பழந்தமிழ்
இலக்கியங்களில் மருத்துவச் சிந்தனைகள்
செ.சத்யா
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,
மயிலம் - 604 304. விழுப்புரம்
மாவட்டம்.
தமிழ்நாடு - இந்தியா.
மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com
முன்னுரை
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
என நோயில்லாத் தன்மையையே நம் முன்னோர்கள் மிகப்பெரிய செல்வமாகக் கருதினர். அறிவியல்
மருந்துகள் மனிதனை ஆண்டு கொண்டிருக்கிற கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்று பல்வேறு விதமான மருத்து முறைகள் தோன்றி வளர்ந்துள்ளது. ஆனால், தொன்மைக் காலத்திலிருந்தே
பழந்தமிழர்கள் மருத்துவ முறைகளை சிறப்பாக கையாண்டு வந்துள்ளனர் என்பதை தமிழ் இலக்கியங்கள்
வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. நோய்களைப் பற்றியும், நோய் தீர்க்கும் முறைககள் பற்றியும்
பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
அவ்வாறு நம் பழந்தமிழர்களின் சங்க இலக்கிய நூல்களில் மருத்துவம் பற்றிய சிறப்புச் செய்திகளை
ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
திறவுச் சொற்கள்
சங்க இலக்கியங்களில் மருத்துவம், நோய், பிணி,
நோய் தீர்க்கும் முறைகள், அத்திப்பால், வேம்பு, தொல்காப்பியத்தில் மருத்துவம்.
தொல்காப்பியம்
குறிப்பிடும் மருத்துவம்
தொல்காப்பியர் செய்யுளியலில் பெரியோர்கள்
வாழ்த்தும் முறை பற்றி ஒரு நூற்பா பாடியுள்ளார். அதற்கு 'வாயுறை வாழ்த்து' என்று பெயர்.
அதில், வேம்பு, கடுக்காய் ஆகிய மருந்துப் பொருட்கள் முன்பு சுவைக்குங்கால் கசந்தும்,
பின்பு உடலுக்கு நன்மை பயக்கும் என்கிறார் தொல்காப்பியர். இதனையே,
"வேம்பும்
கடுவும் போல"1
என்கிறது
தொல்காப்பிய நூற்பா. தமிழில் காணப்படும் தொன்மையான, முதன்மையான மூலிகையாக இந்நூற்பா
குறிப்பிடும் வேம்பினைக் குறிப்பிடலாம். மேலும், தொல்காப்பியர் காலத்திலேயே தேன் பயன்படுத்தப்
பட்டுள்ளதனை,
"தேனென்
கிளவி வல்லெழுத் தியையின்"2
என்ற
தொல்காப்பிய நூற்பா வழி அறிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறு வேம்பும், தேனும் தொல்காப்பியர்
காலத்திலேயே கையாளப்பட்டு வருவதை அறிந்து கொள்ளும் பொழுது இவ்விரண்டின் மருத்துவப்
பெறுமதியை தமிழ் இலக்கிய மரபு உணர்ந்திருந்தமை புலனாகிறது.
தமிழில் 'நோய்' என்ற சொல் வழக்கு தொல்காப்பியர்
காலத்திலிருந்தே நிலவி வருகின்றது என்றாலும், தொல்காப்பியர் காலத்தில் குறிப்பிடும்
சொல் வழக்கில் 'நோய்' என்றால் 'வருத்தம்' 'துன்பம்' என்று தான் பொருள் கொள்ளப்படுகின்றது.
ஆனால், இன்று 'நோய்' என்பது 'பிணி' என்னும் பொருளில் வழங்கப்படுகின்றது.
