Search This Blog

Friday, January 24, 2020


மொழிபெயர்ப்பும் - அம்மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்களும்  அதன் தீர்வுகளும்

 செ . சத்யா , முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்.

 முன்னுரை
மொழிபெயர்ப்புத் துறையில் அண்மைக்காலத்தில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறையில் அண்மைக் காலத்தில்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் கூட, மொழிபெயர்த்தல் என்பது நீண்ட காலத்திற்கு முன்பே உலக இலக்கியங்களில் தொடங்கப்பெற்று விட்டது எனலாம். ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழிபெயர்ப்பு பற்றிய கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தனைகளும் மாறிவந்திருப்பதைக் காணலாம்.
          ஆரம்பக் காலத்தில் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கின்றபொழுது, மூல மொழியினுடைய வடிவத்தை (Form) அப்படியே குறிக்கோள் மொழிக்கு கொண்டு வந்து விட்டால் மொழிபெயர்ப்புப் பணி நிறைவேறி விட்டதாகக் கருதப்பட்டது. அதன் பின்னர் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு கருத்துக்கு (Content) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது ஒரு வகையில் மொழிபெயர்ப்புப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலமாகும். குறிப்பாக, சமயம் தொடர்பான இலக்கியங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டன. பின்னர் அவை இலக்கிய மொழிபெயர்ப்பாக விரிவுபடுத்தப்பட்டு, இறுதியில் இன்று அறிவியல் மொழிபெயர்ப்பாக வளர்ச்சியடைந்து இருப்பதைக் காண முடிகிறது. இது மொழிபெயர்ப்பினுடைய பரிணாம  வளர்ச்சியைக் காட்டுகிறது.

மொழிபெயர்ப்பு வரையறை
ஒரு மொழியில் சொல்லப்பட்ட செய்திகளை மற்றொரு, மொழிக்கு மாற்றியமைக்கம் செயல் (Activity) மொழிபெயர்ப்பு என்பதாகும்.

இச்செயல் எவ்வாறு அமையவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள வரையறை என்னவெனில் மூலமொழியில் (Source Language) சொல்லப்பட்ட கருத்துக்களை மாற்றாமல் குறிக்கோள் மொழியில் (Target Language) சொல்லவேண்டும் என்பதாகும்.

“மொழிபெயர்ப்பு என்பது பொன்னைச் செம்பாக்கும் அரிய இரசவாதக் கலை” என வால்ட்டர் இஸ்காட் சொல்வதாக ஜஸ்டிஸ் மகாதேவன் (கல்யாணராம், கே.ஆர்., 1979:358) கூறுகிறார். பாரசீக இலக்கியப் புலவர்கள் பலர் உமர்கயாம் எழுதிய கவிதை மூன்றாம் தரமானது என்று சொல்கிறார்கள். ஆனால், மொழிபெயர்ப்பாளர் ஃபிட்ஸ் ஜெரால்டு கைபட்டதும், மூலத்தில் மூன்றாம் தரக்கவிதையாக இருந்தது, ஆங்கில மொழிபெயர்ப்பில் முதல் தரக் கவிதையாக உயர்ந்து விட்டது. இதன் மூலம் வால்ட்டர் இஸ்கட்டின் கூற்று பொய்ப்பிக்கப்படுகின்றது. பொதுவாக ஒரு கருத்து ஒரு மொழியில் சொல்லப்படும் பொழுது, அது படிக்கும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்று சொல்ல முடியாது. அதே கருத்து பிற மொழிக்குப் பெயர்க்கப்படும் பொழுது படிப்பவரைக் கவரலாம் அல்லது கவராமலும் போகலாம். இது மூல மொழி ஆசிரியரை அல்லது மொழிபெயர்ப்பாளரின் திறனைப் பொறுத்து அமைகிறது எனலாம்.

மொழிபெயர்ப்பின் வகைகள்
பல்வேறு வகையான மொழிபெயர்ப்புகள் உண்டெனினும், மொழிபெயர்ப்பின் தன்மை அடிப்படையில் அதன் வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.   சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல் (Metaphrase Translation and Literal Translation)
2.   விரிவான மொழிபெயர்ப்பு  (Amplification)
3.   முழுமையான அல்லது சரியான மொழிபெயர்ப்பு (Close or Accurate Translation)
4.   சுருக்கமான மொழிபெயர்ப்பு  (Paraphrase or Abridgement)
5.   தழுவல் மொழிபெயர்ப்பு  (Adaptation)
6.   மொழியாக்கமுறை மொழிபெயர்ப்பு  (Transcreation)

மேலும், ஒரு மொழிபெயர்ப்பானது யாருக்காகச் செய்யப்படுகின்றது என்பதன் அடிப்படையிலும் வகைப்படுத்திட முடியும். சான்றாகக் குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு போன்றவற்றினைச் சொல்லலாம். துறைசார்ந்த (Fields) அடிப்படையிலும் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, துறைக்குத் தக்கவாறு மொழிபெயர்ப்பின் தன்மை (Nature) வேறுபடுகின்றது. சான்றாகப் பின்வருவனவற்றைத் துறைசார்ந்த மொழிபெயர்ப்பாகச் சொல்லலாம்.

மொழிபெயர்ப்புப் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள்
v மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியினுடைய பனுவலை மற்றொரு மொழியின் நிகரன் பனுவல் கொண்டு பதிலீடு செய்யும் செயல் என்பார் கேட்ஃபோர்டு.
v மூலமொழியின் பொருண்மையை இலக்குமொழியில் மாற்றுவதே மொழிபெயர்ப்பு என்பார் பாஸ்நெட்.
v மொழிபெயர்ப்பு என்பது மூலப் பொருண்மையின் நிழலாகும் என்பார் கருணாகரன்.
v வோல்ஃரோம் வில்ஸ் என்பவர், மொழிபெயர்ப்பு என்பது அடிப்படையில் மொழியின் செயல்பாடல்ல, உளமொழியின் செயல்பாடே ஆகும் என்பார்.
v ஐசோடடொரோ பின்ச்உக் என்பவர், மொழிபெயர்ப்பு என்பது மூலமொழிக்கூறுகளுக்கு இணையான  இலக்குமொழி நிகரன்களைக் காண்பதே ஆகும் என்பார்.
v டோஸ்டெட் என்பவர், மொழிபெயர்ப்பானது ஒருவகை அமைப்புக் குறியீடுகளின் பொருண்மையை மற்றொரு வகை அமைப்புக் குறியீடுகளுக்கு மாற்றும் செயல் ஆகும் என்பார்.
v ஹோஸ்ட் பிரன்ஞ் என்பவர், மொழிபெயர்ப்பு என்பது ஒரு படைப்புக்கலையும் அல்ல, கற்பனைக் கலையும் அல்ல, இவற்றிக்கிடையே நிலவும் ஒரு கலை என்கின்றார்.
v ஏஃஹெச்.ஸ்மித் என்பவர், மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியின் பொருண்மையை மற்றொரு மொழிக்கு எந்தவித பொருண்மைக் குறைப்புமின்றி மாற்றுவது ஆகும் என்கின்றார்.
v எரிக் ஜாக்கோப்சன் என்பவர், மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை என்கின்றார்.

