Search This Blog

Tuesday, October 11, 2022

குறுந்தொகையில் உவம உருபுகள் KURUNTHOGAIYIL UVAMA URUBUGAL

 

குறுந்தொகையில் உவம உருபுகள்

KURUNTHOGAIYIL UVAMA URUBUGAL


செ.சத்யா

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை, ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம் - 604 304. விழுப்புரம் மாவட்டம்.

தமிழ்நாடு - இந்தியா. மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com

 

 

ஆய்வு நெறியாளர்:

கன்னியம் முனைவர். அ.சதீஷ்,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம்.

 

ஆய்வுச் சாரம்

சங்க இலக்கியம் பண்டைத் தமிழர்களின் நாகரிகம், மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்குச் சான்றாகவும், செய்தி ஊற்றாகவும் அமைகின்றது. இவ்விலக்கியங்கள் தமிழர்கள் வகுத்த அகம், புறம் என்னும் பொருள் வகையினை விளக்குகின்றன. சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை குறிப்பாக  உணர்த்த “உவமை” என்னும் இலக்கிய உத்தியை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளனர். தமிழிலக்கியத்தில் இலக்கியக் கொள்கையை உருவாக்கியவர் தொல்காப்பியர். அந்த வகையில், குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வந்துள்ள உவம உருபுகளை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வின் முதன்மைத் தரவுகளாக தொல்காப்பியம் மற்றும் குறுந்தொகை நூல்கள் அமைகின்றன. உவம உருபுகள் பற்றிய ஆய்வு நூல்கள், அதன் சார்புடைய பல நூல்களை ஆராய்ந்து இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் தொல்காப்பியரால் சுட்டப்படும் உவம உருபுகளை குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வந்துள்ளதை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

 

கருச்சொற்கள்:  உவமம், உவம உருபுகள், குறுந்தொகை, தொல்காப்பியம், உத்தி, பொருள் புலப்பாடு, குறிப்புப் பொருள், அகஉணர்வு.

 

முன்னுரை

சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை குறிப்பாக உணர்த்த, “உவமை” என்னும் இலக்கிய உத்திகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். அணியிலக்கணக் கூறுகளை விளக்கும் முதன்மை நூலான “தொல்காப்பியம்” தமிழில் கிடைக்கக்கூடிய முதல் இலக்கண நூலாகத் திகழ்வதோடு உவமை மற்றும் உவம உருபு வரும் இடங்கள் குறித்த பாகுபாடுகளை எடுத்தியம்புவதிலும் முதன்மையாக விளங்குகிறது. தொல்காப்பியர் “உவமை” “உவமம்” என்னும் சொற்களால் உவம உருபுகளைக் குறிக்கின்றார். தொல்காப்பியர் கூறும் உவம உருபுகள் பற்றிய கருத்துகளோடு எட்டுத்தொகை நூல்களில் இரண்டாவதாக அமைந்துள்ள “குறுந்தொகை”ப் பாடல்களில் பயின்று வந்துள்ள உவம உருபுகளை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

உவம  உருபுகள்

            ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமைப்படுத்துவது உவமை ஆகும். இவ்வாறாக வரும் உவமையில், உவமையையும் பொருளையும் இணைக்கும் சொற்கள் உவம உருபுகளாகும். சில இடங்களில் இவ்வுவம உருபுகள் இல்லாமலேயே அவை இணைந்து காணப்படும். அவற்றை உவமத் தொகை என்பர். உவம உருபு தொக்கி வருவனவற்றைத் தொகை உவமை என்றும் விரிந்து வருவனவற்றை விரி உவமை என்றும் அழைப்பர். இவ்வாறாக வரும் உவம உருபுகள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல்லாக வருகின்றன. ஆனால் பேராசிரியர் வினையும் இடைச்சொல்லும் உருபாக வருதலையும், உருபு இல்லாமல் தொக்கி வருதலையும் மட்டுமே உவம உருபாகக் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியத்தில் உவம உருபுகள்

