ஆற்றுப்படை நூல்களில் வாழ்வியல் கூறுகள்
திருமதி. செ. சத்யா,
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி,
மேல்மருவத்தூர் - 603 319.
மின்னஞ்சல்: sathyasenthil77@gmail.com
முன்னுரை
சங்க
இலக்கியங்களில் ஆற்றுப்டை நூல்கள் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்தன. இவை பழந்தமிழரின்
வாழ்வியல் நெறிகளை எடுத்துரைப்பதாகவே அமைந்துள்ளன. ஆற்றுப்படை நூல்களின் அடிப்படை நோக்கம்
அரசனைப் புகழ்வது என்றாலும், கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலான ஆற்றுப்படை
கலைஞர்களைப் போற்றும் நூல்களாகவும் விளங்குகின்றன. மேலும் சங்ககால வாழ்க்கை முறையாகவும்,
இயற்கை அமைப்பையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால்,
பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, விருந்தோம்பல், நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், வணிகக்
கூறுகள், உழவுத் தொழில், சமயநிலை முதலானவற்றில் ஆற்றுப்படை நூல்களில் பழந்தமிழர்களின்
வாழ்வியல் நெறிகளை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
சங்க இலக்கியம் என்பது பத்துப்பாட்டும்,
எட்டுத்தொகையும் ஆகும். பத்துப்பாட்டு என்பது பத்து நெடும்பாடல்களின் கோர்வைத் தொகுப்பு
என்பதனை,
"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோல நெடு நல்வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத் தொடும் பத்து"
என்ற பழம்பாடல் வரிசைப்படுத்தியுள்ளது. இதில் திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக உள்ள மலைபடுகடாம் என்பதற்கு கூத்தர் ஆற்றுப்படை என்ற பெயரும் உண்டு.
பத்துப்பாட்டு நூல்களில் சரிபாதியாக 1.திருமுருகாற்றுப்படை,
2.பொருநராற்றுப்படை, 3.சிறுபாணாற்றுப்படை, 4.பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)
ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
முதலாவதாக
உள்ள திருமுருகாற்றுப்படையை நக்கீரர் 317 அடிகளில் முருகனின் அருளைப் பெற பக்தர்களை
ஆற்றுப்படுத்திப் பாடியுள்ளார். இரண்டாவதாக அமைந்துள்ள பொருநராற்றுப்படையில் முடத்தாமக்
கண்ணியார் 248 அடிகளைக் கொண்டு கரிகால் பெருவளத்தானைச் சிறப்பித்து வறுமையில் உள்ள
பொருநனை மற்றொரு பொருநன் ஆற்றுப்படுத்துவதாகப் பாடியுள்ளார். மூன்றாவதாக அமைந்துள்ள
சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார்
என்னும் புலவர் 269 அடிகளைக் கொண்டு ஒய்மானாட்டு நல்லியக்கோடனை புகழ்ந்தும், அவன் நாட்டின்
வளத்தைப் புகழ்ந்தும், சிறுபாணன் ஒருவன் மற்றொரு சிறுபாணனுக்கு ஆற்றுப்படுத்துவதாகப்
பாடியுள்ளார். நான்காவதாக அமைந்துள்ள பெரும்பாணாற்றுப்படையை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று பசி மறந்த பாணன் ஒருவன் மற்றொரு
பாணனை ஆற்றுப்படுத்துவதாக 500 அடிகளைக் கொண்டு பாடியுள்ளார். இறுதியாக உள்ள மலைபடுகடாம்
(கூத்தர் ஆற்றுப்படை) பாடலை பெரும் கௌசிகனார் என்னும் புலவர் நன்னன் சேய் நன்னன் என்னும்
மன்னனைப் புகழ்ந்தும், அவனிடம் பரிசில் பெற்ற கூத்தர் மற்ற கூத்தரை ஆற்றுப்படுத்துவதாக
580 அடிகளைக் கொண்டு பாடியுள்ளார்.
