Search This Blog

Wednesday, July 29, 2015

தமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”- சிறப்புக்கட்டுரை...

தமிழ்மகன் “இராபர்ட் கால்டுவெல்”-
 சிறப்புக்கட்டுரை


இன்று (07.5.2014) தமிழ்த்தாயின் தலைமகன் “கால்டுவெல்” அவர்களின் 200-வது பிறந்தநாள்.அவரை பற்றிய சிறப்புக்கட்டுரை:

’’இந்த நாட்டை ஆண்டுவந்த ஆங்கிலேயர்களின் மூலமாகத்தான் நம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது. அந்த வகையில், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் நம்மைப்போல பலகோடி மக்கள்   இருந்தாலும் தமிழின் பெருமையை நிலைநாட்டிய பெருமை “இராபர்ட் கால்டுவெல்” என்ற ஆங்கிலேயர் ஒருவருக்குத்தான் சேரும்.

காலங்காலமாக தமிழறிந்த புலவர்கள் எல்லோரும், மன்னர்களையும், பணக்காரர்களையும் புகழ்ந்து பாடியும், கோவில், திருவிழாவில் புராணக்கதைகளை சொல்லியும் தங்களின் வயிற்று பிழைப்புக்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வந்தனர்.

தமிழ் மொழிக்கு உள்ள வரலாற்று, பழமை, தொன்மை, தனித்து நிற்கும் சொல்வளம் போன்ற பல சிறப்புதன்மைகள் நமக்கெல்லாம் முழுமையாக தெரியவில்லை. தெரிந்த சிலர் சொன்னதை உலகம் ஏற்கவில்லை, அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையின் நம்மவர்களால் சொல்ல முடியவில்லை. தெரியாமலிருந்த அல்லது மறைக்கப்பட்ட தமிழ்மொழியின் பெருமைகளையெல்லாம் எல்லாம் உலகுக்கு எடுத்துக்காட்டியவர் “இராபர்ட் கால்டுவெல்”

1834-ம் ஆண்டு மே 7-ம் நாள், அயர்லாந்து நாட்டின் "கிளாடி' ஆற்றங்கரையிலுள்ள “பெல்பாஸ்ட்” என்ற சிற்றூரில் பிறந்தவர் “இராபர்ட் கால்டுவெல்” இவருக்கு தரமான கல்வியை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில், கால்டுவெல்லை பள்ளியில் சேர்க்கும் வயதில், அவரது பெற்றோர்கள் தங்களின் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் கூட்டிக்கொண்டு போய் "கிளாஸ்கோ' நகரில் குடியேறினர்.


பள்ளியில் சேர்ந்து படித்த “கால்டுவெல்” தனது 16-வயதுக்குள், ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங் களைக் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சிறந்த ஓவியக்கலைஞரானார். தம் இருபதாம் வயதில், கிறித்துவ சமையப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் (Propagation of the Gospel Mission) சேர்ந்தார்.

அச்சங்கத்தின் சார்பாகக் “கிளாஸ்கோ” பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பியாவில் உள்ள பல மொழிநூல்களையும் சமய நூல்களையும் கற்று வந்தபோது, இவருக்கு  கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் “டேனியல் ஸ்டான் போர்ட்” என்பவர் கிரேக்க மொழியின் பெருமையை கால்டுவெல் நன்றாக புரிந்து கொள்ளும்படியும், ஏன் கிரேக்க மொழி செம்மொழியாக திகழ்கிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார். பின்னாளில், தமிழ் மொழியும் செம்மொழிதான் என்பதை ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்த “கால்டுவெல்” அவர்களின் ஆய்வுக்கு பெரும்துனையாகவும், வழிகாட்டி யாகவும் இருந்தவர் அப் பேராசிரியராவார்.

லண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப்பணிக்கென 1838-ல் "அன்னைமேரி' என்னும் கப்பலின் மூலமாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட கால்டுவெல், கப்பலில் வரும்போதே சி.பி.பிரெளன், என்னும் ICS அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே இந்தியாவில்  பணியாற்றிய அனுபவமுள்ளவர் என்பதால் அவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். கப்பலில் வரும்போதே பிரெளன் மூலமாக தமிழ் தெலுங்கு மொழிகளைக் கொஞ்சம் கற்றுக்கொண்டார் கால்டுவெல்.

சென்னை வந்த அந்த பெருமகனார் தமிழ் மீது கொண்ட காதலால், சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கி தமிழ்மொழியை கற்றுள்ளார். பின்னர், சமையப்பணியை தொடர முடிவு செய்த கால்டுவெல் நெல்லை அருகிலுள்ள இடையன்குடிக்கு சென்று பணியாற்ற அங்கு கிளம்பினார்.