            உவமைகளை விளக்க வரும் உவம உருபுகள் யாவை என்பதைத் தொகுத்துக் கூறுவது இலக்கண நூல்களின் மரபு. தொல்காப்பியரும் உவம உருபு பற்றிக் கூறும் இடத்து உவம உருபுகள் முப்பத்தாறு வகைப்படும் எனச் சுட்டுவதனை,


"அவைதாம்

அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப

என்ன மான என்றவை யெனாஅ

ஒன்ற ஒடுங்க வாங்க

வென்ற வியப்ப வென்றவை யெனாஅ

எள்ள விழைய இறப்ப நிகர்ப்பக்

கள்ளக் கடுப்ப வாங்கவை யெனாஅ

காய்ப்ப மதிப்பத் தகைய மருள

மாற்ற மறுப்ப வாங்கவை யெனாஅ

புல்லப் பொருவப் பொற்பப் போல

வெல்ல வீழ வாங்கவை யெனாஅ

நாட நளிய நடுங்க நந்த

ஓடப் புரைய என்றவை யெனாஅ

ஆறா றுவமையும் அன்னவை பிறவுங்

கூறுங் காலைப் பல்குறிப் பினவே"     -   (தொல்.பொருள்.உவம.நூ.11)

என்ற நூற்பாவின் வழி அறியமுடிகிறது. இந்நூற்பாவில் 36 உவம உருபுகளை ஓர் ஒழுங்கு நியதி முறையைப் பின்பற்றி அகர ஈற்று வாய்ப்பாட்டில் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். உவம உருபுகளை வினை உவமம், பயன் உவமம், உரு உவமம், மெய் உவமம் என நான்காக வகைப்படுத்திக் காட்டுவதோடு, இன்ன இன்ன உவம உருபுகள் இந்த இந்த வகையைச் சார்ந்து வரும் என்பதையும் நுட்பமாக வரையறை செய்து குறிப்பிட்டுள்ளர்.

மேலும், வினை உவமத்திற்குரியதாக 'நோக்க' (தொல்.உவம.12) என்ற உவம உருபையும், உரு உவமத்திற்குரியதாக 'நேர' (தொல்.உவம.16) என்ற உவம உருபையும் சேர்த்து உவமவியலில் 38 உவம உருபுகளைக் குறிப்பிடுகின்றார். மேற்கண்ட நூற்பாவில் ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நடுங்க, நாட என்ற ஆறு உவம உருபுகளும் வினை உவமம் முதலாகச் சொல்லப்பட்ட உவமை உருபுகளில் இடம் பெறவில்லை.

            'அன்னவை பிறவும்' என்று குறிப்பிடுவதால் தொல்காப்பியர் குறிப்பிடாத 'இன்' 'அற்று' 'அனை' 'ஏர்' ஆகிய உவம உருபுகளை இளம்பூரணரும், 'என' என்ற உவம உருபினைப் பேராசிரியரும் குறிப்பிடுகின்றனர்.

தண்டியலங்காரத்தில் உவம உருபுகள்

            கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தண்டியலங்காரத்தில் 35வகையான உவம உருபுகள் இடம்பெற்றிருப்பதனை,


"போல மானப் புரையப் பொருவ

நேர கடுப்ப நிகர நிகர்ப்ப

ஏர ஏய மலைய இயைய

ஒப்ப எள்ள உறழ ஏற்ப

அன்ன அனைய அமர ஆங்க

என்ன இகல விழைய எதிரத்

துணை தூக்கு ஆண்டு ஆங்கு மிகுதகை வீழ

இணை சிவண் கேழ் அற்றுச் செத்தொடு பிறவும்

நவைதீர் பான்மை உவமைச் சொல்"      -     (தண்டி.நூ.33)

என்ற நூற்பா வழி அறியலாம். தொல்காப்பியர் குறிப்பிட்ட வினை, பயன், மெய், உரு எனும் பாகுபாடு ஏதுமின்றிப் பெரும்பான்மையான உவம உருபுகளோடு ஒத்தும், நிகர, ஏய, இயைய. இகல, எதிர, துணை, தூக்கு, ஆண்டு, மிகுதகை, இணை, சிவண், நக, கன்ன, கருத, காட்ட, மிளிர என்ற மாறுபட்ட சில உவம உருபுகளையும் குறிப்பிடுகின்றார் தண்டியாசிரியர்.

குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள உவம உருபுகள்

            குறுந்தொகையில் உள்ள 401 பாடல்களில் 288 பாடல்களில் உவம உருபுகள் இடம் பெற்றுள்ளன. இனும், அன்ன, இன், போல, இன்மானும், என, ஆங்கு, ஏய்க்கும், தகைய, மான, இன்னள், அற்று, போல்வர், புரையும், மருள், நேர், கடுப்ப, ஈர், அன்னர், அன்னோள், அனை, கடுக்கும், ஒப்பின், உருவின், முரணிய, ஏர், போன்ற, அனையது, அனையேம், ஓரன்னள், அனையன், அனைய, வீழ, உறழ் போன்ற 34 வகையான உவம உருபுகள் குறுந்தொகையில் பயின்று வந்துள்ளது.

            மேற்கண்ட 34 உவம உருபுகளோடு தொல்காப்பிய உவம உருபுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அன்ன, போல, ஆங்கு, தகைய, மான, இன்னள், போல்வர், புரையும், மருள், நேர், கடுப்ப, அன்னர், அன்னோள், கடுக்கும், ஒப்பின், போன்ற, ஓரன்னள், வீழ, உறழ் போன்ற 19 வகையான உவம உருபுகள் இரு நூல்களிலும் இடம் பெற்றுள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.

அன்ன

            தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி தலைவன் சென்ற பாலை நில வழியின் கொடுமையை எடுத்துரைப்பதனை,


"எறும்பி யளையிற் குறும்பல் சுனைய

உலைக்க லன்ன பாறை யேறிக்

கொடுவி லெயினர் பழி மாய்க்கும்

கவலைத் தென்பவவர் சென்ற வாறே"    -   (குறுந்.பா.12)

என்ற பாடலடிகள் எடுத்தியம்புகின்றது. இப்பாடலிகளில் தலைவன் சென்ற வழியானது எறும்பின் வளைகளைப் போலக் குறுகிய பல சுனையை உடையது. அதுமட்டுமல்லாமல் கொல்லனது உலைக்களத்தில் உள்ள பட்டைக் கல்லைப் போன்ற வெம்மை உடைய பாறையின் மேல் ஏறி கொல்லும் தொழிலை உடைய எயினர்கள் தன் அம்புகளைத் தீட்டும் கொடுமையுடையது என்பதைத் தன் ஆற்றாமையை உவமையின் வழியாக வெளிப்படுத்துவதை அறியலாம்.

போல

            தலைவி பெற்றோரைப் பிரிந்து தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்டாள். அதனை அறிந்த தோழி அதைத் தன் தாயான செவிலிக்குத் தனக்கே உரிய மதிநுட்பத்துடனும், சொல்வன்மையாலும் எடுத்துரைக்கின்றாள். இதனைச் செவிலி நற்றாய்கு எடுத்துக் கூறி அறத்தோடு நிற்கின்றாள். இது தோழி செவிலிக்கு அறத்தோடு நிற்றல், செவிலி நற்றாய்க்கு அறத்தோடு நிற்றல் என்ற நிலையில் ஔவையார் பாலைத்திணையில்  பாடியுள்ளதனை,


"தொன்மூ தாலத்து பொதியிற் றோன்றிய

நாலூர்க் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி யாய்கழற்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே"           -   (குறுந்.பா.15)

என்ற பாடலடிகள் சுட்டுகின்றன. இப்பாடலடிகளில் பல ஆண்டுகள் பழமையான  ஆலமரத்தின் அடியிலுள்ள பொதுவிடத்தில் நான்கு ஊர்களிடத்திலுள்ள கோசர்களது (மோகூர்ப் பழையனுடைய நியாய சபையில் இருந்த ஒருவகை வீரர்) நன்மையுடைய மொழி  உண்மையாவதைப் போல நம் மகள் செய்த நட்பும் உண்மையே ஆகியது என அறத்தோடு நிற்றல் நிலையில் உவமை கையாளப்பட்டுள்ளதனை அறியலாம்.

