Search This Blog

Saturday, January 25, 2020

"சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு"


சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு
செ. சத்யா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்.
              
முன்னுரை
      
   தாம் வாழும் நாட்டின் அரசியல் ஆட்சிமுறையினைப் பாதுகாக்கும் உயரிய குறிக்கோளுடன் தமது இனிய உயிரையும் பொருட்படுத்தாமல் பகைவரொடு போரிட்டு உயிர்துறந்தவர்களை தெய்வமாக எண்ணி அவர்தம் பெயரையும் பெருமையையும் இக்கல்லில் பொறித்து, அக்கல்லினைத் தெய்வமாக நிறுத்தி வழிபடும் "நடுகல் வழிபாடு" பழம்பெரும் இலக்கண ஆசிரியரான தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. இவ்வழிபாடு சங்கச் செய்யுட்களில் பலவிடங்களில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. அத்தகைய நடுகல் மற்றும் நடுகல் வழிபாடு குறித்த செய்திகளை சங்க இலக்கியத்தின் வழி ஆராய்வது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.

நடுகல் வழிபாடு

                பழந்தமிழர்களின் வழிபாட்டு முறைகளுள் நடுகல்  வழிபாடும் ஒன்றாக இருந்துள்ளது. பிற நாட்டவருடனும், பகைவருடனும் சண்டையிட்டு அப்போரிலே விழுப்புண் பட்டு வீழ்ந்து இறந்து போன வீரர்களைத் தெய்வமாகப் போற்றினர். விழுப்புண் பட்டுப் போர்க்களத்தில் மடிவதை வீரர்கள் பெருமையாகவும் கருதினர். அத்தகைய வீரர்களுக்கு கல் அமைத்து "நடுகல்"; என சிறப்பு செய்து தெய்வமாக வழிபட்டனர்.

               இவ்வாறு இறந்த வீரர்களைத் தெய்வமாகப் போற்றி நடுகல் நட்டு வழிபடும் இத்தகைய மரபைத் இலக்கண நூல்களில் முதன்மையான நூலாக திகழும் தொல்காப்பியத்தில்,

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபிற் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே" 
- (தொல்காப்பியம், பொருள், புறத்திணை - 5)

எனக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். இந்நூற்பாவில்  நடுகல் எடுத்தலின் ஆறு துறைகளாகக் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்து என்பனவற்றைக் குறிப்பிடுகின்றது.

இந்நூற்பாவில் நடுகல் எழுத்தல் மற்றும் வழிபாடாக,

1.       காட்சி                        :         மலைக்கு சென்று நடுகல் நடுவதற்கு ஏற்ற சிறந்த கல்லைத்
தேர்ந்தெடுப்பது.    
         
2. கால்கோள்                :         அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லினை கொண்டு வருவது.
        
3. நீர்ப்படை                    :         கொண்டு வந்த கல்லினை நீரினால்  கழுவிச் சுத்தம் செய்து
நீராட்டுவது.    
  
4. நடுகல்                          :         அக்கல்லினை உரிய இடத்தில் நட்டு, அதில் இறந்த வீரர்களின்
பெயர்களையும், அவர்களின் வீரதீரச்செயல்களையும் தீட்டுதல்.    
              
5. பெரும்படை      :               (நடு) கல்லிற்கு பெரும் சீறும் சிறப்புகளையும்,
மயிற்பீலிகளையும், மாலைகளையும் சூட்டிச் சிறப்பு செய்வது.
     
6. வாழ்த்து                      :               யாருக்காக நடுகல் நடப்பட்டதோ, அந்த வீரனுடைய
திறனையும், புகழையும் வாழ்த்திப் பாடுவது மற்றும் தெய்வமாக போற்றுவது.   
            
என்ற செய்தியினை மேற்கண்ட தொல்காப்பிய நூற்பா எடுத்தியம்புகின்றது.