பல்வேறு வட்டார வழக்குகளை கொண்டுள்ள தமிழ்மொழியின் பேச்சு வழக்கை தெரிந்துகொள்ளவும், தமிழ்மொழியின் மூலத்தை ஆய்வு செய்யவும் விரும்பிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்.

நடந்து செல்லும்போது, அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், பேச்சு, மொழி ஆளுமை, பிற மொழி கலப்பு   முதலானவற்றை அறியலாம் என நினைத்தவர். முதலில், சிதம்பரம் சென்றார், அங்கிருந்து மயிலாடுதுறை வழியாக தரங்கம்பாடிக்கு போய் அங்கே சில நாள் தங்கினார். “டேனிஷ்” கோட்டையில் நடைபெற்றுவந்த கிறித்துவ மிஷினரியினரின் பணிகளை பார்த்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்று, பெருவுடையார் கோவிலையும், மராட்டிய மன்னர் சரபோஜியால் தோற்றுவிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தையும் பார்வையிட்டார். அங்கிருந்த மக்களோடு சிலநாட்கள் தங்கியவர் தமிழில் முதல் நாவல் எழுதிய அறிஞரான மாயாவரம் வேதநாயம் பிள்ளை அவர்களையும் கண்டு உரையாடியுள்ளார்.

பின்னர், திருச்சிராப்பள்ளி வழியாக நீலகிரி மலைக்கு சென்றவர். அங்கு “ஸ்பென்சர்” எனும் கிறித்துவ மத பெரியாரை கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி, படுகர், தோடர் இனமக்களின் மொழியான பழங்கன்னடம் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர், கோவை, மதுரை வழியே நெல்லை மாவட்டம் இடையன்குடிக்கு சென்று அங்கு தங்கி சமையப் பணியாற்றினார். அன்றைய காலத்தில் இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கூரைவீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். உயர்ந்து வளர்ந்த பனைமரங்களும், கள்ளிச்செடிகளும், சுள்ளிச்செடிகளும் நிறைந்த இந்தப்பகுதியில் தங்கிய கால்டுவெல் பெருமகனார் அங்கே நாகரிகமான குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். தேவாலயம், வீடுகள், தெருக்கள், சாலைச் சந்திப்புகள், கிணறுகள் என அந்தக் கிராமத்தை திட்டமிட்டு அவரே வடிவமைத்தார். கிணறுகளை தோண்டி தண்ணீர் எடுத்தார். தெருக்களிலும், நிலங்களிலும் மரங்களை நட்டு அழகுபடுத்தினார். அவர் தன் வாழ்வின் இறுதிவரை மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டினார்.

மன்னர்கள் ஆட்சியின் போது எழுதவும், படிக்கவும் உரிமையில்லாமல் கிடந்த அந்தப்பகுதி மக்களுக்குக் தாய்மொழியை கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையின நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராக மாற்றினார். 1847-ல் அங்கு கிறித்துவ தேவாலயப்பணியைத் தொடங்கி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் கோவிலை கட்டி முடித்தார்.

சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடிக்கு வந்து ஒருவாரம் அங்கே  தங்கினார் என தெரிகிறது. மேலும், ஆலயதிருப் பணிக்கு 500-ரூபாய் நன்கொடை வழங்கியதாகவும் தெரிகிறது.

இடையன்குடியில் சமையப்பணியை தொடர்ந்தபடியே தமிழ், தெலுங்கு, கண்டம், மலையாளம், துளு, கூர்க், துதம், கோதம், கோந்த், ஓரியன், பிராகி மற்றும் வடமொழியாகிய சமற்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்து. இந்த மொழிகளிலிருந்து வேறுபட்டு தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்புகளை ஆய்வு செய்தார்.

மற்ற மொழிகளில் இல்லாத பல சிறப்பு தமிழில் இருப்பதை உணர்ந்த கால்டுவெல் அவர்களின் கவனம் தமிழ் இலக்கியங்களின் பக்கம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களிலும் அவர் பணியாற்றிய காலத்தில், அந்த பகுதியின் வரலாறு பற்றியும் ஆய்வு செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், உள் நாட்டு வெளிநாட்டு நாணயங்கள் முதலானவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.

மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவில் கிடைத்த தகவல்களை கொண்டு "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely)'' என்னும் நூலை எழுதினார். இது 1881-ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. "தொடக்க காலம் முதல் கி.பி. 1881 வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறுகளை கொண்ட இந்நூலில், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவோ, நிகழ்வுகளை ஆவணப்பூர்வமாக பதிந்துவைக்கும் அவசியமோ தெரியவில்லை என்ற பொதுவான  குற்றச்சாட்டுடன் தொடங்கும் கால்டுவெல், ஒன்பது பகுதிகளாக நூலை எழுதியிருக்கிறார். முதல் இயலில் மாலிக்காபூர் படையெடுப்பு, காயல் துறைமுகத்தில் நடந்த முத்துக்குளிப்பு என ஒவ்வொரு இயலையும் வரலாற்றுப் பூர்வமாக உருவாக்கியிருக்கிறார். கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் நிகழ்வு, ஊமைத்துரை, மருது சகோதரர்களை ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள், முகமது யூசுப்கானிடமிருந்து மதுரையை ஆங்கிலேயர் கைப்பற்றிய வரலாறு போன்றவை தெளிவாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந் நூலில், பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் குறிப்பிட்டுள்ள கால்டுவெல், பழந்தமிழரின் வாணிப நகரமாக இருந்த கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, துறைமுகத்தின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பை வெளிக்கொண்டுவந்தார்.

மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார். இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று தந்து ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என எழுதினார்.
இந்த காலகட்டங்களில், சிங்கள வரலாற்று இலக்கிய நூலான மகாவம்சம் நூலின் துணைகொண்டு ஈழ-தமிழக உறவுகளையும் கால்டுவெல் ஆய்வு செய்தார், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய பலகட்டுரைகளை ஆய்வு செய்தார். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனக்கண்டார்.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழகமெங்கும் தாம் மேற்கொண்ட பயணத்தின் வழியாக மொழிகளில் தனக்கு கிடைத்த தரவுகளை ஓன்று திரட்டிய “கால்டுவெல்” ஆய்வுக்கட்டுரைகளை எழுதினர். பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்து 1856-ல், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

அதில்,  மலையாளம், தெலுங்கு, கன்னடம்,துளு ஆகிய மொழிகளில் உள்ள சமற்கிருத மொழியின் கலப்பு குறித்த தனது ஆய்வில், இந்த மொழிக்கலப்பு உண்மையான தேவை குறித்து மேற்கொள்ளாது, காலக் கோளாறு விரும்பும் வெளிப்பாட்டுக் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது” என்று கூறினார். மேலும், தெலுங்கு, கண்டம், மலையாளம் ஆகிய மொழிகள் தத்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாது என்ற அளவு சமற்கிருத சொற்களை அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளன. ஆதலின், சமற்கிருத கலவைகளை கைவிடுவது தெலுங்கு மொழிக்கு அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனிலும் அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றை காட்டிலும் அரிதாம் என்றவர்.

ஆனால், திராவிட மொழிகளில் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் “தமிழ்” தண்ணிடையே இடம் பெற்றிருக்கும் சமற்கிருத சொற்களை அறவே ஒழித்துவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல், வளம் பெற்று வளர்வதும் இயலும், அவ்வாறு கைவிடுவது ஒன்றினாலேயே, தமிழ் மொழி முன்னைய நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக பெரு நிலையை பெற்றுவிடும் என்று கூறினார்.

“கால்டுவெல்” பெருமகனாரின் இந்த ஆய்வு நூல், தேவ பாஷையான சமற்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, மற்றதெல்லாம் நீஷ மொழிகள் என்று எளனம் செய்துகொண்டிருந்த வடமொழி ஆசிரியர்கள் எல்லோரையும் அடித்து தள்ளியது.

உலக அரங்கில் இருந்த அனைத்து மொழி அறிஞர்களும் “கால்டுவெல்” அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றனர். கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்பட்டது. கால்டுவெல் பெருமகனாரின் ஆய்வுப்பணிகளைக் கண்ட “கிளாஸ்கோ” பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதன் பிறகுதான், தமிழ் மொழியும் செம்மொழி தான் என்று உலகமே ஒத்துக் கொண்டது.

கால்டுவெல் அவர்கள் பல மொழிகளை கற்றவர், இந்தியாவுக்கு வந்தபின்னர் 15,மொழிகளைக் கற்றுக்கொண்டார். தமிழகம் முழுவதும் சுற்றிபயணம் செய்தவர். பல்வேறு இடங்களில் தமிழ் மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு போன்றவற்றையும், அவர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் நிரம்ப அறிந்தவர். கிறித்துவம் தவிர பல்வேறு சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி பல மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்.

