Search This Blog

Tuesday, February 28, 2023

குறுந்தொகையில் உயிரினங்களும் உள்ளுறையும்

 

"குறுந்தொகையில் உயிரினங்களும் உள்ளுறையும்"

 

செ . சத்யா ,

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர் , 

(பதிவு எண் : Ph.D./2018/312/TAM)

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை  மற்றும்

அறிவியல் கல்லூரி, மைலம் - 604 304.

திண்டிவனம் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.

Mail Id: sathyasenthil77@gmail.com

ORCID ID: 0000-0001-7111-0002

 

 

ஆய்வு நெறியாளர் : . சதீஷ்., எம்.., பி.எச்.டி., உதவிப்பேராசிரியர், மயிலம் தமிழ் கல்லூரி.

 

முன்னுரை

 

பண்டைய தமிழர்கள் நமக்கு அளித்த கொடை சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியம் சங்ககால மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலணக்கண்ணாடியாகத் திகழ்கின்றன. இவை அக்காலத்து மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், வாணிபம், கல்விநிலை, பொருளாதாரவளம், நாகரிகம், அரசியல் முதலியவற்றை கலையழகுடன் கூறுகின்றன. சங்கத் தமிழர்கள் இயற்கையோடு இரண்டுறக் கலந்து வாழ்ந்தனர். திணை அடிப்படையில் வாழ்ந்த அம்மக்கள் அந்நிலத்தில் வாழும் உயிரினங்களைச் சார்ந்தே வாழ்ந்துள்ளனர். சங்க இலக்கியங்களில் பல்வேறு துறைகளில் பாடல்கள் படைக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை கருவுக்கு அரண்செய்து நிற்பனவே அகப்பாடல்கள் எனலாம். கவிதைப் பொருள், வடிவம், உவமம், உள்ளுறை, இறைச்சி உத்திகள் எனப் பலவற்றாலும் சிறந்த பாடல்கள் செறிந்து காணப்படுகின்றன. அவற்றில் குறுந்தொகையில் காணப்படும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் இடையே அமைந்துள்ள பாடல்களில் உள்ளுறையை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

உடனுறை உள்ளுறை

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின் தலைவன் பாங்கியை மதியுடன் படுப்பானாய் தலைவியும் தோழியும் இருக்கும் இடம் நோக்கிச் சென்று அவர்களிடம் வினவுவதாக அமைந்த பாடலில், சிறிய வெண்மை நிறமுடைய பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தினாற் போல, இளமை உடையவளும், மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களை உடையவளும், வளையல் அணிந்த கையை உடையவளுமாகிய தலைவி தலைவனை வருந்தச் செய்தாள் என்று கூறப்படுவதில்,

 

"சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை

கான யானை அணங்கி யாஅங்கு

இளையள் முளைவாள் எயிற்றள்

வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே"  - (குறுந்.119)

பாம்பின் குட்டி தலைவிக்கும், பாம்பின் நஞ்சு காமநோய்க்கும், யானையானது தலைவனுக்கும் உவமைப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளதை அறியலாம். பாம்பின் குட்டி தீண்டியவுடன் அதன் நஞ்சு யானையின் உடல் முழுவதும் பரவியமை போலத் தலைவி தலைவனோடு பொருந்தி அவன் உடல் முழுவதும் காமநோய் உண்டாகக் காரணமாயினான் என உடனுறை உள்ளுறை அமைந்துள்ளது.

 

வினை உவம உள்ளுறை

வரைவு நீட்டித்த வரைவு நீட்டித்த வழித் தலைவி தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறுவதாக அமைந்த பாடலில் மயில் தலைவனுக்கும், மயிலின் முட்டை தலைவிக்கும், குரங்குக் குட்டி ஊராருக்கும் இயைபாக உள்ளுறையாக கூறப்பட்டுள்ளதை,

 

"கான மஞ்ஞை அறை ஈன் முட்டை

வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை என்றும்

நன்றுமன் வாழி தோழி! உண்கண்

நீரொடு ஒராங்கு தணப்ப                    

உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே"   - (குறுந்.38)

குறுந்தொகைப்பாடலடிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. இப்பாடலில், காட்டில் வாழும் மயிலின் முட்டையைக் குரங்குக் குட்டி வெயிலில் உருட்டும் என்றதனால், முட்டையினுள் உள்ள குஞ்சிற்குண்டாகும் தீமையினை கருதாமல் குரங்குக் குட்டி வெயிலில் உருட்டுதல் போன்று தலைவன் உடனிருந்து இன்புறுத்தற்குரிய தலைவி அவன் பிரிவினால் துன்புறுவதோடு, நகையாடுவதையே தொழிலாகக் கொண்ட ஊரார் பழிச் சொல்லிற்கும் ஆளாக நேர்ந்தனள் என்பதை வினை உவம உள்ளுறையாக அமையப்பெற்றுள்ளது.