நடுகல்லில் வீரனைத் தெய்வமாக நிறுத்தி நீராட்டுதலின், அந்நீர், தெய்வத்திருவுருவத்திற்கு ஆட்டிய திருமஞ்சன நீர்போலத் தீர்த்தநீராகக் கருதப்பெற்றது என்பதனை,
"பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன்
கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை
வான் வழங்கு நீரினுந் தூய்தே யதனாற்
கண்ணீ ரருவியுங் கழீஇத்
தெண்ணீ ராடுமின் தீர்த்தமா மதுவே"     -  (தொல்.புறத்.சூ.5)

எனவரும் நச்சினார்க்கினியர் உரை மேற்கோளால் நன்கு விரித்துரைக்கப் பெற்றதனை காணலாம்.

புறப்பொருள் வெண்பாமாலையும் நடுகல் நடுதலை,

"அவன் பெயர்கல் மிசைப் பொறித்துக்
கவின் பெறக் கல் நாட்டின்று"         - புறப்பொருள்.கொளு.12

என எடுத்துரைக்கின்றது.

                நடுகல் வழிபாட்டிற்கும் தமிழ் மக்களிடையே நிலவிய வேறு பல நம்பிக்கைகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை அறியலாம். பொதுவாகவே இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகளால் இறந்தவர்களுக்கும் தமக்கும் தொடர்பு நீங்கவில்லை என்று நம்பினார்கள். பொதுவாக இறந்த மூதாதையரைப் போற்றி அவருக்கு ஆவண செய்யும் முறையிலிருந்தே சிறிது பிற்பட்டக் காலத்தில் போரிலே இறந்த வீரர்களை வணங்கும் நிலை ஏற்பட்டது.

நடுகல்லானது செங்குத்தாக நடப்பட்ட கல்லாக இருந்துள்ளது. அக்கல்லிலே போரில் விழுப்புண் பட்டு வீழ்ந்த வீரனின் உருவம் செதுக்கப்பட்டது. காலப்போக்கிலே வீரனுடைய பெயர் மற்றும் வீழ்ந்துபட்ட சூழ்நிலையையும், அவ்வீரனுடைய வீரதீரச் சாதனைகள் முதலியனவும் அக்கல்லில் பொறிக்கப்ட்டன.

                சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் வெட்சி மற்றும் கரந்தைப் போர்களில் வீரமரணமடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டக் கற்களைக் குறிப்பிடுவதாகவே உள்ளன.

நடுகல் வணக்கம் இருந்ததை புறநானூறும்,

"இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்கல் மாப்புகை மறுகுடன் கமழும்"  புறம். 329

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. இப்பாடலில், சிற்றூரின் பக்கத்தே நடப்பட்ட நடுகல்லிற்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய் விளக்கேற்றிப் படையலைப் படைத்தமையையும், அவ்வாறு நெய் விளக்கேற்றியதால் அவ்விளக்கில் இருந்து உண்டானப் புகையானது மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் எனப் புறநானூறு கூறுகிறது.

தகடூரை தலைநகராக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் அதியமான் அஞ்சி, சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் மீது போர் செய்ததில் அதியமான் அஞ்சிக்கு பலத்த காயமடைந்து, அக்காயத்திற்கு மருந்திடாது போரில் தோற்றதற்காக வருந்திய அதியமான் சில நாட்களில் இறந்து போனான். அதியமானின் உற்ற நண்பரான ஔவையார் மனம் வருந்தி அதியமானுக்கு கையறுநிலையில் பாடல் எழுதியதையும்,

இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ"  - புறம்.232

                அப்பாடலில், நாட்டையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாதவன் அதியமான். அவனுக்காக நடுகல்லை நட்டு, அதற்கு மயிற்பீலியினை சூட்டி அழகு படுத்தி, அதற்கு நாரால் அரிக்கப்பட்ட கள்ளையும், செம்மறி சூட்டிறைச்சியையும் பலியாக அதியமானின் நடுகல்லிற்கு படையலிட்டதையும், அதை அவன் எப்படி ஏற்றுக்கொள்வான்? அவனில்லாமல் காலை, மாலையில்லை. அஞ்சியற்ற என் வாழ்நாளும் இனி மறையட்டும் என்று அழுது அரற்றுகிறார் ஔவையார் எனப் புறநானூற்றுப்பாடல் எடுத்தியம்புகின்றது.

