Search This Blog

Saturday, December 8, 2012

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்!...

 தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்:-

1.கரிகால் பெருவளத்தான் என்ற சோழமன்னன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டை ஆண்டான். இமயம் வரை சென்று அங்கே புலிக்கொடி பொறித்தான். ஒரு நாள் அவனது அவைக்கு ஒரு வழக்கு வந்தது. கரிகாலன் இளம் வயதில் பட்டம் ஏற்றவன். வழக்கை விசாரிக்கும் மன்னன் ஒரு இளைஞன் என்பதைக் கண்ட வாதிக்கும், பிரதிவாதிக்கும் முகம் கோணியது. இந்தச் சிறுவனா இந்தச் சிக்கலான வழக்கைத் தீர்க்கப் போகிறான் என்று எண்ணித் தயங்கினர். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரிந்ததைக் கண்ட கரிகாலன், அவர்களை மறுநாள் வரும்படி பணித்தான். மறுநாள், தானே நரைமுடி தரித்தான். ஒரு முதியவர் போல வேடமணிந்து வந்து அமர்ந்தான். ஒரு முதியவரை வழக்கை விசாரிக்க அனுப்பியிருக்கிறான் என்று கருதிய வாதியும், பிரதிவாதியும் அவர்களுடைய வழக்கை வாதப் பிரதிவாதங்களுடன் எடுத்துரைத்தனர். இருவரும் ஏற்கும் அருமையான தீர்ப்பை வழங்கினான் முதியவர் வேடத்தில் வந்த அந்த நரைமுடிச் சோழன். இது பழைய கதை. இச்செய்தி பொருநராற்றுப்படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? இன்றும் கூட பிரிட்டனில் கோர்ட்டுகளில் நீதிபதிகள் வெள்ளை நிறத் தலைமுடியை அணிந்து தான் தீர்ப்புக் கூறுகிறார்கள். கரிகாலன் தோற்றுவித்த நரைமுடி வழக்கம் பிரிட்டன் வரை பரவியது எப்படி? ஆராய்ச்சிக்குரிய விஷயம்!

2.புறநானூற்றுப் பாடல் ஒன்று, காலையில் பாலில் அரிசிப்பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் “கோர்ன் ஃப்ளேக்ஸ்” (மக்காச் சோளம்) “ரைஸ் கிரிஸ்பிஸ்” (அரிசிப் பொரி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலை தானிய உணவு (Breakfast Cereal) உலகெங்கிலும் பரவியது எப்படி? இது ஆராய்ச்சிக்குரிய பொருள்!

3.கம்பராமாயணத்தில் ஒரு பாடல் வருகிறது. அதில் இளநீரை ஓட்டையுள்ள ஒரு காம்பைக்கொண்டு உறிஞ்சிக் குடித்ததாக ஒரு செய்யுள் வருகிறது. இன்று மேலை உலகில் பர்கர் கிங், மக்டோனல்டு போன்ற உணவகங்களில் கோக் அல்லது பழச்சாறு வாங்கினால் கூடவே ஸ்ட்ராவும் (Straw) தருகிறார்கள். குளிர்பானங்களை “ஸ்டிரா” வைத்து உறிஞ்சிக் குடிக்கும் வழக்கத்தைத் தமிழன் தான் உலகிற்குக் கற்பித்தானோ! இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

4.சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது, பாலை பாடிய பெருங்கடுக்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மாம் வாடிவிடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டுபிடிக்கும் கருவியைப் (Lie Detector)பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம் மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்கும் ஒருபடி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூட பொய்யைக் கண்டுபிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்று அனிச்சம்பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடிவிடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தவன் தமிழன். இன்னொரு சங்கப்பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றிப் பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்.

5.விண்வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போலக் காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே விண்வெளியில்---காற்று மண்டலம் (Atmosphere) இல்லை. இதைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர் போலும்! வெள்ளைக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) ‘வளியிடை வழங்கா வானம்’ என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் (புறம் 20) ‘வறிது நிலை இல் காயம்’ என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365) ‘வளியிடை வழங்கா வழக்கு அரு நீத்தம்’ என்றும் வள்ளுவன் (குறள் 245) ‘வளி வழங்கு பூமி’ என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.

