"பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல்"
செ . சத்யா ,
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்.
முன்னுரை
உலகின்
மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி' என்று புறப்பொருள்வெண்பாமாலை கூறுகின்றது. தமிழ்மொழி 'என்று
பிறந்தது என்று இயம்ப முடியாத' அளவிற்குத் தொன்மையும் பெருமையும் உடையதாகும். 'அறிவு
அற்றம் காக்கும் கருவி' என்றார் திருவள்ளுவர். அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே அறிவியல்.
பழந்தமிழ் இலக்கியங்கள் சிந்தனைக் கருவூலமாகவும், அறிவுச் சுரங்கமாகவும் திகழ்கின்றது.
மனித இனம் வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் அனைத்தும் மேனிலையடைவதற்கு உறுதுணையாக
இருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மேலை நாட்டார் கண்டறிந்த பல அறிவியல் உண்மைகளை
அவர்களுக்கு முன்னரே, உலகில் முதன் முதலாக தோன்றிய நம் தமிழர்கள் அறிவியல் துறையில்
புலமை பெற்றிருந்தனர் என்பதற்கான சான்றுகளை தழிழ் இலக்கியங்கள் துணைகொண்டு ஆராய்வதாக
இவ்வாய்வு அமைகின்றது.
உலக(ம்)
அறிவியல்
உலகம்
என்பது நிலம், நெருப்பு, நீர், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது மட்டுமல்லாது
இஃது இயற்கையின் பாற்பாட்டது என்ற அறிவியல் கருத்தினை அன்றே தொல்காப்பியர்,
“நிலம்தீ நீர்வளி விசும்போடு
ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” - (தொல்.பொருள்.1539)
என்னும் நூற்பாவில், இப்பூமியானது
மேற்கூறப்பட்ட ஐம்பெரும் பூதங்களையும் உள்ளடக்கியது என்று எடுத்துரைக்கின்றார். இதனை
அடியொற்றிச் சங்கப் புறநானூற்றுப் புலவர்,
"இருமுந்நீர் குட்டமும்
வியல்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந்து அறியினும்" - (புறம். 20:1-5)
என்ற புறநானூற்றுப்பாடலடிகளில்
அளக்க முடியா பண்புகளுக்குக் அப்பாற்பட்டது கடல், காற்று, ஆகாயம் என்ற மூன்றினையும்
குறிப்பிட்டுள்ளனர்.
உலகம் என்பது இவ்வைம்பெரும் பூதங்களாகியது என்பதை,
"மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவருஉ வளியும்
வளித் தலைஇய
தீயும்
தீ முரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை
போல" - (புறம்.
2:1-6)
என்னும் பாடலடிகளில் மண் திணந்திருக்கும் நிலமும், நிலம் ஏந்தியிருக்கும்
ஆகாயமும், ஆகாயத்தின் வழி வரும் காற்றும், காற்றில் கலந்து வரும் தீயும், தீயின் முரணிய
நீரும் கலந்தது உலகம் என்றுரைப்பர்.
இவ்உலகம்
ஐம்பெரும் பூதங்களான நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் என்பன கலந்ததொரு மயக்கமான சூழ்நிலையில்
இவ்வுலகம் தோன்றிற்று என்பது ஓர் அறிவியல் உண்மையாகும். இவ்வுண்மையைத் தொல்காப்பியர்
2500 ஆண்டுகளுக்கு முன்னரே தம் பாடல் வரிகளில் நிறுவியுள்ளமை போற்றுதற்குரியதாகும்.
இவ்வண்ணம் அன்றே தொல்காப்பியர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாய் நிலவெளி மற்றும் விண்வெளி
விஞ்ஞானம் பேசும் அறிவியலை காணலாம்.
