Search This Blog

Tuesday, February 28, 2023

விவிலியத்தில் அறம் சார்ந்த சிந்தனைகள்

 

விவிலியத்தில் அறம் சார்ந்த சிந்தனைகள்


செ.சத்யா

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,

கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604 304. விழுப்புரம் மாவட்டம்.

தமிழ்நாடு - இந்தியா.

மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com

ORCID ID: 0000-0001-7111-0002

 

முன்னுரை

            தமிழில் தோன்றிய அற இலக்கியங்கள் ஒரு மனிதன் தன் வாழ்வில் பின்பற்றத்தக்க வாழ்வியல் நெறிகளை எடுத்துரைக்கின்றன. இவற்றின் நோக்கம் பெரும்பாலும் உலக உயிர்கள் மனிதப் பண்புகளுடன் வாழ்தல் வேண்டும் என்ற நெறிகளை கொண்டதாக அமைகின்றது. கிறித்துவத்தினைப் பின்பற்றி வாழ்பவர்கள் 'விவிலியத்தினை'ப் புனித நூலக கருதுகின்றனர். சமயங்கள் யாவும் மனிதர்களிடையே அருட்பணியினையும், நேரிய ஒழுக்கத்தினையும் கற்பிக்கின்றன என்பதனை மறுப்பாரிலர். பல்வேறு பெயர்களில் சமயத்தின் நிலைகள் காணப்பட்டாலும், இவற்றிற்குள்ளே மனிதநேயம், உயிர்களுக்கிடையே அருள் பாராட்டுதல், சமூகத்தின் நலனுக்காக வாழ்கின்ற தியாக உணர்வு போன்ற அறக்கருத்துக்கள் பெரிதும் வலியுறுத்தப்படுகின்றன. கிறித்தவ சமயத் திருநூலக விளங்கும் திருவிவிலியத்துள் இடம்பெற்றுள்ள அறக்கருத்துக்களை எடுத்தியம்பும் வகையில் இவ்வாய்வு அமைகின்றது

விவிலியம் - சொல்லும் பொருளும்

            கிறித்தவர்களின் புனித நூல் 'திருவிவிலியம்' என அழைக்கப்படுகிறது. திருவிவிலியம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்னும் இரு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளன. பழைய ஏற்பாட்டில் 39 தனித்தனியான நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 தனித்தனி நூல்களும் அடங்கியுள்ளன. பழைய ஏற்பாட்டில் முதல் நூலான தொடக்க நூலிலிருந்து புதிய ஏற்பாட்டின் இறுதி நூலான திருவெளிப்பாடு என்னும் நூலக்குமிடையே 1500 ஆண்டுகள் கால இடைவெளி உண்டு என்று கருதுவர். விவிலியம் என்னும் தமிழ்ச்சொல் பைபிள் என்னும் சொல்லிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்டது. பைபிள் என்ற வார்த்தை கிரேக்கச் சொல்லான பிப்லியா என்னும் சொல்லிலிருந்து தோன்றியதாகும். இச்சொல்லுக்கு நூல் என்பது பொருளாகும்.

 இறை நம்பிக்கை

            வாழ்கிற வாழ்க்கையில் அனைத்து மக்களும் ஏதோ ஒருவகையில் இறை நம்பிக்கையைச் சார்ந்துள்ளனர். தீயவழிக்குச் செல்லாதவாறு இறை நம்பிக்கை அமைந்துள்ளது. இதனை விவிலியம்,

"நீ எதைச் செய்தாலும் ஆண்வரை மனதில் வைத்துச் செய்

அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்"1 

என்று எடுத்தியம்புகின்றது.

 நாவடக்கம்

            மனிதன் எண்ணங்களையும், உணர்வுகளையும் கருத்துவடிவில் மனிதருக்குள்ளிருந்து வெளிக்கொணர்வது 'நாவாகும்'. முனித உறுப்புகளில் அதிகாரமும், வன்மையும் வாய்ந்த உறுப்பு நாவாகும். இந்நாவினால், எந்த கருத்தையும் மாற்றியும் மொழியலாம்; திரித்தும் கூறலாம். ஆகையால் தான் வள்ளுவர் எதை அடக்காமற் போயினும் நாவைச் சொற்குற்றங்களுக்க விலக்கி காப்பது மிகமிக இன்றியமையாத ஓர் ஒப்புயர்வற்ற அறமாகும் என்கிறார். இவ் நாவடக்கத்தை விவிலியமானது,

"நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி"2 

தீட்டப்பட்ட சவரகன் கத்தி"3  

"கருக்காளப் பட்டயம்"4

"பூமியெங்கும் உலாவும் தன்மையுடையது"5

"சர்ப்பத்தைப் போன்றது"6  

“மரணத்தையும் ஜீவனையும் விளைவிக்கக் கூடியது"7 

"பட்சிக்கிற அக்கினிப் போன்றது"8

"கூர்மையாக்கப்பட்ட அம்பு போன்றது"9

என்று குறிப்பிடுகின்றது.

