Search This Blog

Friday, January 31, 2014

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது...

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது...


  
 
தமிழில் அருமையான 20,000 பழமொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையவை. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பொன்மொழி. எதையும் இளமையில் செய்தால் மிகவும் எளிதாகவும் வாழ்க்கை முழுதும் பயன் தருவதாகவும் அமையும். இன்னொரு பழமொழி ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதாகும். இதை விளக்க குமரகுருபரர் எழுதிய ‘நீதிநெறி விளக்கத்தில்’ ஒரு அருமையான பாடல் உள்ளது.

பல்லக்கு மூங்கில்
“ வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”

பொருள்: இளமையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமானது. கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். இதேபோல இளமையில் கஷ்டப்பட்டு கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும் கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.


குமர குருபரர், ஒரு மூங்கில் கழியை வைத்து அழகான கருத்தை விளக்குகிறார். கோவிலில் இருந்து உலா வரும் சுவாமியை பல்லக்கில் தூக்கி வருவதை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கான வளைந்த மூங்கில் எங்கே விளைகிறது? எங்கேயும் விளையாது. மூங்கில் வளரும் காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடுவார்கள். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம்.



இளைஞன் முதுகில் யானை!

ஒரு சர்கஸில் 5 அல்லது 6 டன் எடை உடைய ஒரு யானை சுமார் 100 கிலோ எடை உடைய ஒரு மனிதன் மேல் நிற்பதைப் பார்த்து எல்லோரும் வியந்தார்கள். அவன் படுத்தவுடன் அவன் மீது ஒரு பெரிய பலகையை வைப்பார்கள். அதன் மீது யானை ஏறி நிற்கும். இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் அவரைப் பேட்டி காணச் சென்றார். ‘நீங்கள் யோகாசனம் பயின்று ஏதேனும் அபூர்வ சக்தி பெற்றிருக்கிறீர்களா? எப்படி இதைச் செய்ய முடிகிறது? என்று பத்திரிகை நிருபர் கேட்டார். அதற்கு அந்த இளைஞர், நான் பள்ளிக்கூடம் கூட போனது இல்லை, எனக்கு யோகமும் தெரியாது, ஆசனமும் தெரியாது. இந்த யானை குட்டியாக இருந்தபோது இந்த சர்க்கஸ் அதை விலைக்கு வாங்கியது. அன்று முதல் என் மீது ஏறி நிற்கும் பயிற்சியைத் துவக்கினார்கள். அது சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதானபோதும் எனக்கு பாரம் தெரிவதில்லை என்றார்.

இது நம் வாழ்க்கையில் பெரிய உண்மையைப் போதிக்கிறது. பல்லக்கு மூங்கில் போல வளையவும், பெரிய பாரத்தைச் சுமக்கவும் இளமை முதல் பயிற்சி தேவை.



தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.
 

Thursday, January 30, 2014

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்:-


திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்:-


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில.........


1.
திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2.
ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் ,தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்

3.
ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4.
ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

5.
ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ .100கோடி.

6.
மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் . ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

7.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

8.
ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம் .

9. 1781
ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார் . அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார் .

10.
ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.
 
 
 
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.