பழந்தமிழர் பண்பாட்டில் வரவேற்றல் முறை...
தமிழர் பண்பாட்டில் வரவேற்றல்
குறிப்பிடத்தக்க பண்பாடாகும். இப்பண்பாட்டை புறப்பாடல் வழி இயம்புவதே இந்த பதிவின் நோக்கமாகிறது.
“அன்புள்ளவரைக் கண்டால் அகமகிழ்ச்சியடைகிறோம்.” புன்சிரிப்புடன் புகழ்மொழி
கூறுகிறோம். பெரியோராயிருந்தால் கைகுவித்துக் கும்பிட்டு வரவேற்கிறோம். வரவேற்பதிலே
இன்றும் கூடப் பலவகை உண்டு.
கை கும்பிட்டு வரவேற்பது.
கை கொடுத்து சமத்துவமாக வரவேற்பது. ஒருவரை ஒருவர் கட்டித்
தழுவிக் கொண்டு வரவேற்பது, இப்படிப் பல வகையில் வரவேற்கிறோம்.
இவற்றுள் கை குலுக்கி வரவேற்பது
தமிழர் நாகரிகம் அன்று. இந்த முறை மேல்
நாட்டாரிடம் நாம்
கற்றுக் கொண்டது என்போர்
உண்டு. உயர்ந்தவர்களை பெரியோர்களைக் கண்டால் நிலத்தில் வீழ்ந்து
வணங்கி வரவேற்கவேண்டும். சமமுள்ளவரைக் கண்டால் கும்பிட்டு வரவேற்கவேண்டும்.
தன்னிலும் தாழ்ந்தவரை, இளையவரைக் கண்டால் தழுவிக்
கொண்டு வரவேற்கவேண்டும். இதுவே
தமிழரின் வரவேற்பு முறை இந்திய நாட்டு
நாகரிகம் என்றும் கூறுகின்றனர்.
இவை தமிழர் நாகரிகமாக
இருக்கட்டும். இந்திய நாகரிகமாகவும் இருக்கட்டும்.
இந்த நாகரிகத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சியில்
இறங்கவேண்டாம்.
கை கொடுத்து வரவேற்பது மேல்
நாட்டு நாகரிகமா? அந்நியர்
நமக்குக் கற்றுத் தந்த நாகரிகமா?
தமிழர் நாகரிகம் அல்லவா? என்பதுதான்
நம் கேள்வி என்று தம்
பண்பாடு சார்ந்த வினாவை “புறநானூறு
தமிழ் நாகரிகம்“ என்னும் நூலில் முன்
வைக்கிறார் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். இதற்கு
அவர் சான்று கூறும் புறப்பாடலில்
இந்தப் பண்பாடு எந்த அளவுக்கு
எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.
கபிலர் ஒருநாள் கடுங்கோ
வாழியாதனைச் சந்திக்கச் சென்றார் வேந்தனும் எழுந்து வந்து கைகொடுத்து
வரவேற்றான். கபிலரின் கைகளைத் தொட்டபோது வேந்தனுக்கு
மனதில் ஒரு கேள்வி தோன்றியது..
“நம் கைகளைவிட புலவரின்
கைகளில் மிகவும் மென்மையாக இருக்கிறதே?“
என்பதுதான் அந்தக் கேள்வி. அதை
வாய் திறந்து புலவரிடமே கேட்டுவிட்டான்
வேந்தன்..
அதற்குக்
கபிலர் பதிலளிப்பதாகவே இப்பாடல்அமைகிறது..
கபிலர்
கடுங்கோ வாழியாதனைப் பார்த்து ...
“அரசே..
நீ உழைப்பாளி”
யானையை
அடக்கியாளும் இரும்பாலான
அங்குசம்!
குதிரையின்
கடிவாளம்!
அம்பு,
வில் மற்றும் ஆயுதங்கள்!
ஆகியவற்றையெல்லாம்
பிடித்துக் கொண்டே இருப்பதல்லவா உன்
கைகள் வன்மையாக இருக்கின்றன!!
