திராவிட இயக்கக் கவிஞர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும்
செ. சத்யா, முழுநேர
முனைவர்; பட்ட ஆய்வாளார்
முன்னுரை
தமிழகத்தில்
தோன்றிய இயக்கங்களுள் முதன்மையானது திராவிட இயக்கமாகும். தமிழக வரலாற்றில் திராவிட
இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த
சாதி வேறுபாடுகளைக் களைந்து மூட நம்பிக்கைகளை நீக்கி, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நீதி,
சமத்துவம் ஆகியவைகளை எல்லா நிலைகளிலும் திராவிடர்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்பது
இவ்வியக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள்களாகும். திராவிட இயக்க வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கவர்கள்
நடேசன், டாக்டர் நாயர், தியாகராயர், பெரியார் ஈ.வெ.ரா, அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி
ஆகியோராவார்.பேச்சினாலும், மொழி ஆளுமைத் திறத்தாலும் திராவிட இயக்கம் வெற்றி கண்டதற்கு,
அவ்வியக்கத்திலிருந்த ஈ.வி.கே.சம்பத், மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன்
போன்ற மற்ற தலைவர்களுக்கும் பங்குண்டு.
திராவிட
இயக்கத்தின் கொள்கைகள் இலக்கியத்தின் மூலமும் பரப்பப்பட்டன. திராவிட இயக்கம் தமிழ்
இலக்கிய மறுமலர்ச்சிக்கும், மேடைப் பேச்சிற்கும் அடிப்படையாய் அமைந்தது. திராவிட இயக்க
கவிஞர்கள் கவிதைகள் மூலம் எவ்வாறு இலக்கியப்பணிகளை ஆற்றினர் என்பதை ஆராய்வதாக இவ்வாய்விதழ் அமைகின்றது.
திராவிட இயக்கத்தின்
தோற்றம் – வளர்ச்சி
திராவிட
இயக்கம் தொடக்கத்தில் தென்னியந்திய நல உரிமைச் சங்கமாகத் தோன்றி, ஜஸ்டிஸ் (நீதிக்கட்சி)
கட்சியாக வளர்ந்து, சுயமரியாதை இயக்கமாகவும், சமதர்மக் கட்சியாகவும், திராவிடர் கழகமாகவும்,
திராவிடர் முன்னேற்றக் கழகமாகவும், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமாகவும் வளர்ச்சிப்
பெற்று வந்துள்ளது.
திராவிட இனம்
- திராவிட இயக்கம் பற்றிய அறிஞர் கருத்து
"உலகச் சரித்திரத்திலேயே மிகச் சிறப்புடன்
அதிக முக்கியத்துவம் கொண்டு தனக்கென ஓர் பண்பாடு அமைந்தவராய் இருள் சூழ்ந்து கிடந்த
ஞாலத்தின் கலங்கரை விளக்காய் இலங்கிய இனம் திராவிட இனம்"1 என்று திராவிட இனம்
பற்றி விளக்கம் கூறுகிறார் எம்.ஆர்.கனகசபாபதி.
"சமுதாயத்தில்
பல்வேறு காரணங்களால் ஏற்றத் தாழ்வுகள் 'காங்கிரீட்' போன்று உடைக்க முடியாத நிலை பெற்றிருந்த
நேரத்தில் அவை நாளும் வலிவு பெற்று ஏற்றத்தாழ்வுகள் மிகுவதற்கு சூழ்நிலை இடம் தந்ததால்
வேற்றுமை உணர்ச்சி ஓங்கி உயர் பிறப்பு, இழிபிறப்பு, மேலான தொழில், தாழ்வான தொழில் ஆகிய
பழக்க வழக்கங்களோடு ஒட்டிய நம்பிக்கையும், மாற்ற முடியாத வடிவத்தில் பொருளாதார ஏற்றத்
தாழ்வுகள் நிரம்பிய கால கட்டத்தில் வேறு வழியின்றி உருவாக்கப்பட்டதே இந்த திராவிட இயக்கம்";2
என்று ஏ.எஸ்.வேணு என்பவர் விளக்குகிறார்.