6.ஒலியும் ஒளியும் (Sound & Light) மின் காந்தப்பட்டையின் (Electro Magnetic Spectrum) ஒரே அங்கம் என்று தற்கால அறிவியல் கூறுகிறது. இதை அறிந்து தானோ என்னவோ தமிழ்மொழியில் மட்டும் ஒலி-ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.

7.தற்காலப் பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (Bird Migration)பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சிலவகைப்பறவைகள் 12,000 மைல் பறந்து வடதுருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக்கண்டு பிடிக்க நவீன உத்திகளைக் (Electronic Tagging or Ringing) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும், ஊர்ப்பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டிவிடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும் அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டுப் பறவையியல் அறிஞர்கள் உலகமுழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக்கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுக்கு முன்னரே தென்குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப்பறவைகள் பறந்து செல்வதையும் இமயமலையிலிருந்து அவை தமிழ்நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வைத்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும் மின்னனுக்கருவியைப் பயன்படுத்தாமலும் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.
(புறம் 67—பிசிராந்தையார், நற்றிணை—70 வெள்ளி வீதியார், நற்றிணை 356---பரணர், அகம் 120---நக்கீரனார், அகம் 273---ஒளவையார் ஆகிய பாடல்கள் காண்க.)

8.பிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான ‘நியூஸ் வீக்’கில் அண்மைக்காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் தமிழன். குரங்குகள் முரசு (Drums) அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும் குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் (ஐங்குறுநூறு 275—277) குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டிகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன்படுத்தும் காட்சியை பி.பி.சி. டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் ‘விசில்’ அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியை கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்துக் கிளிகளின் மூலம் நெல் முதலிய தானியங்களைக் கொணர்ந்து பல மாதங்கள் உயிர் வாழ்ந்தனர் என்று (Survival techniques and using animals at war time) ஒளவையாரும் (அகம் 303) நக்கீரரும் (அகம் 78) குறிப்பிடுகின்றனர். கிளிகளை இவ்வாறு பயன்படுத்தியவர் கபிலர் என்றும் கூறுகின்றனர்.

9.பருவக்காற்றின் பயனை ஹிப்பாலஸ் என்ற கிரேக்கர் தான் முதல் முதலில் கண்டுபிடித்தார் என்றும் இது கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் கரிகால் பெருவளத்தானைப் பாடிய வெண்ணிக்குயத்தியர் (புறம் 66) கரிகால் வளவனின் மு ன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ. (புறம் 66)

மாங்குடி மருதனும் (புறம் 26) மருதன் இளநாகனும் (கலி82) வளிவழங்கு கலம் (பாய் மரக்கப்பல்) பருவக்காற்று ஆகியன பற்றிப் பாடுகின்றன்னர்.

10.தமிழ் இலக்கியத்தில் ஏராளமான அதிசயச் செய்திகள் உள்ளன. அத்தனையும் எழுத இடம் போதா. இதில் ஆர்வமுடையோருக்குக் கீழ்க்கண்ட பட்டியல் உதவும்.

11.AERODYNAMICS விமானம், பைலட் இல்லாத விமானம் –புறம் 27 (முதுகண்ணன் சாத்தனார்)

12.ZOOLOGY ஒரு நாள் மட்டுமே உயிர் வாழும் ஈசல்—புறம் 51 (ஐயூர் முடவனார்)
13.BOTONY பூ வாது காய்க்கும் மரம் (FICUS) புறம் 58(காரிக்கண்ணனார்) மலைபடு 268

14. MEDICINE நெல்லிக்கனி உண்டால் ஆயுள் நீடிக்கும் –புறம் 91 (ஒளவையார்) அகம் 271(காரிக்கண்ணனார்)

15. STATISTICS பரம்பு மலை வட்டாரத்தில் மட்டும் 300 ஊர்கள்--- புறம் 11 (கபிலர்)

16. WINE நிலத்தில் புதைத்து மதுவைப் பக்குவப்படுத்தல் புறம் 120 (கபிலர்)

17.ANIMAL BEHAVIOUR வலப்பக்கம் விழுந்த உணவை மட்டுமே புலி உண்ணும். இடப்பக்கத்தில் விழுந்தால் சாப்பிடாது. அகம் 252, 238, 3, புறம் 190, அகம் 29, நற்றிணை 154, அகம் 357, 389.


