.com
ஆய்வுச் சாரம்
தமிழிலக்கிய
ஆய்வுக்களம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. சங்க
இலக்கியம் பண்டைத் தமிழர்களின் நாகரிகம், மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிந்துக் கொள்ள
விரும்புவோருக்குச் சான்றாகவும், செய்தி ஊற்றாகவும் அமைகின்றது. இவ்விலக்கியங்கள் தமிழர்கள்
வகுத்த அகம், புறம் என்னும் பொருள் வகையினை விளக்குகின்றன. சங்ககாலப் புலவர்கள், சங்கப்
பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக
உணர்த்த 'உவமை மற்றும் உவமம்;' என்னும் இலக்கிய உத்தியை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளனர்.
தமிழிலக்கியத்தில் இலக்கியக் கொள்கையை உருவாக்கியவர் தொல்காப்பியர். அந்த வகையில்,
குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வந்துள்ள உவமக் கோட்பாடுகளை ஆராய்வதே இவ்வாய்வின்
நோக்கமாகும். இந்த ஆய்வு நூல்கள் ஆராய்ச்சி அடிப்படையில் அமைக்கப்படுகின்றது. இவ்வாய்வின்
முதன்மை நூல்களாக தொல்காப்பியம் மற்றும் குறுந்தொகை நூல்கள் எடுத்தாளப்படுகின்றது.
உவமை, உவமம், உவம உருபுகள் பற்றிய ஆய்வு நூல்,
அதன் சார்புடைய பல நூல்களை ஆராய்ந்து இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்
மூலம் தொல்காப்பியரால் சுட்டப்படும் உவமக் கோட்பாடுகளை குறுந்தொகைப் பாடல்களில் பயின்று
வந்துள்ளதை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
கருச்சொற்கள்: உவமம், உவமை, உவம உருபுகள், குறுந்தொகை, தொல்காப்பியம்,
உத்தி, பொருள் புலப்பாடு, குறிப்புப் பொருள், அகஉணர்வு.
Abstract
Uvamai, Uvama Urubugal in Tamil are used to
explain a particular context by citing another equivalent context. This is referred
to as ‘Uvamaiyani’ in Tamil Grammar rules as stated in Tholkappiyam. “Tholkappiyam” is a very ancient work in
Tamil Literature. It is the world’s first book in regard to the Tamil Language
and Grammar. It also codes the ethical way of living. The article focuses on
the “Tholkappiya Uvama Kotpaadugal” in Kurunthogai. ‘Kurunthogai’ is a
classical Tamil poetic work in the second book of the “Ettuthogai” (Eight Anthologies). It is
content matters were poem contains love and separation. There are many Uvamai, Uvama
Urubugal in Kurunthogai. This research paper explains the Tholkappiyar’s
Poetics extract the Uvama Kotpadukal found in ‘Kurunthogai Songs’.
Keywords: Uvamam, Uvama Urubugal, Kurunthogai,
Tholkappiyam, Uththi, Ullurai,
Kuripu Porul.
முன்னுரை
சங்ககாலப் புலவர்கள்,
சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, 'உவம உருபுகள்' என்னும்
இலக்கிய உத்திகளை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளனர். அணியிலக்கணக் கூறுகளை விளக்கும் முதன்மை
நூலான 'தொல்காப்பியம்' தமிழின் முதன் நூலாகத் திகழ்வதோடு உவமை மற்றும் உவம உருபு வரும்
இடங்கள் குறித்த பாகுபாடுகளை எடுத்தியம்புவதிலும் முதன்மையாக விளங்குகிறது. தொல்காப்பியர்
'உவமை' 'உவமம்' என்னும் சொற்களால் உவம உருபுகளைக் குறிக்கின்றார். தொல்காப்பியர் கூறும்
உவமக் கோட்பாடுகளை எட்டுத்தொகை நூல்களில் இரண்டாவதாக அமைந்துள்ள 'குறுந்தொகை'ப் பாடல்களில்
ஒப்பிட்டு ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
உவமம்
விளக்கம்
மொழி
வாயிலாக தான் உணர்ந்த கருத்துக்களை பிறருக்கு உணர்த்தவும் ஒரு பொருளோடு மற்றோரு பொருளை
ஒப்பிட்டு இரு பொருளுக்கும் (அ) கருத்துக்களுக்கிடையேயான நிறை குறைகளைத் தெளிந்து சமன்
செய்து சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலையான மனநிலைக்கும், ஒரு பொருளின் இயல்பு, சிறப்பு,
உயர்ந்த தன்மை, இழிந்த தன்மை ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய்ந்து அவற்றிக்கிடையேயான பொதுமைப்
பண்பை எடுத்துணர்த்தும் புலப்பாட்டு முறைமைக்கும் மனிதனின் சிந்தனையைத் தூண்டி அறிவாற்றலைப்
பெருக்குவதற்கும் 'உவமை'யே அடிப்படையாய் அமைகிறது.
