Search This Blog

Wednesday, March 24, 2021

தொல்காப்பிய நோக்கில் குறுந்தொகையில் மருத்துவச் சிந்தனைகள்

தொல்காப்பிய நோக்கில் குறுந்தொகையில் மருத்துவச் சிந்தனைகள்

 

செ.சத்யா

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604 304. விழுப்புரம் மாவட்டம்.

தமிழ்நாடு - இந்தியா.

மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com

 

ஆய்வு நெறியாளர்

முனைவர். அ.சதீஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மயிலம் தமிழ் கல்லூரி.

 

முன்னுரை

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய குடி தமிழ்க்குடி. பண்டைத் தமிழரின் பண்பாட்டினையும், மொழியின் உயர்வினையும், அவர்களின் அறிவுத்திறனை இலக்கியங்களில் அவர்கள் பதிவு செய்துள்ள கருத்துக்கள் வழிக் காணலாகின்றது. இலக்கியம் காலத்தின் கண்ணாடி, வாழ்க்கையின் பிரதிபலிப்பு எனலாம். அவ்வகையில் இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பித்தில் உள்ள நோய் - பிணி பற்றிய மருத்துவச் சிந்தனைகள் தொடர்பான கருத்துக்களை சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகைப் பாடலடிகளில் பயின்று வந்துள்ளமையை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது.

திறவுச் சொற்கள் 

          குறுந்தொகையில் மருத்துவம், தொல்காப்பியம், நோய், பிணி, பசலை, மனநோய், மேனிநிறம், தலைவன் பிரிவு, தலைவி துயரம், தலைவி கூற்று, தலைவன் கூற்று, தோழி கூற்று.

தொல்காப்பியத்தில் நோய் பற்றியக் குறிப்பு

நோயின் குணத்தைக் கண்களால் காணமுடியாது. கருத்தினால் மட்டுமே அறிய முடியும் என்னும் செய்தியை தொல்காப்பியம் பதிவு செய்துள்ளதை,

"நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு

ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்"1 

"வாயுறை வாழ்த்தும் செவியறி வுறூஉம்"2

என்ற தொல்காப்பிய நூற்பா வழி அறிய முடிகின்றது. உறை என்பது மருந்தைக் குறிக்கும். வாயுறை என்பது வாய்வழியே அருந்துகின்ற மருந்து என்னும் பொருளைத் தரும். மேலும், உள்ளத்தின் சுழற்சியையும், மன இறுக்கத்தையும் தொல்காப்பியம் சுட்டுவதனை,

"அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி"3 

என்ற தொல்காப்பிய நூற்பா எடுத்தியம்புகிறது. மேலும், மனநோயின் குறிப்பாக தொல்காப்பியம் சுட்டுவதனை,

"பேஏய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்"4

என்ற தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கின்றது. இதில் பேய் பிய என்பது மனநோயின் குறிப்பாகும். மனநோய் மருத்துவம் தமிழ் மருத்துவத்தின் சிறப்பு மருத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே  தமிழர்கள் நோய் பற்றியும் அதற்கான மருத்துவ முறைகளையும் அறிந்திருந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

            நோய் என்பது உடலைப் பற்றியது அல்ல, மனம் சார்ந்தது என்று கூறலாம். உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தரும் நிகழ்வே 'நோயாகும்' என்பதைத் தொல்காப்பியர்,

"பையுள் சிறுமையும் நோயின் பொருள்"5     

என்ற தொல்காப்பிய நூற்பா அழகாக எடுத்தியம்புகின்றது. இதில், பையுள் என்பது உடல் மற்றும் உள்ளத்திற்கு ஏற்படும் மாற்றம் என்றும், சிறுமை எனக் கூறுவது மனத்தடுமாற்றம் என்றும் எடுத்துரைக்கின்றார்.