இதன் மூலம் நாவின் பல்வேறு தன்மைகளையும், அதன் தீவிரம், திறம், வன்மை போன்றவற்றை அறியலாம். நாவினால் ஒரு மனிதனைக் கொள்ளவும் முடியும், கொல்லவும் முடியும் என்கிற உண்மையை இத்தொடர்கள் விளக்குகின்றன. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது. எனவே, நாவை தீமைக்கும், கொடுமைக்கும் விலக்கி, அடக்கிக் காப்பது இன்றியமையாத அறமாக விவிலியம் விளம்புகின்றது.

இனியவை கூறல்

கேட்போர் உள்ளத்தில் இன்பம் தரும் வகையில் உரையாடி மகிழ்தலே இனியவை கூறலாகும். இதனை விவிலியம்,

"இன் சொற்கள் மனதிற்கு இனிமையானவை

தேன்கூடு உடலுக்கு நலம் தருபவை"10

"இனிய நாவு எலும்பை நொறுக்கும்"11

என்று இனியவை கூறலின் மேன்மையை எடுத்துரைத்துள்ளன.

அறிவுடைமை

            அறிவுடையவர் ஒருவருக்கு நிகராக ஆயிரம் அறிவில்லாதவர் கூடினாலும் சமமாக முடியாது. அறிஞரே செயல்திறன் இல்லாதவரையும் அரவணைத்து அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவார். எனவே அறிவுடைமை அனைத்து மாந்தர்களுக்கும் இருக்க வேண்டிய தனிப்பெருஞ் செல்வமாகும் என்பதனை,

"ஞானத்தைத் தேடி அடைந்தவன் நற்பேறு பெற்றவன்

மெய்யறிவை அடைந்தவன் நற்பேறு பெற்றவன்"12

"ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப்பெறு

நான் சொல்வதை மறந்து விடாதே அதற்கு மாறாக நடவாதே"13

என்று அறிவுடைமையாகிய ஞானத்தைப் போற்றியுள்ளது விவிலியம்.

அன்புடைமை

            மானுட வெற்றியின் அடிப்படை அன்பு ஆகும். அன்பு ஓர் உயிர்ப்பண்பு ஆகும். அன்பைத் தந்தாலும் இன்பம்! பெற்றாலும் இன்பம்! அன்பு பற்றி கூறாத அற நூலில்லை, அன்பு பற்றி எடுத்துரைக்காத சமயமும் இல்லை எனலாம். அறநூல்களும், விவிலியமும் அன்பினை மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பிடுகின்றன. விவிலியமும் இறைவன் அன்புருவம்; பேரின்பமும் அவனே. எனவே, அன்புள்ளவர் இறைவனை அறியலாம், மேலோகப் பேற்றையும் பெறலாம் என சுட்டியுள்ளதை,

"அன்பில்லாதவன் தேவனை அறியான்;

தேவன் அன்பாகவே இருக்கிறார்"14

என்றும், இறைவன் அன்புருவாய் இருப்பதால், அன்பில்லாத நிலையில் ஒருவர், இறைவனை அறிந்து கொள்ள முயலுதலும் கடினமாகும். அன்புள்ளவரே அன்புருவான இறைவனை அறிந்து வழிபட இயலும் என்கிறது விவிலியம்.

மனவடக்கம்

            இறைவன் மனிதனுக்குள் படைத்த அருவப் பொருட்களுள் மனமும் ஒன்று. இம்மனம் மனிதனை மகானாகவும் மாற்றும்; மிருகமாகவும் மாற்றும். எனவே, மனத்தின் ஆளுமையைக் கட்டுப்படுத்திச் சீராக வைக்கும் போதே மனிதன் மனமுள்ளவனாகத் திகழ்கிறான். மனத்தை அடக்கி வாழமுடிந்த மனிதனே சிறந்த மனிதனாகத் திகழ்வான் என்பதனை விவிலியமும் பெரிதும் வற்புறுத்திக் கூறுவதைக் காண முடிகிறது. மனிதருக்குள்ளிருந்தே எல்லா வகைபாவங்களும் வெளிப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்துவதாக விவிலியம் சுட்டுகின்றது. எனவே அம்மனத்தை அடக்கி மனிதர் தீட்டுப்படாதவாறு கட்டுப்படுத்த வேண்டுமென்பதை,

"பட்டணத்தைப் பிடிக்கின்றவனைப் பார்க்கினம் தன் மனதை

அடக்குகிறவன் உத்தமன்"15

என்ற பாடல் வரிகளில், போர் செய்து ஒரு நாட்டைத் தன் வசப்படுத்தும் அரசனிலும், தன் மனதை அடக்கி வசப்படுத்திக் கொள்கின்றவன் சிறந்தவனாகக் காணப்படுகிறான் என விவிலியம் மனவடக்கத்தின் சிறப்பபைக் கூறுகின்றது. மேலும்,

"எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள்

அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்"16

என்று மனதை அடக்குவதால் ஏற்படும் நன்மையைக் கூறி, மனவடக்கத்தின் இன்றியமையாமையை விவிலியம் எடுத்துரைக்கின்றது.