18. AGRICULTURE கரும்பு பயிரிட்ட வரலாறு—புறம் 99, புறம் 392 (ஒளவையார்)


19.ASTRONOMY சனி, சுக்கிரன், வால் நட்சத்திரம் பற்றிய குறிப்பு---புறம் 117 (கபிலர்)

20. GENEOLOGY மன்னனின் 49 தலைமுறை ----புறம் 201 (கபிலர்)


21. THOUGHT POWER எண்ணங்களுக்கு அற்புத சக்தி உண்டு----புறம் 217 (பொத்தியார்)

22.WEATHER/METEROLOGY வறட்சிக்கும் மழைக்கும் வெள்ளி கிரகம் காரணம்---புறம் 383, 384, 386,388, 389 பதி 24

23.ZOOLOGY ஆமையின் பார்ப்புகள் (குட்டிகள்) தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டே வளரும். குறந் 135, நற் 152

24.HELIOTROPISM நெருஞ்சி மலர் சூரியன் செல்லும் திசை எல்லாம் திரும்பும்—புறம் 155, குறு 202, 315, கலி 53, அகம் 336

25. POPULATION/STATISTICS குறுந்தொகை 44

26.MUSIC இசைக்கு மிருகங்கள் மயங்கும்—அகம் 88

27.DRUM SIGNAL செய்தி அனுப்புவதற்கு முரசுகளைப் பயன்படுத்தல்—குறுந் 390

28.ZOOLOGY முதலைகள் குட்டிகளைக்கொன்று தின்னும். நண்டுகள் பிறந்தவுடன் தாய் இறக்கும்.—ஐங்குறு 24 (ஓரம்போகி)

29. ASTRONOMYவிண்கல் (METEOR) விழுந்து பயிர்கள் சேதம்—குறு 150, 189, 356, நற்றி 393

30.WASHING துணிகளுக்குக் கஞ்சிப் (STARCH)பசை போடுதல்—குறு 330, நற் 90, மதுரை 721, நெடுநல் 134, அகம் 387

31.CARPENTRY ஒரே நாளில் எட்டுத்தேர்கள் செய்தல்—புறம் 87 (ஒளவை)

32.PSYCHOLOGY பிராணிகளும் கனவு காணும் –நற் 87, பதி11, அகம் 132, 170, 141, குறிஞ்சிக்கலி 13

33.METALLURGY கொல்லன் பட்டறை, வெள்ளி, செம்பு, தங்கம் எடுத்தல்---நற் 125, 133, 153, 124, 313, புறம் 69, ஐங் 24

34.SEX குரங்குகளுக்கும் கூடப் புணர்ச்சிக்குப் பின் வெட்கம் வரும். –நற் 151

35.SCISSORS மயிர் குறை கருவி--- பொரு 29, பால்லைக்கலி 31, 35

36.TEXTILE இழை போன இடம் தெரியாத ஆடை—பொரு 82, (துணி நெய்தல், மெல்லிய ஆடை பற்றி ஏராளமான குறிப்புகள் உண்டு)

37.CLOCK குறுநீர்க்கன்னல் (HOUR GLASS)----முல்லை 57, அகம் 43

38.EMPLOYING FOREIGNERS படைகளில் வெளிநாட்டினர் (MERCERNERIES), சேவை—முல்லை 61, 66

39. BIG BANG THEORY பிரபஞ்சம் தோன்றியது எப்படி? --பெரும் 1—3, (நச்சி, உரை காண்க) மதுரை 266

40. ZOOLOGY புறாக்கள் கற்களை உண்ணும்—பட்டி 58, கலி 56, அகம் 271

41. (எதுவும் குறிப்பிடவில்லை)

42. MEDICINE காயங்களைத் தைத்தல்—பதி 42 (பரணர்)

43. MISSILES எந்திர அம்பு, விசை வில்----பதி 53, 22

44. MARINE ENGINEERING கப்பல் செப்பனிடல்---பதிற்று 76

45.BIOLOGY உயிரினங்களை வகைப்பிரித்தல் (ஓரறிவு முதல் ஆறறிவு வரை)—தொல்காப்பியம் மரபியல் 27, 34

46.NOISE POLLUTION பறை ஒலி (TOO MUCH NOISE WILL KILL) கேட்டால் இறக்கும். அசுணமா—கலி 143

47.WATER PURIFICATION நீர் தெளிய தேற்றாவின் விதை—கலி 142

48.LIGHT HOUSE கலங்கரை விளக்கம்---சிலம்பு 6 -141, நற் 279

49.MEDICINE மருத்துவக் குறிப்புகள் எண்ணிலடங்கா

50.ASTROLOGY ஜோதிடம், புள் நிமித்தம், சகுனம் குறிபார்த்தல்ல் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. (சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ 90 சோதிடக்குறிப்புகள் உள்ளன.)
 