தொல்காப்பியம் குறிப்பிடும் நோய் - பிணி பற்றிய பொருள் வேறுபாடு

          தமிழில் 'நோய்' என்ற சொல் வழக்கு தொல்காப்பியர் காலத்திலிருந்தே நிலவி வருகின்றது என்றாலும், தொல்காப்பியர் காலத்தில் குறிப்பிடும் சொல் வழக்கில் 'நோய்' என்றால் 'வருத்தம்' 'துன்பம்' என்று தான் பொருள் கொள்ளப்படுகின்றது. ஆனால், இன்று 'நோய்' என்பது 'பிணி' என்னும் பொருளில் வழங்கப்படுகின்றது.

            தொல்காப்பிய நூற்பாக்களில் வரும் 'பிணி' 'நோய்' ஆகிய சொற்களை மிக நுட்பமாக ஆராய்ந்து பார்த்தோமானால்,

"நோய் மிகக் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந்தோளை"6

"நோயும் இன்பமும் இருவகை நிலையிற்

காமங் கண்ணிய மரலிடை தெளிய"7

என்ற தொல்காப்பிய நூற்பாக்கள் மன வருத்தத்தினை 'நோய்' என்னும் சொல் குறிப்பதையும்,

"மூப்பே பிணயே வருத்தம் மென்மையோடு

யாப்புற வந்த இளிவரல் நான்கே"8

எனும் தொல்காப்பிய நூற்பா உடல் வருத்தத்திணை 'பிணி' என்னும் சொல் குறிப்பதையும் அறிந்து கொள்ளலாம். அக்காலத்தில் விளங்கிய மருத்துவக் கலைச்சொற்களின் நுட்பத்தினைத் தொல்காப்பியம் தரும் மேற்கண்ட 'பிணி' 'நோய்' பற்றிய இலக்கண நூற்பா வழித் தெளியலாம்.

குறுந்தொகை கூறும் பசலைப் பிணி

தலைவனின் பிரிவால் தலைவியின் மேனி நிறம் மாறும். இப்பிணிக்குப் பெயர் பசலையாகும். இதனைப் 'பசலை பாய்தல்' என்று குறிப்பர். இதனை,

"பசலை நிறனாகும்"9

என்ற தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கின்றது. இங்கு தொல்காப்பியம் குறிப்பிடுவது பசலை எனும் பிணியையே ஆகும்.

            காதல் நோய் கண்ட மகளிர் மேனியில் உண்டாகும் நிற வேறுபாட்டினைப் 'பசலை' என்று சங்ககாலப் புலவர்கள் குறிப்பிடுவதனை,

"ஊருணி கேணி யுண்துறைத் தொக்க

பாசியற்றே பசலை காதலர்

தொடுவுழித் தொடுவுழி நீங்கி

விடுவுழி விடுவுழிப் பரத்தலானே"10

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றது. இப்பாடலடிகள், ஊர்மக்கள் கேணியிலுள்ள தண்ணீரை எடுக்கும் பொழுது அக்கேணியிலுள்ள பாசி விலகிவிடும். எடுக்காதப் போது பாசிப் படர்ந்து காணப்படுவது போல் தலைவன் தலைவியைக் கூடியிருக்கும் போது பசலை பாயாமலும் தலைவன் நீங்கிய போது பசலை பாய்ந்த மேனியுடன் தலைவி காணப்படுவாள் என்பதனை எடுத்துரைக்கின்றது.

தலைவன் பிரிந்த காலத்தில் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாக தோழியிடம் தலைவி எடுத்துரைப்பதனை, 

"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

நல்ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு

எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என் மாவைக் கவினே"11

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் சுட்டுகின்றது. இப்பாலடிகளில், வீணாக வழிந்தோடும் பசுவின் பாலை வெற்று நிலம் பருகுவதுப் போல், மாந்தளிர் போன்ற என் மேனியைப் பசலை நோய் பருகிக் கொண்டிருக்கின்றது எனத் தோழியிடம் எடுத்துரைப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

            தலைவன் பிரிவால், தலைவி தன் அழகை இழந்து, தோள் மெலிந்து, வருத்தத்துடன் பசலையுற்றுக் காணப்படுவதனை,

"தொல்கவின் தொலைந்து தோணலஞ் சாஅய்

அல்லல் நெஞ்சமோ டல்கலும் துஞ்சாது

பசலை யாகி விளிவது கொல்லோ"12

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றது. தலைவனோடு பழகியதின் விளைவு பழைய அழகு அழிய, தோளின் நலம் மெலிய, துன்பத்தையுடைய நெஞ்சோடு, இரவுதோறும் தூங்காமல், பசலையுற்று நாம் அழிவதுவோ? என்று தோழி உரைப்பதை எடுத்துரைக்கின்றது.