ஆனால் என் கையோ
சுவையான ஊன் கலந்த சோற்றை
உண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பதல்லவா என்
வேலை… அதனால் தான் என்
கைகள் மென்மையாக இருக்கின்றன என்கிறார்.
பாடல் இதோ..
கடுங்கண்ண
கொல்களிற்றாற்
காப்புடைய
வெழுமுருக்கிப்
பொன்னியற்
புனைதோட்டியான்
முன்புதுரந்து
சமந்தாங்கவும்
5. பாருடைத்த குண்டகழி
நீரழுவ
நிவப்புக் குறித்து
நிமிர்பரிய
மாதாங்கவும்
ஆவஞ்
சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ
நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10. பரிசிலர்க்
கருங்கல நல்கவுங் குரிசில்
வலிய
வாகுநின் றாடோய் தடக்கை
புலவு
நாற்றத்தை பைந்தடி
பூநாற்
றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ
றுண்டு வருந்துதொழி லல்லது
15.பிறிதுதொழி
லறியா வாகலி னன்றும்
மெல்லிய
பெரும தாமே நல்லவர்க்
காரணங்
காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத்
தன்ன நோன்மைச்
செருமிகு
சேஎய்நிற் பாடுநர் கையே.
புறநானூறு -14
கபிலர்
வேந்தனைப் பார்த்து..
மன்னா
நீயோ..
வலிமைகொண்ட
யானைகளைக் கொண்டு எதிரிகளின் காவல்
மிக்க கோட்டைகளை அழிப்பாய்!
அக்கோட்டையின்
உள்ளே தாழிடப்பட்ட எழு என்னும் கணைய
மரத்தைச் சிதைப்பாய்!
இரும்பாலான
அங்குசத்தைத் தாங்கி யானைகளை போர்க்களத்தே
செலுத்துவாய்!
எத்தகைய
போரானாலும் அச்சமின்றிச் சென்று தாங்கி நிற்பாய்!
குந்தாலியால்
கற்பாறைகள் உடைக்கப்பட்டு அவ்விடத்தே பெரிய குழிகளாகவும் அதில்
நீர் நிறைந்தும் காணப்படும். ஆழமான அக்குழிகளில் குதிரைகள்
வீழ்ந்துவிடாமல் குதிரைகளைக் கடிவாளத்தாலே கட்டுப்படுத்துவாய்!
அம்புசுமந்த
உன் முதுகிலிருந்து அம்பெடுத்து வில்லின் நாணை இழுத்துப் பிடித்து
எதிரிகளின் மீது அம்புகளை எய்வாய்!
உன்னை
நாடிப் பரிசில் வேண்டி வருவோர்க்கெல்லாம்
இல்லை என்றுரைக்காமல் பொன்னும் பொருளும் அணிகலனும் வாரி வாரி வழங்கிக்
கொண்டே இருப்பாய்.. இவ்வாறு உன் கைகள்
ஓயாது பணியாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதனால்
உன் கைகள் வலிமையானதாகக் காட்சியளிக்கின்றன.
என்
போன்ற புலவர்களின் கை உன் கைக்கு
நேர் எதிரானது. எங்களுக்கு என்ன பெரிய வேலை
இருக்கிறது..
உன்
போன்ற வள்ளல்கள் தரும்
ஊன் கலந்த உணவை உண்டுவிட்டு,
அது
செறிக்கவில்லையே என வருந்தி வயிறு
தடவிக் கொண்டிருப்பது மட்டுமல்லவா
எங்கள் வேலை என்கிறார்.
பாடல்
வழியே....
1.விருந்தினரைக்
கை கொடுத்து வரவேற்கும் தமிழர் பண்பாடு அறிவுறுத்தப்படுகிறது.
2. கடுங்கோவின்
வீரம், கொடை ஆகியன நயமாகப்
புலப்படுத்தப்படுகின்றன.
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம் தமிழ்க்கல்லூரி,
மயிலம் - 604 304.விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.
No comments:
Post a Comment