தொல்காப்பியர் காட்டும் காலம்...
முன்னுரை:-
தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எள்ளிலிருந்து
எண்ணெய் எடுப்பது போல இலக்கியங்களினின்றும் தோன்றுவதே இலக்கணம் ஆகும்.
தொல்காப்பியர் தம் நு‘லில் ஏறத்தாழ 260 இடங்களில் தமக்கு முன்பிருந்த
அல்லது தம் காலத்தில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்கள் பலரைக்
குறிப்பிட்டுள்ளார் என்கிறார். எம்.ஆர். அடைக்கலசாமி (1991-27)
தொல்காப்பியர் காட்டும் காலம் என்னும் இவ்வாய்வு தொல்காப்பியர் கூறும்
கருத்து, உரைக்கருத்து, பிற கருத்து என்று பகுத்து ஆய்ந்து முடிவு கூறுவதாக
அமைகிறது.
தொல்காப்பியர் கூறும் காலம் பற்றிய கருத்து
தொல்காப்பியர் பெயர்ச்சொல்லின் இயல்பை விளக்குமிடத்து
“பெயர்நிலைக் கிழவி காலந் தோன்றா
தொழில் நிலையொட்டும் ஒன்றங் கடையே”
- தொல். சொல்.70
என்கிறார். வினைச்சொல்லின் பொது இயல்பைக் கூறுமிடத்து அது காலம் ஏற்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனை
“வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் “
-தொல். சொல். 198
என்னும் நூற்பாவால் அறியலாம். அவர் பெயர்ச்சொல் காலம் காட்டாது.
வினைச்சொல் காலத்தை உணர்த்தும் தன்மை உடையது என்ற கருத்தை உடையவர் என
இதனால் அறியலாம்.
காலம் எத்தனை?
தொல்காப்பியர் காலத்தை மூன்று என்று கூறுவதை
1. “காலந்தாமே மூன்றென மொழிப”
-தொல்.சொல்.199
2. ” இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக்காலமுங் குறிப்பெடுங் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே “
-தொல். சொல். 200
3. ” இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச்
சிறப்புடை மரபின் அம்முக்காலமும் “
-தொல். சொல். 427
என்னும் நூற்பாக்களால் அறியலாம். மேலும்
“தம்மேல் செஞ்சொல் வரூஉங காலை
நிகழுங் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலை யான”
-தொல். சொல். 437
என்பதால் மூன்று காலங்களையும் இறந்த காலம், நிகழுங்காலம், வாராக்காலம் என்று வகைப்படுத்தி உள்ளார் எனவும் அறியலாம்.
கால இடைநிலை:-
தொல்காப்பியர் காலம் என்ற கலைச் சொல்லைப் பயன்படுத்தி இருப்பினும் அதை உணர்த்தும் இடைநிலை பற்றியோ, அவை எவை என்றோ குறிப்பிடவில்லை.
உரையாசிரியர் கருத்து:-
தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணரும் (தொல்.சொல். 197)
சேனாவரையரும் (தொல். சொல். 200) நச்சினார்க்கினியரும் (தொல். சொல். 202)
காலத்தின் பெயர்களைக் கூறும் நூற்பாவின் உரையில் ” இறப்பாவது தொழிலது.
கழிவு: நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலைமை :
எதிர்வாவது தொழிற் பிறவாமை ” என விளக்கம் நல்கி உள்ளனர். சேனாவரையர்,
நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் (தொல். சொல். 194) மூவரும் ”
தொழிலாவது பொருளினது புடைப்பெயர்ச்சி யாகலின் அஃதொருகண நிற்பதல்லது
இரண்டுகண நில்லாமையின் நிகழ்ச்சி இல்லை. ஆயினும் உண்டல், தின்றல் எனப்
பஃறொழிற்றொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின் உண்ணா நின்றான், வாரா நின்றான் என
நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று என்பர். உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டாக
உண்டான், உண்ணா நின்றான், உண்பான் ஆகியவற்றைக் கூறுவதால் ட், ஆநின்று, ப்
என்ற மூன்று கால இடைநிலைகளைக் கருத்தில் கொண்டுள்ளனர் என அறிய முடிகிறது.