இப்போதுள்ள நூல்களின் வரிசையில் திராவிடம் என்ற சொல் முதன்முதலில் கால்டுவெல் அவர்களால் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்(தமிழர்கள்) அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதை சரியான ஆய்வுகளின் படி உலகிற்கு காட்டியவர்.

தன்னுடைய குடும்ப வாழ்க்கையில், கால்டுவெல் தமது 29-வது வயதில், நாகர்கோவிலில் வாழ்ந்த “மால்ட்” என்பவரது மகளான எலிசா (வயது-21) என்ற ஆங்கிலேய பெண்ணை மணமுடித்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர். இடையன்குடியில் பெண்கள் கல்விகற்பதற்கும், மக்கள் சுகாதாரத்துடன் வாழவும், குடும்ப மேலாண்மையில் பெண்கள் முன்னேற்றம் காணவும் எலிசா பாடுபட்டார்..

தமிழகம் மட்டுமல்ல, கேரளம், கர்நாடகம், துளு, கூர்க் மொழியை பேசும் தென் கர்நாடகம், தெலுங்கு, ஒரிய, கோண்டு மொழியை பேசும் மக்கள் வாழும் வட ஆந்திரப்பகுதி என பல இடங்களுக்கும் சென்று தமிழ்மொழி ஆய்வு நடத்திய கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது. பெரும்பாலான இடங்களுக்கு நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் செல்லும் ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார்.

கால்டுவெல் தமிழகத்திற்கு வந்து தங்கிய பிறகு மூன்றுமுறை மட்டுமே தன்னுடைய தாய்நாட்டுக்கு சென்று வந்துள்ளார். தன்னுடைய வாழ்நாளை தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காவுமே ஒப்படைத்து பணியாற்றியுள்ளார்.  கி.பி. 1877-இல், திருநெல்வேலி மறை ஆயராக பொறுப்பேற்றுக் கொண்ட கால்டுவெல், 1891-சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்று கொடைக்கானல் சென்று தங்க முடிவு செய்தார்.

அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லாத நிலையில், அம்மைநாயக் கனூரில் இருந்து கடும் மலைப்பாதை வழியாக நடந்தே சென்றார். அங்கே தங்கியிருந்த போது கடும் குளிரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கால்டுவெல் அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். பின்னர், அவரது உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் அமைத்த கோயிலிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

கல்வி, சுகாதாரம், பொருளாதார வசதிகளில் நம்மைகாட்டிலும் பல மடங்கு உயர்ந்த நிலையிலிருந்த இங்கிலாந்தில் படித்து பட்டம் பெற்ற ஒருவர் அங்கிருந்த எந்த வசதியுமில்லாத தமிழகத்தின் கிராமங்களில் கால்நடையாக சென்று மதம், கடவுள், பேய், பிசாசு என்ற மூடநம்பிக்கைகளிலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளில் சிக்கிக்கிடந்த இந்த மண்ணில் வாழ்ந்துவந்த மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அதை உலகின் பார்வைக்கு கொண்டு சென்று தமிழ் மொழிதான் உலகின் முதல்மொழி என்று அடையாளம் காட்டியவர்.

இன்று (07.5.2014) தமிழ்த்தாயின் தலைமகன் “கால்டுவெல்” அவர்களின் 200-வது பிறந்தநாள்.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செய்யகுரிய செயகலா தார்”

என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கேற்ப கால்டுவெல் பெருமகனார் தமிழுக்கு பணியாற்றிய பல சான்றோர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழர்கள் “கால்டுவெல்” என்ற அந்த பெருமகனை மறக்க மாட்டார்கள்.

ஆம், அவர் இடையன்குடியிலே இருந்து தமிழர்களோடு, தமிழர்கள் உள்ளவரை வாழ்வார்.

நன்றி : நக்கீரன் 

சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை,
சோலார் மெட்ரிக் பள்ளி,
ரோஷனை,
திண்டிவனம் - 604 001.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

Tuesday, July 28, 2015

காந்தியடிகளுக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டிய தில்லையாடி வள்ளியம்மை...

தில்லையாடி வள்ளியம்மை...


காந்தியடிகளுக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டிய தில்லையாடி வள்ளியம்மை...

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளிவள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்தவர் வள்ளியம்மை.

வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத் தேடி அலைந்தனர். அங்கிருந்த தென்னாப்பிரிக்க நீக்ரோ தொழிலாளர்களோ அடிக்கடி வெள்ளை முதலாளிகளோடு முரட்டுத்தனமாக சண்டையிட்டு வந்தனர். அதனால் தங்களது ஆதிக்கத்தில் இருந்த இந்தியா போன்ற பிற காலனி நாடுகளிலிருந்து பண்ணைத் தொழிலுக்கேற்ற கூலிகளை இறக்குமதி செய்துகொண்டனர்.

அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்திலிருந்து கப்பலேறி தென்னாப்பிரிக்காவிற்கு தன் மனைவி மங்களத்துடன் சென்றவர்தான் முனுசாமி முதலியார்.

பிறப்பு: நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரித்தானிய ஆட்சியில் ஒரு கூலித் தொழிலாளியாக தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கினார். அங்கு தான் பிப்ரவரி 22. 1898 ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தார்.

எதிர்கால இன்பக் கனவுகளோடு தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியத் தொழிலாளர்கள் அங்கே வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்தியர் ஒவ்வொருவரும் அங்கே வாழ 3 பவுன் வரி செலுத்தினால்தான் அங்கே வாழ முடியும். வாக்குரிமை கிடையாது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழையக்கூடாது. வெள்ளையர் பள்ளிகளில் படிக்கமுடியாது. வெள்ளையர்களுடன் சமமாக அமர்ந்து பயணம் செய்யக்கூடாது, கிறிஸ்துவ மதப்படி நடந்த திருமணங்கள்தான் செல்லும் இப்படியெல்லாம் ஒடுக்கப்பட்ட இந்தியக்குடிகள் வாழும் பகுதிகள் சேரிகளாகப்பட்டன. சுகாதார வசதியின்றி நோய்களும் பரவின.

இந்தச் சூழலில்தான் 1893 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். தாதா அப்துல்லா கம்பெனிக்கான வழக்குகளை ஓராண்டிற்குள் முடித்துத் திரும்பும் எண்ணத்துடன் சென்றவர், அங்கே இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறினார். அதை எதிர்த்துப் போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார்.

அப்போது தென்னாப்பிரிக்க ‘கேப் உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பு கொடுத்தார். அந்த நாட்டில் இனி ‘கிறிஸ்தவ சடங்குப்படியும், திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும். மற்ற எந்தத் திருமணமும் செல்லாது என்பதே அந்தத் தீர்ப்பு.

இதனால் அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் அனைத்தும் செல்லாது என்றும், அவர்கள் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினைக் கண்டு இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்கினர். காந்திஜி இவர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட எல்லா பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மை சென்று வந்தாள். காந்தியின் சொற்பொழிவுகள் வள்ளியம்மை நெஞ்சில் ஆழப்பதிந்தன. விடுதலைக் கனலை விரைந்து மூட்டின.

புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இது வள்ளியம்மையின் தன்மான உணர்வைத் தாக்கியது. வெள்ளையரின் நிறவெறியை எதிர்த்து அண்ணல் காந்தியின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் வள்ளியம்மை.

அதுவரை, போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து வந்த காந்திஜி, இந்தப் போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். ஏனெனில், ‘‘இந்த திருமணச்சட்டம் பெண்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கட்டிய மனைவியையே அங்கீகாரமில்லாத நிலைக்கு ஆளாக்கி, குழந்தைகளின் வாழ்வுரிமையையும் பறிக்கும் வன்கொடுமைச் சட்டம் இது’’ என்றார் காந்தி.

1913 ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. ஆவேச முழக்கத்துடன் ஆங்கில அரசின் நிறவெறித் திமிருக்கு எதிராக அணி திரண்டு கிளம்பியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் கஸ்தூரிபா, வள்ளியம்மை, வள்ளியம்மையின் தாயார்.

வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்!’ என்று வள்ளியம்மை முன் வரிசையில் நின்று முழங்கிய முழக்கம் ஏனைய சத்தியாகிரகிகளை எழுச்சிகொள்ளச் செய்தது! ‘எங்கள் தேசத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று பிரிட்டிஷ் அரசு பேசி வந்த ஆணவத்திற்கு அன்றுதான் அஸ்தமனம் தொடங்கியது. காலனி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் அழுந்திக் கிடந்த ஒரு சமூகம் அன்றுதான் வீறிட்டெழுந்தது.

ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன் முன்னேறியது.

நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோது, தன் இளவயது காரணமாக ஓடியாடி, தன் உடன் வந்த சத்தியாகிரகிகளுக்கு வள்ளியம்மைதான் இயன்றவரை தொண்டு செய்தாள்.

நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு முழங்கினார் காந்தி. உடனடியாக வேலை நிறுத்தம் செய்தனர். தமது தமிழ்மக்களின் ஒத்துழைப்பைக் கண்டு மேலும் உற்சாகமானாள் வள்ளியம்மை.

போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் நகர எல்லைக்குள் நுழைந்தபோது, எல்லோரும் கைது செய்யப்பட்டு 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அனைவரும்சிறையில் அடைக்கப்பட்டனர்.

   பதினாறு வயதான வள்ளியம்மையும் கடுங்காவல் தண்டனையை ஏற்று சிறைக்குச் சென்றாள். ஆனால் சிறை அதிகாரிகளோ அவளிடம் கடுமையாக வேலை வாங்கினார்கள். சிறையிலே சுகாதாரக் கேடான சூழ்நிலை. சிறை அறையில் தலைமாட்டிலே ஒரு மண்சட்டி, அதற்கொரு மூடி, அதிலேதான் மலஜலம் கழித்துக்கொள்ள வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் அதைக்கொண்டு போய் போட்டுவிட்டு, சட்டியைச் சுத்தம் செய்துகொண்டு வரவேண்டும். தகுந்த மருத்துவ வசதியும் இல்லை.

மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை நோய்க்கு ஆளானாள். உடல்நலம் பாதிக்கப்பட்டாள். ‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’ என்றான் வெள்ளை மனம் இல்லா வெள்ளைக்கார சிறை அதிகாரி.

‘‘அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டாள் வள்ளியம்மை.

அடுத்த சில நாட்களில் அவளது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவள் கவலைக்கிடமான நிலைமைக்கு ஆளாகி விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். அதனால், தண்டனைக் காலம் முடியும் முன்பே, அவசரம் அவசரமாக வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மிகவும் பலவீனமான நிலையில் இருந்த அவளை ஒரு ஜமுக்காளத்தில் கிடத்தி வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.

மறைவு: விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த அந்தத் தீபம், பத்தே நாள்களில் அதாவது 22.02.1914-ல் அணைந்து போனது. ஆனால், போராட்டம் வலுப்பெற்றது. தன்னலம் கருதாமல் போராடிய இளம் வள்ளியம்மையின் மறைவு காந்தியை வெகுவாகப் பாதித்தது.

இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் காந்தி ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய _ துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’என்று மனமுருகி எழுதினார்.

ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்தி. வாழ்நாள் முழுவதும் வள்ளியம்மையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

தனது சுயசரிதையில் பல இடங்களில் வள்ளியம்மையை நினைவுகூர்ந்து துக்கம் தாங்காமல் எழுதுகிறார் காந்தி.

தன் உயிரைக் காத்த வள்ளியம்மையை காந்தியால் எப்படி மறக்கமுடியும்? ஆம்! ஒருமுறை சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, வெறிபிடித்த வெள்ளையன் ஒருவன் காந்திஜியைச் சுட துப்பாக்கியை உயர்த்திய போது, வள்ளியம்மை திடீரென்று ஓடிவந்து காந்தியின் முன்னால் நின்று கொண்டு, ‘‘இப்போது காந்தியைச் சுடு, பார்க்கலாம்!’’ என்றாள் ஆவேசமாக! அவளது நெஞ்சுரம் கண்டு அந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிப் போனான் என்றும் மேலும் இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக சரித்திரத்தில் வள்ளியம்மாவின் பெயரும் நீங்கா இடம் பெற்றிருக்கும்" என்று காந்தி குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி, உயிர் விட்ட முதல் போராட்டக்காரர் தில்லையாடி வள்ளியம்மை. பதினாறே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

காந்திஜி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எல்லாக் கூட்டங்களிலும் வள்ளியம்மையின் தியாகத்தைக் குறித்துப் பேசினார். அவள் பிறந்த தில்லையாடி கிராமத்திற்குச் சென்று, அவளது உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.

"தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன் எதிர்நின்று அன்று தன்னைக் காப்பாற்றிய வள்ளியம்மை இன்று இந்தியன் கோட்ஸே சுட்டுக் கொல்லும்போது குறுக்கே பாய்ந்து காப்பாற்ற நம்மருகே இல்லையே....!" என்று காந்தி தனது கடைசி மூச்சின்போது நினைத்திருப்பாரோ...?

    1997-ல், வள்ளியம்மையின் நூற்றாண்டின்போது ஜோகன்ஸ்பர்க் நகரில் நெல்சன் மண்டேலா முயற்சியால் வள்ளியம்மையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு விழா எடுக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது நமக்கு மற்றொரு பெருமைதானே!