திராவிட இயக்கத்தவர்களின்
இலக்கியப்பணி
திராவிட இயக்க எழுத்தாளர்களால் கவிதை, நாவல்,
சிறுகதை, நாடகம், கட்டுரை, பத்திரிக்கை, மேடைப்பேச்சு, மொழி, உரைநடை முதலிய துறைகளில்
புதுமையானதொரு எழுச்சி உண்டாயிற்று. திராவிட இயக்கத்தவர்களால் தமிழ்மொழி தன்னுடைய பழம்
பெருமையை பெற்று விளங்கியது என்பதை,
"அறிஞர் அண்ணாவின்
ஆற்றல்மிகு சிந்தனைகளால் தமிழர்களுடைய எண்ணப்போக்கில் ஒரு மாபெரும் மாற்றம் உண்டாயிற்று.
தமிழ் இலக்கியம் 'வலிவும், பொலிவும்' பெறலாயிற்று. வீழ்ந்த தமிழகம் அந்த ஒலியில் மீண்டும்
எழுந்தது. இக்கால திராவிட இயக்க எழுத்தாளர்களின் முன்னோடியாக அறிஞர் அண்ணா விளங்கினார்"
3 என்று சே.இராசேந்திரன் எடுத்துரைக்கின்றார்.
"திராவிட
இயக்க எழுத்தாளர்களால் இலக்கியம், நாடகம், திரைப்படம் முதலிய துறைகளில் புதுமைமிகு எழுச்சியுண்டாயிற்று. எளிமை
மிளிரத் தொடங்கியது. அரசியல், சமுதாயம், கலை, பண்பாடு முதலியத் துறைகளிலும் பகுத்தறிவுக்கண்
கொண்டு காணுகின்ற வழக்கத்தைத் திராவிட இயக்கத்தவர்கள் ஏற்படுத்தினர். மேடைக் கலையில்
தமிழ் புத்துயிர் பெற்றது. திராவிட இயக்க எழுத்தாளர்களால் தன்னுடைய பழம்பெருமையை மீண்டும்
தமிழ் பெற்றது" 4. என்று சே.இராசேந்திரன் எடுத்துரைக்கின்றார்.
திராவிட இயக்கக்
கவிஞர்களின் தமிழ் இலக்கிய வளர்ச்சி
"பசனை மடங்களிலிருந்து தோன்றுவது தான்
இலக்கியம் என்றிருந்த வேளையில் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து தோன்றுவதும் இலக்கியமே
என்று இயம்பட வைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்"5 என்று பெரியாரின் பாதையில்
குரல் கொடுத்தவர் பாரதிதாசன். பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டுகின்ற புரட்சி வெடித்துப் பழமையைப் பறக்கடிக்கச் செய்கின்ற கவிதைகள்
பல பாரதிதாசன் கவிதைகள். பழமையை ஒழித்து புதுமை சேர்த்திட்ட பாரதிதாசனின் இலக்கியங்களுக்கு
வரலாற்றில் ஓர் சிறப்பிடம் உண்டு என்று கூறுகிறார்.
பாவேந்தர்
பாரதிதாசன் திராவிட இயக்கக் கவிஞர்களில் முதன்மையானவர். மூடப்பழக்க வழக்கங்களையும்,
சாதிக் கொடுமைகளையும் சாடும் இவர் "தமிழியக்கம்" கண்டவர். இவரது கவிதை வரிகளால்
திராவிட இயக்கம் வலிமை பெற்றது எனலாம். 'குயில்' என்ற இதழ் மூலம் திராவிடச் சிந்தனையை,
திராவிட இயக்கக் கொள்கைகளைத் தமிழ்ச் சமுதாயத்தில் பரப்பினார்.