தொல்காப்பியர்
உவமையின் வகைகளாக உள்ளுறை உவம், ஏனை உவமம் என்பதனை
"உள்ளுறை
உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது
ஆகும் திணையுணர் வகையே" (தொல்.அகம்.49)
என்ற நூற்பாவின் மூலம் குறிப்பிடுகிறார்.
ஆனால் ஏனை உவமத்தின் வகையினையும், உள்ளுறை உவமத்தின் வகையினையும் உவமவியலில் விளக்குகின்றார்.
ஏனைய உவமத்தின் இயல்பினை,
"ஏனைய
உவமம் தானுணர் வகைத்தே" (தொல்.அகம்.52)
எனும் நூற்பா வாயிலாக எடுத்துரைக்கின்றார்.
ஏனைய உவமம் வெளிப்படையாக இது பொருள், இது உவமம் எனத் தானே உணர்த்தும் இயல்புடையது என்கிறார்.
மேலும், இவர் உவமையின் தோற்றம், வகைகள், நிலைக்களன்கள், உவம உருபுகள், உள்ளுறை உவமம்
என உவமை குறித்து பலவகையில் விளக்கிய போதிலும் உவமைக்கான விளக்கத்தை குறிப்பிடவில்லை.
உரையாசிரியர்களே அதற்கான விளக்கத்தைத் தருகின்றனர். இளம்பூரணர் உவமையின் பயனாக
"பொருளைப் புலப்படுத்த வருவனவாகவும், அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயக்கும்"
என்றும் குறிப்பிடுகின்றார். பேராசிரியர் "உவமத்தால் பொருள் புலப்பாடே உணர்த்துகின்றது.
ஆதலின் மேல்பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு தொடர்பு உடையதாயிற்று" எனக்
கூறுவதால் அவர் அதனை அணியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு அணியிலக்கணம் கூறுவதாகக் குறிப்பிடுவதனையும்
மறுக்கிறார்.
தொல்காப்பியர்
ஏனைய உவமத்தின் வகைகளாக வினை உவமம், பயன் உவமம், மெய்யுவமம், உருவுவமம் என்ற நான்கின்
அடிப்படையில் உவமம் பிறக்கும் என்பதனை,
"வினைபயன் மெய்உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமைத் தோற்றம்" (தொல்.உவம.1)
என்னும் நூற்பாவாவின் வாயிலாக உவமையின்
பாகுபாடுகளைப் பற்றி விளக்குகிறார். "கண் முதலிய பொறிகட்குப் புலனாவனவும், பொறிகட்குப்
புலனாகாது மனத்திற்கு புலனாவனவும் என இருவகைப்பட வருதல்" என்று இளம்பூரணர் விளக்கம்
தருவார். "ஐம்பொரிக்கண் கட்புலனாகியவற்றுள் வினையாவது நீட்டல், முடக்கல், விரித்தல்,
குவித்தல் முதலியன பயனாவது நன்மையாகவும், தீமையாகவும் வருவன. வடிவமாவது வட்டம், சதுரம்,
கோணம் முதலியன. நிறமாவன வெண்மை, பொன்மை முதலியன". ஐம்பொறிகளுக்கு புலனாகாதவனாக
"செவியால் அறியப்படும் ஓசை, நாவினால் அறியப்படும் கார்ப்பு, கைப்பு முதலிய சுவை, மெய்யினால் அறியப்படுவன வெம்மை, தண்மை முதலியன,
மூக்கால் அறியப்படுவன நன்னாற்றம், தீநாற்றம், மனத்தால் அறியப்படுவன இன்பம், துன்பம்
முதலியன" என்று உவமை 'பாகுபாடு வரும்' என்பதற்கான விளக்கத்தினை உரையாசிரியர் வழி
அறிய முடிகின்றது.