வெட்சியர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்காக நடைபெற்ற கரந்தைப் போரில் உயிர்; நீத்த வீரனுக்கு அவ்வூரில் உள்ளவர்கள் நடுகல்நட்டு அதற்கு மரல்நாரில் தொடுக்கப்பட்டச் சிவந்த பூவையுடையக் கண்ணியையும், அழகிய மயிலின் பீலியையும் சூட்டிப் பெயரும், பீடும் எழுதிப் பெருமை செய்து வழிப்பட்டச் செய்தியினை,

"பரலுடை மருங்கிற பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டியப் பெயர்பொறித்து
இனி நட்டனரே கல்லும்"       –  புறம். 264

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

மேலும், ஆநிரைகளை உடைய கோவலர் உயர்ந்த வேங்கை மரத்தின் நல்ல பூங்கொத்துக்களைப் பனையோலையில் தொடுத்து அதை அழகுற அலங்கரித்து இலைமாலையைச் சூட்டி நடுகல்லை வணங்கியதை,

"ஊர் நனியிகந்த பார்முதிர் பறந்தi
ஓங்கு நிலை வேங்கை யொள்ளிணர் நறுவிப்
போந்தையயந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
மல்லான் கோவலர்  படலைச் சூட்டக்
கல்லாயினை"            –  புறம். 265

என்று பதிவு செய்துள்ளது புறநானூறு.

                தழைத்த மெல்லியக் கூந்தலையும், ஒல்லிய நெற்றியையும் உடைய அரிவையானவள் யான் விருந்தினர் எதிர்வரப் பெறுவேனாகுக என்றும், கணவனும் வேந்தனும் மண்ணாசையால் நாடுகளைக் கைப்பற்றும் போரில் வெற்றி பெறுக என்றும் நாளும் நடுகல்லைக் கைகூப்பித் தொழுதச் செய்தியை,

"ஓலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஓடியாது
விருந்து எதிர் பெறுகதில் யானே என்ஐயும்
………………………… வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே"        புறம். 306

என்று புறநானூற்றுப்பாடலடிகள் மூலம் அறியமுடிகின்றது.

நடுகல் வழிபாடானது ஒரு வகையில் முன்னோர் வழிபாட்டுடன் தொடர்புடையது. பகைவரின் முன்னே அச்சமில்லாமல் சென்று யானைகளைக் கொன்று வீழ்த்திய வீரனின் கல்லை வழிபடுவது போன்றச் சிறப்பு வேறொன்றுமில்லை என்பதை மாங்குடிக் கிழார்,

 "ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே   -  புறம். 335

என்ற புறநானூற்றுப்பாடல் மூலம் அழகுற எடுத்துரைக்கின்றார். ஒத்துப் போகாத பகைவர்களை எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நடப்பட்ட கல்லைத்தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்கு கிடையாது என்று நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது இப்பாடலடிகள்.