தொல்காப்பிய நூற்பாக்களில் வரும் 'பிணி'
'நோய்' ஆகிய சொற்களை மிக நுட்பமாக ஆராய்ந்து பார்த்தோமானால்,
"நோய்
மிகக் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந்தோளை"3
"நோயும்
இன்பமும் இருவகை நிலையிற்
காமங் கண்ணிய
மரலிடை தெளிய"4
என்ற
தொல்காப்பிய நூற்பாக்கள் மன வருத்தத்தினை 'நோய்' என்னும் சொல் குறிப்பதையும்,
"மூப்பே
பிணயே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த
இளிவரல் நான்கே"5
எனும்
நூற்பா உடல் வருத்தத்திணை 'பிணி' என்னும் சொல் குறிப்பதையும் அறிந்து கொள்ளலாம். அக்காலத்தில்
விளங்கிய மருத்துவக் கலைச்சொற்களின் நுட்பத்தினைத் தொல்காப்பியம் தரும் மேற்கண்ட 'பிணி'
'நோய்' பற்றிய இலக்கண நூற்பா வழி தெளியலாம்.
தலைவனின் பிரிவால் தலைவியின் மேனி நிறம்
மாறும். இப்பிணிக்குப் பெயர் பசலையாகும். இதனைப் 'பசலை பாய்தல்' என்று குறிப்பர். இதனை,
"பசலை
நிறனாகும்"6
என்ற
தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கின்றது. இங்கு தொல்காப்பியம் குறிப்பிடுவது ‘பசலை’
எனும் ‘பிணியையே’ ஆகும்.
காதல் நோய் கண்ட மகளிர் மேனியில் உண்டாகும்
நிற வேறுபாட்டினைப் 'பசலை' என்று சங்ககாலப் புலவர்கள் குறிப்பிடுவதனை,
"ஊருணி
கேணி யுண்துறைத் தொக்க
பாசியற்றே பசலை
காதலர்
தொடுவுழித்
தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப்
பரத்தலானே"7
என்ற
குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடலடிகள், ஊர்மக்கள் கேணியிலுள்ள
தண்ணீரை எடுக்கும் பொழுது அக்கேணியிலுள்ள பாசி விலகிவிடும். எடுக்காதப் போது பாசிப்
படர்ந்து காணப்படுவது போல் தலைவன் தலைவியைக் கூடியிருக்கும் போது பசலை பாயாமலும் தலைவன்
நீங்கிய போது பசலை பாய்ந்த மேனியுடன் தலைவி காணப்படுவாள் என்பதனை எடுத்துரைக்கின்றது.
'மருந்து' என்ற சொல் தொல்காப்பியத்தில்
நேரடியாக இடம் பெறாத போதிலும், அதனை 'உறை' என்ற சொல்லால் தொல்காப்பியர் சுட்டியுள்ளதனை,
"வாயுறை
வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும்
போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி
வழிநனி பயக்குமென"8
என்ற
தொல்காப்பிய நூற்பாவில் 'மருந்து' என்னும் பொருளில் 'உறை' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.
'வாய் என்பது வாய்மொழி; உறை என்பது மருந்து. வாயுறை என்பது சொல் மருந்தென பண்புத்தொகையாம்.
இனி வாய்க்கண் தோன்றிய மருந்தென வேற்றுமைத் தொகையுமாம்' என்று பொருள் தரும் என்றுரைத்த இளம்பூரணர் கருத்துப்படி தொல்காப்பியர் காலத்தில் 'உறை' எனும் சொல், 'மருந்து' எனும் பொருளில்
வழங்கிற்று என்பதை அறியலாம்.
மருத்துவன்
'மருத்துவன்' என்று குறிக்கப்பெறும் சொல்
வழக்கத்தில் இருந்ததை உறையூர் மருத்துவன் தாமோதரனார், மருத்துவன் நல்லசசுதனார் என்னும்
சங்கப் புலவர்களின் பெயர்கள் வழியே அறிய முடிகின்றது. மேலும்,
"திருந்திய
யாக்கையின் மருத்துவன் ஊட்டிய
மருந்துபோல்
மருந்தாகி மனமுவப்ப"9
என்ற
பாலைக்கலிப் பாடல் குறிப்பில்தான் மருத்துவன் எனும் சொல் வழக்கு முதன் முதலாகக் காணப்
பெறுகின்றது. பொது மருத்துவனம் மட்டுமின்றி அறுவைச் சிகிச்சையும் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதை,
"வாளால்
அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்
நோயாளன் போல"10
என்ற
நாலாயிரத் திவ்விய பிரபந்த பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவர் விரும்பியதெல்லாம்
கொடுக்காமல் நோய்க்குத்தக்க மருந்தை ஆராய்ந்து கொடுப்பவனை,
"அரும்பிணி
உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்தாய்ந்து
கொடுத்த அறவோன்"11
என்ற
நற்றிணைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றது. இப்பாடலடியில் மருத்துவனை 'அறவோன்'
என்று மதித்தப் பெருமையை சங்க இலக்கியம் குறிப்பிடுவதனை
அறிந்து கொள்ள முடிகின்றது.