 வாய்மை

            உண்மையான இயல்பு கூறுதல் வாய்மையாகும். 'வாய்மையிற் சிறந்த சமயமில்லை' என்பது காந்தியடிகளின் கூற்றாகும். சமயங்கள் அனைத்தும் வாய்மையென்னும் அடிக்கல்லின் மேல் கட்டப்பட்டுள்ளன. வாய்மையின் மேல் கட்டப்படாத வாழ்வு சிறப்பதில்லை; அது வளம் பெறுவதும் இல்லை என்பதனை விவிலியம்,

"உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதார

சத்தியத்தைப் பேசுகிறவன்"17

"சத்திய வாசகன் நீதியை வெளிப்படுத்துவான்"18

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்"19

என்று பல்வேறு சூழல்களில் கூறப்படும் வாய்மையைப் பற்றி விரிவாக விவரிக்கின்றன. இங்கே வாய்மையே நிலைபேறுடைய நீதியாக விவிலியம் விளக்குகின்றது. வாயில் சத்தியம் .இருக்க வேண்டும். சத்தியம் என்பது ஒன்றை உறுதியாக அறுதியிட்டு கூறுவதைப் பற்றி விளக்குகின்றன.

"சத்தியத்திற்க விரோதமாய்ப் பொய்சொல்லாமலும் இருங்கள்"20

"பொய்யைக் களைந்து, அவனவன் மெய்யைப் பேசக்கடவன்"21

எனக் கூறுவது திருவள்ளுவரின் 'பொய்யாது மொழிதலே வாய்மை' எனும் கருத்தை விளக்குவதாய் உள்ளது.

"சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"22

எனச் சத்தியத்தை (உண்மை) உள்ளம் அறியும் போது, பொய் போன்ற குற்றங்களிலிருந்து இவ்வுண்மை ஒரு மனிதனை விடுவிப்பதாக விவிலியம் விளம்புவதைக் காண முடிகின்றது. உள்ளத்தில் அமைகின்ற இவ்வுண்மை அறத்தைப் பற்றி,

"நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது

ஜீவகீரிடத்தை உனக்குத் தருவேன்"23

என்று உண்மையாய் இருப்பது ஒவ்வொரு தனிமனிதர்களும் இறுதிவரை பின்பற்ற வேண்டிய அறமாக விவிலியம் உணர்த்துவதை அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை

            விவிலியம் இறை நம்பிக்கையைப் போற்றியுள்ளன. இறைவன் ஒருவனே அனைத்துப் பாவச் செயல்களில் இருந்தும் விடுப்பான் என்பதையும், இறைவனை சரணாகதி அடைவோர்க்கு துன்பமில்லை என்பதினை அறமாக எடுத்துரைத்துள்ளது. அளவறிந்து இனிமையுடன் பேசுதலை இன்றியமையாத அறமாகக் கொண்டு நாவடக்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உடல் அழிந்து விடும் உயிர் மட்டுமே நிலையானது. இறந்தும் மனங்களில் உயிர்வாழ்தலை விவிலியம் அழகாக எடுத்துரைக்கின்றது. மேலும், எச்சூழலிலும் ஒருவருக்கு வாய்மையே இன்றியமையாத அறம் என்று விவிலியம் எடுத்துரைக்கும் கருத்தாக அமைந்துள்ளது. அன்பே அறங்களுக்கு அடிப்படை என்றும், அன்பு மனிதர்க்கு உயிர் போன்றது என்றும், அன்பிலா நிலை உயிரில்லாத பயனில்லாத நிலைக்கு இணையானதென்னும் கருத்துக்களையும், என்றும் மாறாத இயல்புடையதும், அழியாததும், ஒறுத்தாரையும் மன்னிக்கும் இறையன்பினை விவிலியம் வாழ்வின் நெறிமுறைகளாக தெளிவாக எடுத்துரைக்கின்றது.