திருக்குறள் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர்
குறித்து,
"நிலத்துஇயல்பால்
நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பதுஆகும் அறிவு" - (குறள். 452)
எனச் சுட்டுகிறது. பஞ்ச
பூதங்களின் தன்மைகளைப் பிரித்து ஆராய்ந்த அறிவே அறிவியலின் தொடக்கமாகிறது.
வேளாண்மை
அறிவியல்
உழவு
பற்றி வள்ளுவர் குறிப்பிடுகையில், உழுதல், உரமிடுதல், களைநீக்குதல், நீர்பாய்ச்சுதல்,
பயிர்ப் பாதுகாப்பு எனும் ஐந்து கோணங்கள் இன்றியமையாதன என்பதனை,
"ஏரினும் நன்றாம்
எருவிடுதல்ளு கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு" - (குறள். 1038)
என்ற குறட்பாவில் விளக்குகிறார்.
உழுவதைக் காட்டிலும் உரமிடுதல் சிறந்தது. களை
நீக்கியபின் நீர்பாய்ச்சுவதைக் காட்டிலும் பயிர்ப் பாதுகாப்பு முக்கியமானது என உழவின்
செயல்முறைகள் இன்றைய அறிவியல் அணுகுமுறைகளுக்கு முன்னோடியாக விளங்குகின்றது.
வேளாண்
நாகரிகத்தில் இன்று அறிவியல் சார்ந்த பல கருவிகள் அறிவியல் நுட்பத்தோடு இயற்றப்பட்டு
பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஆனால், பெரும்பாணாற்றுப்படையில் அன்றே அறுத்த நெல்லைப்
பரப்பி கடாவிட்டுத் தாம்பு அடிப்பதையும் பிறகு நெல்லைத் தூய்மைப்படுத்தி நெற்கூடுகளில்
இடுவதையும்,
"பகடூர்பு இழிந்த
பின்றைத் துகள்தப
வையும் துரும்பும் நீக்கிப்
பைதறக்
குடகாற்று எறிந்த குப்பை" - (பெரும்பாண். 238-240)
எனக் குறிப்பிடுகின்றது.
தூற்றிய நெல்லை நெற்கூடுகளில் இட்டுவைக்கும் அறுவடைக்குப் பின்னான தொழில்நுட்பம் அன்றும்
இருந்துள்ளது என்பதைய அறியலாம். மேலும், செந்நெல் கதிர்களைக் கூர்மையான அரிவாள்கொண்டு
அறுக்கும் செய்தியினை நற்றிணை,
"செந்நெல்
அறிஞர் கூர்வாள் பண்ணூறு" - (நற்றிணை. 275)
என்ற பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.
அரிவாள் இல்லாத நேரங்களில் பனங் கருக்கினைக் கொண்டும் நெற்கதிர்களை அறுத்து அடித்தனர்
என்பதை அறிய முடிகின்றது.
உழவர்கள்
எனப்படும் மள்ளர்கள் கடாக்களை அதட்டி ஓட்டுகின்றனர். அப்பொழுது கலப்பையின் கொழு அழுந்தப்
பாய்வதால் தாமரையின் முனைகள் ஒடிகின்றன. மண்ணோடு புதைந்த முத்தும் பொன்னும் ஓதுங்கித்
தள்ளப்படுகின்றன. மணிகள் சிதறடிக்கப்படுகின்றன. சலஞ்சலம் என்னும் சங்கினம் கொழு பாய்ந்தமையால்
புலம்புகின்றது. கலப்பையின் கொழுபட்டு அங்கு வாழ்ந்த மீனினங்கள் துள்ளித் துடிக்கின்றன.