மேற்கூறிய மொழிபெயர்ப்பு பற்றிய வரைவிலக்கணங்கள் அனைத்தும் மொழிப்பெயர்ப்பின் முழுத் தன்மைகளை, பண்புகளை எடுத்துக் கூற முயற்சிக்கின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சரியாக அமைகின்றன. மொத்தத்தில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலையாகவோ அல்லது அறிவியலாகவோ திகழ்கின்றது. இந்தக் கலை அல்லது அறிவியல் எப்பொழுது ஒரு மொழியின் பொருண்மையை மற்றொரு மொழி பேசுவோருக்கு அவர் மொழியின் வாயிலாக எந்தவித பொருள் நீட்டல், குறைத்தல், பதிலீடு செய்தல் என்ற செயல்பாடுகள் இன்றி மூலப்பனுவலின் பொருண்மையைப் புதுமையையும், நடைப் புதுமையையும் இலக்குமொழியில் முயன்றவரை கொணரும் வண்ணம் அமைகின்றதோ அதுவே மொழிபெயர்ப்பின் உண்மையான பண்புக் கூறாகும்.

மொழிபெயர்ப்பு - ஒர் வரலாற்றுப் பார்வை
மொழிபெயர்ப்பு என்னும் கலை உலகில் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகில் உள்ள இலக்கிய வரலாற்றைப் பார்க்கும்போது கிரேக்க, இலத்தீன் மொழிகள் மொழிபெயர்ப்பிற்கு அதிக இடம் அளித்துள்ளன. குறிப்பாக, கிரேக்க அறிஞர்களான அரிஸ்டாட்டில், பிளாட்டோ, கேலன், ஹிப்போஹிராடஸ் போன்றவர்களுடைய படைப்புக்களைக் கூறலாம்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டு மொழிப்பெயர்ப்பின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிகோலியது எனலாம். ஏனெனில் இந்நூற்றாண்டில்தான் டொலடோ என்னுமிடத்தில் ஜெரோட்ஆப் கிராமண என்பவர் மொழிபெயர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர்தான் மொழிப்பெயர்ப்பின் முன்னோடியாகத் திகழ்ந்தார். குறிப்பாக, அறிவியல் படைப்புக்களை, கிரேக்க அரேபிய மொழிகளிலிருந்து இலத்தின் மொழிக்கு மொழிபெயர்த்தார். 1494, 1536 ஆம் ஆண்டுகளில் வில்லியம் ட்டைன்டல் என்பவர் "புதிய ஏற்பாட்டை" ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 16-ஆம் நூற்றாண்டில் பைபிள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக இலத்தீன் மொழியில் இருந்த படைப்புகள் இந்நூற்றாண்டில்தான் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் வழங்கி வந்தன. 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பான விளக்கங்களை ஆங்கில அறிஞர்களைவிட பிரெஞ்சு நாட்டினர் சிறப்பான முறையில் விளக்கிச் சென்றனர்.

வரலாற்று அடிப்படையில் மொழிபெயர்ப்புக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நான்கு கால கட்டங்களாகப் பிரிப்பர். அவை,
1.   மொழிபெயர்ப்பு தோன்றிய காலத்தில் அதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்ட காலம். அதாவது, 1791-ஆம் ஆண்டு அலெக்சான்டர் ஃப்ரேஸர் டெய்ட்லர் என்பவர், மொழிபெயர்ப்புக் கொள்கைகள் என்ற தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்ட காலம்.
2.   மொழிபெயர்ப்புக்கான அணுகுமுறைகளை வளேரி என்பவர் விளக்கிய காலம்.
3.   1946-ஆம் ஆண்டு எந்திர மொழிபெயர்ப்பு என்ற தலைப்பின் கீழ் வெளிவந்த கட்டுரைகளின் காலம்.
4.   1960-ஆம் ஆண்டு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து மொழிபெயர்ப்புக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்துத் தனித்துறையாக விளங்கச் செய்த காலம். (சிவசண்முகம் &  தயாளன் 1989, ப.15)

இந்தியாவில் மொழிபெயர்ப்பு
ஓர் இலக்கியவளம் மற்றும் மொழிவளம் அம்மொழியில் படைக்கப்படும் இலக்கியங்களை மட்டும் வைத்து நிர்ணயிக்கப் படுவதில்லை. அவற்றோடு அம்மொழியிலிருந்து பிறமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களையும், பிறமொழியிலிருந்து அம்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களையும் பொருத்தே அமைகின்றது. இந்த வகையில் பன்மொழி வழங்கும் சூழலை உடைய இந்தியாவில் நடந்துள்ள மொழிபெயர்ப்புக்களைப் பார்க்கும்பொழுது, இந்திய மொழிகளின் சிறப்பினையும்,  மொழிபெயர்ப்பில் உள்ள ஈடுபாட்டினையும், வளர்ச்சியினையும் ஓரளவு அறிந்து கொள்ள இயலும்.

திருக்குறள் 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன் தோன்றினாலும், அதனை, ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னரே அது உலகிற்குத் தெரியவந்தது. அதே போன்று காளிதாசனின் சாகுந்தலம் என்ற காவியம் வடமொழியில் இருந்து 1789-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது. அதே போன்று வங்காள மொழியில் இருந்து மகாபாரதத்தை பி.சி.ராய் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தார்.