"நீயொரு திராவிடன்
திராவிட மொழி தமிழ்
திராவிட நாடு உன் நாடு
………. இதனை நீ அறிவாய்!"6
வாணிதாசன்
பாரதிதாசனின் மாணக்கருள் குறிப்பிடத்தக்கவர்
வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி. பகுத்தறிவை மையமாகக் கொண்டவர். திராவிட இயக்கப் பற்றுடையவர். நாடு முன்னேற வேண்டுமெனில்
சாதி, பேதமற்ற நிலைமை ஏற்பட வேண்டும். அதற்கு கல்வி இன்றியமையாதது என்பதை,
"படித்திடில் சாதிப்பேச்சும்
பறந்திடும் அறிவும் உண்டாம்?
படித்திடில் அடிமை ஆண்டான்
எனும் பேச்சும் பறக்கும்
அன்றோ?" 7
என்று கேட்கிறார்.
முடியரசனார்
துரைராசு என்ற தம் பெயரைத் தமிழில் அழகாய்
மொழிபெயர்த்து முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். குன்றக்குடி அடிகளாரால் "கவியரசு"
என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. மொழிவளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், உணர்ச்சியை
கூட்டியும், "பூங்கொடி" என்னும் கவிதையைப் படைத்துள்ளார். தமிழின் முன்னேற்றம்,
தமிழ்மொழி வளர்ச்சி, நாட்டுப்பற்று, பகுத்தறிவு, சீர்திருத்தம் ஆகியவையே இவர்தம் கவிதைகளில்
முக்கியமாகத் திகழ்ந்தன. தமிழில் பிறமொழி கலப்பின்
மிகுதியினைக் கண்டு தம் "மொழியுணர்ச்சி" என்ற கவிதையில்,
"ஆங்கிலமோ பிறமொழியோ
பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற
தீங்கு உடைய மனப்போக்கர்
வாழும் நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?
ஆட்சி மன்றில்
பாங்குடன் வீற்று இருக்கும்மொழி
தமிழே என்று
பகர்நாளில் மொழியுணர்ச்சி
தானே தோன்றும்
ஈங்குஇதற்காய் என்செய்யப்
போகின் றீர்நீர்
இளைஞர்இனி விழித்து எழுந்தால்
விடிவு தோன்றும்" 8
என்று கொதித்தெழுகின்றார் கவியரசு முடியரசனார்.
சுரதா
கற்பனை வளமும், கருத்தாழமும் கொண்ட இவரது கவிதைகளில்
சீர்திருத்தக் கருத்துகள் மிகுந்து காணப்படும். சாதி, மதம், கடவுள் பற்றிக் கண்டித்து
தம் கவிதைகளில் எழுத்தியுள்ளார். கடவுளின் பெயரால் பொருளாதாரம் விளங்கியதை எண்ணி, அதற்கு
முற்றுப்புள்ளி வைத்திட,
"போலி மதப் பித்தரிங்கே
சிலைமீ தன்றோ
புசுகின்றார் நல்லெண்ணெய்
இவர்போன் றோரை
நாலிரண்டு தலைமுறை நாம்
விட்டு வைத்தால்
நாட்டு மக்கள் நான்குகால்
விலங்கே யாவர்" 9
என்று சுரதா பாடுகின்றார்.
புலவர் குழந்தை
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத்
தொண்டராகவும், திராவிட இயக்கப் பற்றும், கொள்கைத் தாக்கமும் உடையவர் புலவர் குழந்தை.
பகுத்தறிவுக் கொள்கையினின்று அசையாதவர். இவருக்கு புலவர் பட்டம் அண்ணா வழங்கியதே. கம்பனுக்கு
வம்பன் என்று மார்தட்டி நின்று இராவண காவியம் இயற்றினார். புலவர் குழந்தையின் பாடல்கள்
பகுத்தறிவு சிந்தனையாக திகழ்வதோடு அவருடைய,
"வெட்டி யேயெனை வீழ்த்தி
னுங்குருதி
வுதிர வேயரும் புண்ணிலே
வீழும் போழ்தினும் தமிழ்த
மிழென
வீழு வேன் தமிழ் மண்ணிலே"
10
என்னும் இப்பாடல் தமிழ்ப்பற்றை உணர்த்துகின்றன
என்று புலப்படுத்துகின்றார்.
