Search This Blog

Thursday, January 30, 2014

திருக்குறளின் அதிசியங்கள்:-

இந்திய அதிசயங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு…




இந்திய அதிசயங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு…


இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.




 

இந்த அதிசயக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகளைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.

 

  

இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).



இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.



இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.



 

ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.



அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார் (The Ancient Step wells of India by Morna Livingston).



தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி, 
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

Sunday, January 26, 2014

குடியரசு தின வாழ்த்துகள்! 

 

 

நம் நாடு முழுவதும் இன்று 65 வது குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த நம் இந்தியாவை தம் குருதி மட்டுமல்லாமல் இன்னுயிரையும் ஈந்து, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த தன்னலமற்ற தலைவர்களை நினைவுகூர்ந்து வணங்க வேண்டிய நாள் இது. வியாபாரம் செய்ய உள்ளே வந்து நம் நாட்டையே பிடித்துக் கொண்டவர்களிடமிருந்து அகிம்சை முறையில் போராடி 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் தேசத் தலைவர்கள். விடுதலைக்குப் பிறகு, நம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மக்களாட்சியை மலரச் செய்ய முயன்றனர். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தின, கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்கள்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் தம் தாய்த் திருநாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


இந்நந்நாளில் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தத்தோடு சில வற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் நாடு பொருளாதாரத்தில் வளமிக்க நாடாக உயர்ந்துள்ளது. அங்கு தனி மனித வருமானமும் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாயில் அதிகமாகி உள்ளது. இரண்டாம் உலகப் போரால் முற்றிலும் சிதைந்துபோன ஜப்பான் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் நம் நாட்டின் நிலையை எண்ணும்போது அந்த மகிழ்ச்சிக்கான முகாந்திரமே இல்லை. பாரதி கூறிய, ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற நிலை வேண்டுமானால் மாறியுள்ளதே தவிர, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இன்னும் நம்மால் வர இயலவில்லை. இன்னும் எவ்வளவு காலம்தான் வளரும் நாடுகள் பட்டியலிலேயே நாம் இருந்து கொண்டிருப்போம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் இந்த குடியரசு ஆட்சி, மக்களுக்காகத்தான் ஆட்சி செய்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. எங்கும், எதிலும் ஊழல். என்ற இன்றைய நிலையைத் தவிர்த்தாலே நம் நாடு வெகு விரைவில் வல்லரசு ஆவது உறுதி. நமது நாட்டில் அறிவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கும்கூட பஞ்சமில்லை என்பது சந்திரனுக்கு அடுத்ததாக செவ்வாய்க் கிரகத்திற்கும் ஆய்வுக்காக விண்கலத்தை அனுப்பியதன் மூலமாக நிரூபித்துவிட்டோம். பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்கள் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். உலகிலேயே, பொருளாதார அடிப்படையில் வலிமை மிக்க நாடான அமெரிக்காவின் வளர்ச்சியில் நம்முடைய இந்தியர்களின் பங்கு மிக அதிகம். ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை இனம் கண்டு பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றாலும், ஆட்சியில் இருப்பவர்கள் பொது மக்களுக்காக அன்றி தனிப்பட்ட முறையில் வெகு சிலருக்காகவே சேவை செய்கிறார்கள். இந்த நிலை மாறி மக்கள் இவர்களைத் தட்டிக்கேட்கும் உரிமையைப் பெற வேண்டுமானால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்காக, பணமாகவோ அல்லது , பொருளாகவோ எந்த வகையிலும் இலவசங்களைப் பெறாமல் இருக்க வேண்டியது அவசியம். அப்படிப் பெற்றால் அதுவும் ஒரு வகையில் லஞ்சம்தான். இதனால் நாம் நம் கண் முன்னால் நடக்கும் தவறைத் தட்டிக்கேட்டும் உரிமையை இழந்துவிடுகிறோம். இந்த குடியரசு தினத்தில், மக்களுக்காக யார் தங்கள் தன்னலமற்ற சேவையை வழங்குகிறார்களோ, அவர்களைத்தான் வெற்றி பெறச் செய்வோம் என்று சூளுரைப்போம். மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், முழுமையான அமைதி ஆகியவைகள் தொடர்ந்து நிலவிட, தேசபக்தி உணர்வோடு இந்த குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம் .


வாழ்க குடியர்சு! வெல்க ஜனநாயகம்! ஜெய்ஹிந்த்!
 
 
 
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி, 
                                மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

 

Wednesday, December 12, 2012

மென்பொருள் துறையில் பணிசெய்யும் மாப்பிள்ளையைத் தேடும் பெண்களுக்கு…! (நகைச்சுவை)

மென்பொருள் துறையில் பணிசெய்யும் மாப்பிள்ளையைத் தேடும் பெண்களுக்கு…!



இராணி: என்னடி திடீர்னு ரொம்ப நாள்கழிச்சு பேசிருக்க என்ன விசயம்?

வாணி: வீட்ல மாப்பிள்ளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல பதிவு பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை தேர்வு பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

இராணி: இதில் என்ன குழப்பம்?

வாணி: நிறைய பொறியாளர்கள் சாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் மென்பொருள் துறையில இருப்பவங்க வேற துறைல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை தேர்வு பண்றதுனு தெரியல. நீதான் அதே துறைல இருக்கியே . எனக்கு கொஞ்சம் யோசனை சொல்லு.

இராணி: சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன வேலைனு சொல்லு.

வாணி: முதல் மாப்பிள்ளை திட்ட மேலாளர் (Project Manager) இருக்காரு.

இராணி: மேலாளரா? அப்படினா எப்பவுமே எதோ வேலையா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது இராத்திரி பகலா உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா இராத்திரி வண்டி (CAB) ஏற்பாடு பண்றேனு சொல்லுவாரு. டேய் இராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வாணி: ஆகா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப வேண்டாம். அடுத்து இருக்கறவரு சோதனையாளர் (Test Engg).

இராணி: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் சரியா சொல்லுவாரு. நீ பத்து வகை சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன்
வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வாணி: அப்ப இவருக்கும் “போ போ” சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு செயல்திறன் சோதனையாளர் (Performance Test Engg).

இராணி: இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட்டா, காபி நல்லா இருக்கானு பார்க்கமாட்டாரு. 5 நிமிசத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிச மா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது வேற, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வாணி:  அப்ப பொறியாளர் வேண்டாம்னு சொல்றியா?


இராணி: யார் அப்படி சொன்னா? அதுல இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் உருவாக்குபவர்(Developer) கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வாணி: அவுங்களை பத்தி சொல்லேன்.

இராணி: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம “அறிவாளி” படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு “நீ ரொம்ப நல்லவனு” சொல்லனும். அவ்வளவு தான்.

வாணி: இது அருமையா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்.




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி, 
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.