இந்தியாவில் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தான் மொழிபெயர்ப்புப் பணி முழுமையாக நடைபெற்றது எனலாம். மேலும் 20-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், பெரும்பான்மையான இந்தியக்கவிதை, நாடகம், புதினம், சிறுகதை போன்றவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்திய இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணியில் ஈடுபட்டவர்களில் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்திய மொழி பெயர்ப்பு என்று சொல்லும் பொழுது அவை பெரும்பாலும் புராண, இதிகாசங்களாகவே அமைந்துள்ளன என்பதைக் காண முடிகின்றது. இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் தான், அதாவது 1960-1970 ஆண்டுகளில் சுமார் நாற்பது இந்திய எழுத்தாளர்கள் 11 மொழிகளில் இருந்து பல இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளனர். இந்திய மொழிபெயர்ப்புக்கள் என்று கூறும்பொழுது, மலையாளத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை, கன்னடத்தில் சிவராம், இந்தியில் அக்நேயா போன்றோரின் படைப்புகள் அதிக அளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், திலாங்கள் என்பவர் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்திய இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது போல், ஆங்கில இலக்கியங்கள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழில் மொழிபெயர்ப்பு
தமிழில் மொழிபெயர்ப்பு என்பது பழங்காலம் முதலே தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்துள்ளது என்பதனை பறைசாற்றும் முகத்தான் தமிழர்களின் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

"தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்பட யாத்தலொடு அனை மரபினவே"
                       (தொல்.பொருள்.மரபியல்:98)
என்று தொல்காப்பியரும்,

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
(பாரதியார் பாடல்கள் - 21)
"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
(பாரதியார் பாடல்கள் - 21)
என்று பாரதியும் தமிழ் மொழியின் மொழிபெயர்ப்புப் பற்றிப் பேசுகின்றனர்.

தொல்காப்பியர் காலத்திலேயே ‘மொழிபெயர்ப்பு’ என்ற தொடர் மரபியலில் பயன்படுத்தப் பட்டுள்ளமையை அறிகிறோம். இந்நூற்பாவில் 'மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்' என்ற தொடரை எடுத்துக் கொண்டால் வேற்று மொழிப் படைப்பினைத் தமிழுக்கு ஆக்குதல் என்று பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு. திசைச் சொல், வடசொல் என்பனவற்றிற்கான இலக்கணம் சொல்லும் நிலையிலும், தமிழ்ப் படுத்தும் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார். இதனடிப்படையில் நோக்கினால் 'மொழிபெயர்ப்பு' என்ற தொடரை முதன்முதலில் கையாண்டவர் தொல்காப்பியர் என்பது புலனாகும். நிகண்டுகள், வடமொழி மாற்றம் என்பதற்கான சான்றுகளும்,  சங்க நூல்களிலும், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் சில வடமொழிக் கதைக்குறிப்புகள் இடம்பெறுவதை காணலாம்.

தமிழ் இலக்கியத்தில் முதல் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மலர்ந்தது  "பெருங்கதை" ஆகும். "பிருகத்கதா" என்ற வடமொழி உதயணன் கதையின் தமிழாக்கமே கொங்குவேளின் "பெருங்கதை" ஆகும். பைபிளும், இலக்கியங்களுள் திருக்குறளுமே உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.

இடைக்காலம்
சமஸ்கிருதத்திலிருந்து பல நூல்கள் குறிப்பாகத் தண்யலங்காரம், பாரதம் போன்றவை மொழியாக்கம் பெற்றன.
"மாபாரதம் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்"
என்று வரும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்புகள் மொழிப்பெயர்ப்புப் பற்றிச் சுட்டும் குறிப்புகளே. பகவத் கீதையை மொழிபெயர்த்த் நிலை குறித்ததோர், அருமையான பட்டியலை "மொழிபெயர்ப்புக் கலை" எனும் தமது நூலில் வளர்மதி விளக்குதலைக் காணலாம். மேலும், நளவெண்பா போன்ற நூல்களும் தமிழாக்கச் சுவடுடைய நூல்களாக இருப்பதனை அறிய முடிகின்றது.

ஐரோப்பியர் காலம்
ஐரோப்பியர்களின் வரவால் ஏற்பட்ட ஒரு புதுநிலை மேலைநாட்டுக் கல்வி. அக்கல்வியின் தாக்கத்தால் உலகக் கண்ணோட்டத்துடன் கூடியதோர் அகன்ற பார்வை இந்திய மண்ணைத் தழுவத் தொடங்கியது. இந்தப் பின்னணியில் தமிழுக்கு மேனாட்டுக் கதை வரவுகள் பெருகின. பன்மொழி அகராதித் தோற்றங்களும் இக்கால மொழிபெயர்ப்புப் போக்கிற்கோர் எடுத்துக்காட்டாக அமைவதனை காணலாம்.  அன்டிரிக் அடிகளார், போத்துக்கீசிய மொழியில் எழுதிய தமிழ்நூல் "தகேற்றகிசா" (ஞானோபதேசம்) என்ற நூல் ஒரு தனித்தன்மை வகிக்கின்றது. வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலை இலத்தீனில் மொழிபெயர்க்க முனைந்ததும், டாக்டர் ஜி.யு.போப் திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் சான்றாக அமையும்.

தொல்காப்பியர் காலமட்டுமல்லாது, சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகிய காலங்களில் மொழிபெயர்ப்பிற்கு அதிக இடமிருந்தது என்பதைக் காண முடிகின்றது. அதாவது, சங்ககாலத்தில் சொல் அளவிலே நடைபெற்றப் பணி, பிறமொழிக்கதைகளை மொழிபெயர்க்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. சான்றாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றில் இடம்பெறும் பிறமொழிக் கதைகளைக் கூறலாம். இக்காலகட்டத்தில் தான் சமணர்களின் வருகையால் சமய, மத அடிப்படையில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. சமண, பௌத்த, இந்து மதங்களுக்கிடையே போட்டி மிகுந்து காணப்பட்டது. கி.பி.5-ஆம் நூற்றாண்டு வரை சிறுசிறு குறிப்புக்களாக இருந்த மொழிபெயர்ப்புப் பணி நூல்வடிவம் பெற்றது. வடமொழி, பாலிபிராகிருதம் போன்ற மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

இந்த காலகட்டத்தில்தான் "மணிப்பிரவாளநடை" தோன்றிச் சிறப்புப் பெற்றது. 12-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமயங்கள் வேரூன்றின. இதனால் வடமொழியின் செல்வாக்கு தமிழகத்தில் ஓங்கியது. அந்நாட்களில் வடமொழி கலந்து எழுதுவதே சிறப்பு எனக் கருதப்பட்டது. பின்னர், புராணக் கூறுகள், கதைகள் மொழிபெயர்ப்பாக அமைந்தன. 14-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை மொழிபெயர்ப்புத் துறையில் புராணங்களே முக்கிய இடத்தைப் பெற்று இருந்தன. அவை பெரும்பாலும் தழுவல் இலக்கியங்களாகவும், மொழியாக்க இலக்கியங்களாகவும் அமைந்தன. அதற்குப் பின்னர், சமயக்கருத்துக்கள் மற்றும் புராண கருத்துக்கள் அல்லாத சமுதாயக் கருத்துக்கள், அறிவியல் கருத்துக்கள் கொண்ட படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட்டன. இம்மொழிபெயர்ப்பு பிற இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிற இந்திய மற்றும் அயல்நாட்டு  மொழிகளுக்கும் இடையே நிகழ்ந்து வந்துள்ளமையைக் காணமுடிகிறது. தற்போதைய நிலையில் ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் தன்மையே மலிந்து காணப்படுகின்றன. குறிப்பாக இலக்கிய மொழிப்பெயர்ப்பைக் காட்டிலும் அறிவியல் மொழிபெயர்ப்பே அதிகமாக உள்ளதை அறியலாம்.