மேலும்
ஒன்றுக்கு மேற்பட்ட பொதுத்தன்மைகள் பலவற்றைப் பெற்று வரும் இயல்பும் உவமைகளுக்கு உண்டு
என்பதனை,
"விரவியும்
வருஉம் மரபின என்ப" (தொல்.உவம.2)
என்னும் நூற்பா எடுத்தியம்புகிறது. இந்நூற்பாவில்
"வினை, பயன், மெய், உரு எனும் நான்கும் ஒவ்வொன்றே வருதலின்றி இரண்டு மூன்றும்
கலந்து வருதலும் உவமையின் மரபு" க.வெள்ளைவாரணன், தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்,
1985,ப.48 என்கிறார் பேராசிரியர்.
வினை
உவமம்
திருமணத்தை
முன் வைத்து பிரிந்துச் சென்ற தலைவன் குறித்த பருவத்தில் வராததால் மிகவும் வருத்தமுற்றத்
தலைவி தோழியிடம் வினை உவமத்துடன் எடுத்துரைப்பதனை,
"கான யானை கைவிடு பசுங்கழை
மீனேறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனோடு ஆண்டொழிந் தன்றே" (குறுந்.பா.54)
என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றது.
இந்த குறிஞ்சித் திணைப் பாடலில் புனங்காப்பார் எறியும் கவனொலிக்கு அஞ்சிய காட்டு யானை
தான் உன்ன விரும்பிய வளைத்த மூங்கிலை கைவிட்டது. அவ்வாறு விட்ட மூங்கிலானது, மீனைப்
பிடிப்பவன் மீன் அகப்பட்டவுடன் மேலே விரைவாக எடுக்கும்போது தூண்டில் நிமிர்தலைப் போல
விரைந்துச் சென்றது என்று எடுத்தாளப்பட்டுள்ளது. இதில் மூங்கிலின் வேகத்திற்கு தூண்டிலின்
நிமிர்தல் செயல் உவமையாகக் கூறப்பட்டதால் இது 'வினை உவமம்' ஆயிற்று. இவ்வுமையின் சிறப்பினாலே
பாடலாசிரியர் 'மீனெறி தூண்டிலார்' என்று அழைக்கப்படுகிறார்.
குறுந்தொகைப்
பாடலடிகளில் இது போன்ற 'வினை உவமம்' 54 இடங்களில் பயின்று வந்துள்ளது.
பயன்
உவமம்
தலைவியானவள்
பரத்தமையை நாடிச் சென்ற தலைவன் மீது ஊடல் கொண்டுள்ளாள். இதனை அறிந்த தலைவன் அவளின்
ஊடலைத் தீர்க்க முயல்கின்றான். இருப்பினும் தலைவி ஊடல் தணியாத போது தன் மனத்திடம்;
வருந்திக் கூறுவதனை,
"எவ்வி யிழந்த வறுமையாழ்ப்
பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
இனைமதி வாழிய நெஞ்சே" (குறுந்.பா.19)
என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் எவ்வி
(வேளாளருள் உழுது உண்போர் வகையினர்) என்னும் வள்ளலை இழந்ததால் உண்டாகிய வறுமையையுடைய
யாழ்பாணர்களது பொற்பூ இல்லாத வறுந்தலையாய் பொலிவிழந்து இருத்தல் போல மனமே நீயும் தலைவி
இன்மையால் பொலிவிழந்து வருந்துவாயாக என்று தன் மனத்திடம் கூறுகின்றான். இதில் தலைவனின்
துன்பத்திற்கு பாணர்களின் துன்பம் உவமையாக கூறப்பட்டுள்ளதால் இது 'துன்பத்தின் காரணமாக
விளைந்த பயன் உவமம்' ஆயிற்று.