தமிழ்ஒளி
தமிழுக்கு ஒளியூட்டியும், தமிழிலக்கிய உலகில்
தனக்கென ஓர் பாணியையும் கொண்ட தமிழொளி, சமுதாயத்தில் வேரூன்றிக் கிடந்த மூடப்பழக்க
வழக்கங்கள், சாதிக் கொடுமைகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைக் களைந்தெறியும் பணியில்
தமிழொளியின் படைப்புகள் தனியிடம் பெறுகின்றன.
பெரியாரின் கொள்கைகள் இவரின் உள்ளங்களிலும் வேரூன்றின. இவரின் "கோசலைக்குமரி"
என்னும் கவிதையில்,
"வேதியர் ஓதிய வேதங்களில்
- அவர் வேள்விகளில்
சாதிகள் பற்பல தோன்றின பொய்மதந்
தன்றலை தூக்கித் திரிந்த
தம்மா.!" 11
என்கிறார் தமிழொளி. பிறப்பில்
உயர்வு தாழ்வு இருப்பதைக் கண்டித்து அவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழுக்கு ஒளியூட்டிய
தமிழ் ஒளியின் புகழ் தமிழிலக்கிய உலகில் என்றும்
ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
மு. கருணாநிதி
இருபதாம் நூற்றாண்டின் கவிதை வரலாற்றில் ஒரு
திருப்பு முனையாகத் தோன்றியவர் மு.கருணாநிதி. இவரின் கவிதைகளில் புரட்சி வெடிக்கும்,
நுகைச்சுவைத் ததும்பும், மூடநம்பிக்கைகள் முறிவும், பகுத்தறிவுணர்வு மிகுந்தும் காணப்படும். சமுதாயத்தில்
விதவைகள் பெருக்கிய விழிநீரைத் துடைக்கத் துடித்த பகுத்தறிவு கவிஞர்களுடன் மு.கருணாநிதியும்,
"என் மனைவி இறந்திட்டாள்
வேறு மணம் வேண்டுமென்பாய்!
பின் சாவுமுனை அடைந்திட்டால்
உன் மனையாள் காவுகொடுக்க
வேண்டுமா காதல்தனை?."
12
என்ற வினாவிiனை எழுப்பி விடை காண முயல்கின்றார்.
கலைஞர்
கருணாநிதியின் இலக்கியப்பணி மிக விரிந்த அளவினதாகும். தமது கவிதைகளால் தமிழுக்கு அணி
சேர்த்தவர் கலைஞர். தமிழ்நாடு என்ற சொல்லுக்கு கலைஞர் தரும் விளக்கம் அவர் தமிழ்பற்றைப்
புலப்படுத்தும். அவை,
"தமிழ் - நாடு
தமிழை நாடுவதில் தவறில்லை
தமிழ் - நாடு என்பதற்காகத்தான்
தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்"
13.
என்று கலைஞரின் பேச்சிலும்
எழுத்திலும் தமிழ் இலக்கிய மேற்கோள்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. இன்றளவும் இவரது மொழியாளுமை
எழுத்துலகிலும், பேச்சுலகிலும், திரையுலகிலும் தனித்திறனுடன் விளங்குகின்றன. இவரின்
குறளோவியம், சங்கத்தமிழ் போன்றவை பழந்தமிழ் இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாகக்
கருதப்பட்டது.
திராவிட இயக்க
பிற கவிஞர்கள்
ஜீவானந்தம், கருணானந்தம், உடுமலை நாராயணகவி,
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், வேழவேந்தன், அரிமதி தென்னகம், புலமைப்பித்தன், பொற்கோ
போன்ற கவிஞர்கள் தமது கவிதைகளின் மூலம் இலக்கிய பணிகளையும், பகுத்தறிவு உணர்வூட்டியும்
மக்களை விழித்தெழச் செய்தனர்.