மொழிபெயர்ப்பு
எந்த மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்படுகிறதோ அதை மூலமொழி என்றும் எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகிறதோ அதை இலக்குமொழி என்றும் அழைப்பர். மூலமொழிச் சொல்லையும் கருத்தையும் புலப்படுத்தும் இலக்குமொழியின் சொல்லை, நிகரி / நிகரன் (Equivalent) என்று கூறுவர்.

லோத்ஃபியூர் சையதி என்பவர் மூலமொழியிலிருக்கும் செய்தியை இலக்குமொழியில் மீண்டும் எடுத்தியம்புவது மொழிபெயர்ப்பு என்கிறார். க.த.திருநாவுக்கரசு ஒரு மொழியின் கற்பனை வளத்தையும் கலை நயத்தையும் செஞ்சொற் கலியின்பத்தையும் படம் பிடித்துக் காட்டவல்லது மொழிபெயர்ப்பு என்கிறார். (சந்திரன்.வீ.2000:19)

மொழி எவ்வாறு ஒரு கருத்துப் பரிமாற்ற ஊடகமாகத் திகழ்கின்றதோ, அதே போன்று மொழிபெயர்ப்பும் ஒரு கருத்துகப் பரிமாற்ற ஊடகமாகத் திகழ்கின்றது. ஒரு மொழி, அம்மொழி சமுதாயத்திற்குள் பயன்படுத்தப்பெறும் கருத்துப் பரிமாற்ற ஊடகமாகும். ஆனால் மொழிபெயர்ப்பு இறுவேறு மொழிச் சமுதாயங்களுக்கு இடையே பயன்படுத்தப்பெறும் கருத்துப் பரிமாற்ற ஊடகமாகும். மொழிபெயர்ப்பில் இரண்டு மொழிகள் செயல்புரிவதால் இக்கருத்துப் பரிமாற்ற ஊடகத்தைக் கையாள்வது, மொழியைக் கையாள்வதைக் காட்டிலும் கடினமானதாகும்.

ஒரு மொழியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது பற்றி பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன. அதேபோன்று மொழிபெயர்ப்பு என்னும் கலையை அல்லது அறிவியலை எவ்வாறு கையாளவேண்டும் என்ற விதிமுறைகள் பல வகுக்கப்பட்டுள்ளன, வகுக்கப்பட்டும் வருகின்றன. ஒரு மொழியில் ஒரு கருத்தைக் கூறி அதே கருத்தை அதே மொழியில் திரும்பக் கூறும்போதே, இடர்பாடுகள் பல தோன்றும். அதே போன்று, அதனை வேறு ஒரு மொழியில் மொழிபெயர்த்துக் கூறும் வேளையில் இரண்டு மொழிகளுக்கு இடையே நிலவும் பண்பாட்டு வேறுபாடுகளாலும், மொழி அமைப்பு வேறுபாடுகளாலும் மூலமொழியில் கூறப்பட்ட கருத்தை அதே முறையில் இலக்கு மொழியில் கூற முயற்சிப்பதால் ஏற்படும் சிக்கல்களாலும், மூலமொழிக்கருத்துக்கு இணையான இலக்கு மொழிக்கூறுகள் இல்லாமையாலும், இவை போன்ற இன்ன பிற காரணங்களாலும் மொழிபெயர்ப்பு நன்றாக அமையாமல் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமை, வேறுபாடு, திறன், மொழிக்கூறுகள் ஆகியவை மட்டுமல்லாது, மொழிபெயர்ப்பாளரின் புரிதல்திறன், மொழித்திறன், மொழியறிவு, நோக்கம், பயன்பாட்டாளர், மொழிபெயர்க்க வேண்டிய படைப்பின் கருத்து, சூழல் போன்றவைகளும் மொழிபெயர்ப்பின் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன.

எனவே, மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள் எண்ணிலடங்கா. அவை பன்முகத் தன்மை கொண்டவை. அவற்றைத் தவிர்த்து ஒரு சீர்மையான மொழிபெயர்ப்பைக் கொடுத்தல் என்பது கூர்மையான கத்திமேல் நடப்பதைப் போன்றதாகும்.

மொழிபெயர்ப்பு, ஒரு கலையாகத் தோன்றி அறிவியலாக வளர்ந்து, அறிவுசார்ந்த கல்வித்துறையாகவும், ஒரு சமுதாய பயன்பாட்டிற்குப் பேருதவியாகத் திகழும் ஒரு தொழிலாகவும் தற்காலத்தில் நிலவி வருகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இவ்வகை அறிவை, திறனை எல்லோரும் எளிதில் பெற்றிடுவதில்லை. மொழி எவ்வாறு ஒரு சிலருக்குக் கைவந்த கலையாகத்  திகழ்கின்றதோ அதே போன்று மொழிபெயர்ப்பும் ஒரு சில அறிஞர்களின் கையிலும், நாவிலும், நடனம் புரிந்து பல மொழிபெர்ப்புப் படைப்புக்கள் வெளிவந்துள்ளன, வெளிவந்து கொண்டும் இருக்கின்றன. இவர்களின் முக்கிய யாதெனில் ஒரு மொழிச் சமுதாயம் அனுபவித்த ஒரு மொழிப் படைப்பை மற்றொரு மொழிச் சமுதாயம் நுகர்ந்து  பயன்பெறும் வண்ணம் மொழிபெயர்த்துத் தருவதேயாகும். இது சமுதாயத் தேவை கருதியும், அறிவுப் பரவலாக்கம் கருதியும் நிகழ்த்தப் பெறும் கலை அல்லது அறிவியலாகும்.