ஆற்றுப்படையின் இலக்கணம்
ஆறு
என்பதற்கு வழி என்று பொருள் படை என்பதற்கு செலுத்துதல் என்று பொருள். ஆறு படை ஆற்றுப்படை. அதாவது நல்வழி அனுப்புவது, ஒருவர்
துன்பத்தில் இருக்கும் போது அவருக்கு நல்வழி காட்டுதல் ஆற்றுப்படையின் பொருள் ஆகும்.
பழந்தமிழகத்தில் வாழ்ந்த அரசர்கள்
புகழ்ச்சியை விரும்ப, பொருள் தேவையுள்ள புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பிழைக்க வேண்டிய
நிலை ஏற்பட்டது. எனவே, புரவலனைப் புகழ்ந்து பொருள் பெறும் நோக்கமே பாடாண் திணையின்
நோக்கமாகும். என்றாலும் கூத்தர், பாணர், பொருநர், விறலி என்ற கலைமாந்தர்களையும் ஆற்றுப்படையின்
முதன்மைப் பொருளாகக் கொண்டுள்ளனர். எனவேதான், குற்றமற்ற நற்புகழைக் கருதியபடி உறங்கும்
மன்னர்களை எழுப்புதற்குச் சூதர்கள் பாடும் துயிலெடை நிலை, கூத்தரும் பாணரும் பொருநரும்
விறலியும் வழியிடையே ஒருவருக்கொருவர் எதிராகச் சந்தித்து, பரிசில் பெற்றுச் செல்வச்
சிறப்புடன் வருபவன் தனக்கு எதிரே வறியராய் வருபவர்க்கு, இவ்வழியாகச் சென்று இத்தகைய
தலைவனைக் கண்டு, எம்மைப் போல் நீங்களும் பரிசில் பெற்று பயனடைவீர்களாக என வழிகாட்டும்
ஆற்றுப்படை, பிறந்த நாளாகச் சிறந்த புகழ் விளங்குமாறு, புனித நீராடி முடிசூடிக் கொண்டாடுதல்,
உலகத்துக்கு நிழல் தந்து காக்கும் இயல்பைப் புகழ்ந்துரைக்கும் வெண்கொற்றக் குடைச்சிறப்பு
பகைவரை வென்ற வாளுக்கு மாலை சூட்டிப் பாடிக் கொண்டாடும் வாள்மங்கலம், நிலைபெற்ற பகைவர்
மதிலை அழித்து, பின்பு அதைப் புனித நீராடிப் பாடி வாழ்த்தும் மண்ணுமங்கலம், பரிசில்
கடாவும் (பரிசிலைப் பெறும் நிலை), பெற்ற பிறகு அரசனது பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து,
உலக நடைமுறையில் தோன்றும் இருவகையான விடை பெறுதல். ஒன்று அரசனே விடை தந்து அனுப்புதல்,
மற்றொன்று பரிசிலர் தாமே விடைபெற்றுப் புறப்படுதல், நாள்(நட்சத்திரம்), புள்(சகுனம்),
பிற நிமித்தங்கள் இவற்றால் ஏற்படக் கூடிய அச்சம் நீக்கியும் உவகையும் ஆக்கி இவற்றால்
குறைவுபடாமல், முக்காலமும் கருதிப் பாதுகாப்பாக வாழ்க என வாழ்த்துகின்ற ௐபடைநிலை. இவை
உள்பட உலகத்தில் வரும் அன்றாட நடைமுறைகளின்படி முக்காலத்திற்கும் பொருந்துமாறு காலந்தோறும்
பாடப்பெற்றுள்ளன. இதனைத் தொல்காப்பியம்,
"கூத்தரும் பாணரும் பொருநரமு; விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்
சிறந்த நாளணி செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்
சிறந்த கீர்த்தி மண்ணுமங்கலமும்
நடைமிகுந்தேத்திய குடைநிழல் மரபும்
மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்
மன்எயில் அழித்த மண்ணுமங்கலமும்
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்
பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி
நடைவயின் தோன்றும் இருவகை விடையும்
அச்சமும் உவகையும் எச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்
காலங் கண்ணிய ௐபடை உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பில்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே"1
என்று கூறுகிறது. மேலும், அரசனின் வீரம், புகழ்,
கொடை முதலிய சிறப்புகளையும், கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலானோரை அரசனிடத்து
வழிப்படுத்துவதும் ஆற்றுப்படையின் இலக்கணமாயிற்று. என்றாலும், கூத்தர், பாணர், பொருநர்,
விறலியர் எனும் நால்வகையினரை ஆற்றுப்படுத்துதல் என்பது சங்ககால வாழ்வியல்களாக இருந்துள்ளது.