 

சான்றென் விளக்கம்

1.    நீ.மொ.3:6

2.    சங்.45:1

3.    சங்.52:2

4.    சங்.57:4

5.    சங்.73:9

6.    சங்.140:3

7.    நீ.மொ.18:21

8.    ஏசா.30:27

9.    எரே.9:8

10.  நீ.மொ.16:24

11.  நீ.மொ.25:25

12.  நீ.மொ.3:15

13.  நீ.மொ.4:5

14.  யோவான்4:8

15.  நீ.மொ.16:32

16.  நீ.மொ.4:23

17.  சங்.15:2

18.  நீ.மொ.12:17

19.  நீ.மொ.12:19

20.  யாக்.3:14

21.  எபே.4:25

22.  யோவா.8:32

23.  வெளி.2:10

 

துணை நூற்பட்டியல்

1.    ஞான சந்திர ஜான்சன், யோ., கிறிஸ்தவ இலக்கியத் திறன், கீர்த்தனா பதிப்பகம், கிழக்குத் தாம்பரம், சென்னை, 2012.

2.    கிருஷ்ணபிள்ளை, எச்.ஏ., இரட்சணிய யாத்திரிகம், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை, இரண்டாம் பதிப்பு 1931.

3.    காமாட்சி சீனிவாசன், திருக்குறளும் விவிலியமும், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1979.

4.    தாவீது அதிசயநாதன், எஸ்., தமிழ் வரலாற்றில் கிறிஸ்தவம், உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, தெ.இ.திருச்சபை, வேலூர், 1983.

5.    அருள்சாமி, ச.இ., விவிலியம் வளர்ந்த வரலாறு, நல்லாயன் கல்லூரி, மைலேறி பாளையம், கோவை, முதற்பதிப்பு 2000.

6.   இன்னாசி, சூ., கிறிஸ்தவத் தமிழ்க் கொடை, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.

கணிகைக்குல காப்பியத்தில் அறச்சிந்தனைகள்

 

கணிகைக்குல காப்பியத்தில் அறச்சிந்தனைகள்

 

செ . சத்யா ,

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர் , 

(பதிவு எண் : Ph.D./2018/312/TAM)

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்

கலை  மற்றும் அறிவியல் கல்லூரி

மைலம் - 604 304.

திண்டிவனம் வட்டம்.

விழுப்புரம் மாவட்டம்.

Mail Id: sathyasenthil77@gmail.com

ORCID ID: 0000-0001-7111-0002

ஆய்வு நெறியாளர் : சதீஷ்., எம்.., பி.எச்.டி., உதவிப்பேராசிரியர்மயிலம் தமிழ் கல்லூரி.

 முன்னுரை

            தமிழ் இலக்கிய வரலாற்றினை சங்ககாலம், சங்கம் மருவிய காலம், காப்பியக்காலம், பக்தி இலக்கியக் காலம், இடைக்கால இலக்கியங்கள் காலம், நவீன இலக்கியக் காலம் என வகைப்படுத்துவர் இலக்கியத் திறனாய்வாளர்கள். சங்கம் மருவிய காலம் என்று கருதப்படுகின்ற காலத்தில் இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை படைக்கப்பட்டதாக கூறப்பெறுகின்றது. அமிழ்தினும் இனியது தமிழ்மொழி. இம்மொழி தொன்மைமிக்கது. சீரிய கருத்து நயம் மிக்கது. சமூகத்தில் வாழும் மனித வாழ்வியல் அறநெறிகளை நோக்கமாகக் கொண்டு விளங்கியவை காப்பியங்கள் என்றால் அது மிகையாகாது. மணிமேகலை என்பது காப்பியத்தின் பெயர். இதற்கு மணிமேகலை துறவு என்னும் பெயரும் உண்டு. மணிமேகலை துறவு பூண்டதால் இப்பெயர் பெற்றது. இது தவிர பசிப்பிணிகாப்பியம், முதல் சமய காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்த காப்பியம், குறிக்கோள் காப்பியம், பசுபோற்றும் காப்பியம் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. கணிகைக்குல பெண்ணொருத்தியை காப்பியத்தின் தலைமகளாக் கொண்டிருக்கும் முதல் காப்பியமான மணிமேகலையில் காணப்படும் அறச்சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கருச்சொற்கள்:

மணிமேகலை, இரட்டைக்காப்பியங்கள், அறச்சிந்தனைகள், அறக்காப்பியம், பசிப்பிணிகாப்பியம், முதல் சமய காப்பியம், சீர்திருத்த காப்பியம், பசுபோற்றும் காப்பியம், சிலப்பதிகாரம்.

அறம் விளக்கம்

            வாழ்க்கையிலிருந்து தோன்றுவது இலக்கியம். இலக்கியத்தின் நோக்கம் அறத்தை வலியுறுத்திக் கூறுவது ஆகும். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப்பொருளில் முதலாவதாக சுட்டப்படுவது அறமேயாகும். அறமே எல்லாவற்றுக்கும் மூலமாக அமைகின்றது. ஒவ்வொரு தனி மனிதனும் அறம் சார்ந்தே வாழவேண்டும் என்பது சான்றோரின் வாக்கு. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை உரக்கச் சொல்கின்றது சிலப்பதிகாரம். அறம், இல்லறம் துறவறம் என இருபாற்படும். இல்லறம் கொடுத்தல், அளித்தல், கோடல், இன்மை, ஒழுக்கம், புணர்தல், புணர்தோரைப் பேணல், போன்ற, துறவறம் துறத்தல், அடக்கம், தூய்மை, தவம் போன்ற பிறவும் என்கிறது வீரச்சோழியம். அறம் என்ற சொல்லிற்கு தமிழில் எட்டுவகையான பொருள்கள் உள்ளன. அதை நல்லொழுக்கம், நற்பண்பு, நீதி, கடமை, ஈகை, அருள், புண்ணியம், சமயம் என்கிறார் க.த.திருநாவுக்கரசு.