மேலும் தொல்காப்பியர் கூறும்
“தன்மேல் செஞ்சொல் வரூஉங்காலை
நிகழுங் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலை யான”
- தொல். சொல். 437
என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டுகளாக கூழுண்ணா நின்றான்
சோறுமுண்பான் எனவும் கூழுண்டான் சோறுமுண்பான் எனவும் கூறப்பட்டுள்ளது
இக்கருத்தையே வலியுத்துகிறது.
பிற கருத்து:-
1. இறந்த காலம்:-
தெ. பொ. மீனாட்சி சுந்தரன் இறந்த காலத்தை -த்-. -இன்- என்ற
இடைநிலைகளும், பகுதியின் இரண்டாம் அசை இரட்டித்தும் உணர்த்தும் என்பார்.
அவர் தகரமே புணர்ச்சியால் டகர, றகரமாக மாறுகிறது என்கிறார். (1965:204)
ச. அகத்தியலிங்கமும், எஸ்.வி. சண்முகமும் கல்வெட்டு மொழியில் -த்-,
-ச்ச்-, -ஞ்ச்-, -இன்-, -இ-, -ன்-, -ய-, ஆகியவை இறந்த காலத்தில் வந்துள்ளன
என்று குறிப்பிடுகின்றனர். (1970:57-62).
மோ. இசரயேல் -த்-, -ட்-, -ற்-, -க்-, -ந்த்-, -இ-, -இன்-, என்பவை
தொல்காப்பியத்தில் பயின்ற வரும் இறந்த கால இடைநிலைகள் என்கிறார்.
(1973:233-235)
தகரமே -ட்-ற்-, -ந்த்-, -த்த்-, -க்- என மாறுகிறது. உண்+த்+ஆன் – உண்டான்
செல்+த்+ஆன் – சென்றான்
வா+த்த்+ஆன் – வந்தான்
படி+த்த்+ஆன் – படித்தான்
நகு+த்+ஆன் – நக்கான்
அண்ணவினமாதல் அடிப்படையில் -த்த் , -ந்த்- என்பவை -ச்ச்-, -ஞ்ச்- என
மாறுதல் தமிழில் இயற்கை. எனவே தொல்காப்பியர் காலத்தில் -த்-, -இன்- என்னும்
இரண்டு இறந்தகால இடைநிலைகளாக இருந்தன என அறியலாம்.
2.நிகழ்காலம்:-
உரையாசிரியர்கள் ஆநின்று என்பதனை நிகழ்கால இடைநிலையாகச் சுட்டுகின்றனர்.
கால்டுவெல் கல்வெட்டு மொழியில் நிகழ்காலம் பயன்படுவதைப் பார்க்க
முடியவில்லை என்கிறார் (1875:383)
பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரி நிகழ்காலம்
என்பது இறப்பல் காலத்திலிருந்து தோன்றியதே என்கிறார் (1934:169)
யூலிபிளாக்கு திராவிட மொழிகளில் இறப்பு, எதிர்கால இடைநிலைகளே தெளிவாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். (1945:68)
தெ.பெ. மீனாட்சி சுந்தரன் சங்ககாலத்திற்கும் பிறகு தமிழின் முக்கிய
வளர்ச்சி நிகழ்காலங்காட்டாத் தனி இடைநிலைகளை இறப்பல் காலத்திலிருந்து
பெற்றமையே என்று குறிப்பிட்டுள்ளார். (1965:140)
பி.எஸ்.சுப்பிரமணியமும் மூலத்திராவிட மொழியில் இறப்பு, இறப்பல் கால
வேறுபாடே இருந்தது என்றும், அதன் பின்னரே இறப்பல் காலத்திலிருந்து
நிகழ்காலம், எதிர்காலம் எனத் தனித்தனி காலங்கள் மொழியில் வளர்ந்தன என்றும்
குறிப்பிடுகிறார். (1971:329)
சங்க இலக்கிய மொழியிலும், பதனெண் கீழ்கணக்கு மொழிவியிலும் இருகால வேறுபாடே காண முடிகிறது.