வயல் ஆமைகள் தலையையும் கால்களையும் தம் ஓட்டிற்குள் சுருக்கிக்கொள்கின்றன. வயல் நீரில்
வாழ்ந்த மீன்கள் அண்மையிலுள்ள மதகுநீர்க் குழாயில் சென்று ஒளிந்து கொள்கின்றன. உழவர்கள்
ஓட்டும் கொழு ஆழத்தில் பாய்தலால் மேலே கூறிய செயல்கள் நடைபெறுகின்றன என்பதனை,
"முள்ளரை முளரி வெள்ளி
முளையிற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச்
சஞ்சலம் புலம்பச் சாலில்
துள்ளிமீன் துடிப்ப ஆமை
தலைபுடை சுரிப்பத் தூம்பின்
உள்வரால் ஒளிப்ப மள்ளர்
உழுபகடு உரப்பு வாரும்" - (கம்ப.பாலகாண்டம்.நாட்டுப்படலம்.18)
என்று கம்பராமாயணத்தில்
வரும் பாடல் ஆழ உழும் முறையினையையும், அதனோட
அவர்களின் அறிவியல் சிந்தனையினை சிறப்பாக எடுத்தியம்புவதினை அறிய முடிகின்றது.
ஏர்பிறந்த போதே 'அறிவியல்'
வேளாண்மையில் புகுந்துவிட்டது என்றே கருதப்பட்டு வருகின்றது. பழங்காலத்தில் கதிர்களை
அடித்து நெற்கூடுகளில் இட்டு வைப்பது இன்றைய அறிவியலோடு ஒப்பிடப்படுகின்றது.
வானவியல் அறிவியல்
பழந்தமிழர்கள்pன் அறிவியல் கண்டுபிடிப்புகளில்
வானவியலும் ஒன்றாகும். தொல்காப்பியம் முதல்
சங்க இலக்கியங்கள் வரை வானியற் செய்திகள் ஏராளமாக உள்ளன. தமிழர்கள் வானியலறிவு பெற்றிருந்ததினால் தான் உலகப்பொதுமறை
எழுதிய வள்ளுவர் 'வான் சிறப்பு'எனும் அதிகாரம் ஒன்றை தனியே வகுத்துள்ளார் என்பதை அறிய
முடிகின்றது.
"வான்நின்று உலகம்
வழங்கி வருதலால்
தான்அழிழ்தம் என்றுணரற்
பாற்று"
என்ற குறட்பாவில், உலகில்
வாழும் உயிர்களுக்கு மமை அமிழ்தம் எனவும்,
"விசும்பின் துளிவீழின்
அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது"
என்ற குறட்பாவில், மழைத்துளி
இல்லாவிடின் பசும்புல் காணமுடியாது எனவும்,
"நீர்இன்று அமையாது
உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு"
என்ற குறட்பாவில், வானிலிருந்து
பொழியும் மழைநீர் இல்லாவிடில் ஒழுக்கம்கூட நிலைபெறாது என்றும், வானம் பற்றியும் வான்வழி கிடைக்கும் மழைபற்றியும் குறிப்பிட்டுள்ளர்
வள்ளுவர்.
ஞாயிறு செல்லும் வான வழியையும்,
அதன் இயக்கத்தையும் காற்று இயங்கும் திசையையும், ஓர் அடிப்படையுமின்றி நிலைபெற்றிருக்கும்
ஆகாயத்தையும் அவ்வவற்றின் எல்லையளவும் சென்று நேரில் அளந்து அறிந்தவரைப் போல ஒவ்வொரு
நாளும் இத்துனை அளவுடையன என்று ஆராய்ந்து திட்டமாகச் சொல்லும் அளவு ஆழ்ந்த அகன்ற அறிவு
பெற்றவர்கள் இருந்தனர் என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். இதனை,
"செஞ்ஞா யிற்றுச்
செலவுமஞ் ஞாயிற்றைப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண்
டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல
வென்றும்
இனைத்தென் போரு முளரே" - (புறம். 30)
என்னும் புறநானூற்றுப் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.
