Search This Blog

Thursday, November 29, 2012

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள்...

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...
1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் நீர் மேலாண்மை...

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். 

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28)


இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' (புறம்-18,28-30)


என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ'' (புறம்.118)


எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்'' (83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

"பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே'' (25)


என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை' என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்'' (1384-87)


என்கிறார். "சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு' என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு' அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை' எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது' (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.!!!




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

Wednesday, November 28, 2012

சிவப்பிரகாசரின் புதுமைச் சிந்தனைகள்...



கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புறச்சமயங்களின் தாக்கம் தமிழகச் சமுதாயக் கட்டமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இம்மாற்றங்களால் சமூகக்கட்டுப்பாடுகள் தேவையான ஒன்றாக மாற்றமடைந்தன. இச்சூழ்நிலையைப் புரிந்து கொண்ட புலமையாளர்கள் தங்களது புலமையாலும், சமூக அக்கறையினாலும் வெட்டுண்டு கிடந்த மக்களை இணக்கத்துடன் பிணைக்க முற்பட்டனர். அவ்வாறு முற்பட்டவர்களில் சிவப்பிரகாசரும் ஒருவர். இவரைத் தமிழ் இலக்கிய உலகம் "கற்பனைக் களஞ்சியம்" என்றும், நன்னெறி என்ற நீதி நூலை எழுதியமையால் "நன்னெறிச் சிவப்பிரகாசர்" என்றும், இவர் சிறிது காலம் வாழ்ந்த இடமாகிய துறைமங்கலத்தைக் குறிப்பிடும் வகையில் "துறைமங்கலம் சிவப்பிரகாசர்" என்றும் குறிப்பிட்டு அழைக்கின்றது.

சிவப்பிரகாசர் நல்ல புலமையாளராக மட்டும் இல்லாமல் நல்ல திறனாய்வாளராகவும் விளங்கியுள்ளார். மற்றவர்களது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுடன் சில சமயங்களில் அதை மறுத்துத் தனது கருத்துக்களை முன் வைப்பதைப் பார்க்க முடிகின்றது.

"அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடையை - மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்(று)
உந்துஞ் சிவிகையினை யூர்ந்து" (நால்வர் நான்மணிமாலை, பா.33)

என்னும் இப்பாடல் சிவப்பிரகாசரின் சிந்தனையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இப்பாடலின் முன் இரண்டு அடிகள் "அறத்தாறு.... இடை" என்னும் குறள் கருத்தை வேறுகோணத்தில் முன்வைக்கிறது. ஏன் மறுக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன என்பதற்கான வினா எழுகின்றது.

இப்பாடலின் கருத்து ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சைவ சமயத்தை நிலைநிறுத்தும் பொருட்டுத் தலங்கள்தோறும் சென்று தமிழ்ப் பாமாலை பாடி சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்கள். இந்நிலையில் ஒருசமயம் ஞானசம்பந்தர் சிவிகையில் ஊர்ந்து செல்லுங்கால் அச்சிவிகையை அன்பின் மேலீட்டால் நாவுக்கரசர் யாரும் அறியா வண்ணம் சிவிகையைத் தாங்கும் அடியவர்களுடன் தானும் ஒரு அடியவனாகத் தாங்கி வந்தார். இந்நிலையில் ஞானசம்பந்தர் தன் உள்ளக்கிடக்கையில் ஏற்பட்ட எண்ணத்தால் அப்பர் எங்கு உள்ளார் என்று வினவ "அடியேன் ஒப்பரிய தவஞ்செய்த பயனாகத் தங்களுடைய திருவடிகளைத் தாங்கிவரும் போது பேறுபெற்றேன்" என்றார். இச்செய்தியைச் சிவப்பிரகாசர் பின்வருமாறு சிந்தனை செய்கின்றார்.

பல்லக்கில் அமர்ந்து வந்த திருஞான சம்பந்தரும் பல்லக்கைச் சுமந்து வந்த நாவுக்கரசரும் புண்ணியம் செய்தவர்களே. அவர்களிடையே பாவ புண்ணிய வேறுபாடு இல்லை. இருவரும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களே அப்படியிருக்கும்போது எப்படி ஞானசம்பந்தர் மட்டும் அறம் செய்தவர் என்றும் நாவுக்கரசர் அறம் செய்யாதவர் என்றும் கொள்ள முடியுமா? என்ற வினாவை எழுப்புகின்றார்.

மேற்குறிப்பிட்ட இச்சிந்தனை சிவப்பிரகாசரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணம் பின்வரும் செய்திகளின் அடிப்படையாகக் கூட இருக்கலாம். அஃதாவது ஞானசம்பந்தரின் காலச் சூழ்நிலையும் சிவப்பிரகாசரின் காலச்சூழ்நிலையும் ஏறக்குறைய ஒரே தன்மையுடையதாக விளங்கியது. இவ்விருவேறு காலக்கட்டங்களிலும் புறச் சமயங்களின் தாக்கம் தமிழகத்தில் நிலவியது இந்நிலையில் சைவ சமயத்தை மீட்டெடுக்க உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற இருவேறு பாகுபாடுகளைக் களைந்து அனைவரையும் ஒற்றுமையடையச் செய்தால் மட்டுமே சமய விடுதலை பெறமுடியும் என்ற காரணமாகவும் கூடத் திருவள்ளுவரின் சிந்தனையை மறுத்துரைத்தார் எனலாம்.