தாய்மை மருத்துவம்
கருவுற்ற பெண்கள் விரும்பும் சுவை பற்றியும்,
புளிக்கும் பொருள்களைத் தின்ன விரும்புவர் என்பததைப் பற்றியும்,
"முந்நாள்
திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப்
பசும் புளிவேட்கைக்
கடுஞ்சூல் மகளிர்
போல்"12
என்ற
குறுந்தொகைப் பாடலடிகள், ஏழு மாதம் கருவுற்றப் பெண்கள் மூன்றாம் நாள் பிறைநிலா போலப்
பழுத்திருக்கும் புளியங்காய்களை விரும்புவர் என்பதனையும், மசக்கை காலத்தில் ஏற்படுகின்ற
வாந்தியெடுக்கும் உணர்வினைப் புளியங்காய் கட்டுப்படுத்தும் என்று புளியங்காயின் மருத்துவக்குணத்தையும்
எடுத்துரைக்கின்றது. மேலும், கருவுற்றப் பெண்கள் மண்ணைத் தின்ன விரும்புவர் என்பதனை,
"பிறர்மண்
உண்ணும் செம்மல்! நின் நாட்டு
வயவுறு மகளிர்
வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா
அருமண்ணினையே"13
என்ற
புறநானூற்றுப்பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இதில், பகைநாட்டின் மண்ணைக் கவர்ந்தாளும்
வேந்தனே உன் நாட்டில் கருவுற்ற மகளிர் விருப்பத்தின் காரணமாக மண்ணை உண்ண விரும்புவர்.
அது அல்லாமல் பகைவர் உண்ண(கைப்பற்ற) நினைக்காத பெருநிலப் பரப்புடையவனே என்று பெண்கள்
கருவுற்ற நிலையில் உண்ண விரும்பும் பொருள்கள் பற்றி இப்பாடலடிகள் விளக்குகின்றன.
கருவுயிர்த்த (குழந்தை பெற்றெடுத்த) பெண்
பின் செய்யப்பட்ட மருத்துவம் பற்றி நற்றிணையில்,
"பனிறு
நாறு செவிலியோடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த
நெய்யாட்டு ஈரணில்
பசு நெய் கூர்த்த
மென்மை யாக்கைச்"14
என்ற
நற்றிணைப் பாடலடிகளில், ஒரு பக்கம் மணம் கமழும் துணி விரிப்புப் போர்த்திய மெல்லியப்
பஞ்சணையில் பச்சிளம் குழந்தை செவிலியுடன் உறங்குகின்றது. வேறு ஓரு பக்கம் வெண்சிறு
கடுகு எண்ணெய் தேய்த்து நீராடிய பின்னர் மேனியில் பசு நெய்யைப் பூசிக் கொண்ட தாய் உறங்குகிறாள்
என்று கருவுயிர்த்த தாயின் நிலையினை விளக்குகின்றது.
அறுவைச் சிகிச்சை
சங்க காலத்தில் மன்னர்களிடையே போர்கள்
நடைபெற்றுததினால், புண்பட்ட வீர்களுக்கு அக்கால மருத்துவர்கள் மருந்துகள் பலவற்றைக்
கொடுத்ததுடன், ஆழம் பட்ட புண்களுக்கு ஊசிகொண்டு தைத்து சிகிச்சை செய்திருப்பதனை,
"மீன்தேர்
கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந்
தன்ன நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த
வடுஆழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்ச்
சேர்ந்தோர்"15
என்ற
பதிற்றுப்பத்து பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடலடிகள், சிரல் (மீன் கொத்தி)
பறவையானது நீருக்குள் மூழ்கி தன் மூக்கு நுனியில் மீனை பிடித்துக் கொண்டு தண்ணீரை விட்டு
வெளியே வருவதைப் போன்று, வீரர்களின் நெஞ்சில் காயம்பட்ட இடத்தில் ஊசியை நுழைத்து வெளியில்
எடுத்துத் தையல் போட்டதால் காயம் ஆறிய தழும்புகளை மார்பில் கொண்ட உடம்பினர் என்று எடுத்துரைக்கின்றது.