எல்லாக்
கோள்களும் சூரியனை நடுவாகக் கொண்டு சுற்றி வருவனவாம். ஒரு பொன்னாலர் செய்;யப்பட்ட கலத்தின்
தோற்றம், ஆகாயத்தில் ஒளி பொருந்திய நிறத்தினையுடைய கோள்மீன்கள் சூழ்ந்த இளைய கிரணங்களையுடைய
ஞாயிற்றின் தோற்றத்தை ஒக்கும் என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதனை,
"வாணிற விசும்பிற்
கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயிற்றெள்ளுந்
தோற்றத்து
விளங்குபொற் கலம்" - (சிறுபாண். 242-244)
என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.
இரவுப்
பொழுது புலரும் விடியற் காலத்தே வெள்ளியானது வானத்தில் தோன்றும் என்ற உண்மையினையைப்
பல இடங்களில் புலவர்கள் எடுத்தியம்பியுள்ளனர். செறிந்த இரவில் விரிகின்ற கிரணங்களை
உடையதாக வெள்ளி மீன் எழுந்தது உடன் பொழுது விடிந்தது என்பதனை,
"கைக் கசடிருந்த என்கண்ணகல்
தடாரி
இருசீர்ப் பாணிக்கேற்ப
விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள்
விடியல்" - (பொருநர். 70-72)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
அதிகாலையில் எழுந்து விடிவெள்ளியின் உதயம் கண்டு நீராடுதல், பயணம் தொடங்குதல் முதலிய
நிகழ்வுகளை நடத்தி வருவதனை இப்பாடலடிகள் சுட்டுகின்றன.
சங்க இலக்கியத்தில் புறப்பாடலில் திசைகள் குறித்துக்
குறிப்பிடுகையில்,
"திசையிரு நான்கும்
உற்கம் முற்றவும்
பெருமரத் திலையி ணெடுங்கோல்
வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும்" - (புறம். 41)
என்னும் வரிகளில் எட்டுத்
திசைகளிலும் எரிகொள்ளி விழுவதும், ஞாயிறு பல இடங்களில் தோன்றுதலையும் இங்குக் கூறப்பட்டுள்ளதனை
ஆராயும்போது பழந்தமிழர்கள் திசைகளையும், வானியல் அறிவையும் பெற்றிருந்தனர் என்பதனை
அறிந்து கொள்ள முடிகின்றது.
அணுவில் அறிவியல்
'அணுவின்
அசைவின்றி உலகில்லை' என்பர் சான்றோர். இவ்வுலகில் 92வகையான அணுக்கள் உள்ளன. இவ்வணுக்கள்
இணைந்து அணுத்திரளை உருவாக்குகின்றன. இவ்வணுக்களின் திரட்சியே அண்டங்களாகின்றன என்பது
அறிவியலார்கள் கூற்று. இவ்வணுக்களின் தன்மையைப் பற்றி சங்க இலக்கியங்கள் பல கருத்துக்களை
எடுத்துரைத்துள்ளதை காணலாம்.
"அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்" - (மு.வ.திருக்குறள்
தெளிவுரை, ப.273)
என்னும் வரிகளில் ஔவையார்
திருக்குறளின் பெருமை குறித்துக் குறிப்பிடுகையில் இவ்வாறு சுட்டுகின்றார். அணுவின்
தன்மை குறித்துத் திருமூலர்,
"அணுவின் தன்மையே
ஆண்டவனின் தன்மை
அணுவில் அணுவினை ஆதிப்
பிரானை"
(தமிழர் பண்பாடு அன்றும் இன்றும், ப.421)
அணுவைப்
பற்றியும் அதைப் பிளப்பது கடினம் என்பதைப் பற்றியும் சுட்டுகிறார். அணுவைப் பிளப்பது
எவ்வளவு கடினமோ அது போன்றே ஆண்டவனின் அருளைப் பெறுவதும் மிகக் கடினம் என்றும், அணுவைப்
பிளப்பது கடினமானது என்பது திருமூலர் வாக்கு.