மொழிபெயர்ப்பாளர்  
ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்புக் கொள்கைகளைத் தெரிந்துகொள்வது அவரது மொழிபெயர்ப்பின் தன்மையை உயர்த்தும். அதே போன்று ஒரு மொழிபெயர்ப்பாளர் அவர் பொதுவாக எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனைகளையும், அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் தெரிந்து கொண்டு மொழிபெயர்ப்பு செய்தால், மொழிபெயர்ப்பு செவ்வனே அமையும்.

மொழிபெயர்ப்பில் இரண்டு மொழிகளின் பயன்பாடு உள்ளதால், மொழிபெயர்ப்பாளர் அவ்விரண்டு மொழிகளிலும் சீரிய ஆளுமை பெற்றிருந்தால், பெரும்பாலான மொழிபெயர்ப்புச் சிக்கல்களை எளிதாகக் களைந்து விடலாம். மொழிபெயர்ப்புச் சிக்கல்ளை இரண்டு விதமாகப் பிரிப்பர். அவை,
1. மொழியியல் சார்ந்த சிக்கல்
2. மொழியியல் சாராச் சிக்கல் ஆகும்.

இவற்றில் ஒவ்வொரு வகைச் சிக்கலும் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டதாகும். இச்சிக்கல்களுடன் மொழிபெயர்ப்பில் மூலமொழிப் பொருண்மையைப் புரிதலில் ஏற்படும் சிக்கல்கள், அப்பொருண்மையை மொழிபெயர்க்கும்பொழுது ஏற்படும் சிக்கல்கள் எனச் சிக்கல்களை மேலும் வகைப்படுத்தலாம்.

எனவே, ஒரு மொழிபெயர்ப்பாளர் தமது அனுபவ அறிவுடன் மொழிபெயர்ப்புக் கொள்கைகள் பற்றிய அறிவு, மொழிபெயர்ப்பில் - குறிப்பாக - குறிப்பிட்ட இரண்டு மொழிகளில் தெள்ளிய புலமை, இன்ன பிற அறிவுகள் அவசியமாகின்றன. இவ்வகை அறிவு பெரும்பாலும், ஏற்கனவே மொழிபெயர்க்கப்ட்ட படைப்புகளை நுணுகி மதிப்பீடு செய்வதன் மூலம் கிடைக்கின்றன எனலாம். வேறுவகையில் கூறவேண்டுமெனில், மொழிபெயர்ப்புக்கலை என்பதைக் கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், அது பிறப்பிலிருந்தே பெறப்படும் ஒரு திறன் எனலாம்.

அதாவது, படைப்புக்கலை எவ்வாறு மனிதரிடம் கூடப்பிறந்த கலையாகத் திகழ்கின்றதோ அதே போன்று மொழிபெயர்ப்பு, மொழிப்பெயர்ப்பாளரின் பிறவியிலிருந்தே பெறப்படும் கலையாகத் திகழ்கின்றது எனக் கூறலாம். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கின்றார்.

எனவே, ஒரு மொழிபெயர்ப்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்று கற்பிப்பதைக் காட்டிலும், ஒருவரின் அடிமனதில் மொழிபெயர்ப்பு என்னும் கலை பொதிந்திருந்தால்தான் அவரால் மொழிபெயர்ப்பைச் செவ்வனே செய்ய முடியும். இதன் காரணமாக, இப்படித்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்று வரையறுத்துக் கூறமுடியாது. மொழிபெயர்ப்பு எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி, நமது முந்தைய அனுபவ அறிவு உதவி கொண்டு பின்னாளைய மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதன் காரணமாகவே, பல்வேறு மொழிபெயர்ப்புப் படைப்புகள் மொழிபெயர்ப்பியல் நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, ஆய்வு செய்யப்பட்டும் வருகின்றன என்பதனை அறியலாம்.

மொழிபெயர்ப்பும்  - மொழியியலும்
ஜே.சி.கேட்ஃபோர்டு மொழிபெயர்ப்புக்கு மொழியியல் கொள்கைகளை வகுத்துக் கொடுத்துள்ளார். இவர் மொழிபெயர்ப்புச் செய்முறை பற்றிய விளக்கத்தையும் கூறுகின்றார். மொழியியலானது பொதுவாக மொழிசார் கலைகளுக்கும் குறிப்பாக மொழிபெயர்ப்பவர்க்கும் பயன்படும்.

பொதுவாக மொழிபெயர்ப்பாளர் மொழிபற்றிய நுட்பங்களைத் தெரிந்து இருந்தால் அவை உணர்த்தும் பொருண்மைகளை நன்கு உணர முடியும். அதேபோன்று  மூலமொழி நுட்பங்களுக்கு இணையான  இலக்கு மொழியின் நுட்பங்களை இணைத்துப் பார்த்து அவ்விரு மொழி சமுதாயத்தின் பண்பாடு கருத்தாக்கங்களுக்கு ஏற்பவும் மொழிபெயர்ப்ப முடியும். எனவே மொழிபெயர்ப்பாளர் மொழியியல் கோட்பாடுகளை அறிந்துகொண்டும் மொழிகளின் தன்மைகளைப் புரிந்துகொண்டும் மொழிபெயர்ப்பை மேற்கொண்டால் அம்மொழிபெயர்ப்பு போற்றுதற்குரியதாக அமையும்.

மொழிகளுக்கிடையேயான நுட்பமான வேறுபாடுகள் மொழிபெயர்ப்புச் சிக்கலை விளைவிக்கும். ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்கு இடையே மொழிபெயர்க்கும் போது ஏற்படும் சிக்கல்களைவிட இருவேறு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்கிடையே மொழிபெயர்க்கும்போது அதிகமாக சிக்கல்கள் ஏற்படும். எனவே, மொழியியலின் அடிப்படைப் பகுதிகளான ஒலியியல், உருபனியல், சொல்லியல், தொடரியல், பொருண்மையியல் ஆகியவை பற்றிய தெள்ளிய அறிவு ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அவசியம் ஆகின்றது.

மொழிபெயர்ப்பாளரின் தகுதி
மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சில தகுதிகள் தேவைப்படுகின்றன. ஒரு மொழிபெயர்ப்பாளராய் இருக்கத் திறனாய்வுத் தகுதி தேவை. மூலமொழிக்கருத்தை இலக்கு மொழியில் நடைமுறைச் சூழலுக்கேற்ப (Practical) கூறும் இருமொழித்தகுதியும் தேவை. ஏனெனில் மொழிபெயர்ப்பால்  மிகுந்த பயனும் உதவியும் வாசகர்கள் பெற வேண்டும். மொழிபெயர்ப்பாளருக்கு இருமொழி அறிவோடு, பொது அறிவும், துறையறிவும் கட்டாயம் தேவை.