போரில் காயமுற்றவர்களுக்குச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையை இது குறிப்பிடுகிறது.
போர்களத்தில் ஏற்படும் ரணங்களுக்கு பஞ்சு
வைத்துக் கட்டும் மருத்துவ வழக்கம் சங்க காலத்தில் இருந்தது என்பதனை,
"கதுவாய்
போகிய துதிவாய் எஃகமொடு
பஞ்சியும் களையாப்
புண்ணா"16
என்ற
புறநானூறு பாடலடிகள் அழகாக எடுத்துரைக்கின்றது.
இப்பாடலடிகளில் போரில் புண்பட்டு கிழிந்த தசையைத் தைத்துப் பஞ்சு கொண்டு கட்டிய செய்தி
புலப்படுகின்றது. ஊசியால் தைத்துப் பஞ்சினால் கட்டுப்போடுகின்ற இன்றைய அறுவை சிகிச்சை
முறையினை பழந்தமிழர்கள் அன்றே அறிந்து வைத்துள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.
போரில் வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களால்
ஏற்படுகின்ற விழுப்புண்களில் இரும்பின் உலோக நஞ்சு கலந்து வீரர்களின் உடலுக்கு தீங்கு
நேரிடாமல் நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் அதன் வடு தோன்றாமல் தோலின்
நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப்பால் பயன்படுத்தியதனை,
"இரும்புசுவைக்
கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து
மருந்துகொள்
மரத்தின் வாள்மடு மயங்கி
வடுவின்றி வடிந்த
யாக்கையான்"17
என்ற
புறநானூற்றுப் பாடலடிகள் அழகாக எடுத்துரைக்கின்றது. இப்பாடலகளில், உலோக நஞ்சால் உடலுக்குத்
தீங்கு நேரிடாமல் இருப்பதற்கு இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவதைப்
போன்று பழந்தமிழர்கள் அன்றே அத்திப்பால் மூலம் உடல் பழைய நிலை பெற்றது என்பதை இன்றைய
ஒட்டு மருத்துவ முறையினை பின்பற்றியுள்ளதனை
அறிந்து கொள்ள முடிகின்றது.
காப்பிய நூலான சீவக சிந்தாமணியில் உடலுக்குள்
புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுத்துள்ளனர் என்பதனை,
"நெய்கழி வைக்கப்பட்டார் நெய்ப்பத்தல் கிடத்தப்பட்டார்
புக்குழியெஃகநாடி
யிரும்பினாற் போழப்பட்டார்"18
என்ற
சீவக சிந்தாமணி பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. இப்பாடலடிகள், நெய்யில் தோய்த்த துணியை
இரும்புத்துண்டு நுழைந்த உடற்பகுதியின் மேல் போர்த்தி, புண்பட்டாரை நெய்ப்பத்தலில்
கிடத்தி, உடலுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையினால் அறுத்தெடுப்பர்
என்று எடுத்துரைக்கின்றது. மேலும், அறுவை மருத்துவத்தில் பின்பற்றபட்ட முறைகளை,
"முதுமரப்
பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன
நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை
மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த்
துகிற்குப் பாயும் புகுகெனநுhக்கினானே"19
என்ற
சீவக சிந்தாமணி பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடலடியில், மரப்பொந்துபோல்
உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது என்பதனை அறிந்த மருத்துவர், அம்மருந்தை
வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர். பின்னர் எலியின் மயிரால் நெய்யப்பட்ட ஆடையால்
போர்த்தி, காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர் என்று புண்பட்டார்க்குச் செய்யப்படுகின்ற
அறுவை மருத்துவ முறைகளை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
சிகிச்சை முறைகளுக்கு பின்னர் நோயாளிகளுக்கு