கடுப்ப

            தலைவியானவள் வரைவிடை வைத்துப் பொருள்வயின் காரணமாகப் பிரிந்த தலைவனை நினைத்து மிகவும் வருத்தமுற்றுக் இருப்பதனைக் கண்ட ஊரார் அலர் தூற்றலாயினர். அதனைக் கண்ட தோழி தலைவிக்கு உவமையுடன் எடுத்துரைப்பதனை,


"பொருந யானைப் புகர்முகம் கடுப்ப

மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்

ஒண்செங் காந்த ஒவிழு நாடன்"            -    (குறுந்.பா.284)

என்ற குறுந்தொகைப் பாடல் அடிகள் சுட்டுகின்றன. இப்பாடலில், போரிட்ட யானையது புள்ளிகளைக் கொண்ட முகத்தைப் போல, மன்றத்தேயுள்ள பொற்றைக் கல்லின்மேல், ஒள்ளிய செங்காந்தள் மலர்கள் பல ஒருங்கே வீழ்ந்துக் கிடக்கின்ற நாட்டைச் சார்ந்தவன் நம் தலைவன். வாய்மை உடையவன் ஆயினும், வாய்மை அற்றவன் ஆயினும் இவ்வூரார் நம்மையே பழிப்பர் என்பதைச் சிறந்த உவமை நயத்துடன் எடுத்துரைப்பதனை அறியலாம்.

            மேற்கண்ட குறுந்தொகையில் இடம்பெற்ற உவம உருபுகளில் 'அன்ன' என்ற உவம உருபு 83 இடங்களிலும், 'போல' என்ற உவம உருபு 64 இடங்களிலும் இடம் பெற்றுள்ளன. மேலும் குறுந்தொகையில் பெருவாரியாக இவ்விரண்டு உவம உருபுகளும், ஏனைய உவம உருபுகள் பெயரளவில் ஆங்காங்கே சிற்சில இடங்களில் காணப்படுவதையும் அறிய முடிகின்றது.

தொல்காப்பியத்தோடு நின்றுவிட்ட உவம உருபுகள்

            தொல்காப்பிய உவம உருபுகளைச் சங்க குறுந்தொகைப் பாடல்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கும் போது சில உவம உருபுகள் கால மாற்றததின் காரணமாகவும், பயன்பாடு இன்மை காரணமாகவும் தொல்காப்பியர் காலத்தோடு வழக்கு இழந்து விட்டன.

தொல்காப்பியர் குறிப்பிட்ட 38 வகை உவம உருபுகளுள் 12 வகையான உவம உருபுகள் மட்டுமே குறுந்தொகையில் பயின்று வந்துள்ளன. ஏனைய 26 உவம உருபுகளான இறப்ப, என்ன, எள்ள, ஏய்ப்ப, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஓட, கள்ள, காய்ப்ப, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர்ப்ப, நோக்க, புல்ல, பொருவ, பொற்ப, மதிப்ப, மறுப்ப, மாற்ற, வியப்ப, விழைய, வெல்ல, வென்ற போன்ற உவம உருபுகள் எங்கும் இடம் பெறவில்லை.

மேலும், சங்க இலக்கியத்திலேயே இடம் பெறாத தொல்காப்பிய உவம உருபுகளாக 14 வகைகளை இரா.சீனுவாசன் குறிப்பிடுகிறார். அவை. இறப்ப, ஒன்ற, ஒடுங்க, ஓட, ஒட்ட, கள்ள, நடுங்க, நந்த, நளிய, நாட, புல்ல, மதிப்ப, மறுப்ப, வியப்ப என்ற உவம உருபுகளாகும்.

தொல்காப்பியம், தண்டியலங்காரம், குறுந்தொகை ஆகியவற்றில் பயின்று வந்துள்ள உவம உருபுகளை ஆராய்ந்து பார்த்தால் சில உவம உருபுகள் மூன்று நூல்களிலும் பயின்று வந்துள்ளதை அறிய முடிகின்றது. அவை, அன்ன, போல, ஆங்கு, மான, புரைய, நேர், கடுப்ப, ஒப்பின், வீழ, உறழ் போன்ற 10 உவம உருபுகள் இடம் பெற்றுள்ளதை தெளிவாக உணர முடிகின்றது.