குறுந்தொகை காட்டும் மருந்து

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவர் விரும்பியதெல்லாம் கொடுக்காமல், நோயின் தன்மையறிந்து அதற்கேற்ற வகையில் மருந்தை ஆராய்ந்து உட்கொள்வதே மருந்தாகும். தலைவனது பிரிவால் மெலிந்திருந்த தலைவி இதற்கான சரியான மருந்து தலைவனின் மார்பே எனத் தோழியிடம் எடுத்துரைப்பதனை,

"பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்

ஊழ்ப்படு முதுகாய் உழையினம் கவரும்

அரும்பனி அச்சிரம் தீர்க்கும்

மருந்து பிறி தில்லைஅவர் மணந்த மார்பே"13

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றது. இப்பாடலடிகளில், குளிரையுடைய முன்பனிக் காலத்து நோயின் கொடுமையைத் தீர்க்க அவர் மார்பைத் தழுவுவதை விட என் உடல் மெலிவு நோய்க்கு வேறு மருந்து இல்லை என்றுரைப்பதில் தலைவனின் மார்பை மருந்தாகவும் பனியை நோயாகவும் அழகாக  எடுத்தாண்டுள்ளதை அறிய முடிகிறது.

            உடல் நோய் நீங்குவதற்கு மருந்து 'சாவா மருந்தாகிய அமிர்தம்போல்' என் காமநோய் தீர்வதற்கு மருந்து 'என் தலைவியே ஆவாள்' என்பதையும், தலைவியானவள் தலைவனுக்கு மருந்தாகப் பயன்படுவதையும்,

"மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே

அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுiலைப்

பெருந்தோள் நுணுகிய நுசுப்பில்

கல்கெழு கானவர் நல்குறு மகளே"14

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றது. பொருளில்லா வறுமை நீங்குவதற்கு செல்வம் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போலத் தீராத துன்பத்தை தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுபவள் தலைவி ஆவாள். அவளது மார்பும், அழகிய தோளும், சிறிய இடையும் 'துன்பம்' எனும் தீராத நோயினை தீர்க்கும் 'அற்புத மருந்தாகும்' எனத் தலைவன் தலைவியைப் போற்றுவதை அறிய முடிகிறது.  அம்மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை,

"பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்து முண்டோ மயலோ விதுவே"15  

என்கிறது குறுந்தொகைப் பாடலடிகள். இதில், பிரிந்தவர் கூடிப் புணர்வதை விட சிறந்த மருந்து வேறு உண்டா என்று வினவுகின்றது இச்சங்கப் பாடலடிகள்.

குறுந்தொகையில் பொருட்பிரிவுப் பிணி

            பொருள் தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தலைவன், தலைவி மீது தான் கொண்டுள்ள காதலுணர்வை,

"…………. நன்மா மேனி

புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்

மணத்தொறுந் தணத்துலு மிலமே

பிரியின் வாழ்தல் அதனினும் இலமே"16

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றது.  இப்பாடலடிகள், தான் தலைவியைப் பிரிந்தாள் அவள் மேனியின் எழில்நலம் வாடும், அவளது தோள்கள் மெலியும் அத்தகைய தன்மைகளைக் கொண்ட தலைவியைப் பிரிந்து வாழ்தல் இயலாது என்பதையும், பிரிந்தால் தன்னால் உயிர் வாழ முடியாது என்பதனைத் தலைவன் உணர்த்தக் காணலாம்.