அளிக்கப்பட வேண்டிய அனுஷ்டானங்களை அரிசில்
கிழார் புறப்பாடலில் எடுத்துரைப்பதனை,
"தீங்கனி
இரவமொடு வேம்பு மனைச் செரீஇ
வாங்கு மருப்பு
யாழொடு பல் இயம் கறங்கக்
கை பயப் பெயர்த்து
மை இழுது இழுகி
ஐயவி சிதறி
ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து
காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பின்
கடி நறை புகைஇக்
காக்கம் வம்மோ
காதலம் தோழீ
வேந்து உறுவிழுமம்தாங்கிய
பு+ம்பொறிக்
கழல் கால் நெடுந்தகை புண்ணே"20
என்ற
புறநானூற்றுப்பாடலடிகள் அழகுற எடுத்துரைக்கின்றது. இப்பாடலடிகளில், போரில் அடிபட்டுள்ள
மன்னனைப் பார்த்துக் கொள்ளும் பெண்டிர் 'இரவ இலையையும் வேப்பிலையையும் மனையின் இறப்பிலே
செருகுவோம். ஆகிற புகையிடுவோம். இசைப்பாடல்களை யாழோடு மீட்டிப் பாடுவோம். இவ்வாறு செய்து
புண்பட்ட எம்மன்னனை காப்போம்' என்று பாடுவோம் என்பதனை எடுத்துரைக்கின்றது.
பழந்தமிழர்களின் மருத்துவப் பெருமைகளை
தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சிறப்பாக எடுத்தியம்புகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில்
காணப்படும் மருத்துவ முறைகள் அனைத்தும் இன்றைய அறிவியல் மருத்துவ முறைகளை விஞ்சியதாக
உள்ளதையும், பண்டைய மருத்துவர்கள் நோய்க்கு மருந்து மட்டும் வழங்காமல், உளவியல் மற்றும்
உடல்நோய்க்கும் மருந்து கொடுப்பவர்களாக இருந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும்,
சங்ககால மருத்துவர்கள் உடலில் ஏற்படும் புண்களைப் பற்றியும், அதற்கான மருத்துவ முறைகளைப்
பற்றியும் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்ததனை இவ்வாய்வு மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
சான்றெண் விளக்கம்
1.
தொல். செய். நூ.417
2.
தொல். புள்ளியங். நூ..331
3.
தொல். அகத். நூ.39
4.
தொல். பொருள். நூ.196
5.
தொல். மெய்ப். நூ.254
6.
தொல். உரி. நூ.307
7.
குறுந். பா..399
8.
தொல். செய். நூ.417
9.
பாலைக்கலி, பா.82
10.
பெருமாள் திருமொழி, பா.45
11.
நற்றிணை. பா.136
12.
குறுந். பா.287
13.
புறம். பா.20
14.
நற். பா.40
15.
பதிற்று. பா.42
16.
புறம். பா.353
17.
புறம். பா.180
18.
சீவக சிந்தாமணி.818
19.
சீவக சிந்தாமணி.819
20.
புறம்.
பா.281
துணை
நூற்பட்டியல்
1.தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, 1934.
2.
நாகராஜன்.வி, குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2014.
3.
பாலசுப்பிரமணியன்.கு.வெ, நற்றிணை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2014.
4.
காந்தி.கு, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003.
5.
பரிமணம்.எ.மா, பாலசுப்பிரமணியன்.கு.வெ, புறநானூறு, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004.
6.
சின்னசாமி, தமிழ்நாட்டு மருத்துவம், அறிவுப்பதிப்பகம், சென்னை, 2000.
7.
புலவர்.அ.மாணிக்கனார், சங்க இலக்கியம் மூலமும் உரையும், வர்த்தமான் பதிப்பகம், 1999.
8.
இராமநாதன்செட்டியார், எட்டுத்தொகை செல்வம், முத்தையா நிலையம், 1973.
9.
தொல்காப்பியம், கழக வெளியீடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1920.
10. சங்க இலக்கிய நூல்கள் முழுவதும் உரையுடன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிட், சென்னை, 2007.