மொழிபெயர்ப்பு சிக்கல்கள்
மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிக்கல் நிறைந்த பணியாகும். ஒருவர் ஒரு மொழியில் கூறிய புதுமையான பொருண்மையை அதே மொழியில் அவரது நிலையில்  நின்று வாசிப்பவர் அப்பொருண்மையைப் புரிந்து கொள்வது என்பதே சிரமமானது, கடினமானது. இந்நிலையில் அப்பொருண்மையைப் படைப்போர், ஆசிரியர் அணுகிய முறையிலே நின்று அணுகிப் புரிந்து கொண்டு அப்பொருண்மையை மற்றொரு மொழியில் அதே முறையில் கூறுவது என்பது இன்னும் கடினமான காரியமாகும். இதற்குத் தடையாக நிற்பவை பல. சான்றாக மூலமொழிக்கும், இலக்குமொழிக்கும் இடையே நிலவும் மொழிக்கூறுகளின் (ஒலி நிலை துவங்கி பொருள் நிலை வரை) வேறுபாடுகள், படைப்பாளரின் மொழி ஆளுமைக்கும் மொழிபெயர்ப்பாளரின் மொழி ஆளுமைக்கும் இடையேயான வேறுபாடு, மொழிபெயர்ப்பாளரின் இலக்கு மொழி அறிவு, மொழிபெயர்க்கப்பட வேண்டிய பனுவலின் பொருண்மை, பயன், தன்மை, யாருக்காக அல்லது எந்தப் பயன்பாட்டாளருக்காக ஒரு குறிப்பிட்ட படைப்பு மொழிபெயர்க்கப்படுகின்றது. மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பு பற்றிய அறிவு எனப் பல காரணங்களைக்கூறலாம். மேலும், மேற்கூறிய ஒவ்வொரு காரணிக்குள்ளும் பல உட்பிரிவுகள் உள்ளன. சான்றாக மொழிபெயர்ப்பாளரின் மொழி ஆளுமை என்னும் காரணிக்குள், மொழிபெயர்ப்பாளரின் வட்டார வழக்கு, பண்பாட்டுக் கூறுகள், போன்ற உட்காரணிகள் உள்ளன.

அதனைப் போன்ற மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பு பற்றிய அறிவு என்னும் காரணிக்குள், மொழியியல் அறிவு, மொழிபெயர்ப்புக் கொள்கைகள் பற்றிய அறிவு, குறிப்பிட்ட இருமொழிகளுக்கிடையே மொழிபெயர்ப்பு நடைபெறும் பொழுது வழக்கமாக எதிர்கொள்ளம் சிக்கல்கள் பற்றிய அறிவு, அவற்றைக் களைவதற்கான வழிமுறைகள் போன்ற உட்காரணிகள் உள்ளன. அதே போன்று மொழிபெயர்க்க வேண்டிய பனுவலின் பொருண்மையின் தன்மை என்னும் காரணிக்குள் இலக்கியப் பொருண்டை, அறிவியல் பொருண்மை போன்ற உட்காரணிகளும் அப்பொருண்மை பற்றிய மொழிபெயர்ப்பு ஆசிரியரின் அறிவு, எண்ணம், அவரின் நிலைப்பாடு போன்ற உட்காரணிகளும் அடங்கும். இவற்றை நன்குணர்ந்து மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

மேற்கூறிய விளக்கம் ஒரு மொழிபெயர்ப்புப் பணி எவ்வளவு சிக்கல் நிறைந்த பணி என்று எடுத்துரைக்கும் விதமாக கூறப்பட்டுள்ளது.

மொழி பெயர்ப்புச் சிக்கல்கள்

1. தமிழ் - ஆங்கிலமொழிபெயர்ப்புச் சிக்கல்கள்
1.   மொழிபெயர்ப்புச் சிக்கல்களுக்கு மிக முக்கிய காரணம் மொழிபெயர்ப்புக்கு உள்ளாகும் இரு மொழிகளின் தன்மை ஆகும்.
2.   இரு வேறு மொழிக்குடும்பங்களைச் சார்ந்த மொழிகளுக்கு இடையே மொழி பெயர்ப்பு நடைபெறும் பொழுது, அதிலும் ஒரு மொழி வெளிநாட்டு மொழியாகவும், மற்றொரு மொழி உள்நாட்டு மொழியாகவும் நிலவும் சூழலில், மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் அதிகமாகும்.
3.   தமிழின் ஒரு பனுவலை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் பொழுது, தமிழின் பல வினைச்சொற்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் போது மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் தோன்றுகின்றன. (எ.கா.) "துழாவு" என்னும் வினைச்சொல் "தேடு" என்னும் சொல்லின் பொருண்மையைக் குறித்தாலும், தேடுதல் என்னும் செயலிலிருந்து "துழாவுதல்" சற்று வேறுபட்டு நிற்பதனை காணலாம். இதற்கு Search  அல்லது Quest    போன்ற சொற்கள் நிகரன்களாக அமையாது.

4.   அதே போன்று பெயர்ச்சொற்களையோ ("பதற்றம், பராக்குப்பார்த்தல், அங்கலாய்ப்பு"), வினையடையையோ ("நிதானமாக" என்னும்) அவ்வளவு எளிதாக ஆங்கிலத்தில் நிகரன்களைக் கொடுத்து மொழிபெயர்த்து விட முடியாது.

5.   இது போன்ற எண்ணிலடங்காச் சொற்களும், மரபுத் தொடர்களும், தொடர்களும், வாக்கியங்களும் தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பில் சிக்கல்களை எழுப்புகின்றன.

2. ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்
1.   ஆங்கிலச்சொற்கள், தொடர்கள், வாக்கியங்கள் சிலவற்றை மொழிபெயர்க்கும் பொழுது சில சிக்கல்கள் தோன்றுகின்றன. சான்றாக ஆங்கிலச் சொற்களாகிய, Ask, Listen, Hear, Obey  போன்ற சொற்களைக் குறிக்க "கேள்" என்னும் ஒரே சொல் பல இடங்களில் நிகரனாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது பொருள் புரிதலில் சிக்கலைத் தோற்றுவிக்கும். இதனை மிக கவனமுடன் கையாள வேண்டும்.