1803இல்
ஜான்டால்டன் அணுவைப் பிளக்கவோ பகுக்கவோ முடியாது என்று கூறினார். ஆனால் அதற்குப் பின்வந்த
தாமஸ் ரூதர்போர்டு 1911இல் அணுவைப் பிளக்க முடியும் என்று கூறினார். சங்கப் புலவரான
ஔவை 'அணுவைத் துளைத்து' எனக் குறிப்பிடுவதிலிருந்து அணுவைப் பிளக்க முடியும் என்று
கூறி அதைப் பிளப்பதற்கு முன்னோடியாகத் திகழ்கிறார்.
அணுக்கள் ஒன்றுகூடி அணுத்திரளாக
மாறி அண்டங்களாக மாறுவது குறித்து மாணிக்கவாசகர்,
"அண்டப் பகுதியின்
உண்டை பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பருங்
காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில்
பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட
விரிந்தன" - (திருமுறை. 8:3)
எனச் சுட்டுவதிலிருந்து அறிப்படுகின்றது.
கட்டிடக்கலை அறிவியல்
செம்மொழி இலக்கியங்கள் அறிவியல் கண்கொண்டு நோக்கத்தக்கனவாக
விளங்குகின்றன. செம்மொழி இலக்கியங்களில் பல்துறை சார்ந்த அறிவியல் செய்திகள் காணப்படுகின்றன.
"மாயோன் கொப்பூழ்
மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரும்
பூவின்
இதழகத் தனைய தெருவும்,
இதழகத்து
அரும் பொகுட்டனைத்தே அண்ணல்
கோயில்" - (பரி.
8:1-4)
என்ற பரிபாடல் பாடலடியில்
தமிழர்களின் கட்டக் கலையின் நுணுக்கம் அறிப்படுகின்றது. தாமரைப் பூவைப் போல மதுரை மாநகர்
அமைந்திருந்தது என்பதை அழகாக எடுத்துரைக்கின்றது இப்பாடல் வரிகள். தாமரைப் பூவின் இதழ்கள்
போல தெருக்கள் அமைந்திருந்தனவாம். அதாவது, ஊரின் மையப்பகுதியில் ஆலயம் அமைந்திருக்க
அது பூவின் பொகுட்டாக அமைய, அதனை மையப்படுத்தி நெருக்கமாகத் தெருக்கள் அமைந்திருந்தன
என்பது இதன் வழி பெறப்படும் நகரக் கட்டமைப்பாகும்.
"இட்டிகை நெடுஞ்சுவர்
விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர்
மாடத்து"
என்ற அகநானூற்றுக் குறிப்பின்படி,
செங்கற் கோயில் சங்க காலத்தில் கட்டப்பட்டிருந்தது என்பதையும், இன்றைக்கு நவீனமாக வளர்ந்துள்ள
கட்டக்கலையின் உயரத்திற்குத் தமிழர்கள் அன்றே அடிக்கல் நாட்டியுள்ளனர் என்பதனை அறிய
முடிகின்றது.
கோடையின் வெப்பத்தைப் போக்க, வீடுகளின் உயர்மாடம்,
மேற்பகுதிகள் கூரையின்றி அமைக்கப்பட்டு, வீடுகளின் உட்பகுதியில் காற்று வரும் வகையில்
பலகணிகளுடன் கூடிய முறைமையை கையாண்டதையும், குளிர்காலத்தில் தென்றல் வரும் பலகணிகளைத்
திறவாது மக்கள் அடைத்தே வைத்திருந்ததையும்,
"வானுற நிவந்த மேல்நிலை
மருங்கின்
வேனிற் பள்ளி தென்வளிதரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது
திண்ணிலை
பேர்வாய்க் கதவம் தாழொடு
துறப்ப - (நெடுநல்.
60-63)
என்று நெடுநல்வாடை பாடல்
வரிகள் எடுத்துரைக்கின்றன. இப்பாடல் வரிகள் மூலம் மக்கள் தமது வீடுகளில் அன்றே கட்டிடக்கலையின்
அறிவியல் சிந்தனையைக் புகுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.