இப்பாடலில்
அகத்திணைக்கு புறத்திணைக் கருப்பொருள் உவமமாக பயின்று வந்துள்ளதைக் காணலாம். குறுந்தொகைப்
பாடலடிகளில் இதுபோன்ற 'பயன் உவமம்' 68 இடங்களில் பயின்று வந்துள்ளது.
மெய்
உவமம்
தலைவியை
இரவில் சந்தித்துச் செல்லும் தலைவனிடம் தோழியானவள் தலைவியின் காமமானது அவளால் தாங்கிக்
கொள்வதற்கு கடினமாதலின் விரைவில் அவளை மணந்து கொள்ள வேண்டும் என்பதனை மெய் உவமத்துடன்
எடுத்துரைப்பதனை,
"வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார்அஃது அறிந்திசி னோரே – சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி
யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே" (குறுந்.பா.18)
என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன்
கூறுகின்றது. இப்பாடலின் மூலம் இயல்பாக சிறுமூங்கில்களால் வேலியாக அமைந்த வேர் பலாமரங்கள்
நிறைந்த நாட்டையுடைய தலைவனே பலாமரத்தின் சிறிய
கொம்பிலே பெரிய பழம் தொங்குவதைப் போல இத்தலைவியின் உயிரானது மிகச் சிறியது. ஆனால் அவளிடம்
உள்ள காம நோயோ மிகப் பெரியது. ஆகையால் நீ காலம் தாழ்த்தாது அவளை மணந்துக் கொள்வாயாக
என்று தோழியானவள் தனக்கே உரிய ஆளுமையால் இல்லற வாழ்வின் மேன்மையை தலைவனுக்கு எடுத்துக்
கூறுகிறாள். இதில் தலைவியின் சிறிய உயிரில் உள்ள பெரிய காம நோய்க்கு சிறிய கொம்பில்
உள்ள பெரிய பலாப்பழத்தின் வடிவம் உவமையாக கூறப்பட்டுள்ளதால் இது மெய் உவமம் ஆயிற்று.
இப்பாடல்
தோழி தலைவியின் காமத்தை மிகவுரைத்தல் என்பர் இளம்பூரணர். இது போன்ற 'மெய் உவமம்' குறுந்தொகைப்
பாடலடிகளில் 117 இடங்களில் பயின்று வந்துள்ளது.
உரு
உவமம்
தோழியின்
உதவிக் கொண்டு தலைவியை அடைந்த தலைவன் அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லும் வேலையில்
உரு உவமத்துடன் தலைவனுக்கு எடுத்துரைப்பதனை,
"உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்
கடலும் கானலும் தோன்றும்" (குறுந்.பா.81)
என்ற குறுந்தொகைப் பாடல் வரிகள் அழகாக
எடுத்தியம்புகின்றது. இப்பாடலில் தலைவனின் இனியச் சொற்களைக் கேட்டு தன்னுடைய புதிய
பெண்மை நலத்தை இழந்த தலைவி புலம்புதலை உடையளாயினாள். இதனைக் கண்ட தோழி தலைவனிடம் நிலவையும்
அதனோடு நின்ற இருளையும் போல புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதனுடைய கரையிலுள்ள
சோலையும் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்கள் நிறைந்த எங்கள் ஊரில் வந்து தலைவியை
முறையாக மணம் செய்து கொண்டு அவளை அடையுமாறு தலைவனிடம் எடுத்துரைக்கின்றாள்.