 

இயற்கைப் புணர்ச்சி நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்ததாக அமையும் குறுந்தொகைப்பாடலில், அரவின் குட்டி தலைவிக்கும், யானை தலைவனுக்கும், நஞ்சு காமநோய்க்கும் வினை உவம உள்ளுறையாக கூறப்பட்டுள்ளதை,

 

"சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை

கான யானை அணங்கி யாஅங்கு

இளையள் முளைவாள் எயிற்றள்

வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே"  - (குறுந்.119)

குறுந்தொகைப்பாடல் எடுத்தியம்புகின்றன. இப்பாடலில், அரவின் குட்டி தீண்டியவுடன் அதன் நஞ்சு யானையின் உடல் முழுவதும் பரவியதைப் போல, தலைவி தீண்ட தலைவனின் உடல் முழுவதும் காமநோய் பரவியதாக எடுத்தியம்புகின்றது.

 

தலைவன் தலைவியை வரைவு கடாவுதலுக்கு அறிவுறுத்தும் தோழி கூற்றுப் பாடலொன்றின் பாடலடிகளில் நாரை தலைவனுக்கும், தாழையின் நிழல் தலைவனின் மனைக்கும், கடல் அலை ஊரார் அலர்க்கும் உள்ளுறையாகப் பொருள்காட்டப்படுதலை,

 

"கலிதேர்ந்து அசைஇய கருங்கால் வெண்குருகு

அடைகரைத் தாழைக் குழீஇ பெருங்கடல்

உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ"  - (குறுந்.303)

குறுந்தொகைப்பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றன. இப்பாடலில், நாரை இரை உண்டு தாழையின் நிழலில், இனத்துடன் கூடி கடல் அலை தாலாட்ட உறங்குதல் என்பதனால், தலைவன் நுகர்ந்து தன் மனைக்கண் சுற்றத்தோடு கூடி ஊரார் அலர் உரைக்க வரைவு பேணாது மடிந்து கிடப்பதைக் குறிப்பதாக உள்ளுறை அமைந்துள்ளது.

 

மெய்யுவம உள்ளுறை

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியதாக அமைந்த பாடலில் மெய்யுவம உள்ளுறை அமைந்துள்ளதை,

"மாரி ஆம்பல் அன்ன கொக்கின்

பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞ்ஞெண்டு

கண்டல் வேர்அளைச் செலீஇயர் அண்டர்

கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்"  - (குறுந்.117)

என்று எடுத்துரைக்கின்றன குறுந்தொகை பாடல் வரிகள். கொக்கின் பார்வைக்கு அஞ்சிய நண்டு, தாழையின் வேரடியில் உள்ள தன் வளைக்குச் செல்லுதலைக் கூறி, ஊரார் அலர் மொழிக்கு அஞ்சித் தலைவியை மணந்துகொண்டு தன் இல்லத்தே இல்லறம் நடத்தும்படி வேண்டினாள் தோழி. இதில் நண்டின் விரைந்த செலவிற்குக் கயிற்றை அறுத்துச் செல்லும் எருது உவமம் ஆயிற்று. ஒரு சிறிய நண்டுகூடத் தனக்கு வரும் கேட்டை அறிந்து அக்கேட்டினின்று தப்புவதற்கு உரிய இடம் தேடித் தன்னுடைய வளையை நாடி ஓடுகின்றது. ஆனால், தலைவன் அயலார் உரைக்கும் அலர் மொழிகளிலிருந்து விரைந்திலன் என்பதை உள்ளுறுத்துகின்றது. வளை கழல உடல் மெலிந்து நிற்கும் அந்நிலையிலும் தலைவி தன் துயரைத் தலைவனால் வந்தது என்று கூற விரும்பாமல் சிறிய வளையலை அணிந்து மறக்க விரும்புவாள். இங்கு உடல் மெலிதல் காரணமாதலால் மெய் உவமாயிற்று.