கணித அறிவியல்
கணிதம்
என்பது வாழ்வியலுக்கு மிகவும் முக்கியமானதாகும். கணிதத்தின் உதவியில்லாமல் எதுவும்
நடைபெறாது என்பதை வள்ளுவர்,
"எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப
இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - (குறள். 400)
என்று அன்றே எடுத்துரைத்துள்ளார்.
இதனை, பரிபாடல்,
"நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மைஇல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம்; கழிப்பிய வழிமுறை" - (பரி.2:12-15)
என்று எண்கணிதத்தைக் கூறுகின்றது.
இதில் 'ஆம்பல்' என்பது 'பழந்தமிழர் கணக்கிட்ட ஆயிரம் கோடி' என்ற பேரியல் எண்ணாகும்.
'வெள்ளம்' என்பது 'கோடி கோடி'யைக் குறிக்கின்றது.
மிகப்பெரிய
எண்களைக் குறிக்க வெள்ளம், ஆம்பல் போன்ற சொற்களைக் கையாண்டு அளவிட்டுள்ளனர் என்பதனை,
"ஆயிரம்
வெள்ளம் வாழிய பலவே" -
(பதிற்.21:38)
"ஆயிரம்
வெள்ள ஊழி வாழி" -
(பதிற்.63:20-21)
"…..
அருவி ஆம்பல்" - (பதிற்.63:19)
என்ற
பதிற்றுப்பத்தின் சான்றுகளால் அறிய முடிகின்றது.
'கோடி' என்ற சொல் வழக்கில்
இருந்ததை,
"இருபால் பெயரிய உருகெழு
மூதூர்,
கோடி பல அடுக்கிய பொருள்
நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்து" - (புறம்.202:6-8)
என்ற பாடலடிகளால் அறியமுடிகின்றது.
"… பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு" - (பரி.3:44-45)
என பரிபாடல் வரிகள் எடுத்தியம்புகின்றன.
அதாவது, பலவாக அடுக்கிச் சொல்வதற்குரிய எண்களின் முடிவாகிய ஆம்பல் என்னும் பேரெண்ணாலும்,
இவ்வளவு என்று எண்ணால் எல்லை ஏதும் கூற முடியாத உடலினையுடையவன் என்று திருமாலின் அவதாரச்
சிறப்பினை கூறும் பரிபாடல் பாடலடிகள் எண்கணிதத்தைக் கூறுகின்றது.
பண்டைத்தமிழர் கழற்சிக்காயைக்
(கழங்கு) கொண்டு அளவை எண்ணினர் என்பதை,
"துளங்கு
குடி திருத்திய வலம்படு வென்றியும்;
எல்லாம் எண்ணின், இடு கழங்கு
தபுந" - (பதிற்.32:7-8)
என்ற பதிற்றுப்பற்று பாடலடிகள்
மூலம் அறிய முடிகின்றது.
நிலத்திலிருந்து
வந்த தானியத்தை அம்பணம் என்ற அளவால் அளந்ததை,
"…
… களிற்றொடு, நெல்லின்
அம்பண அளவை
விரிந்து உறை போகிய" - (பதிற்.66:7-8)
என்ற
பதிற்றுப்பத்தின் பாடல் சான்றின் மூலம் அறியலாம். 'அம்பணம்' என்ற சொல்லிற்கு 'மரக்கால்'
என்று பதிற்றுப்பத்து உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.
1 மரக்கால் ஸ்ரீ 1
அம்பணம்
1 அம்பணம் ஸ்ரீ 32
ஆழாக்கு
இவ்வாறு
தானியத்தை அளக்க முகத்தல் அளவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வளவைகள் மரம், மண், பொன், உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்டிருந்ததை,
"… … பசும் பொன் மண்டை,
'இவற்கு ஈக!' என்னும்" - (புறம்.289:6-7)
என்ற புறநானூற்றுப் பாடல் வழி அறியமுடிகின்றது.