பழமுதிர்ச்சோலை
மலைக்குரிய முருகனுக்கு விழா எடுக்கும் போது, மலையைச் சார்ந்த ஊர்களை வாழ்த்தி, குறிஞ்சிப்
பண்ணை குறமகள் பாடுகிறாள். மலைகள் மட்டுமல்லாமல், காடுகள், சோலைகள், அழகு பொருந்திய
ஆறுகள், குளங்கள், வேறு பல இடங்களிலும், நான்கு வீதிகள் சந்திக்கின்ற சதுக்கத்திலும்,
சில வீதிகள் சந்திக்கின்ற சந்திலும், கடம்ப மரத்தின் அடியிலும், பொதுமன்றத்திலும் இறைவனுக்குக்
குறியாக 'கந்து' என்றழைக்கப்படும் கல்லை நிலத்தில் நட்டு வழிபட்டதை,
"காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சக்கமும் சந்தியும் புதுப்பூம் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துஉடை நிலையினும்"2
என்ற திருமுருகாற்றுப்படை பாடலடிகள் சுட்டுகின்றன.
மருதநில மக்களின் இயல்பினை விவரிக்கும்
பொருநராற்றுப்படை நூலில் பலி சோறிடும் சடங்கும் இடம்பெற்றுள்ளதனை,
"கூடு கெழீஇய குடிவயினான்
செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை கவர்வு முனையின்
மனை நொச்சி நிழல் ஆங்கண்
ஈற்றுயாமைதன் பார்ப்பு ௐபவும்"3
என்ற பொருநராற்றுப்படை அடிகள் வழியாக, மருதநிலத்தில்
வாழ்கின்றவர்கள் குருதி கலந்த சோற்றினைக் காக்கைகளுக்குப் பலியாகத் தந்துள்ளனர் என்பதை
அறிந்து கொள்ள முடிகின்றது. காக்கைக்களுக்குப் பலிச்சோறு தருவதில் பழந்தமிழர்களின்
தொன்மையான நம்பிக்கையும் அடங்கியுள்ளது. அதாவது, இறந்த நம் முன்னோர்கள் காக்கை வடிவில்
வருவர் என்ற நம்பிக்கையானது இன்றளவும் நிலவுகின்றது.
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் சுறாமீனின் கொம்பை நட்டு
வழிபட்டுள்ளனர் என்பதை,
"சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும்
புன் தலை இரும் பரதவர்"4
என்னும் பட்டினப்பாலை அடிகள் சுட்டுகின்றன. இதில்,
பரதவர்கள் சினைகளையுடைய சுறா மீனின் கொம்பை நட்டு, அதில் வல்லமையான தெய்வத்தை நிறுத்தி
வழிபட்டுள்ளதையும்,. வருணன் என்ற கடல் தெய்வத்தை சுறாமீனின் கொம்பில் ஏற்றி வழிபடுவதன்
வாயிலாக, கடலில் வலிமையான சுறாமீனின் கொம்பினை வழிபடுவதன் மூலம் அந்த சுறாமீனின் வலிமை
தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் வழிபட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள
முடிகிறது.
நம்பிக்கைகள்
பழந்தமிழர்கள் இயற்கைப் பொருளில்
தெய்வம் உறைந்துள்ளது என்ற நம்பிக்கை உடையவர்கள் என்பதினால் காட்டினையும் வழிபட்டுள்ளனர்.