            அறம் எனப்படுவது உணவும், உடமையும் இருக்க இடமும் தரப்படுவது என்கிறது மணிமேகலை என்பதனை,

"அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இது கேள் மண்ணுயிர்க்கெல்லாம்

உண்டிறம், உடைளும் உறையுரும் அல்லது

கண்டது இல்"         -   (மணிமேகலை.மணிபல்ல.227-230)

 

என்ற பாடலடிகள் மேற்கண்ட கருத்துக்குச் சான்றாகின்றன. மேலும், அறத்தினால் பொருள் ஈட்டி வாழ்வதே வாழ்க்கை என்று தொல்காப்பியமும் கூறுவதனை,

"இன்பம் - பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை"            -  (தொல்.கா.228-253)

என்ற நூற்பாவின் வழி அறியமுடிகின்றது.

பசி ஒழிப்பு

கொடுமை வாய்ந்த மிகுதியான துன்பம் தரக்கூடிய பசிநோயால் ஏற்படும் துன்பம் சொல்லில் அடங்காது. இப்படிப்பட்ட கொடிய பசிப்பிணியைப் போக்கினாய். 'உன்னால் பசி நோயிலிருந்து விடுபட்டேன். தீர்க்க முடியாத பசிநோய் உன்னால் தீர்க்கப்பட்டது' என்று மணிமேகலையின் அறச்செயலை காயசண்டிகை போற்றிப் புகழ்வதனை,

"சம்பத் தீவினுள் தமிழக மருங்கில்

கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர்

ஆற்றா மாக்கட்கு ஆற்றும்துணை ஆகி

நோற்றோர் உறைவதுஓர் நோன்நகர் உண்டால்

பலநாள் ஆயினும், நிலனொடு போகி

அப்பதிப் புகுக" என்று அவன் அருள் செய்ய

இப்பதிப் புகுந்து, ஈங்கு, யான் உறைகின்றேன்

இந்திர கோடணை விழவுஅணி வருநாள்

வந்து தோன்றி, இம்மாநகர் மருங்கே

என்உறு பெரும்பசி கண்டனன் இறங்கி

பின்வரும் யாண்டுஅவன் எண்ணினன் கழியும்

தணிவுஇல் வெம்பசி தவிர்த்தனை; வணங்கினேன்"

                   (உலகறவி புக்க காதை, பாட.வரி.62-73)

என்ற மணிமேகலை உலகறவி புக்க காதைப் பாடல்வரிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இப்பாடல் வழியாக காப்பியத்தில் பசி ஒழிப்பு முக்கியமான சிறந்ததொரு அறச்செயலாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. உணவளித்தல் என்கின்ற அறச்செயல் மட்டுமே பசி ஒழிப்புக்குச் சாத்தியமாகும் என்பதைத் தெளிவுபட எடுத்துரைக்கின்றது.

பசியால் வரும் துன்பம்

பசியால் வரும் துன்பம் கொடுமையானது. எல்லா உயிர்களும் துன்பப்படுவது பசி உணர்வு ஒன்றால் மட்டும்தான். ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடுகளில்லாமல் அனைவரையும் வாட்டி வதைப்பது பசி என்ற ஒன்றே. அப்படிப்பட்ட பசியைப் போக்குபவரே உயிரைக் காத்தவராகப் போற்றப்படுபவராவார். இதுவே உயரிய அறக்கருத்து மட்டுமல்லாது அறச்செயலுமாகும் என்பதை,

"புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி,

மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின்;

……………………………………….

அரும்பசி களைய ஆற்றுவது காணான்,

திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன்,

இந்திர சிறப்பு செய்வோன் முன்னர்,

வந்து தோன்றிய வானவர் பெருந்தகை

மழைவளம் தருதலின், மன்உயிர் ஓங்கி,

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ?