குறுந்தொகையில் மட்டுமே பயின்று வந்துள்ள புதிய உவம உருபுகள்

            “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவணந்தியாரின் வாக்கிற்கு ஏற்ப தொல்காப்பியரால் சுட்டப்படும் உவம உருபுகளில் இருந்து மாறுபட்டுக் குறுந்தொகையில் சில சிறப்பு உவம உருபுகள் இனும், இன்மானும், ஈர், உருவின், ஏய்க்கும், முரணிய, ஆக என்ற 7 புதிய உவம உருபுகள் பயின்று வந்துள்ளது. இவ்வுவம உருபுகள் கால மாற்றத்தாலும், கவிஞனின் படைப்பில் உவமை பயன்பாட்டாலும் ஏற்பட்ட வளர்ச்சியினையே குறிப்பதாகும்.

இனும்

            தலைவன் சிறைப்புறமாக நிற்க, அவன் வரைந்து கொள்ள வேண்டித் தோழி இயற்பழத்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்த பாடலில் காணலாகும் உவமையினை,


“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர்அள வின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”   -  (குறுந்.பா.3)

என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் உயர்ந்த மலைப்பக்கத்திலேயுள்ள கரிய கொம்புகளுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் மொய்த்தற்கு இடமாகிய நாட்டினை உடைய நம் தலைவனோடு நான் கொண்ட நட்பானது நிலத்தைக் காட்டிலும் அகலமுடையது, ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது, கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழமுடையது என்று தன்னுடைய முப்பரிமாணக் காதலை எடுத்துரைப்பதனை அறிந்துக் கொள்ள முடிகின்றது.

இன்மானும்

            பரத்தமை காரணமாகப் பிரிந்த தலைவனுக்குத் தலைவியின் கற்பு மேம்பாட்டைக் கூறி தலைவனின் செயலைக் குறிப்பாக உவமையுடன் பழிப்பதனை,


“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்

இனமீன் கருங்கழி ஓதம் மல்குதொறும்

குயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணம் துறைவன் கொடுமை

நம்முன் நாணிக் கரப்பா டும்மே”        -  (குறுந்.பா.9)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. இப்பாடலில், நெய்தல் பூவானது கூட்டமாகிய மீன்களையுடைய கரிய கழியின் கண்ணே வெள்ளம் அதிகரிக்கும்தோறும் ஆழமான குளத்திலே முழுகும் மகளிரது கண்ணை ஒத்தற்கு இடமாகிய தண்ணிய நீர்த்துறையை உடைய தலைவனது கொடுமையை மறைத்துக் கொண்டு தம்மோடு தலைவி உரையாடுவதாகத் தோழி உவமை நயத்துடன் எடுத்துரைப்பதை சுட்டுகின்றது.

ஈர்

            தலைவி பிறரால் இற்செறிக்கப்பட்டாள் என்பதைத் தோழியின் மூலம் அறிந்த தலைவன் தலைவியை நினைத்துத் தன் நெஞ்சத்திடம் புலம்புவதனை,


“உண்டுமன் வாழிய நெஞ்சே திண்தேர்க்

கைவள் ஓரி கானம் தீண்டி

எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்

மைஈர் மாஅ யோள்வயின்”                    -   (குறுந்.பா.199)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள்; எடுத்துரைக்கின்றன. இதில், வலிமையான தேரினை உடைய வள்ளல் ஓரியின் கானத்தைத் தீண்டி வீசுகின்ற காற்று நறுமணம் கமழும். அக்காற்றைப் போல மணம் கமழும் மை போன்ற கருமையையும் தன்மையும் கொண்ட கூந்தலை உடையவள் தலைவி என்று தன் நெஞ்சிற்குக் கூறி புலம்புவதாக அமைந்துள்ளது.