 
 
 
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்...

1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.


1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.


1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.


1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.


1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.


1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.


1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.


1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.


1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.


1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.


1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.


1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.


1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.


1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.


1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோ ர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.


1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..


1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.


1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.


1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.


1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.


(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)


1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)


1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.


1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.


1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".


1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.


1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.


1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.


1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.


1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.


1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.


1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.


1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.


1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.


1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.


1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.


1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.

அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.


1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.


1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.


1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.


1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.


1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.


1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.


1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.


1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.


1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.


1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.


"பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.


1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.


1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.


1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.


1970, சனவரி - இரமணி மறைவு.


1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.


1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.


1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.



(நன்றி: புரட்சிப் பாவலரின் "சிரிக்கும் சிந்தனைகள்" நூலிலிருந்து) 




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

Thursday, November 29, 2012

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள்...

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...
1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் நீர் மேலாண்மை...

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். 

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28)


இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' (புறம்-18,28-30)


என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ'' (புறம்.118)


எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்'' (83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

"பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே'' (25)


என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை' என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்'' (1384-87)


என்கிறார். "சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு' என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு' அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை' எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது' (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.!!!




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

Wednesday, November 28, 2012

சிவப்பிரகாசரின் புதுமைச் சிந்தனைகள்...



கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புறச்சமயங்களின் தாக்கம் தமிழகச் சமுதாயக் கட்டமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இம்மாற்றங்களால் சமூகக்கட்டுப்பாடுகள் தேவையான ஒன்றாக மாற்றமடைந்தன. இச்சூழ்நிலையைப் புரிந்து கொண்ட புலமையாளர்கள் தங்களது புலமையாலும், சமூக அக்கறையினாலும் வெட்டுண்டு கிடந்த மக்களை இணக்கத்துடன் பிணைக்க முற்பட்டனர். அவ்வாறு முற்பட்டவர்களில் சிவப்பிரகாசரும் ஒருவர். இவரைத் தமிழ் இலக்கிய உலகம் "கற்பனைக் களஞ்சியம்" என்றும், நன்னெறி என்ற நீதி நூலை எழுதியமையால் "நன்னெறிச் சிவப்பிரகாசர்" என்றும், இவர் சிறிது காலம் வாழ்ந்த இடமாகிய துறைமங்கலத்தைக் குறிப்பிடும் வகையில் "துறைமங்கலம் சிவப்பிரகாசர்" என்றும் குறிப்பிட்டு அழைக்கின்றது.

சிவப்பிரகாசர் நல்ல புலமையாளராக மட்டும் இல்லாமல் நல்ல திறனாய்வாளராகவும் விளங்கியுள்ளார். மற்றவர்களது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுடன் சில சமயங்களில் அதை மறுத்துத் தனது கருத்துக்களை முன் வைப்பதைப் பார்க்க முடிகின்றது.

"அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடையை - மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்(று)
உந்துஞ் சிவிகையினை யூர்ந்து" (நால்வர் நான்மணிமாலை, பா.33)

என்னும் இப்பாடல் சிவப்பிரகாசரின் சிந்தனையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இப்பாடலின் முன் இரண்டு அடிகள் "அறத்தாறு.... இடை" என்னும் குறள் கருத்தை வேறுகோணத்தில் முன்வைக்கிறது. ஏன் மறுக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன என்பதற்கான வினா எழுகின்றது.