அடர்ந்த மரங்கள் கொண்ட காட்டு வழியே செல்ல நேரிடும்போது, இடையூறுகள் ஏதும் ஏற்படாதவாறு
காடுறை தெய்வத்திற்கு வழிபாட்டுச் சடங்கினை செய்துள்ளதனை,
"பாடின பாணிக்கு ஏற்ப நாள்தோறும்
களிறு வழங்கு அதரகானத்து அல்கி
இலைஇல் மராஅத்த எவ்வம் தாங்கி
வலைவலந் தன்ன மென்நிழல் மருங்கில்
காடுஉறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை"5
என்ற பொருநர் ஆற்றுப்படை அடிகள் சுட்டுகின்றன.
இதில், காட்டு வழியாகச் செல்கின்றவர்கள், காட்டினில் உறைந்துள்ள கடவுளுக்குப் பலி தந்து,
அதன் மனம் மகிழ்கின்றவாறு பாடிச் சடங்குகள் செய்து, அதன் வாயிலாக அச்சம் தரும் வகையில்
பரந்து விரிந்துள்ள அத்துவானக் காட்டினில் திடீரென எவ்வித அசம்பாவிதமும் நிகழ்திடாமல்
காத்திட வேண்டும் என்று வேண்டி வழிபட்டுள்ளதை அறிய முடிகின்றது.
பழக்கவழக்கங்கள்
வாடைக்காலத்தில் மகளிர் சந்தனம்
பூசுவதில்லை. மலர்கள் புனைவதில்லை. மிகுதியான குளிர் கருதி தம் கரிய கூந்தலில் சில
மலர்களை மட்டுமே அணிந்தனர். அதற்காக சந்தனத்தை விறகாக்கி நெருப்பை வளர்த்து வயிரமுடைய
அகிலையும் கண்டசருக்கரையையும் அதிலிட்டு புகைத்தனர் என்பதனை,
"தென்புல மருங்கின் சாந்தொடு துறப்பன்
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
தண்நறும்தகரம் முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்அயிர் புகைப்ப"6
என்ற நெடுநல்வாடை பாடலடிகள் மூலம் பெண்கள் மேற்கண்ட
பழக்கங்களை உடையவர்களாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. மேலும், குழந்தை பெற்ற பெண்மணி
மான்தோலில் படுக்கும் பழக்கம் இருந்ததை,
"ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி"7
என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் அடிகள் வாயிலாக
அறிந்து கொள்ள முடிகிறது.
வணிகக் கூறுகள்
பழந்தமிழர்களிடையே
வணிகம் என்பது பண்டமாற்று முறையிலான வழக்கமே இருந்தது. முல்லை நில மக்கள் தங்களிடம்
உள்ள பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய
கால்நடைகளை வாங்கிக் கொண்டனர் என்பதை,
"தேன்நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்
தீங் கரும்பொடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்"8
என்ற பொருநராற்றுப்படைப் பாடலடிகள் வழியாக அறிந்து
கொள்ள முடிகின்றது.
தமிழ்நாட்டில் அக்காலத்தில் எல்லா ஊர்களுக்கும் நல்ல பாதைகள்
இருந்தன. வணிகர்கள் செல்லும் பெருவழிகளில் எல்லாம் காவலர்கள் காவல் காத்தனர். அத்துடன்
வரி வசூலிக்கும் சுங்கச் சாவடிகளும் இருந்தன என்பதை,
"அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின்"9
என்ற பெரும்பாணாற்றுப்படை பாடலடிகள் எடுத்தியம்புகின்றது.
தமிழகத்தில் மூன்று துறைமுகங்கள் இருந்துள்ளன. பாண்டிய நாட்டில் கொற்கை துறைமுகமும்,
சோழ நாட்டில் காவேரிப் பூம்பட்டினமும், தொண்டை நாட்டின் தற்போதைய மாமல்லபுரமாகிய எயிற்பட்டினமும்
துறைமுகமாக விளங்கின.