(பாத்திரம் பெற்ற காதை, பா.வரி.82-90)

என்ற மணிமேகலை – பாத்திரம் பெற்ற காதையின் பாடல் வரிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் எப்படியாயினும் தம்முடைய பசிப்பிணியை நீக்க இயலாத வறியவர்களுக்கு நீக்குவதற்குரிய பசியைக் களைவோரின் குறிப்பின்வழி நிற்பதே உலகின் உண்மையான அறிநெறி வாழ்கை என்றும், உலகத்தில் வாழ்வோர் அனைவரிலும் பிறர்க்கு உணவு அளித்துப் பாதுகாத்தவரே உயிர்கொடுத்தவராவார் என்பதையும், உயிர்க்காக்கும் கொடைத்திறம் மிக்கதும் என்றும் சுட்டப்படுவதனை அறிந்து கொள்ள முடிகின்றது.

சிறைச்சாலை ஒழிப்பு

            மணிமேகலைக் காப்பியத்தில் மேலும் ஒரு போற்றுதலுக்குரிய அறக்கருத்து சிறைச்சாலை ஒழிப்பு. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரித்து குற்றம் புரிவோருக்கு தண்டனைகள் கடுமையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலையிலுள்ளோருக்கு உணவளிக்காமல் பசியோடு இருக்கச் செய்திருக்கின்றனர் ஆட்சியாளர்கள். அவ்வாறு சிறையில் பசியால் உணவில்லாமல் பெருமூச்செறிந்து வாடும் குற்றவாளிகளைக் கண்டு மனமிறங்கி அங்குள்ள அனைவருக்கும் உணவினை வாரி வாரி மணிமேகலை வழங்கியதை,

"அதிர்கழல் வேந்தன் அடிப்பிழைத் தாரை

ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம்

விருப்பொடும் புகுந்து, வெய்து உயிர்த்துப் புலம்பி

ஆங்குப் பசியுறும் ஆர்உயிர் மாக்களை

வாங்கு கைஅகம் வருந்தநின்று ஊட்டலும்"

(சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, பா.வரி.33-35)

என்ற மணிமேகலைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடலில் தன் கையிலுள்ள அமுதசுரபியிலிருந்து சிறைச்சாலையிலுள்ள அனைவருக்கும் உணவினை வாரி வாரி வழங்கி அவர்களின் வயிறு நிரம்பி பசியாறி கைகள் வருந்துமளவிற்கு உணவினைத் தொடர்ந்து வழங்கினாள் என்பதை அறிய முடிகின்றது.

மணிமேகலையை நேரில் பார்த்த மன்னன் உமக்கு நான் செய்ய வேண்டியது என்ன? என்று வினவ அதற்கு மணிமேகலை, 'சிறைச்சாலையை அழித்து அருள் உள்ளமுடைய அறவோர் வாழும் அறச்சாலையாக ஆக்குக. அச்செயல்தான் நீங்கள் செய்யக் கூடியது" என்று கேட்டுக்கொண்டாள். மணிமேகலையின் அறிவுரையைக் கேட்ட மன்னன் அப்பொழுதே சிறையிலிருந்தோரை விடுவிக்கச் செய்ததை,

"யான்செயற் பாலதுஎன், இளங்கொடிக்கு' என்று

வேந்தன் கூற, மெல்-இயல் உரைக்கும்

சிறையோர் கோட்டம் சீத்து, அருள் நெஞ்சத்து

அறவோர்க்கு ஆக்கு மது; வாழியர்!என

………………………………………….

அருஞ்சிறைவிட்டு, ஆங்குஆய் - இழை உரைத்த

பெருந்தவர் - தம்மால் பெரும்பொருள் எய்த

கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்

அறவோர்க்கு ஆக்கினன், அரசு ஆள் வேந்து"

(சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, பா.வரி.155-162)

என்ற மணிமேகலை – சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதைப் பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதில் பெருந்தவத்தோர் பலரால் அறமும் ஞானமும் ஆகிய சீலங்களை எய்துமாறு சிறைக்கோட்டத்தை கறைப்பட்டோர் இல்லாத அறக்கோட்டமாக்கினான் மன்னன் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

உணவளித்தல்

            மணிமேகலையில் 'அமுதசுரபி' சிந்தனை உலகத்தில் தலைசிறந்த அறச்சிந்தனையாகும். பசிக்காக அலையும் வறியவர்களுக்கு, பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்து மனம் இரங்கி இனிய பாலைச் சுரக்கின்ற தாயின் மார்புபோல, மனதில் எண்ணியவாறு உணவினைக் கொடுக்கும் அமுதசுரபி பாத்திரம் கொண்டு உணவளிக்க வேண்டும். வறியவர்கள் முகம் கண்டு இரங்கி அமுதசுரபியில் உணவு சுரப்பதைக் காண வேண்டும் என்று மணிமேகலை கூறுவதாக,

"நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து,

வித்தி, நல்ல அறம், விளைந்த அதன்பயன்

…………………………………………….