தற்காலத்தில் மேற்கண்ட முகத்தல் அளவைக் கருவிகளைக்
காட்டிலும், நிலைப்பேற்றுத் தன்மைக்காகவும், துல்லியத்திற்காகவும் பல்வேறு மாற்றங்கள்
செய்யப்பட்டு 'கிராம்' என்னும் அளவே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
"விரல்,
சாண், முழம் என நீளத்தைக் கை அல்லது கோல்களால் அளப்பது நீட்டல் அளவை"9 ஆகும்.
அடி, சாண், விரல், முழம், கோல், கயிறு என்ற வகையில் அளக்கப்பட்டு பின்னர் இவை நுண்மை
அளவுகள் உருவாவதற்கு அடிப்படையாயின.
"காய் நெல் அறுத்துக்
கவளம் கொளிNன்
மா நிறைவு இல்லதும், பல்
நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப்
புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால்
பெரிது கெடுக்கும்" - (புறம்.184:1-4)
என்ற புறநானூற்றுப் பாடல்
வரிகளின் மூலம் சங்க காலத்தில் நிலங்களை அளந்து அவற்றிற்கு மா, செறு போன்ற அளவுப் பெயர்களை
இட்டுள்ளதை அறிய முடிகின்றது. இதை பின்வரும் கணக்கீடுகள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
சங்ககாலத்தவரின் (தமிழர்களின்) நில அளவைகள்
16 சாண் ஸ்ரீ 1
கோல்
18 கோல் ஸ்ரீ 1
குழி (ஒரு குழி என்பது 144 சதுரஅடி ஆகும்.(12ஓ12 ஸ்ரீ 144)
100 குழி ஸ்ரீ 1
மா
20 மா ஸ்ரீ 1 வேலி
3.5 மா ஸ்ரீ 1 ஏக்கர்
6.17 ஏக்கர் ஸ்ரீ 1
வேலி
மேலும்,
"துளிபதன் அறிந்து
பொழிய
வேலி ஆயிரம் விளைகநின்
வயலே"
-
(புறம்.391:20-21)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள்
சங்க காலத்தில் நிலத்தை, 'வேலி' என்ற பெயரில் வழங்கியுள்ளதனை எடுத்துரைக்கின்றன. நிலத்தின்
குறிப்பிட்ட அளவு 'வேலி' என்ற அளவுப் பெயரில் வழங்கியுள்ளனர்.
நாவாய் (கப்பல்) அறிவியல்
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பண்டைத் தமிழகக்
கடற்பகுதி நெய்தல் நிலம் எனப்பட்டது. கடலை
நம்பி வாழ்ந்த மக்கள் கலம் செலுத்துவதில் வல்லவர்களாயிருந்தனர். காவிரிப் பூம்பட்டினமும்,
கொற்கையும், முசிறியும் தலைசிறந்த துறைமுக நகரங்களாக இருந்தன. வணிகக் கப்பல் வழி தவறாமல்
கரைசேர வழிகாட்டியாகக் காணப்பட்ட கலங்கரை விளக்கத்துடன், கப்பல்களை பழுது பார்க்கும்
துறையும் இருந்தன என்பதை,
"கோடுயர் திணிமணல்
அகள் துறைநீரால்
மாட வொள்ளெரி மருங்கறிந்தொய்ய" - (அகம்.255 : 5-6)
என்னும் அகப்பாடல் வரிகளும்,
"வானமூன்றிய மதலை
போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண் பொர நிவந்த வேயாமாடத்து
இரவின் மாட்டிய இலங்கு
அடர் ஞெசிழி
உரவுநீ ரழுவந் தோடுங்கலங்
கரையும்" - (பெரும்.146 - 150)
என்னும் பெரும்பாணாற்றுப்படை
வரிகளும் கலங்கரை விளக்கத்தைக் குறிப்பனவாகும். இப்பாடல் வரிகள் மூலம் கலங்கரை விளக்கு
உயர்ந்து இருந்ததையும், தள வரிசையுடையதாக அமைந்திருந்ததையும், ஏறுதற்கு ஏணி சாத்தப்பட்டு
இருந்ததையும், உச்சியில் இரவுக்காலத்து தீயிட்டமையையும் அறிய முடிகின்றது.