கால்டுவெல் ஆநின்று என்பது கூட்டுவடிவம் என்றும், அது கவிஞர்களால்
குறைந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். ஆகி என்பது ஆயி
என்றாகிப் பின் ஆ என்றானது என்கிறார். (1875:382-383)
சங்க இலக்கிய மொழியிலும் பதினெண் கீழ்கணக்கு மொழியிலும் நிகழ்காலம்
உணர்த்த -கின்ற்- என்ற வடிவம் குறைந்த அளவே வந்துள்ளது. மேலும்
தெ.பொ.மீனாட்சி சுந்தரன் கூறுவது போல செய்யா என்பதனுடன் இரு அல்லது கிட
அல்லது நில் என்னும் துணைவினை சேர்ந்து நிகழ்காலம் உணர்த்தியுள்ளது.
வீரசோழிய உரையும் இக்கருத்தையே வலியுருத்துகிறது. (நூ.73-78)
தொல்காப்பியம் துணைவினைப்பற்றித் தனியே கூறாததால் துனைவினைகளில் நிகழ்காலம் உணர்த்தும் தன்மையையும் கூறவில்லை.
3. எதிர்காலம்:-
தொல்காப்பிய உரையாசிரியர் வாயிலாக -ப்- எதிர்காலம் உணர்த்தியது என அறியலாம்.
யூலிபிளாக்கு -ப்-, -ப்ப்-, -வ்- என்ற இடைநிலைகளே எதிர்காலம் காட்டின
என்கிறார் (1954:75).
தெ.பொ.மீனாட்சி சுந்தரன் எதிர்காலத்தினைக் குறிக்க
பகரம் மிகுதியாக வருகிறது என்கிறார் (1965:33).
ச.அகத்தியலிங்கமும், எஸ்.வி.சண்முகமும் கல்வெட்டு மொழியில் -ப்-, -உம்-
எதிர்கால இடைநிலைகளாக வந்துள்ளன என்பர் (1970:64).
மோ.இசரேல்
தொல்காப்பியத்தில் எதிர்கால இடைநிலைகளாக -ப்-, -ப்ப்-, -வ்- என்னும்
மூன்றும் வந்துள்ளன என்றும் வகரம் வினைமுற்றாகப் பயின்று வராமல்
வினையாலணையும் பெயராக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்(1973:236).
1.ப் – மொழிப (தொல். எழு. 105)
ப்ப் – கிளப்ப (தொல். சொல். 118)
வ் – செய்வது (தொல். சொல். 112)
ஆ.வேலுப்பிள்ளை -வ்-, -ப்- இரண்டும் எதிர்கால இடைநிலைகள் என்றும் இவை
செயப்படுபொருள் குன்றிய வினைகளில் வருமென்றும் கூறுகிறார். -ப்-
செயப்படுபொருள் குன்ரா வினைகளாக அல்லது பிறவினைகளாக வரும் என்பர்
(1979:206).
எனவே -ப்-, -வ்- இரண்டும் எதிர்கால இடைநிலைகளாக தொல்காப்பியர் காலத்தில் இருந்ததை அறியலாம்.
********************************************************************************
மரபியல் காட்டும் நூல்மரபு:-
தமிழ் மொழி வரலாற்றில் தொல்காப்பியம் இன்று நமக்கு கிடைத்துள்ள
நூல்களுள் காலத்தால் பழமையானதும், முதன்மைச் சிறப்புடையதும் ஆகும்.
இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடையது. இதில்
பொருளதிகாரம் தமிழர் தம் வாழ்வியல் நிலைகளை மரபியலோடு ஒட்டி அமைந்துள்ளது.
இலக்கிய மரபு:-
மரபின் அடிப்படை பழமை பாராட்டுவது என்று கருதப்படுகிறது. எனவே
இலக்கியமும் மரபுகளை ஒட்டி நிலைத்திருக்கும் ஒரு கலை எனக்கூறலாம். இலக்கிய
மரபு பற்றி
நாடக வழக்கினும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கண மரபு:-
ஒரு மொழி பற்றிய நூல் அம்மொழியின் இலக்கண அமைப்பைப் பற்றி பேசுவதுடன்
அம்மரபுகளைப் பற்றியும் மொழி பேசும் இனத்தாரின் பிற பண்பாட்டு கூறுகளைப்
பற்றியும் பேசுவது பொருத்தமானதாகும். இதனை உணர்ந்த தொல்காப்பியர் எழுத்து
சொல்லுடன் பொருளையும் சேர்த்திருப்பது இலக்கணமரபின் தனிச்சிறப்பாகும்.