ஈன்ற குழவி முகம்கண்டு இரங்கி,

தீம்பால் சுரப்போள் - தன்முலை போன்றே,

நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து

அகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர்

முகம்கண்டு சுரத்தல் காண்டல்"

(பாத்திரம் பெற்ற காதை, பா.வரி.107–118)  

என வரும் மணிமேகலை – பாத்திரம் பெற்ற காதைப் பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், காப்பியத்தில் நீங்கா பசிப்பிணியால் பீடிக்கப்பட்டிருந்த காயசண்டிகைக்கு உணவளித்து நோயைப் போக்குகின்றாள் மணிமேகலை.

மாதவியின் மகளாக ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தால் நிச்சயம் மன்னனின் மகன் உதயகுமரன் பின்தொடருவான். அதனால் தன்னால் துணையின்றி வறுமையில் வாடும் ஏழைகளுக்கு துணையாயிருந்து உணவளித்து வறுமையைப் போக்க முடியாது என்பதால், எல்லோராலும் நன்கறியப்பட்ட யானைத்தீ நோயால் அவதியுற்றுவரும் காயசண்டிகை உருவம்  ஏற்றதனை,

"காய்பசி யாட்டி காயசண் டிகையென

ஊர்முழு தறியும் உருவம் கொண்டே

ஆற்றா மாக்கட்ரு ஆற்றும் துணையாகி"

(சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, பா.வரி.33-35)

என்ற பாடலடி அழகாக எடுத்தியம்புகின்றது. இதில் தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, துணையின்றி வறுமையில் வாடும் ஏழைகளுக்கு துணையாயிருந்து வறுமையைப் போக்குவேன் என எடுத்துரைப்பதையும், இரப்போர்கள் கேட்டால் அவர்களுக்கு உணவிடுவது அறத்தின் தலையாய கடமையாகும், சிறப்பான செயலுமாகும் என்று சுட்டப்படுவதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

அமுதசுரபியைக் கையிலேந்தி பசிப்பிணியில் வாடுவோரை அப்பணியிலிருந்து விடுவிக்க ஊரெங்கும் சுற்றி அலைந்து வறுமையில் வாடுவோரை தாமே நேரில் சென்று சந்தித்து உணவளிப்பது சிறப்பிலும் சிறப்பாகும் என்று மணிமேகலை எடுத்துரைப்பதனை,

"அமுத சுரபியை அங்கையின் வாங்கிப்

பதியகம் திரி தரும் பைங்கொடி நங்கை"

(சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, பா.வரி.33-35)

என்ற பாடல் வரிகள் அழகுற சுட்டுகின்றன. அப்படியாக சிறைச்சாலைக்கும் அருகே செல்லுகின்றாள். சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகளுக்கு உணவளிக்கும் பொருட்டு உள்ளே நுழைந்து அங்குள்ள அனைவருக்கும் அள்ளி அள்ளி உணவளித்தனை,

"யானைத் தீநோய்க் கயர்ந்துமெய் வாடியிம்

மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர்

அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து

பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி

ஐயப் பாத்தரம் ஒன்றுகொண் டாங்கு

மொய்கொண் மாக்கண் மொசிக்கவூண் சுந்தரனள்"

(சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, பா.வரி.131-136)

என்ற பாடலடிகள் வரியாக அறிந்து கொள்ள முடிகின்றது. இதில், அரசே! இப்பெரும் புகார் நகரத்தில் யானைத்தீ என்னும் பிணியால் சோர்ந்து உடல் வாடிய நிலையிலுள்ள ஒரு பெண்மகள் சிறைச்சாலையினுள் நுழைந்து பெரிய புகழுடைய மன்னனே! ஏன தங்களை வாயார வாழ்த்தி விட்டு அங்குள்ள அனைவருக்கும் அள்ளி அள்ளி உணவினை வழங்கியதைக் கண்டு சிறைக்காவலர்கள் ஒன்று சேர்ந்து வாழ்த்திப் போற்றினார்கள் என்று எடுத்துரைப்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது

ஊனமுற்றோர்கள் துயர் துடைப்பு

            அறங்கள் தழைத்தோங்கினால் இந்த உலகமும், உலக மக்களும் அடையும் நன்மைகளாக வானம் தவறாமல் மழையைக் கொடுக்கும், வளம் பல பெருகும். ஊனலாகிய உடம்பையுடைய உயிர்கள் துயரமடையாது. காற்று வலமாக சூழலும். எட்டுத்திசையும் செழுமையடையும். நீர் செறிந்துள்ள பெரிய கடலானது முத்து, மணி முதலிய வளங்களை அள்ளித்தரும். கறவைப் பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டிய பின்னர் கலம் நிறைந்து வழியுமாறு பாலைச் சுரக்கும். பறவைகள் கனி முதலியவற்றை உண்டு இன்பம் துய்த்து தாம் வாழும் இடங்களை விட்டு எங்கும் செல்லாது. விலங்கினங்களும், மக்களும் பகைமையை அடியோடு விட்டொழிக்கும். அச்சம் தரும் நரகர் - பேய்கள் அச்சத்தை விட்டொழிக்கும் என்று மணிமேகலை எடுத்தியம்புவதை,

"வானம் பொய்யாது; மாநிலம் வளம்படும்

ஊன்உடை உயிர்கள் உறுதுயர் காணா

………………………………………….