இதில்
வெண்மையான மணற்பரப்பு உடைய கடலுக்கு நிலவும், அடர்த்தியால் இருண்டு தோன்றும் சோலைக்கு
இருளும் நிறத்தால் உவமை ஆளப்பட்டுள்ளதால் இது 'உரு உவமம்' ஆகும். இது போன்று உரு உவமம்
குறுந்தொகைப் பாடலடிகளில் 104 இடங்களில் பயின்று வந்துள்ளது.
மேலும்
இப்பாடலில் இரட்டை உவமை, நிரல்நிறை உவமைகள் பயின்று வந்து பாடலை மேலும் அழகூட்டுவனாக
அமைந்துள்ளது.
செவியினால்
அறியப்படும் உவமை
பெற்றோரை
நீங்கிய தலைவனும் தலைவியும் உடன்போக்கு மேற்கொள்கின்றனர். அவர்களை பாலை நிலத்தின் வழியிடையிலே
கண்டவர்கள் இரங்கிச் செவிலியிடம் எடுத்துரைப்பதனை,
"வில்லோன் காலன கழலே தொடியோள்
மேல்அடி மேலன சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே" (குறுந்.பா.7)
என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன்
எடுத்துரைக்கின்றது. ஆரிய நாட்டின் கூத்தர்கள் கயிற்றின் மேல் நின்று ஆடும்பொழுது கொட்டப்படும்
பறையினைப் போல, மேல்காற்றானது தாக்குவதினால் நிலைகலங்கி வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுகள்
ஒலித்தற்கு இடமாகிய மூங்கில்கள் நிறைந்த பாலை நிலப்பரப்பில் கடந்து செல்ல வருபவர்களின்
வில்லையுடையவனாகிய வீரக்கழல் அணிந்தவனும், தோள்களையும் மெல்லிய அடியின்மேல் சிலம்புகள்
அணிந்தவளுமாகிய இவ் நல்லோர் உமக்கு என்ன உறவினரோ என கண்டோர் வருந்திக் கூறுவதாக அமைந்துள்ள
இப்பாடலில் வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுகளின் ஒலிக்கு ஆரியக் கூத்தரின் பறை உவமையாக
எடுத்தாளப்பட்டுள்ளதால் இது 'செவியினால் அறியப்படும் உவமை' ஆகும். இது போன்ற உவமைகள்
குறுந்தொகைப் பாடலடிகளில் 24 இடங்களில் பயின்று வந்துள்ளது.
நாவினால் அறியப்படும் உவமை
தம்
முன்னோரைப் பின்பற்றித் தானும் பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று தலைவன் நினைக்கின்றான்.
அவ்வாறு தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்றால் அவன் பெறும் துன்பத்தையும் வாழ்க்கையின்
நிலையாமையையும் எண்ணிப் பார்க்கிறான். பின்னர் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதைத்
தவிர்த்து தன் மனத்திடம் புலம்புவதனை,
"ஒருங்குடன் இயைவது ஆயினும்
கரும்பின்
கால்எறி கடிகைக் கண்ணயின் றன்ன
" (குறுந்.பாஃ267)
என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றது.
இப்பாடலில், நாள்தோறும் முறையாக கொல்லும் கூற்றுவனின் கொடுந்தொழிலை நன்கு உணர்ந்தோர்
இப்பெரிய உலகத்திலுள்ள செல்வங்களையெல்லாம் ஒருங்கே கொடுத்தாலும் கரும்பின் அடிப்பகுதியில்
வெட்டிய துண்டத்தை உண்டாற் போன்ற சுவையையுடைய, தூய்மையான பற்களில் ஊறிய குற்றமில்லாத
இனிய நீரையும், திரண்ட சிறிய வளையல்களையும் அணிந்த இத்தலைவியைப் பிரிந்து பொருள் தேடும்
முயற்சியை மேற்கொள்ள மாட்டார்கள் என புலம்பிக் கூறுவதனை அறியலாம்.