 

பிரிவிடை வேறுபாட்டைத் தோழி வற்புறுத்தி, தலைவன் சென்ற சுரத்தின் அருமையைத் தலைவிக்கு தோழி எடுத்துரைப்பதினை,

"பழுஉப்பல் அன்ன படுஉகிர்ப் பாஅடி

இருங்களிற்று இனநிரை ஏந்தல்வரின் மாய்த்து

அறைமடி கரும்பின் கண்குடை அன்ன

பைதல் ஒருகழை நீடிய சுரன்இறந்து

எய்தினர் கொல்லோ பொருளே அல்குல்

அவ்வரி வாடத் துறந்தோர்

வன்பர் ஆகத் தாம்சென்ற நாட்டே"     - (குறுந்.180)

என்று குறுந்தொகைப் பாடல் எடுத்துரைக்கின்றன. இதில், கூட்டமாகச் சென்ற யானைகளின் காலிற் தப்பிய ஒற்றை மூங்கில் பருமை குறைந்து வாடிச் சிறு கோலாய்த் தனித்து நிற்பது போலத் தலைவன் செய்த சிறுமைகளால் தலைவி ஒருத்தித் தனித்து வாடி நிற்பதனைக் குறிக்கப்படுகின்றது. அம்மூங்கில் என்று அழியும் எனக் கூறமுடியாதது போலத் தலைவியின் உயிரும் அத்தகையதே எனக் குறிப்பால் உணர்த்துகிறாள் தோழி. மூங்கில் வாடி நிற்றலைத் தலைவியின் உயிருடன் பொருத்திப் பார்ப்பதால் இது மெய் உவமம் ஆகும்.

 

உரு உவம  உள்ளுறை

பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்ததாக அமைந்த பின்வரும் பாடலில் உரு உவம உள்ளுறை பயின்று வந்துள்ளதை,

 

"கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார்

சுரும்புஉண மலர்ந்த வாசம் கீழ்ப்பட

நீடிய வரம்பின் வாடிய விடினும்

கொடியோர் நிலம்பெயர்ந்து உறைவேம் என்னாது

பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்

நின்ஊர் நெய்தல் அனையேம் பெரும"    - (குறுந்.309)

 

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றது. இப்பாடலில், நெய்தல் கொடி நீர் பெய்தாலும் பெய்யாது வாடவிட்டாலும் வயலை விட்டு நீங்காது என்பது தலைவியைக் குறிக்கின்றது. தலைவன் இன்னா செய்தாலும் இனிது செய்யும்போதும் தலைவி தலைவனை நீங்குதல் இலள் என்று எடுத்துரைக்கின்றது. இப்பொருண்மையால் இது உரு உவமமாயிற்று.

 

உரு-நிறம், "ஒரு பண்பை உணர்த்துவன யாவும் உருவுமமாம்" என்ற பேராசிரியர் கூற்றுப்படி உரு உவம உள்ளுறை அமைந்துள்ளதை,

 

"தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே

விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச்

சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்

நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி

பாம்புமிழ் மணியின் தோன்றும்

முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே"   - (குறுந்.239)

 

என்ற குறுந்தொகைப் பாடல், மூங்கிலை வேலியாக உடையது என்பது, தலைவி புகற்கரிய காவலுடையாள் என்பதையும், வண்டு மலரின் தாதுபடப் பொன்னிறமாய்ப் பொலிந்து தோன்றுதல் என்பது தலைவி தலைவனை வரைந்து கொண்டு பொலிவு பெறுவதையும் குறிப்பதாகும்.

 

சுட்டு உள்ளுறை

பலா மரத்தினைக் காப்பதற்கு இயற்கை வேலியாக மூங்கில் புதர்கள் உள்ளன. வேரில் பழுக்கும் பலாவின் வேறாகக் கொம்பில் பழுக்கும் பலாவும் கூறப்பட்டுள்ளது. வேரில் பழுத்தால் அதன் பழங்களைத் தரை தாங்கும். கொம்பில் பழுத்தால் எவ்வகைப் பற்றுக்கோடும் இன்றி வீழும் நிலையை அறிந்து பறித்துப் பயன்படுத்துவோரைப் போலத் தலைவியின் நிலை அறிந்து அவளை மணம் செய்து கொள்ளுதல் வேண்டும் என்று குறிக்கப்பட்டுள்ளது. சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போலச் சிறிய உயிரில் பெரிய காமம் உள்ளது என்பது புலப்படுத்தப்படுகின்றது.