தலைவன் பிரிவால் காமநோய் உற்று தலைவியின் தாமரை மலரைப் போன்ற மெல்லிய கண்கள் இரவு, பகல் உறங்காமல் வருந்தியதை,

"அதுகொல் தோழி காம நோயே

வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை

உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே"17

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றது. தலைவன் தன் உறக்கம் நீங்குவதற்குக் காரணமானான் என்று தலைவி குறிப்பிடுவதை சுட்டுகின்றது இப்பாடலடிகள்.

            தலைவன் இளமைக் கழிவதைக் கூடக் கருதாமல் பொருள் தேடிச் சென்று  விட்டான். இதனைப் பொறுக்க முடியாமல் தலைவி வருந்துவதை,

"இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்

இவணும் வாரார் எவண ரோவெனப்

பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்

தொகுமுகை இலங்கெயி றாக

நகுமே தோழி நறுந்தண் காரே"18

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் சுட்டுகின்றது. இதில், கார்காலத்தில் திரும்பி வந்து விடுவேன் என்றுரைத்துச் சென்ற தலைவன் கார்காலம் வந்த பிறகும் அவன் வரவில்லை என வருத்தத்துடன் தோழியிடம் எடுத்துரைப்பதனை விளக்குகின்றது.

குறுந்தொகை கூறும் உளப்பிணி

        தலைவியின் காமநோய் அவளுடைய உள்ளத்தை வருத்துகிறது. அவள் உறக்கமில்லாமல்  வாடுகிறாள் என்பதனை,

"முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்

அலமரல் அசைவளி அலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே"19

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றது. இப்பாடலடிகள், சுழன்று வருகின்ற தென்றல் காற்று என்னை வருத்தி நிற்க எனது உள்ள வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல், இரவில் ஊரார் அனைவரும் மனநிறைவுடன் உறங்கும்போது தான் மட்டும் உறக்கமின்றி தலைவனை எண்ணி வருந்துகிறாள். துலைவியின் வருத்தத்தை அறியாத இவ்வூரை அவள் கோபம் கொண்டு பேசுகிறாள்;  தன் இயலாமையை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

            தலைவிமீது தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும் மறந்து எப்பொழுதும் காம நோயுடன் தலைவி நினைவாகவே இருப்பதனை,

"இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக

நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்

கையில் ஊமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் நோன்றுகொளத் கரிதே"20

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் எடுத்தியம்புகின்றது. இப்பாடலடிகளில், கதிரவனின் வெயில் அடிக்கும் நேரத்தில் வெப்பமான பாறையினிடத்தே, கையில்லாத ஊமை ஒருவன் கண்ணால் பாதுகாக்க முயலும், உருகிய வெண்ணையைப் போல், எனது உள்ளத்தில் காமநோய் பரவியுள்ளது என்றும் அது பொறுத்துக்கொள்வதற்கு அரிதாக உள்ளதென்றும் தலைவன் தோழனிடம் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

            தலைவனின் தோளைத் தழுவி, இன்பமாக உறங்கிக் கொண்டிருந்த தலைவி, கோழி கூவியதால் பொழுது விடிந்ததை உணர்ந்து இனி, தலைவனைத் தழுவிக்கொண்டு உறங்கமுடியாதே என்று தலைவியின் நெஞ்சம் அஞ்சியதை,

"குக்கூ வென்றது கோழி அதன்எதிர்

துட்கென் றன்றென் தூஉ நெஞ்சம்

தோடோய் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே"21

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் சுட்டுகின்றது. வாளால் ஒரு பொருளை வெட்டினால் அது எப்படி பிளவுபடுமோ, அதுபோல், இந்த விடியற்காலம் என் தலைவரை என்னிடம் இருந்து பிரியச் செய்யும் என்று தலைவியின் மாசற்ற மனம் அஞ்சியதை எடுத்துரைக்கின்றது.