இதில் தலைவியின் பல்லினிடத்தே
ஊறிய இனிய நீருக்கு கரும்பின் சுவையை உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளதால் இது நாவினால்
அறியப்படும் உவமையாகும். இவ்வுமையாலேயே பாடலாசிரியர் 'காலேறிகடிகையார்' என்னும் சிறப்புப்
பெயர் பெற்றார். இது போன்ற உவமைகள் குறுந்தொகைப் பாடலடிகளில் 7 இடங்களில் பயின்று வந்துள்ளது.
மெய்யினால்
அறியப்படும் உவமை
பகற்பொழுதில்
தலைவனை சந்திக்க வந்த தலைவியும், தோழியும் அவனைக் காணது நிற்க, பின் சிறைப்புறமாக நிற்பதைக்
கண்ட தோழி மெய்யினால் அறியப்படும் உவமையுடன் தலைவனுக்கு கேட்குமாறு தலைவியிடம் கூறுவதனை,
"இருள்திணிந் தன்ன ஈர்ந்தண்
கொழுநிழல்
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில்
புலம்ப" (குறுந்.பா.123)
என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றது.
இப்பாடலில் தோழியானவள் நிலவையெல்லாம் ஒன்றாக தொகுத்து வைத்ததை போன்ற தோற்றத்தை உடைய
வெள்ளிய மணற் பரப்பின் ஒரு பக்கத்தில் இருள் நிறைந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய
நிழலையுடைய கரிய கிளைகளையுடைய புன்னை மரங்கள் சூழ்ந்த பூஞ்சோலையில் நாம் தனிமைப்பட்டிருக்க
தலைவர் இன்னம் வரவில்லை. பலவகையான மீன்களை வேட்டையாடச் சென்ற நம் தமையான்மார்களின்
படகுகளும் இனி வந்து விடும் எனக் கூறுகின்றாள். இதில் கடற்கரையின் வெண்மையான மணற்பரப்பினையும்,
புன்னை மரத்தின் இருள் நிறைந்த குளிர்ச்சிக்கு நிலவு உவமையாக வந்துள்ளதால் இது மெய்யினால்
அறியப்படும் உவமை ஆயிற்று.
இது
போன்று மெய்யினால் அறியப்படும் உவமைகள் குறுந்தொகைப் பாடலடிகளில் 23 இடங்களில் பயின்று
வந்துள்ளது.
மூக்கினால்
அறியப்படும் உவமை
இயற்கைப்
புணர்ச்சியின் கண் இடையீடு பட்டு நின்ற தலைவன் தலைவியின் அழகு நலனைப் பாராட்டிய நிலையில்
இயற்கையில் தலைவியின் கூந்தலுக்கு மணம் உண்டு என்று வண்டிடம் எடுத்துரைப்பதனை,
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்
தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி யெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே"
(குறுந்.பா.2)
என்ற குறுந்தொகைப்பாடலடிகள் அழகுற எடுத்தியம்புகின்றது.
இப்பாடலடிகளில் தலைவியின் கூந்தலில் சூடியுள்ள பூவில் மொய்க்கும் வண்டினைப் பார்த்து
பூந்தாதில் உள்ள தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினை உடைய வண்டே நான் விரும்பியதைத்
கூறாமல் உண்மையாக அறிந்ததை சொல்வாயாக. நீ அறியும் மலர்களுள் பிறவிகள் தோறும் என்னோடு
பயிலுதல் பொருந்திய நட்பினையும் மயில் போன்ற மென்மையையும் நெருங்கிய பற்களையும் உடைய
எம் தலைவியின் கூந்தலைப் போல நறுமணம் உடைய பூக்கள் ஏதும் உண்டோ? என தலைவன் எடுத்துரைப்பதனை
அறிந்து கொள்ள முடிகின்றது. இதில் தலைவியின் கூந்தலின் மணத்துக்கு பூக்களின் மணம் உவமையாக
வந்துள்ளதால் இது மூக்கினால் அறியப்படும் உவமை ஆயிற்று.
இது போன்று மூக்கினால்
அறியப்படும் உவமைகள் குறுந்தொகைப் பாடலடிகளில் 15 இடங்களில் பயின்று வந்துள்ளது.