 

"வேரல்  வேலி  வேர்கோட் பலவின்

சாரல்  நாட  செவ்வியை  ஆகுமதி

யார்அஃது  அறிந்திசி  னோரே  சாரல்

சிறுகோட்டுப்  பெரும்பழம்  தூங்கியாங்குஇவள்

உயிர்தவச்  சிறிது  காமமோ பெரிதோ"  - (குறுந்.18)

பழம் வீழ்வதற்கு முன் மரத்திற்கு உரியார் அறிந்து பயன்கொள்வது போலத் தலைவி உயிர் நீப்பதற்கு முன் உரிய நாளில் மணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தலைவனை வேண்டுகிறாள். இங்கு பலா மரத்தின் பழத்தினைச் சுட்டிக்காட்டித் தலைவியின் நிலையைக் கூறியதால் இது சுட்டு உள்ளுறையாயிற்று.

 

நகை உள்ளுறை

நண்டு தன்னுடைய  கூர்மை வாய்ந்த நகத்தினால் கீறிய கோடுகளைச் சிதைக்கும். ஈரமான மணலை உடைய நீர் நிறைந்த துறையை உடைய தலைவர்க்கு நம்மைச் சார்ந்த பெற்றோர் முதலியோர். நீ உரிமை உடையாய் என்பதை உடம்பட்டுக் கூறினர். அதனைக் கண்டு தலைவி மகிழ்ச்சியுற்றதாகக் கூறுகிறாள். விரிந்த  மலர்களைக் கொண்ட புன்னை மரங்கள் உயர்ந்து விளங்கும் புலால் நாற்றம் கமழும் சேரியில் உள்ள இனிதான நகைத்தலை உடைய மகளிர் கூட்டத்தாரோடு ஆரவாரத்தை உடைய இந்த ஊர் இனியும் அவ்வாறே அலர் கூறும் தன்மை உடையதாகுமோ என்று கூறுகிறாள் தோழி. இதனை,

 

"அளைவாழ் அலவன் கூர்உகிர் வரித்த

ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென

உருமஇசைப் புணரி உடைதரும் துறைவதற்கு

உரிமை செப்பினர் நமரே விரிஅலர்ப்

புன்னை ஓங்கிய புலால்அம் சேரி

இன்நகை ஆயத் தாரோடு

இன்னும் ஆற்றோஇவ் அழுங்கல் ஊரே"    - (குறுந்.351)

என்ற குறுந்தொகைப்பாடலில், தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி நமர் அவர்க்கு வரைவு நேராரோ என அஞ்சிய தலைமகளுக்கு தோழி வரைவு மலிந்ததாக அமைந்த பாடலில் நகை உள்ளுறை அமைந்துள்ளது. நண்டு மணற்பரப்பில் வரித்ததும் அலைகள் அக்கோடுகளை அழித்தலும், மணலில் தம் அளையை (வளையை) நாடி விரைந்து புகுந்து மறைதலும் என்றது ஊரார் கூறும் அலர் மொழிகள் தமர் வதுவை நேர்ந்தமையால் நீங்குவதைக் குறித்ததாகும்.புலால் நாற்றம் வீசும் சேரியில் புன்னையின் மணம் மிக்குக் காணப்படுதலைக் காட்டி, ஊராரின் அலர் மொழிகள், தமர் உரிமை நேர்ந்தமையால் அடக்கப்படுதலைக் காட்டினாள். இது எள்ளல் குறித்த நகை ஆதலின் ஆயத்தார்க்கு இன்நகை கூறப்பட்டது. ஆயத்தார்க்கு இனிய நகையாகும் என்பதை உள்ளுறுத்தி உணர்த்திற்று.