நாவுக்கரசரின் சிறப்பை உரைக்க வந்த சிவப்பிரகாசர் அவரின் கரையேறிய அருட்திறத்தைப் பற்றிய செய்தியில் தனது வினாவை எழுப்புகின்றார். அவ்வினாவிற்குரிய பாடல்:


"
அருகக் கடல்கடந் தேறிய தோசிலை யம்பியெனப்
பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு
கருகக் கடல்விடம் உண்டோன் அடியிற் கசிந்துமனம்
உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த உனக்கரிதே" (நால்வர் நான்மணிமாலை - 22)

1. சமணர்களுடைய மதமாகிய சமணக்கடலைக் கடந்தது சிறப்பா அல்லது
2.
பல்லவ மன்னன் மகேந்திரனால் கல்லால் கட்டப்பெற்றுக் கடலில் வீசிய பின் மீண்டது சிறப்பா என்று வினா எழுப்புகின்றார்.

கடலைக் கடக்க ஒரு கருவிப்பொருள் வேண்டும் கருவிப்பொருள் இல்லாமல் கடப்பது என்பது இயலாத ஒன்று என்பதைப்

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்" (குறள்.10)

என்ற குறள் மூலம் விளக்குகின்றார் வள்ளுவர். அதுபோல் கடலில் விடப்பட்ட நாவுக்கரசருக்கு அவரைப் பிணைந்திருந்த கல்லே தெப்பமாக மாறி அவரைக் கரைசேர்த்தது. இதைச் "சிலையம்பி" என்ற சொல்லால் விளக்குகின்றார்.

சமண சமயமாகிய கடலில் இருந்து கரையேறுவதற்குத் தெப்பமாக எது பயன்பட்டிருக்கும் என்பது அடுத்த வினா. ஏன் எனில் கடலுக்கு ஒரு குணம் உண்டு தனக்குத் தேவையில்லாத எந்தப் பொருளையும் அது தன்னகத்தே வைத்துக் கொள்வதில்லை. அவற்றைக் கரைசேர்த்துவிடும். ஆனால் சமண சமயமாகிய கடலில் இறங்கியவர்கள் கரையேறுவது என்பது இயலாத காரியம். இந்நிலையில் தான் நாவுக்கரசர் இதிலிருந்து எவ்வாறு வெளியேறினார் என்பதைப் பார்க்க வேண்டும் இங்கு சிவப்பிரகாசரின் இலக்கியப் பயிற்சி வெளிப்படுகின்றது எனலாம்.
"தம்பியார் உளராக வேண்டும் என வைத்தயா
உம்பர் உலகு அணையவுறு நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்" (பெரியபுராணம்....)

என்னும் பாடல் கருத்து அவரின் மனக்கண் எழுந்தது போலும். ஆகவே சமண சமயத்தில் இருந்து மீள்வதற்கு அவரது தமக்கையாகிய திலகவதியார் தெப்பமாக விளங்கினார் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தார்.

அவர் வாழ்ந்த சமுதாயத்தில் நிலவிய பல ஏற்றத்தாழ்வுகளை நயம்பட மறுத்துரைக்கின்றார். பிறப்பினால் மனிதர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிந்திருப்பதை உணர்த்துகிறார். ஆல கால விஷத்தைக் கக்கிய பாம்பு என்றாலும் அதன் தலையில் அமைந்த மாணிக்கக் கல்லை எவரும் வெறுக்கமாட்டார் என்பதை ஒரு பாடலில் கூறுகிறார். அப்பாடல்

"ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு
பவர் ஆர்? அரவின் பருமணிகண் டென்றும்
கவரார் கடலின் கடு" (நன்நெறி - 22)

என்னும் பாடல் ஆகும். மேலும் இதுபோன்ற செய்தியை விளக்கும் முகமாகத் தனது சமய இலக்கியப்படைப்பான பிரபுலிங்கலீலையில்

"சாதியும் குறியும் நீத்துச் சரணரைச் சிவனே என்று
பாதபங் கயம் இறைஞ்சிப் பத்திசெய் குவனந் நந்தி...." (பிரபு - அக்கமா - 47)

என்று குறிப்பிடுகின்றார். இறைவன் அருளைப் பெறவேண்டும் என்றால் சாதிகளையும், ஆண், —ண் என்ற பேதங்களையும் நீக்கி அடியவர்களைச் சிவமே என்ற அடிதொழுதால் இறைவன் அருளைப் பெறலாம் என்கின்றார்.

பிள்ளை என்றாலே ஆண்பிள்ளையையே குறிக்கும் சமுதாயம் இது. இங்குப் பெண் என்பவள் ஆணுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தன்மையுடையவளாகவே சித்தரிக்கப்படுகின்ற காட்சியைக் காணலாம்
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற"

என்ற குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் "அறிவறிந்த" என்ற சொல் "பெண்ணொழிந்து நின்றது என்பர்" இதை மறுத்துரைக்கும் சிவப்பிரகாசர் மணமக்களை வாழ்த்தும்போது நல்ல "ஆண் மகளைப் பெற்று" உயர்வாயாக என்று வாழ்த்துவது உலகியல் வழக்கு. ஆனால் இவ்வழக்கத்துக்கு மாறாக "ஆண்மகற் பெறுக என்று ஆசி சொல்பவர் நாணும்படி பெண் பெற்றார்" என்று குறிப்பிடுகின்றார்.


"
கற்றார் அறிகுவர் மக்கள்தம் பேறுஎனக் கட்டுரைத்த
சொல்தான் ஒரு பெண் ஒழித்ததுஎன் பாரொடு தொல் உலகில்
நற்றாண் மகற்பெறுக என்று ஆசி சொல்பவர் நாண உனைப்
பெற்றான் மலையரை யன்குறை வாழும் பெரியம்மையே" (பெரியநாயகியம்மை கலித்துறை - 12)

இவ்வாறு சிவப்பிரகாசர் தனது இலக்கியங்களில் சமூகத்தைப் புதுமைக் கண் கொண்டு பார்க்கின்றார்.




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்,  
                      
தமிழ்நாடு - இந்தியா.