உருவின்   

            தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற கார்பருவம் வந்ததைக் கண்டவுடன் அதுவரை பிரிவுத் துயரினை ஆற்றியிருந்த தலைவி இனி ஆற்றியிருக்க முடியாத நிலையை எண்ணி வருத்ததுடன் உரைப்பதனை,


“வெருக்குப்பல் உருவின் முல்லையோடு கஞலி

வாடை வந்ததன் தலையும் நோய்பொரக்

கண்டிசின் வாழி தோழி” -    (குறுந்.பா.240)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இதில் காட்டுப்பூனையின் பற்களைப் போன்ற உருவினைக் கொண்ட முல்லை மொட்டுகளோடு வாடைக் காற்று வீசி தலைவனைப் பிரிந்த தலைவிக்கு மேலும் பிரிவுத் துயரினை ஏற்படுத்துவதாக உவமை நயத்துடன் எடுத்துரைப்பதனை அறியலாம்.

 ஏய்க்கும்

            கொடுமையான பாலை நிலத்தின் வழியே பிரிந்து சென்ற தலைவன் நம்மை நினைக்காமல் மறந்திருப்பானோ என்ற ஐயத்தால் தலைவி வருந்தி தோழியிடம் கூறுவதனை,


“உள்ளார் கொல்லோ -  தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழமே

புதுநாண் நுழைப்பாள் நுதிமாண் வள்உகிர்ப்

பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்

நிலம்கரி கள்ளியம் காடிறந்தோரே”     -   (குறுந்.பா.67)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. இப்பாடலடிகளில் கிளி தன் வளைந்த அலகினிடத்தே கொண்ட வேம்பின் பழமானது புதிய பொற்கம்பியை ஊடுசெலுத்தும் பொற்கொல்லனது கூரிய கைந்நகத்தில் கொண்ட பொன் ஆபரணத்திற்குரிய ஒரு காசை போன்ற தோற்றம் தரும் தன்மையுடையது எனப் பாலை நில வருணையை எடுத்துரைப்பதனை அறியலாம். மேலும் அக்காலத்தில் ஒருவகைப் பொற்காசு உருண்டை வடிவத்துடன் இருந்திருப்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

முரணிய

            பொருள்வயின் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவன் வினைமுடிந்து மீண்டும் வரும்பொழுது தேர்பாகனிடம் இன்று மாலை வருவதற்குள் தலைவி இருக்குமிடத்திற்கு விரைவில் தேரைச் செலுத்துவாயாக என்று உவமையுடன் எடுத்துரைப்பதனை,


“மாலை வாறா அளவைக் காலியல்

கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப்

பொருகயல் முரணிய உண்கண்”     -     (குறுந்.பா.250)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. இப்பாடலில் மாலைக் காலம் வருவதற்கு முன்பே ஆழ்ந்த நீரிலுள்ள ஒன்றையொன்று எதிர்ந்த இரண்டு கயல்களை ஒத்த மையுண்ட கண்களையும், இனிய சொற்களையும் உடைய தலைவியின் துன்பத்தை நீக்க காற்றின் இயல்பையுடைய விரைகின்ற குதிரையை செலுத்துமாறு தேர் பாகனிடம் தலைவன் எடுத்துரைப்பதனை அறியலாம்.

ஆக

            பகற்குறியில் தலைவியைச் சந்தித்து வந்த தலைவன் அலர் காரணமாக இரவுக்குறியை விரும்புகின்றான் என்பதை குறிப்பால் உணர்ந்த தோழி தலைவனுக்கு உவமையுடன் உரைப்பதனை,


“ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்

கோடுஉயர் நெடுவரைக் கவாஅன் பகலே”     -        (குறுந்.பா.353)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. .இப்பாடலடியில் உயர்ந்த நெடிய மலையினது பக்கத்தில் விளங்கும் இனிதான ஓசை கொண்ட அருவியில் தலைவனது மார்பு தெப்பமாக நீர்விளையாடல் இனியது என்றும், இரவுக்குறியில் அன்னையின் காவல் மிகுதியையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது.