 

சிறப்பு  உள்ளுறை

தோழி அறத்தோடு நின்று தலைவனின் சிறப்பைக் கூறுவதனை,

 

"அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்குஎழு பெருஞ்சினை இருந்த தோகை

பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்"     -  (குறுந்.26)

என்ற குறுந்தொகைப்பாடல் வரிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. இப்பாடலில், அரும்புகள் ஏதுமின்றி மலர்ந்த கரிய அடிப்பகுதியை உடைய வேங்கை மரத்தின் மேற்பகுதியில் வளர்ந்துள்ள பெரிய கிளைகளில் தங்கியுள்ள மயிலானது மலர்களைக் கொய்யும் இளமகளிரைப் போலக் காட்சியளிக்கும் என்று எடுத்துரைப்பது தலைவனும் தகான் போலத் தோன்றினாலும் தக்கவனே என்ற உள்ளுறை இப்பாடலில் அமைந்துள்ளது. இங்கு தலைவனின் சிறப்பைக் கூறுவதால் சிறப்பு உள்ளுறை அமைந்துள்ளது.

 

தலைவி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற்பரத்தை அத்தலைவிக்குப் பாங்காயினார். கேட்பச் சொல்லிய பாடலொன்றில் அமைந்த உள்ளுறையினை,

 

"கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்இல் பெருமொழி கூறித் தம்இல்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல

மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்க   -  (குறுந்.8)

 

என்ற குறுந்தொகைப் பாடலில், வயல் அருகில் உள்ள மாமரத்தின் முற்றி வீழ்ந்த இனிய பழத்தைப் பொய்கையிலுள்ள வாளைமீன்கள் கவ்வி உண்பதற்கு இடனாகிய மருதநிலத் தலைமகன் பரத்தையின் வீட்டில் பரத்தையை வயப்படுத்துவதற்காகப் பெருமொழிகளைக் கூறிச் சென்று, தன் வீட்டின் முன் நிற்பவர் கையையும் காலையும் தூக்கும்போது தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றும் பாவையைப்போலப் புதல்வனை ஈன்ற தன்னுடைய மனைவிக்கு அவள் விரும்பிய செயல்களைச் செய்வான் என்று கூறப்பட்டுள்ளது. இதில், "பழன வாளை கதூஉம் ஊரன்" என்ற தொடர் தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோதெல்லாம் பெற்று இன்பம் நுகரும் பரத்தையரின் இயல்பைக் குறிப்பதாகும். மகப்பேறு பெற்ற தலைவி தன் மகனைப் பேணுதற்கு உரியளேயன்றித் தன் போல இன்பத்திற்கு உரியள் அல்லள் என்பதனை "புதல்வன் தாய்" என்று கூறி இகழ்ந்தனள் என்பதான உள்ளுறைகள் இப்பாடலில் அமைந்துள்ளன.

 

ஆய்வு முடிவுரை

பழந்தமிழர்கள் இயற்கையின் கூறுகள் அனைத்தையும் முழுவதும் உணர்ந்திருந்ததினால் உயிரினங்களை உடனணைத்துக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். சங்க கால மக்கள் விலங்குகள் மற்றம் பறவைகள் போன்றவற்றுடன் தொடர்புகொண்டு வாழ்ந்துள்ளனர். இயற்கையின் ஒவ்வொரு இயக்க ஆற்றலையும் அறிந்தே, அதன் இன்றியமையாமையை எதிர்காலச் சந்ததியினருக்கு உணர்த்தவே சங்கப்பாடல்களில் பாடப்பட்டுள்ளன. அவற்றில் "குறுந்தொகையும்" ஒன்றாகும். நம் பழம்தமிழர்கள் இயற்கையை நேசித்து, அதனோடு இயைந்து வாழ்ந்த வாழ்க்கையினை, இயற்கையை நேசிக்க மறந்து, அதனை அழிக்க முனைந்துவரும் இன்றைய நூற்றாண்டு மக்கள் அனைவரும் நினைவுகூறல் வேண்டும். இயற்கையை ஆழ்ந்து நோக்கிப் புரிந்து கொண்டு அதனைத் தம் வாழ்வின் துணையாகப் பயன்படுத்திய தமிழர் சால்பை சங்கஇலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பல்லுயிரையும் நேசிக்கப் பழகுவோம். நம்மிடம் இருப்பதை அவற்றோடு பகிர்ந்து கொள்வோம். பகுத்துண்டு வாழ்வோம், பல்லுயிர் காப்போம். அதுவே ஆறறிவுள்ள மனிதர்க்கு அழகாகும்.

No comments:

Post a Comment