தொல்காப்பிய மரபுகள்:
தமிழில் மிகத் தொன்மை வாய்ந்த இலக்கண நூல் தொல்காப்பியமாகும்.
தொல்காப்பியர் தொல்காப்பியத்தை எழுத்து (1) என மங்கலச் சொல்லால் தொடங்கி
நூல் (1610) என மங்கலச் சொல்லால் முடிகின்றார். பிற்காலத்துப் பாட்டியல்
நூல்களின் ஆணைக்கு ஏற்பத் தொடக்கமும் முடிவும் இருந்ததால்
தொல்காப்பியத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து இத்தகைய நூல் மரபு
கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.
நூல்:-
நுவலப் பெறுவது நூல் என்று சான்றோர்கள் குறிப்பிடுவர் புலவன் தனது
உணர்வு மாட்சியிற் பிண்டம், படலம் ஒத்துச் சூத்திரம் என்னம் யாப்பு
நடைப்படக்கோத்தல் ஆயிற்று. நூற்கப்படுதலின் நூல் எனப்பட்டது. நூல் என்ற
சொல்லுக்கு இறையனார் களவியல் பொருள் கூறுங்கால்,
தந்திரமென்னும் வடமொழி நூலென்று
வழங்குவது தமழ் வழக்கெனக் கொள்க
என்ற விளக்கம் அளிக்கின்றது. நம்பி ஆசிரியரும் இக்கருத்திற்கு
உடன்படுகிறார். நூல் என்பது இடுகுறி பெயர் அல்ல காரணப்பெயர் (நுவலப்படும்
காரணத்தினால் நூல்) ஆகும். நூல் யாத்தற்குரிய பா நூற்பா என்பது போல,
நுவலப்படும் இலக்கணம் நூல் எனப்படும் எனலாம்.
நூலின் இலக்கணம்:-
உரை எழுபவர் நிலையில் நூற்பாக்கள் எழுதல் வேண்டும். சுருக்கமாக
உரையெழுதிய காண்டிகையும் பத்து வகைக் குற்றங்கள் இன்றி நுண் பொருளாகிய
முப்பத்திரண்டு வகை உத்தியோடு பொருந்தி வந்தால் நூல் என்று கூறுவர்.
ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக்கிளத்த வகையதாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத்திருவகை உத்தியொடு புணரின்
நூலென மொழிப நநுணங்கு மொழிப்புலவர் ( தொல். பொ. மரபு – 97)
என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.
பாயிரம்:-
நூலுக்கு இன்றியமையாத சிறப்பினை கொடுப்பது பாயிரமாகும்.
ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே (இலக்கண விளக்கம்)
என்று குறிப்பிடும் இத்துணைச் சிறப்பினையுடைய நூற்குப் பாயிரம் வரையும்
மரபு தொல்காப்பியரால் கையாளப் பெறவில்லை. தொல்காப்பியர் நூலின் இலக்கணம்
கூறும் போது பாயிரத்தின் இன்றிமையாமையை எடுத்துரைக்கவில்லை. பாயிரம் என்ற
சொல்லும் தொல்காப்பியரால் கையாளப் பெறவில்லை.
நூல் வகைப்பாடு:-
தொல்காப்பியல் நூலினை இரண்டு வகையாகப் பிரிப்பர்.
இதனை,
மரபு நிலை திரியா மாட்சிய வாகி
யுரை படு நூலா மிருவகை யியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின்
என்ற நூற்பா விளக்கியுள்ளது. மரவு நிலை திரியாமல் அனைவராலும் உரைக்கப்படும் நூல் முதல் நூல், வழி நூல் என இருவகைப்படும்.