நினைவு மண்டபம்: தமிழக அரசு தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அண்ணல் காந்தியடிகள் தில்லையாடிக்கு 01.05.1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில்தான் தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் மார்பளவு சிலை ஒன்று முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.
நன்றி:-  தினமணி - கல்வி மணி.
சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை,
சோலார் மெட்ரிக் பள்ளி,
ரோஷனை,
திண்டிவனம் - 604 001.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

அப்துல் கலாம் வரலாறு - தேசமே கண்ணீரில் மிதக்கிறது - பாரதத்தின் கலங்கரை விளக்கம் சாய்ந்தது...

தேசமே கண்ணீரில் மிதக்கிறது - பாரதத்தின் கலங்கரை விளக்கம் சாய்ந்தது...
அப்துல் கலாம்  வரலாறு


குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை (27-07-2015)  மாலை உயிரிழந்தார்.

இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையின் இயக்குநர் ஜான் சாலியோ ரயான்தியாங் கூறியபோது, 'நாடித்துடிப்பு அடங்கிய நிலையில்தான் கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது' என்று தெரிவித்தார்.

தகவல் அறிந்து மேகாலய ஆளுநர் சண்முகநாதன், மாநில தலைமைச் செயலாளர் வாஜ்ரி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.
பின்னர் தலைமைச் செயலாளர் வாஜ்ரி நிருபர்களிடம் கூறியபோது, 'அப்துல் கலாமின் உடல் செவ்வாய்க்கிழமை காலை டெல்லிக்கு கொண்டு செல்லப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோயலுடன் ஆலோசனை நடத்தி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

அப்துல் கலாமின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கலாமின் மறைவு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசமே கண்ணீர் வடிக்கிறது.

வாழ்க்கை வரலாறு:-

தமிழகத்தின் ராமேஸ்வரம் நகரில் கடந்த 1931 அக்டோபர் 15-ம் தேதி அப்துல் கலாம் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாபுதீன், தாயார் ஆஷியம்மா.
ராமேஸ்வரத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அவர் மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954-ல் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

1955-ம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு படித்தபோது விமானியாக வேண்டும் என்று கலாம் ஆசைபட்டார். அதற்கான தேர்வில் அவர் 9-வது இடம்பெற் றார். ஆனாலும் விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏவுகணை விஞ்ஞானி:-

சென்னை எம்.ஐ.டி.யில் உயர் கல்வியை முடித்த அவர் 1960-ம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

முதலில் இந்திய ராணுவத் துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) அவர் தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். அங்கு 1980-ம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற் றினார். அவரது சேவையைப் பாராட்டி 1981-ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அடுத்து 1990-ல் பத்ம விபூஷண் விருதைப் பெற்றார். 1963 முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினரா்.
பின்னர் 1999-ம் ஆண்டில் பொக்ரான் அணுஆயுத சோதனை யில் கலாம் முக்கிய பங்காற்றினார். இதேபோல அக்னி, பிருத்வி, ஆகாஷ் உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களில் முக்கிய பணியாற்றி உள்ளார்.

அவரை கவுரப்படுத்தும் விதமாக 1997-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவை தவிர 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ஏராளமான சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள் ளார்.

மக்களின் குடியரசுத் தலைவர்:-

கடந்த 2002 ஜூலை 25-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்றார். 2007 ஜூலை 25-ம் தேதி வரை அவர் பதவி வகித்தார்.

அவர் விஞ்ஞானியாக பணியாற் றியபோது இந்தியாவின் ஏவுகணை தந்தை என்றும் குடியரசுத் தலைவராக இருந்தபோது மக்களின் குடியரசுத் தலைவர் என்றும் போற்றப்பட்டார்.

குடியரசுத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைய தலைமுறையினருக்காக பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

கலாம் எழுதிய புத்தகங்கள்:-

சிறந்த எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.


இறுதி வரைக்கும் பிரம்மச்சாரி யாக வாழ்ந்த கலாம் மறைந்தாலும் அவரது எளிமையான வாழ்க்கை, இனிமையான பேச்சால் இந்திய மக்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

*********************************************************************************

வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.

‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு பேசினார் அந்த ஆசிரியர். அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஆம், அவரிடம் அடிவாங்கிய மாணவன், பள்ளிக்கும் ஊருக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். அந்த மகத்தான மாணவன் வேறு யாரும் அல்ல.. அவர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.

பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலைமுறைக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

பள்ளி விடுமுறை நாட்களில், தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையைக்கூட செய்துள்ளார். ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலும், அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டியில் வானூர்தி பொறியியலும் படித்தார். கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது , தனது நகைகளை அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி ஆசியம்மாள்.

1958-ம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர்.