ஆய்வு முடிவுரை:

·         பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல்லாக உவம உருபுகள் வருவதனையும், தொல்காப்பியர் முதலில் 36 உவம உருபுகளையும், அடுத்த இரண்டு நூற்பாவில் நோக்க, நேர என்ற இரண்டு உவம உருபுகளைச் சேர்த்து 38 உவம உருபுகளைப் பட்டியலிட்டுக் காட்டுவதை அறிய முடிகின்றது.

·         38 உவம உருபுகளை வினை, பயன், மெய், உரு என்ற நான்கு உவமைக்கும் உரியவையென வரையறை செய்வதையும், அதில் மாற்ற, பொற்ப, நடுங்க, நாட, என்ற, ஒன்ற ஆகிய 6 உவம உருபுகள் வினை முதலாக சொல்லப்பட்ட உவமைகள் எவற்றிலும் இடம் பெறவில்லை என்பதை காண முடிகின்றது.

·         தொல்காப்பிய உவம உருபுகளோடு தண்டியலங்கார உவம உருபுகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கும் பொழுது 19 வகையான உவம உருபுகள் ஒத்துக் காணப்படுகின்றன.

·         குறுந்தொகையில் மிகுதியாக ‘அன்ன’ என்ற உவம உருபு 84 இடங்களிலும், ‘போல’ என்ற உவம உருபு 64 இடங்களிலும் ஏனைய உவம உருபுகள் சிற்சில இடங்களில் மட்டுமே பயின்று வந்துள்ளதை அறிய முடிகின்றது.

·         தொல்காப்பியர் சுட்டிய 38 உவம உருபுகளோடு குறுந்தொகையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது 12 வகையான உவம உருபுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதையும், 26 வகையான உவம உருபுகள் இடம்பெறவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

·         தொல்காப்பியம், குறுந்தொகை, தண்டியலங்காரம் ஆகிய மூன்று நூல்களிலும் 10 உவம உருபுகள் ஒத்தும், தொல்காப்பியர் சுட்டிய உவம உருபுகளில் இருந்து மாறுபட்டு குறுந்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ள புதிய உவம உருபுகளாக 7 உவம உருபுகள் இடம் பெற்றுள்ளதையும் காண முடிகின்றது.

·         கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழ் இலக்கியங்களில் கவிஞன்; பொருள் புலப்பாட்டிற்காகப் பயன்படுத்தும் உவமைகளில் பல்வேறு வகையான புதிய உவம உருபுகள் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இவ்வாய்வின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.

 

 துணை நூற்பட்டியல்

1.    சண்முகம்பிள்ளை, மு., பேராசிரியர்.(2014). தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், பகுதி-1. சென்னை: பாரிநிலையம்.

2.    சாமிநாதையர், உ.வே., டாக்டர். 2017. குறுந்தொகை மூலமும் உரையும் (ஆராய்ச்சி பதிப்பு), உ.வே.சா. நூல் நிலையம், சென்னை.

3.    ஜெகதீசன், ஆர்., (2006). குறுந்தொகை ஆய்வுகள் - தொகுதி 2. மதுரை: சங்க இலக்கிய ஆய்வு மையம்.

4.    இளம்பூரணர்.(2017). தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல். திருநெல்வேலி: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

5.    சுந்தரமூர்த்தி, கே., டாக்டர். (1986). தொல்காப்பியம் பொருளதிகாரம் - தொகுதி 2. நச்சினார்க்கினியர் உரை. சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

6.    சுப்புரெட்டியார், ந., டாக்டர். (2016). அகத்திணைக் கொள்கைகள். சென்னை: பாரி நிலையம்.

7.    காளிமுத்து, கே., டாக்டர். (2003). தொல்காப்பியம் அதன் இலக்கிய கொள்கைளும் குறுந்தொகையும். சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

8.    தமிழண்ணல், (2004). தொல்காப்பியரின் இலக்கிய கொள்கைள் - தொகுதி 1. கோயம்புத்தூர்: சோலை நூலகம்.

9.    நாகராஜன், வி., 2014. குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.

10.  பாலசுப்பிரமணியன், சி., டாக்டர். (1995). தொல்காப்பிய கட்டுரைகள். சென்னை: பாரி நிலையம்.

No comments:

Post a Comment