மனத்தால்
அறியப்படும் உவமை
பரத்தமை
காரணமாக பிரிந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியிடம் தலைவியானவள் தலைவனை ஏற்க மறுத்தாலும்
தன்னுடைய உரிமையினையும், கற்பறத்தின் மேன்மையினையும் அழகாக எடுத்துரைப்பதனை,
"கண்ணிற் கலண நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல" (குறுந்.பா.123)
என்ற குறுந்தொகைப் பாடலடிகள் சுட்டுகின்றது.
இதில் தலைவர் மிகத் தொலைவில் உள்ள வேற்று நாட்டினரோ அல்லது வேற்ற ஊரினரோ இல்லை. கண்ணால்
காணுமளவிற்கு அருகிலும், வருவதற்குரிய அண்மையில் இருந்தும் முனிவரை அணுகி வாழும் பகுதியினைரைப்
போல மனத்தால் நீங்கி ஒழுகுகின்ற என் தலைவர் மீது முன்பெல்லாம் அன்புடையவராக இருந்தேன்.
இப்பொழுது அந்த அன்பு மறைந்து விட்டது என்று தோழியிடம் எடுத்துரைப்பதனை அறிந்து கொள்ள
முடிகின்றது. இதில் தலைவன் தலைவியை காண வாராமைக்கு முனிவரை அணுகி வாழும் பகுதியினரை
உவமையாக கூறப்பட்டுள்ளதால் இது மனத்தால் அறியப்படும் உவமை ஆயிற்று.
இது
போன்று மனத்தால் அறியப்படும் உவமைகள் குறுந்தொகைப் பாடலடிகளில் 47 இடங்களில் பயின்று
வந்துள்ளது.
விரவி
வரும் உவமைகள்
தலைவன்
சிறைப்புறத்தே நிற்க அவன் உள்ளத்தை திருமணம் மேற்கொள்ள கருதிய தோழி அவனுக்கு கேட்குமாறு
தலைவியிடம் இரு பொழுதிலும் கூடும் களவுக் கூட்டத்தை மறுத்து கூறுவதனை,
"சிறுதிணை விளைந்த வியன்கண்
இரும்புணத்து
இரவுஅரி வாரின் தொண்டகச் சிறுபறை"
(குறுந்.பா.375)
என்ற குறுந்தொகைப் பாடிலடிகள் அழகாக
சுட்டுகின்றது. மலைப்பக்கத்தில் சிறிய தினை விளைந்த அகன்ற இடத்தையுடைய பெரிய கொல்லையில்
இரவுப் பொழுதில் திணைக்கதிரை அரிபவர்களைப் போல தொண்டகமாகிய சிறிய பறையானது இராப் பொழுதிலும்
இரவுக் காவலர்கள் தூங்காமையால் ஒலித்துக் கொண்டிருக்கும். ஆகையால் தலைவர் இரவுப் பொழுதிலும்
வராமல் இருத்தலே நலமாகும் என்று தோழி எடுத்துரைப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது.
இதில் இரவு நேரங்களில்
இராக் காவல்களின் பறை முழக்கத்திற்கு இரவில் தினைக்கதிரை அரிபவர்கள் உவமையாக இடம்பெற்றுள்ளதால்
தினை அறிதல் - வினை உவமம், இரவில் தினை அரிதைல் - தினையின் மிகுதியால் பயன் உவமையும்,
தினை அரிதலின் போது ஏற்படும் ஒலி – செவியினால் அறியப்படும் உவமையென ஒரே உவமைக்குள்
3 உவமைகள் இடம் பெற்றுள்ளன.
இது
போன்று விரவி வந்த உவமைகள் குறுந்தொகைப் பாடலடிகளில் 96 இடங்களில் பயின்று வந்துள்ளது.
ஆய்வின்
நிறைவாக
1.
தொல்காப்பியர் உவமையின் தோற்றம், வகைகள்,
நிலைக்களன்கள், உவம உருபுகள், உள்ளுறை உவமம் என உவமைக் குறித்து பல வகைகளில் விளக்கிய
போதிலும் உவமைக்கான விளக்கத்தை குறிப்பிடவில்லை. உரையாசிரியர்கள் வழியே அறிய முடிகின்றது.