மேல் நாட்டிலிருந்து குதிரைகளும், சேர நாட்டிலிருந்து மிளகு,
சந்தனம், அகில் போன்ற பொருட்களும், வடநாட்டிலிருந்து பொன்னும், நவமணிகளும் வந்தன. பாண்டிய
நாட்டிலிருந்து முத்து, சங்கு வகைகளும், ஈழ நாடு மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து
பல்வகைப் பொருட்கள் சோழத்துறைமுகமான காவேரிப் பூம்பட்டினத்திற்கு வந்திறங்கியதையும்,
அவ்வாறு வந்த பொருட்களுக்கு சுங்கம் விதிக்கப்பட்டு சோழர்களின் முத்திரை பொறிக்கப்பட்டு
விற்பனை செய்யப்பட்டன என்பதை,
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி முடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப்பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகின்"10
என்ற பட்டினப்பாலை பாடலடிகள் அழகுற எடுத்தியம்புகின்றன.
உழவுத் தொழில்
காவிரியும்
அதன் கிளையாறுகளும் சோழ நாட்டை வளமாக்கியது. அதனால் தான் கரிகாலசோழன் கல்லணையைக் கட்டினான்.
இதனைப் பார்த்த மற்ற சோழ அரசர்களும் நீரினைத் தேக்கி வைத்து விவசாயத்தைப் பெருக்கினர்.
நிலத்தை உழுதனர். பின் நீர்ப்பாய்ச்சுதல்,
நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்ற பயிர்த் தொழிலுக்குத் தொடர்பான
வேலைகளைச் செய்தனர். ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் செந்நெல் விளையும் அளவுக்குப்
உழவுத் தொழில் சிறப்புற்று விளங்கியதாக,
"குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந் தெற்று மூடையின் இடம்கெடக் கிகட்கும்
சாலிநெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே"11
என்ற பொருநராற்றுப்படைப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.. இதனால் தான் "சோழநாடு சோறுடைத்து"
என்ற பழமொழி வழங்குவதாயிற்று.
நெல்லை அரிவதற்கு அரிவாள், பொருள்களை வெட்ட கத்திரிகை, உழவுக்கு
கொழு முதலானவை கொல்லர்களால் செய்யப்பட்டமையால் கொல்லர் என்றழைக்கப்பட்டனர் என்பதை,
"மயிர் குறை கருவி மாண்கடை அன்ன
கொல்லை உழுகொழு ஏய்ப்ப பல்லே
கூனி குயத்தின் வாய்நெல் அரிந்து"12
என்ற பொருநர் ஆற்றுப்படை அடிகள் வழியாக அறியமுடிகிறது.
இதன் மூலம் மேற்கண்ட கருவிகள் செய்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
உணவும் விருந்தோம்பலும்
பச்சரிசி
சோறு கட்டியாக இருப்பது நன்று. அதுபோல புழுங்கல் அரிசி சோறு ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும்,
ஒன்றை ஒன்று நெருங்காமலும் இருப்பது நன்று. நெல்லை உரலில் குத்திட இரும்புப்பூண் இட்ட
உலக்கைகள் பயன்படுத்தப்பட்டன. இப்படி உணவு பற்றிய, உணவு சமைப்பதற்குரிய நுணுக்கத்தை,
"காஎரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்"13
என்னும் சிறுபாணாற்றுப்படை பாடலடிகள் சுட்டுகின்றது.
மாவடுவை ஊற வைத்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலை இலையும்
கலந்து வேகவிட்டு ஊறுகாய் செய்யும் வழக்கம் இருந்ததை,
"சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளைஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறு வடி வதித்த
தகைமான் காடியின் வகைபடப் பெருகுவிர்"14
என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன.
விருந்தினர்களுக்குச் எயினக் குலப்பெண்கள், இனிய புலிக்கறி
இட்டுச் சமைத்த சோற்றை, காட்டுப்பசு இறைச்சியும் கலந்து சூட்டோடு தந்து உபசரித்துள்ள
செய்தியை,
"எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்"15
என்னும் சிறுபாணாற்றுப்படை பாடல் அடிகளின் வழியே
அறியமுடிகின்றது.