2.   மரபுத் தொடரை அப்படியே மொழிபெயர்த்தால் சிக்கல்கள் ஏற்படும். இதனை களைவதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் பற்பல உத்திகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

3.   ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு ஒரு பனுவலை மொழிபெயர்க்கும் பொழுது மொழியின் எல்லா நிலைகளிலும் பல்வேறுவிதமான பிரச்சனைகள் தோன்றும். அவற்றை மொழிபெயர்ப்பாளர் நன்குணர்ந்து நீக்குதல் வேண்டும். அப்பொழுதுதான் மொழிபெயர்ப்பு வாசிப்புத் தன்மை உடையதாகவும், கருத்துப் பரிமாற்றத்தன்மை உடையதாகவும் விளங்கும்.

3. சொல்நிலை மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்
மொழிபெயர்ப்பில் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளுள் தலையாயது சொல்நிலைப் பிரச்சனை. ஏனெனில் பெரும்பாலான மொழிபெயர்ப்புச் சூழல்களில், சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பே மிகுதியாகப் பின்பற்றப்படுகின்றது. அத்தகு  சூழல்களில், சொல்நிலை தொடர்பான பிரச்சினைகள் தான் தோன்றும். சொல்நிலை பிரச்சினைகளே தொடர் வாக்கிய நிலைப் பிரச்சினைகளுக்குக் காரணமாய் அமைகின்றது.

4. மரபுத்தொடர் மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்
இலக்கிய மொழிபெயர்ப்பில் மரபுத் தொடர், உவமை, உருபன் மிகுந்த சவாலாக இருக்கும். இவற்றை கவனமுடன் கையாளுதல் வேண்டும். ஆங்கிலமொழியின் மரபுத்தொடரை தமிழில் அப்படியே மொழிபெயர்த்துக் கொடுக்கும் பொழுது, ஒரு சில சூழல்களில் பொருள் மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கின்றன.

5. வாக்கியநிலை மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்
ஒரு மொழியில் எண்ணிலடங்கா புதுவாக்கியங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன என்பது யாவரும் அறிந்த உண்மை. ஒரு மூலமொழியின் வாக்கியத்தை அல்லது மூலமொழியின் பொருண்மையை இப்படித்தான் அல்லது இவ்வகை வாக்கியம் கொண்டுதான் மொழிபெயர்க்க வேண்டும் அல்லது மொழிபெயர்க்க முடியும் என்று அறுதியிட்டு கூறமுடியாது. மொழியைப் போன்றே மொழிபெயர்ப்பிலும் எண்ணிலடங்கா வாக்கியவகை மாற்றங்கள் தோன்றுகின்றன. அவற்றில் இவை சரியானவை இவை சரியற்றவை என்பனவற்றை நிர்ணயிப்பது அவ்வாக்கியங்கள் உணர்த்தும் பொருண்மையின் அளவைப் பொறுத்தே. அதாவது மூலமொழியில் ஒரு வகை வாக்கியத்தில் கூறிய கருத்தை இலக்குமொழியில் அதே வகை வாக்கியத்தைக் கொண்டும் அல்லது வேறுவகை வாக்கியத்தைக் கொண்டும் மொழிபெயர்க்கலாம். ஆனால் மூலமொழி வாக்கியப் பொருண்மையும் இலக்குமொழி வாக்கியப்பொருண்மையும் அளவிலும் தன்மையிலும் ஒத்துப்போதல் அவசியம். அதனைப் பொறுத்தே அம்மொழிபெயர்ப்பு நல்ல அல்லது குறையுள்ள மொழிபெயர்ப்பு என்று வழங்கப்படும்.

மொழிபெயர்ப்பின் சிக்கல்களுக்கு தீர்வுகள்
1.   மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்க்க முடியாவிட்டாலும், அச்சிக்கல்களின் அளவைக் குறைக்க கீழ்காணும் தீர்வுகள் வழிவகை செய்யும் எனலாம்.

2.   பொதுவாக மொழிபெயர்ப்பின் பொழுது மூலமொழியின் கருத்துக்கள் சிதைவுபடாமல் இருக்கும் வண்ணம் மொழி பெயர்க்க வேண்டும்.

3.   மொழிபெயர்க்கப்பட்ட பனுவல் திருத்தமாக இருக்க வேண்டும். வாசிப்புத்தன்மையுடையதாகவும், கருத்து, மொழிநெருடல் ஏதும் இன்றி இருத்தல் வேண்டும்.

4.   சொல் சிக்கனத்தைக் (Brevity) கையாண்டு மூலமொழிப் பனுவலுக்கும் இலக்குமொழிப் பனுவலுக்கும் பக்க அளவு அதிக வேறுபாடு இல்லாது இருத்தல் வேண்டும்.

5.   பொருள் மயக்கம் உள்ள தொடரையோ வாக்கியத்தையோ மொழிபெயர்க்கும் பொழுது பெயர்க்க முடியுமாயின் அவ்வாறே மொழிபெயர்க்க வேண்டும். இல்லையேல், ஒன்றிற்கு மேற்பட்ட பொருளை பெரும்பொழுது, பெரும்பாலோர் (Popular Meaning) பெறக் கூடிய பொருண்மையை மனதில் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும்.

6.   மொழிபெயர்ப்புக்கு உள்ளாகும் இரு மொழிகள்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையாக இருந்தால் இரண்டு மொழிகளின் கட்டமைப்புக்கும், மொழியின் கூறுகளுக்கும் இடையே அவ்வளவாக வேறுபாடு தோன்றாது. ஏறத்தாழ ஒரே விதமான பண்பாட்டுக் கூறுகளைக் பெற்றிருக்கும்.

7.   வட்டார வழக்கு, கிளை மொழிக் கூறுகள், பேச்சுச் சொற்கள், எழுத்துச் சொற்கள் என மூலமொழியில் பல சொற்கள் தோன்றுமாயின், அதே தன்மையை இலக்குமொழியில் கொணரும் வண்ணம் இலக்குமொழியின் பல்வேறு வழக்குகளைப் புரிந்து பயன்படுத்துதல் வேண்டும்.

8.   உறவு முறைச் சொற்கள், உணர்ச்சிச் சொற்கள், ஒலிக்குறிப்புச்சொற்கள் போன்ற சொற்களின் பொருண்மையை உணர்ந்து அவற்றிற்கு ஏற்ற இலக்குமொழிச் சொற்களைத் தெரிந்தெடுத்து மொழி பெயர்க்க வேண்டும்.