இப்பாடலின் கருத்து ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சைவ சமயத்தை நிலைநிறுத்தும் பொருட்டுத் தலங்கள்தோறும் சென்று தமிழ்ப் பாமாலை பாடி சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்கள். இந்நிலையில் ஒருசமயம் ஞானசம்பந்தர் சிவிகையில் ஊர்ந்து செல்லுங்கால் அச்சிவிகையை அன்பின் மேலீட்டால் நாவுக்கரசர் யாரும் அறியா வண்ணம் சிவிகையைத் தாங்கும் அடியவர்களுடன் தானும் ஒரு அடியவனாகத் தாங்கி வந்தார். இந்நிலையில் ஞானசம்பந்தர் தன் உள்ளக்கிடக்கையில் ஏற்பட்ட எண்ணத்தால் அப்பர் எங்கு உள்ளார் என்று வினவ "அடியேன் ஒப்பரிய தவஞ்செய்த பயனாகத் தங்களுடைய திருவடிகளைத் தாங்கிவரும் போது பேறுபெற்றேன்" என்றார். இச்செய்தியைச் சிவப்பிரகாசர் பின்வருமாறு சிந்தனை செய்கின்றார்.

பல்லக்கில் அமர்ந்து வந்த திருஞான சம்பந்தரும் பல்லக்கைச் சுமந்து வந்த நாவுக்கரசரும் புண்ணியம் செய்தவர்களே. அவர்களிடையே பாவ புண்ணிய வேறுபாடு இல்லை. இருவரும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களே அப்படியிருக்கும்போது எப்படி ஞானசம்பந்தர் மட்டும் அறம் செய்தவர் என்றும் நாவுக்கரசர் அறம் செய்யாதவர் என்றும் கொள்ள முடியுமா? என்ற வினாவை எழுப்புகின்றார்.

மேற்குறிப்பிட்ட இச்சிந்தனை சிவப்பிரகாசரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணம் பின்வரும் செய்திகளின் அடிப்படையாகக் கூட இருக்கலாம். அஃதாவது ஞானசம்பந்தரின் காலச் சூழ்நிலையும் சிவப்பிரகாசரின் காலச்சூழ்நிலையும் ஏறக்குறைய ஒரே தன்மையுடையதாக விளங்கியது. இவ்விருவேறு காலக்கட்டங்களிலும் புறச் சமயங்களின் தாக்கம் தமிழகத்தில் நிலவியது இந்நிலையில் சைவ சமயத்தை மீட்டெடுக்க உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற இருவேறு பாகுபாடுகளைக் களைந்து அனைவரையும் ஒற்றுமையடையச் செய்தால் மட்டுமே சமய விடுதலை பெறமுடியும் என்ற காரணமாகவும் கூடத் திருவள்ளுவரின் சிந்தனையை மறுத்துரைத்தார் எனலாம்.


நாவுக்கரசரின் சிறப்பை உரைக்க வந்த சிவப்பிரகாசர் அவரின் கரையேறிய அருட்திறத்தைப் பற்றிய செய்தியில் தனது வினாவை எழுப்புகின்றார். அவ்வினாவிற்குரிய பாடல்:


"
அருகக் கடல்கடந் தேறிய தோசிலை யம்பியெனப்
பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு
கருகக் கடல்விடம் உண்டோன் அடியிற் கசிந்துமனம்
உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த உனக்கரிதே" (நால்வர் நான்மணிமாலை - 22)

1. சமணர்களுடைய மதமாகிய சமணக்கடலைக் கடந்தது சிறப்பா அல்லது
2.
பல்லவ மன்னன் மகேந்திரனால் கல்லால் கட்டப்பெற்றுக் கடலில் வீசிய பின் மீண்டது சிறப்பா என்று வினா எழுப்புகின்றார்.

கடலைக் கடக்க ஒரு கருவிப்பொருள் வேண்டும் கருவிப்பொருள் இல்லாமல் கடப்பது என்பது இயலாத ஒன்று என்பதைப்

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்" (குறள்.10)

என்ற குறள் மூலம் விளக்குகின்றார் வள்ளுவர். அதுபோல் கடலில் விடப்பட்ட நாவுக்கரசருக்கு அவரைப் பிணைந்திருந்த கல்லே தெப்பமாக மாறி அவரைக் கரைசேர்த்தது. இதைச் "சிலையம்பி" என்ற சொல்லால் விளக்குகின்றார்.