                அகநானூற்றிலும் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு நடுகல் நடப்பட்டு அதில் அவ்வீரர்களின் பெயரும் புகழும் எழுதப்பட்டு அக்கல்லினை நட்டு தெய்வமாக வணங்கி அக்கல்லினம் மீது மயிற்பீலியினைச்  சூட்டி, துடியெனும் சிறுபறையினை முழங்கச் செய்து தோப்பி நெல்லாற் செய்த கள்ளினையும், ஆட்டுக் குட்டியினையும் பலியாகக் கொடுத்து, அதிரல் பூக்களைத் தூவி மறவர்கள் வழிபட்டதனை,

"வில்லோர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பிலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவநா றருஞ்சுரம்"         -   அகம். .35

என்ற அகநானூற்றுப்பாடல் வரிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. மேலும், போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு நடுகல் நடப்பட்டு அதில் அவ்வீரர்களின் பெயரும் புகழும் எழுதப்பட்டு மயிற்பீலி சூட்டப்பட்டு வணங்கப்பட்ட செய்தியினை,

"………………….. ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்;தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்"             -   அகம். 131

என்ற அகநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம். மேலும், பட்டினப்பாலையிலும் இதே கருத்தையே பின்பற்றி வருவதனை,

                                                கிடுகுநிரைத் தெஃகூன்றி
                                                நடுகல்லின் அரண்போல"         -   பட்டினப்.78-79

எனவும் வரும் தொடர்களாலும் நன்கு அறியலாம்.

மலைபடுகடாம் எனும் ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் மற்றொரு பாணரை அரசனைக் கண்டு பரிசில் பெற ஆற்றுப்படுத்துவார். அதில் அவ்வழி நெடுக நடுகல் இருக்கும் என்ற அடையாளத்தைக் கூறி அவ்வழியினை கூறுவார் என்பதனை,

"ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணுமிகப் பலவே
இன்புறு முரற்கை நும்பாட்டு விருப்புஆக"  -   மலைபடு. 390

என்ற மலைபடுகடாம் பாடலடியில், பெரும் புகழையுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில், உங்களுடைய பாடலானது இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள, தொன்று தொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, வழியில் தென்படும் நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள் என்று ஆற்றுப்படுத்துவதாக அமைகின்றது மேற்கண்ட பாடலடிகள்.

உண்ணா நோன்பினை மேற்கொண்டு வடக்கிருந்து உயிர்துறந்த கோப்பெருஞ்சோழனுக்கு நடுகல் அமைக்கப் பெற்றிருந்தமையும், அவருடைய ஆருயிர் நண்பராகிய பொத்தியார் நடுகல்லாகியும் தமக்கு இடம்கொடுத்த கோப்பெருஞ்சோழனை நினைத்து வருந்திப்பாடுவதாக,

"நினையாக் கூற்றம் இன்உயிர்  உய்த்தன்று
ஐபதல் ஒக்கல் தழீஇ அதனை
ஐவகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசைசூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே"    -   புறம். 221  
            
என்று புறநானூற்றுப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றது. இப்பாடலில்,  நம்முடைய புரவலன் இறந்ததால், இந்த பெரிய உலகம் வருந்துகின்றது. குறையில்லா நல்லப் புகழையுடையவன் நடுகல்லாகி விட்டானே என வருந்துகின்றார் பொத்தியார்.

                மேலும், ஐங்குநூற்றிலும் ஓதலாந்தையார் அவர்கள் நடுகல் பற்றிய குறிப்பினை எடுத்தாண்டுள்ளார்.

"விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை"         -     ஐங்குறுநூறு - 352

என்ற ஐங்குறுநூறு பாடலில், யானையின் தும்பிக்கையில் அமையப்பெற்றுள்ள சொர சொரப்பை எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நடுகல்லோடு ஒப்பிடுகின்றார் ஓதலாந்தையார் அவர்கள்.
                காட்டில் வாழும் யானையானது அதன் வழியிடையே பெரியதாக நடப்பெற்ற நடுகல்லினை ஆளென மயங்கித் தன் கால்களால் உதைத்து அதன் நகங்கள் சிதையுற்ற செய்தியினை,
"அத்த நடுகல் ஆளென வுதைத்த
கான யானை கதுவாய் வள்ளுகிர்
இரும்பனை யிதக்கையின் ஒடியும்"           -   அகம். 365

என்ற அகநானூற்றுப்பாடல் வரிகள் அழகாக எடுத்துரைக்கின்றது.