இலக்கண நூல் மரபுதிரியின் பொருளுணர்வு பிரிதாகுமாதலின் மரபுநிலைதிரியா
மரபு பற்றிச் செய்யுங்காலும் சிறந்தது விளக்கி எதிரது போற்றி ஆக்கமுறச்
செய்தல் வேண்டுமென்பதன் மாட்சியவாகி என்றும் கூறியுள்ளது.
தொல்காப்பியத்திற்குப் பின்னர் வந்த நன்னூல் போன்ற இலக்கண நூல்கள், அவை
முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்னும் மூன்று வகையாக பகுத்துள்ளது. ஆனால்
தொல்காப்பியர் சார்புநூல் பற்றி குறிப்பிடவில்லை
.
முதல்நூல்:-
இறைவன் சொன்னது முதல் நூல் எனப்படும். இதனை தொல்காப்பியர்,
”வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூலாகும்”
என்று குறிப்பிட்டுள்ளார். இதனை நன்னூலாரும் குறிப்பிடுகின்றார். முனைவன் என்ற சொல் முன்னோர் என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம்.
இன்று வழக்கில் முன்னோர்களைக் கடவுளாக நினைத்து வழிபடுதலைக்காணலாம். இதன்
காரணமாக இறைவனால் செய்யப் பெற்றது முதல்நூல் என்ற கருத்து நிலவி வருகிறது.
தொல்காப்பியர் தன்னூலை முதல் நூல் என்று குறிப்பிடவில்லை. அவர்தம் நூல்
என்மனார் என்ப என்று குறிப்பிடுவதால் முதல் நூலாக தொல்காப்பியம்
இருந்திராது. எனினும், தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள் யாதும் காண
கிடைக்காமையால் இது முதல் நூல் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
வழிநூல்:-
வழிநூல் என்பது முதல் நூலைத் தழுவி சில வேறுபாடுகளை அமைத்து கூறுதலாகும். இதனை தொல்காப்பியர்,
வழியெனப்படுவது அதன் வழித்தாகும் (தொ. பொ.ம.94) என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னோர் நூலில் உள்ளவற்றை தொகுத்தும் விரித்தும் அவ்விரு நெறியையும்
அமையக்கூறலும் செந்தமிழ் நூல்களின் திறனறிந்து பயன் கொள்ள முதனூலை அவர்தம்
மொழியின் பெயர்த்து கூறுவது வழிநூலின் வகை மரபின்வாகும்.
சூத்திரம்:-
சூத்திரம் என்பது சுருங்கக் கூறி விளங்கவைப்பதாகும். நூலுக்குரிய
இலக்கணமாக அடுத்துக் கூறப்பெறுவது சூத்திரமாகும். சூத்திர வகையாதிக்
குற்றமின்றி உத்தியோடு புணரின் நூல் என மொழிப தொல்காப்பியர்.
இதனை,
சூத்திரந்தானே ஆடிநிழலின் அறியத்தோன்றி
நாடுதலின்றிப் பொருள் தனி விளங்க
யாப்பினும் போன்ற யாத்தமைப்பதுவே
எனசெய்யுளியலுள் கூறிய இலக்கண நெறியும் (தொல். பொ. மரபு.99) எனப் பின்னர் ஓதப் பெறும்.
நூலுக்குரிய குற்றம், அழகு:-
ஓதப் பெற்ற மரபியல்களின்றி வலிய எல்லாம் குற்றமென்பது தானே
பெறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் இன்ன காரணத்தால் என விளக்கிக் கொள்ளுதற்
பொருட்டும் வழிநூல் செய்வார். அவ்வகைக் குற்றங்கள் செய்யாமற் இருத்தற்
பொருட்டும் இங்ஙனம் வகுத்துக் கூறியுள்ளார். அத்துடன் குற்றங்களுக்கு
மறுமொழியாக எதிமறையான பண்புகளை உணருமிடத்து நூலுக்குரிய அழகாக
விவரித்துள்ளார்.
முடிவுரை:-
தொல்காப்பியத்தில் நூல் மரபுகளாக நூலின் வகை, நூல் அமைக்கும் முறை, நூலின் குற்றம், நூலின் அழகு ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம் தமிழ்க்கல்லூரி,
மயிலம் - 604 304.விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.
No comments:
Post a Comment