சமண சமயமாகிய கடலில் இருந்து கரையேறுவதற்குத் தெப்பமாக எது பயன்பட்டிருக்கும் என்பது அடுத்த வினா. ஏன் எனில் கடலுக்கு ஒரு குணம் உண்டு தனக்குத் தேவையில்லாத எந்தப் பொருளையும் அது தன்னகத்தே வைத்துக் கொள்வதில்லை. அவற்றைக் கரைசேர்த்துவிடும். ஆனால் சமண சமயமாகிய கடலில் இறங்கியவர்கள் கரையேறுவது என்பது இயலாத காரியம். இந்நிலையில் தான் நாவுக்கரசர் இதிலிருந்து எவ்வாறு வெளியேறினார் என்பதைப் பார்க்க வேண்டும் இங்கு சிவப்பிரகாசரின் இலக்கியப் பயிற்சி வெளிப்படுகின்றது எனலாம்.
"தம்பியார் உளராக வேண்டும் என வைத்தயா
உம்பர் உலகு அணையவுறு நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்" (பெரியபுராணம்....)

என்னும் பாடல் கருத்து அவரின் மனக்கண் எழுந்தது போலும். ஆகவே சமண சமயத்தில் இருந்து மீள்வதற்கு அவரது தமக்கையாகிய திலகவதியார் தெப்பமாக விளங்கினார் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தார்.

அவர் வாழ்ந்த சமுதாயத்தில் நிலவிய பல ஏற்றத்தாழ்வுகளை நயம்பட மறுத்துரைக்கின்றார். பிறப்பினால் மனிதர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிந்திருப்பதை உணர்த்துகிறார். ஆல கால விஷத்தைக் கக்கிய பாம்பு என்றாலும் அதன் தலையில் அமைந்த மாணிக்கக் கல்லை எவரும் வெறுக்கமாட்டார் என்பதை ஒரு பாடலில் கூறுகிறார். அப்பாடல்

"ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு
பவர் ஆர்? அரவின் பருமணிகண் டென்றும்
கவரார் கடலின் கடு" (நன்நெறி - 22)

என்னும் பாடல் ஆகும். மேலும் இதுபோன்ற செய்தியை விளக்கும் முகமாகத் தனது சமய இலக்கியப்படைப்பான பிரபுலிங்கலீலையில்

"சாதியும் குறியும் நீத்துச் சரணரைச் சிவனே என்று
பாதபங் கயம் இறைஞ்சிப் பத்திசெய் குவனந் நந்தி...." (பிரபு - அக்கமா - 47)

என்று குறிப்பிடுகின்றார். இறைவன் அருளைப் பெறவேண்டும் என்றால் சாதிகளையும், ஆண், —ண் என்ற பேதங்களையும் நீக்கி அடியவர்களைச் சிவமே என்ற அடிதொழுதால் இறைவன் அருளைப் பெறலாம் என்கின்றார்.

பிள்ளை என்றாலே ஆண்பிள்ளையையே குறிக்கும் சமுதாயம் இது. இங்குப் பெண் என்பவள் ஆணுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தன்மையுடையவளாகவே சித்தரிக்கப்படுகின்ற காட்சியைக் காணலாம்
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற"

என்ற குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் "அறிவறிந்த" என்ற சொல் "பெண்ணொழிந்து நின்றது என்பர்" இதை மறுத்துரைக்கும் சிவப்பிரகாசர் மணமக்களை வாழ்த்தும்போது நல்ல "ஆண் மகளைப் பெற்று" உயர்வாயாக என்று வாழ்த்துவது உலகியல் வழக்கு. ஆனால் இவ்வழக்கத்துக்கு மாறாக "ஆண்மகற் பெறுக என்று ஆசி சொல்பவர் நாணும்படி பெண் பெற்றார்" என்று குறிப்பிடுகின்றார்.


"
கற்றார் அறிகுவர் மக்கள்தம் பேறுஎனக் கட்டுரைத்த
சொல்தான் ஒரு பெண் ஒழித்ததுஎன் பாரொடு தொல் உலகில்
நற்றாண் மகற்பெறுக என்று ஆசி சொல்பவர் நாண உனைப்
பெற்றான் மலையரை யன்குறை வாழும் பெரியம்மையே" (பெரியநாயகியம்மை கலித்துறை - 12)

இவ்வாறு சிவப்பிரகாசர் தனது இலக்கியங்களில் சமூகத்தைப் புதுமைக் கண் கொண்டு பார்க்கின்றார்.




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்,  
                      
தமிழ்நாடு - இந்தியா.