                இவ்வாறு இறந்த வீரர்களைத் தெய்வமாகக் குறித்த நடுகற்கள் போர்நிகழ்ந்த இடங்களிலும், சிற்றூர்ப் பக்கங்களிலும், காடுகளிலும் பலரும் சென்று வரக்கூடிய சிறுவழிகளிலும், பெருவழிகளிலும் வழிச்செல்வோர்களுக்கு நிழல்தரும் நிலையில் நெடுங்கல்லாக நடப்பட்டது என்பதனை,

"விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
அழுத்துடை நடுகல்"               -   (ஐங்.352)
எனவும்,
"எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை"               -   (அகம்.53)
எனவும்,
"நடுகற் பிறங்கிய உவலிடு பறந்தலை"   -   (புறம்.314)
எனவும்,
"பெயரும் பீடும் எழுதி யதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூ ன்றுபலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுந கானம்"           -   (அகம்.131)

என்று வரும் சங்கச் செய்யுட் பாடலடிகளால் நன்கு அறிய அறியலாம்.

வீரர்களின் பெயரும் பெருமையும் பொறித்துத் தெய்வமாக நடப்பட்ட நடுகல்லின் பெருமையை உணராத ஆறலைகள்வர் தம்முடைய அம்புகளை அந்நடுகல்லின் மேல் வைத்துத் தீட்டுவதால் அக்கல்லும் தேய்ந்து அதன்மேல் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் தேய்ந்து அழிந்து விடுவதுண்டு. அவ்வழியாகச் செல்வோர் நடுகல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைப் படித்து நடுகல்லாகிய, வீரனது பெருமைய அறிந்து கொள்ள முயல்வார்கள். அங்கு அமைதியாக நின்ற படித்துணர விரும்புவோர் தாம் செல்லும் சுரத்தில் ஆறலைகள்வரால் தமக்கு நேரும் துன்பத்தையெண்ணிக் நடுகல்லெழுத்தினைப் படித்துணரும் தம் முயற்சியைக் கைவிட்டு விரைந்து செல்லுதலும் உண்டு. இச்செய்தியினை,

"கடுங்கண் மறவர்  பகழி மாய்ந் தென
மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகற்
பெயர் பயம் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்
……………………………………….
வெருவரு கானம்"                    -               (அகம்.297)

என்ற அகநானூற்றுப்பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.

                மேலும், நடுகல்லாகிய வீரர்களின் மனைவியர் தம் கணவரது பிரிவைத் தாங்காமல் நெஞ்சம் கலங்கியும், புலம்பியும், தம் கூந்தலைக் களைந்து அணிகலன்களைக் கழித்துத் தம் கணவரைத் தெய்வமாகக் கொண்டு கைம்மை நோம்பு நோற்பர் என்பதை,

"நிரையிவட்டந்து நடுகல்லாகிய
வெல்வேல் விடலையின்மையிற் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போல"            -         (புறம்.261)

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து தம்புகழ் நிறுவி உயிர் துறந்த சான்றோராகிய ஆடவர்க்குப் போலவே கற்புக்கடம் பூண்டு உயிர்துறந்த பத்தினிப் பெண்ணாகிய மகளிர்க்கும் நடுகல் நிறுத்தி வழிபடும் மரபு பண்டைக் காலத்தில் நிலைபெற்று இருக்க வேண்டும் என்று கருத வேண்டியுள்ளது. ஏனெனில்,

சேரமன்னனாகிய செங்குட்டுவன் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகிக்கு இமயலையில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லினை கங்கையாற்றில் நீராட்டி அக்கல்லில் சிலை (படிமம்); அமைத்து வாஞ்சி நகரத்தில் (மதுரையில்) பத்தினிக் கோட்டம் அமைத்து கடவுள் மங்கலம் செய்துள்ளமையை, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் வஞ்சிக் காண்டத்தில் நடுகற் காதையில் அழகுற விரித்துரைக்கப் பெற்றுள்ளமையை காணலாம்.

"பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து"       - சிலம்பு.நடுகற் காதை- 225

"இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்  "   - சிலம்பு.நடுகற் காதை- 230

"புப்பலி செய்து காப்பக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும்,  நாடொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவரேறென்".        - சிலம்பு. நடுகற் காதை- 235

இப்பாடலில், பத்தினிப் பெண்ணான கண்ணகிக்கு கோயில் கட்டி அதில் கண்ணகி சிலையினை நிறுவி அதற்கு பொன்னணி பூட்டி, பூக்களைத் தூவி வழிபாடு செய்து, வேள்விகளும், விழாக்களும் நாள்தோறும் நடைபெற ஆவண செய்ததுடன் நாள்தோறும் "தெய்வ வழிபாடு தொடர்ந்து செய்வீராக" என்று செங்குட்டுவன் அறிவித்துள்ளதை சிலப்பதிகாரம் நடுகற் காதை மூலம் அறிந்து கொள்ளலாம். இச்செய்தியானது வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தோர் உலக மக்களால் கல்வடிவில் தெய்வமாக நிறுத்தி வழிபடப் பெறும் உண்மையினை தெளிவாக எடுத்துரைப்பதை அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை

v  போரில் பகைவருடன் சண்டையிட்டு விழுப்புண்பட்டு இறந்த வீரர்களுக்கு கல் அமைத்து நடுகல் எனச் சிறப்புச் செய்து தெய்வமாகப் போற்றி வழிபடும் மரபு தொல்காப்பியர் காலத்திலேயே இருந்து வந்துள்ளதை அறிய முடிகின்றது.

v  சங்க இலக்கிய பதிவுகளில் காணப்படும் நடுகல் வழிபாடானது நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றன. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்த பின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் தமிழர்களிடையே இருந்திருக்கின்றன.

v  சங்க இலக்கியத்தில் அதியமான், கோப்பெருஞ்சோழன் மற்றும் சோழன் ஆகிய மன்னர்களுக்கு நடுகல் இருந்ததாக அறிய முடிகின்றது.

v  அதே போல் ஆண்களுக்கு மட்டுமே நடுகல்  நடப்பட்டதாக புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை  எடுத்துரைக்கின்றன.

v  சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டு கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்த நிகழ்வினை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. கண்ணகி தவிர்த்த பிறபெண்களுக்கு நடுகல் நடப்பட்டதா என்பதனை அறிய முடியவில்லை.

v  தமிழ் மொழி ஒரு சமயசார்பற்ற மொழி என கால்டுவெல் என்னும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டுள்ளதையும், அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதனை நிரூபித்து உள்ளது. பழங்காலத் தமிழர் பண்பாடு முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு என்பதை சார்ந்தாக இருந்துள்ளதை இவ்வாய்வு மூலம் அறிய முடிகின்றது.

பார்வை நூல்கள்
  • வெள்ளைவாரணனார், சைவ சித்தாந்த சாத்திர வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, முதற்பதிப்பு 2002, தஞ்சாவூர்.
  • கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், பாரி நிலையம், சென்னை.
  • பொ.வே. சோமசுந்தரனார், அகநானூறு தமிழ் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
  • சென்னை.
  • ஓளவை சு. துரைசாமிப் பிள்ளை, புறநானூறு விளக்கவுரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்சென்னை.
  • தினமணி நாளிதழ் ஜனவரி 14, 2019 – திருப்பத்தூர் பதிப்பு (ஜவ்வாது மலையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் படம்)


செ . சத்யா ,
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர் ,  
(பதிவு எண் : Ph.D./2019/312/TAM)
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்கலை  மற்றும் 
அறிவியல் கல்லூரிமைலம் - 604 304. 
திண்டிவனம் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.