        தலைவனின் பிரிவால் நெஞ்சமெல்லாம் மிகுந்த துயர்பட்டு உடல் மெலிவுறும் தலைவியின் துன்பத்தை,

"காமந் தாங்குமதி யென்போர் தாமஃ

தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்

யாமெங் காதலர்க் காணே மாயிற்

செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

கல்பொறு சிறுநுரை போல

மெல்ல மெல்ல இல்லா குதுமே"22

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றது. நீர்நிலையிலே பெருகிய நுரையானது அலையின் மிகுதியால் கரையிலே  உள்ள கல்லில் மோதி உடைவதுப் போல தலைவனைப் பிரிந்த தலைவியின் உள்ளம் 'பிரிவு' எனும் கல்லில் மோதி சிறிது சிறிதாக உடைந்து அழிந்து போகின்றது என்று தலைவி எடுத்துரைப்பதனை அறிய முடிகின்றது.

குறுந்தொகை காட்டும் பசிப்பிணி

            கிளைத்த கொம்புகளையுடைய முதிய ஆண்மான், தன் கால்களால் உதைத்து தன் கன்றின் பசியாகிய நோயினைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, வளைத்த, பருத்த பெரிய மரப்பட்டையைத் தன் குட்டி உண்டபின், எஞ்சினால் தான் அதை உண்டு தன் பசிப்பிணியைப் போக்கிக் கொள்ளும் என்பதனை,

"நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்

சுவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்

பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல்

ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்

தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி

நின்றுவெயில் கழிக்கு மென்பநம்

இன்றுயில் முனிநர் சென்ற வாறே"23

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றது. இப்பாடலடிகளிலிருந்து மரப்பட்டையின் நீர் மானுக்கு உயிர் மருந்தாக பயன்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஆய்வு முடிவுரை

          செவ்வியல் இலக்கியத்தின் செம்மாந்த வளம்பெற்ற நூல்களில் குறுந்தொகை தனித்துவம் மிக்கது. செறிவான இலக்கிய நயம் கொண்ட பாடல்களைக் கொண்டது. தொல்காப்பியப் பொருளிலக்கண மரபுகளுக்கு இலக்கியமாகத் திகழும் பேறு பெற்றது. உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்பதனை தெய்வப்புலவர் அன்றே 'பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து'  கூறியுள்ளது நினைவு கூறத்தக்கது. குறுந்தொகையில் உளவியல் மற்றும் உடல் சார்ந்த நோய்க்கும் மருந்து வழங்கியுள்ளதையும், பழந்தமிழர்கள் மருத்துவம் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தனர் என்பதையும் இவ்வாய்வின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

சான்றெண் விளக்கம்

1.         தொல்.பொருள்.நூ.53

2.         தொல்.பொருள்.புறத்.35

3.         தொல்.சொல்.உயிரி.நூ.794

4.         தொல்.பொருள்.புறத்.77

5.         தொல்.சொல்.உயிரி.நூ.824

6.         தொல். அகத். நூ.39

7.         தொல். பொருள். நூ.196

8.         தொல். மெய்ப். நூ.254

9.         தொல். உரி. நூ.307

10.       குறுந். பா.399

11.       குறுந். பா.27

12.       குறுந். பா.381

13.       குறுந். பா.68

14.       குறுந். பா.71

15.       குறுந். பா.156

16.       குறுந். பா.168

17.       குறுந். பா.5

18.       குறுந். பா.126

19.       குறுந். பா.28

20.       குறுந். பா.58

21.       குறுந். பா.157

22.       குறுந். பா.290

23.       குறுந். பா.213

துணை நூற்பட்டியல்

1.    தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, 1934.

2.    குறுந்தொகை மூலமும் உரையும்,  டாக்டர்.உ.வே.சாமிநாதையர், டாக்டர்.உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 2017.

3.    நாகராஜன்.வி, குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2014.

4.    காந்தி.கு, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.

5.    சின்னசாமி, தமிழ்நாட்டு மருத்துவம், அறிவுப்பதிப்பகம், சென்னை, 2000.

6.    புலவர்.அ.மாணிக்கனார், சங்க இலக்கியம் மூலமும் உரையும், வர்த்தமான் பதிப்பகம், 1999.

7.    தொல்காப்பியம், கழக வெளியீடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1920.

8.    சங்க இலக்கிய நூல்கள் முழுவதும் உரையுடன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிட், சென்னை, 2007.


No comments:

Post a Comment