கடலில்
இயங்கும் காற்றைக் கலன் செலுத்தப் பயன்படுத்தும் அறிவினைப் பண்டைத்தமிழர்கள் பெற்றிருந்தனர்
என்று ஔவை ச.துரைசாமிபிள்ளையும் குறிப்பிடுகின்றார்.
"உலகு கிளர்த்தன்ன
உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல்
நீரினிற் போழ
இரவும் எல்லையும் அசைவின்றாகி
விரை செலல் இயற்கை" - (அகம்.255 : 1-4)
என்று மதுரை மருதனிநாகனார்
அகநானூற்றுப் பாடலில் எடுத்துரைப்பது, உலகமே பெயர்ந்து வருவது போன்ற கலம் ஒன்றினை இரவும்
பகலும் ஓய்வின்றி காற்று அசைத்துச் செல்ல நாவாய் ஓட்டுகிறவன் கரை சேர்ந்ததைப் பற்றிய
செய்தியாகும். காற்றின் வரவறிந்து கலம் செலுத்திய திறன் தமிழர்களுக்கு பழங்காலத்திலேயே
இருந்துள்ளது என்பதனை இதன் மூலம் அறிய முடிகின்றது.
கலங்கரை விளக்கைச் சங்க
இலக்கியம் "மாடவொள்ளெரி" (அகம்.255:6) என்று மயிலை. சீனி. வேங்கடசாமி குறிப்பிடுவதையும்
எண்ணுதல் வேண்டும்.
ஆய்வு முடிவுரை
அறிவியல்
கலாச்சாரமும் அதன்வழி கண்டுபிடிப்புகளும் சிறந்த சமூகம் உருவாவதற்குத் துணைபுரிகின்றது.
அறிவியல் என்பது தானே ஒரு கலாச்சார அலையினை உருவாக்கி மிகவும் நம்பகமானதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும்
இருப்பதே ஆகும். இயற்கையையும் அதைப்பற்றிய நிகழ்வுகளையும் ஆய்வதாகும். மனிதனின் மிகப்பெரிய
வெற்றிக்கு அறிவியலின் கண்டுபிடிப்புகளும் ஆக்கப்பூர்வமான பிரம்மாண்டங்களும் சான்றாகின்றன.
புதிய, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் காலந்தோறும் ஏற்று அவற்றை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும்
சமுதாயம் வேகமான முன்னேற்றத்தை அடைகின்றது. சமுதாய முன்னேற்றத்திற்கு அறிவியல் அடிப்படையாகின்றது.
நம் பழந்தமிழரின் வாழ்க்கையில் அறிவியல் சிந்தனைகள் ஆழமாய் இருந்ததைத் தெளிவாக அறியமுடிகின்றது.
அவர்களின் பொதுவான சிந்தனைகள் கூட அறிவியல் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. தமிழர்களின்
அன்றைய அறிவியல் அறிவுதான் 'அறிவியல் வளர்ச்சியின்' தொடக்கமாகும். இன்றைய 'அறிவியல் வளர்ச்சியின் அச்சாணியாக இருப்பது'
அன்றைய 'தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள் தான்' என்பதை இவ்வாய்வின் மூலம் தெள்ளத்தெளிவாக
அறிந்து கொள்ளலாம்.
செ . சத்யா ,
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர் ,
(பதிவு எண் : Ph.D./2018/312/TAM)
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை மற்றும்
அறிவியல் கல்லூரி, மைலம் - 604 304.
திண்டிவனம் வட்டம் - விழுப்பு ரம் மாவட்டம்.
No comments:
Post a Comment