அறிவியல் ஹீரோ

1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி மதியம் 3.45 மணி.. இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் நம் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா கலாம்தான். அதன்பிறகுதான் இந்திய பத்திரிகைகளில் தலையங்கம், கார்டூன், கவர் ஸ்டோரி என பிரபலமாகிப் போனார் கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடு களின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் பதிந்தது.

ஏவுகணை அவசியம்
‘நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டலுக்கு பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்’ என்று கூறிய கலாம், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமையின் சிகரம்

ஒருமுறை சென்னை குரோம்பேட்டை எம்ஐடியின் பொன்விழா ஆண்டு நிறைவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் கலாம். தாம் பயின்ற கல்லூரியிலேயே, உரையாற்ற வந்தார் அவர். நெடுஞ்சாலையில் இருந்து எம்ஐடி வளாகத்தினுள் செல்ல, ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த நேரத்தில், ஏதோ ஒரு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அவரது கார் கேட்டுக்கு அந்தப் பக்கமாக நின்றுவிட்டது.

ரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். காலம் தவறக் கூடாதே, குறித்த நேரத்தில் மேடையில் இருந்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில், காரை விட்டு இறங்கினார். கேட்டுக்குக் கீழே குனிந்து , தண்டவாளத்தைத் தாண்டி நடக்கலானார். உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, ‘டாக்டர் கலாம் போறார்...’ என்று அவர் பின்னாடியே ஓடிவந்தார்களாம். மறுநாள் பத்திரிகைகளில் இதுதான் சிறப்புச் செய்தி. 

இசைப்பதும் ரசிப்பதும்

உண்மையில் விஞ்ஞானி கலாம் ஒரு சிறந்த இசைஞானி. ரசிப்பதில் மட்டுமல்ல, வாசிப்பதிலும். வீணை வாசிப்பதில் தேர்ந்த கலைஞானி. தமது சொந்த ஊரான ராமேசுவரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு , பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்து விட்டுத் திரும்பும் பழக்கமும் இன்னும் அவரிடம் இருந்தது. இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேறியது.

வாருங்கள் இளையோரே

‘நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்’ என்று இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்தவர் கலாம்.

நிறைவேறாத கனவு

உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார். கலாமுக்கு நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.

பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

ராமேசுவரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறு கிறார்கள். அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்குதான் செல்ல வேண்டும். மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் பெரும்பான்மையான மீனவ மாணவர்கள் 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின்றனர்.

அப்துல் கலாமின் விருப்பத்துக்கேற்ப அவரது பெயரில் ராமேசுவரத்தில் அரசு கல்வி நிறுவனத்தை திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறப்பதுடன், இந்த கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக்கான கலாம்கள் உருவாவார்கள். இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். 


சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை,
சோலார் மெட்ரிக் பள்ளி,
ரோஷனை,
திண்டிவனம் - 604 001.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்...

பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்...


முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ( வயது 84 ) மேகாலயாவில் காலமானார்.  தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.  

மேகாலயாவில் கருத்தரங்கில் பங்கேற்றபோது தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்தார்.   உடனே, ஜில்லாங்கில் உள்ள பெதானி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.  அங்கு  தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.  

இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவராக இருந்தவர் கலாம். 2002 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுதலைவராக இருந்தார்.  

84 வயதாகும் அப்துல்கலாம்,  1931- ம் ஆண்டில்  ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.  இவர் இந்திய ஏவுகணையின் தந்தை என்று புகழப்படுகிறார்.


அக்டோபர் 15,1931ல் பிறந்த இவர்,  ஜீலை 27, 2015ல் மறைந்தார்.   பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும்,  விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 

1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். 

கலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது, பாட்னா , அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றுவதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். 

ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கெளரவ டாக்டரேட் பட்டங்களைப் பெற்றுள்ளார் . இந்திய அரசு கலாம் அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில்,பத்ம பூஷண் விருதையும் , 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் கொடுத்துக் கௌரவித்தது.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா-வை , விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.



தொகுப்பு :-
சத்யாசெந்தில்,தமிழ் ஆசிரியை,சோலார் மெட்ரிக் பள்ளி,ரோஷனை,திண்டிவனம் - 604 001.விழுப்புரம் மாவட்டம்,தமிழ்நாடு - இந்தியா.

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் …..

மக்களின் ஜனாதிபதி"அப்துல் கலாம்50 தகவல்கள்.




1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவமாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூவை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘ லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று (ஜீலை 27, 2015ல் திங்கட்கிழமை)  அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.



சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை,
சோலார் மெட்ரிக் பள்ளி,
ரோஷனை,
திண்டிவனம் - 604 001.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.