கரிகால்
பெருவளத்தான் பாணனுக்கு பரிசாகக் கொடுக்கும் சமயத்தில் அழகிய பூ வேலைப்பாடு அமைந்த
பாம்பு உரித்த தோல் போன்ற மெல்லிய உடையைக் கொடுத்து உடுத்தச் செய்ததை,
"நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கணிந்து
அர்வுஉரி அன்ன அறுவை நல்கி"16
என்னும் பொருநராற்றுப்படை வரிகள் வழியாக அறியமுடிகின்றது.
மேலும், கடை ஏழு வள்ளல்களுள் ஒருவரான காரி ஒளி வீசும் நீலநிறமுடைய நீல நாகம் கொடுத்த
உடையை, கல் ஆலமரத்தடியில் அமர்ந்த இறைவனுக்கே தந்துள்ளதனை,
"நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த"17
என்ற சிறுபாணாற்றுப்படை அடிகள் சுட்டுகின்றன.
தொண்டைமான் இளந்திரையன் பாணர்க்கு பாலாவி போன்ற நூலால் செய்த
உயர்ந்த ஆடை வழங்கியதை,
"ஆவி
அன்ன அவிநூல் கலிங்கம்"18
என்ற பெரும்பாணாற்றுப்படை பாடலடிகள் சுட்டுகின்றது.
மேலும், ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் தன்னை வந்து காண்கின்ற பாணர்க்கு மூங்கில் குழாய்க்குள்
இருக்கின்ற மெல்லிய ஒளிபொருந்திய தகடு போன்ற ஆடையைத் தந்ததாக,
"நீசில மொழியா அளவை மாசில்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ"19
என்ற சிறுபாணாற்றுப்படை அடிகள் சுட்டுகின்றது.
முடிவுரை
'ஆற்றுப்படை
நூல்களில் வாழ்வியல் கூறுகள்' என்னும் இவ்வாய்வில் ஆற்றுப்படையின் இலக்கியப் பொருள்
மற்றும் ஆற்றுப்படையின் இலக்கணம், ஆற்றுப்படையில் கூறியுள்ள வாழ்வியல் கூறுகளான வழிபாடுகள்,
சடங்குகள், நம்பிக்கைகள், பழந்தமிழரின் பழக்க வழக்கங்கள், அணிகலன்கள், வணிகக் கூறுள்,
உழவுத்தொழில், உணவு மற்றும் விருந்தோம்பல் பண்புகள், ஆடை அணிகலன்கள் ஆகியன குறித்த
செய்திகள் ஆராயப் பெற்று விளக்கப் பெற்றுள்ளன.
சான்றெண்
விளக்கம்
1.
தொல்.பொருள்.நூ.1037
2.
திருமுருகு.223-226
3.
பொருநர்.182-186
4.
பட்டினப்.86-89
5.
பொருநர்.48-52
6.
நெடுநல்.52-56
7.
பெரும்பாண்.88-89
8.
பொருநர்.214-217
9.
பெரும்பாண்.80-82
10. பட்டினப்பாலை
185–193
11. பொருநர்.244-248
12. பொருநர்.29,
117, 242
13. சிறுபாண்.238-241
14. பெரும்பாண்.306-310
15. சிறுபாண்.175-177
16. பொருநர்.82-83
17. சிறுபாண்.96-97
18. பெரும்பாண்.469
19. சிறுபாண்.235-236
துணை
நின்ற நூல்கள்
1.
சோமசுந்தரனார்.பொ.வே (உ.ஆ), 1971, பத்துப்பாட்டு
- மூலமும் உரையும் (தொகுதி-1 மற்றும் தொகுதி-2), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
சென்னை.
2.
அறிஞர்.ச.வே.சுப்ரமணியன், 1986, பத்துப்பாட்டு
மூலமும் தெளிவுரையும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை.
3.
இளம்பூரணர் (உ.ஆ), 2004, தொல்காப்பியம் (பொருளதிகாரம்),
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
4.
சிதம்பரனார்.சாமி, 2009, பத்துப்பாட்டும் பண்டைத்
தமிழரும், அறிவுப் பதிப்பகம், சென்னை.
5.
இளம்குமரன்.இரா, 1987, பாணர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
6.
காந்தி.க, 2003, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்,
உலகத்தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
No comments:
Post a Comment