2.
உவமையின் பயனாக பொருளைப் புலப்படுத்த
வருவனவாகவும், அலங்காரமாகிக் கேட்பார்க்கு இன்பம் பயக்கும் என்று இளம்பூரணரும், மெய்ப்பாட்டியல்
போல 'உவமையும் பொருள் புலப்பாடே' என்று பேராசிரியரும் விளக்கம் தருகின்றனர்.
3.
தொல்காப்பியர் ஏனைய உவமத்தின் தோற்றமாக
வினை, பயன், மெய், உரு என்ற நான்கினைக் கூற, இளம்பூரணர் கண் முதலிய பொறிகட்குப் புலனாவனவும்
பொறிகட்குப் புலனாகாது மனத்திற்கு புலனாவனவும் என இருவகைப் பற்றி குறிப்பிடுகிறார்.
4.
குறுந்தொகையில் வினை உவமங்கள் வினை உவமங்கள்
54 இடங்களிலும், பயன் உவமங்கள் 68 இடங்களிலும், மெய் உவமங்கள்117 இடங்களிலும், உரு
உவமங்கள் 104 இடங்களிலும், செவியினால் அறியப்படும் உவமங்கள் 24 இடங்களிலும், நாவினால்
அறியப்படும் உவமங்கள் 7 இடங்களிலும், மெய்யினால் அறியப்படும் உவமங்கள் 23 இடங்களிலும்,
மூக்கினால் அறியப்படும் உவமங்கள் 15 இடங்களிலும், மனத்தால் அறியப்படும் உவமங்கள்
47 இடங்களிலும், விரவி வந்த உவமங்கள் 96 இடங்களிலும் பயின்று வந்துள்ளதை அறிந்து கொள்ள
முடிகின்றது.
5.
இந்த உவமங்களில் மெய் உவமம், உருவம்
உவமம், விரவி வந்த உவமங்களே மிகுதியான இடங்களில் பயின்று வந்துள்ளதையும் இவ்வாய்வின்
மூலம் அறிய முடிகின்றது.
References Book
1.
Shanumugam
Pillai, M., Perasiriyar. (2014). Tholkappiyam Porulathikaram Ilamporanam– Part
-1.Chennai: Paari Nilayam.
2.
Jagadeesan,
R. (2006). Kurunthogai Aaivukovai –Volume II. Madurai: Sanga Ilakkiya Aaivu
Maiyam.
3.
Ilampuranar.(2017).
Tholkappiyaththil Maipattiyal,Uvamaiyial, Seyuliyal,Marabiyal. Thirunelveli: The
South India Saiva Siddhanta Works Publishing Society.
4.
Sundramoorthi,
K., Dr. (1986). Tholkappiyam Porulathikaram – Volum II. Nachinarkiniyar
Urai.Chidambaram: Annamalai University.
5.
Subbureddiyar,
N., Dr. (2016). Agaththinai Kolkaikal.Chennai: Paari Nilaiyam.
6.
Kalimuthu,
K., Dr. (2003). Tholkappiyam Athan Ilakkiya Kolkaikalum Kurunthogaiyum.
Chennai: Poombukar Pathippakam.
7.
Seenuvasan,
A., (1995). Iraichi – Oru Pavanai Kotpadu, Kalai Ilakkiya Kotpadu. Madurai:
Ayinthamizh Aaivalar Manram.
8.
Thamizhannal,
(2004). Tholkappiyarin Ilakkiya Kolkaikal – Volume -1. Coimbatore: Solai
Noolagam.
9.
Balasubramaniyan,
C., Dr. (1995). Tholkappiya Katturaikal.Chennai: Paari Nilaiyam.
10.
Sivalinganar,
A.(1992). Tholkappiyam Uraivalam – Porulathikaram.Chennai: International
Institute of Tamil Studies.
No comments:
Post a Comment