ஆய்வு முடிவுரை
v நூறாண்டுகளைக் கடந்த திராவிட
இயக்கத்தின் குறிக்கோளாக, சமூகத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாடுகளைக் களைந்து
மூட நம்பிக்கைகளை நீக்கி, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நீதி, சமத்துவம் ஆகியனவற்றை திராவிடர்கள்
அடைய வேண்டும் என்பதனை அறிய முடிகின்றது.
v திராவிட இயக்க கவிஞர்களால்
இலக்கியத்தில் புதுமையும், எளிமையும் மிளரத் தொடங்கி, மேடைகளில் தமிழ் புத்துயிர் மற்றும்
தனது பழம்பெருமையை பெற்றதை அறிய முடிகின்றது.
v திராவிட இதழ்களில் இலக்கிய
நயத்துடன் இயக்கக் கருத்துக்களை தமிழ்மொழி வழியாக சுவைபட வெளிவந்ததினால், திராவிட இயக்கத்தின்
வளர்ச்சிக்கு தமிழ் மொழியும், மொழியின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமும் ஒன்றிற்கொன்று
உதவிக் கொண்டதனை இவ்வாய்வின் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
1. எம்.ஆர்.கனகசபாபதி, விடுதலை,
26-07-1959, ப. 2.
2. ஏ.எஸ்.வேணு, மணிவிழாக் கண்ட திராவிட இயக்கம்,
ப.13.
3. சே.இராசேந்திரன், தமிழ்க்கவிதையில் திராவிட
இயக்கத்தின் தாக்கம், ப. 150.
4. சே.இராசேந்திரன், தமிழ்க்கவிதையில் திராவிட
இயக்கத்தின் தாக்கம், ப. 151.
5. கு.வணங்காமுடி, பகுத்தறிவு இலக்கிய வரலாறு,
ப. 17.
6. குயில், தினசரி, 04-10-1948, ப. 1.
7. கு.வணங்காமுடி, பகுத்தறிவு இலக்கிய வரலாறு,
ப. 22.
8. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10, ப.
83.
9. கு.வணங்காமுடி, பகுத்தறிவு இலக்கிய வரலாறு,
ப. 29.
10. கு.வணங்காமுடி, பகுத்தறிவு இலக்கிய வரலாறு,
ப. 33.
11. கு.வணங்காமுடி, பகுத்தறிவு இலக்கிய வரலாறு,
ப. 34.
12. கு.வணங்காமுடி, பகுத்தறிவு இலக்கிய வரலாறு,
ப. 37.
13. கலைஞர் கருணாநிதி.மு., மேடையில் வீசிய
மெல்லியப் பூங்காற்று, ப. 53-54.
துணை நூற்பட்டியல்
1. வணங்காமுடி. கு.,
1984, பகுத்தறிவு இலக்கிய வரலாறு, சென்னை, பகுத்தறிவுப் பதிப்பகம்.
2. இராஜேந்திரன். கு.,
2002, புதுவை பேணும் தமிழ், என்ரி பதிப்பகம், புதுச்சேரி.
3. கேசவன். கோ., 1991, திராவிட
இயக்கமும் மொழிக்கொள்கையும், செல்மா வெளியீடு, சிவகங்கை.
4. இராதாமணாளன்.,
1997, திராவிட இயக்க எழுத்தாளர்கள் சிறுகதைகள்,
பூர்ணிமா பதிப்பகம், சென்னை.
5. லேனா தமிழ்வாணன், (ப.ஆ),
1983, தி.மு.க.வின் தோற்றமும் வளர்ச்சியும், சென்னை, மணிமேகலை பிரசுரம்.
செ . சத்யா ,
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர் ,
(பதிவு எண் : Ph.D./2019/312/TAM)
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, மைலம் - 604 304.
திண்டிவனம் வட்டம் - விழுப்பு ரம் மாவட்டம்.
No comments:
Post a Comment