கலங்குஅஞர், நரகரும் பேயும்,கைவிடும்

கூனும்,குறளும்,ஊமும்,செவிடும்

மாவும்,மருளும்,மன்உயிர் பெறாஅ"

(அறவணர்தொழுத காதை, பா.வரி.89-98)

என்ற பாடல் வரிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் அறம் தழைத்தோங்குமானால், மக்களில் கூன் வடிவமுடையோர், குறுகிய வடிவமுடையோர், ஊமையாய் பிறப்போர், காது கேளாத செவிட்டுடன் பிறப்போர், விலங்கு இயல்போடு பிறக்கும் பிறப்போர், அறியாமையால் மருட்சிகொள்ளும் தன்மை ஆகிய பிறப்புகள் இனிமேல் பிறக்கவே பிறக்காது என்றும் மனிதரில் குறைபாடுடையோர் என்று இனி யாரும் பிறக்கமாட்டார் என்று மணிமேகலைக் காப்பியம் பதிவு செய்கின்றது.

ஆபுத்திரன் மதுரை நகரில் கலைமகள் கோட்டத்து வாயிலில் உள்ள மன்றலில் தங்கி வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து அதனால் கிடைத்த உணவிலை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து எஞ்சியதை தானும் உண்டு மகிழ்ந்தான் என்பதை,

"காணார் கேளார் கால்முடம் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்

யாவரும் வருக! என்று இசைத்து உடன்ஊட்டி

உண்டுஒழி மிச்சில் உண்டு"

(ஆபுத்திரன் திறம் அறிவித்த கதை, பா.வரி.111-115)

என்ற பாடல் வரிகள் வழியாக ஆபுத்திரனின் பகுத்துண்டு பல்லுயிர் ௐபுதல் பண்பு வெளிப்படுகிறது. அவ்வாறு உணவளிக்கும் போது குருடர்களையும், செவிடர்களையும், முடவர்களையும், ஆதரவற்றோர்களையும், கடும் நோயால் அவதிப்படுவோரையும் சந்தித்து பசி போக்கியதையும், அவர்களின் துயர் துடைத்தையும் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆபுத்திரன் பிச்சைப்பாத்திரம் கொண்டு விளிம்புநிலை மக்களான ஊனமுற்றோருக்கு உணவளிக்கும் செய்தியும் மணிமேகலையில் இடம்பெறுகின்றது.

ஆய்வு முடிவுரை

·         ஐம்பெருங் காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து அணிகலன்களாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளனர். அதில் மணிமேகலை காப்பியம் அறம் என்னும் தர்மசிந்தனை ஒன்று மட்டுமே நமக்கு சிறந்த துணை என்பதை அழகாக எடுத்துரைக்கின்றது.

·         சிறைச்சாலைகளை அகற்றி அறச்சாலைகளை உருவாக்கியதையும், மக்களிடையே வேற்றுமைகளை களைதல், ஊனமுற்றோர் துயர் துடைத்தல் போன்ற அறக்கருத்துக்களும், அறச்செயல்களும் மணிமேகலை காப்பியத்தில் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.

·         பசிப்பிணியை அகற்றுதல், வறியோருக்கு உணவளித்தல் ஆகிய அறச் செயல்களின் கருத்துக்களை மையமிட்டே காப்பியம் படைக்கப்பட்டுள்ளது.

·         மணிமேகலையில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துக்களும், அறச்செயல்களும் ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் சீர்திருத்தத்துக்கும், நல்வழிப்படுத்துதலுக்கும், மேன்மைக்கும் உகந்த கருத்துக்கள் என்பதில் எள்ளவும் ஐயமில்லை என்பதை இவ்வாய்வின் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.

துணை நின்ற நூல்கள்

1. வேங்கடசாமி நாட்டார், ந.மு. துரைசாமிப்பிள்ளை.சு.ஔவை.(உ.ஆ). (2003). மணிமேகலை மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.

2. செல்லன் கோவிந்தன். (2000). மணிமேகலையின் காலமும் கருத்தும். சென்னை: வனிதா பதிப்பகம்.

3. சோமசுந்தரனார், பொ.வே.(உ.ஆ).(1994). மணிமேகலை. சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்.

4.  தண்டபாணி, துரை. (உ.ஆ). (2005). மணிமேகலை தெளிவுரை. சேன்னை: உமா பதிப்பகம்.

5. சிதம்பரனார், சாமி. (1970). மணிமேகலை காட்டும் மனித வாழ்வு. சென்னை: இலக்கிய நிலையம் பதிப்பகம்.