9.   மூலமொழியின் வினையடை, பெயரடை ஆகியவற்றின் பங்கு முக்கியமாயின் அவற்றைத் தவிர்க்காது மொழி பெயர்த்தல் வேண்டும்.

10. உவம, உருவக வழக்காறுகள், மரபுத்தொடர்கள், பழமொழிகள் போன்றவற்றை மொழி பெயர்க்கும் பொழுது, இலக்குமொழியில், அமையப்பெற்ற இணையானவற்றைப் பயன்படுத்தலாம், அல்லது முடியுமானால் மொழிபெயர்த்துப் பயன்படுத்தலாம். அல்லது அவற்றைத் தவிர்த்துத் சாதாரண மொழியில் மொழிபெயர்க்கலாம்.

11. மூலமொழியின் குறிப்புப்பொருள், உள்ளுரைப்பொருள், தொணிப்பொருள் ஆகியவற்றை உணர்ந்து மொழிபெயர்க்க வேண்டும். இதன் காரணமாகவே மொழி பெயர்ப்பாளர் இருமொழிகளிலும் வல்லமை பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. மொழிபெயர்ப்புச் சிக்கல்களில் பெரும்பாலானவை மூலமொழிப் பனுவலைப் புரிதலில் ஏற்படும் சிக்கல்களினாலேயே தோன்றுகின்றன. அதாவது, புரிதலின் சிக்கல் மொழிபெயர்ப்புச்சிக்கலுக்குக் காரணமாகின்றன.

12. மூலமொழி வாக்கியத்தை மொழிபெயர்க்கும் பொழுது, இலக்குமொழியில் ஏறக்குறைய அதே வகை வாக்கியம் கொண்டும், அதே அளவு பொருண்மை கொண்டும் மொழிபெயர்த்தல் நன்று.

13. நீண்ட வாக்கியத்தை மொழிபெயர்க்கும் பொழுது ஒரு சில தொடர்களை விட்டு விட்டு மொழிபெயர்க்க வாய்ப்புண்டு. அத்தகு சூழலில் அந்நீண்ட வாக்கியத்தை சிறு சிறு வாக்கியமாக மொழிபெயர்த்தல் நன்று.

14. ஒருசில நேரங்களில் அல்லது காரணங்களால் இரண்டு வாக்கியத்தை இணைத்தும், அல்லது ஒரு வாக்கியத்தை பிரித்தும் மொழிபெயர்க்க வேண்டியுள்ளது. அப்பொழுது, பொருள் சிதையாது, மாறாக, கூடாது மொழி பெயர்த்தல் வேண்டும்.

15. மொழி பெயர்க்கப்பட்ட வாக்கியம் அல்லது சொற்தேர்வு சரியாக அமைந்துள்ளதா என்பதனை உறுதி செய்ய மறுமொழிபெயர்ப்பு (Back Transltation) அவ்வப்பொழுது செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

16. இலக்குமொழியின் இலக்கண அமைப்பிற்கு இயைந்த மொழிக்கூறுகளை, வாக்கிய வகைகளைப் பயன்படுத்தி மொழிபெயர்க்க வேண்டும் மொழிபெயர்ப்பாசிரியர்.

17. ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் தாம் எதிர்கொண்ட மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தவிர்த்தும், அச்சிக்கல்கள் இலக்குமொழியின் பனுவலில் தெரியாத வண்ணமும் காத்தல் அவசியம் என்பதையும், இலக்குமொழியின் மொழியியல் பண்புகள் சற்றம் மாறாத வண்ணம், கெடாதவண்ணம் மொழிப்பயன்பாடு செய்தால் மொழிபெயர்ப்புப்பனுவல் சிறந்ததாக அமையும் என்பதையும், மொழிபெயர்ப்பாளர் மொழியியல் சிந்தனை உடையவராக இருத்தல் நன்று என்பதையும் இவ்வாய்வு மூலம் தெளிவாக அறிய முடிகின்றது.

ஆய்வு முடிவுரை
மொழி வளர்ச்சியும் சமுதாய வளர்ச்சியும் ஒன்றோடென்று பின்னிப்பினைந்தவை. ஒரு மொழி வளர்ச்சியடைய வேண்டுமாயின் சமுதாய நோக்கில் சில மொழி வளர்ச்சிக் கொள்கைகள் தேவைப்படுகின்றன. சமுதாயம் வளர வேண்டுமாயின் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நோக்கில் பல்வேறு வகையான புதுமைகளை ஏற்றுக் கொள்வதற்கு அச்சமுதாயம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

எந்த ஒரு செயலும் தனது பலனை உரிய நேரத்தில் தரும் என்பது இயற்கை விதி. ஒரு சமுதாயத்தின் உயிராக அதன் மொழி அமைகின்றது. அச்சமுதாயத்தின் கருத்தோட்டம், வளர்ச்சி, கலை, இலக்கியம், பண்பாடு முதலிய எல்லாவற்றின் கொள்கலமாயும், வெளிப்படுத்தும் வாயிலாகவும் அது அமைகின்றது. மக்கள் சமுதாயம் மொழிகளைப் பயன்படுத்துவதால் கருத்துப் பரிமாற்றம் போன்ற பயன்களைப் பெறுகிறது. அதுபோலவே மொழிபெயர்ப்பால் ஒரு மொழியில் உள்ள செய்தி உள்ளீடுகளும் கருத்தாக்கங்களும் மாற்றப்படும் மொழிக்கச் செல்கின்றன. அவ்வாறு செல்லுவதால் சமுதாயப் பயன்பாடும், மொழிப் பயன்பாடும் பெருகுகின்றன. இப்பெருக்கம் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் உலகுதழுவிய அறிவுப் பெருக்கத்திற்கும் வழிகோலும். இந்த மொழிபெயர்ப்பு, மொழியின் பயன்பாட்டில் ஒரு அங்கமாக அமைந்து அம்மொழியினை வளர்க்கின்றது. இன்றைய அறிவியல் நாளைய அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படை ஆவதுபோல, இன்றைய மொழிபெயர்ப்பு, வருங்காலத்தில் சமுதாயத்தைப் பயனுள்ளதாக்கவும், வளர்ச்சி மிக்கதாக்கவும் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை என்பதை இவ்வாய் எடுத்துரைக்கின்றன.

***

 செ . சத்யா , முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்.


(பதிவு எண் : Ph.D./2018/312/TAM),  
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை  மற்றும் 
அறிவியல் கல்லூரி, மைலம் - 604 304. 
திண்டிவனம் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.




No comments:

Post a Comment